ரஜினி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ரஜினி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 25 ஏப்ரல், 2020

ஸாரி விகடன்...........

24.ஏப்ரல்.2019 அன்று ஃபேஸ்புக்கில் எழுதியது. 


இந்த வார "வருகிறான் வந்தியத்தேவன்" கவர் ஸ்டோரியில் //படத்தின் வியாபாரம் குறித்த நம்பிக்கையைப் ‘பாகுபலி’ உருவாக்கியது என்றால், ‘பல நட்சத்திரங்களை வைத்துப் படத்தை உருவாக்க முடியும்’ என்ற நம்பிக்கையை மணிரத்னத்துக்கு அளித்தது ‘செக்கச்சிவந்த வானம்.’ // - என்று எழுதியிருக்கிறது விகடன்.

அருமை. அப்போ இதற்கு முன்னால் மணிரத்னம் மல்டி ஸ்டார் காஸ்டிங் வைத்துப் படங்கள் செய்ததே இல்லையா? 

அக்னி நட்சத்திரம் மல்டி ஸ்டாரர் இல்லையா? தளபதி கூட - அரவிந்த் சுவாமி புது ஹீரோவாக இருந்தாலும், ஜெய்சங்கர் பெரிய ஹீரோ தானே? அப்புறம் ஹீரோ ரஜினி (ஸ்ரீவித்யா, ஷோபனா வெல்லாம் கூட சேர்க்காமல்), ஆய்த எழுத்து? ஹீரோக்கள் மட்டுமே மூன்று பேர், ப்ளஸ் இயக்குனர் இமயம் பாரதிராஜா...... கடல்? அரவிந்த் சுவாமி, அர்ஜூன், அது போக புது ஹீரோ கெளதம் கார்த்திக்.

இது போக திருடா, திருடா முழுக்க டபுள் ஹீரோ சப்ஜெக்ட், குரு? மாதவன் பாதி படம் வருவார். கிட்டத்தட்ட டபுள் ஹீரோ, ராவணன்? விக்ரம், ப்ரத்வி, கார்த்திக், ஐஸ்........... அவரது முதல் தமிழ்ப்படமான "பகல் நிலவு" கூட அப்போதே மல்டி ஸ்டாரர் தானே? முரளி, சரத் பாபு, சத்யராஜ் - னு. என்னமோ அவர் இப்போ தான் முதன் முறையா மல்டி ஸ்டாரர் படம் எடுப்பது போல இப்படி ஒரு பாயிண்ட் எழுதியிருக்கிறார்கள். கட்டுரையை எழுதியவர் இளைஞரா இருக்கலாம். அவர் மணிரத்னத்தின் சமீபத்திய சில படங்களை மட்டும் பார்த்திருக்கலாம் என்று குன்ஸாகப் புரிந்து கொள்ள முடிகிறது.

//பல நட்சத்திரங்களை வைத்துப் படத்தை உருவாக்க முடியும்’ என்ற நம்பிக்கையை மணிரத்னத்துக்கு அளித்தது ‘// இதையும் பக்கத்தில் இருந்து பார்த்தது போலவே சொல்லியிருக்கிறார்கள்.. (யப்பா சாமி, முடியலப்பா உங்க டேபிள் ஜர்னலிசம். உக்காந்த மேனிக்கி இவங்களே முடிவு பண்ணிக்குவாங்க போல).

ஆனால் ஒரு கவர் ஸ்டோரியிலேயே இப்படி இருக்கலாமா? நானாவது ஒரு பாயிண்ட் தான் எடுத்தேன். பொன்னியின் செல்வன் கதை எனக்கு முழுதாகத் தெரியாது. அதனால் அதை விட்டு விட்டேன். கதை தெரிந்த நண்பர் ஒருவர் சொன்னார் "பொன்னியின் செல்வனுக்கு அவங்க கொடுத்திருந்த கதை சுருக்கத்தை படிச்சிங்களா? அவங்க சொன்னது மட்டும் கதையில்லை " ன்னு. மேலும் அருமை.

எல்லாருக்கும் தெரிந்த ஒரு பிரபல கதையை, எல்லாருக்கும் தெரிந்த ஒரு பிரபல இயக்குனர் எடுக்கும் போது அது பற்றிய கட்டுரையில் எவ்வளவு உள் விவரங்கள் தர வேண்டும்? இன்றைக்கு பேஸ்புக்கில் மைக்ரோ ப்ளாக்கிங் எழுதுகிறவர்கள் கூட எத்தனை சிறந்த உள்விபரங்களுடன் கட்டுரைகள் எழுதுகிறார்கள்?

அக் கட்டுரையில் தயாரிப்பு "லைகா" மற்றும் "சில நடிகர்கள் முடிவான" விபரங்கள் தவிர......

//களமிறங்கியிருக்கிறார் மணிரத்னம்.
கமல்ஹாசனும் ‘பொன்னியின் செல்வ’னைத் திரைப்படமாக்க விரும்பினார்.
எம்.ஜி.ஆர் ‘பொன்னியின் செல்வன்’ திரைக்கதையை இயக்குநர் மகேந்திரனிடம். எழுதச் சொன்னது
நடிக்கவைக்கவும் பேச்சு வார்த்தைகள் நடந்துவருகின்றன.
ஒரு பாகம் வெளிவர, குறைந்தது இரண்டு ஆண்டுகள் ஆகலாம்
உதவி இயக்குநர்களை வரலாற்றுத் தரவுகளைத் திரட்டச் சொல்லியிருக்கிறார்
பட்ஜெட், 400 முதல் 500 கோடி ரூபாய் வரை ஆகும் என்று தெரிவிக்கிறார்கள்//

போன்றவையெல்லாம் சினிமா பார்க்கும் எல்லாருக்கும் தெரிந்த டெம்ப்ளேட் வரிகள். இவற்றை படத்தின் போஸ்டரை வைத்தே சினிமா ரசிகனான யார் வேண்டுமானாலும் கெஸ் செய்ய முடியும். விகடனில் இப்படிப் பட்ட மேலோட்டமான, அழுத்தமற்ற கட்டுரைகளின் எண்ணிக்கை அதிகமாகி வருவது விகடனின் வாசகன், (ஒரு காலத்தில்) விகடனின் ரசிகன், விகடனில் துணுக்குகள் எழுதுபவன் என்ற முறையில் மிகவும் வருத்தமாக இருக்கிறது.

டிஜிட்டலுக்கு மாறி வரும் உலகத்தில், ஏற்கனவே விற்பனை சரிவு, இளம் வாசகர்களை ஈர்க்க முடியாதது என பல பத்திரிகைகள் தடுமாறும் நேரத்தில் விகடன் கன்டென்ட் விடயத்தில் இன்னும் கவனமாக இருக்க வேண்டும் என்று தான் எனக்குத் தோன்றுகிறது.

வருத்தத்துடன்
....

