புதன், 27 அக்டோபர், 2010

தண்ணி தண்ணி... தவிச்ச வாய்க்கு தண்ணி

கூகுளின் ஜிடாக் சேட்டிங்கில் இருந்த போது சேலம் தேவா (நண்பேன்டா...) ஒரு வீடியோ லிங்க் அனுப்பினான். தண்ணீர் பாட்டில்களின் (மோசமான) உபயோகம் பற்றி. ஒரு ஏழெட்டு நிமிட வீடியோ. கொஞ்சம் பாருங்கள். அப்புறம் பேசுவோம். இதோ அந்த வீடியோ..

Water

பார்த்தாயிற்றா? எவ்வளவு நாசம் செய்கிறோம் நாம் என்று தெரிகிறதா? இந்தக் கணக்கு வாட்டர் பாட்டில்களுக்கு மட்டும். அது தவிர பெப்ஸி, கோக், தம்ப்ஸ் அப், ஃபேன்டா, மிரிண்டா, செவன் அப், ஸ்பிரைட், மாஸா, லிம்கா, ஸ்லைஸ் போன்ற கூல்டிரிங்க் பாட்டில்கள் உபயோகம் தனி. இன்றைக்கு பேருந்துப்பயணங்களிலும், ரயில் பயணங்களிலும் நவநாகரீக இளைஞர்கள் இளைஞிகள் (முக்கியமாக ஐ.டி மக்கள்) இது இல்லாமல் ஏறுவதே இல்லை. இதைப்பார்த்து அடம் பிடிக்கும் குழந்தைகளுக்கும் வாங்கித் தர வேண்டியிருக்கிறது. ரயில்வே ஸ்டேஷனில் வரும் பைப் தண்ணீரை குழந்தைகள் குடிக்க மறுக்கிறார்கள். அது தவிர இந்தியா முழுவதும், ஏன் உலகம் முழுவதும் ஆஸ்பிடல்களில் உபயோகப்படுத்தப்பட்டு தூக்கி வீசப்படும் சலைன் பாட்டில்கள் கணக்கில் இல்லை. அவை தவிர்க்க முடியாதவை..


வீடியோவை பார்த்தவுடன் எனக்கு ஒரு விஷயம் நினைவுக்கு வந்தது. ஒருமுறை அமெரிக்காவில் வசிக்கும் (என்று நினைக்கிறேன்) ஷாஜகான் என்ற அன்பர் "அமெரிக்கா வாசி" என்ற பெயரில் யூத்ஃபுல் விகடனில் ஒரு கதை எழுதியிருந்தார். இந்தியாவுக்கு லீவில் திரும்பி வரும் ஒரு ஆன்சைட் என்ஜினியரின் பார்வையில் இருக்கும் அது.

"அமெரிக்கா வாசி"

ஆனால் அந்தக்கதை இந்தியாவைக்குறை கூறும் விதமாகவே நகரும். அதனால் பின்னூட்டத்தில் பலரும் அதை எதிர்த்து கொந்தளித்திருந்தார்கள். நானும் கொஞ்சம் கொந்தளித்தேன். இதைப்பற்றி காரசாரமாக ஒரு விவாதம் போனது அப்போது யூத்ஃபுல் விகடன் மூலம்...

அந்தக்கதைக்கு யூத்ஃபுல் விகடனில் என்னுடைய பின்னூட்டம் இது..

--------------------------

எதுக்கெடுத்தாலும் அமெரிக்காவ கம்பேர் பண்ணாதீங்க நண்பா... அமெரிக்காவ குறை சொல்ல எங்க கிட்ட ஆயிரத்தைநூறு விஷயமிருக்கு. ஆனா சுத்தம் பத்தி பேசிருக்கீங்கல்ல.. அதனால இத மட்டும் சொல்றேன்... அவனுக்கு வர்ற வியாதி பிரச்சினைகள்ல பத்து சதவீதம் கூட நம்ம ஊர்க்காரனுக்கு வர்றதில்ல.. இவ்வளவு சூடான நாட்ல இருந்துகிட்டு அம்மை நோயையே கன்ட்ரோல் பண்ணவங்க நாம, அதுவும் செலவில்லாம. சத்தியமா அது மாதிரி எல்லாம் அவனால பண்ண முடியாது.

--------------------------

ஆனால் அதற்குப்பிறகும் அந்தக்கதைக்கு பின்னூட்டம் போட்ட இரண்டு பெரிய மனிதர்கள் அமெரிக்கா அமெரிக்கா என்றே பாட்டுப்பாட எனக்கு "சுர்"ராகி விட்டது. மறுபடியும் ஒரு பெரிய பின்னூட்டம் போட்டேன்..

அது இது

--------------------------

அமெரிக்கன்கள் செய்யும் அட்டாகாசங்களுக்கும் சேர்க்கும் குப்பைகளுக்கும் ஒரே ஒரு சாம்பிள். 2004ம் ஆண்டில் மட்டும் 26,000,000,000 லிட்டர் பாட்டில் வாட்டரை குடித்து (மற்ற உபயோகங்கள் தனி) தீர்த்திருக்கின்றனர் (வெறும் 30 கோடி) அமெரிக்கன்கள். கிட்டத்தட்ட 28,000,000,000 பிளாஸ்டிக் பாட்டில்கள் உபயோகப்படுத்தப்பட்டுள்ளன. அதில் 86% குப்பைத்தொட்டிக்குப்போனவை. (வினாடிக்கு 1500 பாட்டில்கள் - அமெரிக்கன்கள் மட்டும்). இந்த பாட்டில்களை உருவாக்க 17,000,000 பேரல்கள் கச்சா எண்ணெய் (அதைப் பயன்படுத்தி 1,00,000 கார்களை ஒரு வருடம் இயக்க முடியும்) உபயோகப்படுத்தப்பட்டன. பாட்டில்களை உருவாக்கும் போது உண்டான கார்பன்-டை-ஆக்ஸைடின் அளவு 2,500,000 டன்கள். அதுமட்டுமல்ல, அந்த பாட்டில்களை மட்டும் உருவாக்க ஆன செலவு $ 100,000,000,000 (100 பில்லியன் டாலர்கள் - இதை வைத்து அமெரிக்க பெடரல் வங்கியையே வாங்கலாம்). இவர்கள் போடும் குப்பைகளால் Aquifer எனும் பூமியின் தண்ணீர் லேயருக்கு ஏற்படும் பாதிப்பு எங்கோ உட்கார்ந்திருக்கும் எனக்கு, உங்களுக்கு, ஷாஜகானுக்கும் சேர்த்துத்தான். இதில் ஒரு விஷயம் கூட ஷாஜகானின் மண்டையில் தோன்றியிருக்காதா? அவர் இருக்கும் கேம்பஸூம், நகரமும் சுத்தமாயிருந்தால் நம்மை குறை கூறுவதா? அந்த இடங்களை சுத்தமாக்கிய ரசாயனப்பொருட்களின் கழிவுகள் எங்கே கொட்டப்பட்டன? தெரியுமா அவருக்கு? பிளாஸ்டிக் பாட்டில்கள், குப்பைகள் நிரம்பி வழியும் அமெரிக்க ஆறுகளின் படங்களை கூகிளில் சர்ச் செய்து பாருங்கள். உண்மை புரியும்.--------------------------

