புதன், 15 ஜூலை, 2015

கஸ்டமர் கன்வீனியன்ஸ்

பெரு (கி வரும்) நகரங்களில் ஒரு மாபெரும் பிரச்சினை பார்க்கிங். விலை மலிவு என்பதற்காக டவுனுக்குச் சென்று காய்கறியும், ஹோல்சேல் கடைகளில் மளிகை சாமான்களும், சேட்டுக் கடைகளில் சோப், ஷாம்பூ, டயப்பர் வகையறாவும் வாங்கலாம் என்று ப்ளான் செய்யும் (நான் உள்ளிட்ட) குடும்பஸ்தன்களின் பெருங் கவலை பார்க்கிங். அடுத்தது நிம்மதி. 
.
வண்டி நிறுத்த இடம் தேடுவது முதல் பிரச்சினை, கிடைத்தாலும் (கோவையில் இடது புறம் ஒரு வாரம், வலது புறம் ஒரு வாரம் என்ற குழப்பம் வேறு) சைடு ஸ்டாண்டா, நேர் ஸ்டாண்டா என்று பார்த்து அட்ஜஸ்ட் செய்து நிறுத்தி, ஹெல்மெட்டை லாக் போட்டு விட்டு, நிறுத்திய இடத்திலிருந்து கொஞ்ச தூரம் படு நெரிசலான, லாரிகள், கைவண்டிகள், குட்டி யானைகளின் இடையில் புகுந்து நடந்து போய் அடைசலான ஹோல்சேல் கடைகளில் சாமான் சொல்லி, வாங்கி, மீண்டும் அந்த நெரிசலில் நீந்தி பார்க்கிங் வந்து வண்டியை விடுவித்து, ஹெல்மெட்டை மண்டையில் மாட்டி, மளிகைப் பையை வண்டியில் சைடில் மாட்டி அது எவர் மேலும் இடிக்காமல் சைடு பார்த்தவாறே வண்டியோட்டி, அடுத்ததாக காய்கறி மார்க்கெட் பகுதிக்குப் போய், மீண்டும் பார்க்கிங் தேடி, ப்ளா, ப்ளா, ப்ளா முடித்து முதுகில் ஆபீஸ் பை, கையில் மளிகைப் பை என்று தூக்கி, மார்க்கெட்டுக்குள் ஒரு ஆள் நடக்கும் இட நெரிசலில் எதிரெதிர் இருவர் நடந்து, விலைகேட்டு அளவு சொல்லி, அதற்கொரு பை வைத்து வாங்கி, காய், கனி, கிழங்கு, ரெண்டுங்கெட்டான் (தக்காளி வகையறா), கீரை என வாங்கி அதற்கொரு பை போட்டு, நசுங்கி, பிசுங்கி வெளிவந்து, மீண்டும் பார்க்கிங். மீண்டும் A- வில் இருந்து துவங்கி சேட்டுக்கடை போய் அங்குள்ள சாமான்கள் வாங்கி இருபக்கமும் பைகள் தொங்க ஒவ்வொரு டிராஃபிக் சிக்னலிலும் தடுமாறி, சிக்னல்கள் கடந்து வீடு சேர, பத்து ரூபாய் காசை மிச்சம் பிடிக்கச் செய்யும் இந்த சர்க்கஸ் செய்கையில் மண்டை காய்ந்து போகும். எவ்வளவு டென்ஷன்?
.
இதற்குப் பதில் வீட்டருகில் உள்ள ஏதோ ஒரு சூப்பர் மார்க்கெட்டில் ஏஸி காற்றில், குழந்தையை அமர வைத்து அழகாய் வண்டி தள்ளி வேடிக்கை பார்த்து, வேண்டியதை அள்ளிப்போட்டு ஒற்றை பில் போட்டு விட்டு "டோர் டெலிவரிண்ணே" என்று சொல்லி விட்டு காற்றாட வீடு வந்து சேர்ந்தால் அடுத்த கால் மணி நேரத்தில் குட்டியானை மூலம் ஒரு பெட்டியில் வந்து இறங்குகின்றன சாமான்கள்.
.
பார்க்கிங் டென்ஷனையும், டிராஃபிக்கில் தொலைத்த பெட்ரோலையும், அங்கே வீணாகும் நேரத்தையும் கணக்குப்போட்டு கூட்டிக் கழித்துப் பார்த்தால் ஒரு பத்து ரூபாய் மட்டுமே வித்தியாசம் இருக்கும். ஆயிரம் ரூபாய்க்கு சாமான் வாங்குகையில் பத்து ரூபாய் என்பது 1 சதவீதமே. மிடில் கிளாஸாய் இருந்தாலும் "நிம்மதியாய் சாமான் வாங்கினோமே, சனியன் பத்து ரூபாய் போய்த் தொலையுது" என்று அழுது தொலைத்து விட்டு வரலாம் போலிருக்கும்.
.
பிஸினஸ் சம்பந்தப்பட்ட பயிற்சி வகுப்புகளில் விவாதிக்கப்படும் பாயிண்ட்களில் மிக முக்கிய பாயிண்ட் Customer Convenience. ஒரு கஸ்டமர் தன்னுடைய Convenience க்காக ஒரு விலை கொடுக்கத் தயாராயிருப்பார் என்பது ஒரு பாடம். இன்னும் பழைய காலம் போல கடையைத் திறந்து வைத்துக் கொண்டு வர்றவன் வரட்டும், அவனுக்குத் தான் விப்பேன், நானா போய் எதுவும் செய்ய மாட்டேன் என்று சொல்லும் வியாபாரிகளின் அழிவு வெகு வேகமாகவே நடக்கும்.