- எஸ்கா

திங்கள், 10 பிப்ரவரி, 2020

தூசு தட்டினார் ரஜினி


2016 பிப் 9 அன்று ஃபேஸ்புக்கில் எழுதியது.

ரஜினியைப் பற்றி அக்ஷய் குமார் ஆங்கிலத்தில் (அல்லது ஹிந்தியில்) என்னத்தைச் சொன்னாரோ? அதை நம் அறிவாளி லோக்கல் லேங்க்வேஜ் ரிப்போர்ட்டர் "தூசு தட்டினார்" என அபத்தமாக மொழிபெயர்த்து வைத்து இன்றைக்கு அச்செய்தியை வைரலாக்கி வைத்திருக்கிறார். ரஜினி செய்யும் வேறு சில அரசியல்கள் எனக்கும் பிடிக்காது தான். சென்னை வெள்ளத்துக்கு அவர் வெறும் பத்து இலட்சம் நன்கொடை தந்த போது "ஏன் இவ்ளோ கம்மி?" என்று கேட்டு நண்பர்களிடம் திட்டு வாங்கினேன். ஆனால் இந்த விஷயத்தில் புரியாமல் அவரைக் கழுவி ஊற்றும் ஸ்டேட்டஸ்கள் வேண்டாமே. இங்கே கூட புரிந்து கொண்டு கமெண்ட் செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

ஒரு விஷயம் யோசியுங்கள். நமக்கு ரெண்டு கோடி ரூபாய் சொத்து இருந்தால் என்னா ஆட்டம் ஆடுவோம்? கார்ல ஏசி, கக்கூஸ்ல ஏசி என்று கவுண்டர் ஸ்டைலில் கௌப்ப மாட்டோம்? ரியல் எஸ்டேட் விளம்பரத்திற்கு உங்கள் ஊருக்கு வரும் ஒரு சாதாரண காமெடி நடிகரைப் பார்க்கக் கூட எத்தனை அல்லக்கைகள் தாண்ட வேண்டும் என்று கவனித்திருக்கிறீர்களா? டவுசர் நாயகன் பீக்-கில் இருந்த போது, முதல்வர் கனவில் தன் உதவியாளர்களில் யாருக்கு எந்தத் துறை, யார் எதற்கு மந்திரி என்று ஒதுக்கி ப்ளான் போட்டதைக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? அப்படி ஒரு பந்தா நிறைந்த உலகம் ஆயிற்றே அது.

அதுவும் ஜூஸ் டம்ளர் பிடிக்க, ஷூ கழட்ட, ஃபேன் பிடித்து நிற்க, சட்டையை மாட்டி விட என்று எல்லா விஷயத்துக்கும் அசிஸ்டெண்ட் வைத்திருக்கும் சினி ஃபீல்டில் 500 கோடி ரூபாய் பிஸினஸ் வேல்யூ உள்ள ஆசியாவிலேயே ஒரு பெரும் நடிகருக்கு 15 அஸிஸ்டெண்டுகள் (அதுவும் 300 கோடி முதலீட்டில் தயாரிக்கப் படும் ஒரு படத்துக்கு) இருப்பதும் அவர் அவர்களிடம் வேலை வாங்குவதும் தவறாகத் தெரியவில்லையே. அதை மறுத்து தன் வேலையை தானே செய்ததை, இதை விட பந்தா நிறைந்த ஹிந்தி சினி ஃபீல்டைச் சேர்ந்த ஒரு நடிகர் பெருமையாகச் சொன்னதை, இங்கே உள்ள லோக்கல் தமிழ் நிருபர் மொழிபெயர்க்கத் தெரியாமல் எழுதியதால் விளைந்த அபத்தம் அது. எழுதும் விதத்தில் எழுதினால் எதையும் செய்தியாக்கலாம், எதையும் அபத்தமாகவும் ஆக்கலாம்.

மற்றும் ஒன்று. நமக்கெல்லாம் பறந்து பறந்து வில்லன்களை உதைக்கும் சூப்பர் ஸ்டார் என்றாலும் உண்மையில் 66 வயதுப் பெரியவர் அவர். அதே 66 வயதில் என் தந்தை இருந்த போது அவருக்கு சில விஷயங்களுக்கு என் உதவி தேவைப்பட்டது. பல முறை தரையில் உட்கார்ந்த அவர் முட்டி வலியால் எழ முடியாமல் என் கை பிடித்துத்தான் எழுவார். 65 வயதில் சுஜாதா, ஒரு ரூமில் இருந்து இன்னோரு ரூமுக்குச் செல்வதற்குள் எதற்குச் சென்றோம் என்று மறந்து விடுகிறது என்று எழுதினார். அதன் படி பார்த்தாலும் ஒரு 66 வயதுப் பெரியவர் மற்றவர் உதவி இன்றி தன் வேலையைத் தான் செய்வதை பாராட்ட அல்லவா வேண்டும்.

அது சரி, சுனாமியை பல மாதங்களுக்கு "டிசுனாமி" என்று எழுதிய, "அழகி" என்ற வார்த்தையை ஆபாசமாக்கிய பத்திரிகை தானே அது? அதைப் படிக்கும் மக்களிடம் இருந்து எப்படி ஒரு தெளிவான எதிர்வினையை எதிர்பார்க்க முடியும்?

- எஸ்கா

பி.கு - 2.0 பட்ஜெட் எவ்வளவாக மாறிப்போச்சு என்பது உங்களுக்கே தெரியும்.

வெள்ளி, 10 ஜனவரி, 2020

தர்பார் - தர்பாரிஸம்

ஆபீஸ்ல ஆயிரம் பிரச்சினை, வீட்ல ஐநூறு பிரச்சினை, இதுபோக திருட்டு பிரிண்டுகள், ஆன்லைன் ஃபுல்லா படங்கள், லீகலா படங்களைக் குமிச்சி வச்சிருக்குற அமேசான், நெட்பிளிக்ஸ் கடைகள். அநியாய டிக்கெட் ரேட்டு, ஸ்நாக்ஸ் அதைவிட ஓவர் ரேட்டு.... போக வர டிரான்ஸ்போர்ட்டு, திரும்பி வாரப்ப ஹோட்டல் செலவுன்னு ஒரு குடும்பஸ்தனுக்கு பல கவலைகள். இதைத்தாண்டி குடும்பத்தையே இழுத்துகிட்டு தியேட்டருக்குப் போனா ஜாலியா ரசிக்க வைச்சு அனுப்பனும். அதைத்தான் "தர்பார்" செஞ்சிருக்கு.

அதை விட்டுட்டு.... ரஜினி மாதிரி ஒர்த்தரை வச்சு காலா, போ-லான்னு கடுப்பேத்தி அனுப்பக் கூடாது.