அதையும் மீறி என் கோபம் அடங்கவில்லை மறுபடியும் ஒரு மெயில் தட்டினேன் யூத்ஃபுல் விகடனுக்கு "அமெரிக்க சுத்தம்" என்ற பெயரில்..

--------------------------
அன்புடையீர்,

யூத்ஃபுல் விகடனில் ஷாஜகானின் "அமெரிக்கா வாசி" - சிறுகதையில் இந்தியா திரும்பும் இளைஞனின் புலம்பல்கள் இருந்தன. இந்தியா சுத்தமாக இல்லையே என்று கரித்துக்கொட்டியிருந்தார் அமெரிக்க ரிட்டர்ன் இளைஞர். இந்த மெயிலின் இணைப்பில் உள்ள பவர்பாயிண்ட் பிரசன்டேஷன், தண்ணீர் பாட்டில் விஷயத்தில் மட்டும் (30கோடி) அமெரிக்கர்கள் செய்யும் அட்டகாசங்களை தெள்ளத்தெளிவாக விளக்குகிறது. இதை யூத்ஃபுல் விகடனில் முழுமையாக வெளியிடாவிட்டாலும் அட்லீஸ்ட் ஆற்றில் குப்பையுள்ள இரு புகைப்படங்களையாவது வெளியிடவும், இல்லாவிடில், தயவு செய்து அவருக்கு மட்டுமாவது அனுப்பி வைக்கவும். அவர் பார்க்கட்டும். (அல்லது அவரது மெயில் ஐடி யை வெளியிடவும்) இதெல்லாம் (100கோடி பேர் உள்ள) இந்தியாவில் நடக்கவில்லை என்பது அவர் மண்டையில் உறைக்கட்டும்.

எஸ்கா


--------------------------

ஆனால் ரொம்பவும் காரமாக இருந்தால் அவர்கள் யூத்ஃபுல் விகடனில் வெளியிட மாட்டார்கள். அதனால் எனக்கு அவர்கள் அனுப்பிய ரிப்ளை இது..

--------------------------

அன்பு எஸ்கா,

உங்கள் கோபம் புரிகிறது. நீங்கள் சொல்ல வேண்டியதை 'அமெரிக்கா வாசி' கதையின் பின்னூட்டத்திலேயே சொல்லிவிட்டீர்கள். அந்தக் கருத்து ஏற்கப்பட்டுள்ளது. அதில் முழுமை இருந்தது. அதுவே போதும் என்று கருதுகிறோம். ஷாஜகான் தனது கருத்தை கதை வடிவில் சொல்லியிருக்கிறார். அதற்கான மாற்றுக் கருத்தை நீங்கள் பதிவு செய்துவிட்டீர்கள். இதுவே போதுமானது என்று நினைக்கிறோம்.

நன்றி.

- யூத்ஃபுல் விகடன்.

--------------------------

இப்போது சேலம் தேவா அனுப்பிய லிங்கைப்பார்த்தவுடன் மீண்டும் கொஞ்சம் டென்ஷன் வந்தது. அதற்காகத் தான் இந்தப்பதிவு.

அப்புறம் இன்னோரு விஷயம். முடிந்தால் அவன் ப்ளாக்கை எட்டிப்பாருங்கள். கொஞ்சம் மொக்கைதான் போட்டிருப்பான். ஆனால் வாய் விட்டு சிரிக்கும் படி இருக்கும். ரொம்பவும் ரசனையான பயல் அவன். பதினைந்து வருடத்திற்கு முன்னால் பத்து பைசா போஸ்ட் கார்டில் கச்சா முச்சாவென்று மொக்கையாக (எட்டாவது படிக்கும் போதே - 1994 என்று நினைக்கிறேன்) எழுதி எனக்கு லெட்டர் போட்டவன் அவன். முடிக்கையில் - இப்படிக்கு அன்பான, அறிவான, அழகான, புத்திசாலியான உன் நண்பன் தேவராஜ் என்று முடித்திருப்பான். கடைசி பஞ்ச் லைன் என்ன தெரியுமா? "வீட்ல காட்டிராத" அது எப்படி முடியும்? நேராக எங்கப்பா கைக்கு தான் போனது அது. அவர் வாங்கிப்படித்து விட்டு "யார்றா அவன் தேவா?" என்றார்.

----------------------------------------------------------------------

இந்தக் கட்டுரையை முழுதாக எழுதி முடித்த பிறகுதான் இந்த பரதேசி சேலம் தேவா இன்னோரு லிங்க்கை அனுப்பினான். அது அன்பர் "காக்டெயில் சந்தோஷ்" எழுதிய "பாட்டில் குடிநீர் : அழிவும் அறியாமையும்" என்ற கட்டுரை அதில் அவர் தெளிவாக அழகாக விளக்கமாக ஒரு பதிவு போட்டிருக்கிறார். நன்றாக இருந்தது. இது முன்னமேயே தெரிந்திருந்தால் நான் பதிவே போட்டிருக்க மாட்டேன். (டேய்... தேவா..... வெட்டிப்பயலே.... இருடி... உனக்கு இருக்கு....)

