ஞாயிறு, 25 அக்டோபர், 2020

கார்த்திக் Karthik கார்த்திக்

 ரொம்ப நாள், ரொம்ப ஆண்டு காலங்கள் கழிச்சு "எந்த கார்த்திக்?" வெளாட்டு ஆரம்பிச்சிருக்கு எங்க கம்பெனியில. என்னையும் சேர்த்து இப்போ நாலு கார்த்திக் (அ) கார்த்திகேயன்கள்.

இந்த குழப்பக் காமெடியெல்லாம் பெரும்பாலும் பள்ளிக்கூடம், கல்லூரி படிக்கிற காலத்தில் நடந்தது. அந்த வயசுக்கு கடுப்பா இருந்தாலும், மொத்தமா, செம்ம ஜாலியா இருக்கும். ஸ்கூல்ல ஒவ்வொரு க்ளாஸூக்கும் குறைஞ்சது ரெண்டு கார்த்திக் (அ) கார்த்திகேயன், சில சமயம் மூணு பேரு இருப்பான். சில சமயம் ஒரே இனிஷியல் வேற. அட்டென்டென்ஸ் எடுக்கும் போதே குழப்பம் ஆரம்பிக்கும். ஏன்னா கார்த்திக், கார்த்திகேயன் - கிறது அப்போ பொதுப் பேரு.
அதுவும் அந்த "அலைகள் ஓய்வதில்லை" வந்த புதுசுல பிறந்த குழந்தைகள் எல்லாருக்கும் கார்த்திக் - ராதான்னு பெயர் வைப்பாங்கன்னு அம்மா அப்பா சொல்லிக் கேட்டிருக்கேன். நமக்கு அப்படி பெயர் வைச்சாங்களான்னு தெரியாது. அது முருகன் சாமி பேருடான்னு "கார்த்திகேயன்" னு லெங்க்த்தா வச்சிட்டாங்க. ஆனா பலரும் கூப்பிடுறது "கார்த்தி" அ "கார்த்திக்" தான்.
நவரச நாயகன் கார்த்திக் ஒரு பெரிய ரவுண்டு வந்ததால "கார்த்திக்" ன்ற பேருக்கு ஒரு மவுசு எப்பயுமே இருந்தது. கூடவே சினிமாக்கள்ல நிறைய்ய்ய்ய்ய்ய்ய ஹீரோ கதாபாத்திரங்களுக்கு கார்த்திக் - ன்னு பேரு வைக்கிறது ஒரு பெரிய ட்ரெண்டாவே இருந்தது. இது போக கார்த்திக்-ன்ற பேர்ல ஒவ்வொரு காலகட்டத்திலும் நிறைய வி.ஐ.பிக்கள், பிரபலங்கள் (நரேன் கார்த்திகேயன், சிங்கர் கார்த்திக், கார்த்திக் சுப்பராஜ், கார்த்திக் ராஜா, அமேரிக்க மாப்பிள்ளை கார்த்திக், சிவகார்த்திகேயன், கார்த்தி சிதம்பரம், ஐ.பி.எஸ் கார்த்திகேயன், கேரள சபாநாயகர் கார்த்திகேயன்-னு பல பேர்) இருந்ததாலும் அந்தப் பெயருக்கு ஒரு ஹீரோ இமேஜ் உண்டு.
அந்த இமேஜ் உடையாம காப்பாத்த இந்தத் தலைமுறையில சூர்யா தம்பி "கார்த்தி"யும் வந்துட்டாப்ல. பை தி வே, இது எல்லாத்தையும் தேடி ஒரு கலெக்ஷனா "கார்த்திக் Karthik கார்த்திக்" னு ஒரு ஆல்பம் போட்டு வச்சிருக்கேன் ஃபேஸ்புக்ல. இதோ அந்த லிங்க்.
ஸ்கூல்ல கார்த்திகேயன் - ற பெயர்ல நிறைய பேர் இருந்ததால ஆள் மாத்தி கூப்பிடுறது, அவனுக்கு பதில் இவன் அடி வாங்கறது, நோட்டு மாத்தி வைக்குறது, அவனைத்திட்றேன்னு இவனைத் திட்றது, நானில்ல அவன்னு மாட்டி விடுறது, காம்படிஷன்ல ஆள் மாத்தி ஸ்டேஜ் ஏத்தி விடுறது, குழப்பம் தவிர்க்க இனிஷியல் எக்ஸ்ட்ரா சேர்க்குறது ஒரே களேபரமா இருக்கும்.
அதுவும் பத்தாப்புல மூணு கார்த்திகேயன்கள். நாங்க மூணு பேரும் தான் முதல் மூணு ரேங்க்கு. (முதல் ரேங்க் நானு, பை தி வே) ரேங்க் கார்டு குடுக்கும் போது செம்ம சீனா இருக்கும்.
ஃபர்ஸ்ட் ரேங்க் - கார்த்திகேயன்
செகண்ட் ரேங்க் - கார்த்திகேயன்
தேர்ட் ரேங்க் - கார்த்திகேயன் - னு கிளாஸ் டீச்சர் சொல்றதை வெளியே இருந்து யாராவது கேட்டா படங்கள்ல "மாஸ்டர் ஸ்ரீதர், பேபி ஷாமிலி" லாம் வரிசையா வந்து கப் வாங்குற மாதிரி ஒரே பையன் வாங்குறான்னு நினைச்சிருப்பாங்க.
கல்லூரியிலயும் மூணு நாலு பேர். குழப்பம் தவிர்க்க குள்ளகார்த்தி, வளத்தி கார்த்தி, வெள்ளையன்-னு ஆளுக்குத் தகுந்தாப்ல பேரு வச்சித் தான் கூப்பிடுவாங்க. ஆனா பள்ளி, கல்லூரி காலம் முடிஞ்சு இந்தக் குழப்பங்கள் குறைஞ்சு போச்சு. கடைசியா எனக்குத் தெரிஞ்சு ஒரே ஒரு நிறுவனத்துல இன்னோரு கார்த்திக் இருந்தாப்ல. ஆனா குழப்பம் ஏதும் வரல.
இப்போலாம் அடிக்கடி ஆள் மாத்தி கால் வருது. அவங்க பாட்டுக்கு பேசுவாங்க. இடை வெட்டி, நீங்க எந்த கார்த்திகேயன் கிட்ட பேசணும்னு கேட்டு, அவங்க சங்கடமா சிரிச்சு, அப்புறம் சந்தோஷமா பேசி........... யப்பா இதையெல்லாம் அனுபவிச்சி எத்தனை நாளாச்சு? ஒரே ஜாலியா இருக்கு.
உங்க பெயரிலேயே இன்னோருத்தர் இருந்து அந்தக் குழப்பங்களை நீங்களும் அனுபவிச்சிருக்கீங்களா? கமெண்ட்ல சொல்லுங்க.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக