வியாழன், 30 ஏப்ரல், 2020

மூளைச்சாவு

30 ஏப்ரல் 2016 அன்று ஃபேஸ்புக்கில் எழுதியது

மீண்டும் ஒரு 27 வயது இளைஞர் மூளைச்சாவுன்னு செய்தி. நகை வியாபாரிகளுக்கு ஒரு அக்ஷய திரிதியைன்னா மல்டி ஸ்பெஷாலிட்டி ஹாஸ்பிடல்களுக்கு ஒரு மூளைச்சாவு.
.
திடீர்னு எப்படி இந்த மூளைச்சாவுன்னு ஒன்னு வந்துச்சு? கடந்த ஏழெட்டு வருஷமா தான் இது ஃபேமஸ் ஆகியிருக்கு. எங்கேருந்துய்யா கண்டுபிடிக்கிறீங்க இதெல்லாம்?
.
இந்த மூளைச்சாவு மேட்டர்ல எனக்கு நம்பிக்கையே கிடையாது. (எனக்கு மூளையே கிடையாது, அது வேற விஷயம்). என் தங்கமணி கிட்ட, ஒரு வேளை, என்னிக்காவது எனக்கு ஏதாவது ஆகி, இப்படி ஆஸ்பத்திரியில சேத்து, இப்படி மூளைச்சாவு ரேஞ்ச் ஆச்சுன்னா, டாக்டருங்க சொல்றாங்கன்னு தலையாட்டிடாத. உருகி, உருகிப் பேசுவாங்க. நான் என் புருஷனை ஊட்ல வச்சிப் பாத்துக்கிறேன்னு சொல்லி என்னைத் தூக்கிட்டு வந்துரு. நமக்கு நல்லாத் தெரிஞ்ச வேற டாக்டர்கள் கிட்ட போய் செகண்ட் ஒப்பினீயன், தேர்டு ஒப்பீனியன் ஏன் டென்த் ஒப்பீனியன் கூட எடுத்துக்கோ ன்னு சொல்லி வச்சிருக்கேன்.
.
நல்லா யோசிச்சு சொல்லுங்க. எந்த டாக்டர், பழைய டாக்டரைத் திட்டலை? உங்க மெடிக்கல் ஹிஸ்டரியில, அது சின்ன ஜூரமா இருந்தாலும், மூளைக் கட்டியா இருந்தாலும் புது டாக்டர் கிட்ட போனா, பழைய டாக்டர் சொன்னதைத் தப்புன்னு சொல்லி வேற மருந்து வேற ட்ரீட்மெண்ட் எழுதுறாங்களா? இல்லையா?
.
இது பத்தி "காக்கி சட்டை"ன்னு ஒரு முழு நீளச் சித்திரம் (கொஞ்சம் மிகைப்படுத்தல்கள் இருக்கலாம்) வந்துச்சே, ஞாபகம் இருக்கா?

.

செவ்வாய், 28 ஏப்ரல், 2020

என்னமோ? சொல்லணும்னு தோணுச்சு.

29 ஏப்ரல் 2017 அன்று ஃபேஸ்புக்கில் எழுதியது

ஒரு கிரியேட்டராக, ரைட்டராக நான் ஒரு முழுச் சோம்பேறி. மேலும் குடும்பம், பணம் என்று வரும்போது எனக்கு "பெயர்" முக்கியமில்லை. நிறைய எழுதுங்கள் என்று சொல்லும் நண்பர்களிடம் நான் சொல்ல நினைக்கும பதில் "இறந்த பிறகு வரும் புகழில் எனக்கு நம்பிக்கையில்லை" எழுத்தை விட குடும்பம் முக்கியம் என்று குடும்பத்திற்காக ஓடும் குதிரை நான்.

கொஞ்சம் மெனக்கெட்டிருந்தால், வெறும் ஜோக்ஸ், ஒரு பக்க, பத்து செகண்ட் கதைகள், சில கட்டுரைகள் என்ற அளவைத் தாண்டி நல்ல இடத்தைப் பிடித்திருக்க முடியும் தோன்றுவது உண்டு. (கிரியேட்டரா? நீயா? ரைட்டரா? நீயா? என்பவர்கள் மன்னிக்க)

அப்படிப்பட்ட எனக்கு, கடந்த மூன்றாண்டுகளாக ஒவ்வொரு முறை பாகுபலி (கிரியேட்டிவ் சைடு) பற்றிய செய்திகள் படிக்கும் போதும், அதன் மேக்கிங் வீடியோக்கள் பார்க்கும் போதும் கைகளில் நாக்குப்பூச்சி முளைக்கும், வெறி ஏறும். அதன் ஹேங் ஓவர் இரண்டு நாள் இருக்கும். அப்புறம் புஸ்ஸ்...

ஐ லவ் ராஜமௌலி அண்ட் ஹிஸ் ஸ்மைல். "நீயெல்லாம் எதுக்குடா இருக்கே? வேஸ்ட்டு. வாழ்க்கையில எதையும் சாதிக்காம ஒவ்வொரு நாளா வேஸ்ட் பண்றியே" என்று அவர் என்னைப் பார்த்துக் கேட்பது போல இருக்கும்.

என்னமோ? சொல்லணும்னு தோணுச்சு.
.

பாகுபலி 2 வின் அதிர்வுகள்

29 ஏப்ரல் 2017 அன்று ஃபேஸ்புக்கில் எழுதியது

-------------------------------------------------------------------------------------------------------------------------------------

பாகுபலி போன்ற ராஜா கதையில் கூட கதை, திரைக்கதை விஷயத்தில் புதிதாக எதையாவது எதிர்பார்ப்பவர்களுக்கு... 23 - ம் புலிகேசியில் "நாங்கள் இருவரும் இணைவோம் என்று எப்படித் தெரியும் அப்பா?" என்று கேட்கும் உக்கிரபுத்தனுக்கு முதுகு காட்டி கேமராவுக்கு முகம் காட்டி வி.எஸ்.ராகவன் சொல்லும் "அரச கதை என்று வந்துவிட்டால் திரைக்கதையில் வேறு என்னதான் செய்ய முடியும்?" தான் பதில்.

-------------------------------------------------------------------------------------------------------------------------------------

ஃபர்ஸ்ட் ஹாஃப் - சத்தியமாக எனக்கு, பழைய அம்புலிமாமா படிப்பது போலவே இருந்தது. கட்டப்பாவைத் தோளில் தூக்கிப் போகும் அமரேந்திரனைப் பார்க்கையில் "வேதாளத்தைத் தோளில் சுமந்த விக்கிரமன்" தான் நினைவுக்கு வந்தான். விக்கிரமனைப் போல அதே வளைந்த காலணி, வளைந்த லேசான முறுக்கு மீசை, தோள்வரை புரளும் கேசம். ஸேம்.. ஸேம்..