----------------------------------------------------------------------
படித்தாயிற்றா? ஒரு உதவி பண்ணுங்கள்? என்ன உதவியா? உங்களை நான் என்ன கேட்கப்போகிறேன். இன்ட்லியில் ஒரே ஒரு ஓட்டு, அவ்ளோதான். நன்றி.
----------------------------------------------------------------------

செவ்வாய், 26 அக்டோபர், 2010

தலைப்பு இல்ல

இந்தக்கொடுமையை நான் எங்க சார் போய் சொல்லுவேன்? இந்த மாதிரி இந்த மாதிரி பிட்டு பிட்டா பதிவு எழுதி வச்சிகிட்டு, இதுங்களுக்கு பொதுவா ஒரு பேரு வைக்கலாமே, நாளப்பின்ன திரும்பவும் எழுதும் போது தலைப்பு தேவைப்படுமேன்னு பாத்தா ஒரு பொதுத் தலைப்பு கிடைக்கவே மாட்டேங்குது... மிக்சர், நொறுக்கல், வாந்தி, குப்பைத்தொட்டி அப்படி இப்படின்னு எல்லாம் அரை மணிநேரத்துக்கும் மேலா யோசிச்சு யோசிச்சு ஒவ்வொரு பேரா கூகுளடிச்சுப்பாத்தா எல்லா பேருலயும் ப்ளாக்கு இருக்குது. என்ன கொடுமை சார் இது? புள்ளைக்குப் பேரு வைக்க முடியலையே....-----------------------------------
தலைப்புக்காக கட்டுரை எழுதுவது, கருத்து சொல்ல பதிவு எழுதுவது, சமுதாயத்தை முன்னேற்றுவதற்காக எழுதுவது (?) எல்லாம் போக பிட்டு பிட்டாக "கற்றதும் பெற்றதும்" மாதிரி மனதில் என்னவெல்லாம் தோன்றுகிறதோ (ஹோய், ஹோய், ஹோய், ரொம்ப பேசாதடா டேய்) அதை அப்படியே கொட்டப் போகும் இடம் தான் இந்த குப்பைத்தொட்டி (அ) வாந்தி (அ) மிக்சர் (அ) நொறுக்கல் (அ) புது பேரு வைப்போம்.. இப்போதைக்கு "தலைப்பு இல்ல" ன்னு வச்சுக்கலாம்.
-----------------------------------

சி.என்.என் ஹீரோஸ் பட்டியலில் சேர்ந்துள்ள திரு.நாராயணன் கிருஷ்ணன் பற்றிய பதிவை எழுதிய பிறகு எனக்கு புதிதாய் இரண்டு ஃபாலேயார்கள் கிடைத்துள்ளார்கள். சந்தோஷமாக இருக்கிறது. வெறும் 13 ஃபாலேயார்கள் வைத்துக்கொண்டு ஏண்டா இந்த பில்ட் அப் என்கிறீர்களா? நான் ஒன்றும் பிரபல பதிவர் கிடையாது. ஏதோ ஒரு டைரி எழுதுவது போல எழுதிக்கொண்டிருக்கிறேன். டைரியைப்பொதுவில் வைப்பதால் டீசன்டாக எழுத வேண்டும் என்று கும்மி அடிக்காமல் எழுதிக்கொண்டிருக்கிறேன். மெயில் மூலமாக வரும் கடிதங்களுக்கு மெயில் மூலமாகவே பதில் அனுப்பி விடுகிறேன். வேலை அதிகமாக இருப்பதன் காரணமாக மற்றவர்களின் பதிவுக்கு பின்னூட்டமும் போடுவதில்லை, பதிவுகள் எழுதவே நேரம் கிடைப்பதில்லை. அதையும் மீறி ஒன்றிரண்டு பதிவுகள் எழுத முயற்சிக்கிறேன். அப்படி எழுதும் போது ஃபாலோயர்கள் எண்ணிக்கை அதிகமானால் ரொம்பவும் சந்தோஷமாக இருக்கிறது.

-----------------------------------

இந்த ஆண்டு தென்னாப்பிரிக்காவில் நடந்த உலகக் கோப்பை காலபந்துபோட்டியின் போது, காலிறுதி, அரையிறுதி மற்றும் இறுதிப்போட்டி உள்பட 8 போட்டிகளின் முடிவுகளை துல்லியமாக கணித்துக் கூறியதால் உலகம் முழுவதும் காலபந்து ரசிகர்களிடையே மிகுந்த பிரபலம் அடைந்தத ஆக்டோபஸ் பால் இறந்து போய்விட்டதாம். ஒரு டவுட்டு - தான் எப்போது இறக்கப் போகிறோம் என்று அதற்குத் தெரிந்திருக்குமோ?

-----------------------------------

திடீர்னு தோணிய ஒரு கவிதை (மாதிரி)

அவள் என்னருகில்
இல்லையென்றால் என்ன?
அவள் நினைவுகளும்,
அவள் புகைப்படமும்,
காதுகளில் ரீங்கரிக்கும்
அவள் குரலோசையும்
எனக்குப்போதும்.

- இது யாரைப்பற்றி இருக்கும்னு சொல்லுங்க பாக்கலாம்?

-----------------------------------

நம்ம கம்பேனி இஸ்கூலுக்கெல்லாம் டிஜிட்டல் பாடம் குடுக்குற கம்பேனி. டீச்சருங்க பசங்களுக்கு பாடம் சொல்லித்தர்றதுக்காக.. டிஜிட்டல் பாடமா? அப்படின்னா எப்பிடி?

புரியுற மாதிரி சிம்பிளா சொல்றேன். நாமள்லாம் படிக்க சொல்லோ எப்டி படிச்சோம். பிரிண்ட் அடிச்ச புக்குல இருக்குறதை, கலர் கூட இல்லாம, படம் கூட இல்லாம படிச்சோம். அந்தப்பாடம் எல்லாம் விஷூவலா இருந்தா எப்படி இருக்கும்னு யோசிங்க.. அதாவது ஹார்ட் பீட்டு, சாணக்யா, அசோகா, ட்ரயாங்கிள், எர்த் குவேக்கு, அந்தக் காலத்து கோவில்கள், ராஜாக்கள், கிட்னி, தவக்காளையை குப்புற போட்டு அறுக்குறது, கடல் தண்ணியில இருந்து உப்பு எடுக்குறது, எல்.கே.ஜி ரைம்ஸூ... அப்டி இப்டின்னு எல்லா பாடமும்...