ஞாயிறு, 5 ஜூலை, 2015

இன்று, நேற்று, நாளை - எனக்குப் பிடித்தவை


எல்லோரும் பாபநாசம் விமர்சனம் போடும் நேரத்தில் நாம கொஞ்சம் லேட்டா என்ட்ரி கொடுக்கிறோமோ என்று தோன்றுகிறது. இருந்தாலும் பரவாயில்லை. ரசித்த விஷயத்தை கொஞ்சம் முன்னே பின்னே ஆனாலும் சொல்லி விடுவது தான் தர்மம்.

பொதுவாக டைம் டிராவல் மாதிரி கான்செப்டை எடுத்துக் கொண்டால் எதிர்காலத்துக்குச் செல்வது எப்போதும் சேஃப். அடித்து ஆட முடியும். தோன்றியதை எல்லாம் காண்பிக்கலாம். இன்றிலிருந்து சுமார் ஐம்பது நூறு வருடங்கள் கேப் விட்டுப் போனால் எதை வேண்டுமானாலும் காண்பிக்கலாம். லாஜிக்காக வைரஸ் மேட்டர் போல எதையேனும்  வைத்துக்கொண்டு எதிர்கால மனிதனுக்கு இரண்டு தலை முளைத்து விட்டது என்று கூட கதை விடலாம். நம்பும்படி காட்சிகள் வைத்து ரசிகனை அசத்துவது டைரக்டரின் சாமர்த்தியம். ஆனால் பட்ஜெட் தலையைத்தின்னும். கற்பனை, பேப்பர் ஒர்க், சி.ஜி என நிறைய வேலை வைக்கும்.

ஆனால் ஆங்கில "டைம் மிஷின்" படத்தில் நான் எதிர்பார்த்துப் போனது வேறு. எனக்குக் கிடைத்த அனுபவம் வேறு. எதிர்காலத்தில் நடக்கும் என நான் ஏதேதோ ஸ்டார் வார்ஸ் ரேஞ்சில் கிராபிக்ஸையெல்லாம் எதிர்பார்த்துப் போனால் படம் என்னவோ எதிர்காலத்தில் எதிர்காலத்தில் எதிர்காலத்தில் எதிர்காலத்தில் எதிர்காலத்தில் எதிர்காலத்தில் எதிர்காலத்தில் எதிர்காலத்தில் எதிர்காலத்தில் என்று ஆயிரக்கணக்கான ஆண்டுகள் தாண்டிப்போய் உலகம் பலமுறை அழிவுகளை எதிர்கொண்டு, எதிர்காலத்திலேயே ஒரு பழங்கால செட் அப் பை போட்டு ஏமாற்றி விட்டார்கள். கதையில் ஹீரோ எதிர்காலத்தில் போய் சேரும் இடம் கி.பி 1200 ல் காட்டு வாசிகள் இருந்தால் எப்படி இருந்திருக்கும் அப்படி ஆக்கி கூடவே மனிதனையும் குரங்கையும் இணைத்து ஒரு பெரிய மிருக மனிதன் என எதையோ செய்து குழப்பி எதிர்பார்த்து போனவனை "இந்த பழங்குடி கதையை சொல்றதுக்கு எதுக்குடா டைம் மிஷின்?" என்று கேட்க வைத்து அனுப்பினார்கள்.

அதே போல் "அபூர்வ சக்தி 520" என்று ஒரு தெலுகு டப்பிங் படம். படம் வந்தது 1980 களின் இறுதியில் என்று நினைக்கிறேன். விபரமே தெரியாமல் பாட்டியின் கை பிடித்து தியேட்டருக்குப் போனது நினைவுக்கு வந்தது. அதில் எதிர்காலத்துக்கு, அதாவது 2005 - க்கு வருவார்கள். ஏதோ வைரஸ் பாதிக்கப்பட்டு 2005 ல் இருக்கும் மனிதர்களுக்கு மூஞ்சியெல்லாம் கொப்புளம் கொப்புளமாக ஆகியிருக்கும். ஆனால் படுமொக்கையாக இருக்கும். சின்னப்பையனாக இருந்த எனக்கு அப்போதே பிடிக்கவில்லை. இப்போ பார்த்தால் அவ்வளவுதான். செத்தேன்.

       இதே டைம் மிஷின் கான்செப்டை வைத்து இறந்த காலத்தையும் காட்டி கலக்கலாம். ஒரு நாஸ்டால்ஜியாவை உண்டாக்கலாம். மதராஸப்பட்டினம் ஏன் ஓடியது? அந்தக் காலத்து மெட்ராஸைப் பார்க்க எல்லோருக்கும் ஆசை. அதை அவ்வளவு அழகாக ஒரு காதல் கதையுடன் சேர்த்துக் காட்டியதில் மயங்கிப் போனோம். என்ன ஒன்று? டைம் மிஷினை வைத்து கடந்த காலத்திற்குச் சென்றால் ஆடியன்ஸூக்குத் தெரிந்த அவர்கள் அனுபவித்த விஷயங்களை இம்மி மாறாமல் காண்பிக்க வேண்டும். இல்லாவிட்டால் சொதப்பல் ஆகி விடும். வித்தியாசம் தெரிந்து விட்டால் ஆடியன்ஸ் கத்துவார்கள்.

பழைய காலத்தைக் காண்பித்து பல்பு வாங்கியதில் ஒரு சிறந்த உதாரணம் "வாரணம் ஆயிரம்" படம். அதில் ஒரு  பாடலில் சூர்யா கஷ்டப்பட்டு பழைய மேக்கப், காஸ்ட்யூம் எல்லாம் போட்டுக்கொண்டு நடந்து வர, பக்கத்திலேயே அவரது நண்பன் கேஷூவலாக இந்த கால ஸ்டைலில் ஒரு டி.ஷர்ட் மாடல் டிரஸ்ஸில் வரும் சீன் ஞாபகம் இருக்கிறதா? கௌதம் மேனன் பல்பு வாங்கியது அங்கே தான். அதே போல அதே பாட்டில் ஒரு பழைய பஸ்ஸை காண்பிப்பதாக நினைத்து "நாய் வண்டி" போல ஒரு தகர டப்பாவை காண்பித்து, ஓ மை காட். 64 வயதாகும் என் அப்பா பார்த்துவிட்டு "என்னடா இது?" என்றார்.

       சரி, கமிங் டு தி பாயிண்ட் "இன்று, நேற்று, நாளை" எதிர்காலத்துக்குப் போகாமல் பட்ஜெட் காரணமாக இறந்த காலத்திற்குப் பயணிக்கிறது. அதிலும் பழைய காலத்தில் ஒரே ஒரு தெருவை மட்டும் செட் போட்டு சமாளித்திருக்கிறார்கள். டைம் மெஷின் படபடவென விரிந்து எழும், சுருங்கி அடங்கி சூட்கேஸ் சைஸூக்கு மாறும் சில சீன்களில் பயன்படுத்தப்பட்ட கிராஃபிக்ஸ் மற்றும் ஆர்யாவுடைய லேப், மில்லியனராகக் காட்டப்படும் ஜெயப்பிரகாஷின் ஆபீஸ் காட்சிகளை பார்க்கும் போது படம் கொஞ்சம் ரிச் லுக் கொடுத்தாலும் ஓவர் ஆல் ஆக வெளியே வந்து யோசிக்கையில் அட, இது சின்ன பட்ஜெட் படம்ல என்று நன்றாகப்புரிகிறது. சரி என்ன செய்ய? கிடைத்த பட்ஜெட்டுக்குள் கபடி ஆடியிருக்கிறார்கள்.

       என்னதான் ஸிட் ஃபீல்டு சொன்னார் என்று கருந்தேள் அடிக்கடி "முதல் சீனிலேயே கதை ஆரம்பித்து விட வேண்டும்" சொன்னாலும் இப்படி "முதல்" ஷாட்டிலேயே டகார் என்று படத்தின் மெயின் லைன் ஆன "டைம் மிஷினை ஆர்யா கடந்த காலத்துக்கு அனுப்புகிறார்" என்று ஆரம்பிப்பதெல்லாம் கொஞ்சம் டூ மச் பாஸ். குழந்தை குட்டிகளை தியேட்டரில் லைட் ஆஃப் ஆனதும் செட்டில் செய்பவர்கள், கொஞ்சம் லேட்டாய் வருபவர்களையும் மனதில் வைத்துக்கொண்டு அடுத்த படத்தில் கொஞ்சூண்டு டைம் கொடுத்தால் நன்று.

       12 பி படத்திலும் இதே பிரச்சினை இருந்தது. ஆனால் ஒரு ஐந்து நிமிடங்கள் கழித்து அந்த முக்கியமான சீன் வரும் "இவன் பஸ்ல ஏறுனா வேற கதை", "பஸ்ஸை மிஸ் பண்ணிட்டா வேற கதை" என்று பார்த்திபன் வாய்ஸ் ஓவர் வரும். இதை ஒரு வார இதழ் விமர்சனத்தில் "அந்த சீனை மிஸ் பண்ணிட்டா, ஏன் ஒரே ஷாம் ரெண்டு ஹீரோயினோட சுத்துறாரு? ஏன் ஒரே டைம்ல ரெண்டு வேலைக்குப் போறாரு" என்றெல்லாம் குழப்பம் எழும் என்று குறிப்பிட்டிருந்தார்கள். அதே போல எழுந்தது. படம் அவுட்டு. ஆனால் இதில் டீஸர் முதல் டிரெயிலர் வரை "கால இயந்திரம்" "கால இயந்திரம்" "கால இயந்திரம்" என்று கூவி விட்டதால் முதல் காட்சியை மிஸ் செய்தவர்களுக்கும் கதை புரிந்தது. ஆனால் லேட்டாக வந்தவர்கள் கிளைமாக்ஸ் முடிந்ததும் ஆர்யாவை பார்த்து "ஹே, என்னடா ஆர்யா இந்தப்படத்துல எப்டி?" என்று ஒரு கேள்வியை கேட்டு விட்டுத்தான் போனார்கள்.

       முதல் கால் மணி நேரம் மெள்ள நகர்ந்து போரடிப்பது போல நகர்ந்த போது நான் வற்புறுத்தி என் குடும்பமும், தங்கை குடும்பமும் என்னையே பார்த்தார்கள். "டேய், அண்ணா, என்னடா இது?" என்று முறைத்தாள் என் பாசமலர். ஆனால் டைம் மிஷின் ஹீரோவின் கையில் கிடைத்ததும் படபடவென சீன்கள் ஓடத்துவங்கியதால் பிரச்சினை இல்லை. படம் கிரேட் எஸ்கேப். எல்லோருக்கும் சந்தோஷம். பொதுவாகவே ஒரு படம் சூப்பராக அமைந்து விட்டால் அதற்கு கூட்டிக் கொண்டு போனவன் பெருமையாக, என்னமோ நாமளே டைரக்ட் செய்த மாதிரி காலரை உயர்த்துவதும் வழக்கம். அது எனக்கு நடந்தது. காட்சிக்குக் காட்சி ரசித்தார்கள். மெல்லிய நகைச்சுவையும் ரிலாக்ஸ் செய்ய உதவியது.

       டைம் மெஷினை சூட்கேஸ் ஸ்டைலில் மடக்கி உபயோகப்படுத்தும் ஐடியா சூப்பர். "ஐயர்ன் மேன் - சூட்கேஸ் ஆர்மர்" - ல் இருந்து இந்த ஐடியா கிடைத்திருக்கலாம் (பார்ட் டூ - மானகோ கார் ரேஸ் டிராக் சண்டை) என்று நினைக்கிறேன்.

       அதே போல பயங்கர பவர்ஃபுல்லான இன்டர்வெல் ப்ளாக். என்கவுண்டரில் செத்துட்டான் என விலாவாரியாகக் காண்பிக்கப்பட்ட வில்லன், டைம் மெஷினில் போன கருணா செய்த ஒரு சிறு தவறால் பிழைத்து விட "ஓ மை காட்" என்று ஆடியன்ஸ் பயங்கர ஷாக் ஆக (ஏனென்றால் வில்லனால் ஹீரோயினின் அப்பாவுக்கு ஒரு பெரிய பிரச்சினை வரும் என்பது கதையில் காண்பிக்கப் பட்டு விட்டது) அங்கே வரும் இன்டர்வெல் ப்ளாக் செம ப்ளான். பெரும் கை தட்டலுடன் கொடுக்கப் பட்ட இன்டர்வெல் ப்ளாக் இது. என் நினைவில் "ஃபேஸ் ஆஃப்" படத்தில் நிக்கோலஸ் கேஜ், கடல் நடுவில் உள்ள சிறையில் இருந்து தண்ணீரில் குதிக்கும் சீன் அப்படி ஒரு கை தட்டல் வாங்கியது.

       "ஆடியன்ஸை புத்திசாலி என்று நினைக்க வைக்க வேண்டும், அப்போது தான் அவனை படத்துடன் ஒன்ற வைக்க முடியும்" என்று வாத்தியார் சுஜாதா ஒருமுறை சொல்லியிருப்பார். தன் புத்திக்கு வேலை கொடுக்கும் படத்துடன் ஓடுவது ரசிகனுக்கு ரொம்பப் பிடிக்கும். செகண்ட் ஆஃப் எப்படி இருக்கும், வில்லனிடம் இருந்து எப்படி தப்பிப்பார்கள், அவனை எப்படி பழிவாங்குவார்கள், என்று இன்டர்வெல்லில் ஏக டிஸ்கஷன். அதை ஏமாற்றாத இரண்டாம் பாதியும் ரசிக்கும் படியே இருந்ததால் படம் திருப்தியுடன் நிறைவடைந்தது.