என் பாஸ் சொல்வாரு What you believe is what you deliver னு. அதே மாதிரி தான் நம்பிக்கைகளும் what you believe is only what you will take. நீ என்னதான் குத்தவச்சி கருத்து சொன்னாலும், இடது சாரி சிந்தனை உள்ளவனுக்கு இடது சாரி குறியீடுகள் தான் தெரியும். வலது சாரி சிந்தனை உள்ளவனுக்கு வலது சாரி குறியீடுகள். பெரியவங்களுக்கு அவங்க பிடிச்சது தான் தோணும். குழந்தைகளுக்கு, அவங்க எதிர்பார்க்குறது தான் தெரியும்.

ரஜினி காரை வில்லன் லாரி மூலமா அடிச்சித் தூக்குற சீன்ல, என் 6 வயசுப் பையன்ட்ட கேட்டேன் "ஏம்பா ஆக்ஸிடெண்ட் ஆச்சு?" ன்னு. "ரெட் சிக்னல்ல நிக்காமப் போனா ஆக்ஸிடெண்ட் தானே ஆகும்" னான் அவன். அதுதான் அவன் புரிதல். ஸோ, நீங்க என்னதான் வேற எதையோ திணிச்சாலும் அவனவனுக்கு என்ன வேணுமோ, அதைத்தான் எடுத்துக்குவான். எது போய்ச் சேரணுமோ அதுதான் போய்ச்சேரும்.

ஊர்ல இருக்கிற எல்லா தியேட்டர்களிலும் ஒரே படத்தை ரிலீஸ் பண்ணினா நாலு தியேட்டர்ல காத்தாட தான் செய்யும். This is applicable for all mass heros. நம்ம சித்தாந்தத்துக்கு ஏத்த மாதிரி எந்த தியேட்டர் போட்டோ வேணுமா அதை போட்டு நாம சொறிஞ்சிக்கலாம். தியேட்டர் காலியா இருக்குன்னு சொல்லிக்கலாம். அப்படியே காலியா இருந்தாலும் அதில் ரஜினி தப்பென்ன? பிரச்சினை என்பது டிஜிட்டல் மீடியா. கையில ஸ்மார்ட் போனை வச்சுகிட்டு "நாளைக்கு எப்படியும் திருட்டுப் பிரிண்ட் வந்துடும் நான் பார்த்துக்கிறேன்" ன்னு உட்கார்ந்துகிட்டு இருக்கிற லட்சக்கணக்கான பேருடைய தப்பு.

அதே போல வயசாயிடுச்சி, கெழவன் ன்னு கிண்டல் பண்லாம். யூத்தா இருக்குற எத்தனை நூத்துக்கணக்கான ஹீரோஸ் படமே இல்லாம சும்மா உக்காந்திருக்காங்க. இவருக்கு எவ்ளோ பெரிய மார்க்கெட் இருக்கு? அதை விடுங்க. சிம்பிளா யோசிங்க. 60 வயசுக்கு மேல உள்ள உங்கப்பா டான்ஸ் ஆடினா சந்தோஷப் படத்தானே செய்வீங்க. எங்க மாமாவுக்கு 66 வயசு. டான்ஸ்லாம் ஆட மாட்டாரு. மூட்டு வலியெல்லாம் வேற இருக்கு. ஆனா என் கஸின் (அவர் பையன்) கல்யாணத்துல நாங்க போட்ட ஆட்டத்தைப் பாத்துட்டு என் கூட வந்து கையப் பிடிச்சிகிட்டு பத்து நிமிஷம் ஆடுனாரு. அப்புறம் "என்னையே ஆட வச்சுட்டியில்லடா" ன்னு சந்தோஷமா சிரிச்சாரு. குமுதா ஹேப்பி அண்ணாச்சி.

அதே போலத்தான் ரஜினி படங்களும். பாத்தோமா, என்ஜாய் பண்ணோமா, you happy? I am happy ன்னு போய் வரணும். அந்த விதத்தில் "தர்பார்" ஒரு என்டர்டெயினிங் மூவி. உங்க உலக சினிமா அறிவு, டெக்கினிக்கல் அறிவையெல்லாம் மூட்டை கட்டி வச்சிட்டு மூளையோட கதவை சாத்திட்டு போய் பார்த்துட்டு வாங்க. பொங்கலுக்குப் பைஸா வசூல்.

அடுத்தவங்களைத் தொந்தரவு பண்ணாம நாம நம்ம சந்தோஷத்துக்கு எதைச் செஞ்சாலும் தப்பில்ல. நீண்ட நாட்களுக்குப் பிறகு கியூவில் நின்று டிக்கெட் வாங்கியது, ஸ்கிரீன் முன்னால் குழந்தைகளோடு ஆடியது, அனைவரும் என்ஜாய் செய்து படம் பார்த்தது என்று பல சந்தோஷ அனுபவங்கள். forget all politics. Just enjoy the movie & celebrate the festival folks.
.

சனி, 13 நவம்பர், 2010

கலவை சாதம்..

போன முறை தலைப்பு இல்ல என்று எழுதிய உதிரிக் கட்டுரைக்கு கலவை சாதம் என்று பெயர் வைக்கலாம் என்று பொதுக்குழுவை கூட்டி முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆட்சேபணை இருப்பவர்கள் போராட்டம் செய்யலாம். கொஞ்சம் டைம் பாஸாகும். (ஜோக் இருக்கட்டும், சீரியஸாக இந்தப்பெயரில் வேறு யாரேனும் அன்பர் எழுதிக்கொண்டிருந்தால் தயவு செய்து தெரிவிக்கவும், நான் பெயர் மாற்றிக் கொள்கிறேன்)

----------------------------------------

தனிமையிலே இனிமை காண முடியுமா? முடியாது என்பார்கள் சிலர். முடியும் என்பார்கள் பலர். Solitude is a bliss என்றொரு ஆங்கிலப் பழமொழி உண்டு. (இதைத்தான் செல்வராகன் தன்னுடைய ஒரு படத்திற்காக Solitude என்ற வார்த்தை கிடைக்காமல் Being alone is a bliss என்று கேட்ச் லைன் போட்டிருந்தார். அந்தப்படம் நின்று போயிற்று என்று நினைக்கிறேன், பெயர் ஞாபகமில்லை) அதாகப்பட்டது தனிமை என்பது ஒரு வரமாம். சத்தியமாக இல்லை.. தனியாக ஒரு நாள் இருக்கலாம். இரண்டு நாள் இருக்கலாம். அல்லது எல்லாரும் இருக்கும் போது தனியாக இருக்கலாம். (அதாவது எல்லாரும் இருக்கிறார்கள் என்ற தைரியத்தில்) ஆனால் யாருமில்லாமல் நிஜமாகவே தனியாக இருப்பது என்பது கொடுமை. அதுவும் டி.வி கிடையாது. வண்டி கிடையாது. மியூஸிக் பிளேயர் கிடையாது. லேப்டாப் உண்டு, ஆனால் டேட்டா கார்டு கிடையாது. சோறு கிடையாது (நினைத்த நேரத்தில்), கொஞ்சம் யோசித்துப்பாருங்கள் எப்படி இருக்கும் என்று. புது ஊர் வேறு. இந்த ஊரில் எவனையும் தெரியாது வேறு.. (டிரான்ஸ்பரில் ஊர் மாறிவிட்டேன். அதான் இந்தப்புலம்பல்ஸ்)