அதுவும் கிளாஸ் ரூமுக்குள்ள எல்லா பசங்களும் பாக்குற மாதிரி பெருசா, அதுவும் டீச்சரோட ஒயிட் போர்டுல, அதுவும் அங்கங்க ஃப்ரீஸ் செஞ்சு அது மேல டிஜிட்டல் மார்க்கரால நோட் பண்ணி நோட் பண்ணி சொல்லிக்குடுக்குற மாதிரி.. எப்படி இருக்கும்னு யோசிச்சுப்பாருங்க... அதான் டிஜிட்டல் பாடம்.

அதுக்காக ஒரு புது இஸ்கூலுல டீச்சருங்களை ஒக்கார வச்சி ஒரு டெமோ எடுத்துகிட்டு இருந்தேன். கூட்டத்துல ஒரு சின்னப்பய உக்காந்திருந்தான். (சின்னப்பய சாவகாசம் ஆகாதுங்கறது சரியா தான் இருக்கு) சரி, சும்மா இருக்கானே அவனுக்கு ஒரு ரைம்ஸ் போட்டுக்காமிக்கலாமேன்னு "ட்விங்கிள் ட்விங்கிள் லிட்டில் ஸ்டார்" போட்டு விட்டேன். ஆ-ன்னு பாத்துட்டே இருந்த பயபுள்ள திடீர்னு (விவேக்கு கிட்ட வையாபுரி கேக்குற மாதிரி) கேட்டான்யா ஒரு கேள்வி "மாமா இதுல சுட்டி டி.வி வருமான்னு".

நான் "பே"ன்னு முழிச்சுட்டு நிக்க கும்பலே என்னைப்பார்த்து சிரிச்சுது.

இது எனக்குத் தேவையா?

-----------------------------------

அப்புறம் எனக்கு வந்த ஒரு எஸ்ஸெம்மெஸ்ஸூ

செல்போனைக்கண்டு பிடிச்சவன் வேணும்னா இங்கிலீஸ் காரனா இருக்கலாம். ஆனா மிஸ்டு காலை கண்டு பிடிச்சவன் தமிளன்...டா......

-----------------------------------

அப்புறம் இன்னோரு எஸ்ஸெம்மெஸ்ஸூ நம்ம டாகுடரு பத்தி...

விஜய் என்பது யார்?
எவன்(ர்) ஒருவன்(ர்) தெலுங்கில் சூப்பர் ஹிட்டடித்த ஒரு படத்தை கர்ச்சீஃப் கலர் கூட மாற்றாமல் தமிழில் எடுத்து ப்ளாப் ஆக்குகிறானோ அவனே(ரே) விஜய் என்பவன்(ர்) ஆவான்(ர்).

-----------------------------------
படித்தாயிற்றா? ஒரு உதவி பண்ணுங்கள்? என்ன உதவியா? உங்களை நான் என்ன கேட்கப்போகிறேன். இன்ட்லியில் ஒரே ஒரு ஓட்டு, அவ்ளோதான். நன்றி.
-----------------------------------

ஞாயிறு, 24 அக்டோபர், 2010

ஓட்டு போடுங்க


ஆனந்த விகடன் இணைய தளம் மதுரை இளைஞர் கிருஷ்ணன் பற்றிய ஒரு கட்டுரையை வெளியிட்டுள்ளது. இதோ அதில் இருந்து சில பாராக்கள்.

-----------------------------
மதுரை இளைஞர் கிருஷ்ணன்... சி.என்.என். (CNN) தேர்ந்தெடுத்துள்ள உலகின் சிறந்த 10 மனிதர்களுள் ஒருவர்.

சமூக அக்கறை, நம்பிக்கை, விடா முயற்சி இவற்றை மட்டுமே மூலாதாரமாகக் கொண்டு இந்தப் பூமியில் மாற்றத்தைக் கொண்டு வர முனைந்து செயல்படுவோரைக் கண்டறிந்து, ஆண்டுதோறும் சிறந்த மனிதர்களை உலகுக்கு அடையாளம் காட்டி வரும் திட்டமே 'சி.என்.என். ஹீரோஸஸ்'.

இதில், 2010 ஆம் ஆண்டுக்கான உலகின் சிறந்த 10 மனிதர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ள ஒரே இந்தியர், தமிழரான கிருஷ்ணன். (இவர், முதலிடம் பெறுவது உங்கள் கையில் - விவரம் கீழே)

தனி மனிதர் ஒருவருக்கு உணவில்லாதபோது, அவரது வயிற்றுச் சோறிட்டு வருபவர் இவர்.

கிருஷ்ணனை 2005 ஆம் ஆண்டே வாசகர்களுக்கு அடையாளம் காட்டியது விகடன். அவரது சமூகப் பணியின் ஆரம்பகட்ட நிலை குறித்து ஜூலை 31, 2005 தேதியிட்ட ஜூனியர் விகடனில் வெளிவந்த செய்திக் கட்டுரை இதோ ஒரு ஃப்ளாஷ்பேக்காக...

-----------------------------------------------

இது "நேசம் கிருஷ்ணன்... உன்னத மனிதருக்கு உலக அங்கீகாரம்!" என்ற தலைப்பில் ஆனந்த விகடன் வெளியிட்ட அந்தக் குறிப்பிட்ட கட்டுரையின் லிங்க்
http://www.vikatan.com/news/news.asp?artid=5281
-----------------------------------------------

இது குறித்து அன்பர் ஜாக்கி சேகர் வெளியிட்டுள்ள பதிவின் லிங்க்
http://www.jackiesekar.com/2010/10/1803102010_24.html

-----------------------------------------------

இன்னும் சில வரிகள் அதே விகடன் கட்டுரையில் இருந்து
----------------------------------------------
உலகின் சிறந்த 10 மனிதர்களைத் தெரிவு செய்துள்ள சி.என்.என்., அவர்களில் ஒருவரைத் தேர்ந்தெடுத்து 'சி.என்.என். ஹீரோ ஆஃப் தி இயர்' என்ற கெளரவத்தை அளிக்க இணையத்தில் வாக்கெடுப்பு நடத்தி வருகிறது.