அதிலும் அந்த அன்னப் படகில் சவாரியும், பாடல் காட்சிகளும். அடாடாடாடாடா. முழுக்க ஒரு கற்பனை, ஃபேன்டஸி உலகிற்குள் மூழ்கிப் போவீர்கள். பாகுபலி 1 - ன் "பச்சைப் பூ நீயடா" தோற்கும். இதிலும் எனக்கு அம்புலி மாமா கதைகளும், சாண்டில்யனின் "கடல் புறா" படகும் நினைவுக்கு வந்தன. கடல் புறா படிக்கையில் அப் பிரமாண்ட படகினைப் பற்றி நம் மனதில் எழும் பிம்பத்திற்கு நிகராய்.

கூடவே ஒன்று சொல்ல வேண்டும் பாகுபலி 1 பற்றி. பல்லாளதேவனின் 120 அடி உயர சிலை நிறுவப் படும் போது, ஷிவு ஊருக்குள் வர, சில சம்பவங்களால் விழா தடைபட்டு நின்று பிறகு மீண்டும் "பாகுபலி, பாகுபலி, பாகுபலி" கோஷம் அதிர்கையில், நடக்கும் நாட்டியங்களும், கச்சேரிகளும், இசை நடனங்களும், நாட்டுப்புறக் கலைகளும், இவையனைத்தையும் கழுகுப் பார்வையில் காட்டும் கோணத்தில் பார்க்க, ஒரு வேளை ஆயிரமாண்டுகளுக்கு முன் ராஜராஜ சோழனின் பெரிய கோவில் கும்பாபிஷேகமும் இப்படித்தான் நடந்திருக்குமோ என்று தோன்றியது.

பாகுபலி 2 விலும் இதுபோல பெரும் அதிர்வளிக்கும் பட்டாபிஷேகக் காட்சி ஒன்று உண்டு. யாருக்கு? எப்படி? எவ்வளவு பிரமாண்டம்? என்பதைத் திரையில் காணுங்கள்.
-------------------------------------------------------------------------------------------------------------------------------------
ஒரு விஷயம் நான் கவனித்தது (ஸ்பாய்லர்)
பார்ட் 1 ல் பல இடங்களில், ராணா - காளைச் சண்டை யில் கூட இடது கீழ் ஓரத்தில் CGI என்று எழுத்துக்கள் இருந்தன. மிருக வதை குறித்த சட்டம் காரணமாக இருக்கலாம்.
ஆனால் பார்ட் 2 வில் பல இடங்களில் கிராஃபிக்ஸ் என்று நன்றாகத் தெரியும் இடங்களில் கூட CGI போடப்படவில்லை. யானைகள், கருப்புக் காளைகள், வெள்ளை காளைகள், மாடுகள், பன்றி வேட்டைக் காட்சிகள் என பலதும். துண்டான தலை சீனில் மட்டும் CGI என்று போட்டார்கள்.
இது தெரிந்தே, "இது போதும்டா" எனச் செய்யப்பட்டதா? அல்லது க்யூப் பிரச்சினை விவகாரத்தால் இன்றைய பிரிண்டுகளில் இல்லாமல், இனி வரும் நாட்களில் வர வாய்ப்புள்ளதா ....⁠⁠⁠⁠
-------------------------------------------------------------------------------------------------------------------------------------
"அஸ்லான்" கிச்சா சுதீப் பார்ட் 2 விலும் இருப்பார். ஏதேனும் ஒரு போருக்கு படை கொடுத்து உதவுவார் என்றெல்லாம் எதிர்பார்த்தேன். ஏமாற்றி விட்டார் ராஜமௌலி.
-------------------------------------------------------------------------------------------------------------------------------------
பாகுபலி 2
கட்டாயமாக வீட்டில் உள்ள வயசான ஆயா, தாத்தா, புள்ளகுட்டிகளையும் கூட்டிக் கொண்டு தண்ணி பாட்டில், வேக வைத்த சோளம், ஜூஸ் பாட்டில், பொரி கடலை, அதிரசம், முறுக்கு பாக்கெட்டுகள், கடலை மிட்டாய், தேன் மிட்டாய் வகையறாக்கள் சகிதம் குடும்பத்துடன் தியேட்டரில் என்ஜாய் செய்து பார்க்க வேண்டிய நல்லதொரு அம்புலிமாமா வகை ஃபேன்டஸி, ராஜா, ராணி கதை வகையறா படம்.
#இந்தப் போஸ்ட்டை 20 வருஷம் முந்தி போட்டதா நினைச்சுக்கோங்க. டோன்ட் மிஸ் இட் இன் எ நல்ல தியேட்டர்.
-------------------------------------------------------------------------------------------------------------------------------------

திங்கள், 27 ஏப்ரல், 2020

அமேஸானைக் கிழித்த மலையாளிகள்

27.04.2016 அன்று ஃபேஸ்புக்கில் எழுதியது 

எந்த விஷயத்தைச் செய்யும் போதும் நிதானித்து, யோசித்துச் செய்ய வேண்டும் என்பது பெரியோர் வாக்கு. அது பெரு நிறுவனங்களுக்கு நன்று பொருந்தும். உதாரணமாக ஒரு விளம்பரம் எடுக்கும் போது, அதன் கான்செப்ட் பல மாநிலங்களுக்கும் செட் ஆகுமா, யாரையேனும் புண்படுத்துகிறதா? ஒரு மொழியின் வார்த்தைகள் வேறு மொழியில் மொழிபெயர்க்கையில் செட் ஆகுமா (க்யா சல் ரஹா ஹை - தமிழில் வார்த்தைகள் கிடைக்காமல் Whats happening? என்றே) போன்றவற்றைக் கவனிப்பது அவசியம்.
.
சமீபத்தில் இவ்விஷயத்தில் ஒரு தவறு செய்து பல்பு வாங்கியிருக்கிறது "அமேஸான்" நிறுவனம். அது "We indians love helping" என்ற கான்செப்டில் பலரும் மற்றவருக்கு உதவுவது போல, ஒரு விளம்பரத்தை எடுத்து ஒளிபரப்பியது
.
"ஹைவேஸில் வழி கேட்பவருக்கு லிப்ட் கொடுக்கும் டூ வீலர்காரர்", "சேற்றில் மாட்டிய வேனை அதன் டிரைவர் தள்ள, சைக்கிளில் வந்து இறங்கித் தள்ளி விடும் மூவர்", "ஓடாத டூ வீலருக்கு முட்டுக் கொடுத்து பெட்ரோல் பங்க் வரை தள்ளி விடும் மற்றொரு டூ வீலர் காரர்", "எக்ஸாம் ஹாலில் இங்க் தீர்ந்து போக, கேட்காமலேயே பேனா தரும் பக்கத்து பென்ச் பையன்" என்று ஓடுகிறது விளம்பரம். அதாவது, அமேஸான் சொல்ல வருவது, தன் கஸ்டமர் சர்வீஸ் அத்தனை ஃப்ரெண்ட்லியாம். இருக்கட்டும்.
.
இதில் "நின்று போன பஸ்ஸை பலரும் இறங்கித் தள்ளுவது" என்ற கான்செப்ட் ஒன்றும் வருகிறது. அங்கே தான் அடி வாங்கியது அமேஸான். அப்படித் தள்ளப்பட்ட பஸ் கேரள அரசின் KSRTC பஸ். இதை ஒரு பெரிய ஹோர்டிங் ஆக வேறு செய்து, பெங்களூருவில் ஒரு முக்கியச் சந்திப்பில் வைத்திருக்கிறார்கள். இதைப் பார்த்த, பெங்களூருவில் வேலை பார்க்கும் பலரும், முக்கியமாக மலையாளிகள் கொதித்தெழுந்து அமேஸானை ட்விட்டரில் டேக் செய்து கிழி கிழி என்று கிழித்தெடுத்திருக்கிறார்கள். அதெப்படி எங்க ஊரு பஸ்ஸூ ஓடலைன்னு சொல்லலாம்? அதுவும் "நீ" எப்படி சொல்லலாம்? சொல்றதா இருந்தா லோக்கல் ஆளுக நாங்க சொல்லிக்குவோம், வெளியூர்க்காரன் (அமேஸான்) நீ என்ன சொல்றது?
.
அதிர்ந்து போன அமேஸான், அவர்களிடம் மன்னிப்பும் கேட்டு, அந்த ஹோர்டிங்கையும் நீக்கியிருக்கிறது. டி.வி யில் வந்த விளம்பரத்தை விட, அமேஸான் வைத்த ஹோர்டிங் தான் இவர்கள் கோபத்தைக் கிளப்பியிருக்கிறது.
.
என் டவுட்டு - நின்று போன பஸ்ஸை இறங்கித் தள்ளுவதில் "உதவி" கான்செப்ட் எங்கே வருகிறது? தள்ளும் ஒவ்வொருவரும் தன் வேலை நின்று போன கோவத்தில் காண்டாகி அல்லவா பஸ்ஸைத் தள்ளுவார்கள்? வேறு வழியில்லாமல் செய்வதாயிற்றே அது?

சனி, 25 ஏப்ரல், 2020

வருவானா பக்ஷிராஜன்?




இந்த கொரோனா லாக் டவுன் மூலம் மனிதன் துப்பிக் கொண்டிருந்த கார்பன்களின் அளவு குறைந்து உலகெங்கிலும் உள்ள மரங்களின் காடுகளின் அளவு 7 சதம் அதிகரித்திருக்கிறது என்கிறார்கள். அதனால் ஆக்ஸிஜன் அளவும் நன்கு அதிகரித்திருக்கிறதாம். ஆனால் இயற்கை ஒரு மகத்தான சக்தி என்பதையும் மறக்க வேண்டாம். மிதமிஞ்சிய ஆக்ஸிஜன் உள்ளதை அது புரிந்து கொண்டால், சடாரென ஒரு சிறு தீப்பொறியின் மூலம் பெரு நெருப்பை உருவாக்கி, அதை "வனத்தீ" மூலம் தின்று தீர்த்து, காட்டை அழித்து கார்பனை உருவாக்கித் தன்னை சமன் செய்து கொள்ளும். அந்தச் சக்தி அதற்குண்டு.

ஆனால் "மனிதன் ஒரு மகத்தான சல்லிப் பயல்" அல்லவா?

நாம் எங்கிருந்தாலும் இயற்கையை அழிக்கும் வேலையை மட்டும் மிகச் சிறப்பாகச் செய்வோம். அந்த திமிர்த்தனம் நமக்கு எப்போதும் உண்டு. "லாக் டவுன்" இல்லாவிட்டால் கார், பஸ், ஃபேக்டரி, தம்மு, விறகுப்புகை, அணு உலை, பிளாஸ்டிக் கழிவுகள் என மிகச் சிறப்பாக சுற்றுச் சூழலை நாசமாக்குவோம். "வீட்ல இருடா" என்றால் அதை விடச் சிறப்பாக. சில சமயம் நம்மையும் அறியாமல்.

எப்படி? நாம் அரை மணி நேரம் ஆன்லைனில் வீடியோ பார்ப்பதால் வெளியாகும் கார்பனின் அளவு எவ்வளவு தெரியுமா? கிட்டத்தட்ட 1.6 கிலோ கார்பன் டை ஆக்ஸைடுக்குச் சமமான எமிஷன். இது சுமாராக காரில் 6.5 கிலோ மீட்டர் நீங்கள் பயணித்ததற்குச் சமம். இவற்றில் யூ டியூப், நெட்பிளிக்ஸ், அமேசான் துவங்கி துண்டு துக்கடா போர்ன் சைட்டுகள் வரை பங்குண்டு.

ஹை டெஃபனிஷனில் நீங்கள் ஒரு வீடியோ பார்க்க அதற்கான ஆற்றலை அதை வழங்கும் சிஸ்டம்களும், சர்வர்களும், ஸ்டீரிமிங் நெட்வொர்க்குகளும் தந்தாக வேண்டும். அத்தனை வலுவையும் அந்த டேட்டா சென்டர்கள் தாங்கியாக வேண்டும். அவை வெளியிடும் கார்பன் எவிக்ஷன் தான் மேலே சொன்னது. நீங்கள் ஒருநாள் எவ்வளவு நேரம் வீடியோ பார்க்கிறீர்கள்? ஒரு மாதத்திற்கு? உங்களைப்போல தமிழ்நாடு முழுக்க எத்தனை பேர்? இந்தியா முழுக்க எத்தனை பேர்? உலகம் முழுக்க?

ஹை டெஃபனிஷன் வேண்டும் எனத்தேடி 3ஜி, 4ஜி, 5ஜி என அலைவதன் மூலமும், மொபைல் ஃபோன்கள், வை.ஃபை டிவைஸ்கள் முதல், க்ரோம், ஏர்டெல், டிஸ்னி, ஆப்பிள்களின் ஸ்டீமிங் டிவைஸ்கள் என, ஒவ்வொரு வீட்டிலும் உள்ள 14 இன்ச் முதல் 65 இன்ச் டிவிக்கள் வரை அத்தனைக்கும் இவற்றில் பங்குண்டு. இவ்வளவையும் நாம் பார்த்துத் தொலைக்கத் தேவையான அளவற்ற மின்சாரம், அதை உற்பத்தி செய்ய வேண்டி எரிக்கப்படும் கார்பன் கரி முதல், டீசல், பெட்ரோல் வரை. மேலும் அணு மின்சாரத்திற்காக இயங்கும் அணு உலைகளின் அணுக்கழிவுகள் தனி.

குத்து மதிப்பாகக் கணக்குப் போட்டதில் 2019 ஆம் ஆண்டு மட்டும் 300 மில்லியன் டன் (ஒரு டன் = 1000 கிலோ, ஒரு மில்லியன் = 10 இலட்சம், கணக்குப் போடுங்க) கார்பன் டையாக்ஸைடை இதன் மூலம் உற்பத்தி செய்து கார்பன் எமிஷன் செய்திருக்கிறோமாம்.

கொரோனா புண்ணியத்தில் இந்த ஆண்டு அது மூன்று மடங்காகலாம் என்கிறார்கள். பிளாஸ்டிக், எலக்ட்ரானிக்ஸ், கார்பன் என குப்பைகளால் உலகையே நிரப்பும் நாம் செய்யும் பாவம் இன்னும் சிலபல ஆண்டுகளில் நம் பிள்ளைகளின் தான் தலையில் விடியப் போகிறது. டேட்டா, டேட்டா, டேட்டா என வெறிபிடித்து அலையும் நம்மையெல்லாம் அழித்தொழிக்க ஒரு பக்ஷிராஜன் போதாது. இயற்கை கொரோனாவை விட மிகப்பெரும் ஷக்தி ஒன்றை மிக விரைவில் மீண்டும் அனுப்பி வைக்கலாம். யார் கண்டது?
.

ஸாரி விகடன்...........

24.ஏப்ரல்.2019 அன்று ஃபேஸ்புக்கில் எழுதியது. 


இந்த வார "வருகிறான் வந்தியத்தேவன்" கவர் ஸ்டோரியில் //படத்தின் வியாபாரம் குறித்த நம்பிக்கையைப் ‘பாகுபலி’ உருவாக்கியது என்றால், ‘பல நட்சத்திரங்களை வைத்துப் படத்தை உருவாக்க முடியும்’ என்ற நம்பிக்கையை மணிரத்னத்துக்கு அளித்தது ‘செக்கச்சிவந்த வானம்.’ // - என்று எழுதியிருக்கிறது விகடன்.

அருமை. அப்போ இதற்கு முன்னால் மணிரத்னம் மல்டி ஸ்டார் காஸ்டிங் வைத்துப் படங்கள் செய்ததே இல்லையா? 

அக்னி நட்சத்திரம் மல்டி ஸ்டாரர் இல்லையா? தளபதி கூட - அரவிந்த் சுவாமி புது ஹீரோவாக இருந்தாலும், ஜெய்சங்கர் பெரிய ஹீரோ தானே? அப்புறம் ஹீரோ ரஜினி (ஸ்ரீவித்யா, ஷோபனா வெல்லாம் கூட சேர்க்காமல்), ஆய்த எழுத்து? ஹீரோக்கள் மட்டுமே மூன்று பேர், ப்ளஸ் இயக்குனர் இமயம் பாரதிராஜா...... கடல்? அரவிந்த் சுவாமி, அர்ஜூன், அது போக புது ஹீரோ கெளதம் கார்த்திக்.

இது போக திருடா, திருடா முழுக்க டபுள் ஹீரோ சப்ஜெக்ட், குரு? மாதவன் பாதி படம் வருவார். கிட்டத்தட்ட டபுள் ஹீரோ, ராவணன்? விக்ரம், ப்ரத்வி, கார்த்திக், ஐஸ்........... அவரது முதல் தமிழ்ப்படமான "பகல் நிலவு" கூட அப்போதே மல்டி ஸ்டாரர் தானே? முரளி, சரத் பாபு, சத்யராஜ் - னு. என்னமோ அவர் இப்போ தான் முதன் முறையா மல்டி ஸ்டாரர் படம் எடுப்பது போல இப்படி ஒரு பாயிண்ட் எழுதியிருக்கிறார்கள். கட்டுரையை எழுதியவர் இளைஞரா இருக்கலாம். அவர் மணிரத்னத்தின் சமீபத்திய சில படங்களை மட்டும் பார்த்திருக்கலாம் என்று குன்ஸாகப் புரிந்து கொள்ள முடிகிறது.

//பல நட்சத்திரங்களை வைத்துப் படத்தை உருவாக்க முடியும்’ என்ற நம்பிக்கையை மணிரத்னத்துக்கு அளித்தது ‘// இதையும் பக்கத்தில் இருந்து பார்த்தது போலவே சொல்லியிருக்கிறார்கள்.. (யப்பா சாமி, முடியலப்பா உங்க டேபிள் ஜர்னலிசம். உக்காந்த மேனிக்கி இவங்களே முடிவு பண்ணிக்குவாங்க போல).

ஆனால் ஒரு கவர் ஸ்டோரியிலேயே இப்படி இருக்கலாமா? நானாவது ஒரு பாயிண்ட் தான் எடுத்தேன். பொன்னியின் செல்வன் கதை எனக்கு முழுதாகத் தெரியாது. அதனால் அதை விட்டு விட்டேன். கதை தெரிந்த நண்பர் ஒருவர் சொன்னார் "பொன்னியின் செல்வனுக்கு அவங்க கொடுத்திருந்த கதை சுருக்கத்தை படிச்சிங்களா? அவங்க சொன்னது மட்டும் கதையில்லை " ன்னு. மேலும் அருமை.

எல்லாருக்கும் தெரிந்த ஒரு பிரபல கதையை, எல்லாருக்கும் தெரிந்த ஒரு பிரபல இயக்குனர் எடுக்கும் போது அது பற்றிய கட்டுரையில் எவ்வளவு உள் விவரங்கள் தர வேண்டும்? இன்றைக்கு பேஸ்புக்கில் மைக்ரோ ப்ளாக்கிங் எழுதுகிறவர்கள் கூட எத்தனை சிறந்த உள்விபரங்களுடன் கட்டுரைகள் எழுதுகிறார்கள்?

அக் கட்டுரையில் தயாரிப்பு "லைகா" மற்றும் "சில நடிகர்கள் முடிவான" விபரங்கள் தவிர......

//களமிறங்கியிருக்கிறார் மணிரத்னம்.
கமல்ஹாசனும் ‘பொன்னியின் செல்வ’னைத் திரைப்படமாக்க விரும்பினார்.
எம்.ஜி.ஆர் ‘பொன்னியின் செல்வன்’ திரைக்கதையை இயக்குநர் மகேந்திரனிடம். எழுதச் சொன்னது
நடிக்கவைக்கவும் பேச்சு வார்த்தைகள் நடந்துவருகின்றன.
ஒரு பாகம் வெளிவர, குறைந்தது இரண்டு ஆண்டுகள் ஆகலாம்
உதவி இயக்குநர்களை வரலாற்றுத் தரவுகளைத் திரட்டச் சொல்லியிருக்கிறார்
பட்ஜெட், 400 முதல் 500 கோடி ரூபாய் வரை ஆகும் என்று தெரிவிக்கிறார்கள்//

போன்றவையெல்லாம் சினிமா பார்க்கும் எல்லாருக்கும் தெரிந்த டெம்ப்ளேட் வரிகள். இவற்றை படத்தின் போஸ்டரை வைத்தே சினிமா ரசிகனான யார் வேண்டுமானாலும் கெஸ் செய்ய முடியும். விகடனில் இப்படிப் பட்ட மேலோட்டமான, அழுத்தமற்ற கட்டுரைகளின் எண்ணிக்கை அதிகமாகி வருவது விகடனின் வாசகன், (ஒரு காலத்தில்) விகடனின் ரசிகன், விகடனில் துணுக்குகள் எழுதுபவன் என்ற முறையில் மிகவும் வருத்தமாக இருக்கிறது.