----------------------------------------

டேட்டா கார்டு அதாங்க இன்டர்நெட்டு இல்லாததால் சுத்தமாக ஒரு நியூஸூம் தெரியவில்லை. பேப்பர் கூடப்படிப்பது இல்லை. ஒபாமா வந்துவிட்டுப்போய்விட்டாரா? ஜில் புயல் கரையை கடந்து விட்டதா? எந்திரன் மொத்த வசூல் எவ்வளவு? தங்கம் விலை எவ்வளவு ஏறியிருக்கிறது? ஏ.ஆர்.ரஹ்மான் புதுப்படம் ஏதும் ஒப்புக்கொண்டிருக்கிறாரா? மங்காத்தாவும் காவலனும் என்ன நிலைமை? சென்செக்ஸ் எவ்வளவு ஆகியிருக்கிறது? மெட்ரிகுலேஷன் பள்ளி ஃபீஸ் மேட்டர் என்னவாயிற்று? ரத்த சரித்திரா எப்ப ரிலீஸ்? சாரு இப்போ யார் கூட சண்டை போடுகிறார்? நீயா? நானா? என்னவாயிற்று? சூப்பர் சிங்கர் எத்தனை ரவுண்டு போயிருக்கிறது? என்று ஒரு நியூஸ் அப்டேட்டும் இல்லை. அதுசரி இதெல்லாம் தெரிந்து மட்டும் என்ன புடுங்கப்போற என்கிறீர்களா? அதுவும் சரிதான், நமக்கு லோக்கல் மேட்டரே ஒன்று கூட தெரியவில்லை. இன்டர்நேஷனல் மேட்டர் தெரிந்து என்ன ஆகப்போகிறது?

கம்பேனியில் ஒரு கொலீக் புதிதாக சேர்ந்திருக்கிறார் என் கம்பெனியில். அதாவது நான்தான் கொஞ்ச நாளைக்கு கம்பெனி கொடுக்க வேண்டுமாம். எதைப்பார்த்தாலும் கேள்வி கேட்கிறார் மனுஷன். செட்டப்பு செல்லப்பா என்று வடிவேலு வருவாரே அந்தா மாதிரி டவுட்டு டங்கப்பா இவர். அதிலும் பஸ்ஸில் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டு "கார்த்திக், இங்கே கத்தரிக்காய் எவ்வளவு? கார்த்திக், இங்கே லேண்ட் வேல்யூ எவ்வளவு? அரிசி எது ஃபேமஸ்? கார்த்திக், எந்த ஏரியாவில் வீடு பார்க்கலாம்? எந்த ஸ்கூல் நல்ல ஆக்டிவிடீஸோட எஜூகேஷன் தர்றாங்க? கார்த்திக், இந்த ஏரியாவில் எவ்வளவு வெயில் அடிக்கும்? சி.யூ.ஜி கனெக்ஷன் ஏன் வாங்கலை? நான் வெஜ் சாப்பாடு தலைவாழை இலை போட்டு எங்கே கிடைக்கும்? உங்க லேப்டாப் எத்தனை ஜி.பி? என்று ஒரே கேள்வீஸ் ஆஃப் இன்டியா. எனக்குத்தான் ஒன்றுக்குமே விடை தெரியவில்லை. ஆனால் இதை எனக்குப் புரிய வைத்ததற்கு அந்த மனுஷனுக்கு நன்றி சொல்ல வேண்டும்.

----------------------------------------

ராவண் பாடல்களை (கவனிக்க ராவணன் அல்ல) இன்று ஹிந்தியில் கேட்டேன். தமிழை விட அருமையாக இருக்கின்றன.. ராவணனுக்கும் ராவணுக்கும் பாடல் வரிகளில் பல வேறுபாடுகள் இருந்தாலும் இசைக்கருவிகள் அனைத்தும் என்னவோ வட இந்திய வாடைக்கு தமிழை விட ஹிந்திக்கு தான் அருமையாக செட்டாகியிருப்பது போல் தோன்றுகிறது எனக்கு.. கெடா கெடாக் கறி பாடலில் வரும் ஹை பிட்ச் ஹம்மிங் தமிழை விட ஹிந்தியில் அட்டகாசமாக வந்திருக்கிறது. "வீரா"வை விட "பீரா" நன்றாக இருக்கிறது கேட்க..

----------------------------------------

டீம் மேனேஜ்மெண்ட் பற்றி கொஞ்சம் ஸ்டடி செய்ய வேண்டும். அதிலும் ரிமோட் மேனேஜ்மெண்ட் வேறு.... கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருக்கிறது. பழைய கம்பேனியில் இருந்த டீமில் வெறும் ஐந்து பெண்கள் தான். அழகாக எட்டரைக்கு வருவார்கள், ஐந்து மணிக்கு கடையைச் சாத்தி விடுவார்கள். ஆனால் அப்போது அதுவே கஷ்டமாக இருந்தது போல் இருந்தது. இங்கே என்னடாவென்றால் டீம் சைஸ் பதிமூன்றில் ஆரம்பித்தது... மெள்ள மெள்ள ஏறி முப்பத்து இரண்டில் போய் நிற்கிறது. இன்னும் ஐந்தாறு பேர் தேவை. பெண்கள், ஆண்கள், கல்யாணம் ஆனவர்கள், கல்யாணம் ஆகாதவர்கள், டிப்ளமோ ஆட்கள், என்ஜினியரிங் முடித்தவர்கள், சிங்கிள் டிகிரி, டபுள் டிகிரி, கம்ப்யூட்டர் பேக்ரவுண்டு, ஃபர்ஸ்ட் ஜாப் பார்ப்பவர்கள் என்று ஒரே கலவை. அதுவும் ஒவ்வொருவரும் வெவ்வேறு இடத்தில், வெவ்வேறு மாவட்டங்களில். எல்லாரையும் கான்டாக்டிலேயே வைத்திருக்க வேண்டும். இது தவிர டெக்னிக்கல் டீம் ஆட்கள், சென்னை, பெங்களூரு பிராஞ்ச் ஆட்கள், உயரதிகாரிகள் என எல்லாரிடமும் பேசிக்கொண்டேடேடேடேடேடேடே இருக்க வேண்டியிருக்கிறது. இரண்டு போன்கள் வைத்திருந்தும் போன் கால்ஸ் மட்டுமே ஒரு நாளைக்கு மாறி மாறி ஐந்து மணிநேரம் ஓடுகிறது. ஒரு கால் பேசி வைப்பதற்குள் அதில் இரண்டு மிஸ்டு கால்கள். ஏ.வெங்கடேஷ், பேரரசு, டி.ராஜேந்தர் வகையறாக்களின் படம் பார்த்து முடித்ததும் ஒரு கேரிங்கான ஃபீலிங் வருமே.... அது தினமும் எனக்கு வருகிறது. காது வலிக்கிறது.