சி.என்.என். தெரிவுப் பட்டியலில் இடம்பெற்றதால் இப்போது 25,000 டாலர்கள் பரிசுத் தொகை கிடைத்திருக்கிறது. இந்த ஆன்லைன் வாக்கெடுப்பில் முதலிடம் பெற்றால், கிருஷ்ணனுக்கு 1,00,000 டாலர்கள் பரிசுத் தொகை கிடைக்கும். அது, அவரது கனவுத் திட்டத்துக்கு உறுதுணை புரியலாம்.

இந்திய இணையவாசிகள் தங்கள் வாக்குகளைப் பதிவு செய்தாலே கிருஷ்ணன் வெற்றி பெறுவது உறுதி!
----------------------------------------------
நீங்க யாரோ எவரோ, உங்களுக்கு என்னை தெரியுமோ தெரியாதோ, எனக்குத் தெரிந்தவரோ தெரியாதவரோ யாராக இருந்தாலும் பரவாயில்லை. தயவு செய்து ஒரு ஓட்டுப்போடுங்கள். ரெண்டே நிமிடம் தான் ஆகும். உங்களுக்குத் தெரிந்த பெரியவர்கள் யாராவது கூட இதன் மூலம் உதவப்படலாம் இல்லையா?

மற்ற பதிவர்களுக்கும் ஒரு வேண்டுகோள். ஒவ்வொரு பதிவருக்கும் பல ஃபாலோயர்கள் உண்டு. உங்களை நம்பி நூற்றுக்கணக்கான முறை பக்கங்கள் திறக்கப்படுகின்றன. இது குறித்த ஒரு பதிவு வெளியிட்டால் இது இன்னும் பலரையும் போய்ச்சேரும். ஏதோ நம்மால் முடிந்த வரை தலைக்கு நூறு பேரை ஓட்டுப் போட வைக்கலாம் இல்லையா?

1,00,000 டாலர்கள் என்றால் நம்ம ஊர் மதிப்பில் சுமார் 43 அல்லது 44 இலட்சம் ரூபாய் வரும். அதை வைத்து இன்னும் எவ்வளவு பேருக்கு உதவி செய்யலாம்? நமக்கு என்ன கஷ்டமான வேலை? ஒரே ஒரு ஓட்டு தானே?
----------------------------------------------
நீங்கள் ஓட்டுப்போட வேண்டிய சி.என்.என் இணையத்தின் லிங்க் இது.
http://heroes.cnn.com/vote.aspx

நவம்பர் 18-ம் தேதிவரை வாக்கெடுப்பு நடைபெறுகிறது.

இதே டாப் டென் லிஸ்டில் என்னுடைய அடுத்த சாய்ஸ் "அனுராதா கொய்ராலா".

-----------------------------------
படித்தாயிற்றா? ஒரு உதவி பண்ணுங்கள்? என்ன உதவியா? உங்களை நான் என்ன கேட்கப்போகிறேன். இன்ட்லியில் ஒரே ஒரு ஓட்டு, அவ்ளோதான். நன்றி.
-----------------------------------

வெள்ளி, 8 அக்டோபர், 2010

ஆரோகணம் அவரோகணம்

இந்த கர்நாடக இசையில் ஆரோகணம் அவரோகணம் என்று இரண்டு சொல்வார்கள். தெரியுமா? அப்படி என்றால் என்ன என்கிறீர்களா? சினிமாவையே எடுத்துக் கொள்ளுங்களேன். அதாவது கர்நாடக சங்கீதம் சம்பந்தப்பட்ட படங்களில் எல்லாம் ஹீரோவும், ஹீரோயினும் அல்லது ஹீரோவும் காமெடி வில்லனும் போட்டி பாடல் பாடும் போது ஆரம்பத்தில் இந்த ச, ரி, க, ம, ப, த, நி, ச... என்று படிப்படியாக ஏற்றியபடியே ஒரு முறை பாடுவார்கள். அப்புறம் சா, நி, த, ப, ம, க, ரி, ச... என்று இறக்கிப்பாடுவார்கள் பார்த்திருக்கிறீர்களா? ஸாரி, கேட்டிருக்கிறீர்களா? அவைதான் ஆரோகணம் அவரோகணம் . முதல் செட்டில் ஏற்றிப் பாடுவது ஆரோகணம். இரண்டாவது செட்டில் இறக்கிப்பாடுவது அவரோகணம்.

இது நம்ம ஆளு படத்தில் கூட பாக்யராஜ் போட்டி பாடல் பாடும் போது ஷோபனாவை சுரவரிசை (ஸ்வர வரிசை - ஏழு ஸ்வரங்களின் வரிசை) பாடாதே என்று கேட்டுக்கொள்வார். ஆனால் அம்மணி நேரம் பார்த்து சுரவரிசை பாடி அவரை காலை வாரி விடுவார். அந்தப்படம் மட்டுமில்லாமல் எல்லா படங்களிலுமே கர்நாடக சங்கீதப்போட்டி என்று ஆரம்பித்து அந்த ஒரு வரியை மட்டும் பாடிவிட்டு அதுக்கு அப்புறம் அவர்கள் சாதாரணமாக தமிழுக்குத் தாவி பாடல் பாடத்துவங்கி விடுவார்கள்.

அதுசரி. சாதாரண ரசிகனுக்குப் புரிய வேண்டும் அல்லவா? முழுக்க முழுக்க சரிகம.... சரிகம.... சரிகம.... என்றே பாடிக்கொண்டிருந்தால்? முழுக்க கர்நாடக இசை பற்றிய படமான சிந்து பைரவியில் கூட அப்படித்தான். கர்நாடக இசைக்கச்சேரி செய்யும் பாடகரை ஒரு ரசிகை தடுத்து தமிழ்ப்பாடல் பாடி ரசிகர்களை வசியப்படுத்துவார். (பாலச்சந்தரின் க்ளாஸிக்குளில் ஒன்று...சிவகுமார், சுஹாசினி..)

ஆரோகணம், அவரோகணம் இரண்டும் கலந்து தான் எந்த ஒரு பாடலையும் அமைக்க முடியும். அதாவது ஏற்ற இறக்கத்துடன். பாடல் மட்டுமல்ல.. பேசுவது கூடத்தான். வெறும் ஏற்றம்? அல்லது இறக்கம்? அதாவது ஆரோகணத்தை மட்டுமே கொண்டு ஏற்ற வரிசையிலோ அல்லது அவரோகணத்தை மட்டுமே கொண்டு இறக்க வரிசையிலோ ஒரு பாடல் அமைக்க முடியுமா?

முடியாது என்று சொன்னவர்களை எம்.எஸ்.வியும் இளையாராஜாவும் தடுத்தாட்கொண்டார்கள். பழைய ஆயிரத்தில் ஒருவன் படத்தில் வரும் "அதோ அந்த பறவை போல வாழ வேண்டும்" பாடல் அப்படி ஒரு ஸ்பெஷல் பாடல். இசை? வேறு யாரு? மெல்லிசையில் கலக்கிய மன்னரான எவர்க்ரீன் எம்.எஸ்.விஸ்வநாதன் தான். அப்படி ஆரோகணத்தில் மட்டுமே (மற்ற இசையமைப்பாளர்களுக்கு சவால் விட்டு) அமைக்கப்பட்ட ஏற்ற வரிசைப் பாடல் அது.

அதற்குப்பிறகு நம்ம இளையராஜாவும் அதே மாதிரி ஆரோகணத்தில் மட்டுமே அமைந்த ஒரு பாடலை “சிந்து பைரவி” படத்தில் "கலைவாணியே உனைத்தானே, அழைத்தேன். உயிர்த்தீயை" என்று சிவகுமாரின் ரீ-என்ட்ரி சமயத்தில் பாடுவதாக அமைத்திருப்பார். அதிலும் அவரோகணம் கிடையவே கிடையாது. ஒன்லி ஆரோகணம். அந்தப்பாடல் படத்தில வரும் போது ஒரு நடிகர் (பேர் மறந்து போச்சு) வந்து இதைப்பற்றி லீட் கொடுத்து விட்டுப்போவார். இந்த இரண்டு பாடல்களும் தமிழ் சினிமா சரித்திரத்தில் இரு மைல்கல்கள்.

நம்ம ஏ.ஆர்.ரஹ்மான் அப்படி ஏதும் ஆரோகணத்தில் முயற்சி செய்திருக்கிறாரா? செய்திருப்பதாகத் தெரியவில்லை. செய்திருந்தால் சூப்பராக இருக்கும். அப்படி ஏதும் தகவல் தெரிந்தால் யாரேனும் பின்னூட்டம் போடுங்கள். ஏன் ஏ.ஆர்.ஆர் மட்டும் என்கிறீர்களா? 75 ஆண்டு காலத்திற்கான தமிழ் திரைப்படங்களை மொத்தமாக கணக்கெடுக்கும் போது தலைமுறை வாரியாக பார்த்தால் எம்.எஸ்.வி, இளையராஜா, அடுத்ததாக ஏ.ஆர்.ரஹ்மான் என்று மூன்று பேர்தான்அவுட்ஸ்டாண்டிங்-ஆக நிற்கிறார்கள்.கே.வி.மகாதேவன், ராமமூர்த்தியில் ஆரம்பித்து சந்திரபோஸ், ஷங்கர் கணேஷ், மனோஜ்-கியான் என்று பயணித்து யுவன் ஷங்கர் ராஜா, ஹாரிஸ், விஜய் ஆன்டனி என்று தொடரும் தமிழ் சினிமா இசையமைப்பாளர்கள் லிஸ்ட் மிக மிக மிகப் பெரியது. ஆனால் டைம் ட்ராவல் செய்து பார்த்தாலும் கடைசியாக எஞ்சி விஞ்சி நிற்பது இவர்கள் மூவர் மட்டும் தான். அதனால் தான் ஆரோகணம் மேட்டரில் எம்.எஸ்.வி, இளையராஜா மட்டுமில்லாமல் ரஹ்மானும் ஒரு பாடல் போட்டால் நன்றாக இருக்கும் என்பது என் ஆசை.

இந்த ஏழு கட்டை, எட்டு கட்டை (நாட்டு கட்டைலாம் இல்லை) எல்லாம் கூட அப்படித்தான். அவ்வை சண்முகியில் ருக்கு ருக்கு ருக்கு பாடலுக்கு முன் மாமிகள் "மாமி எத்தனை கட்டை" (நான் செம கட்டை என்று கத்தினேன் தியேட்டரில்) கேட்கும் போது ம்ம்ம்ம்ம்ம்........ ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்........ என்று ஒரு முறை பாடிப்பார்த்து விட்டு அஞ்சு என்பார் மாமி கமல். பாய்ஸ் படத்தில் பாடல் பதிவு செய்யும் போது ஹரிணி (அப்போ ஹரிணி தானே, இப்போ தான் ஜெனிலியா... அதுவும் ஃபாஸ்ட் ட்ராக் விளம்பரத்தில் வரும் ஜெனிலியா!!!!!!!! ம்ஹூம்.. முடியல) கூட நாலா என்று கேட்கும் நகுல்-இடம் இதே மாதிரி ம்ம்ம்ம்ம்ம்........ ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்........ என்று ட்ரை செய்து விட்டு ஆமாம்.. என்பார் அவர்.. அதெல்லாம் இதில் தான் வருகிறதாக்கும்.

இந்த மேட்டரெல்லாம் எனக்குக்கூட தெரியாமல் தான் இருந்தது. ஆனால் இப்போல்லாம் விஜயில் சூப்பர் சிங்கர்கள் மற்றும் சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சிகள் பார்க்கும் போது தான் ஒவ்வொரு ரவுண்டிலும் பாடகர்களை வார்த்தைகளையும் வரிகளையும் பிட்டு பிட்டாக பாடச்சொல்லி அப்படியே அக்கக்காக பிரித்து மேய்வார்கள் நடுவர்கள் என்று உட்கார்ந்திருக்கும் பெரிய பெரிய பாடகர்கள். அதையெல்லாம் பார்த்துத்தான் ஓஹோ, இப்படியெல்லாம் பல மேட்டர்கள் இருக்கிறது போல என்று நம் சிறுமூளை (சிறுமூளைன்னா சிறுமூளை இல்லைங்க. சிறிய மூளை)- க்கும் தெரிய வருகிறது.

என்னடா இது சம்மந்தமே இல்லாமல் திடீரென்று கர்நாடக சங்கீதம் பற்றியெல்லாம் பேசுற? எப்படி உனுக்கு இந்த அறிவு என்கிறீர்களா?

அது ஒன்றுமில்லை. நீண்ட நாட்களுக்குப்பிறகு பஸ்ஸில் எம்.ஜி.ஆரின் பழைய பாடல்களை ராஜ் வீடியோ விஷனில் பார்த்தபடியே ஒரு பயணம் செய்ய நேர்ந்தது. கிட்டத்தட்ட பதினைந்து சூப்பர் டூப்பர் ஹிட் எம்.ஜி.ஆர் பாடல்கள். அதில் பல பாடல்கள் மெலடி வகை. மழைச்சாரல் தூவ டிரைவர் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டே பாடல்கள் பார்த்தபடியே பளிச்சென்ற ஈரமான ரோட்டை ரசித்தபடியே ஒரு பயணம். ஓசூரில் இருந்து கிருஷ்ணகிரி வரை கிட்டத்தட்ட ஒன்றரை மணிநேரம் அப்படியே மிதந்து கொண்டே போனது மனது. இதைக்கூட அதே பஸ்ஸில் இருந்து தான் டைப் செய்து பதிவேற்றுகிறேன்.


அதில் வந்த ஒரு பாடல்தான் ஆயிரத்தில் ஒருவன்-ல் இருந்து "அதோ அந்த பறவை போல" பாடல். அதிசயமாக மேலும் ஒரு மணி நேரம் கழித்து "கலைவாணியே"வும் ஒளிபரப்பானது. அப்புறம் கொஞ்ச நேரத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் ஹிட்ஸ். அதையெல்லாம் பார்த்தவுடன் தோன்றியவைதான் இவையெல்லாம். ஆனால் நிஜமாகவே ஒரு க்ளாஸிக் ஃப்ரைடே தான் இது என்று சொல்ல வேண்டும். நாளை இருமத்தூரில் இருக்கும் ஒரு பேரன்ட் டெமோ, நாமக்கல்லில் செய்ய வேண்டிய பேமென்ட் கலெக்ஷன், சேலத்துக்கு ஒரு ஆர்.சி ரெக்ரூட்மெண்ட் எல்லாவற்றையும் மறக்க வைத்த ஒரு இரவுப்பயணம் இது.

டேய்.. போதும்டா போ... என்கிறீர்களா? ரைட்டு.. ஓக்கே.. பஸ் ஸ்டாண்டு வந்தாச்சு, இறங்கணும். பை... பை...

-----------------------------------
படித்தாயிற்றா? ஒரு உதவி பண்ணுங்கள்? என்ன உதவியா? உங்களை நான் என்ன கேட்கப்போகிறேன். இன்ட்லியில் ஒரே ஒரு ஓட்டு, அவ்ளோதான். நன்றி.
-----------------------------------

திங்கள், 4 அக்டோபர், 2010

அழைப்பு

(இக்கட்டுரை உயிர்மையின் நேற்றைய (அக்டோபர் 4-ம் தேதி) உயிரோசை டாட் காம் இணைய இதழில் வெளியானது.)
--------------------------------------------------------------------------------
நைட்டு பன்னிரண்டே கால் மணி இருக்கும். ஓசூரில் இருந்து பயங்கர டயர்டாகி சேலம் வந்து, புது பஸ் ஸ்டாண்டில் பசியோடு இறங்கி கைவலியில் சூட்கேஸை தலைக்கு மேல் தூக்கியபடி, லேப்டாப்பை ஒதுக்கியபடி ஹோட்டல் ஏதாவது இருக்கிறதா என்று தேடியபடி உள்ளே நடந்தால், ஒரு ஓரமாக இருந்து "ஹெலோ...." என்று நளினம் கலந்த குரலில் ஒரு அழைப்பு.

பகீரென்று இருந்தது.

ஒரே இருட்டு. மச மசவென்று. மழை ஈரம் வேறு. வெளிப்புறமாகவே பஸ்ஸில் இறங்கி ஷேர் ஆட்டோ நிற்கும் இடத்தில் இருக்கும் சிறு திறப்பு வழியாக உள்ளே இறங்கிப்போனால் தர்மபுரி, கிருஷ்ணகிரி, பெங்களூரு வண்டிகள் நிற்கும். எந்திரன் போஸ்டர்கள் அங்கே ஒட்டப்பட்டிருக்கும். அந்த திறப்பிற்கு முன்பு இருந்து தான் இந்த அழைப்பு. பார்த்தால் உருவம் நல்ல ஆஜானுபாகுவாக இருந்தது. நம்ம சைஸூக்கு அவ்ளோ பெரிய உருவத்தைப்பார்த்தால் கை நடுங்க ஆரம்பித்து விட்டது.

நல்ல ஜிகுஜிகுவென்ற நிறத்தில் சேலை. கிட்டத்தட்ட ஸ்லீவ்லெஸ் போன்ற கையுடனான முழுதும் கீழிறங்கிய ஜாக்கெட். பளிச்சென்ற மேக்கப்புடனான முகம். உதட்டைத் துடைத்தபடி என்னை நோக்கிய கூர் பார்வை.. அந்த அகால நேரத்தில் ஓவர் மேக்கப் கொஞ்சம் பயமாகவே இருந்தது. லேசாக அசைந்தபடி சைகை காண்பித்தது அந்தப் பெண் உருவம். உற்றுப்பார்த்தால் அது பெண் அல்ல.


---------------------------------------------------

மும்பைக்கு அடுத்தபடியாக "அந்த" மேட்டரில் எங்க ஊர்தான் ஃபேமஸ் என்று பல பத்திரிகைகளில் படித்திருக்கிறேன். ஜூ.வி முதற்கொண்டு நெற்றிக்கண் வரை ஏதாவது கிசுகிசு மேட்டர்களில் இந்த மாதிரி மேட்டர்கள் தான் இருக்கும். முன்பெல்லாம் பெண்கள் மட்டும் தான் இருப்பார்கள் என்று நினைக்கிறேன். இப்போது திருநங்கைகள் கூட. அதிலும் பெண் தன்மை அதிகமாக இருந்தால் ரேட் உயருமாம். அவர்கள் சொல்லும் இடத்தில் தனி ரேட், கஸ்டமர் இடத்திற்கு தனி ரேட், நேரக்கணக்கு மணிக்கணக்காக நீள்கிறது - அதற்கு தனி ரேட். (ரேட் கட்டர்-லாம் கிடையாதாம்)

ராஜேஷ்குமார் கூட ஒருமுறை ஊர்வாரியாக ஊர்களை மையமாக வைத்து குமுதத்திலோ, விகடனிலோ கதை எழுதிய போது எங்க ஊரைப்பத்தி மட்டும் பலான மேட்டருக்கு ரெய்டு போய் உயிருக்கு ஆபத்தை சந்திக்கும் குமரகிரி பெண் இன்ஸ்பெக்டர் கதையை எழுதியிருந்தார். அதைப்படிக்கும் போது இவர்கள் எல்லாம் எங்கே இருப்பார்கள் என்று பலநாள் யோசித்திருக்கிறேன்.

