செவ்வாய், 19 ஜனவரி, 2016

ஐ... இரண்டு முறை.

சரியாக ஒரு வருடம் முன்பு எழுதிய பதிவு. முகநூலில் ஸ்டேட்டஸ் ஆகப் போட்டது.

ஐ...

இரண்டு முறை.

முதல் மூன்று நாட்களாக குடும்பத்துடன் செல்லலாம் என்று ஆன்லைனில் புக் செய்ய எவ்வளவோ முயற்சித்தும் டிக்கெட் கிடைக்கவில்லை. மூன்று நாளாக இவன் நரம்புத் தளர்ச்சி வந்த மாதிரியே படபடப்பா இருக்கானே என்று சனிக்கிழமை என்னை பாவமாகப் பார்த்து தங்கமணியே நீங்க வேணா தனியா போய் (த் தொலைங்க) ட்டு வாங்க என்று அனுமதி கொடுத்ததில் ஒரு பாடாவதி தியேட்டரில் ரோபோ ஸ்டைல் கீச் அடிக்கும் ஒலித் தரத்திலும், ஒரு பெரிய ஹெச்டி டிவி தரம் மட்டுமே இருந்த, அதிலும் துணிதைத்த வெள்ளைக் கோடுகள் அச்சாக நன்றாகத் தெரிந்த ஒரு தியேட்டரில் பார்த்தேன். உள்ளே நுழையும் போதே போனில் "நாஸ்-ல மூட்டைப் பூச்சி இருக்குமே? அங்க ஏன் பாவா போனீங்க?" என்று வேறு மச்சான் சொல்லி விட்டார். இருக்கோ இல்லையோ, அவர் சொன்னபிறகு அங்கங்கே அரிப்பது போன்று ஒரு பிரமை. வீட்டுக்கு வந்ததுமே துஷ்டி வீட்டுக்குப் போன மாதிரி பாத்ரூமுக்கு ஓடி எல்லா டிரஸ்ஸையும் கழட்டிப் போட்டு விட்டேன். எதுக்கு வம்பு? ஒருவேளை இருந்திருந்தா? 120 ஓவா வேறு. டூ மச்.

மறுநாளே அடிச்சது லக்கிப்ரைஸ். ஞாயிற்றுக் கிழமைக்காக ஒரு நல்ல தியேட்டரில் 30, 40 பேருக்காக யாரோ குரூப்பாக புக் செய்திருந்ததில் நம்ம உறவினர் ஒருத்தருக்கு ரெண்டு டிக்கெட் இருந்தது. ஆனால் அண்ணார் அன்னார் அவர்கள் வெளியூரில் இருந்த காரணத்தினால் அதை நமக்கு தாரை வார்த்தார். ஓசு டிக்கெட், ஸ்னாக்ஸ் உடன். நல்ல ஒலித்தரத்தில், நல்ல பிரிண்டில், நல்ல ஸ்கிரீனில், ஜோடி சோபாவில் (நோ கற்பனை ப்ளீஸ், நடுவில் ஜூனியர் இருந்தான், நெளிந்து கொண்டே) ஐ-யை இரண்டாவது முறை பார்த்தேன்.

ஆனா, பயபுள்ள முதல் முறை தியேட்டர் அனுபவம் ஜூனியருக்கு. அரைமணி நேரம்தான் தாக்குப்பிடிக்க முடிந்தது அவனால். விளம்பரத்தையெல்லாம் ரசித்துப் பார்த்தான். லைட்ஸ் ஆஃப் ஆனதும் நெளிய ஆரம்பித்தான். தங்கமணி முறைச்சிங். அவுங்களும் எவ்ளோ நேரம் தான் சமாளிப்பாங்க. என்னை பார்த்து முறைச்சாங்க "நீதான் நேத்தே பாத்துட்ட இல்ல, அவனை தூக்கிட்டு வெளிய போயேன்" என்று அவர்கள் ஐ-யில் இருந்து கிராபிக்ஸில் சிவப்பு ஃபான்டில் லெட்டர் லெட்டராக வந்ததை என்னால் படிக்க முடிந்தது. யாருமில்லாத வராண்டாவில் நானும் அவனும் மட்டும் விளையாடி அவ்வப்போது உள்ளே வெளியே விளையாடி "தோ பாருடா கண்ணா, பெரிய டி.வி" என்று ஸ்கிரீனை காண்பித்து விளையாட்டு காட்டி ஏஸி குளிர் தாங்காமல் ஸ்வெட்டர், குல்லா மங்கி கேப் இத்யாதி இத்யாதிகளை மாட்டி விட்டு, பாட்டிலில் பால் கலக்கி குடிக்க வைத்து, இந்தக் களேபரத்தில் சில ரிவென்ஜ் சீன்களை மிஸ் செய்து, பிஸ்கட் கொடுத்து அவனை தூங்கவைத்து செகண்ட் ஆஃப் பார்த்து..... இடையில் அவன் கோக்கை முதல் முறையாக உறிஞ்சி சோடா எரிச்சலில் கத்தி, என அது ஒரு தனி எபிசோட்....

189 நிமிடப் படம் என்பதால் அரை டிக்கெட்டுகளும் கிழம் கட்டைகளும், நெளிய ஆரம்பித்து சிலர் ரயில் சண்டை சீனிலேயே வெளியே போய், நானும் பார்க்கிங்கில் மாட்டி, வண்டியை வெளியே எடுக்க முடியாமல், அதுக்குள் ஜூனியர் எழுந்து அழுது.. பார்க்கிங்கிலேயே படம் முடியும் வரை காத்திருந்து விளையாட்டு காட்டி... போங்க பாஸ் அது ஒரு குடும்பஸ்தன் கவலை... ஒரே ஆறுதல் என்னவென்றால் என்னை மாதிரி இன்னும் சில இளம் தகப்பன்கள் அடம் பிடித்த அவர்கள் ஜூனியர்களுடன் எனக்குத் துணையாக கேன்டீன் வராண்டாவில் விளையாடியது தான்.
என்னது? ஐ ரிவ்யூவா? போங்க பாஸ்...

இனிமே தேட்டர்ல படம் பாக்கறதெல்லாம் நமக்கு வேலைக்காவாது... வீட்ல ஈ.எம்.ஐ ல ஒரு புரொஜக்டர் வாங்கிப் போடப் போறேன். சேரன் சார். எப்போ C2H - ல படங்களை ரிலீஸ் பண்றீங்க?