அமேசான் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அமேசான் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 25 ஏப்ரல், 2020

வருவானா பக்ஷிராஜன்?




இந்த கொரோனா லாக் டவுன் மூலம் மனிதன் துப்பிக் கொண்டிருந்த கார்பன்களின் அளவு குறைந்து உலகெங்கிலும் உள்ள மரங்களின் காடுகளின் அளவு 7 சதம் அதிகரித்திருக்கிறது என்கிறார்கள். அதனால் ஆக்ஸிஜன் அளவும் நன்கு அதிகரித்திருக்கிறதாம். ஆனால் இயற்கை ஒரு மகத்தான சக்தி என்பதையும் மறக்க வேண்டாம். மிதமிஞ்சிய ஆக்ஸிஜன் உள்ளதை அது புரிந்து கொண்டால், சடாரென ஒரு சிறு தீப்பொறியின் மூலம் பெரு நெருப்பை உருவாக்கி, அதை "வனத்தீ" மூலம் தின்று தீர்த்து, காட்டை அழித்து கார்பனை உருவாக்கித் தன்னை சமன் செய்து கொள்ளும். அந்தச் சக்தி அதற்குண்டு.

ஆனால் "மனிதன் ஒரு மகத்தான சல்லிப் பயல்" அல்லவா?

நாம் எங்கிருந்தாலும் இயற்கையை அழிக்கும் வேலையை மட்டும் மிகச் சிறப்பாகச் செய்வோம். அந்த திமிர்த்தனம் நமக்கு எப்போதும் உண்டு. "லாக் டவுன்" இல்லாவிட்டால் கார், பஸ், ஃபேக்டரி, தம்மு, விறகுப்புகை, அணு உலை, பிளாஸ்டிக் கழிவுகள் என மிகச் சிறப்பாக சுற்றுச் சூழலை நாசமாக்குவோம். "வீட்ல இருடா" என்றால் அதை விடச் சிறப்பாக. சில சமயம் நம்மையும் அறியாமல்.

எப்படி? நாம் அரை மணி நேரம் ஆன்லைனில் வீடியோ பார்ப்பதால் வெளியாகும் கார்பனின் அளவு எவ்வளவு தெரியுமா? கிட்டத்தட்ட 1.6 கிலோ கார்பன் டை ஆக்ஸைடுக்குச் சமமான எமிஷன். இது சுமாராக காரில் 6.5 கிலோ மீட்டர் நீங்கள் பயணித்ததற்குச் சமம். இவற்றில் யூ டியூப், நெட்பிளிக்ஸ், அமேசான் துவங்கி துண்டு துக்கடா போர்ன் சைட்டுகள் வரை பங்குண்டு.

ஹை டெஃபனிஷனில் நீங்கள் ஒரு வீடியோ பார்க்க அதற்கான ஆற்றலை அதை வழங்கும் சிஸ்டம்களும், சர்வர்களும், ஸ்டீரிமிங் நெட்வொர்க்குகளும் தந்தாக வேண்டும். அத்தனை வலுவையும் அந்த டேட்டா சென்டர்கள் தாங்கியாக வேண்டும். அவை வெளியிடும் கார்பன் எவிக்ஷன் தான் மேலே சொன்னது. நீங்கள் ஒருநாள் எவ்வளவு நேரம் வீடியோ பார்க்கிறீர்கள்? ஒரு மாதத்திற்கு? உங்களைப்போல தமிழ்நாடு முழுக்க எத்தனை பேர்? இந்தியா முழுக்க எத்தனை பேர்? உலகம் முழுக்க?

ஹை டெஃபனிஷன் வேண்டும் எனத்தேடி 3ஜி, 4ஜி, 5ஜி என அலைவதன் மூலமும், மொபைல் ஃபோன்கள், வை.ஃபை டிவைஸ்கள் முதல், க்ரோம், ஏர்டெல், டிஸ்னி, ஆப்பிள்களின் ஸ்டீமிங் டிவைஸ்கள் என, ஒவ்வொரு வீட்டிலும் உள்ள 14 இன்ச் முதல் 65 இன்ச் டிவிக்கள் வரை அத்தனைக்கும் இவற்றில் பங்குண்டு. இவ்வளவையும் நாம் பார்த்துத் தொலைக்கத் தேவையான அளவற்ற மின்சாரம், அதை உற்பத்தி செய்ய வேண்டி எரிக்கப்படும் கார்பன் கரி முதல், டீசல், பெட்ரோல் வரை. மேலும் அணு மின்சாரத்திற்காக இயங்கும் அணு உலைகளின் அணுக்கழிவுகள் தனி.

குத்து மதிப்பாகக் கணக்குப் போட்டதில் 2019 ஆம் ஆண்டு மட்டும் 300 மில்லியன் டன் (ஒரு டன் = 1000 கிலோ, ஒரு மில்லியன் = 10 இலட்சம், கணக்குப் போடுங்க) கார்பன் டையாக்ஸைடை இதன் மூலம் உற்பத்தி செய்து கார்பன் எமிஷன் செய்திருக்கிறோமாம்.

கொரோனா புண்ணியத்தில் இந்த ஆண்டு அது மூன்று மடங்காகலாம் என்கிறார்கள். பிளாஸ்டிக், எலக்ட்ரானிக்ஸ், கார்பன் என குப்பைகளால் உலகையே நிரப்பும் நாம் செய்யும் பாவம் இன்னும் சிலபல ஆண்டுகளில் நம் பிள்ளைகளின் தான் தலையில் விடியப் போகிறது. டேட்டா, டேட்டா, டேட்டா என வெறிபிடித்து அலையும் நம்மையெல்லாம் அழித்தொழிக்க ஒரு பக்ஷிராஜன் போதாது. இயற்கை கொரோனாவை விட மிகப்பெரும் ஷக்தி ஒன்றை மிக விரைவில் மீண்டும் அனுப்பி வைக்கலாம். யார் கண்டது?
.

வெள்ளி, 10 ஜனவரி, 2020

தர்பார் - தர்பாரிஸம்

ஆபீஸ்ல ஆயிரம் பிரச்சினை, வீட்ல ஐநூறு பிரச்சினை, இதுபோக திருட்டு பிரிண்டுகள், ஆன்லைன் ஃபுல்லா படங்கள், லீகலா படங்களைக் குமிச்சி வச்சிருக்குற அமேசான், நெட்பிளிக்ஸ் கடைகள். அநியாய டிக்கெட் ரேட்டு, ஸ்நாக்ஸ் அதைவிட ஓவர் ரேட்டு.... போக வர டிரான்ஸ்போர்ட்டு, திரும்பி வாரப்ப ஹோட்டல் செலவுன்னு ஒரு குடும்பஸ்தனுக்கு பல கவலைகள். இதைத்தாண்டி குடும்பத்தையே இழுத்துகிட்டு தியேட்டருக்குப் போனா ஜாலியா ரசிக்க வைச்சு அனுப்பனும். அதைத்தான் "தர்பார்" செஞ்சிருக்கு.

அதை விட்டுட்டு.... ரஜினி மாதிரி ஒர்த்தரை வச்சு காலா, போ-லான்னு கடுப்பேத்தி அனுப்பக் கூடாது.

என் பாஸ் சொல்வாரு What you believe is what you deliver னு. அதே மாதிரி தான் நம்பிக்கைகளும் what you believe is only what you will take. நீ என்னதான் குத்தவச்சி கருத்து சொன்னாலும், இடது சாரி சிந்தனை உள்ளவனுக்கு இடது சாரி குறியீடுகள் தான் தெரியும். வலது சாரி சிந்தனை உள்ளவனுக்கு வலது சாரி குறியீடுகள். பெரியவங்களுக்கு அவங்க பிடிச்சது தான் தோணும். குழந்தைகளுக்கு, அவங்க எதிர்பார்க்குறது தான் தெரியும்.

ரஜினி காரை வில்லன் லாரி மூலமா அடிச்சித் தூக்குற சீன்ல, என் 6 வயசுப் பையன்ட்ட கேட்டேன் "ஏம்பா ஆக்ஸிடெண்ட் ஆச்சு?" ன்னு. "ரெட் சிக்னல்ல நிக்காமப் போனா ஆக்ஸிடெண்ட் தானே ஆகும்" னான் அவன். அதுதான் அவன் புரிதல். ஸோ, நீங்க என்னதான் வேற எதையோ திணிச்சாலும் அவனவனுக்கு என்ன வேணுமோ, அதைத்தான் எடுத்துக்குவான். எது போய்ச் சேரணுமோ அதுதான் போய்ச்சேரும்.

ஊர்ல இருக்கிற எல்லா தியேட்டர்களிலும் ஒரே படத்தை ரிலீஸ் பண்ணினா நாலு தியேட்டர்ல காத்தாட தான் செய்யும். This is applicable for all mass heros. நம்ம சித்தாந்தத்துக்கு ஏத்த மாதிரி எந்த தியேட்டர் போட்டோ வேணுமா அதை போட்டு நாம சொறிஞ்சிக்கலாம். தியேட்டர் காலியா இருக்குன்னு சொல்லிக்கலாம். அப்படியே காலியா இருந்தாலும் அதில் ரஜினி தப்பென்ன? பிரச்சினை என்பது டிஜிட்டல் மீடியா. கையில ஸ்மார்ட் போனை வச்சுகிட்டு "நாளைக்கு எப்படியும் திருட்டுப் பிரிண்ட் வந்துடும் நான் பார்த்துக்கிறேன்" ன்னு உட்கார்ந்துகிட்டு இருக்கிற லட்சக்கணக்கான பேருடைய தப்பு.

அதே போல வயசாயிடுச்சி, கெழவன் ன்னு கிண்டல் பண்லாம். யூத்தா இருக்குற எத்தனை நூத்துக்கணக்கான ஹீரோஸ் படமே இல்லாம சும்மா உக்காந்திருக்காங்க. இவருக்கு எவ்ளோ பெரிய மார்க்கெட் இருக்கு? அதை விடுங்க. சிம்பிளா யோசிங்க. 60 வயசுக்கு மேல உள்ள உங்கப்பா டான்ஸ் ஆடினா சந்தோஷப் படத்தானே செய்வீங்க. எங்க மாமாவுக்கு 66 வயசு. டான்ஸ்லாம் ஆட மாட்டாரு. மூட்டு வலியெல்லாம் வேற இருக்கு. ஆனா என் கஸின் (அவர் பையன்) கல்யாணத்துல நாங்க போட்ட ஆட்டத்தைப் பாத்துட்டு என் கூட வந்து கையப் பிடிச்சிகிட்டு பத்து நிமிஷம் ஆடுனாரு. அப்புறம் "என்னையே ஆட வச்சுட்டியில்லடா" ன்னு சந்தோஷமா சிரிச்சாரு. குமுதா ஹேப்பி அண்ணாச்சி.

அதே போலத்தான் ரஜினி படங்களும். பாத்தோமா, என்ஜாய் பண்ணோமா, you happy? I am happy ன்னு போய் வரணும். அந்த விதத்தில் "தர்பார்" ஒரு என்டர்டெயினிங் மூவி. உங்க உலக சினிமா அறிவு, டெக்கினிக்கல் அறிவையெல்லாம் மூட்டை கட்டி வச்சிட்டு மூளையோட கதவை சாத்திட்டு போய் பார்த்துட்டு வாங்க. பொங்கலுக்குப் பைஸா வசூல்.

அடுத்தவங்களைத் தொந்தரவு பண்ணாம நாம நம்ம சந்தோஷத்துக்கு எதைச் செஞ்சாலும் தப்பில்ல. நீண்ட நாட்களுக்குப் பிறகு கியூவில் நின்று டிக்கெட் வாங்கியது, ஸ்கிரீன் முன்னால் குழந்தைகளோடு ஆடியது, அனைவரும் என்ஜாய் செய்து படம் பார்த்தது என்று பல சந்தோஷ அனுபவங்கள். forget all politics. Just enjoy the movie & celebrate the festival folks.
.

புதன், 8 ஜனவரி, 2020

8 செகண்ட் கதைகள்

15 டிசம்பர் 2019 அன்று ஃபேஸ்புக்கில் எழுதியது


8 செகண்ட் கதைகள் - எனது முதல் கின்டில் ஈ.புக்

எப்போதும் புதுமைகளைச் செய்வதில் "ஆனந்த விகடன்" இதழ் முன்னோடி. நான்காண்டுகளுக்கு முன் அதாகப்பட்டது 2015 ஆம் ஆண்டு விகடன் "10 செகண்ட் கதைகள்" என்ற ஒரு புதிய முயற்சியை முன்னெடுத்தது. குட்டிக்குட்டிக் கதைகள். அவற்றில் எந்தக்கதையும் 25 வார்த்தைகளுக்கு மேல் மிகாது. மினி மீன்ஸ் Meenakshi Sundaram போல சிலர் 6 வார்த்தைகளில் கூடக் கதைகள் எழுதினார்கள். ஆனால் அவை தந்த உள்ளார்ந்த அனுபவம் ரசிக்கத்தக்கது. பிரபல எழுத்தாளர்கள் முதல் துணுக்கு எழுத்தாளர்கள், நகைச்சுவை எழுத்தாளர்கள், ஃபேஸ்புக், ட்விட்டர் என மைக்ரோ ப்ளாக்கிங் பிரபலங்கள், அவ்வளவு ஏன்? எழுதியே பழக்கமில்லாத வாசகர்கள் எனப் பல தரப்பினரும் "10 செகண்ட் கதைகளை" எழுதித்தள்ளினார்கள். விகடனும் ரசிக்கும் படியான படைப்புகளைத் தேர்வு செய்து வாராவாரம் 10 கதைகளை வெளியிட்டது. இந்தக் காலகட்டத்தில் அதில் அடியேனின் கதைகளும் சுமார் 25+ கதைகள் வெளியாயின.

மூட்டை மூட்டையாக, மெயில் பாக்ஸ் நிரம்பி வழிய, விகடனுக்கு, இந்த ஒட்டு மொத்த காலத்தில் கிட்டத்தட்ட எனக்குத் தெரிந்து 400 க்கும் மேற்பட்டோர் கதைகள் எழுதிக்குவித்ததில், கதைகள் வெளியான எண்ணிக்கையில் அடியேன் இரண்டாவது அல்லது மூன்றாவது இடத்தில் இருந்தேன். என்னை விடப் பிரபல சிற்றெழுத்தாளர்கள் சிலர் போட்டியில் நின்று கலக்கினார்கள். டாப் 5 இல் இருந்த ஒவ்வொருவருக்கும் சுமார் 20 கதைகளுக்கு மேல் வெளியாகி இருந்தன.

மற்றவர்கள் "எனக்கு 20, உனக்கு 18, அவனுக்கு 7" என்றெல்லாம் சந்தோஷித்தார்கள். விவாதித்தார்கள். ஊக்குவித்தார்கள். ஒரே ஒரு கதை வெளியான அன்பர்கள் கூட ஃபேஸ்புக்கில் அக்கதையைப் போட்டு "நானும் எழுத்தாளராகிட்டேன்" எனக்கூத்தாடினார்கள். அந்தக் காலகட்டத்தில் எழுத்தாளர் குழுக்களில் பெரும் ஆரோக்கிய போட்டியை இது உருவாக்கியது.

வெளியானது 25 என்றால் அனுப்பியது எவ்வளவு இருக்கும் என்று கேட்கிறீர்களா? ரேஷியோ பாருங்கள். வாரா வாரம் ஆயிரக்கணக்கான கதைகள் விகடனுக்குச் சென்று சேர்ந்தால்? அவற்றில் மொத்தக் காலகட்டத்தில் நான் அனுப்பியவை மட்டுமே 500-க்கும் மேற்பட்ட கதைகள். ஆனால் சில பல வருடங்களில் பல வீடுகள் (ஐ மீன் லேப்டாப்) மாறியதில் அத்தொகுப்பு காணாமல் போய் அண்ணன் Jackie Sekar க்கு ஒருமுறை குறும்படத் தேர்வுக்காக அனுப்பிய 250 கதைகளை மட்டுமே என்னால் மீட்டெடுக்க முடிந்தது.

அவற்றில் 100 கதைகளைத் தொகுத்து அமேஸான் புண்ணியத்தில் "பார்ட் - 1" எனத் தொகுப்பாகக் கொண்டு வந்திருக்கிறேன். இத் தொகுப்பில் உள்ளவற்றில் பல கதைகள் ஆனந்த விகடனில் வெளியானவை. அவற்றை குறிப்புக்குள் கொடுத்திருக்கிறேன். "பசியோடு திரிந்தான் பீட்ஸா விற்பவன்" என்பது போன்ற, "சம்பவம் - வேலை முரண்” கொண்ட (டேய், இதெல்லாம் ஒரு கதையாடா என்று வாத்யார் Ganesh Bala போன்றோர் திட்ட வாய்ப்பளிக்காமல்) ஒரு வரிக் கதைகளையெல்லாம் ஆன வரை தவிர்த்திருக்கிறேன்.

படித்துவிட்டு கருத்துச் சொன்னால் மகிழ்வேன். இவற்றில் ஏதேனும் ஒரு கதை உங்களுக்குள் ஒரு சலனத்தை ஏற்படுத்தினால் மகிழ்ச்சி. வெறும் ஈ.புக் என்றாலும், இந்த வாய்ப்புக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் எனக்குத் தூண்டுகோலாக இருந்த அத்துணை நண்பர்களுக்கும் நன்றி. அதைத் தனிப் பதிவாகப் பிறகு போடுகிறேன்.

"10 செகண்ட் கதைகள்" தலைப்பை நான் உபயோகப்படுத்தக் கூடாது என்பதாலும், இக்கதைகளை 8 செகண்டிலேயே படித்து விட முடியும் (டைமர் வச்சு செக் பண்ணேன் பாஸ்), இத்தொகுப்பின் பெயர் "8 செகண்ட் கதைகள்" என்றானது (அப்பாடா, டைட்டில் வந்துருச்சி). அமேசான் லிங்க் முதல் கமெண்டில். "kindle unlimited" சப்ஸ் வைத்திருப்பவர்களுக்கு இலவசம். மற்றவர்களுக்கு அமேசானின் மினிமம் விலை.

டவுன்லோட் செய்ய இந்த லிங்க் செல்லவும்.
.