----------------------------------------

அப்படியே ஒரு ஜோக்கு (அப்பாடா, முதல்லயே சொல்லிட்டோம். கண்டிப்பா சிரிப்பாங்க)

எஸ்.பி.எம்-ல வேலைல இருக்கும் போது நிஜமாவே நடந்தது... நான் கிளாஸ் எடுத்துக்கிட்டு இருக்கும்போது.......

நான்: ஷார்ட் ஃபார்ம்ஸ்-லாம் நல்லா பாத்துக்கோங்கப்பா.. கண்டிப்பா நாலு மார்க்குக்கு கேள்வி வரும்..

குயில் குஞ்சு : இங்கிலீஷுல கஷ்டமா இருக்கே சார்...

நான்: தமிழை கம்பேர் பண்ணிக்கோடா.. இப்போ................... தியாகராய நகரை "தி.நகர்" னு சொல்றோம், வாத்தியாரை "வாத்தி" னு சொல்றோம், தஞ்சாவூரை "தஞ்சை" னு சொல்லலாம்..... அந்த மாதிரி.........

குயில் குஞ்சு : குஞ்சாண்டியூரை என்னன்னு சார் சொல்றது?????

நான்: (வழக்கம் போல "பே" தான்........)
----------------------------------------



படிச்சாச்சா.........?

அப்புறம்... இன்ட்லி லோகோ இருக்கா பக்கத்துல....?

புடிச்சிருந்தா ஓட்டுப்போடுங்க...

புடிக்கலன்னாலும் ஓட்டுப்போடுங்க...

நீங்க (ஓட்டு) போட்டா மட்டும் போதும்.... போட்டா மட்டும் போதும்....

எலைக்கு ஏழ்நூறு ரூவா செலவு பண்ணிருக்கோம்ல....
---------------------------------------

சனி, 2 அக்டோபர், 2010

எந்திரன் - சில (பல) கேள்விகள் (ஐ... ஜாலி... ஜாலி... எந்திரன் பாத்தாச்சே.....)

வெறும் மூன்று ரூபாய் தரை டிக்கெட்டிலேயே சங்கீத்தில் வாரா வாரம் இங்கிலீஷ் படம் பார்த்து வளர்ந்தவன் நான். சுப்ரகீத்தில் ஆறு ரூபாய். அப்புறம் தரை டிக்கெட்டை பத்து ரூபாய் ஆக்கினார் கலைஞர். ஆக படம் பார்க்க பத்து ரூபாய் போதும். ஆனால் நான் அதிக பட்சம் செலவு செய்தது என்று பார்த்தால் "மேட்ரிக்ஸ் ரீலோடட்"-கு 17 ரூபாய் ஃபர்ஸ்ட் கிளாஸ், “கிளாடியேட்டர்” 20 ரூபாய், “மைட்டி ஜோ யங்”-குக்கு 22 ரூபாய் பால்கனி, பிறகு டிக்கெட் விலை ஏறிய பின் “கஸீனோ ராயல்”-கு 30 ரூபாய், “க்வான்டம் ஆஃப் சோலேஸ்” 35 ரூபாய், அப்புறம் சென்னையில் காசு கொடுத்து பார்த்த “போக்கிரி” 40 ரூபாய், ஆபீஸில் தவிர்க்க முடியாமல் டீமாகப்போன “சரோஜா” 85 ரூபாய்.

ஆசைப்பட்டு பார்த்த ஒரே படமான அவதார் 120 ரூபாய் (நூற்றியிருபது ரூபாய் - த்ரீ டி கண்ணாடி உட்பட சத்யம் தியேட்டரில் - அது விதிவிலக்கு). அது தவிர என் வாழ்க்கையிலேயே முதன் முறையாக ஒரு படத்துக்கு நூத்தி ஐந்து ரூபாய் கொடுத்து பார்த்திருக்கிறேன் என்றால் அது எந்திரனுக்குத்தான். அதே போல் முதல் நாளிலேயே பார்த்த ஒரே தமிழ் படமும் இது தான். மத்ததெல்லாம் நிதானமாக ஒரு மாதம் கழித்து பார்த்தாலே போதும். ஆனால் தமிழ்நாட்டின் இண்டு, இடுக்கு, மூலை, முடுக்கு மற்றும் பிட்டு படம் போடும் தியேட்டர்களில் எல்லாம் எந்திரன் மட்டுமே ஓடினால் டிக்கெட் ஈஸியாகக் கிடைக்காதா என்ன?

அதுவும் நைட் ஷோ இரண்டு டிக்கெட். எனக்கொன்று. எங்க நைனாவுக்கு ஒன்று. ப்ளஸ் ஒரு முறுக்கு பாக்கெட். இரண்டு பாப்கார்ன். மூன்று ஸ்பிரைட். இரண்டு ஸ்வீட் கார்ன். ஒரு வாட்டர் பாட்டில். (நைனாவை பக்கத்தில் வைத்துக்கொண்டே கத்தித் தீர்த்ததில் கட்டிப்போன தொண்டையை சரி செய்ய) ஒரு ஸ்ட்ரெப்சில்ஸ். ஆக மொத்தம் எந்திரனுக்காக இந்த மாத குடும்பச்செலவில் கை வைத்தது ரூபாய் முன்னூற்று முப்பத்து இரண்டு. அதுவும் சேலம் என்ற ஊரில் ஒரு சாதாரண ஒதுக்குப்புறமான தியேட்டரில், இதையே சத்யத்தில் பார்த்துத் தொலைத்திருந்தால் ஆயிரத்தைநூறு ரூபாய் மொய்யாகி இருக்கும். (நான் போயிருக்கவே மாட்டேன். அது வேற விஷயம்..)

அப்புறம் நேற்று எந்திரன் பார்த்து விட்டு இன்றைக்கு வேலைக்குப்போகாமல் எங்க நைனா கட்டடித்ததில் மார்ஜினல் லாஸ் தனி. அதையும் கூட்டிக் கொள்ளுங்கள். இனிமேல் அவரையெல்லாம் கூட்டிக்கொண்டு போகக்கூடாது என்று தோன்றினாலும் அந்த மனுஷனுக்கு ரஜினியும், ராமராஜனும் ரொம்பப்பிடிக்கும் என்பதால் மன்னித்து விட்டு விட்டேன். பாட்ஷாவும், கரகாட்டக்காரனும் அவரது ஃபேவரைட். டிவியில் அந்தப்படங்கள் போடும் அன்றைக்கு வேலைக்கு லீவு போட்டு விடுவார்.