       ஆனால் லாஜிக் உதைக்கும் இடங்களும் சில உண்டு. ஹீரோ தங்கம் வாங்க பழைய காலத்துக்குப் போகும்போதே இப்போதுள்ள ரூபாய் நோட்டுக்கள் செல்லாதே என்று உடனே நமக்குத் தோன்றுகிறது. இது அவர்களுக்குத் தோன்றாதது ஏன்?

       இன்னோரு சஜஷன் பழைய கால நகைக் கடையில் "ஐ, இங்க பார்றா அதர்வா" என்று கருணா சொல்கையில் சட்டென்று புரிந்து நிறைய பேர் கைதட்டவில்லை. அவன் கலர் வாங்கப் போகும் போது தான் பலர் கவனித்துக் கை தட்டினார்கள். அந்த கடைப்பையனுக்கு ஒரே ஒரு க்ளோசப் ஷாட் வைத்திருந்து அதன் மேல் கருணாவின் "ஐ, இங்க பார்றா அதர்வா" வாய்ஸ் ஓவர் ஓடியிருந்தால் க்ளாப்ஸ் பிரித்து எறிந்திருக்கும்.

       கால இயந்திரத்தை உபயோகப் படுத்துவதில் முதல் ரூலே "நீங்கள் கடந்த காலத்துக்குப் போனால் அங்கே எதையும் மாற்றி விடக்கூடாது. அதனால் நிகழ்காலத்தில் ஏற்படும் பின்விளைவுகள் மிகப் பெரியதாக இருக்கலாம்" என்று சொல்கிறார்கள். அப்படி இருக்கையில் விஷ்ணுவும், கருணாவும் தங்கள் "காணாமல் போனதை கண்டுபிடித்துத் தருவோம்" என்ற பிஸினஸூக்காக டைம் மிஷினை கால் டாக்ஸி போல உபயோகித்து (இதை கருணாவே சொல்கிறார்) ஆயிரக்கணக்கான சம்பவங்களை மாற்றி விடுகிறார்களே? அதனால் ஒவ்வாருவர் வாழ்க்கையிலும், எவ்வளவு பெரிய மாற்றங்கள் நிகழ்ந்திருக்கும்? இது எவ்வளவு பெரிய லாஜிக் பொத்தல்? அதுவும் மேற்கண்ட விதி முன்னமேயே சொல்லப்பட்டு விடும் போது. ஆனால் படம் ஓடுகிற ஓட்டத்தில் வீட்டுக்கு வந்த பிறகு தான் இதெல்லாம் தோன்றுகிறது.

       ஆனால் அதே நேரம் கவிதை போன்ற ஒரு சூப்பர் கற்பனை அசத்தல். ஹீரோயினை முன்நோக்கி கூட்டிச் சென்று அவள் வயது குறையக் குறைய அவளை அவளே கொஞ்சிவிட்டு வருவது செம கவிதை கலந்த கற்பனை. அதிலும் தன்னையே குழந்தையாக ஹீரோயின் கையில் வாங்கிப்பார்க்கும் காட்சியில் நான் எழுந்து நின்று கைதட்டினேன். உலகத்திலேயே எந்த ஒரு காதலனாலும் இதை விட பெஸ்ட் பிறந்தநாள் பரிசை தரமுடியாது. விஞ்ஞானமும் கவிதை கலக்கும் இடம் அந்தக் கற்பனை. அந்த ஐடியா யாருக்குத் தோன்றியிருந்தாலும் அவர்களுக்கு கலா மாஸ்டர் ஸ்டைலில் நான் தலையைச் சுற்றி 101 ரூபாய் தருகிறேன்.


       வேறென்ன? இன்னும் எவ்வளவோ தோன்றுகிறது. ஏற்கனவே ஏ4 ல் நான்கு பக்கம் தாண்டி விட்டது. இது போதும். இந்தப் படம் பார்த்து விட்டு வீட்டுக்கு வந்தும் இரவு முழுக்க மண்டையில் அதன் காட்சிகள் ஓடிக் கொண்டே இருந்தன. என்னைப் பொறுத்தவரை அப்படி இருந்தால் தான் அது ஒரு சிறந்த வெற்றிப் படம். இதே ஜானரில் இதற்கு முன் எனக்கு இப்படிப் பிடித்தபடம் 1995 ல்  வந்த "ஜூமாஞ்சி". அப்போ எனக்குப் பதினாலு வயசு. எட்டாப்பு என்று நினைக்கிறேன். படம் பார்த்து விட்டு வீட்டுக்கு வந்தால் தலை முழுக்க அதே யோசனை. கிட்டத்தட்ட "இப்டி இருந்தா எப்டி இருக்கும், அப்டி இருந்தா எப்டி இருக்கும்" என்று கிட்டத்தட்ட ஜூமாஞ்சி இரண்டாம் பாகம் மண்டைக்குள் உருவாகி ஓடியது. அதன் படி "இன்று, நேற்று, நாளை" எனக்கு ரொம்ப ரொம்ப ரொம்பப் பிடித்த படம். யாரும் தவற விடக் கூடாத அனுபவம்.