புது பஸ் ஸ்டாண்டு பக்கம் ஒரு சைடில் ஓரமாக வரிசையாக நிற்பார்கள், அல்லது பஸ் ஸ்டாப்பில் கூட நிற்பார்கள் என்று சொல்வான் கோவிந்தன். ஆனால் நான் இதுவரை பார்த்ததே இல்லையே, ஒருவேளை நான்தான் வேளை கெட்ட வேளைகளில் போயிருக்கிறேனோ என்னவோ, அல்லது நான் ரொம்ப நல்ல பிள்ளையோ, அல்லது அவன் சொன்ன அடையாளங்கள் பொருந்திப் போகவில்லையோ என்று ஒரு டவுட்டு இருந்தது.

ஒருமுறை இதை வைத்து ஒரு கட்டுரை எழுதலாம் என்று தகவல் திரட்டும் போது கோவிந்தனிடம் போன் செய்து திரும்பக் கேட்டால் நீ இன்னும் வயசுக்கு வரலடா மச்சி என்று சிரித்தபடியே போனை வைத்துவிட்டான். சைக்கிளை எடுத்துக் கொண்டு அவன் சொன்ன பழைய பஸ் ஸ்டாண்டு பக்கமும் இரண்டு நாட்கள் சுற்றினேன். ஆனால் அவன் சொன்ன அடையாளங்கள் பல பேருடன் பொருந்திப் போயின. கருத்து கேட்கலாம் என்றால், அது அதிக அளவில் கிராம மக்கள் வந்து போகும் இடம். ஒரு வேளை தவறுதலாக ஏதேனும் பிரச்சினை ஆகி விட்டால் என்ன செய்வது என திரும்பி வந்து விட்டேன்.

இதே போல் போன வருடம் கல்கத்தா போனபோது கூட அங்கே (அங்கேன்னா? அங்கேன்னா அங்கே தாங்க - "சோனாகாச்சி" - தெரியாத மாதிரி கேக்குறது...) எட்டிப்பார்க்கலாமா? என்று ஒரு குறுகுறுப்பு இருந்தது. ஆனால் பயம். நெஞ்சு முழுக்க பயம். (பழைய) ஆபீஸில் சொல்லியனுப்பினார்கள். கொல்கத்தால மூணு ஆபீஸ் இருக்கு. அதுல விபின்-னு ஒரு பிராஞ்ச் மேனேஜர் இருக்கான். பார்த்துக்கோடா, அவன் ஆபீஸில் இருந்து எட்டிப்பார்த்தாலே பின்பக்கம் அந்த இடம் தெரியும் என்று. ஆனால் சுவ்ரோ கூடவும் ஷூப்ரா கூடவும் சுற்றியதில் அந்த மேட்டர் மறந்தே போயிற்று.


ஆச்சா? கிட்டத்தட்ட ஒரு வருடம் ஆகி விட்டது.. கொல்கத்தாவும் மறந்து போயாயிற்று.. இப்போது திடீரென்று இங்கே நம்ம ஊரிலேயே (என்னையும் பெரிய மனுஷனாக மதித்து) ஒரு புதிய அழைப்பு. இவர்களை எல்லாம் எங்கே, எப்படிப் பார்ப்பது என்று ரொம்ப நாள் யோசித்த ஒரு விஷயம். அது திடீரென்று அது எங்க ஊரிலேயே நடக்கும் என நான் நினைக்கவே இல்லை. ஆனால் அந்தப் படபடப்பு இன்னமும் போகவில்லை.

எத்தனை பேர் இதில் ஈடுபட்டிருப்பார்கள், பெண்கள், திருநங்கைகள், இவர்கள் எப்படி வந்தார்கள்? அவர்கள் வருமானம், போலீஸ், மாமூல், கேஸ், அரசியல்வாதிகள், ரெளடிகள், என்றெல்லாம் எண்ணிபடி திரும்பி வந்தேன். இப்போதெல்லாம் பஸ் இறங்கியதும் உடனே அந்தப்பக்கம் திரும்பிப் பார்க்கத் தோன்றுகிறது. தினமும் கண்ணில் படுகிறார்கள். பரிதாபமாக இருக்கிறது.

(கடைசி வரை அன்றைக்கு எங்கேயும் ஹோட்டல் இல்லை. பசியோடு தான் திரும்ப வேண்டியிருந்தது)

-----------------------------------
படித்தாயிற்றா? ஒரு உதவி பண்ணுங்கள்? என்ன உதவியா? உங்களை நான் என்ன கேட்கப்போகிறேன். இன்ட்லியில் ஒரே ஒரு ஓட்டு, அவ்ளோதான். நன்றி.
-----------------------------------

சனி, 2 அக்டோபர், 2010

எந்திரன் - சில (பல) கேள்விகள் (ஐ... ஜாலி... ஜாலி... எந்திரன் பாத்தாச்சே.....)

வெறும் மூன்று ரூபாய் தரை டிக்கெட்டிலேயே சங்கீத்தில் வாரா வாரம் இங்கிலீஷ் படம் பார்த்து வளர்ந்தவன் நான். சுப்ரகீத்தில் ஆறு ரூபாய். அப்புறம் தரை டிக்கெட்டை பத்து ரூபாய் ஆக்கினார் கலைஞர். ஆக படம் பார்க்க பத்து ரூபாய் போதும். ஆனால் நான் அதிக பட்சம் செலவு செய்தது என்று பார்த்தால் "மேட்ரிக்ஸ் ரீலோடட்"-கு 17 ரூபாய் ