சனி, 31 அக்டோபர், 2020

தவறான முன்னுதாரணம்

31 அக்டோபர் 2019 அன்று ஃபேஸ்புக்கில் எழுதியது. போர்வெல் குழிக்குள் விழுந்து இறந்த குழந்தை யை வைத்து அரசியல் செய்யப்பட்ட போது.
------------------------------------------------
வட இந்தியாவில் என நினைக்கிறேன். படித்த அல்லது கேட்ட செய்தி. அங்கே விதவைகள் அல்லது விவாகரத்தான ஒற்றைப் பெண்மணிகளுக்கு அரசு ஒரு பெரும் தொகையை இழப்பீடு வழங்கத் துவங்கியதாம். தற்போது அங்கே ஏகப்பட்ட விவாரத்து வழக்குகள். கணவனும் மனைவியும் விவாகரத்து செய்து விட்டு ஒரே வீட்டிலேயே ஒன்றாக இருக்கிறார்கள் அல்லது பக்கத்துப் பக்கத்து வீட்டில். இழப்பீடு தர அதிகாரி வரும்போது கணவன் வெளியே போய்விடுவான். இவர்கள் பணம் வாங்கிக் கொள்கிறார்கள்.

இதை விடக் கொடுமை, பலநூறு ஆண்டுகள் பாரம்பரியம், கணவனே கண்கண்ட தெய்வம், தாலி புண்ணியம் என நினைக்கும் இந்த இந்தியாவில் அந்த மாதர் குல மாணிக்கங்கள் கணவன் இறந்து விட்டான் என ஆதாரங்களைத் தயார் செய்து, அவனை வெளியூருக்கு அனுப்பி விட்டு தாலியைக் கழற்றி விட்டு வாழ்கிறார்களாம். இழப்பீடு அதிகாரி வரும்போது தான் ஒரு விதவை என்று கூசாமல் பணம் வாங்கிக் கொள்கிறார்கள். இவர்களுக்கு பணத்திற்கு முன் எதுவும் பெரிதல்ல.

இதே நமது அரசாங்கம் ஜகஜோதியாக நடத்தும் குடிக் கடை புண்ணியத்தில், தினமும் குடித்து விட்டு வந்து பிள்ளைகளையும் பொண்டாட்டியையும் தூக்கிப் போட்டு மிதிக்கும் கேடு கெட்ட அப்பன்கள் இன்னும் தெருவுக்கு இரண்டு பேர் இருக்கிறார்கள். முடிந்தால் பின்மாலை நேரத்தில் அருகில் உள்ள டாஸ்மாக்குக்குச் சென்று பாருங்கள், கிழிந்த லுங்கியும், ஷேவ் செய்யாத முள் தாடியுமாக எத்தனை பேர் சேற்றில் உருண்டு பிரண்டு கொண்டிருக்கிறார்கள் என.

உங்களுக்குப் போலீஸ் நண்பர்கள், வக்கீல் நண்பர்கள் இருந்தால் கேட்டுப் பாருங்கள் எத்தனையெத்தனை துரோகங்கள் பணத்திற்காக, கொலைக் கேஸ்கள் தினமும் நடக்கின்றன என்று. 1000 ரூபாய் காசுக்காக பிள்ளைகளை இன்னும் விற்றுக் கொண்டுதான் இருக்கிறார்கள். இதே அரசாங்கமும், போட்டி விளம்பரத்திற்காக எதிர்க்கட்சிகளும் சேர்ந்து, ஒரு இழப்புக்கு 30 இலட்சம் 40 இலட்சம் ரூபாய் என தூக்கிக் கொடுத்தீர்கள் என்றால் அது ஒரு தவறான முன்னுதாரணம் ஆகி விடாதா? அதற்காக நாளை இந்தக் கேடுகெட்ட அப்பன்கள் குடித்து விட்டு வந்து தன் பிள்ளைகளில் ஒன்றை, அருகில் உள்ள போர்வெல் குழிக்குள் தூக்கிப் போட மாட்டார்கள் என்று என்ன நிச்சயம்?

வியாழன், 29 அக்டோபர், 2020

#பினான்ஸ்_டிப்பு 4 (டேக்ஸ் கட்றவரா நீங்க?)

எனது முந்தைய #பினான்ஸ்_டிப்பு (லிங்க் பார்க்கவும்) பதிவில் சொன்ன RD யோசனை ஸ்கூல் ஃபீஸ் கட்ட மட்டுமல்ல. வருடா வருடம் சம்பளத்தில் இருந்து அரசுக்கு டேக்ஸ் கட்டுபவர்களுக்கும் பொருந்தும். 

அடுத்த மார்ச்சில் நீங்கள் கட்ட வேண்டிய டேக்ஸ் தொகை எவ்வளவோ, அதைக் கணக்குப் போட்டு, அப்படியே 12 ஆல் வகுத்து மாதா மாதம் RD ஆக போட்டு வரலாம். ஆனால் பிப்ரவரியில் துவக்குங்கள். அப்போது தான் அடுத்த பிப்ரவரியில் RD முடிந்து அந்தப் பணத்தை டேக்ஸ் கட்ட உபயோகிக்கலாம். 

முன்பெல்லாம் டேக்ஸ் கட்டும்போது சொல்வார்கள் மார்ச் மாசம் சம்பளமே வீட்டுக்கு வராது என்று. சிலருக்கு, அதிலும் அரசு ஊழியர்களுக்கு வரிப்பிடித்தம் நிறைய வரும். அவர்களில் சிலருக்கு பிப்ரவரியில் பாதி சம்பளமே வராது. அவர்களுக்கு இந்த யோசனை உபயோகமாக இருக்கும். 

இன்னோரு விஷயம். இப்போது பல தனியார் நிறுவனங்களும், ஏன் சில அரசு சார்ந்த நிறுவனங்களுமே உங்கள் சம்பளத்தில்  மாதாமாதம் ஒரு தொகையைப் பிடித்து வைத்துக் கொள்கிறார்கள் மார்ச் மாதம் நீங்கள் கஷ்டப் படக் கூடாது என்று. அப்படி உங்கள் நிறுவனம் இருந்தால் நிம்மதி. மார்ச் பிரச்சினை உங்களுக்கு இல்லை. 

#பினான்ஸ்_டிப்பு 4 

மற்ற பதிவுகள் இங்கே.

#பினான்ஸ்_டிப்பு 1

#பினான்ஸ்_டிப்பு 2

#பினான்ஸ்_டிப்பு 3

#பினான்ஸ்_டிப்பு 1 (பசங்க பேர்ல அக்கவுண்ட்)

பசங்க பேர்ல ஒரு பேங்க் அக்கவுண்ட் ஆரம்பிச்சு உங்க அக்கவுண்ட்ல இருந்து வாரம் 50 ரூபாயோ, 100 ரூபாயோ ஆட்டோ டெபிட் ஆகுற மாதிரி செட் பண்ணிக்கோங்க. மிடில் கிளாஸ் குடும்பத்துல பலவிதமான செலவுகள் நடக்கும் போது இது ஒரு பக்கம் போறது கண்ணுக்குத் தெரியாது. ஆனா திடீர்னு ஒரு நாள் பசங்க அக்கவுண்ட் பேலன்ஸ் பார்த்தா ஆயிரங்கள்ல இருக்கும். திடீர் செலவுகளுக்கு உதவும். 

- எஸ்கா 

#பினான்ஸ்_டிப்பு 1

மற்ற பதிவுகள் இங்கே.

#பினான்ஸ்_டிப்பு 2

#பினான்ஸ்_டிப்பு 3

#பினான்ஸ்_டிப்பு 4#பினான்ஸ்_டிப்பு 2 (நண்பர்களுக்குள் ரொட்டேஷன்)

ஐந்தாறு நம்பிக்கையான நண்பர்கள் சேர்ந்து (பள்ளி, கல்லூரி நண்பர்கள் உசிதம். நம்பிக்கை நெருக்கம் அதிகம் இருக்கும். அலுவல் நண்பர்கள் வேண்டாம். அது உடையும்) தலைக்கு மாதம் 1000 ரூபாய் என போட்டு அதை அவர்களில் இருவர் (அ) மூவர் பேரில் வங்கியில் ஜாயிண்ட் அக்கவுண்ட் துவங்கி, ஒரு வருடம் போட்டுவைத்தால் சுமார் 60,000 ரூபாய் சேரும். அந்தப்பணத்தை நண்பர்களுக்குள் ஒரு ஆளுக்கு 20,000 என அவர்களுக்குள்ளேயே மூன்று பேருக்கு ரொட்டேஷன் விட்டுக்கொள்ளலாம். அதை பிரதி மாதம் 5000 என நான்கு மாதங்களில் திருப்பிக் கட்ட வேண்டும் என்ற கண்டிஷனுடன். நான்கு மாதங்கள் கழித்து வேறு மூன்று பேர் அதை ரொட்டேஷனுக்கு எடுத்துக் கொள்ளலாம். பிள்ளைகளுக்கு பீஸ் கட்டும் தகப்பன்களுக்கு உதவும்.
மு.குறிப்புகள் - ஒரு வருடம் என்பதை தொடர்ந்து நீட்டிப்பதோ, ரொட்டேஷன் 20,000 த்துக்கு மாதம் 1 சதம் வட்டி போட்டுத் திருப்பிக் கட்டுவதோ நண்பர்களுக்குள் பேசி முடிவெடுத்துக் கொள்ளலாம். ரொட்டேஷன் தொகையை அதிகமாக்க வேண்டாம். கட்ட முடியாமல் போனால் மனஸ்தாபம் தான் வரும்.

மு.கு 2 - மிக நெருக்கம் இருந்தால் மட்டும் இதைச் செய்யவும். கண்டிப்பாக சண்டை வர வாய்ப்புண்டு.
- எஸ்கா

#பினான்ஸ்_டிப்பு 2 

மற்ற பதிவுகள் இங்கே.

#பினான்ஸ்_டிப்பு 1

#பினான்ஸ்_டிப்பு 3

#பினான்ஸ்_டிப்பு 4

#பினான்ஸ்_டிப்பு 3 (ஸ்கூல் ஃபீஸ், காலேஜ் ஃபீஸ் பிரச்சினை தீர)

வீட்டில், பள்ளி செல்லும் பிள்ளைகள் உள்ளவர்கள் பிள்ளைகளின் ஸ்கூல் ஃபீஸ் நேரத்தில் பல்க்காக பணம் புரட்டத் தடுமாறுவது வழக்கம். அந்த டென்ஷனைக் கொஞ்சம் குறைக்க ஒரு யோசனை.

ஃபீஸ் தொகை எவ்வளவோ, அதை அப்படியே 12 ஆல் வகுத்து மாதா மாதம் RD ஆக போட்டு வரலாம். உதா - ஃபீஸ் 30,000 என்றால் மாதம் 2500 என. மாதா மாதம் சிறிய தொகையாக போவது தெரியாது (தெரிந்தாலும் ஒன்றும் செய்ய முடியாது. ஃபீஸ் கட்டித்தானே ஆக வேண்டும்?). வருடம் ஒரு முறை பல்க்காக எடுத்து அதை ஃபீஸ் கட்ட உபயோகிக்கலாம்.
டெர்ம் ஃபீஸை பிரித்துக் கட்ட வேண்டிய பள்ளிகள் எனில் RD க்கு பதில் உங்கள் பிள்ளை பெயரில் நீங்க் அக்கவுண்ட் வைத்துள்ள அதே வங்கியில் ஒரு சேமிப்புக் கணக்கு துவங்கி உங்கள் அக்கவுண்டில் இருந்து அந்த அக்கவுண்டுக்கு மாதம் 2500 "Recurring fund transfer" ஆப்ஷன் செட் செய்து வைக்கலாம். மூன்று நான்கு மாதங்களுக்கு ஒருமுறை தேவையான அளவு எடுத்துக் கட்டலாம்.
மாத சம்பளம் லாம் இல்லை, வருமானம் முன்ன பின்னதாங்க வரும் என்பவர்கள் மாதத்திற்கு பதிலாக வாரம் 600 ரூபாய் என்றும் செட் செய்து வைக்கலாம். உங்கள் வசதி எப்படியோ அப்படி.
Edit - Variable RD என்று ஒரு திட்டம் உண்டு. மாதா மாதம் ஒரே தொகை என்பது அவசியமில்லை. ஒரு மடங்கு முதல் 10 மடங்கு வரை உண்டு. உ - ம். ₹ 100 ஆர் டீ. 200, 300 என ₹ 1000 வரை கட்டலாம். மறு மாதமே ₹ 100 செலுத்தலாம். ஒரே மாதிரி வருமானம் இல்லாதவருக்கு இது வசதி. இந்தத் திட்டம் ஒரு சில வங்கிகளில்தான் உண்டு. பஞ்சாப் நேஷனல் வங்கி-யில் உண்டு. எ தகவல் பை Mr.
Vetri Vidiyal Srinivasan

புதன், 28 அக்டோபர், 2020

விகடன் தாத்தா கேள்வியும், நம்ம கோக்கு மாக்கு பதில்களும்.