வியாழன், 2 ஜூலை, 2015

ஏர்டெல் அட்ராசிடீஸ்


மொபைல்ல மெயின் பேலன்ஸை எப்பயும் கம்மியா வைக்கிறதே நமக்குப் பழக்கம். 30 ரூவா வச்சிருந்தா போதாது
.


நெறைய வச்சிருந்தா, திடீர்னு ஒருநாள், நீ இதை டவுன்லோட் பண்ணிட்ட, அதை டவுன்லோட் பண்ணிட்டன்னு காசை சரக்குன்னு உருவிடுவான் இந்த ஏர்டெல் காரன். காலர் டியூன், டெய்லி ஜோக்-னு எனக்கே தெரியாம ஆக்டிவேட் பண்ணி 30 ரூவாவை உருவிட்டு கஸ்டமர் கேருக்கு போன் போட்டா "நீ தான் பண்ணே"ன்றதும், நான் "இல்ல"ன்னு சண்டை போடுறதும், மெயில் மேல மெயில் அனுப்பி 15 ரூவாவை திருப்பி வாங்கறதும் பல தடவை நடந்ததெல்லாம் மூணு வருசம் முந்தின பழைய கதை. அதுக்காக பேலன்ஸ் ரூ.50-க்குள்ள வைக்க ஆரம்பிச்சேன். இப்போ அந்த இம்சை இல்ல.  
.
அதுக்கப்புறம் கொஞ்ச நாள் பிரச்சினை இல்லாம போச்சேன்னு 100, 150, 200 ன்னு பேலன்ஸை கொஞ்சம் ஏத்தி மெயின்டெய்ன் பண்ணேன். பழைய பிரச்சினைகள்- ஓம்பட்ஸ்மென்னுக்கே மெயில் அனுப்பியிருந்தால மேற்படி மேட்டரை விட்டுட்டு, டேட்டா கொள்ளை அடிக்க ஆரம்பிச்சான். நெட் பேக் போட்டிருந்தாலும் மத்த நாளெல்லாம் யூ டியூப்புக்கு சுத்தோ சுத்துன்னு சுத்துற சிக்னல், டேட்டா பேக் முடியற அன்னைக்கு மட்டும் சரசரன்னு வேகமா ஓடும்
.
ஒரு மணி நேரம் கவனிக்காம அசந்துட்டா போச்சு. 200 எம்.பி இருந்தாலும் அத்தனை டேட்டாவையும் காலி பண்ணிட்டு மெயின் பேலன்ஸ் 180 ரூபாயையும் பத்து நிமிஷத்துல உருவிடுவானுங்க. சரி நம்ம போன்தான் வேகமா வேலை செய்யுதோன்னு நோண்டிப்பாத்தா ஒரு கருமமும் பிரவுஸ் ஆகியிருக்காது. சரி ஓக்கே. வாட்ஸ்அப்ல இருந்து ஜி.மெயில் வரைக்கும் எல்லா "ஆட்டோ டவுன்லோட்" ஆப்ஷனையும் தூக்கிட்டு எல்லாத்துக்கும் பாஸ்வேர்டு போட்டுட்டு உஷாரா "என்னைக்கேக்காம டவுன்லோட் ஆயிடுவியா நீ" ன்னு தெனாவட்டா திரிஞ்சாலும் டேட்டா முடியுற அன்னைக்கு மறுபடி இதே கதி. பேலன்ஸ் 150 இருந்தாலும் காலி, 200 இருந்தாலும் காலி
.
இதே "ஏர்செல்" காரன் டேட்டா முடியப்போற நேரத்துல "you have consumed 80% அல்லது 100% of your free data" ஒரு எச்சரிக்கை மெஸேஜ் அனுப்புறான். ஆனா ஏர்டெல் அனுப்பறதில்ல. ஏன்னா நல்லாவே தெரியுது அவன் தெரிஞ்சே பண்றான்னு. இந்தக் கொம்பனை அடிச்சுக்க பிரைவேட்ல ஆள் இல்லைங்குற திமிரு. இருடா இரு. ஆனானப்பட்ட சன் டி.வியே பல்பு பல்பா வாங்கினு இருக்கு. உன் கொட்டத்தையும் அடக்க வரும் ஒரு கும்கி. (ஆனா அடுப்புக்குத் தப்பி நெருப்புக்குள்ள விழுந்த மாதிரி டாடா டோகோமோ, பி.எஸ்.என்.எல் னு போயிரக்கூடாது, முன்னது சிக்னல் வேஸ்ட், பின்னது சர்வீஸ் வேஸ்ட்
.
கேட்டா "உங்க மொபைல்ல தான் பிரவுஸ் ஆகியிருக்கு, இத்தன கே.பி-க்கு இத்தன பைசா"-ன்னு கணக்கு சொல்றான். என்கிட்ட நெட்- அளக்க மீட்டரா இருக்கு? சரி இது வேலைக்காவாதுன்னு மறுபடி பேலன்ஸைக் குறைச்சு 40 50 ன்னு மெயின்டென் பண்ணேன். போனா நாப்பதோட போகட்டும்னு. சூடத்தைக் கொளுத்துனாப்பல கொளுத்திட்டு ஒரே அணையா அணைப்பாரே தலைவரு கவுண்டமணி அதே ஸ்டைல்ல, நெட்டை ஆன் பண்றது, பாக்க வேண்டியதை பாத்துட்டு கபக்குன்னு ஆஃப் பண்றது, நைட்டு சுத்தமா ஆஃப் பண்ணி வைக்கிறது, வெளியில ஓசி வைஃபை கிடைச்சா வாட்ஸ் அப் குள்ள போறதுன்னு திரிஞ்சேன், ஒரு எட்டு பத்து மாசமா தொந்திரவு இல்ல.
ரெண்டு நாள் முன்னாடி தெரிஞ்ச ஒரு பொம்பளப்புள்ள (நாட் மை தங்கமணி) போனைப் பார்த்துட்டு நக்கலா "என்னடா சின்னப் பையன் மாதிரி இவ்ளூண்டு காசு வச்சிருக்க, நீ மேனேஜர் தானே, சுளையா சம்பளம் வாங்குற இல்ல, 200 ரூவா, 300 ரூவா மெயின்டெய்ன் பண்ண மாட்டியா"ன்னு உசுப்பேத்தி உட்டுருச்சு. நானும் ரோஷமா, ஒரு 250 ஓவாக்கு ரீசார்ஜ் பண்ணி கெத்தா திரிஞ்சேன். ரெண்டே நாள்தான். ஏர்டெல் காரன் நம்ம செல்லுல பேலன்ஸ் எவ்ளோ இருக்குன்னு பாக்க ஏதோ ஸ்பெஷல் சாஃப்ட்வேர் வச்சிருப்பான் போலருக்கு. இல்ல ஆளு உட்டுப் பாப்பானுகளோ? இன்னிக்கு காலைல அதே கதை சுத்தமா உருவிட்டான். இப்போ ஜீரோ பேலன்ஸ் போன் பண்ணிக் கேட்டா "நீ தான் தின்னே"ன்னுவான். அதுக்கு எதுக்கு தெண்டத்துக்கு கஸ்டமர் கேருக்கு ஒரு ரூபா அழணும்?.
.
இப்போ நான், வலது கையை முன்னாடி காட்டி, எல்லா விரலையும் நீட்டி, மத்த விரலை மடக்கி, நீட்டின ஆள்காட்டி விரலை மட்டும் என் பக்கம் திருப்பி என்னை நானே கேட்டுகிட்டேன்
1. இனிமே ஏர்டெல்லை நம்புவியா? நம்புவியா
2. ஏளு களுதை வயசாச்சே, வெத்து சீன் போடுவியா? போடுவியா? 250 ஓவா, ங்கொப்பனா தருவான்
3. இனிமே பொம்பளப்புள்ள பேச்சை கேப்பியா? கேப்பியா? கேப்பியா


புதன், 1 ஜூலை, 2015

ஹெல்மெட் அட்ராசிடீஸ்


எப்போதும் போகும் சாலையில், அதே டிராஃபிக்கில் இன்றைக்கு பெரும் மாற்றம். சுற்றி இருந்தோர் அனைவர் தலையும் பளபளத்தது. ஒரு டி.எஸ்.எல்.ஆர் இருந்திருந்தால் (கூடவே புகைப்படக்கலையில் அரிச்சுவடியும் தெரிந்திருந்தால்) வளைத்து வளைத்து விகடன் அட்டைப்படத்தில் போடும் துல்லியத்தில் ஹெல்மெட் படங்களை எடுத்துத் தள்ளியிருக்கலாம்.


"சக்சஸ், வாங்கிட்டோமுல்ல" என வெற்றிக்களிப்பில் சின்னத்தம்பி படம் பார்க்கப்போன ரஜினியைப் போல சட்டை ஊறிப்போய் ஹெல்மெட் கடையிலிருந்து வெளிவந்தான் ஒருவன்.

கிரிக்கெட் விளையாடும்போது போட்டிருக்கும் ஹெல்மெட்டைப் போட்டுப்போனது ஒரு இளசு. உத்துப்பார்த்தால், இதுவும் ஹெல்மெட் தானேண்ணே என்றான் அவன். லாஜிக், ரைட்?

முழுக்கறுப்பு வண்டியில் மேட்ச் ஆகாத பளீர் சிவப்பில் ஹெல்மெட் போட்டுப் போனார் ஒருத்தர். சிக்னலில் நிறுத்தி "என்ன பாஸ்?" என்றால், "இது கிடைச்சதே பெருசுங்க" என்றார்.

ஒரு அப்பாவி குடும்பஸ்தர். இன்று பார்த்து குடும்பத்துடன் செல்ல வேண்டிய எதோ அவசியம் போலிருக்கிறது. மூன்று பேரும் ஹெல்மெட் போட்டு, (அந்த அம்மணிக்கு தலையில் நிற்கவே இல்லை) ஒவ்வொரு கியர் மாற்றும் போதும் ஒருவருக்கொருவர் முட்டிக்கொண்டே போனார்கள்.

ஹெல்மெட் போடாத (போலீஸூக்குப் பயப்படாத) ஒரு தைரியசாலி ஹெல்மெட் போட்ட மற்றவர்களை "பயந்தாங்கொள்ளிப்பசங்களா" என்று நக்கலாக பார்த்துக்கொண்டே போனார்.

பின்சீட்டில் அமர்ந்து ஒரு வயதுக்குழந்தையை மடியில் வைத்தபடி ஹெல்மெட்டுக்குள் இருந்தே "ஜூஜ்ஜூஜ்ஜூஜ்ஜூ" என்று கொஞ்சிக்கொண்டே போனார் ஒரு இளம் தாய். குழந்தையில் கண்களில் மிரட்சி. ஹெல்மெட் வைஸரைத் திறந்து உள்ளே கைவிட்டு அம்மாதானா? என்று மூக்கைத் தேடிக்கொண்டிருந்தது குழந்தை.

எக்ஸெல் சூப்பரில் வண்டிக்குப் பொருந்தாத ஒரு ஸ்டைலான ஹெல்மெட்டைப் போட்டுக் கொண்டு 30 கி.மீ வேகத்தில் மெள்ள உருட்டிக் கொண்டே போய்க்கொண்டிருந்தார் ஒரு கிராமத்துக் கறை வேட்டி.

ஒரு பப் பழைய யமாகாவில் அதைவிடப் பழைய ஹெல்மெட்டைப் போட்டபடி போனார் ஒருவர். கொஞ்சம் (ரொம்பவும்) பழசு தான் போலும். வைஸர் இல்லை. உள்ளே பஞ்சு பிரிந்து தெரிந்தது. ரப்பர் பீடிங் (பழைய மாடல்) பிய்ந்து தொங்கியது.

இன்னோரு பழைய ஹெல்மெட் தாண்டிப்போனது. லேசாக வண்டியில் ஆடியபடியே போனார் அவர். கொஞ்ச தூரத்தில் ஓரம் நின்று ஹெல்மெட்டைக் கழற்றி உதறியதில் உள்ளிருந்து எகிறி ஓடியது ஒரு கரப்பு.

"பீம் பாய்", "பீம் பாய்" சைஸில் முழு வெயிட்டையும் பைக்கில் இறக்கி டயரில் அரை இன்ஞ் காற்று இறங்க பைக் ஓடுகிறதா, வழுக்கிக் கொண்டு போகிறதா எனும்படி போனார் ஒருத்தர். அவர் மண்டை சைஸூக்கு சத்தியமாய் இன்னும் ஹெல்மெட் கண்டுபிடிக்கப்பட்டிருக்காது. இருப்பினும் சட்டத்தை மதித்து ஒன்றை வாங்கி மாட்டியிருந்தார், அது அரை மண்டைக்குக் கூட போதவில்லை.
".எஸ். ஸ்டிக்கர் ஒட்டியிருந்தா போலியாம். பெயிண்ட்- பிரிண்ட் அடிச்சிருந்தா தான் ஒரிஜினலாம், அது இல்லையா" என்றபடி சாலையோர அம்பானி ஒருவரிடம் ஹெல்மெட்டை திருப்பித் திருப்பி பார்த்தபடி கேட்டுக்கொண்டிருந்தார் ஒரு விவரம். "இதான் இருக்கு, வேணும்னா எடு, இல்லாட்டி வச்சுட்டுக் கௌம்பு" என சிம்பிள் சொல்யூஷன் தந்தான் அம்பானி.


பின்னாலிருந்தவனும் சின்சியராய் ஹெல்மட் போட்டபடி "ஏண்டா ஹரீஷ் ஹெல்மெட்டையும் தூக்கிட்டமே, அவன் தேடமாட்டான்?" என்றதற்கு "மூடிட்டு வாடா" என்றபடி பைக்கை முறுக்கினான் ஒரு பைக் ஓட்டி