டிஜிட்டலுக்கு மாறி வரும் உலகத்தில், ஏற்கனவே விற்பனை சரிவு, இளம் வாசகர்களை ஈர்க்க முடியாதது என பல பத்திரிகைகள் தடுமாறும் நேரத்தில் விகடன் கன்டென்ட் விடயத்தில் இன்னும் கவனமாக இருக்க வேண்டும் என்று தான் எனக்குத் தோன்றுகிறது.

வருத்தத்துடன்
....

- எஸ்கா

ஞாயிறு, 19 ஏப்ரல், 2020

யசாேதா ஹோட்டல் மாஸ்டருக்கோர் மடல்..

டியர் யசாேதா ஹோட்டல் மாஸ்டர்காள்...
.
உங்கள் கைவண்ணத்தில் உருவாகும் பூ போன்ற அந்த பொரோட்டாக்களுக்கு என் குடும்பமே அடிமை. நீவிர் ஒரு கரண்டி கார கெட்டிச் சட்னி வைத்துத் தரும் வீச்சு பொரோட்டாவுக்கு நான் தனியாக அடிமை. ஆனால் அப் பொரோட்டாக்களுடன், "முத்து"வின் தந்தை ஸமீன்தாரைப் போல ஒரு பெரிய கிண்ணம் நிறைய நீங்கள் பெருந்தன்மையாக அள்ளி வழங்கும் அந்தக் காரக்குருமாவைத்தான் ஜீரணிக்க முடியவில்லை. ஆம், ஜீரணிக்க மட்டும் முடியவில்லை. சூடாக பேய் பறக்கும் பொரோட்டாக்களை விள்ளல் விள்ளலாக பிய்த்துப் போட்டு அவை மேல் அக் காரக் குருமாவை ஊற்றி நொதிக்க வைத்து ஒரு நொதித்த விள்ளலை சூடு பறக்க வாயில் போட்டு அது கரைகையில், எம் விருப்பத்தின் பேரில் நீங்கள் ஆக்கித் தரும் அரை வேக்காட்டுப் பெப்பர் கலக்கியின் முட்டை வழியும் சூடான விள்ளலையும் போட்டு மெல்லும் போது வரும் மனமகிழ்ச்சியை, ஈரோடு கொங்கு பொரோட்டா ஸ்டாலின் சிக்கன் கொத்து பொரோட்டக்களும் கூடத் தருவதில்லை.
.
ஆனால் பொரோட்டா ருசித்த அன்றிரவு, சிவராத்திரியாகி என்னை இரவு முழுதும் விழிக்க வைக்க அந்த மசாலாக்களே போதுமானதாய் இருக்கின்றன. சென்னையில் பல ஆண்டுகளுக்கு முன் மவுண்ட்ரோடில் வாக்கிங் செல்கையில் அரை மணி நேரத்தில் ஆறு ஐட்டங்களை வாங்கித் தின்று செரித்த வயறு தானா இது என்பதை என்னாலேயே நம்ப முடியவில்லை. என் உடலுக்கு வயதாகிறதோ என்ற உபரிச் சந்தேகத்தையும் சேர்த்தே தருகிறது அந்த மசாலாவின் ஆக்கம். நாய்கள் ஊளையிடும் நடு இரவில் என் தங்கமணியைத் தட்டி எழுப்பும் அக் கடகடா, குடுகுடு சத்தத்திற்கு, ஈனோ மட்டுமே ஓர் தீர்வாக இருக்கிறது. ஆயினும் மாதம் ஒன்றிரண்டு ஈனோ மட்டுமே வாங்கினால் கூட "இதெல்லாம் சாப்பிட்டா கேன்சர் வருமாம் சார், சிவகார்த்திகேயன் வேலைக்காரன்ல சொன்னாரு" என்ற டென்னிஸ் டிபார்ட்மென்டலின் அன்பர் குமாருவின் அன்பையும் என்னால் தட்ட முடியவில்லை.
.
"ஒரு ஈனோவுக்கு கேன்ஸரா?" என்றெழும் பேரதிர்ச்சியுடன் சேர்த்து "ஒரு பாலிஸி போடுடா" என்று சாந்தமாகக் கேட்கும் நண்பன் எல்.ஐ.சி தேவாவின் முகமும் என் மனக்கண்ணில் வந்து போவதையும் தவிர்க்க முடியவில்லை. என்னால் தவிர்க்க முடியாமல் தற்போதைக்குத் தவிர்க்க முடிந்த ஒரே விடயம் தங்கள் கடை பொரோட்டா மட்டுமே என்பதை வருத்தத்துடன் பதிவு செய்யும் அதே வேளையில், அரை கிலோ மீட்டர் தள்ளி டபுள் ஓ செவன் தாபா வின் பன் பொரோட்டா குருமா காம்பினேஷன் வயிற்றைக் கெடுக்காமல் அருமையாக இருக்கிறது என்ற தகவலையும் தங்களுக்குத் தெரிவிக்கக் கடமைப் பட்டிருக்கிறேன்.
.
இப்படிக்கு - ஒப்பம்
கடைமாறும் கஸ்டமர்,
எஸ்கா (அலையாஸ்) எஸ்.கார்த்திகேயன்
.
நகல் 1 - கல்லாவில் நிற்கும் அழுக்குச் சட்டை அண்ணன்
நகல் 2 - முகநூல் சுவரில் ஒட்ட

.

வியாழன், 9 ஏப்ரல், 2020

Tax save செய்ய வேண்டிய அவசியத்தில் உள்ளவர்களுக்கு

31 March 2020 அன்று ஃபேஸ்புக்கில் எழுதியது

கொரோனாக் களேபரத்தில், வீடடங்கிய வருத்தத்தில் அல்லது க்வாரன்டைன் சந்தோஷத்தில் மிக முக்கியமான விஷயம் ஒன்றை மறந்து விடாதீர்கள் சம்பளக்காரர்களே. இன்று மார்ச் 31 - Financial year end.

Tax save செய்ய வேண்டிய அவசியத்தில் உள்ளவர்கள் பலரும் முன்பே ப்ளான் செய்திருப்பீர்கள். சில நிறுவனங்கள் நினைவூட்டி இருக்கலாம். இருப்பினும் 80 C, 80 CCD, 80 D, 80 CCF, 80 E, 80 G, போன்ற ஆப்ஷன்களில் ஏதேனும் விட்டுப் போயிருந்தால் இன்றொரு நாள் கடைசி வாய்ப்பு உள்ளது. ஆன்லைன் மூலம் செய்யக்கூடிய tax saving முதலீடுகளை இன்று செய்ய வாய்ப்புள்ளது.

80 C க்காக LIC online policy எடுக்க வேண்டி இருந்தால் எடுக்கலாம், பாலிஸி பிரீமியம் கட்ட விடுபட்டிருந்தால் அதைக் கட்டலாம். 80 C யின் 1,50,000 இலட்சம் சேவிங்க்ஸிற்கு மேல் 80 CCD மூலம் NPS - National Pension Scheme ல் மேற்கொண்டு 50,000 ரூபாய் சேமிக்க வாய்ப்புள்ளது. 30 % tax regime ல் வரும் அண்ணன்கள் NPS போட்டால் டேக்ஸ் மட்டுமே 15,000 ரூபாய் சேமிக்கலாம் (ஆனால் NPS ல் ஒரு சின்ன உள்குத்து உள்ளது. பணத்தை ரிட்டையர்மெண்டுக்குப் பிறகு தான் எடுக்க முடியும்). ஆனால் 15,000 கையை விட்டுப் போறதுக்கு 50,000 பென்ஷனாக வரும். அது ஒரு பெனிஃபிட்.

Mutual Fund (Tax saver) ல் முதலீடு செய்ய விரும்பினால் ஆன்லைனில் செய்யலாம், ரசீதுகள் ஆன்லைனில் டவுன்லோட் செய்து கொள்ளலாம். கடந்த இரு மாதங்களில் ஷேர் மார்க்கெட்டும், மியூச்சுவல் ஃபண்டுகளும் மரண அடி வாங்கியிருக்கின்றன. யூனிட்டுகள் மிகக் குறைந்த விலையில் கிடைக்கின்றன. வாங்க விரும்பினால் வாங்கலாம். ஸ்டேட்மெண்ட் டவுன்லோட் மிகவும் சுலபம். தனியார் வங்கிகளில் 5 year Bank FD துவங்கும் எண்ணம் இருந்தால் APP மூலமே கூடத் துவங்கலாம். ஸ்டேட்மெண்ட் அப்புறம் போய் வாங்கிக் கொள்ளலாம்.

மேற்சொன்னவை கொஞ்சம் காசுள்ள பார்ட்டிகளுக்கு. நம்மை மாதிரி வேடிக்கை பார்ப்பவர்கள் வழக்கம் போல யூ டியூபில் ஆன்லைன் நியூஸ் லைவ் வைத்து வேடிக்கை பார்க்கலாம்.

நிறைய காசுள்ள பார்ட்டிகள் அரசாங்கத்துக்கே டொனேஷன் கொடுத்து தேசத்திற்கு சேவை செய்யலாம். தற்போதைய கொரோனா பிரச்சினையை சமாளிக்க உங்களால் ஆன உதவியை செய்த மாதிரியும் இருக்கும். 80 G மூலம் வரி விலக்கு வாங்கிய மாதிரியும் இருக்கும். என்னான்றீங்க?


பிற்சேர்க்கை - இரு முக்கியக்குறிப்புகள்
1. துறை சார்ந்த நண்பர் ஒருவர் அனுப்பிய முக்கிய ஸ்கிரீன் ஷாட் ஒன்றை கமெண்ட்டில் அளித்துள்ளேன். விபரம் அறிய விருப்பம் உள்ளோர் அதையும் பார்க்கலாம்.
2. தம்பி Karthik Thangaraj உடைய wall ல் சில மேல் விபரங்கள் கிடைக்கும். அவர் ஆடிட்டர் ஆபிஸில் பணிபுரிகிறார்.
.

"வொர்க் ஃப்ரம் ஹோம்" உம் நம்ம ஸ்ட்ராடஜி யும்



"வொர்க் ஃப்ரம் ஹோம்" ல நிறைய டைம் கிடைக்குது என்பதெல்லாம் சில துறைகளுக்கு வேண்டுமானால் இருக்கலாம். ஆனால் பல துறைகளில் அது ஆரம்ப நாட்களில் ப்ராஸஸ் செட் செய்யும் வரைதான். பிற்பாடு, முந்தைய வேலை நேரத்தை விட அதிக நேரம் கூட அமையலாம்.

கொரோனா சமூக விலகல், நேரில் விலகலாக இருந்தாலும், ஆன்லைனில் பலரை ஒருங்கிணைத்திருக்கிறது. எனவே ஆன்லைன் சார்ந்த தொழில்களில் ஒரு மிகப்பெரிய ஜம்ப். எந்த ஒரு கடின சூழலையும் தனக்குச் சாதகமாக மாற்றுவது எப்படி என்று அறிந்த கில்லாடி நிறுவனங்கள் இதனை ஒரு மிகப்பெரிய வாய்ப்பாகவும் இன்றைய பிஸினஸ் சூழலில் தனது இருப்பை மிக அழுத்தமாக நிரூபிக்கும் ஒரு களமாகவும் எடுத்துள்ளன.

அதில் எங்கள் நிறுவனமும் ஒன்று. முதல் ஒரு வாரம் ஆன்லைனில் அது, இது, எது என்று ஒவ்வொரு வேலையாக ட்ரையல் செய்து பார்த்து இன்றைக்கு பக்காவாக ஒரு ப்ராஸஸை "ரோல் அவுட்" செய்திருக்கிறார்கள். ஒவ்வொரு டீமுக்கும் ஷெட்யூல் போட்டுப் பிரித்திருக்கிறார்கள். குறைந்த பட்சம் 8 மணி நேரம் வேலை, அதை சரியாகச் செய்ய மேக்கொண்டு டிரெயினிங், செய்றியா? இல்லையான்னு பாக்க மேனேஜருக்கு பக்கா ஷெட்யூல், அதுக்கு மேல ஆன்லைன் ட்ராக்கிங்..... மவனே ஒரு பய தப்பிக்க முடியாது.

Learning of the day - நீயே இவ்ளோ வெவரமா இருந்தா, உனக்கு சம்பளம் தாரவன் எவ்ளோ வெவரமா இருப்பான்?

நமக்கெல்லாம் ஒரே ஸ்ட்ராடஜி தான் - "சம்பளம் கரெக்டா தரியா? கொடுக்குற வேலையை செஞ்சிட்டுப் போறேன்"
.

வங்கித் தவணைகளுக்கு மூன்று மாதம் சலுகை

3 April 2020 அன்று ஃபேஸ்புக்கில் எழுதியது

வங்கித் தவணைகளுக்கு மூன்று மாதம் சலுகை என்ற அறிவிப்பு வங்கிகளால் அமல்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் அதில் கவனிக்க வேண்டிய சில விஷயங்கள் உண்டு.

1. இது ஆட்டோமேடிக் ஆக நடக்காது. உங்களுக்கு இந்தச் சலுகை வேண்டுமானால் நீங்கள் தான் உங்கள் வங்கியை அணுக வேண்டும். அல்லது அவர்கள் மொபைல் ஆப்பில் அல்லது அவர்கள் எஸ்.எம்.எஸ் அனுப்பியிருந்தால் அதன் மூலம் வரும் லிங்க்-இல் சென்று உங்கள் விருப்பத்தைத் தெரிவிக்கும் பட்டனை அமுக்க வேண்டும்.

2. சலுகை மூன்று மாத தவணைக்குத் தானே தவிர, வட்டிக்கு அல்ல. ஈ.எம்.ஐ கட்டாமல் மூன்று மாதம் தள்ளிப்போடலாம். ஆனால் அசலுக்கான வட்டி கட்ட வேண்டும் (பின்னால் வரும் ஈ.எம்.ஐ உடன் சேர்த்து).

3. உதாரணமாக - உங்கள் கடன் 30 இலட்சம் என்றால் அதற்கு மூன்று மாத வட்டி கணக்கிடப்பட்டு, அது உங்களது மற்ற ஈ.எம்.ஐ உடன் சேர்க்கப்படும். குத்துமதிப்பாக 63,750 ரூபாய். இன்னும் 20 வருடம் தவணை கட்ட வேண்டி உள்ளது என்றால் உங்கள் ஈ.எம்.ஐ மாதம் சுமார் 265 ரூபாய் அதிகரிக்கலாம் (இது சும்மா குத்துமதிப்பான கால்குலேட்டர் கணக்கு. வங்கிகள் அவர்களுக்கென வட்டிக்கு வட்டி அல்லது Amortization அது இது என்ற டெக்னிகல் விஷயங்கள் மூலம் கணக்கிட்டால் இத்தொகை அதிகரிக்கக் கூடும்)

4. மேற்சொன்னது போல ஈ.எம்.ஐ தொகை அதிகரிக்கக் கூடாது என்றால், அந்த வட்டிப் பணத்தை ஈ.எம்.ஐ யின் காலக்கெடுவில் கூட்டலாம். அதாவது 20 வருடங்களுக்குப் பிறகு இன்னும் சில ஈ.எம்.ஐ கள். ஆனால் இந்த - குத்துமதிப்பாக 63,750 வட்டி ரூபாய் - அசலில் சேருமல்லவா? அந்த அசலுக்கு வட்டி கட்டணும்ல?

ஆக 20 ஆண்டுகளைத் தாண்டி, குத்துமதிப்பாக ஒரு ஏழெட்டு ஈ.எம்.ஐ அதிகரிக்கலாம். கண்டிப்பாக நீங்கள் பெற்ற சலுகையை விட நான்கு மடங்கேனும் அதிகம் கட்ட வேண்டி இருக்கும். அநியாயமா இருக்கா? (நேர்மாறாக - பாயிண்ட் 8 ல் உள்ளபடி ஈ.எம்.ஐ யில் நீங்கள் சும்மா 1000 ரூபாய் அதிகரித்தால் அது அசலில் கழிந்து ஏழெட்டு ஈ.எம்.ஐ குறையும். அப்போ நமக்கு இனிக்குமல்லவா?)

5. ஆனால் இன்னோரு விஷயம். இப்போது சுமார் 22000 ரூபாய் நீங்கள் ஈ.எம்.ஐ கட்டுகிறீர்கள் என்று வைத்துக் கொண்டால், 20 ஆண்டுகள் கழித்து அது உங்களுக்குச் சிறிய தொகையாக இருக்கும். (உதாரணமாக, 20 ஆண்டுகளுக்கு முன்பு 1000 ரூபாய் என்பது உங்களுக்கு மிகப் பெரிய தொகையாக, ஏன் மாதச் சம்பளமாகக் கூட இருந்திருக்கக்கூடும். ஆனால் இன்று அது உங்களுக்கு ஒரு சிறு தொகை தானே?). எனவே, விருப்பமிருந்தால் இந்த ஆப்ஷனை எடுத்துக் கொள்ளலாம்.

6. இது முழுக்க நிதி சார்ந்த கணக்குகள் தான். வாங்கின காசுக்கு நாம் வட்டி கட்டித்தான் ஆக வேண்டும். அசலையும் கட்டித் தான் ஆக வேண்டும். (நாமம் போட்டுவிட்டு நாட்டைவிட்டு ஓடிப்போகத் தெம்பிருக்கிறதா? எங்களுக்குத் தெரிந்த ஒரு ஆள் இரண்டாண்டுகள் முன்பு சுமார் 9 கோடி ஆட்டையைப் போட்டு விட்டு ஆள் எஸ்கேப்) அதை விட்டு விட்டு பாமரத்தனமாக "ஐயோ, கொள்ளை, அநியாயம்" என்று மோடி மேலோ, காங்கிரஸ் மேலோ லைட்டைத் திருப்ப வேண்டாம்.

7. உங்களுக்கு அடுத்த மூன்று மாதங்களைச் சமாளிக்கும் வகையில் வருமானம் அ சம்பளம் வரும்பட்சத்தில் பேசாமல் ஈ.எம்.ஐ - யைத் தொடர்ந்து கட்டிவிட்டுப் போகலாம். உங்களுக்குத் தான் இலாபம். குழப்பமும் தலைவலியும் மிச்சம். (this is my personal suggesion)

8. "இல்லங்க, வருமானத்தில் பிரச்சினை இருக்கு"ன்னா, "மூன்று மாதச் சலுகை"யைத் தேர்ந்தெக்கலாம். ஆனால் வருத்தப்பட வேண்டாம். தேர்ந்தெடுத்து விட்டு ஒன்றிரண்டு வருடங்கள் கழித்து உங்கள் வருமானம் உயர, உயர வெறும் 1000, 2000 என ஈ.எம்.ஐ தொகையை ஏற்றிக் கட்டுங்கள். அவை அசலில் தான் கழியும். வட்டியும் சரசரவெனக் குறையும். குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு முன்பே சீக்கிரம் முடித்து விடலாம்.
.

"இப்படிக்கு N.கல்யாணி" - "இனிஷியல் ரொம்ப முக்கியம்"

கொரோனா வைரஸ்க்கும் தமிழ்ல பேரு வெச்சிட்டாங்களாம். இப்ப அது பேரு...
"முள்முடிநுண்ணி.!"
----------------------------------------------------------------



"இப்படிக்கு N.கல்யாணி" - "இனிஷியல் ரொம்ப முக்கியம்"
நாம யாரு? "சமோசா"வுக்கு - "புடைச்சி", "லட்டு"க்கு "கோளினி" ன்னு பேரு வச்சவனுகளாச்சே. அந்த நேரத்துல வேற எதையாவது புதுசா கண்டுபுடிக்கலாம்ல? செய்ய மாட்டோம்.
கொரோனாவுக்கு மருந்துலாம் கண்டுபுடிக்க மாட்டோம். அந்த அளவுக்குப் புத்தியெல்லாம் கிடையாது. மாத்தி யோசிக்க மாட்டோம். புதுசா எதையாவது கண்டு புடிக்க மாட்டோம். அட் லீஸ்ட் வீட்ல இருடான்னு கவர்மெண்ட் சொன்னா அதைக் கூட கேட்க மாட்டோம். நடுரோட்ல புல்லட்ல உக்காந்து செல்ஃபி போடுவோம் (யாரது நெ.சே வா ன்னு கேட்கக் கூடாது)
எவனோ கண்டுபுடிச்ச எல்லாத்துக்கும் வேலை மெனக்கெட்டு தமிழ்ல பேர் வைப்போம். இப்ப இதனால என்ன யூஸூ. ஒரு வெங்காயமும் கிடையாது.
ஒரு நேஷனல் லெவல் எஜூகேஷன் கான்ஃபரன்ஸ்ல ஒரு இன்டர்நேஷனல் டிரெயினர் ஒரு கேள்வி கேட்டாராம். "கடந்த 25 வருஷத்துல இந்தியாவுல இருந்து அறிவியலில் புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு பெரிய விஷயம் சொல்லுங்க" ன்னாரு. பதிலில்லை. "அப்போ இவ்வளவு நாளா சயின்ஸ் டீச்சர்ஸ் என்ன பண்றாங்க, அவங்களுடைய பங்கு என்ன?" ன்னு அடுத்து ஒரு கேள்வி கேட்டாராம்.
"ராட்சசி"ல ஜோதிகா கேரக்டர் ஒரு வாத்தியார்கிட்ட "ஏற்கனவே, யாரோ செய்த எக்ஸ்பெரிமன்ட்ஸை திரும்ப செய்ய வைக்கவே உங்களால முடியல, அப்ப நாட்டுக்கு புதிய கண்டுபிடிப்புகளை எப்படி செய்ய வைக்கப் போறீங்க?" ன்னு கேட்கும். அதுதான் ஞாபகத்துக்கு வருது.
.

வியாழன், 2 ஏப்ரல், 2020

What kind of jobs will exist after 20 years from now?

2017 ஏப்ரல் 2 அன்று ஃபேஸ்புக்கில் எழுதியது.

2037 வாக்கில் எது போன்ற வேலைகள் / துறைகள் இருக்கும்?
வீட்டில் ஜூனியர் உள்ள அனைவரும் கண்டிப்பாக யோசிக்க வேண்டிய விஷயம். எதை நோக்கி நாம் அவர்களைத் தயார் படுத்துகிறோம்?
அல்லது கொஞ்சம் பின்நோக்கி யோசியுங்கள். 1997 ல் எது போன்ற வேலைகள் / துறைகள் இருந்தன?
நான்கு மாதங்கள் முன் ஒரு அயர்ன் லேடி நம்மிடையே இருந்தார். வெளிநாட்டு சர்வாதிகாரி ஒருவர் இருந்தார். இன்று அவர்கள் இல்லை. ஐந்து மாதங்கள் முன் கட்டாகவே, ஒன்றிரண்டாகவோ 1000, 500 ரூபாய்கள் வைத்திருந்தோம். இன்று அவை வெற்றுக் காகிதங்கள். 15 ஆண்டுகள் முன்பு பேஜர் என்று ஒன்று வந்தது. இரண்டே வருடத்தில் காணாமல் போனது. ஐந்து மாதங்கள் முன்பு சென்னையில் 20,000 த்திற்கும் மேற்பட்ட மரங்கள் இருந்தன. இன்று அவை இல்லை. (5 விநாடி ஆக்ஸிஜன் இல்லாமல் போனால் என்ன நடக்கும் என்ற வாட்ஸ் அப் ஃபார்வர்ட் படித்திருக்கிறீர்களா?)
ஃபிளெக்ஸ் பிரிண்ட் என்ற ஒன்று வந்ததும், சுவர் ஓவியம் என்ற துறை காணாமல் போனதே, கம்பூட்டர் வந்ததும், டைப் ரைட்டர் சென்டர்கள் காணாமல் போயினவே, மொபைல் என்றொன்று வந்ததும், தெருமுக்கில் அமைந்து காதல் வளர்த்த பி.சி.ஓ - க்கள் எங்கே?
அது போல இன்று முழுக்க புழக்கத்தில் இருக்கும், நாளைக்குக் காணாமல் போகக் கூடிய வாய்ப்புள்ளவைகள் என்னென்ன இருக்கலாம் என்று யோசியுங்கள். யார் கண்டார்? திடீரென்று வாட்ஸ் அப் புக்குத் தடை வரலாம். கடும் வறட்சியில் நீரை நம்பியிருக்கும் துறைகள் நசியலாம். தண்ணீர் இறக்குமதி யை நம்பி புதிய தொழில்கள் வரலாம். ஓட்டுப் போடும் வயதோ, திருமண வயதோ, லைசென்ஸ் வாங்கும் வயதோ குறைக்கப்படலாம்.
ஆட்டோமேஷன் (இயந்திரங்கள், ரோபோக்கள், ஆன்லைன் போன்றவை) களால் இன்னும் பதினைந்து ஆண்டுகளில் சுமார் 69 சதவீதம் வேலையிழப்பு இருக்கப் போகிறது என்றொரு கணக்கெடுப்பு சொல்கிறது. ஹேண்ட் ரைட்டிங் க்குக்கு இன்னும் பள்ளிகளில் முக்கியத்துவம் கொடுக்கப் பட்டாலும், பள்ளி / கல்லூரி யை விட்டு வெளியே வந்தால் கைகளால் எங்கே எழுதுகிறோம்? டேப் அல்லது கின்டில் போல மாணவர்கள் கையில் ஒரு டிவைஸ் வந்தால் கையெழுத்துக்கு என்ன வேலை? நிஜ வாழ்க்கையில் அவர்களுக்குத் தேவையில்லாத பல விஷயங்கள் இன்னும் சிலபஸில் இருக்கின்றன.
இவையெல்லாவற்றையும் மனதில் வைத்து மீண்டும் யோசியுங்கள். 2037 / 2040 வாக்கில் எது போன்ற வேலைகள் / துறைகள் இருக்கும்? எதை நோக்கி நாம் நம் குழந்தைகளைத் தயார் படுத்துகிறோம்? 
.