 "அரசியல் கட்சிகள் தேர்தல் அறிக்கைகளைத் தயார் செய்யத் துவங்கி விட்டன. என்னென்ன வாக்குறுதிகள் இடம்பெற வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?" என்று விகடன் "யங்" தாத்தா "வாசகர் மேடை" பகுதிக்காக இன்று கேள்வி கேட்டிருந்தார். 


நம்ம பதில்கள் - 


வேலை இல்லாத இளைஞர்களுக்கு மாதம் 2000 ஊக்கத்தொகை, டாஸ்மாக்கில் தள்ளுபடி தரப்படும்.


அம்மா உணவகத்தில் ஐந்து இட்லி வாங்கினால் கபசுர குடிநீர் இலவசம்.


அம்மா உணவகத்தில் பார்சலும் வழங்கப்படும்.


ஒரு ரேஷன் கார்டுக்கு 100 ஜி.பி இலவச நெட் ரீசார்ஜ் போட்டுத்தரப்படும்.


வெங்காய விலை ஏறாமல் பார்த்துக் கொள்வோம். ஏறினால், ரேஷனில் ஒரு அட்டைக்கு இரண்டு கிலோ வெங்காயம் இலவசமாக வழங்கப்படும்.


ஊழலில் சிக்கும் அரசியல்வாதிகளின் பணம் அப்படியே தமிழகத்தின் மீதுள்ள கடனைத் தீர்க்க செலுத்தப்படும். ஐந்தே ஆண்டுகளில் கடன் இல்லா தமிழ்நாடு.


சித்தி, அண்ணாமலை, மெட்டி ஒலி, நாதஸ்வரம் போன்ற சீரியல்களே அரசே வாங்கி பொதிகை யில் மறுஒளிபரப்பு செய்யும்.


வருடத்திற்கு இரண்டு முறை பிக் பாஸ் நடத்த ஆவன செய்வோம்.


வாட்ஸ் அப் செயலியை வாங்கி அரசுடைமை ஆக்குவோம்.


வருடத்துக்கு ஒரு முதல்வர் திட்டத்தைக் கொண்டு வருவோம்.


குடித்துவிட்டு வண்டியோட்டும் மதுப்பிரியர்களின் உயிர்நலன் கருதி, ஸ்விக்கி மூலம் மதுபானங்கள் டோர்டெலிவரி செய்ய வழிவகை செய்வோம்.


ஜாக்கிசான், ஜெட்லீ படங்களைத் தடை செய்து சைனாவை வெறுப்பேத்துவோம்.


ஆன்லைன் வகுப்பில் படிக்க வேண்டி, அரசுப்பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் அனைத்து மாணவர்களுக்கும் விலையில்லா டேப் (TAB) வழங்கப்படும்.


தமிழ்நாட்டில் அனைத்துப் பள்ளிகளிலும், அனைவரும் தமிழ்ப்பாடம் கட்டாயம். தமிழகத்தில் பிறந்த பிற மொழிக்காரர்களுக்கும் சேர்த்து. (பிறப்புச் சான்றிதழ் வைத்து சோதிக்கப்படும்).


தமிழ்நாட்டில் பிறந்த எல்லாரையும் (பிறப்புச் சான்றிதழ்) வைத்து தமிழராக அறிவிப்போம்.


பிறமாநிலத்தவர் தமிழ்நாட்டில் குவிவதைக் குறைத்து, தமிழர்களுக்கே, தமிழகப் பணிகளில் முன்னுரிமை அளிப்போம்.


2020 ஐ, ஜீரோ கல்வியாண்டாக அறிவிப்போம்.


முடங்கிய புகார் துறைக்குப் புத்துணர்வளித்து மீண்டும் கொண்டு வருவோம்.


கொரோனா ஊரடங்கு காலத்தில் முடங்கிய திருமணங்களை அரசு செலவில் நடத்துவோம்.


ரஜினி, கமலுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது கொடுப்போம். (அப்படியே நைஸா ஒதுக்கிடலாம்ல)


மந்திரிகளை ரிசார்ட்டில் தங்க வைத்து "அரசு பிக் பாஸ்" நடத்தி பொதிகையில் ஒளிபரப்புவோம்.


நாங்கள் வெற்றி பெற்றால் மந்திரிகள் கூவத்தூரில் இருந்த நாட்களை பிக் பாஸ் போல எடிட் செய்து ஒளிபரப்புவோம்.


ரேஷனில் விலையில்லா கபசுர குடிநீர் வழங்கப்படும்.


விவசாயிகளுக்கு இலவச கபசுர குடிநீர் வழங்கப்படும்.


நீட்டை தமிழ்நாட்டில் இருந்து அப்புறப்படுத்த உயிருள்ளவரை போராடுவோம். (அதுக்கப்புறம் எவன் கேக்கப் போறான்?). 

திங்கள், 26 அக்டோபர், 2020

அநியாயத்துக்கு பாஸிடிவ்

வாழ்க்கையை சில பேர் அநியாயத்துக்கு பாஸிடிவ்-ஆ எடுத்துக் கொண்டு வாழ்கிறார்கள். நமக்கு எதைப் பாத்தாலும் டென்சனாவுது. தெய்வம்யா நீங்கள்லாம்.

நண்பர் ஒருவர்.
பெரிய திறமைசாலி ஒன்றும் கிடையாது. நீங்கள் ரோட்டில் இறங்கி நடந்தால் எதிர்ப்படும் நூறு சாதாரண ஆசாமிகளில் ஒருவர்.
ஆனால் நல்லவர்.

எட்டாவது வயதில் அவரது தாய் மரணிக்கிறார்.
பத்தாவது வயதில் தந்தை.
உறவினர் வீட்டில் தங்கி பார்ட் டைம் வேலைகளும் செய்து அவர்கள் ஆதரவில் (நல்லது, கெட்டது, ஏச்சு பேச்சுகளும் இருந்திருக்கலாம்) வளர்கிறார்.
இது போக நம்மைப்போல் படிப்பு, புவ்வா, பணம், வேலை, பாலிடிக்ஸ், எல்லா பிரச்சினையும் உண்டு.
24 வயதில் திருமணம்.

மனைவிக்கு ஏதோ தீராத வியாதி. மூன்று வருடங்கள் ஆஸ்பத்திரி அலைச்சல். 28வது வயதில் அவரும் மரணிக்கிறார்.
மீண்டும் நண்பர் தனியன்.
மூன்று வருடம் மீண்டும் தீராத தனிமை.
இரு வருடம் முன்பு 31 வயதில் இரண்டாவது திருமணம்.

ஆண்டவன் (அல்லது வேறேதோ ஒன்று) புண்ணியத்தில் தற்போது அமைதியான வாழ்க்கை. கையில் சின்னஞ்சிறு "தங்க மீன்" ஒன்று.
நண்பரே, உங்கள் நல்ல மனதிற்காகவாவது அந்த ஆண்டவன் அமைதியை மட்டும் இனி வழங்க பிரார்த்திக்கிறேன்.
.
27 அக்டோபர் 2014 அன்று ஃபேஸ்புக்கில் எழுதியது.
.

ஆழ்துளைக் கிணறும் ராக்கெட்டும்

ஆழ்துளைக் கிணற்றில் குழந்தை சுர்ஜித் விழுந்த சம்பவம் நடந்த நேரத்தில் - 27 அக்டோபர் 2019 அன்று ஃபேஸ்புக்கில் எழுதியது. ----------------------------------------------------------------------------------------- 

சீரியஸ் முன்குறிப்பு - எந்தப் பாவமும் செய்யாத குழந்தை சுர்ஜித் மீண்டு வர நானும் பிரார்த்திக்கிறேன். 

----------------------------------------------------------------------------------------- 

"குழியில் விழுந்த சுர்ஜித்தைக் காப்பாத்த கருவி இல்லை. ராக்கெட் விடுறாங்களாமாம். என்ன டிஜிட்டல் இந்தியா? ஆய். ஊய். டாய். டூய்" 

என்று கருத்தாழம் மிக்க பதிவுகள், ஃபார்வர்டுகள் பல கண்ணில் பட்டன. வாட்ஸ் அப்பிலும் வந்தன. 

அந்தப் பையன் சுர்ஜித் பற்றிய செய்தி நமக்கு எப்படி தெரிந்தது? சாட்டிலைட் டி.வி மூலமா, அல்லது செல்ஃபோன் மூலமா.. செல்ஃபோன், இன்டர்நெட்லாம் எப்படி வேலை செய்யும்? சாட்டிலைட் மூலமா. அந்த சேட்டிலைட் எப்படி அங்க போகும்?  ராக்கெட் விட்டாத்தான் போகும். 

டீடெய்லா போஸ்ட் போடுற அளவுக்குப் பொறுமை இல்ல. விவேக் சொன்ன மாதிரி ஹண்ட்ரண்ட் அப்துல் கலாம்ஸ் (அது பெரியாராச்சேன்னு யாரும் வராதீங்க) வந்தாலும் உங்களத் திருத்த முடியாது. 

கொஞ்சமாவது யோசிங்க அறிவாளிகளே. எதுக்கு எதை இணைச்சுப் பேசணும்னு ஒரு விவஸ்தை இல்லை? சொம்மா உணர்ச்சிக்கு அடிமையாகி "ராக்கெட் விடுற காசை ஏழைகளுக்கு தயிர் சாதம் வாங்கித் தரலாம்"னு மைக்கப் பாத்ததும் உளர்ற நம்ம ஓவியர் சி.கு மாதிரி கத்தக் கூடாது. 

போய் சர்க்கார், வில்லு, வேட்டைக்காரன், பிகில் னு வரிசையா பாருங்க. அதான் உங்களுக்கெல்லாம் கடைசி வரை தலைவிதி.

.

ஞாயிறு, 25 அக்டோபர், 2020

கார்த்திக் Karthik கார்த்திக்

 ரொம்ப நாள், ரொம்ப ஆண்டு காலங்கள் கழிச்சு "எந்த கார்த்திக்?" வெளாட்டு ஆரம்பிச்சிருக்கு எங்க கம்பெனியில. என்னையும் சேர்த்து இப்போ நாலு கார்த்திக் (அ) கார்த்திகேயன்கள்.

இந்த குழப்பக் காமெடியெல்லாம் பெரும்பாலும் பள்ளிக்கூடம், கல்லூரி படிக்கிற காலத்தில் நடந்தது. அந்த வயசுக்கு கடுப்பா இருந்தாலும், மொத்தமா, செம்ம ஜாலியா இருக்கும். ஸ்கூல்ல ஒவ்வொரு க்ளாஸூக்கும் குறைஞ்சது ரெண்டு கார்த்திக் (அ) கார்த்திகேயன், சில சமயம் மூணு பேரு இருப்பான். சில சமயம் ஒரே இனிஷியல் வேற. அட்டென்டென்ஸ் எடுக்கும் போதே குழப்பம் ஆரம்பிக்கும். ஏன்னா கார்த்திக், கார்த்திகேயன் - கிறது அப்போ பொதுப் பேரு.
அதுவும் அந்த "அலைகள் ஓய்வதில்லை" வந்த புதுசுல பிறந்த குழந்தைகள் எல்லாருக்கும் கார்த்திக் - ராதான்னு பெயர் வைப்பாங்கன்னு அம்மா அப்பா சொல்லிக் கேட்டிருக்கேன். நமக்கு அப்படி பெயர் வைச்சாங்களான்னு தெரியாது. அது முருகன் சாமி பேருடான்னு "கார்த்திகேயன்" னு லெங்க்த்தா வச்சிட்டாங்க. ஆனா பலரும் கூப்பிடுறது "கார்த்தி" அ "கார்த்திக்" தான்.
நவரச நாயகன் கார்த்திக் ஒரு பெரிய ரவுண்டு வந்ததால "கார்த்திக்" ன்ற பேருக்கு ஒரு மவுசு எப்பயுமே இருந்தது. கூடவே சினிமாக்கள்ல நிறைய்ய்ய்ய்ய்ய்ய ஹீரோ கதாபாத்திரங்களுக்கு கார்த்திக் - ன்னு பேரு வைக்கிறது ஒரு பெரிய ட்ரெண்டாவே இருந்தது. இது போக கார்த்திக்-ன்ற பேர்ல ஒவ்வொரு காலகட்டத்திலும் நிறைய வி.ஐ.பிக்கள், பிரபலங்கள் (நரேன் கார்த்திகேயன், சிங்கர் கார்த்திக், கார்த்திக் சுப்பராஜ், கார்த்திக் ராஜா, அமேரிக்க மாப்பிள்ளை கார்த்திக், சிவகார்த்திகேயன், கார்த்தி சிதம்பரம், ஐ.பி.எஸ் கார்த்திகேயன், கேரள சபாநாயகர் கார்த்திகேயன்-னு பல பேர்) இருந்ததாலும் அந்தப் பெயருக்கு ஒரு ஹீரோ இமேஜ் உண்டு.
அந்த இமேஜ் உடையாம காப்பாத்த இந்தத் தலைமுறையில சூர்யா தம்பி "கார்த்தி"யும் வந்துட்டாப்ல. பை தி வே, இது எல்லாத்தையும் தேடி ஒரு கலெக்ஷனா "கார்த்திக் Karthik கார்த்திக்" னு ஒரு ஆல்பம் போட்டு வச்சிருக்கேன் ஃபேஸ்புக்ல. இதோ அந்த லிங்க்.
ஸ்கூல்ல கார்த்திகேயன் - ற பெயர்ல நிறைய பேர் இருந்ததால ஆள் மாத்தி கூப்பிடுறது, அவனுக்கு பதில் இவன் அடி வாங்கறது, நோட்டு மாத்தி வைக்குறது, அவனைத்திட்றேன்னு இவனைத் திட்றது, நானில்ல அவன்னு மாட்டி விடுறது, காம்படிஷன்ல ஆள் மாத்தி ஸ்டேஜ் ஏத்தி விடுறது, குழப்பம் தவிர்க்க இனிஷியல் எக்ஸ்ட்ரா சேர்க்குறது ஒரே களேபரமா இருக்கும்.
அதுவும் பத்தாப்புல மூணு கார்த்திகேயன்கள். நாங்க மூணு பேரும் தான் முதல் மூணு ரேங்க்கு. (முதல் ரேங்க் நானு, பை தி வே) ரேங்க் கார்டு குடுக்கும் போது செம்ம சீனா இருக்கும்.
ஃபர்ஸ்ட் ரேங்க் - கார்த்திகேயன்
செகண்ட் ரேங்க் - கார்த்திகேயன்
தேர்ட் ரேங்க் - கார்த்திகேயன் - னு கிளாஸ் டீச்சர் சொல்றதை வெளியே இருந்து யாராவது கேட்டா படங்கள்ல "மாஸ்டர் ஸ்ரீதர், பேபி ஷாமிலி" லாம் வரிசையா வந்து கப் வாங்குற மாதிரி ஒரே பையன் வாங்குறான்னு நினைச்சிருப்பாங்க.
கல்லூரியிலயும் மூணு நாலு பேர். குழப்பம் தவிர்க்க குள்ளகார்த்தி, வளத்தி கார்த்தி, வெள்ளையன்-னு ஆளுக்குத் தகுந்தாப்ல பேரு வச்சித் தான் கூப்பிடுவாங்க. ஆனா பள்ளி, கல்லூரி காலம் முடிஞ்சு இந்தக் குழப்பங்கள் குறைஞ்சு போச்சு. கடைசியா எனக்குத் தெரிஞ்சு ஒரே ஒரு நிறுவனத்துல இன்னோரு கார்த்திக் இருந்தாப்ல. ஆனா குழப்பம் ஏதும் வரல.
இப்போலாம் அடிக்கடி ஆள் மாத்தி கால் வருது. அவங்க பாட்டுக்கு பேசுவாங்க. இடை வெட்டி, நீங்க எந்த கார்த்திகேயன் கிட்ட பேசணும்னு கேட்டு, அவங்க சங்கடமா சிரிச்சு, அப்புறம் சந்தோஷமா பேசி........... யப்பா இதையெல்லாம் அனுபவிச்சி எத்தனை நாளாச்சு? ஒரே ஜாலியா இருக்கு.
உங்க பெயரிலேயே இன்னோருத்தர் இருந்து அந்தக் குழப்பங்களை நீங்களும் அனுபவிச்சிருக்கீங்களா? கமெண்ட்ல சொல்லுங்க.

ஞாயிறு, 18 அக்டோபர், 2020

ஃபாரின்ல இருந்துகிட்டு

நம்ம (கல்லூரி) நட்பு ஒருத்தர் ஃபாரின்ல இருந்துகிட்டு இங்கே நமக்கு அட்வைஸூரார். அமேசான்ல வாங்காதே, ப்ளிப்கார்ட்ல வாங்காதே, நம்ம ஊரு வியாபாரி பாதிக்கப்படுறான்னு. (அமேசான்லயும், ஃப்ளிப்கார்ட்லயும் வியாபாரம் செய்யறவன் எல்லாம் இந்தியாக்காரன், நம்ம ஊருக்காரன் தான், பக்கத்து வீட்டுக்காரர் கூட அமேசான் ல seller. அது தனி விவாதம். அப்பாலிக்கா பேசுவோம்)

நான் "உனக்காக இந்தியா எவ்வளவோ மறைமுகமா செலவு பண்ணியிருக்கு, நீ மட்டும் ஏன் ஃபாரின் போனே? உன் அறிவு இந்தியாவுக்கு கிடைச்சிருந்தா இந்தியா வல்லரசாகியிருக்குமே" அப்படின்னும்
வெளிநாட்ல வேலை பார்த்துகிட்டு, வெளிநாட்ல சம்பளம் வாங்கிகிட்டு, வெளிநாட்ல செலவு பண்ணிகிட்டு, வெளிநாட்டு சூப்பர் மார்க்கெட்ல பொருள் வாங்கி கிட்டு, எங்களை "வெளிநாட்டு வெப்சைட்ல" வாங்காதேன்னு நீ சொல்லாதே நண்பா, அப்படின்னும்
திருப்பிக் கேள்வி கேட்டா "உனுக்கு எகானமி தெரியுமா? அறிவை வளத்துக்கோ, நான் நாலு விஷயம் தெரிஞ்சதுனால தான் பேசுறேன்" ன்னு திட்றார்.
ஒண்ணும் தெரியலைன்னாலும் இந்தியாவுல இருந்துகிட்டு, இந்தியாவுக்குத் தான் டேக்ஸ் கட்றோம் நண்பா. "அங்க" இருந்துகிட்டு "இங்க" நாங்க என்ன பண்ணனும்னு நீ சொல்லாத.
.
17 அக் 2018 அன்று ஃபேஸ்புக்கில் எழுதியது.

புது சகவாசம்

இரண்டு நாட்களாக அதர்வன் பள்ளிக்குப் போக ஒரே அழுகை. நடுவில் சில வாரங்கள் வெறும் சிணுங்கலோடு நிறுத்தியிருந்தவன், மீண்டும் அழுதுகொண்டே போகத் துவங்கியிருக்கிறான். சிலமுறை நெடும் விடுமுறைகள் எடுத்ததாலோ, அமைந்ததாலோ இருக்கும் என்று நினைத்துக் கொண்டோம். 

ஆனால், இன்று கவனித்ததில் விஜயதஸமிக்குப் பிறகு (பல) பள்ளிகளில் குழந்தைகள் கூட்டம் அதிகமாகியுள்ளது. முக்கியமாக ப்ரீ கே.ஜி, எல்.கே.ஜி க்களில். (அவ்வளவு ஏன்? எங்கள் வீட்டிற்குப் பின்னால் புதிய பள்ளியே ஒன்று முளைத்துள்ளது) முன்பு இவன் தான் இருப்பதிலேயே குட்டியாய், சிவில் டிரஸ் அணிந்தபடி சென்று கொண்டு இருந்தான். மற்றவர்கள் எல்லாம் யூனிஃபார்ம். இப்போது இவன் வகுப்பில் இவனை விடக் குட்டி குட்டியாய் மூன்று பேர் புதிதாய். விடாமல் அழுதபடியே.. 

சரிதான். புது சகவாசம்..

18 அக் 2016 அன்று ஃபேஸ்புக்கில் எழுதியது. 

இல்லுமினாட்டி சதி ப்ரோ.

தீபாவளிக்கு பட்டாசு வெடிக்காதீங்க ப்ரோ. அதனால எவ்ளோ கார்பன் எரிகிறது தெரியுமா ப்ரோ. 

கிறிஸ்துமஸூக்கு மெழுகுவர்த்தி ஏற்றாதீர்கள் ப்ரோ. அதனால் எவ்வளவு ஆக்ஸிஜன் கரைகிறது தெரியுமா ப்ரோ? ரம்ஜானுக்கு பிரியாணி சாப்பிடாதீர்கள் ப்ரோ. அதனால் எத்தனை இலட்சம் உயிரினங்கள் கொல்லப்படுகின்றன ப்ரோ. 

பண்டிகைக்கு லுங்கி கட்டாதீர்கள் ப்ரோ. ஒரு லுங்கி தயாரிக்க 5500 லிட்டர் தண்ணீர் செலவாகிறது ப்ரோ. ஆன்லைனில் பொருள் வாங்காதீர்கள் ப்ரோ. தடுப்பூசி போடாதீங்க ப்ரோ. ஆஸ்பத்திரியில் ப்ரசவம் பாக்காதீங்க ப்ரோ. இல்லுமினாட்டி சதி ப்ரோ. 

ப்ரோ. ப்ரோ. ப்ரோ. ப்ரோ. ப்ரோ.

18 அக் 2019 அன்று ஃபேஸ்புக்கில் எழுதியது. 

திங்கள், 12 அக்டோபர், 2020

முதல் தீபாவளி.ஜூனியருக்கு நன்றாக விபரம் தெரிந்து இது முதல் தீபாவளி. கடந்த தீபாவளிகளுக்கு குழந்தையாய் இருந்தவன் இப்போது எல்.கே.ஜி போன்ற பெரிய படிப்பெல்லாம் படிப்பதால் நன்றாக விபரமாகி இருக்கிறான்.

அவன் பொதுவாக எதையும் "இது வேண்டும், அது வேண்டும்" என்று கேட்கும் ஆள் அல்லன். ஆனால் சமீபமாக அதையெல்லாம் ஆரம்பித்திருக்கிறான். அவன் கேட்ட முதல் பொருள் "பிளாக் போர்டு". பத்து நாளாக தினமும் என்னைப் பார்த்ததும் "போர்டு வாங்கிக்குடு நாய்னா, போர்டு வாங்கிக்குடு நாய்னா" என்று ராகம். சர்த்தான் களுத என்று வாங்கித்தந்ததும் அதை நடு ஹாலில் மாட்டி வைத்துக் கொண்டு ஏ, பி, சி, டி எளுதுறேன். படம் வரையுறேன் என்று நடத்தி இப்போது "சாப்பீஸ் வாங்கிக் கொடு" என்று ஆரம்பித்திருக்கிறான்.
போர்டு கிடைத்த மறுநாள் "சைக்கிள் வேணும்" அதுவும் "எல்லோ சைக்கிள்". நான் "வெயிட் பண்ணு. ஆப்பி பர்த்டேவுக்கு வாங்கித் தரேன்" என்றிருக்கிறேன். தங்கமணியிடம் போய் "என் ஆப்பி பத்டே எப்போ வரும்?" என்று கேட்டுக் கொண்டிருக்கிறான்.
மூன்றாவதாக இப்போது.............. சமீபத்தில் அவன் அத்தை வீட்டில் பேசும்போது கேட்டானோ அல்லது பள்ளியில் யாராவது சொன்னார்களோ என்று தெரியவில்லை. ஒரு வாரமாக "எனக்கு புது திரஸ் எத்து தா. வேட்டி சத்தை தான் வேணும்" என்று ஒரே ராவடி. தினமும் ஸ்கூலில் இருந்து வந்ததும் குறைந்தது 4 முறை "இன்னிக்கு வேட்டி சத்தை எடுக்க போலாமா நாய்னா" தான்.
அடுத்த நான்கைந்து நாள் நான் கொஞ்சம் பிஸி என்றதும் இன்றைக்கே போகலாம் என்றான். எங்க தலயோட (ஆ பெஸ்டு, பெஸ்டு, பெஸ்டு, பெஸ்டு), சரவணா ஸ்டோர்ஸூக்கு கூட்டிச் சென்றேன். நடுவுல தங்கமணி
Lata Chettiar
"நல்ல குவாலிட்டியா எடுக்கணும். சரவணாவுல பாத்துட்டு வேற எங்கயாவது எடுக்கலாம்" என்றார். "ஒரு வெங்காயமும் வேணாம். வேட்டி சட்டையை ஒரு வருசத்துல எத்தனை தடவை நீங்க போடுவீங்கன்னு எனக்குத் தெரியும். நாலஞ்சு தடவை போடுறதுக்குள்ள அது சின்னதாயிடும், அவனும் பெருசாயிடுவான், மூக்குலயே குத்திடுவேன். ஒழுங்கா இங்கயே எடு" - இது நான்..
முதல் முறை விபரம் தெரிந்து தனக்காக (மட்டும்) ஷாப்பிங் சென்றதும் அவனுக்கு ஏகக் குஷி. தீபாவளிக்கூட்டத்தைப் பார்த்தும் கள்ளு குடித்த குரங்கு போல ஆடத் துவங்கினான். உள்ளே நுழைகையில் பர்ப்பிள் கலர் சட்டை என ஆரம்பித்தவன், முதல் மாடி கடக்கையில் பச்சைக்கு மாறி, இரண்டாவது மாடியில் ஆரஞ்சை விரும்பி, மூன்றாவது மாடியில் நீலத்தில் நிலைகொண்டான். ஆனால் வேட்டி சட்டை தான் வேணும் என்பதில் ஸ்டிராங். சட்டைகளை டிரையல் பார்த்ததில் கடைசியாக எடுத்தது இது - பிங்க் - நம்ம நக்கி மிட்டாய் கலர்.
("பெல்ட்டு வாங்கிக் குடு" - இடுப்பில் நிற்கவில்லை, "துப்பாக்கி?" "ஷக்தியை" அழுத்தத் தெம்பில்லை) சரி விடு என அடுத்தபடியாக வாத்தர் கலர் வித் பிரச், கலர் க்ளே மினி, ஒரு குட்டி போஸ்டர் கலர் என்று அடித்து ஆடினான்.......... எல்லாம் முடித்து குதித்துக் கொண்டே லிஃப்டில் வந்த அவனைப் பார்த்த ஒரு ஃபேமிலி "என்ன, சார் கேட்டதெல்லாம் வாங்கிட்டாரு போல, ஃபுல் குஷி மூட்ல இருக்காரு" என ஏத்திவிட்டதில் ஒரு பிரம்மாஸ்திரம் எய்தான் "நாய்னா, பீசா வேணும்".
ஆச்சு அதுவும்.
தூங்கிட்ருக்கு களுத தூக்கத்துல சிரிச்சிகிட்டே.

(12 அக்டோபர் 2017 அன்று ஃபேஸ்புக்கில் எழுதியது)ஞாயிறு, 11 அக்டோபர், 2020

சிக்ஸ் டேஸ், செவன் நைட்ஸ்


ஹாரிசன் ஃபோர்ட் நடித்து "சிக்ஸ் டேஸ், செவன் நைட்ஸ்" என்றொரு படம். எங்க ஊர் சங்கீத் தியேட்டரில் வெளியானது. 97 அ 98 ல், நான் டென்த் படிக்கும் சமயத்தில் வந்ததென ஞாபகம். அது ஒரு காலம். வார்டன்னா அடிப்போம் என்பது போல சங்கீத் - ல படம் போட்டா போவேன் என்று திரிந்த காலம். அவ்ளோ தான். என்ன படம்? யார் நடிகர்? ஒரு வெங்காயமும் வேண்டாம். தரை டிக்கெட் 3 ரூபாய். கொஞ்சம் வசதி இருந்தா அடுத்தது 10 ரூபாய். வாரம் ஒரு படம் பார்த்தே ஆக வேண்டும். (அப்போது அதுவே டூ மச், நைனா செம திட்டு திட்டுவார்)

.
ஐ.எம்.டி.பி - யில் வெறும் 5.7 பாயிண்ட்ஸ் வாங்கிய படம் அது. நாயகி ஒரு நனைந்த வெள்ளை கவுன் போட்டபடி கை நீட்டி (யாரையோ) அழைப்பது போன்ற போஸ்டர் பார்த்து, ஹி, ஹி, நல்லா இருக்கும் போல என்று போன படம். இப்போது யோசித்தால் "இதுல என்ன இருக்குன்னு அப்படிப் பார்த்தோம்" என்று தோன்றுகிறது. வேறு ஏதோ ஒரு படத்தில் சில நண்பர்கள் சேர்ந்து காரில் ஏதோ விவாதித்தபடி செல்லும் போது ஹாரிசன் ஃபோர்ட் பற்றிப் பேச்சு வரும். இன்டியானா ஜோன்ஸ், ஸ்டார் வார்ஸ் சீரிஸ்களைப் பற்றிப் பேசிய படி செல்வார்கள். அவர்களில் ஒருவன் "He has never done a bad film" என்பான். அந்த ஷாட்டின் போது, கேமரா ஹைவேயில் கார் வேகமாகச் செல்வதைக் காண்பித்து ஏரியல் வியூவில் தூரம் செல்வதைக் காட்டி டயலாக் வாய்ஸ் ஓவரில் "சிக்ஸ் டேஸ், செவன் நைட்ஸ்" படத்தின் விளம்பர போர்டைக் காண்பிப்பார்கள். அந்தக் குறியீடுக்கு இப்போதான் அர்த்தம் புரிகிறது.
.
அது போல் கால ஓட்டத்தில் சில மொக்கைகளை "ஆஹா"வென்று வாய் பிளந்து பார்த்திருப்போம். பல வருடங்கள் கழித்துத்தான் என்னடா இருந்தது அதுல என்று தோன்றும். இது சினிமாவுக்கு மட்டுமல்ல. சில ஆசாமிகளுக்கும் பொருந்தும்.
.

(12 அக்டோபர் 2015 அன்று ஃபேஸ்புக்கில் எழுதியது)

நமக்கு ஏன் பொல்லாப்பு.

என் வங்கியினர், தங்கள் நிறுவன மொபைல் ஆப் - ஐ பிரமோட் செய்யும் பொருட்டு, வங்கிக் கிளைக்கு பணம் கட்டச் செல்பவர்களை மொபைல் ஆப் மூலம் பணம் கட்டுவதைப் பதிவு செய்யச் சொல்கிறார்கள். அதாவது, பேனா மூலம் சலான் எழுதாமல், நம் பெயர், அக்கவுண்ட் எண், மொபைல் எண், பண டினாமினேஷன் விபரம், எச்சச்ச கச்சச்ச விபரங்களை அவ் வங்கியின் மொபைல் ஆப் (யார் மொபைலில் இருந்து வேண்டுமானாலும்) இல் பதிந்து ஓக்கே கொடுத்தால் அது ஆன்லைனில் வங்கியைச் சேரும். உடனடியாக சலானை அவர்கள் பிரிண்ட் அவுட் எடுத்து நம் கையில் தருவார்கள். அதனை வழக்கம் போல கவுண்டரில் கொடுத்து பணத்தைக் கட்டிக் கொள்ளலாமாம். நல்ல ஐடியாதான். மொபைல் ஆப் - பில் ஒரு என்ட்ரியும் ஆச்சு, கொஞ்சூண்டு நேர மிச்சமும் ஆச்சு.

.
அந்தப் பிரிண்ட் அவுட் டிசைன் ஒரிஜினல் சலான் போலவே, அதன் சைஸிலேயே இருக்கிறது. ஏ4 பேப்பரை நெடுக்காக இரண்டாகக் கிழித்தால் என்ன சைஸ் வரும். அஃதே. அதனை ஒரு ஏ4 பேப்பரில் இரண்டு எடுக்கலாம், ஆனால் பிரிண்டை ஏ 4 ன் நட்ட நடுவில் எடுத்து முழு பேப்பரையும் வேஸ்டாக்கிக் கொண்டிருந்தார்கள். ஒரு வாரமாக எத்தனை பண்டல்களை இப்படி எடுத்தார்களோ?
.
நான் என் பிரிண்ட் அவுட்டைப் பார்த்து விட்டு அஜிஸ்டெண்ட் டேமேஜரிடம் போய் "ஏங்க, இதை ஏன் நடுவுல எடுத்து வேஸ்ட் பண்றீங்க? ஏ4 ஐ இரண்டாக் கிழிச்சு, பிரிண்டருக்குள் பேப்பர் வைக்கும் ட்ரேவில் நடுவில் வைத்து ட்ரேவின் ஓரங்களை உள் நோக்கித் தள்ளினீங்கன்னா நடுவுல டைட்டா உக்காரும். இப்போ பிரிண்ட் போட்டா, கரெக்டா செலான் சைஸ்ல வரும்" என்றேன். "அதெப்டிங்க வரும்?" என்று அவர் முதலில் ஒத்துக்கொள்ளவில்லை. கொஞ்சம் வற்புறுத்தி "ஒண்ணே ஒண்ணு எடுங்க. வேஸ்டானா நான் பொறுப்பு" என்றேன். எனக்கடுத்து பணம் கட்ட வந்த ஒருவனின் செலானை அது போல எடுத்துப் பார்த்தோம். சரியாக வந்தது. எல்லோருக்கும் ஒரே குஷி. "சார், சரியா வருது சார்" என்றார்கள். அட ஆபீஸருகளா... சிம்பிள் ஐடியா தான். ஆனால் என் பெருமை பேச இங்கே இதைப் பதியவில்லை.
.
"அடேய் மல மாடு, இந்த சாதாரண ஈன வெங்காய ஐடியா கூட உனக்கும் உன் டீமுல இருக்குற 4 பேருக்கும் தோணலை. கேஷ் கவுண்டர்ல ஸ்லிப் கிழிச்சு சேர்த்து வைக்கிற புள்ளைக்கும் தோணலை. உள்ள உக்காந்து பல்லு குத்துற உன் டேமேஜருக்கும் தோணலை. நான் மேனேஜராவும், நீ மட்டும் மவனே என் டீமுல கண்டி இருந்திருந்தியானா, ரிவ்யூ-ல உன்னை கிழிச்சு எடுத்திருப்பேன்" என்று நாக்கு வரை வந்து விட்டது. ஆனால் சொல்லவில்லை.
.
ஏன்னா
.
ஏன்னா
.
ஏன்னா
.
இந்த உலகத்தைப் பொறுத்தவரை... இதைச் சொன்னா நான் கெட்டவன். சொல்லாம அமைதியாப் போனா நல்லவன். நல்லவனாவே இருந்துட்டுப் போவோமே...
.
(12 அக்டோபர் 2015 அன்று ஃபேஸ்புக்கில் எழுதியது)

புதன், 7 அக்டோபர், 2020

உடனடி ரியாக்ஷன் வேண்டாமே.

 தெரிந்த ஆசிரியை ஒருவர், கொஞ்சம் வயதில் மூத்தவர். இரு நாட்கள் முன் அவரை சந்திக்கவிருந்த ப்ளான் சற்றுப் பிசகியது. காரணம் இதுதான். அன்று காலை நடந்த சம்பவம் இது. அவரது தம்பி (கசின்முறை) யின் மனைவி ஒரு சாலை விபத்தில் திடீரென ஆன் தி ஸ்பாட் இறந்துவிட்டார். செய்தியைக் கேள்விப்பட்ட அந்த கணவரும் உடனடியாக மாரடைப்பால் மரணம். ஒரே நாளில் ஒரு குடும்பத்தில் இரு மரணங்கள்.

அவர்கள் இருவரும் பரஸ்பரம் எவ்வளவு காதல் கொண்டிருந்திருப்பார்கள், அவர்களுக்குள் எவ்வளவு அந்நியோன்யம் இருந்திருக்க வேண்டும் என்று ஒருபுறம் பலர் சொன்னாலும், மற்றொருபுறம் இது நிகழாமல் இருந்திருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும் என்று தோன்றியது. கொஞ்சம் emotional control இருந்திருக்கலாமோ என்றும் எண்ணினேன்.

சுகம் துக்கம் எதுவாயிருந்தாலும் சடாரென உடனடியாக ரியாக்ட் செய்யாமல் கொஞ்சம் நிதானித்திருந்தால் ஒரு உயிரேனும் மிஞ்சியிருக்கும். அவருக்கு இரண்டு பிள்ளைகள். ஒருவருக்குத் திருமணம் ஆகிவிட்டாலும், இன்னொரு பையன் கல்லூரியில் படிக்கிறான். பாவம்.