சனி, 8 ஆகஸ்ட், 2009

கொல்கத்தா ரசகுல்லா

வழக்கம் போல இதுவும் யூத்ஃபுல் விகடனில் வெளியாகித் தொலைத்து விட்டது.


ஆனால் அனுப்பி வைத்து மூன்று வாரங்களாக வெளியாகாததால் அதற்கு மெயில் அனுப்பி, அவர்கள் பதில் அனுப்பி சில பல எடிட்டிங்குகளுடன் தான் வெளியானது.


அதை அங்கே படிக்க இங்க கிளிக்குங்க....

http://youthful.vikatan.com/youth/yeskhastory05062009.asp


உங்களுக்காக, எடிட் செய்யப்படாத பகுதிகளுடன் முழுக்கட்டுரையும் கீழே....

கொல்கத்தா ரசகுல்லா (ரோஷகொல்லா)

டைட்டிலப் பாத்தவுடனே எச்சி ஊறுதா? நாக்க சப்புக்கொட்டிகிட்டு க்ளிக் பண்ணீங்களா? அப்டின்னா தயவு செஞ்சி கழண்டுக்கோங்க. தீனிப்பண்டார (சாரி!!) நண்பர்களுக்கான கட்டுரை இல்ல இது. வேற மாதிரி கில்மாவா தோணுதா? குட். வெரி குட். நீங்கதான் சரியான ஆள் இதப்படிக்க. (நண்பா! சோனாகாச்சி லெவலுக்கெல்லாம் யோசிக்காதீங்கப்பா, இது சும்மா)

எனக்கொரு கேர்ள் பிரண்ட் வேணுமடா டைப்பு கட்டுரை. சந்தோஷத்துல பெரிய சந்தோஷமே அடுத்தவன் ஃபிகர ஆட்டையப் போடுறதுல தான் இருக்குன்னு ஒரு குரல் (குறள் இல்லீங்க) இருக்கு. ஆள் இருக்கிறவனுக்கு அது மட்டும்தான் பிகர். ஆனா இல்லாதவனுக்கு, பாக்குறதெல்லாம் பிகர். நமக்குன்னு சொந்தமா ஒரு பிகர் இருந்தா அத சமாளிக்கவே தாவு தீந்துரும். அதனால சில பேருக்கு ஒரு கொள்கை இருக்கு. அது என்னன்னா "அடுத்தவன் பிகர கரெக்ட் பண்றது".

இதுல என்னன்னா... பிக் அப் ஆனா ஓ.கே. இல்லன்னா பிரண்டு லவ்வுக்கு எல்ப் பண்றேன்னு சொல்லிட்டு அந்த பிகர்ட்ட கடலையப்போடுறது, நண்பன் பிஸியாயிருக்கும் போது (காதல் கொண்டேன் கிளைமாக்ஸ் தனுஷ் மாதிரி) அந்த பிகர கூட்டிட்டு ஊர் சுத்தி டைம் பாஸ் பண்றது. கடலைக்கு கடலை. ஸேஃபுக்கு ஸேஃபுங்கறது அவங்க பார்முலா.

நமக்கு அதுல நம்பிக்கை இல்லைங்கறது மட்டுமில்ல. நம்ம நண்பர்கள் எவனுக்கும் பிகர் இல்லைங்கறது தான் நிஜ நிலைமை. (இருந்தாலும் சொல்ல மாட்டாங்க, அது வேற விஷயம்) ஆனா எனக்கும் அப்பிடி தானா ஒரு சான்ஸ் வந்துதுங்க. அதுவும் லோக்கல் பிகர் இல்லிங்கோவ். கொல்கத்தா பிகர். அதபத்திதான் இப்போ சொல்லப்போறேன். கொஞ்சம் கொசுவத்தி சுத்தி நாலு வருஷம் முன்னாடி வந்த ஜே.ஜே படத்த ஞாபகப்படுத்திக்கோங்க... இப்போ போலாமா..? உடு ஜூட்....

ஒரு நாளு அட்மின்ல கூப்டாங்க. வழக்கம் போல... ஒரு மீட்டிங் இருக்கு. ஆனா இங்கல்ல. கல்கத்தால. . . இல்லல்ல. . . கொல்கத்தால. யார்னா ஒருத்தர் கோ ஆர்டினேசனுக்குப் போகணும். நீ போறியா? உனக்கு இந்தி தெரியுமான்னு கேட்டாரு வாசு சாரு. "ஓஓஓஓ"ன்னு சொன்னேன். நாம யாரு? (அந்நியன் மாதிரி) இந்தில உள்ள பூந்து லெஃப்ட்டு, ரைட்டு, ஸ்டிரெயிட்டுனு போய்ட்டு, யூ டர்ன் அடிச்சுட்டு வந்து நிப்பமே. (யப்பா, வழி தெரியாமதாம்ப்பா, ரொம்ப பெருமையா நினைக்காதீங்க) நமக்கு ரஜினி வழிதான். எதைக்கேட்டாலும் "எஸ்ஸ்..., எஸ்ஸ்..."னு தலையை ஆட்ட வேண்டியது தான்னு நெனச்சிகிட்டு ஓ.கே சொல்லிட்டேன்.

ஆனா மேட்டர் என்னன்னா கொல்கத்தால இந்தி கெடயாது. பெங்காலிதான். எதக்கேட்டாலும் பெக்கே பெக்கேனு முழிக்க வேண்டியதுதான். சரி. இருந்தாலும் சமாளிப்போம்னு (எவ்வளவோ பண்றோம், இதப்பண்ண மாட்டமா?) ஏற்பாடுகளப் பண்ணச்சொல்லிட்டேன். டிக்கெட் போட்டாச்சு.

இந்த மேட்டர் ஆபீஸூல பல பேருக்கு தெரிஞ்சு போச்சு. கொல்கத்தா போறியா? டாக்ஸி காரன்ட்ட ஏமாந்துடாத, கங்குலி ஊட்டப்போய்ப் பாரு. காளி காட் போய்ப்பாரு, மெட்ரோ டிரெய்ன்ல டிராவல் பண்ணு, மறக்காம ரசகுல்லா வாங்கி (அதுவும் கே.எஸ் பிராண்டு) சாப்புடு (எனக்கும் வாங்கிட்டு வா) ன்னு ஒரே அட்வைஸூ. வேற யாரு? எல்லாம் நம்ம நலம் விரும்பிகள் தான். (நாம தான் ஆபீஸ் புல்லா நலம் விரும்பிகள சேத்து வச்சுருக்கோமே) இதுல, சோனா காச்சி கூட போய் எட்டிப்பாத்துட்டு வா-ன்னாய்யா ஒருத்தன். அடப்பாவி. இது மட்டும் எங்கக்காளுக்கு (அதாவது கல்யாணமான என் தங்கச்சிக்கு) தெரிஞ்சுது... ரிவிட்டுதான். மச்சானும் சேந்துகிட்டு ஒதப்பாரு..

எல்லாரும் இப்பிடிப் பண்ணிணா, நம்ம நண்பர் முரளி (பெயர் மாற்றப்பட்டுள்ளது. ஹா. ஹா. ஹா.) வேற ஒண்ணு பண்ணான் ... ஆனா சும்மா சொல்லக்கூடாதுய்யா... ரொம்பப்பெரிய மனசு அவனுக்கு. அவனோட கொல்கத்தா கேர்ள் பிரண்ட்டோட நம்பரக்குடுத்தான். குடுத்து அவளப்போய் பாத்துட்டு வாய்யான்னான். அவ பேரு -அபியும் நானும்- ஜஸ்பீர் கெளர் (நலன் கருதி இவரது பெயரும் மாற்றப்பட்டுள்ளது).

நானு, இல்லடா பையா.. ஆபீஸ் வேலயே கழுத்தப்புடிக்கும், இதுல எங்க அவளப்போயி பாக்குறதுன்னு சொன்னேன். ஆனா அவன், பரவால்ல, எதுக்கும் வச்சுக்கோ, டயம் கெடச்சா போய்ப்பாருன்னான். சரின்னு வாங்கிக்கிட்டேன். அவன் அவளுக்கும் போன் நான் வர்றத பண்ணி சொல்லிட்டான். பாக்குறது கஷ்டம்னு நான் கண்டுக்கல. ஆனா இதுல யாருக்கு நல்ல நேரமோ யாருக்கு கெட்ட நேரமோ? மீட்டிங் நடந்த ஹோட்டலுக்கு பக்கத்துல தான் அவ வீடு. போனவுடனே போன் பண்ணிட்டமுல்ல. இந்த மாதிரி, இந்த மாதிரி, நான் முரளி பிரண்டு கார்த்தி. நான் இங்க வந்திருக்கேன்னு. . அவளும் நாம நேர்ல மீட் பண்ணுவோம்னு சொல்லிட்டா.

நாங்க மீட்டிங்குக்காக புக் பண்ணிருந்தது ஒரு செவன் ஸ்டார் ஹோட்டல்பா. நான் நம்ம ஊர் பளக்க தோஷத்துல ஒரு சாதா செப்பல போட்டுட்டு, டை கூட கட்டாம தத்தா புத்தான்னு அங்க போய்ட்டேன். உள்ள உடமாட்டேன்னுட்டான் செக்யூரிட்டி. அவன் சொல்றது எனக்குப்புரியல. நான் சொல்றது அவனுக்குப்புரியல. சரி. ஹோட்டல் பேன்க்வெட் மேனேஜருக்கு (பேரு பூஜாங்கோவ்..) போன் பண்ணா, நம்பர் எங்கேஜ்டு.

என்னடா எளவு இதுன்னு அவனோட ஆர்க்யூ பண்ணிட்டு இருக்கும்போதுதான் ஒரு பொண்ணு (கொல்கத்தாக்காரி) வந்தா. எங்க ரெண்டு பேரயும் பாத்துட்டு என்ன விஷயம் என்ன பிரச்சினைன்னு கேட்கப்போக நான் வழிஞ்சுகிட்டே, மீட்டிங்கு, செப்பலு, டையின்னு எல்லா விஷயத்தையும் அவகிட்ட உளற... அவ தலையிட்டு பிராப்ளம் இம்மீடியட்லி சால்வ்டு. ஆஹா. இவ நம்ம கூட ஒரு ஒன் அவர் இருந்தா ஹோட்டல்ல எல்லா டீட்டெய்லயும் ஈஸியா பேசி முடிச்சிடலாமேன்னு யோசிச்சேன். ஆனா அவ "சாரி மிஸ்டர். ஐ"ம் வெய்ட்டிங் ஃபார் மை பிரண்ட்" அப்டின்னுட்டா. சரி, என்ன பண்ண, விதியேன்னு உள்ள போனேன்.

உள்ள போகும்போதே போனு. யார்டா இது? இந்த ஊர்ல நமக்கு போன் பண்றாங்கன்னு எடுத்தா... அட நம்ம ஜஸ்பீரு. யம்மா எங்கம்மா இருக்கன்னு கேட்டா (இங்கதான் நாம ஒரு ட்விஸ்டு வக்கிறோம் - அங்கியாடா கொண்டு போய் வச்சீங்க ட்விஸ்ட?) "கார்த்திக், ஐயாம் வெயிட்டிங் ஃபார் யூ அட் _________ - னு நான் இருந்த செவன் ஸ்டார் ஹோட்டல் பேரச்சொன்னா. அடிப்பாவி நானும் அங்கதான இருக்கேன்னு சொன்னா... கடைசியில (அதாவது முதல்ல இருந்தே) கேட்ல நமக்கு எல்ப் பண்ண ஜான்ஸி ராணிதான் ஜஸ்பீருன்னு.

அப்புறம் அவளுக்கு ஒரு பெரிய தேங்ஸப்போட்டுட்டு ஊர் கதையெல்லாம் பேசி.. எனக்கு இருந்த கோவத்துல கொல்கத்தாவ திட்டு திட்டுன்னு திட்டிட்டேன். சரியான அழுக்கு புடிச்ச ஊரு, டிரான்ஸ்போர்ட் சரியில்ல, எல்லாம் குப்ப லாரின்னு வேற சொல்லிட்டேன். பொண்ணுங்களுக்குத்தான் ரோஷம் பொத்துகிட்டு வருமே. அவ கொல்கத்தாவ சப்போர்ட் பண்ண, நான் திட்ட, அவ பாராட்ட, நான் கடுப்பாக இப்படியே கொஞ்ச நேரம் போச்சு. அப்போ.. "நான் எங்க ஊர சுத்தி காட்றேன், எல்லா டிரான்ஸ்போர்ட்லயும் உன்ன டிராவல் பண்ண வைக்கிறேன், அப்போ உன் எண்ணத்த மாத்திக்குவியா"ன்னு கேட்டா. நான் உடனே சரின்னேன். (ஷூகர்கேன் சாப்பிட்டாலே நல்லாருக்கும். அது ஜூஸாவே கெடச்சா?)

ஹோட்டல்ல வேலைய முடிச்சுட்டு அவ கூட சேந்துகிட்டு ஜாலியா ஊர் சுத்த ஆரம்பிச்சாச்சு. மஞ்ச டாக்ஸி, கருப்பு (ஷேர்) ஆட்டோ, பச்சை ஆட்டோ, டிராம், மெட்ரோ டிரெயின், பஸ்ஸூ, வேனு, கை ரிக் ஷா உட்பட எல்லாத்துலயும் டிராவல் பண்ணினோம். கொல்கத்தாவோட மூலை முடுக்கெல்லாம் போனோம், காளி மாதா பொம்மை செய்யற இடம், விக்டோரியா மெமோரியல், கதீட்ரல் சர்ச், ஜஸ்பீர் படிச்ச காலேஜ், ஸ்கூல்னு ஒரு இடம் விடல.

திருவிழாவுல தொலைஞ்சி போய் திரும்பக்கிடைச்ச குழந்தை எப்படி இருக்கும்? அந்த மாதிரி வாயப்பொளந்துகிட்டு பே-ன்னு அவ பின்னாடியே போனேன். எதோ டிராவல் கைடு கணக்கா எல்லா இடத்தைப்பத்தியும் இன்ட்ரோ குடுத்துட்டே வந்தா (இங்கிலீஷூல தான் - காமன் லேங்குவேஜூல்ல)... மறக்காம ரசகுல்லா (ன்னு சொல்லக்கூடாதாம்,ரோஷகொல்லாவாம்) வும் வாங்கி சாப்பிட்டோம். ஃபுஜ்கா (நம்ம ஊர்ல பானி பூரி) சாப்பிடுறதுக்குன்னே எங்க ஊர்ல ஒரு ஸ்பெஷல் எடம் இருக்குன்னு சொல்லி கூட்டிட்டுப்போனா.

படுபாவி.. பானி பூரியா அது? மொளகான்னா மொளகா அப்டி ஒரு மொளகா,. அதத்தின்னதுல கண்ணுல தண்ணி தள்ளிப்போச்சி. நான் அழுததப்பாத்து விழுந்து விழுந்து சிரிக்கிறா. என்ன வச்சு காமெடி பண்ணிட்டாய்ங்க. அப்படியே சைடுல அமி தொமாகி பாலோ பாஷி - லாம் - அப்டின்னா "ஐ லவ் யூ" (அதெல்லாம் வெவரமா கேட்டுடுவோம்ல) டீடெய்லா கேட்டு வச்சிகிட்டேன். ஒரு ஃபுல் டே காலி.. ஆனா நைட்டு.. திரும்ப பத்திரமா ஹோட்டலுக்குப்போய்ட்டேன் (அவதான் வழி சொல்லிக்கொடுத்தா)

மறுநாள் எந்திரிச்சதுமே மொத போன் அவளுக்குதான். இன்னிக்கு எங்க போலாம்னு. இதுக்கு நடுவுல மீட்டிங் (என்னாச்சுன்னு கேக்குறீங்களா? அது நாசமாப்போகட்டுமே, நமக்கென்ன, நமக்கு அதுவா முக்கியம்?) அரேஞ்ச்மெண்ட்ஸ் வேற. அதுல ஒரு முக்கா நாளு போச்சி. அத ஒரு வழியா நல்ல படியா முடிச்சிட்டு சாயங்காலமா அவளுக்கு போன் பண்ணேன். நீ நேரா கிளம்பி ஒரு ஷேர் ஆட்டோ புடிச்சி ஃபூல் பகான் வந்துடுன்னா.. நான் ஹோட்டல விட்டு இறங்கி ஒரு நிமிஷம் கூட ஆகலைங்க.. ஆட்டோ புடிக்கறதுக்குள்ள பேரு மறந்து போச்சி. எங்க போகணும்னு எனக்கு சொல்லத்தெரில. அப்புறம் வேற வழியில்லாம தட்டுத்தடுமாறி பெங்காலி, இந்தி, இங்கிலீஷ், கொஞ்சம் தமிழுன்னு எல்லாத்தயும் கலந்து அவன்கிட்ட "ஃபூல்"னு ஆரம்பிக்கிற எடத்துக்கு கூட்டிட்டுப்போன்னு ஒருவழியா கன்வே பண்ணேன்.

அங்க போனோடனே ஆட்டோக்காரன் நக்கலா என்னப்பத்தி அவகிட்ட புட்டுப்புட்டு வச்சிட்டான். நான் அசடு வழிஞ்சுகிட்டே நின்னேன். ஆனா அவ சிரிச்சுகிட்டே (நான் காலி) "ஹேய்! ஐ லைக் யுவர் இன்னொசன்ஸ், யா" -னா. (என் விக்கெட் அவுட்டு) நானு அவகிட்ட, நான் நைட் டிரெயின்ல கிளம்புறேன். அதனால இப்பவே ஷாப்பிங் போகணும். எந்தங்கச்சிக்கு கொல்கத்தா ஸ்பெஷல் காட்டன் ஸாரி வாங்கணும்னேன், சரின்னு கூட்டிட்டுப்போனா. அங்க போய் (ஜஸ்பீருக்கு) புடிச்ச டிசைனா எடுக்கச்சொல்லி ஒண்ணுக்கு ரெண்டா வாங்கியாச்சு.

ஷாப்பிங் முடிஞ்சதும் எங்க? டின்னர்தான? ஒரு ரெஸ்டாரண்ட் போனோம். நல்ல இடமா பாத்து உக்காந்தாச்சு. கேண்டில் லைட் டின்னர். சூப்பரா இருந்துது. எல்லா வெரைட்டீஸையும் ஆர்டர் பண்ணின பிறகு, திடீர்னு லைட்டெல்லாம் ஆஃப் ஆச்சு. அவ தலைக்கு மேல மட்டும் ஒரே ஒரு லைட் எரியுது. ஏ.ஸியில பர்ஃப்யூம் மிக்ஸ் ஆச்சு, ஸ்பீக்கர்ல லைட் மியூஸிக் வழியுது. ரெஸ்டாரண்ட் மேனேஜர், அழகா ஒரு ஸாரிய மடக்கி வச்சு அதுமேல கேக்க வச்சு, டிசைனர் கேண்டில் ஏத்தி எடுத்துட்டு வந்து எங்க டேபிள்ல வச்சான். திடீர்னு "ஹேப்பி பர்த்டே"ன்னு பாட்டு. சாப்பிட்டுட்டு இருந்த எல்லாரும் எழுந்து கைதட்ட... ஒரு அஞ்சு வயசு குட்டிப்பாப்பா ரோஸ் எடுத்துட்டு வந்து ஜஸ்பீர்ட்ட குடுத்து "ஹேப்பி பர்த்டே ஆன்டி"-ன்னு சொன்னா

(என்ன முழிக்கிறீங்க? அவளுக்கு அன்னிக்கு பர்த்டே. அதத்தெரிஞ்சுகிட்டு நான் பண்ணின ஏற்பாடுதான் எல்லாம், ஏதோ நம்மளால முடிஞ்சது)

இப்போ அவ முரளிட்ட சரியா பேசுறதே கிடையாது. நம்ம கிட்டதான் எல்லாம். நானும் ரெண்டு கல்ச்சர ஏன் மிக்ஸ் பண்ணக்கூடாதுன்னு யோசிச்சுகிட்டு இருக்கேன். நம்ம பயபுள்ள காதுல பொகையோட, எப்படா நேரம் வரும், என்னைய போட்டுத்தள்ளலாம்னு காத்திருக்கான். ஒண்ணு தெரியுமா? இப்போ அவன் என்கிட்ட பேசுறதே இல்லையே.

கிச்சுமுச்சு சிஹாமணியின் "கார்"காலக் கனவுகள்

பாக்கியம் ராமசாமி ஸ்டைலில் ஒரு ஸாஃப்ட் காமெடி கட்டுரை எழுத முயற்சித்து எழுதிய கட்டுரை இது.

இதுவும் யூத்ஃபுல் விகடனில் வெளியாகியுள்ளது.


அதை அங்கே படிக்க இங்கே கிளிக்குங்க... http://youthful.vikatan.com/youth/yeskhastory25062009.asp

எப்படியேனும் சொந்தமாக ஒரு கார் வாங்கிவிட வேண்டும் என்பது கிச்சுமுச்சு சிஹாமணியின் நீண்ட நாள் அவா. அந்த அவாவுக்கு கற்பனையிலேயே தண்ணீர் ஊற்றி, உரம் போட்டு, வேலிகட்டி பெரு மரமாக வளர்த்தும் வருகிறார் அவர். அவா அவா அலுங்காமல் குலுங்காமல் காரில் ஹாயாகப் போகும்போது நாம மட்டும் ஏன் பஸ்ஸிலேயும், ஷேர் வேனிலேயும் ஆபீஸ் போவதற்காக நசுங்கி, பிதுங்கி அல்லோல கல்லோலப்பட வேண்டும் என்று அவ்வப்போது உக்காந்து யோசிப்பார். வேறெங்கே? ஆபீஸில்தான். வீட்டில்தான் வேலை கழுத்தைப் பிடிக்குமே. ஆனால் அவரிடம் ஒரு டூ வீலர் கூடக் கிடையாது என்பதை இங்கே வாசகக் கண்மணிகள் நினைவிலிறுத்திக்கொள்ள வேண்டும். (சைக்கிளும் டூ வீலர்தான் என்பதும் அடிக்குறிப்போடு நினைவுறுத்தப்படுகிறது).


எவ்வளவு நாளைக்குத்தான் ததக்கா புதக்கா என்று தாறுமாறாக ஆபீஸ் பையோடும், சாப்பாட்டுப் பையோடும் சந்தில் நாய் துரத்த ஓடி, மெயின் ரோடுக்கு வந்து பஸ் ஸ்டாப்புக்குப் பறந்து, பஸ்ஸைப் பிடித்து அல்லது ஷேர் வேனில் போக ஆசைப்பட்டு நாலு மடங்கு கட்டணத்தை அழுது கணக்குப் போட்டுக்கொண்டே ஆபீஸ் போவதை நினைத்தால் அவருக்கே ஆயாசமாக இருக்கும். (ஸ்ஸ்ஸ்ஸ்....... அப்பா...)


ஆபீஸ் போகும்போதும் சரி, ஊருக்குப் போகும்போதும் சரி சாலையில், நெடுஞ்சாலையில் போகும் கார்களை வண்டிக்கு வெளியே கழுத்தை நீட்டி எட்டி வேடிக்கை பார்த்தபடியே வருவது அவரது ப்ரியமான பொழுதுபோக்கு. "சாவுகிராக்கி உள்ளே இழுய்யா தலையை. தல (அஜீத் அல்ல) தனியாப் போயிடும். செத்து கித்துத் தொலைச்சிட்டியானா நானில்ல ஸ்டேஷன்ல போயி பஞ்சாயத்துக்கு நிக்கணும்" என்று அர்ச்சிக்கும் டிரைவரிடம் ஒரு சாரியை நல்கிவிட்டு மீண்டும் அதையே தொடர்வார்.


தெரிந்தவர்களோ, ஆபீஸிலோ யாராவது புது கார் வாங்கி விட்டால் பெயிண்ட் முதல், டயர், கியர் வரை சகல விபரமும் கேட்டுக் கேட்டு நச்சி விடுவார். ஊரில் எங்கேனும் செகண்ட் ஹாண்ட் யூஸ்டு கார் மேளா நடந்தால் ஓடி ஓடிப் போய்ப் பார்ப்பார். பேப்பர்களில் கார் விளம்பரங்கள் எவை வந்தாலும் அவை புது கார்களோ, பழைய கார்களோ, பாரபட்சம் பார்க்காமல் முழு விளம்பரத்தையும் படித்துப் பார்ப்பார். டாடா நேனோ வேறு வரப்போகிறது. எப்படியாகிலும் ஒரு கார் வாங்கி தன் தர்ம பத்தினி பிந்து மணியை அமர வைத்து ஊர் சுற்றி அழகுபார்க்க வேண்டுமென்பது அவரது (உண்மையில், அவளது) நெடுநாளைய, தீரா அவா. அவளை நினைக்கும் போது அது தீராப் பெருங்கனவாகவே போய்விடுமோ என்பது அவரது பயம்.


சும்மா சொல்லக்கூடாது அவரது தர்மபத்தினியைப் பற்றி. இவரை நன்றாகப் பார்த்துக் கொல்கிறாள்தான் அந்தப் பதிவ்ரதாரத்னம் (பதிவிரதை + ரத்தினம்) நிற்க. கொல்கிறாள் என்றா சொன்னேன். மன்னிக்கவும். நாக்கு பிசகி விட்டது. கொள்கிறாள் என்று மாற்றி வைத்துப் படித்துக் கொள்ளவும். சும்மா சொல்லக்கூடாது. காலையில் சிஹாமணி என்ன சமைத்து வைத்தாலும் எந்தக்குறையும் சொல்லாமல் சாப்பிட்டு விடுவாள். குறிப்பிட்டு இதுதான் வேண்டும் அதுதான் வேண்டும் என்று நச்சரிப்பதில்லை. காபியில் கொஞ்சம் அஸ்கா முன்னே பின்னே இருந்தால் கூட சமாளித்துக் குடித்து விடுவாள்.
காலையில் சீக்கிரம் எழுந்து விட்டால் சிஹாமணிக்கு இடைஞ்சலாயிருக்குமென்பதையும் புரிந்து வைத்திருக்கிறாள். சிஹாமணி ஆபீஸூக்குக் கடமையாற்றச் செல்வதால் காலையிலேயே மதியத்துக்கும் சேர்த்துச் சமைக்க வேண்டியிருக்குமாதலால் அவரை அதிகத் தொந்தரவு படுத்திக் கொண்டிருக்கவும் மாட்டாள். அவள் பாட்டுக்கு பாட்டு கேட்டுக் கொண்டு, அதாவது மியூஸிக் சேனல்களுக்கு போன் செய்து பாட்டு கேட்டுக்கொண்டு, அவர்கள் போடும் பாடல்களைக் கேட்டுக்கொண்டு இருப்பாள்.


டிவியில் என்னோட ராசி நல்ல ராசி பாடலைப் பார்க்கும் போதெல்லாம் அது தனக்காவே புனையப்பட்டது போல சிஹாமணிக்குத் தோன்றும். அப்பேர்ப்பட்ட (ஆர்டர் கொடுத்துச் செய்த) ஸ்பெஷல் ராசி அவருக்கு. தவிட்டுக்கு பிள்ளை வாங்கிய கதை கேள்விப்பட்டிருக்கிறீர்களா? இல்லையா? தெரியாதா? நானும்தான் கேள்விப்பட்டதில்லை. எனக்கும்தான் தெரியாது. நானெல்லாம் வெளியே சொல்லிக்கொண்டா இருக்கிறேன்? சரி அதை விடுங்கள். தலைப்பை வைத்து ஓரளவு அனுமானித்துக் கொண்டு தொடர்ந்து வாருங்கள். தவிட்டுக்குப் பிள்ளை வாங்கிய கதை போல தர்மத்துக்கு பத்தினி (மனைவி) வாங்கி வந்தவர் தான் நம்ம சிஹாமணி. எல்லாம் வடகறிக்கு ஆசைப்பட்டதால் வந்த வினைப்பயன்.


அந்தக் கல்யாணத்தில் வடகறி போடுகிறார்கள் என்று எவனோ கொளுத்திப் போட்டுவிட்டான். பத்திரிகையே வைக்காவிட்டாலும் பரவாயில்லை பலரும் தெரிந்தவர்களே, சிலர் உறவினர்கள் வேறு, எப்படியும் மாட்டிக் கொள்ளாமல் தப்பித்துக் கொள்ளலாம் என்ற குருட்டுத் தைரியத்தில் கல்யாண வீட்டில் போய் நின்றார். பையில் இருந்த இருபத்தைந்து பைசாவுக்கு மொய் கவர் மட்டும் வாங்கி பாக்கெட்டில் வெளியே கொஞ்சமாய்த் தெரிவது போல் செருகிக் கொண்டாயிற்று. யாரேனும் வந்து அந்த வெற்றுக் கவரை எடுத்துப் பார்த்து விடவா போகிறார்கள் என்ற அசட்டுத் தைரியம் அவருடன் கூடவே இருந்தது.


அந்தக் கல்யாணத்திற்கென ஏற்கெனவே நிச்சயிக்கப்பட்ட மாப்பிள்ளைக்கு லாங்ஷாட்டில் எடுக்கப் பட்ட பிந்து மணியின் போட்டோதான் முதலில் கொடுக்கப்பட்டிருந்தது. மேலும் நலுங்கு, ஜானவாச வைபவங்களின் போதும் பூக்கள் மறைத்த பிந்து மணியின் முகத்தை அவனால் முழுதாகப் பார்க்க இயலவில்லை. அவ்வளவு ஏன்? அருகில் அமர்ந்திருந்த அவளது பரந்த தேகத்தையே அவனால் முழுதாகப் பார்க்க இயலவில்லை. ஆனால் சரியாக கல்யாணத்திற்கு முதல்நாள் இரவு பிந்து மணியின் க்ளோசப் போட்டோ அவனது கையில் கிடைக்கும் படி யாரோ செய்த உள்நாட்டுச் சதியின் காரணமாக பஸ் கிடைக்காத, நடுநிசி நாய்கள் துரத்திய அகால நேரத்திலும் அந்தக் கல்யாண மண்டபத்தை விட்டு அவன் ஓடிவிட நேர்ந்தது.


விடிந்தும் விடியாத காலைக் கருக்கலில் பந்தியில் அமர்ந்து கொண்டு, வடகறி இன்னும் வரவில்லையே என்று "மாமா, மாமா இங்கே வடகறி வைங்கோ" என்று கத்திக் கொண்டிருந்த கிச்சுமுச்சு சிஹாமணியின் கீச்சுக்குரல் முக்கியமான மாமா ஒருவரின், அவ்வளவு ஜன சந்தடியிலும், டமாரக் காதில் விழுந்து தொலைத்து விட்டது. அவரது வேட்டியைப் பிடித்து இழுத்துக்கொண்டு போய் மணவறையில் நிறுத்தி விட்டார். அதுகாறும் வடகறியின் மேலிருந்த சிஹாமணியின் கவனம் பிந்து மணியின்பால் திருப்பப்பட்டது.


சிஹாமணியின் அப்பாவையும் கூட்டி வர, சம்மதம் கேட்க ஆள் அனுப்பப்பட்டது. தண்ணீருக்காக வெயிலில் அலைந்து திரியும் பசு மாட்டின் மேல் மஞ்சள் நீர் தெளிக்கும் போது விதிர்த்துப் போய் சிலிர்ப்பது போல லேசாக சிஹாமணியின் தலை அசைந்ததுதான் தாமதம், என்னமோ சந்திராயன் டூ விடுவதைப் போல, நிறுத்தப்பட்டிருந்த கல்யாணக் காரியங்கள் சடுதியில் நடந்தேறின. இப்படியாக நல் அணங்கு நாரீமணியான பிந்து மணி கிச்சுமுச்சு சிஹாமணியின் இல்வாழ்க்கைத் துணைவியானாள். சிஹாமணிக்கேனும் மஞ்சள் நீர். அவளுக்கு அதுவும் இல்லை.


இப்படியாகப்பட்ட சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த கல்யாணம் நம்மவருடையது. காலுக்குப் பொருந்தாமல் சைஸ் சற்று பெரியதாக இருந்தாலும், கல்யாணத்திற்காக அவருக்கு சீர் அளிக்கப்பட்ட ஷூவைத்தான், கல்யாணத்திற்காக அளிக்கப்பட்டது என்ற ஒரே பெருங்காரணத்திற்காக, இன்றைக்கும் அணிந்தபடி அலுவல் அகம் செல்கிறார் சிஹாமணி. அதிலிருந்து வரும் கிச்சுமுச்சு சத்தம் தான் நம்மவரருக்கு விழாக்கள் ஏதுமன்றி வழங்கப்பட்ட சிறப்பு அடைமொழியாகிப் போனது.


அடைமொழியைப் பற்றியெல்லாம் பெரிதாகக் கவலைப்படவில்லை சிஹாமணி. அவருக்கிருந்த கவலையெல்லாம், தம் பாதியின் நிறை வேறா ஆசை ஏதும் இருந்தால் அதை முடித்து வைக்க வேண்டுமென்று மேலோங்கியிருந்த எண்ணமே. அவளுடைய ஒரே ஆசை கார் வாங்க வேண்டுமென்பது. அவளது பாட்டனார் ராவ் பகதூர் ரங்கபாஷ்யம் (போன்ற ஒரு பெயர் உடையவர், உண்மையான பெயர் மறந்து போய் விட்டது, எல்லோருக்கும்) ஒரு கார் வைத்திருந்தாராம். ஊரே அவரை அதற்காகப் பெருமையாகப் பேசுமாம். ஆகவே அதுபோல் (!) ஒரு கார் வாங்கியாக வேண்டுமென்பது மட்டுமே அவள் அவருக்கிட்ட கட்டளை. அதை சிரமேற்கொண்டு செய்து முடிக்கவே பிரம்மப் பிரயத்தனப்பட்டுக்கொண்டிருந்தார் சிஹாமணி.


இப்படியாகப்பட்ட சிறப்பு வாய்ந்த, பிளாஷ் பேக்குகள் நிறைந்த, கார் வாங்கும் விஷயம் திடீரென்று ஒருநாள் சிஹாமணியால் கைவிடப்பட்டது. விஷயம் என்னவென்றால் போன வாரம் அலுவல் அகத்திற்கு ஷேர் டாக்ஸியில் பிதுங்கியபடி செல்கையில் தன் மடியில் உட்கார்ந்தபடி பயணித்த ஸ்பிக் ராமசாமியின் ஓசிப் பேப்பரை (அது அவருக்கு சொந்தப் பேப்பர்தான், நம்மவருக்கு அது ஓசி) கழுத்தை நீட்டி படித்தபடியே வந்தபோது பார்த்த ஒரு முக்கியச் செய்தியின் விளைவு. "கார் விபத்தில் பிரபல ஹாலிவுட் நகைச்சுவை நடிகர் உள்பட இருவர் நசுங்கி சாவு" என்ற செய்தியைப் பார்த்தவுடன் கார் வாங்குகிற அல்லது குறைந்த பட்சம் டெஸ்ட் டிரைவ் போகிற ஐடியாவைக் கூடத்தள்ளிப் போட்டு விட்டார் சிஹாமணி.

அந்த ஹாலிவுட் நகைச்சுவை நடிகரை தமிழ் படத்தில் பார்த்திருக்கிறார். அதாவது டப்பிங் செய்யப்பட்ட ஹாலிவுட் சூப்பர் ஹிட் காமெடி படம். அந்த நடிகை சிஹாமணிக்கு அவ்வளவாகப்பிடிக்கும்/க்காது என்பதைப் பற்றி இங்கே பேசத் தேவையில்லை. உண்மையைச் சொல்லப்போனால் அவரது சதி, அந்தப் பதிவ்ரதாரத்னம், ஒரு ஜாடையில், ஓவர் மேக்கப் போட்ட அந்த ஹாலிவுட் நடிகரின் முக சாயலில் (கலர் அல்ல) தான் இருப்பாள். அதை நினைக்கையில் அன்று முழுக்க கனவில் அதுபோலவே சம்பவம் வந்து கொண்டே இருந்தது.


ஆபீஸில் நிம்மதியாகத் தூங்கவே முடியவில்லை. ஒருவேளை நமது பத்தினிக்கும் இதே மாதிரி ஏதேனும் பேராபத்து நிகழ்ந்து விட்டால்? என்ற சிந்தனை. அந்தக் காட்சி அரை வினாடி குஷியாக சிஹாமணியின் மனக்கண்ணின் முன்னால் வந்து போனாலும், நமக்கும் அவளை விட்டால் யார் இருக்கிறார்? என்ற மாற்றுச் சிந்தனை அவரை இந்த முடிவை எடுக்கும் படி செய்து விட்டது.

விகடனில் (ஆபீஸில்) நேரத்தைக் கொல்ல அட்டகாசமான 23 வழிகள்..!

இந்தக் கட்டுரை யூத்ஃபுல் விகடனில் வெளியாகியுள்ளது.


அதை அங்கே படிக்க இங்கே கிளிக்குங்க....
http://youthful.vikatan.com/youth/yeskhastory01072009.asp

(ஆபீஸில்) நேரத்தைக் கொல்ல அட்டகாசமான 23 வழிகள்..!

1. ஆபீஸில் சும்மா உட்கார்ந்திருக்கும் போது பாஸூடைய கையெழுத்தைப் போட்டுப் பழகலாம். ஃப்யூச்சரில் உதவும்.


2. வெளியில் போய் நின்று கொண்டு போகிற வருகிற வண்டிகளை எண்ணிக்கொண்டிருக்கலாம்.


3. உங்கள் வைரி யாரேனும் இருந்தால் அவரது வண்டியின் பெட்ரோல் டேங்கில் கொஞ்சமாக சர்க்கரை போட்டு வைக்கலாம்.


4. நெட் கனெக்ஷ்ன் இருந்தால் சீரியல், சினிமா கதைகளை படித்து வைக்கலாம். வீட்டுக்குப் போய் டி.வி பார்க்கும் நேரம் மிச்சம்.


5. கடிகாரத்தைத் தூக்கிப் போட்டு ஒரே அடி... அதுதான் உண்மையிலேயே நேரத்தைக் கொல்வது.


6. பல்லிடுக்குகளை நாக்கினால் துழாவி ஏதேனும் உணவுத்துணுக்கு மாட்டுகிறதா என்று பார்க்கலாம், மாட்டினால் அதை மென்று கொண்டு இருக்கலாம்.


7. இன்டர்வியூவுக்காக வந்திருக்கும் ஏதேனும் ஒரு பிகரை பிக்கப் பண்ண டிரை பண்ணலாம். அவர் இன்டர்வியூவுக்காக வந்திருப்பதால் கண்டிப்பாக சிரித்துப் பேசுவார்.


8. கார்ட்டூன் போட்டுப் பழகலாம். முக்கியமாக உயரதிகாரிகளை. ஆனால் அந்தப் பேப்பர் அவரது கைகளில் மாட்டாமல் பார்த்துக்கொள்வது அதி முக்கியம்.


9. கண்களை மூடியபடி பகல் கனவு காணலாம், ஸ்கூல் நாட்களில் கணக்கு, பெளதீகம், ஹிஸ்டரி முதலிய வகுப்புகளில் செய்தது போல. கனவில் நமீதா, ரம்பா வகையறாக்களை வரவழைத்தல் நலம்.


10. கேஸ் எப்படி ஃபார்ம் ஆகிறது, கொட்டாவி, ஏப்பம் முதலியவை எப்படி உருவாகின்றன போன்றவற்றை யோசிக்கலாம்.


11. காபியைத் கை தவறிக் கொட்டி விட்டு ஹவுஸ் கீப்பிங் பையனிடம் அவன் தான் கொட்டி விட்டதாக வம்பிழுக்கலாம். இன்னொரு காபி கொண்டு வரச்சொல்லலாம். (ஆனால் இதை வீட்டில் முயற்சிக்கக் கூடாது.)


12. பேப்பரில் ஏரோப்ளேன், ராக்கெட் முதலிய கைவினைப் பொருட்களை செய்து பழகலாம். யார் அதிக தூரம் விடுவது என கொலீக்குடன் போட்டி வைக்கலாம். ஆனால், வேலை பார்க்கும் யார் மேலாவது மோத விட்டு பிரச்சினை வராமல் பார்த்துக் கொள்வது முக்கியம்.


13. இஷ்ட தெய்வத்தின் மேல் பாடல் எழுதலாம். இஷ்ட தெய்வம் இல்லையா? பிடித்தவர்கள் மேல் எழுதலாம். கானா எழுத முயற்சித்தால் நிறைய எழுத முடியும்.


14. ரெஸ்ட் ரூமுக்குப் போய் முகத்தை அஷ்ட கோணலாக ஆக்கி அழகு பார்க்கலாம். செல்போன் கேமரா இருந்தால் படம் பிடித்தும் வைக்கலாம்.


15. எல்லாவற்றையும் விட எளியதான ஒரே வழி தூக்கம்.


16. தொந்தியை வருடிக்கொடுப்பது போன்ற சிறு சிறு தேகப் பயிற்சிகளை மேற்கொள்ளலாம்.


17. கேஃபடேரியாவில் / கேன்டீனில் கூட்டம் அதிகமாக இருந்தால் ஸ்நாக்ஸை ஆர்டர் செய்ய குறுக்கு வழிகளை யோசிக்கலாம்.


18. வேறு யாராவது எழுதிய ஈ.மெயிலில் தப்பு கண்டுபிடிக்கலாம். முடிந்தால் அவரிடமே சொல்லி வெறுப்பேற்றலாம்.


19. யாரையாவது கம்பெனி சேர்த்துக் கொண்டு உங்கள் ஃப்ளோர் (தளம்) தவிர மற்ற ஃப்ளோர்களுக்கு ஒரு விஸிட் போய் வரலாம். லிஃப்டை தவிர்த்து படிகளில் நடந்து போனால் நேரமும் அதிகமாகும், அரட்டையும் அதிகமாகும்.


20. வீட்டிலுள்ள சுட்டிகளின் கம்ப்யூட்டர் கேம்ஸை கொண்டு வந்து டவுன்லோடு செய்து வைக்கலாம். போரடிக்கும் நேரங்களில் விளையாட உதவும்.


21. தொடக்கூடாத ஏதேனும் ஒரு பட்டனை தட்டிவிட்டு கம்ப்யூட்டரை ஹேங் செய்யலாம். சிஸ்டம் டிபார்ட்மெண்ட் ஆட்களை வரவழைத்தால் ஒரு முழு நாளையும் ஓட்டலாம்.


22. ஏதாவது ஒரு மியூஸிக் சேனலுக்கு போன் செய்து பிடித்த பாடல் கேட்கலாம். அதை உங்கள் சுபீரியருக்கு டெடிகேட்-டும் செய்யலாம்.


23. உறவினர்கள், நண்பர்கள், தெரிந்தவர்கள், தெரியாதவர்கள் என யாருக்காவது போன் செய்து (ஆபீஸ் போனிலிருந்து தான்) நலம் உசாவலாம். முன்னதாக போன் உரையாடல் ரெக்கார்ட் ஆகிறதா என்பதை மட்டும் செக் செய்து கொள்வது உசிதம்.


* துடிப்பான வாசகக் கண்மணிகள் தாங்கள் விரும்பும் நேரக் கொல்லியைப் பற்றிப் பதிவு செய்யலாம்.

(ஆபீஸில்) பிஸியாக இருப்பது போல் காட்டிக்கொள்வது எப்படி?

இந்தக் கட்டுரை யூத்ஃபுல் விகடனில் வெளியாகியுள்ளது.


அதை அங்கே படிக்க இங்கே கிளிக்குங்க....


http://youthful.vikatan.com/youth/yeskhawit17072009.asp


(ஆபீஸில்) பிஸியாக இருப்பது போல் காட்டிக்கொள்வது எப்படி?


1. உங்கள் மானிட்டரில் முக்கியமான ஏதேனும் ஒரு ஃபைலையோ, கோடையோ (code) திறந்து வைத்துவிட்டு ஏதோ யோசிப்பது போல அதையே பார்த்துக் கொண்டிருங்கள். பார்ப்பவர்கள் நீங்கள் பிஸியாக இருப்பதாக நினைத்துக் கொள்வார்கள்.


2. அடிக்கடி நெற்றியை சொறிந்து கொள்ளவும். அவ்வப்போது பற்களைக் கடித்துக் கொள்ளவும். ஏதாவது ரெண்டு வார்த்தை டைப் செய்துவிட்டு யோசிப்பது போல் பாவ்லா காட்டவும்.


3. கம்ப்யூட்டர் மவுஸை உபயோகிக்காமல் கீ போர்டு ஷார்ட் கட் கீ-க்களை உபயோகித்தால் பிஸியாக, வேகமாக வேலை செய்வது போலத் தோன்றும்.
4. அடிக்கடி கம்ப்யூட்டரை முறைத்து அல்லது வெறித்துப் பார்க்கவும். கூடவே நகத்தையும் கடித்து வையுங்கள்.


5. சீட்டில் சாய்ந்து உட்காராமல் முன்னால் இழுத்து விட்டு சில நிமிடங்களுக்கு சீட் நுனியில் உட்கார்ந்து டைப் அடிக்கவும்.


6. அவ்வப்போது பேப்பர் ஃபைல்களை கலைத்துவிட்டு பெருமூச்சு விடுங்கள். நீங்கள் எதையோ தேடுவதாக நினைத்துக் கொள்வார்கள். கடைசியில் ஏதாவது ஒரு பேப்பரை எடுத்து சிரித்தபடியே "எஸ்...." என்றோ அல்லது "சக்சஸ்" என்றோ சொல்லுங்கள்.


7. எங்காவது எழுந்து போகும்போது மிக வேகமாக நடந்து போங்கள். ஏதோ முக்கியமான விஷயத்துக்காகப் போகிறீர்கள் என மற்றவர்கள் நினைத்துக் கொள்வார்கள்.


8. கைகளைப் பிசைந்து கொள்ளுங்கள், கைவிரல்களில் சொடக்கு எடுத்து விடுங்கள். அவ்வப்போது டென்ஷனாக டேபிளில் ஒரு தட்டு தட்டுங்கள்.


9. உங்கள் மானிட்டரின் அருகில் எப்போதும் ஒரு நோட்டுப் புத்தகத்தையும் பேனாவையும் திறந்தே வையுங்கள். அதில் ஏதாவது ஒன்றிரண்டு வார்த்தைகளையும், நம்பர்களையும் கிறுக்கிக் கொண்டிருங்கள்.


10. எங்கே போனாலும் கையில் ஒரு நோட்டுப் புத்தகத்தை எடுத்துச் செல்லுங்கள். நீங்கள் முக்கியமான மீட்டிங்குக்கோ, விவாதத்துக்கோ குறிப்பு எடுக்கச் செல்கிறீர்கள் என நினைப்பார்கள்.


11. ஆபீஸில் நடந்து செல்கையில் எதிர்படுபவர்கள் சொல்லும் ஹாய், ஹலோவுக்கு பதில் சொல்லாமல் கடந்து செல்லுங்கள், பிறகு பிஸியாக இருந்தேன், ஸாரி என்று சொல்லிக்கொள்ளலாம்.


12. சரியாக காபி வரும் நேரத்தில் எங்காவது எழுந்து போய் விடுங்கள். கொஞ்ச நேரம் கழித்து வந்து ஹவுஸ் கீப்பிங்கில் காபி கேளுங்கள். மீட்டிங் போயிருந்தேன் என்று புருடா விடுங்கள்.


13. உங்கள் டெஸ்க்டாப்பில் நான்கைந்து அப்ளிகேஷன்களையோ, பைல்களையோ திறந்து வையுங்கள். அவ்வப்போது அவற்றை ஓபன் செய்வது, குளோஸ் செய்வது, மாற்றிக்கொண்டிருப்பது என ஏதாவது செய்து கொண்டேயிருங்கள்.


14. செல்போனை வைப்ரேட்டரில் / சைலண்டில் போட்டு விட்டு யாரிடமோ போன் பேசுவது போல பேசிக்கொண்டிருங்கள். சீரியஸாக முகத்தை வைத்துக்கொண்டு குறுக்கும் நெடுக்கும் நடங்கள்.


15. கான்ஃபரன்ஸ் ஹால் ஃப்ரீயாக இருந்தால் (உங்களைப் போலவே வெட்டியாக இருக்கும்) உங்கள் டீம் மெம்பர்களை கூட்டிப்போய் ஏதாவது டிஸ்கஸ் செய்யுங்கள். போர்டில் ஏதாவது மார்க்கரால் சார்ட் படம் போட்டு விட்டு வாருங்கள்.


16. முதலில் வரும் காபியைக்குடிக்காதீர்கள். அப்படியே ஆற விட்டுவிடுங்கள். மறுபடியும் கேட்டு வாங்கிக்கொள்ளலாம். கொஞ்சம் பிஸியாக இருந்ததால் காபி குடிக்க முடியவில்லை என (மற்றவர் காதில்) விழும்படி சொல்லுங்கள்.

17. (வீட்டில் ஏதும் வேலை இல்லையென்றால்) ஆபீஸிலேயே டியூட்டி நேரம் தாண்டி கொஞ்ச நேரம் ஸ்ட்ரெட்ச் செய்து இருந்து விட்டுப்போங்கள். ஆனால் அந்த அகால நேரத்தில் பெருந்தலைகள் யார் கண்ணிலாவது பட வேண்டியது ரொம்ப முக்கியம்.


18. இதையெல்லாம் மீறி உண்மையாகவே ஏதாவது நல்ல விஷயம் செய்தீர்கள் என்றால் அதை மற்றவர்களிடம் சந்தோஷமாக அறிவியுங்கள். நம் பெருமையை நாமே பேசாவிட்டால் நமக்காக யார் பேசுவார்கள்?


கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன

ஒரு மெட்ராஸ் பேச்சுலரின் (சாப்பாட்டு) டைரி


இந்தக் கட்டுரை யூத்ஃபுல் விகடனில் வெளியாகியுள்ளது. விகடன்.காமின் முகப்புப் பக்கத்திலும் வைக்கப்பட்டது.

அதை விகடனில் படிக்க.... http://youthful.vikatan.com/youth/yeskhastory07082009.asp

எண்சாண் உடம்பில் வயிறே பிரதானம். சிரசே பிரதானம் என்பதெல்லாம் சும்மா. வயிறு தான் முக்கியம். நாம் எல்லோரும் உழைப்பது (ஏமாற்றுவது, திருடுவது, கொள்ளை அடிப்பது, பிச்சை எடுப்பது என எதைச் செய்தாலும் அது) சாப்பாட்டுக்குத்தான். தத்துவம் சொல்வது மாதிரி இருந்தாலும் உண்மை அதுதானே. சென்னையில் பேச்சுலராய் தனியாய் சுற்றும் போது தான் (ஜாலியாய் அல்ல, சாப்பாட்டுக்காக ஹோட்டல் ஹோட்டலாய் சுற்றுவது) முன்பு ஊரில் செய்த அட்டகாசங்கள் எல்லாம் மனசில் வந்து மனசாட்சியைக் குத்தும்.

சிறு வயதில், வீட்டில் எவ்வளவு கஷ்டம் இருந்த போதும், பணப்பிரச்சினை இருந்த போதும் சாப்பாட்டிற்கு மட்டும் எந்தக் கவலையும் இருப்பதே கிடையாது. பதினைந்து ரூபாய் பொன்னி அரிசிதான் சாப்பாட்டுக்கு (அப்போதெல்லாம் அது விலை மிக அதிகம், இப்போதைய நாற்பது ரூபாய் அரிசிக்குச் சமம்). வேளா வேளைக்கு வக்கனையாக ருசியாக தட்டில் வந்து விழுந்து விடும். அதனால்தானோ என்னவோ கஷ்டமான சூழ்நிலைகளை மட்டும் என்றுமே உணர்ந்ததில்லை. ஸ்கூல், வீடு, காலேஜ் என்று சந்தோஷமாக இருந்தாயிற்று.

டிபன் என்ன? உப்புமாவா? உப்புமாவை எவன் திம்பான்... உப்புமா இல்லடா, கார தோசை. கார தோசையா? கார தோசையை எவன் திம்பான்... என்று திமிரெடுத்துச் சுற்றிய காலம் அது. தட்டில் போட்ட சாப்பாட்டை, எனக்கு பிடிக்காது, சாப்பிட மாட்டேன் என்று விசிறி அடிக்கும் அளவுக்கெல்லாம் அராஜகம் செய்ததில்லை என்றாலும் முனகிக் கொண்டே சாப்பிடுவது, அடம் பிடிப்பது எனச் செய்வதுண்டு. எப்படித்தான் ஞாபகம் வைத்திருப்பார்களோ தெரியாது அதற்குப் பிறகு அந்தந்த டிஷ்களை செய்யவே மாட்டார்கள். கார்த்திக்கு இது பிடிக்காது, பப்பிக்கு அது பிடிக்காது என்று மனப்பாடமாக இருக்கும் அம்மாவுக்கு.

பிடித்த டிஷ்ஷூம் வேண்டும், ருசியாகவும் இருக்க வேண்டும், நேரத்திற்கு கிடைக்க வேண்டும் என்று தின்ற நாக்கு இப்போது நல்ல சோறு கிடைக்காதா என்று அலைகிறது. உண்மையில் சொல்ல வேண்டுமென்றால் தட்டில் சாப்பாடு போட்டு சாம்பார், ரசம் ஊற்றி அப்பளத்துடன் பொரியல் போட்டுத்தின்பது எப்படி என்று மறந்தே போய்விட்டது. வீட்டில் இருக்கும் போது சாப்பிடாது விட்ட உப்புமா வகையறாக்கள் எல்லாம் அமிர்தம் என்று சோத்துக்கு அலையும் போதுதான் மனதில் உறைக்கிறது. கஷ்டத்திலும் நன்றாக சாப்பிட்டோம். ஆனால், நன்றாக சம்பாதிக்கும் போது சாப்பிட முடியவில்லை. (இதாண்ணே வாழ்க்கை)

அதுவும் சென்னை வந்த புதிதில் (நான்-வெஜ் பழகாதவர்களுக்கு ரொம்பக் கஷ்டம்) ஒன்றுமே செய்ய முடியாது. கிடைத்ததைத் தின்பது என்பார்களே அது தான் கதை. அதுவும் வேலை நிமித்தம் அகால நேரத்தில் ஆபீஸிலோ, மழையிலோ மாட்டிக் கொண்டால் போச்சு, அவ்வளவுதான். அன்றைய சாப்பாட்டில் மண் தான். பட்டினி அல்லது மண் மாதிரி இருக்கும் எதையாவது தான் தின்றாக வேண்டும். ஒரு நாளைக்கு இரண்டே வேளை.

இதில் சாப்பிடுவது உடம்பிற்கு கெடுதல் இல்லாமலும் பார்த்துக்கொள்ள வேண்டும். (கூட இருக்கும் எவனுக்காவது அல்சர் வந்து தொலையும், அம்மை போடும், டயரியா வரும், இல்லாவிட்டால் சாப்பிட்டது சேரவில்லை என்று எவனாவது ஒருத்தன் சொரிந்து கொண்டே இருப்பான்) பர்ஸூக்கும் கெடுதல் வரக் கூடாது. நல்ல ஹோட்டலையும் கண்டுபிடிக்க வேண்டும். எத்தனை பிரச்சினை.

அது மட்டுமல்ல... எத்தனை கோடி இன்பம் வைத்தாய் இறைவா என்பது போல எத்தனை வகை ஹோட்டல் வைத்தாய் இறைவா என்று அவனைக் கைகூப்பி வணங்கலாம். கையேந்தி பவன், தள்ளு வண்டி, ரோட்டுக் கடை, த்ரீ ஸ்டார், ஃபைவ் ஸ்டார், பிரியாணி ஹோட்டல், ஐயர் மெஸ், ஆந்திரா மெஸ், கொல்கத்தா மெஸ், சைனீஸ், இத்தாலியன், தந்தூரி, கான்டினென்டல், தாலி ஹவுஸ், போஜன்சாலா, இந்திய உணவுக் கழகம், போஸ்ட் ஆபீஸ் கேன்டீன், முனியாண்டி விலாஸ், தலப்பா கட்டு, அஞ்சப்பர், சரவண பவன், பஞ்சாபி தாபா என்று எத்தனை வகை. ஆனால் எதிலுமே ரெகுலராகச் சாப்பிட முடியாது. காசு முதல் குவாலிட்டி வரை பல காரணிகள்.

எந்த ஹோட்டலிலும் கிச்சனை மட்டும் எட்டிப் பார்த்து விடக் கூடாது. பார்த்தால் சாப்பிட முடியாது. என்னடா டேய்... ஹோட்டலில் கிடைக்காத ருசியா? வெரைட்டியா? அதைப்போய் இப்படிப் பழிக்கிறாயே என்று சொல்லும் வீட்டுச் சாப்பாடு சாப்பிடும் அன்பர்களே, குறைந்த பட்சம் ஒரு வாரத்திற்கு தொடர்ச்சியாக மூன்று வேளை ஹோட்டல்கள் மாற்றி மாற்றி சாப்பிட்டுப் பாருங்கள். அப்போது தெரியும் உங்களுக்கு. கிடைப்பதைச்சாப்பிட்டு விட்டு ஃபுரூட் ஜூஸ், லெமன் ஜூஸ், வாழைப்பழம், மோர், பெப்ஸி, சோடா என எதையாவது உள்ளே தள்ளி சாப்பிட்ட அயிட்டத்தை செரிக்க வைக்க வேண்டும்,

கூடவே உடம்பு சூடாகாமலும் பார்த்துக்கொள்ள வேண்டும். சனிக்கிழமை எண்ணெய் தேய்த்து உடம்பை ஊற வைப்பது என்ற கதையே இங்கு நடக்காது. ஆபீஸ் இருக்கும், அல்லது அன்றைக்குத்தான் மீட்டிங்கோ, க்ளையண்ட் அப்பாயிண்ட்மென்டோ இருக்கும்.

கண்டதைச் சாப்பிட்டு விட்டு உடம்புக்கு எதாவது, குறிப்பாக வெயில் வியாதிகள் (அம்மை, டயரியா, உட்காருமிடத்தில் கட்டி, மெட்ராஸ் ஐ, முகத்தில் கொப்புளங்கள் அல்லது வீக்கம் போன்றவை) வந்து தொலைத்தால் காலி. அவ்வளவு தான். ஆபீஸூக்கு போனைப் போட்டு சிக் லீவ் சொல்லிவிட்டு, முனகிக் கொண்டே ஊருக்கு ரயிலேற வேண்டியது தான். அதனால் பார்த்துச் சாப்பிட வேண்டும்.

அதிலும் ஹோட்டல்களில் இந்த டிப்ஸ் கருமம் வேறு. டிப்ஸ் வைக்கவில்லையென்றால் கெட்ட வார்த்தையிலேயே திட்டுகிறான்கள். வேளைக்கு மூன்று ரூபாய் டிப்ஸ் வைத்தாலும் ஆவரேஜாக மாதம் முன்னூறு ரூபாய் அதற்கே போகும். அநியாயமாக இல்லை...?

அந்த டிப்ஸ் பணத்தில் என்னென்ன செலவு செய்யலாம்? சத்யத்தில் ஜோடியாக ஒரு படம் பார்க்கலாம், அல்லது நல்லதாய் நாலு புத்தகம் வாங்கலாம், அல்லது பத்து பாக்கெட் சிகரெட் வாங்கலாம், அல்லது பன்னிரண்டு லிட்டர் கூல்டிரிங்க் வாங்கலாம், அல்லது மூன்று டிரெயின் பாஸ் எடுக்கலாம், அல்லது இரண்டு பஸ் பாஸ் எடுக்கலாம், அல்லது 20 இங்கிலீஷ் பட டிவிடி வாங்கலாம், அல்லது சரவணா ஸ்டோர்ஸில் சீப்பாக ரெண்டு டி.ஷர்ட் எடுக்கலாம், அல்லது மாசக்கடைசியில் நாலு நாள் சிக்கனமாகச் சாப்பிட்டுச் சமாளிக்கலாம்.

வீட்டில் இருந்தால் வேளைக்கு 8 தோசை அல்லது 17 இட்லி அல்லது 10 சப்பாத்தி அல்லது 30 பணியாரம் அல்லது சாம்பார், குழம்பு, ரசம், தயிர், மோர், கூட்டு, கீரையோடு, ஒரு ஃபுல் அன்லிமிடெட் மீல்ஸ் சாப்பிடும் சாப்பிடும் வஞ்சனையில்லாத வயிறு எங்களுடையது. ஹோட்டலில் போய் உட்கார்ந்து தோசை வைக்கச் சொல்லி விட்டு விலையைக் கேட்டால் 25 ரூபாய் என்பான், அடுத்த தோசை சொல்ல மனம் வருமா உங்களுக்கு? சரவணா பவன் ஃபுல் மீல்ஸ் விலை என்ன தெரியுமா? 120 ரூபாய் மக்களே! நூத்தி இருபது ரூபாய். இப்படிச் சாப்பிட்டால் மத்தியானமும், ராத்திரியும் சாப்பிட காசு வேண்டாமா? கணக்குப் போட்டு லிமிட்டாகத் தான் தின்ன முடியும். மூன்று வேளைக்கும் இப்படித் தின்றால் எப்படி எடை போடுவது? பிப்டி கேஜி தாஜ்மஹால்தான் இன்னமும்.

செலவைக் குறைக்க வேண்டுமென்றால் ரூமில் சமையல் செய்து சாப்பிடலாமே? உடம்புக்கும் கெடுதல் இல்லையே என்று சொல்லும் அட்வைஸ் ஆறுமுகங்களே! வாங்கய்யா வாங்க, உங்களைத்தான் தேடிக் கொண்டிருக்கிறேன். கையில் சிக்கினால் அடுத்த வேளை சாப்பாட்டுக்கு நீங்கள் தான். நான் சொல்லும் கணக்கு வழக்குகளையெல்லாம் கொஞ்சம் பாருங்கள், பிறகு வருவீர்கள் அட்வைஸ் செய்ய...

முதலில் இதே செல்ஃப் குக்கிங் ஐடியாவுடன் நான்கைந்து பேர் சேர வேண்டும், பிறகு குறைந்தபட்சம் இரு அறைகள் உள்ள வீடு பார்க்க வேண்டும் (வீட்டு வாடகை, பத்து மாத அட்வான்ஸைக் கணக்கில் சேர்க்கவும்) மண்ணெண்ணெய் அடுப்பா, எலக்ட்ரிக் அடுப்பா, கேஸ் அடுப்பா என முடிவு செய்ய வேண்டும், கேஸ் தான் சரி என்றால் கேஸ் கனெக்ஷன் வாங்க வேண்டும். இரண்டு, மூன்று மாதங்களுக்கொருமுறை அட்டென்டன்ஸ் மாறும் ரூமில் யார் பெயரில் கேஸ் கனெக்ஷன் வாங்குவது?

இன்றிருப்பவன் மூன்று மாதம் கழித்து இருக்க மாட்டான். வேறு ஊருக்கோ, ஏன் வேறு நாட்டுக்கோ கூடப் போயிருப்பான். அரிசி, பருப்பு, மிளகாய், புளி போன்ற அத்தியாவசியப் பொருட்கள் தவிர மிக்ஸி, குக்கர், கிரைண்டர், வாணலி, பாத்திர பண்டங்கள் போன்ற மிகமிக இன்றியமையாத பொருட்களை வாங்கியாக வேண்டும். யார் கணக்கில், யார் பெயரில்? எல்லாவற்றுக்கும் மேல் யார் சமைப்பது? நைட் ஷிப்டு ஒருவன், ஈவினிங் ஷிப்டு ஒருவன், டே ஷிப்டு ஒருவன், வேலையே இல்லாமல் இன்னொருத்தன் என்றிருந்தால்?

அடுத்தது.. யார் பாத்திரம் கழுவுவது, யார் உதவி செய்வது, எத்தனை பேருக்கான சமையல்? எத்தனை வேளைக்கு? இதையெல்லாம் கணக்குப் போட வேண்டும். அதற்கப்புறம் டேஸ்ட்டு? டேஸ்ட்டா? அப்படி என்றால்? இருக்கும் எல்லாவற்றையும் கொட்டிச்சமைத்து விட்டு வேலை முடிந்ததும் தான் புது டிஷ்ஷூக்கு பெயர் சூட்டு விழாவே நடக்கும். சூடு ஆறும் முன் உள்ளே தள்ள வேண்டும். இல்லாவிட்டால் கஷ்டம்.

மாதம் பத்து நாள் வெளியூர் மீட்டிங் போகிறவன், பதினைந்து நாள் ஊருக்குப் போகிறவன், முப்பது நாளும் மூச்சு விடாமல் சாப்பிடுகிறவன் என்று வெரைட்டி காட்டும் கேரக்டர்கள் இருக்கும் அறையில் ஒவ்வொருவர் சாப்பிட்ட நாள் கணக்கு மாறினால், மாதம் முடிந்ததும் செலவை எப்படிப் பிரிப்பது? சிதம்பரம் பட்ஜெட் போட எடுத்துக் கொண்ட சிரத்தையை விட சற்று அதிகம் கவனம் தேவை இவற்றை கணக்குப்போட்டு சிக்கெடுக்க. கணக்குப் போடுவதற்குள் திக்கித் திணறி மூச்சு முட்டிப் போகும். (இந்தக் கணக்கோடு சோப்பு, சீப்பு, பேஸ்டு, பர்ஃபூம், டாய்லெட் க்ளீனிங், ஷூ பாலீஸ், நியூஸ் பேப்பர், இத்யாதி, இத்யாதி காமன் செலவுக் கணக்குகளை கூட்டிக் கொள்ளல் வேண்டும்)

இந்தச் சாப்பாட்டில் சைவம் அசைவம் பிரச்சினை வேறு.. சைவக்காரன் படுத்தும் பாடு தனியென்றால், அசைவக்காரன் செய்யும் அட்டகாசம் ஸ்பெஷல் வகை. அசைவத்தில் ஈரல் எனக்குப் பிடிக்காது, பன்றிக்கறி அவனுக்குப் பிடிக்காது, சிக்கன் சூடு ஏற்றும், மீன் முள் தொண்டையில் குத்தும் என்று ஆயிரத்தெட்டு பிரச்சினை வரும். சரி சைவமே தின்று தொலையலாம் என்றால் ஒரு முறை வெறும் ரசம் சாதமும், முட்டை பொறியலும் செய்ய முயற்சித்து ஆரம்பத்திலேயே கேஸ் காலி. பாதி வெந்த சோறுடன் குக்கரையும், அடித்து வைத்த முட்டையையும், கரைத்து வைத்த ரசம் கரைசலையும் தூக்கிக் கொண்டு எங்கே ஓட?

ஞாயிற்றுக்கிழமை மதியம் மூன்றரை மணிக்கு கேஸ் கிடைக்குமா? குறைந்த பட்சம் மண்ணெண்ணெய்? அப்படியே மண்ணெண்ணெய் கிடைத்தாலும் அடுப்பு கிடைக்குமா? அல்லது அக்கம் பக்கத்தில் குடும்பத்துடன் ஓய்வெடுக்கும் மக்களிடம் "மம்மீமீ... டாடீடீ.." என்று தட்டைத் தூக்கிக் கொண்டு போய் நிற்க முடியுமா? கொஞ்சம் யோசிங்க அய்யா யோசிங்க. உங்க வீட்டம்மா வேளை தவறாமல் தட்டில் போட்டுக் கொண்டு வந்து தருகிறாள் அல்லவா? தின்று விட்டுப் பேசுவீர்கள் வியாக்யானம்...

இந்தக் கருமத்தையெல்லாம் யோசித்துத் தான் பல பேர் மேன்ஷன்களில், சேவல் பண்ணைகளில் தஞ்சம் புகுவது. தங்குமிடம் எவ்வளவு கேவலமாக இருந்தாலும் வேளா வேளைக்குச் சோறு நிச்சயம். ஆக இப்படியெல்லாம் திண்டாடி விட்டு... கடைசியில் என்ன செய்ய? மாதமொருமுறை ஊருக்கு ஓடிப்போய் காலாட்டிக்கொண்டே, டி.வி பார்த்துக்கொண்டே, திட்டு வாங்கிக் கொண்டே வெரைட்டியாய் மூன்று நாளைக்கு முக்கி முக்கித் தின்று விட்டு வருவோம். ஆனால் அதிலும், என்னை மாதிரி மம்மி இல்லாத பசங்களைப் பற்றிக் கொஞ்சம் யோசித்துப்பாருங்களேன். பாவம் இல்லை...

ஆகவே மக்களே!

நான் சொல்ல வருவது என்னவென்றால்.......

என்னவென்றால்.......

என்னவென்றால்.......

ஒரு வெங்காயமும் இல்லை, படிச்சு முடிச்சாச்சில்ல... போய் வேற வேலை ஏதாவது இருந்தா பாருங்க.

உங்களுக்கு விளக்கம் சொல்லியே என் எனர்ஜி வீணாய்ப் போயிடும் போலிருக்கு. பேசிப் பேசி டயர்டாகிடுச்சு. போய் சாப்பிட்டுட்டு வர்றேன்... அப்புறம் பார்க்கலாம், என்ன...?

மக்களே! இதுல சொல்லாம விட்ட இன்னோரு முக்கியமான விஷயமும் இருக்கு. ஆபீஸ் டென்ஷனோட, மெட்ராஸோட மத்தியான மட்டை வெயில்ல (குமுட்டி அடுப்புக்குள்ள உக்காந்த மாதிரி இருக்கும் ஹீட்டு) சோத்துக்கு ஹோட்டல் தேடி அலையும் போதுதான் ஊர்ல இருந்து எவனாவது சொந்தக்காரன் போன் பண்ணி.... "நீ என்னை மதிக்கறதே இல்ல, எனக்கு போன் பண்றதே இல்ல, மெட்ராஸ் போனவுடனே பெரிய ஆளாயிட்டேன்னு நெனப்பு... எனக்கு மரியாதையே தர்றதில்ல"ன்னு குடைச்சல் குடுத்தா (கிட்டத்தட்ட மெட்ராஸ்ல சுத்தற எல்லா பேச்சுலர்களுக்கும், இப்படி கடுப்பேத்த ஊர்ல ஒரு ரத்த சொந்தக் காரன் இருக்கான்) அவன் மேல கொலைவெறி வராது உங்களுக்கு?

கருத்துக் குத்து, காது குத்து என எதுவாயிருந்தாலும் குத்துங்க

வீரப்பன் அவுட்டு

இந்தக் கட்டுரை விகடனால், ஐ மீன், யூத்ஃபுல் விகடனால் நிராகரிக்கப்பட்டது. ஏன்? யோசியுங்களேன். படித்து முடித்தவுடன் புரிந்து கொள்வீர்கள். (ஆனால் சில மாதங்கள் கழித்து உயிர்மையுடைய உயிரோசை.காமிற்கு அனுப்பிய போது எந்த ஒரு முகச்சுளிப்பும் இன்றி உடனடியாக வெளியிடப்பட்டது.)

வீரப்பன் அவுட்டு

முன்னொரு காலத்தில்....

மக்கள் அனைவரும் மகிழ்ச்சியாய் இருந்தனர்...

மாதம் மும்மாரி பொழிந்தது...

மண் வளம் செழித்திருந்தது...

விவசாயம் நன்றாய் நடந்தது...

காடுகள் செழிப்பாய் வளர்ந்திருந்தன...

மரங்கள் வெட்டி, கடத்தி விற்கப் பட்டுக் கொண்டிருந்தன..

அப்போ நாம …?

நாம நாடறிஞ்ச ஒரு தினசரில மாச சம்பளத்துக்கு வேல பாத்துட்டு இருந்தோம். கிட்டத்தட்ட மூணு வருஷம். லைஃப்ல முதல் வேலை.. சின்ன வயசு வேறயா, ஜாலியா இருக்கும். நைட் ஷிஃப்டு. சாயங்காலம் ஆறு மணிக்கு ஆபீஸூக்குப் போனா நடுராத்திரி பேப்பர் பிரிண்டிங் ஆரம்பிச்சு பர்ஸ்ட் ப்ரூஃப் பாத்துட்டு கெளம்ப ரெண்டு மணியாவும். எல்லாரும் சின்னப் பசங்க. பன்னண்டு மணிக்குள்ள சடசடன்னு வேலய முடிச்சுட்டு உக்காந்து பேப்பர் படிப்போம், புக் படிப்போம், ரெண்டு மணி வரைக்கும் டி.வி பாப்போம். எடிட்டரும் எதும் சொல்ல மாட்டாரு.. சரி விடு, சின்னப் பசங்க தான. வேலய முடிச்சுட்டா என்ன வேணா பண்ணட்டும்னுடுவாரு..

நம்ம டிபார்ட்மெண்டுல மட்டும் ஆள் கம்மிங்கறதால பகல்லயும் அப்பப்ப வந்து எட்டிப் பாக்க வேண்டியிருக்கும். அப்படியே மத்த டிபார்ட்மெண்டுகளுக்கும் போறது. அதனால பல டிபார்ட்மெண்ட் வேலைகளையும் கத்துக்கற வாய்ப்பும் கிடைச்சது. கொஞ்ச நாள் எல்லாம் நல்லாத்தான் போயிட்டு இருந்தது. ஆனா அங்க நமக்கு கொஞ்சம் பவர் ஏற ஆரம்பிக்கும் போது நமக்கும் ஏ.ஓவுக்கும் முட்டிகிச்சு. பனிப்போராவும் மாறிடுச்சு. ஏ.ஓ சொன்ன பல விஷயங்கள் பிராக்டிகலாகவும் சரி, ரூல்ஸ் படியும் சரி, ஒத்துப்போகாத விஷயங்களா இருந்தது. அதனால மக்கள் பல பேரு நம்ம சைடுல.

அந்த பனிப்போர் கிட்டத்தட்ட ஆறு மாசம் நடந்தது. அது ஒரு முடிவுக்கு வரணும்னா யார்னா ஒருத்தர்தான இருக்கணும், யார வச்சிக்கலாம்?, ஒரு உறையில ரெண்டு கத்தி, ஒரு குகையில ரெண்டு சிங்கம் எப்படி இருக்க முடியும்? தலைவருக்குத்தான் டெஸிக்னேஷன் அதிகம். அதனால.. அதனால... நம்மள அனுப்பிட்டாய்ங்க. நாம சும்மா விடுவமா? உப்பு, காரம் நெறய சாப்புடற ஆளாச்சே. நீ என்னடா என்ன அனுப்பறது.. நானே ரிஸைன் பண்றேன்னு கம்பீரமா கெளம்பியாச்சு. அய்யய்யோ, ரொம்ப தூரம் போயிட்டனா? சரி அத விடுங்க. இப்போ அது முக்கியம் இல்ல. நம்ம ஆபீஸூல ஒருநாள் (உண்மையாகவே) சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நிகழ்ச்சி நடந்தது. கும்பலா எல்லாரும் சேந்து பல்பு வாங்குனோம். அதப்பத்தி பேசுவோம்.

சம்பவம் நடந்த அன்னிக்கு (சம்பவமாஆஆஆஆ??????????????) நமக்கு வீக் ஆஃப்பு.. (ஆப்பு இல்லீங்க ஆஃப்பு, அதாவது வார லீவு) சரி சும்மா வீட்ல படுத்துத்தூங்கறதுக்கு நைட்டு செகண்ட் ஷோ போயிட்டு வரலாமேன்னு கெளம்பிட்டேன். இங்கிலீஷ் படம், மேட்ரிக்ஸ் செகண்ட் பார்ட்டுன்னு நினைக்கிறேன். எங்க ஊருல சும்மா ஒரே ஒரு கிலோ மீட்டர் சரவுண்டிங்குல கிட்டத்தட்ட பதினேழு சினிமா தியேட்டருங்க இருக்கும். (இப்ப இல்லை. என்னைக்கு கே டி.வி வந்துதோ அப்பயே நெறைய தியேட்டருங்கள மூடியாச்சு, சிலது காம்ப்ளக்ஸ் ஆயிடுச்சு) டிக்கெட் கிடைக்காதுங்கற பேச்சே இல்ல. எதுக்காவது டிக்கெட் கிடைக்கலன்னா இன்னோரு படத்துக்கு போகலாம்.

நம்ம ஆபீஸ் கூட மார்க்கெட் போன ஒரு பழைய நடிகை மாதிரிதான். பழைய நடிகையை ஒரு தொழிலதிபர் கல்யாணம் பண்ணிக்குவாரே… அந்த மாதிரி வீணாப் போன, அதாவது வாழ்க்கையைத்தொலைச்ச ஒரு பழைய சினிமா தியேட்டரை வாங்கி அதுக்குள்ளாற நடந்துகிட்டு இருந்தது எங்க ஆபீஸ். ஆக்சுவலி நான் உக்காந்திருந்த இடம் தரை டிக்கெட்டு. ஸ்கிரீன் இருந்த இடத்துல லே-அவுட் செக்ஷன். பேப்பர் பிரிண்டிங் நடக்குற இடம்தான் பால்கனி. இன்னமும் அந்த இடத்துல பால்கனி டிக்கெட்டு 4.50ன்னு எழுதின மார்க் இருக்கு.

அப்படி ஒரு அட்மாஸ்பியர்ல இருந்ததால லீவு விட்டா உடனே படத்துக்கு தான். அந்த மாதிரி ஒருநாள் சினிமாவுக்கு போயிட்டு, படம் முடிஞ்சு வரும் போது தான் வீரப்பன் செத்தாச்சுன்னு நியூஸூ. நம்ம குணசேகரன் சாரு (பக்கத்து ஊர் லோக்கல் ரிப்போர்ட்டரு) ஆன் தி வே ல பாத்தாரு. ஆபீஸ்ல நியூஸ் குடுத்துட்டு ரிட்டர்ன் பஸ் புடிக்கப் போற வழியில என்னைப் பாத்து இந்த நியூஸை சொல்லிட்டுப்போயிட்டாரு.

நமக்கு பரபரப்பு பத்திகிச்சு. இனிமே எங்க வீட்டுக்குப் போறது..? கிடுகிடுன்னு ஓடுனேன் ஆபீஸூக்கு. எவ்ளோ பெரிய ஸ்கூப். ஹாட் நியூஸூ.. (யப்பா.. வீரப்பன் நல்லவரா, கெட்டவனான்னு எல்லாம் பேச வரலப்பா நானு. யாரு செத்தாலும் நமக்கு நியூஸூ) போய் ஆபீஸூல என்னதான் நடக்குதுன்னு பாப்போம்னு போனேன். போயி கேட்ல தூங்கிட்டு இருந்த செக்யூரிட்டிகிட்ட என்னய்யா மேட்டர்னு கேட்டா ஆமாங்க சார் ஒரே பரபரப்பா இருக்குன்னான்.

அவன் என்னா பரபரப்பப் பாத்தானோ தெரியல.. கேட்டு கிட்ட ஒரு ஈ, காக்கா வராது, உள்ளயும் சரி. வெளிய ரோட்லயும் சரி. ஒரு பய வரமாட்டான். கேட்டுக்கும் ஆபீஸூக்கும் ஐநூறு அடி தூரம் இருக்கும். அவன் கிட்ட டி.வி கி.வி எதும் கிடையாது. ஆனா பரபரப்பா இருக்குதாமாம் அவருக்கு. சரி போன்னு அவன்ட்ட சொல்லிட்டு உள்ள போனா ஆபீஸே பரபரன்னு இருக்கு, அங்கயும் இங்கயும் தவ்விட்டு இருந்தானுங்க பசங்க. என்னடான்னு கேட்டா " கார்த்தி, உனக்கு விஷயம் தெரியுமா? வீரப்பன சுட்டுக் கொன்னுட்டாங்க போலீஸ்" னாங்க. தெரியும்டா பையா, அதுக்கு நீங்க ஏன்டா இவ்ளோ பரபரப்பா இருக்கீங்க. என்ன நடந்தாலும் உனக்கு நியூஸூ.

எடிட்டோரியல் போனா எடிட்டர் புடிச்சிக்கிட்டாரு என்னைய.. டேய். உன்னைத்தான் காணோமேன்னு நெனச்சிகிட்டு இருந்தேன். நீயா வந்து மாட்டிகிட்ட. நீ வந்தது நல்லதாப்போச்சு. இவுங்களுக்கெல்லாம் போனப்போடச் சொல்லி பேசுன்னு முக்கியமான ஆளுங்க நம்பரயெல்லாம் குடுத்தாரு. அப்படியே பசங்களுக்கு காபி, டீ, ஸ்நாக்ஸ் வாங்கச்சொல்லி கொஞ்சம் ஆபீஸ் பாயை அனுப்பு, ________________ பேப்பர்காரங்கள்ட்ட பேசி ஒரு (பிரிண்டிங்) டோனர் வாங்கிக்குடு, புரூஃப்ல எவனும் டி.வி பாக்கப் போகாம பாத்துக்கோ.. ரிப்போர்ட்டர் பாலசுப்ரமணி எந்தக் கடையில விழுந்து கிடக்கான்னு பாத்து அவன இழுத்துட்டு வர ஆள் அனுப்பு.. ன்னு வரிசையா ஒரே ஆர்டர்.

யோவ் என்னாய்யா இதுன்னா.. (அவரும் நாமளும் நல்ல அண்டர்ஸ்டாண்டிங்ல இருந்தோம், எப்படின்னு கேக்குறீங்களா? அதெல்லாம் சொல்ல முடியாது, சீக்ரெட்) இதுக்குத்தாண்டா உன்னைய தேடிட்டிருந்தோம்னாரு அவுரு. எல்லாத்தையும் கலந்து கட்டி செய்ய அவருக்கு ஆள் வேணும். நமக்குதான் அங்க ஆல் இன் அழகுராஜான்னு பேராச்சே. எல்லாத்துலயும் கைய வப்பமே.. சரி செய்வோம்னு எல்லாத்துக்கும் ஆர்டர் போட ஆரம்பிச்சாச்சு. பிரிண்டிங்குக்கு வேற டைமாச்சு. கொஞ்சம் ஃபோர்மேன்கிட்ட சொல்லி மெஷின நிறுத்தி, ஆனா ரெடியா வைக்கச் சொல்லுன்னாரு.

பிரிண்டிங் பன்னண்டரை, ஒரு மணிக்குள்ள ஆரம்பிச்சாதான் எல்லா ரீஜனையும் கவர் பண்ண முடியும். ஆபே ஆட்டோ, லாரி, வேனெல்லாம் வரிசையா ரெடியா நிக்கும். எதாவது முக்கியமான நியூஸ் வர லேட்டாகும்னு தெரிஞ்சா பெண்டிங்குல இருக்குற வேற ஏதாவது நியூஸப் போட்டு சிட்டி அவுட்டருக்குப்போகுற அளவுக்கு மட்டும் பிரிண்டப் போட்டு முதல்ல அனுப்பிடணும். இதுல வேன், லாரி அனுப்ப முடியாத அளவுக்கு கெபாஸிட்டி இருக்குற ஊருக்கெல்லாம் கவர்மெண்டோ, பிரைவேட்டோ பஸ் கவர் போட்டு அனுப்பனும். சும்மா வெறும் நூறு, எறநூறு சர்குலேஷன் இருக்குற எடத்துக்கெல்லாம் அப்படித்தான் போகும்.

ஆனா மெஷினெல்லாம் நல்லா ஃபாரின் மெஷினு.. கடகடகடன்னு அடிச்சித்தள்ளும். மூணு ரீல் பேப்பரை மாட்டி கலர் கரெக்ஷன் பாத்து செட் பண்ணி விட்டுட்டு உக்காந்தா அதே ஆரம்பிக்கும் வேலய.. முதல் முப்பது நாப்பது பேப்பர் மட்டும் கலர் செட் ஆகாம வேஸ்டாப் போகும். பிரிண்டிங் செக் ஷ ன் பசங்க மெஷின் மேலயே நின்னுட்டு இருப்பானுங்க. கிட்டத்தட்ட ஒம்போது பேரு.. போர்மேன் கீழ நின்னுட்டு முதல்ல வர்ற பேப்பரை பாத்துட்டு கடகடன்னு கரெக்ஷன் சொல்லுவாரு. படபடன்னு அட்ஜஸ்ட் பண்ணுவானுங்க பசங்க.

(அப்பத்தான் ஒருத்தன் கைய உள்ள உட்டு ரெண்டு வெரல பலி கொடுப்பான். மெஷின நிறுத்தி கழுவி விட்டு, சரி பண்ணி, நடுப்பற அந்த கைப்புள்ளைய ஒரு டீம் (கவர்மெண்ட்) ஆஸ்பத்திரிக்குத் தூக்கிட்டுப் போயி, களேபரமெல்லாம் முடிஞ்சு மறுபடியும் பிரிண்டிங் ஸ்டார்ட் ஆக முக்கா மணி நேரமாவும்) கலர் கரெக்ஷன் செட் ஆகறதுக்கு முந்தி வீரப்பன பாக்கணுமே. சூப்பரா இருக்கும், வீரப்பன் என்ன? விஜயகாந்தாவே இருந்தாலும், செவப்பு, மஞ்சள், ஆரஞ்சு, பச்சைன்னு கலர் கலரான மூஞ்சியோட இருப்பாங்க பிரிண்டுல...

அட... வீரப்பன் நியூஸூ என்னாச்சுங்கறீங்களா? வர்றேன், வர்றேன். இந்த மெஷின் களேபரத்தை எல்லாம் முடிச்சிட்டு அப்புறம் எடிட்டோரியலுக்குப் போகலாம் இருங்க. அங்க போனப்புறம் தான் ஃபுல் மேட்டரையும் சொன்னாங்க. வீரப்பனை ஒரு பெரிய ஆபரேஷன் நடத்தி ஒரு போலீஸ் டீமே சேர்ந்து என்கவுன்டர்ல சுட்டுப் பிடிச்சுட்டாங்களாம். தலையில குண்டு பாய்ஞ்சிருச்சாம். ஆனா ஒன்லி பாடி. அது ஒரு சின்ன ஊரு. அந்த ஊரு ஜி.ஹெச்சுல கொண்டாந்து போட்டிருக்காங்களாம் வீரப்பன் பாடிய.

நம்ம ஆளுங்க அந்த ஊருல நம்ம லோக்கல் ரிப்போர்ட்டர் எவன்னு பாத்து தேடி கண்டுபுடிச்சி (அப்போல்லாம் மொபைல் போனு அவ்வளவு பேமஸ் ஆகல, அது 2004ன்னு நெனைக்கிறேன். மெள்ள மெள்ள அப்பத்தான் பேமஸ் ஆகிட்டிருந்த காலம்) அந்த ரிப்போர்ட்டரை புடிச்சு, பயபுள்ள புதுசா கல்யாணமானவன் வேற. அப்பதான் பொண்டாட்டிய கட்டி புடிச்சிகிட்டு படுத்திருக்கான். அவன் நினைச்சு பாத்திருப்பானா நமக்கு இப்படி ஒரு வாய்ப்பு வரும்னு? (யோவ்,,, கட்டிப்புடிக்கறத சொல்லலய்யா, வீரப்பன் மேட்டரை சொன்னேன்) மேட்டரை சொல்லி எழுப்பி அனுப்பி விட்டிருக்காங்க.

அங்க என்னடான்னா ஹிண்டு பேப்பர்ல இருந்தெல்லாம் தனியா காரு வச்சிகிட்டு லேப்டாப், நெட் கனெக் ஷனோட வந்து இறங்கிட்டாங்களாம். லேப்டாப்புன்னா என்னன்னே தெரியாது அப்ப எங்களுக்கு. அதெல்லாம் அதிசயம். நம்மாளு மட்டும் தான் நிராயுதபாணியா போய் நின்னது. இதுல என்னன்னா எங்க பேப்பருக்கான பிரிண்டிங் ரீஜன்லதான் அந்த சின்ன ஊரு வந்தது. ஸோ, தமிழ்நாடு புல்லா எங்க கனெக்ஷன்ல இருக்கற எல்லா எடிசனுக்கும் நாங்கதான் நியூஸூம் போட்டோவும் கலெக்ட் பண்ணி அனுப்பிச்சாகணும்.

அதனால நம்ம ரிப்போர்ட்டர் (ரிப்போர்ட்டர் ரிப்போர்ட்டர்னு சொல்றதப் பாத்துட்டு பெரிய லெவல்லல்லாம் யோசிக்காதீங்கப்பா, ஒரு நியூஸ் பேப்பர்ல லோக்கல் ரிப்போட்டருக்கெல்லாம் சம்பளமே கெடயாது. பேரு பெத்த பேரு. தாக நீலு லேதுதான். 500 ரூபா, 750 ரூபா மாசத்துக்கு, கன்வேயன்ஸ் மட்டும்தான். பேருதான் ரிப்போர்ட்டர், அப்பப்போ அவனுக்கு லோக்கல்ல கரண்ட் கட் டைமிங், கால்நடை மருத்துவ முகாம், கண்சிகிச்சை சிறப்பு முகாம், நாய்க் கண்காட்சின்னு வாரத்துக்கு ஒரு நாலு நியூஸ் வந்தாகணும். பாவம் அவனும் எதையாவது செய்யணுமில்ல) பய என்ன பண்றதுன்னு தெரியாம போய் முழிச்சிகிட்டு நிக்கிறான்.

நம்ம ஹெட் ஆபீஸ் போட்டோகிராபர் அப்பத்தான் கைல இருந்த ஒத்தை டிஜிட்டல் கேமராவைத் தூக்கிகிட்டு பஸ்ல கெளம்பியிருக்கார். அவரு ஊர் போய் சேர்றதுக்குள்ள விடிஞ்சிரும். மறுநாள் எடிஷனுக்குத்தான் அந்த போட்டோவை யூஸ் பண்ண முடியும். ஸோ.. என்ன ஆனாலும் நம்ம லோக்கல் ரிப்போர்ட்டர் அனுப்புற படத்தைத்தான் இன்னிக்கு நியூஸூக்கு யூஸ் பண்ணியாகணும். எப்படியும் காலைல நியூஸூ வந்தாகணும். அப்புறம் ஒரு வழியா அவன் போயி அங்க இருந்து பக்கத்து ஊருல இருந்த கேமராமேன் ஒருத்தனப்புடிச்சி கேமராவை வாங்கிட்டுப் போயி கூட்டத்துல தள்ளுமுள்ளுல உள்ள பூந்து வீரப்பன் பாடிய போட்டோ எடுத்து (அது பிலிம் கேமரா வேற, போட்டோ எடுத்து, ஸ்டுடியோவுக்கு வந்து, ஃபிலிமைக் கழுவி பிரிண்டப் போட்டு, ஸ்கேன் பண்ணி... இன்னும் எத்தன வேல இருக்கு) ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணுன்னு அங்க இருந்த ஸ்டுடியோ ஒண்ணுதான். அந்த ஸ்டுடியோக் காரனப் புடிச்சி அவன் வீட்டுக்குப் போயி (மக்களே கத நடக்கறது தவ்ளூண்டு குட்டி கிராமத்துல, ஞாபகத்துல இருக்கட்டும்) ஒரு வழியா பிரிண்டப் போட்டாச்சு. நியூஸையும் அனுப்பிச்சிட்டான் நம்மாளு, போன் மூலமாகவே.

ஒரு ரிப்போர்ட்டர் கைலருந்து நியூஸூம், போட்டோவும் எங்களுக்கு வந்து கடைசியில பிரிண்டிங் செக்ஷன் போற வரைக்கும் அது பல கை மாறும். நெட் பாக்குறவன், ஸ்கேன் பண்ணுறவன், கலர் அட்ஜஸ்ட் பண்றவன், பேஜ் பிலிம் எடுக்குறவன், மிக்ஸிங்க் என்ஜினியர், பேஜ் போடறவன், பிரிண்ட் போடறவன், புரூஃப் பாக்குறவன், எடிட்டோரியல் சப் எடிட்டர், பெரிய நியூஸா இருந்தா சீஃப் எடிட்டர் வரைக்கும் போவும். இதுல எங்கனா ஒரு எடத்துல லூஸ் விட்டா என்னாகும், யோசிங்க...

ஒருவழியா எல்லா பிரச்சினையையும் சால்வ் பண்ணி, போட்டோவை மறக்காம முதல் பக்கத்துல போட்டு, நியூஸையும் போட்டு, பேஜ் போட்டு, புரூஃப் பாத்து, பிலிம் போட்டு, பிரிண்டிங் அனுப்பி... அப்பாடான்னு உக்காந்தோம். கொஞ்ச நேரத்துல பிரிண்ட் ஆன பேப்பரையும் பாத்துட்டு, கொஞ்சம் லேட்டானாலும் திருப்தியா, சந்தோஷமா கெளம்புனோம். மூணு, மூணரை வரைக்கும் உக்காந்து வீரப்பன் கதை, வீணாப்போன கதையெல்லாம் பேசிட்டு ஜாலியா விடியக்காத்தால கெளம்பி ஊட்டுக்குப்போனோம்.

அந்த வாரத்துக்கே பர்னிங் இஷ்யூ வீரப்பன் டெத்து தான். அப்போல்லாம் 24 மணிநேர நியூஸ் சேனலும் கிடையாது. பேப்பர் நியூஸ்தான் மக்கள் பாத்தாகணும். இங்கதான் வருது கிளைமாக்ஸ். காலைல விடிஞ்சதும் பேப்பர்ல பாத்தா… டொய்ங்ங்ங்ங்ங.......... எல்லா பேப்பர்லயும் வீரப்பன் தலையில இடது பக்கம் குண்டு பாஞ்சிருந்தது. ஆனா, நம்ம பேப்பர்ல மட்டும் வலது பக்கத்துல. படத்தை ரிவர்ஸ்ல போட்டுத் தொலைச்சிருக்கானுங்க. எப்படிறா ஆச்சுன்னா.. ஸ்கேன் பண்ணின பயபுள்ள ரிவர்ஸ்ல போட்டானோ, இல்ல வேற ஏதாவது டிபார்ட்மெண்ட்காரன் மாத்தித் தொலைச்சானோ தெரியலை. ஆக மொத்தம் பேரு டேமேஜ் ஆயிடுச்சு.

மறுநாள் கலெக்டர் ஆபீஸூக்கு நியூஸ் கலெக்ட் போன எங்க ரிப்போர்ட்டருங்களைப்பாத்து எல்லாரும் வாயால மட்டும் சிரிக்கலை. அன்னைக்கு டாப் ஆஃப் தி டவுன் எங்க பேப்பர் மேட்டர்தான். (அதே போல பேஜூ புரூஃப் பாக்குறதுல, பேஜ் நம்பர் மாத்துறதுல என்னென்ன அட்டகாசம் நடக்கும் தெரியுமா? சண்டே சப்ளிமெண்ட் மொத்தம் 16 பக்கம். ஒருநாள் திடீர்னு 12 பக்கம் ஆக்கிட்டாங்க. ஒரு ரீல் பேப்பர்ல நாலு பக்கம் அடிக்க முடியும். கணக்கு 12, 16, 20ன்னு போவும். அதெல்லாம் தனியா ஒரு தபா சொல்றேன்)

க்ளைமாக்ஸ் என்னாச்சு தெரியுமா? மேட்டர் தெரிஞ்சவுடனே எங்க பாஸூ மெட்ராஸ்ல இருந்து காலைல டிரெயின்ல டிக்கெட்டப் போட்டு வந்துட்டாரு. வந்து எல்லாரையும் வரிசையா நிக்க வச்சு ரிவிட்டு.... பின்ன சாதாரண விஷயமா இது? பகல் ஷிஃப்ட்டு வேலைக்குப் போனவனுக்கெல்லாம் காதுல ரத்தம் வருது. எடிட்டர்ல ஆரம்பிச்சு சீஃப் ரிப்போர்ட்டர், புரூஃப் பாக்குறவன், ஆபீஸ் பாய், டீ குடுக்குறவன்னு கைல சிக்குனவனையெல்லாம் சகட்டு மேனிக்கு தல வெளாசிட்டு இருந்தாரு.

மேட்டர் நமக்கு மத்தியானமே தெரிஞ்சு போச்சு. ஒவ்வொருத்தனுக்கும் செம அர்ச்சனைன்னு... இவனுங்களுக்கே இப்படி விழுந்தா? நாங்கள்லாம் நைட் ஷிஃப்டுல்ல... அப்ப ஸ்டிரெயிட்டா தப்பு பண்ண எங்களுக்கு? ஐ.... போயி வாங்கிக் கட்டிக்கச் சொல்றீங்களா? நானு என்ன பண்ணேன், அழகா தங்கசாமி அண்ணணுக்கு போன் பண்ணி அண்ணே ஒரு ரெண்டு நாள்.....

ஆஸ் ஐயாம் சஃபரிங் ஃப்ரம் ஃபீவர் ஐ யாம் நாட் ஏபிள் டு அட்டெண்ட் தி க்ளாஸ் ஃபார் டூ டேஸ். கைன்ட்லி கிவ் மீ லீவ் பார்.......

எஸ்கேப்ப்ப்ப்ப்ப்........

கைப்புள்ள……..

குதிச்சிரு.....

கருத்துக்குத்து, காது குத்து என எதுவாயிருந்தாலும் குத்துங்க.