சரி. சொந்தக் கதை எதுக்கு? போதும். எந்திரன் படம் பற்றிப்பேசுவோம். பயப்படாதீர்கள். நான் விமர்சனம் எழுதவில்லை. நெட்டில் நோண்டும் பலரும் படம் பார்த்திருப்பீர்கள் அல்லது உங்களுக்குக் கதை தெரிந்திருக்கும். அப்படியும் தெரியாதவர்கள் "எந்திரன்" என கூகுளிட்டோ, தமிழ்மணத்திலோ, இன்ட்லியிலோ கதையைப்படித்து விட்டு வாருங்கள். இரண்டே நாள்தான் ஆகியிருக்கிறது. ஆனால் கிட்டத்தட்ட அனைத்து பதிவர்களும் "எந்திரன்" பற்றி பதிவு போட்டுள்ளார்கள். நாமளும் எதையாவது போடுவோம் என்று தோன்றியது...

பதிவாகப்போடுவதற்குப் பதில் கேள்வியாகக்கேட்டால்? (போட்ட காசுக்கு நாலு கேள்வியாவது கேட்கணும் இல்லையா?) இந்தக்கேள்விகளை பலரும் கேட்கிறார்கள்.. கேட்காவிட்டாலும் பலர் மனதில் இந்தக் கேள்விகள் உட்கார்ந்திருக்கின்றன.. காப்பி என்று சொல்லாதீர்கள். ரெடி.. விடு ஜூட்.. கதையை படித்துத் தெரிந்து கொண்டு விட்டு இந்தக் கேள்விகளை படியுங்கள்..

இதோ கேள்விகள்...

21-ம் நூற்றாண்டின் இம்மாம் பெரிய அச்சீவ்மெண்டைச் செய்யும் விஞ்ஞானிக்கு இருக்கும் உதவியாளர்கள் இவ்வளவு மொக்கையாக இருப்பார்களா?

டிரெயினில் முப்பது நாற்பது பேரை புரட்டியெடுக்கும் ஒருவரை போலீஸ் தேடவே தேடாதா?

நாடே பரபரக்கும் ஒரு பெரிய வழக்கில் ஒரு ரோபோவின் சாட்சியை நீதிமன்றம் ஏற்றுக்கொள்ளுமா?

இந்தியாவில் எந்தக் கேஸ் ஒரே நாளில் முடிகிறது?

ரோபோவை டிஸ்மேன்டில் பண்ணிடுங்க - என்று சிம்பிளாகச் சொன்னால் போதுமா? அதை உருவாக்கிய ஃபார்முலா வசீகரனின் மண்டையிலும் ஃபைலிலும் இருக்காதா? அதை என்ன செய்வதாம்?

அழிவு செய்யும் ரோபோவின் ஓனரான விஞ்ஞானியை அரெஸ்ட் செய்யாமல் அவரையே புராஜெக்டுக்கு தலைவராக்கும் மாங்கா போலீஸ் எந்த ஊரில் இருக்கிறது?

ரோபோவை உருவாக்கவே பத்து வருட ஆராய்ச்சி தேவைப்பட்டால், அதற்கு உணர்ச்சிகள் கொடுக்க சும்மா போர்டில் பாடம் நடத்தினால் போதுமா?

சர்வ வல்லமை உள்ள ஒரு ரோபோ தயாரானால் அந்த ஃபார்முலாவைக் கவர சர்வதேசத் தீவிரவாதிகளோ, காங்க்லோமெரேட் கம்பெனிகளோ முயற்சிக்க மாட்டார்களா?

நூற்றுக்கணக்கான போலீஸையும், ராணுவத்தையும், பொது மக்களையும் கொலை செய்யும் ரோபோவை தயாரித்த ஒரு விஞ்ஞானியை மனித உரிமை ஆர்வலர்கள் சும்மா விட்டு விடுவார்களா?
ரோபோவைத் துரத்தும் போலீஸ்காரர்கள் ஐஸ்வர்யா ராய் காருக்குள் இருக்கிறார் என்பதைப்பார்க்காமலே சுடுவார்களா?

ராணுவத்திற்கு கொடுக்க ரோபோவை உருவாக்கும் ஒரு விஞ்ஞானிக்கு அதற்கான கமாண்டு-களை யார் வேண்டுமானாலும் மாற்றலாம் என்ற சின்ன விஷயம் தெரியாதா?

பத்து வருடம் உழைத்து தயாரித்த ஒரு ரோபோவை "நியூரோ சிப்"பை டெமாலிஷ் செய்யாமல் சும்மா தூக்கி குப்பையில் போடுவாரா ஒரு விஞ்ஞானி?

ரஜினியே இரண்டு அல்லக்கை அரைகுறை விஞ்ஞானிகளை வைத்திருக்கும் போது அயல்நாட்டு தீவிரவாதிகளுக்கு ரோபோ சப்ளை செய்யும் அளவுக்கு பெரியாளான அவரது விஞ்ஞானி புரபஸர் ஆள் பலம் இல்லாமல் தனியாகச் சுற்றுவாரா?

ஒரு சாதாரண குடிமகனின் பத்து இலட்ச ரூபாய் டீலிங்கில் எல்லாம் தலையிடும் ரெளடிகள், அரசியல் வாதிகள் எல்லாம் இவ்ளோ பெரிய மேட்டர்களில் தலையிடவே மாட்டார்களா?

ரோபோ பற்றியே படம் எடுத்தாலும் கும்பல் கும்பலாகவே ஆட்கள் வரிசையாக நின்று ஆடும் டான்ஸ்களை எப்போது நிறுத்துவார்கள்?

சுஜாதா இருந்திருந்தால் படத்தைப்பார்த்து விட்டு என்ன சொல்லியிருப்பார்?

வில்லனாக ரகுவரன் இருந்திருந்தால் எப்படி இருந்திருக்கும்?

----------------------------------------------------------------------------------

சரி போகட்டும். கொஞ்சம் பொது அறிவு கேள்விகள் கேட்கலாமா?...

இது ரஜினி படமா? ஷங்கர் படமா?

இந்தப்படத்தில் அஜீத் அல்லது கமல் நடித்திருந்தால் என்ன ஆகியிருக்கும்?

கிளைமாக்ஸ் கதை விவாதத்தில் இராம.நாராயணன் கலந்து கொண்டாரா?

ஒரு சூப்பர் ஸ்டாரே சாதாரணமாக அறிமுகம் ஆவதைப்பார்த்தாவது சுமோ டாப்பைக்கிழித்து, ஏரோப்ளேனில் ஃபுட்போர்ட் அடித்து, ஆட்டோவைக்கையால் தூக்கியபடி அறிமுகமாகும் மற்ற ஹீரோக்கள் கொஞ்சமாவது திருந்துவார்களா?.

போட்ட காசுக்கு மேல் திரும்பி வந்தால் மீண்டும் இதே கூட்டணியில் படம் எடுப்பாரா கல்லா நிறைய நிதி வைத்திருக்கும் மாறன்?

எந்திரனில் எடுக்கும் காசை கலாநிதி மாறன் மருதநாயகம் தயாரிப்பில் விடுவாரா?

எந்திரனில் ரஜினியின் சம்பளம் எவ்வளவு இருக்கும்? சம்பளமாக இருக்குமா? பர்சன்டேஜாக இருக்குமா?

டிவியில் கலாநிதி மாறன் பேரை காண்பிக்கும் போதெல்லாம் பின்னணியில் கேட்கும் ஆய், ஊய், விசில் சத்தங்கள் தியேட்டரில் கேட்கவில்லையே ஏன்?

எதிர்பார்த்தபடி கலெக்ஷன் ஆகி இலாபம் வந்தால், சன் டி.வி ஷேர் விலை எவ்வளவு ஏறும்?

காமன் வெல்த் போட்டிக்கு வரும் வெளிநாட்டு வி.ஐ.பிக்களுக்கு எந்திரன் படத்தை போட்டுக்காண்பிப்பார்களா?

எந்திரன் படத்தைப்பார்த்து பாராட்டியதற்காக கலைஞர் ஐயா அவர்களுக்கு பாராட்டு விழா வைப்பார்களா? அப்படி வைத்தால் அது சன் டி.வியில் வருமா? கலைஞர் டி.வியில் வருமா?

எல்லா தியேட்டரிலும் எந்திரனே ஓடினால் மற்ற படங்களை பார்க்க விரும்புபவர்கள் எங்கே போவது?

ஷங்கர், "த்ரீ இடியட்ஸின்" பிரசவக் காட்சியை சுட்டு எந்திரனில் வைத்திருக்கிறாரே? தன் அடுத்த படமான த்ரீ இடியட்ஸ் தமிழ் ரீமேக்கில் அந்தக் காட்சியை என்ன செய்வார்?

அமரர் சுஜாதாவுக்கு ஒரு அஞ்சலி கார்டு போட்டிருக்கக் கூடாதா?

படம் பார்க்காதவர்களை படம் பார்த்தவர்கள் இன்னுமா (?) எந்திரன் பாக்கலை என்று துக்கம் விசாரிக்கிறார்களே, ஏன்?

ரஜினி அடுத்த படத்துக்கு என்ன செய்வார்? இந்த அளவுக்கு பில்டப் யார் கொடுப்பார்கள்?
ரஜினியின் அடுத்த படத்தைத் தயாரிக்கப்போவது க்ளவுட் நைன் மூவீஸ் தயாநிதி அழகிரியா? ரெட் ஜெயன்ட் மூவீஸ் உதயநிதி ஸ்டாலினா?
----------------------------------------------------------------------------------

ஓக்கே, படித்தாயிற்றா? கமர்ஷியல் படத்தில் லாஜிக் எல்லாம் பார்க்கக் கூடாது என்று அட்வைஸ் செய்ய வருவீர்களே? அல்லது என் மீது கோபப்பட்டாலும் படுவீர்களே? நோ டென்ஞன் பாஸ்.. எந்திரன் மேல் எனக்கொன்னும் கோவம் இல்லை. நானும் ரஜினி ரசிகன்தான். ஆனா சும்மா நாமளும் இருக்கோம்கிறதை காட்டிக்கணும் இல்லையா? அதுக்குத்தான்.. ஓக்கேவா? கூல்... (இன்னும் நிறைய கேள்விகள் இருக்கு. எல்லாத்தையும் கேட்டால் அடிக்க வருவீர்கள். பை பை..)

-----------------------------------
படித்தாயிற்றா? ஒரு உதவி பண்ணுங்கள்? என்ன உதவியா? உங்களை நான் என்ன கேட்கப்போகிறேன். இன்ட்லியில் ஒரே ஒரு ஓட்டு, அவ்ளோதான். நன்றி.
-----------------------------------

வியாழன், 30 செப்டம்பர், 2010

பாபர் மசூதி வழக்கும் எந்திரன் சினிமாவும்

ஒரு வழியாக புலி வருது, புலி வருது கதையாக அயோத்தி, பாபர் மசூதி - ராம் ஜன்ம பூமி வழக்கில் இன்று (செப்டம்பர் 30-ம் தேதி) தீர்ப்பு வந்தாயிற்று. சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் ஏக்கர் நிலத்தை மூன்று துண்டாக கேக் மாதிரி வெட்டி ஆளுக்கொன்றாக எடுத்துக்கொள்ளச் சொல்லி விட்டார்கள். அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் லக்னோ கிளை இந்த உத்தரவைப்பிறப்பித்துள்ளது. நீதிபதிகள் சுதிர் அகர்வால், தரம் வீர் சர்மா, எஸ்.யு.கான் ஆகியோர்.


சர்ச்சைக்குரிய இரண்டரை ஏக்கர் நிலத்தை மூன்றாக (எப்படி பிரிப்பாங்க?) பிரிக்க வேண்டும், ஆனால் தற்போதைக்கு அடுத்த 3 மாதங்களுக்கு தற்போதைய நிலை தொடரும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். மூன்றில் ஒரு பங்கு நிலம் பாபர் மசூதி கமிட்டியிடம் ஒப்படைக்கப்படும். மற்றொரு பகுதி நிர்மோகி அகாரா அமைப்புக்கு தர வேண்டும். எஞ்சிய இன்னொரு பகுதி இந்து மகா சபைக்கு தரப்பட வேண்டும். நிலத்திற்கு முழு உரிமை கோரிய சன்னி மத்திய வக்பு வாரியம் மற்றும் நிர்மோகி அகாரா அமைப்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டு அவற்றிற்கு அல்வா தரப்பட்டது.

கூடவே சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் பிறந்தது உண்மைதான் என்றும் நீதிபதிகள் ஒரு பிட்டைப்போட்டிருக்கிறார்களாம். அப்போ ராமாயணம் நடந்தது உண்மைதானா? அணிலுக்குக்கோடு போட்டது அவர்தானா? பாம்பன் (?????) பாலத்தைக்கட்டியது அனுமார்தானா? என்றெல்லாம் என் மனதில் பிறந்த உப கேள்விகளுக்கு என்னிடம் பதில்கள் இல்லை. இதில் இன்னோரு முக்கியமான விஷயம் என்னவென்றால் வழக்கம் போல "மூன்று மாதத்திற்குள் மேல் முறையீடு செய்து கொள்ளலாமாம்". தீர்ப்பின் முழு விவரம் ஐயாயிரம் பக்கங்களுக்கு மேலாம். டைப் செய்யவே ஒரு மாதம் ஆகியிருக்குமே..

சுமார் அறுபது (நோட் தி பாயிண்ட்: ரஜினியின் வயது அறுபது - எப்படி லிங்க் கொடுத்தேன் பாத்தீங்களா?) வருடங்களாக இழுத்துக்கோ, பறிச்சுக்கோ என்றிருந்த இந்த வழக்கின் இந்தத்தீர்ப்புக்காக நாடே காத்திருந்தது. ஒரு வாரமாக இதோ, இதோ என்று ஊரெல்லாம் ஒரே பரபரப்பு, பந்தோபஸ்து, டாஸ்மாக்கெல்லாம் மூடிட்டாங்களாம், மசூதிங்களுக்கெல்லாம் போலீஸ் போட்டிருக்காங்களாம், இன்போஸிஸ் கம்பெனி லீவாம், இஸ்கூல் எல்லாம் அரை நாள் லீவாம், இன்டர்நெட்டை ஸ்லோ பண்ணிட்டாங்களாம், இந்தியாவுல எல்லார் போனும் ரெக்கார்ட் ஆவுதாம், பல்க் மெஸேஜ் அனுப்பக்கூடாதாம், மசூதி பத்தி மெஸேஜ் அனுப்பினா தானாவே டெலிட் ஆகிடுமாம், எந்திரன் ரிலீஸ் தள்ளிப்போயிடுச்சாம், என்றெல்லாம் பரபரப்புக்குத் திரி கிள்ளிப்போட்டிருந்தார்கள்.

இதில் ஹைலைட் (?) என்னவென்றால் இந்தத்தீர்ப்புக்காக அகில உலகமே எதிர்பார்த்துக் காத்திருந்த அகில உலக சூப்பர் ஸ்டாரின் சூப்பர் டூப்பர் டமால் டுமீல் ஹிட் எந்திரன் படமே ஒரு நாள் தள்ளி வைத்து ரிலீஸ் ஆகிறது. செப்டம்பர் 30-ம் தேதி வியாழக்கிழமை ரிலீஸ் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இந்தத் தீர்ப்பு வெளியாக வேண்டியிருந்ததால் ஏதேனும் பிரச்சினை வந்தால் என்ன செய்வது, பாபா மாதிரி படம் பப்படம் ஆகிவிடக் கூடாதே என்று (பயந்து) ஒரு நாள் தள்ளி வெள்ளிக்கிழமையில் ரிலீஸ் ஆகிறது படம். ஒரு நாள் வசூல் போச்சே.


அவ்வளவு ஏன்? செப்டம்பர் 23-ம் தேதியே வெளியாக வேண்டியதாம். சென்ற வாரமே பாபர் மசூதி தீர்ப்பு வரும் என்று எதிர்பார்த்து தள்ளிப்போனதால் ஒரு வாரம் வீணாய்ப்போச்சு. (எந்திரன் டிக்கெட் புக் பண்ணியாச்சே!!!!!. பெரிய தியேட்டரில் ஐநூறு, ஆயிரத்திற்கெல்லாம் போவதாகச் சொன்னார்கள். எனக்கு சிம்பிளாக நூறு ரூபாய் பிளாட் ரேட்டில் கிடைத்தது. அது சரி, ஊரில் உள்ள சந்து, பொந்து, இண்டு, இடுக்கு, அது தவிர பிட்டு படம் போடும் தியேட்டர்களில் எல்லாம் எந்திரன் மட்டுமே வெளியானால்?) ஒரு வாரம் லேட். ஆனால் அத்தனை தியேட்டர்களிலும் ப்ளாட் ரேட் நூறு ரூபாய் மினிமமாம். அதற்கு மேலே என்றால் நோ ப்ராப்ளமாம்.

என்ன ஒரு அநியாயம்? இந்தியாவில் ஒரு மாபெரும் வசூல் சாதனை படைக்கப்போகும், புதிய புதிய ரெக்கார்டுகளை உருவாக்கப்போகும், சன் பிக்சர்ஸ் ஷேர் விலையை உயர்த்தப்போகும், 1000 கோடி ரூபாய் வசூல் செய்யப்போகும், ஹிந்தி பட ரெக்கார்டுகளை தாண்டப்போகும், எந்திரன் (மற்றும் ரோபாட்) படத்திற்கு ஒரு வாரம் தள்ளி வைத்து இப்படி ஒரு மாபெரும் தடையா?

சரி விடுங்கள். வழக்குக்குப்போவோம். நாட்டாமையில் கவுண்டமணி அலுமினியத்தட்டை ஓரே உடையாக உடைத்து சொத்தைப்பிரி என்பது போல், மூணு பீஸாப்பிரிச்சி எடுத்துக்கோங்கப்பா என்று அயோத்தி விவகாரத்தில் சொல்லி விட்டிருக்கிறார்கள். ஆனால் பாராட்ட வேண்டிய விஷயம் என்னவென்றால், ஏதேனும் ஒரு சார்பாகத்தீர்ப்பு வந்து அதனால் பல கலவரங்கள் வருவதற்குப்பதில் இந்தத்தீர்ப்பு பரவாயில்லை. ஓரளவு வீரியம் குறைவாகத்தான் இருக்கிறது.

ஆனால் இந்தத் தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்யப் போகிறார்கள், செய்து விட்டார்கள் என்றெல்லாம் செய்திகள் கசிய ஆரம்பித்து விட்டன். இந்த இடத்தில் ஒரு சாதாரண ஒரு பொது ஜனமாக “இந்தச்சண்டையில் கடந்த அறுபது வருடங்களாக சம்பந்தமே இல்லாமல் உயிர் துறந்து கொண்டிருக்கும் அப்பாவிகளுக்கு ஒரு நினைவுச்சின்னம் கட்டலாம்” என்பது எங்களின் தாழ்மையான கருத்து. அல்லது “ஒரு பள்ளிக்கூடமோ அல்லது மருத்துவமனையோ” அந்த இடத்தில் கட்ட உத்தரவிட்டிருக்கலாம்.

அல்லது இல்லாவிட்டால் இருக்கவே இருக்கிறார் காந்தித்தாத்தா. அவருக்கு ஒரு மணி மண்டபம் (!) கட்டலாம். யார் கேள்வி கேட்கப்போகிறார்கள்? ஒரு ஆலோசனைதான். அவருக்காக இடம் ஒதுக்கினால் இந்தியா முழுக்க யாரும் எதுவும் சொல்லப்போவதில்லை. எந்தப்பிரச்சினையும் வரப்போவதில்லை. என்னடா ரொம்ப அட்வைஸா எனாதீர்கள். நீதிமன்றத் தீர்ப்பை விமர்சிக்கக் கூடாது என்பார்கள். ஆனால் பிரதமரே "இந்தத் தீர்ப்பு இறுதித்தீர்ப்பு அல்ல" என்று சொன்ன பிறகு ஒரு சின்ன தைரியம் தான்.

நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?

-----------------------------------
படித்தாயிற்றா? ஒரு உதவி பண்ணுங்கள்? என்ன உதவியா? உங்களை நான் என்ன கேட்கப்போகிறேன். இன்ட்லியில் ஒரே ஒரு ஓட்டு, அவ்ளோதான். நன்றி.
-----------------------------------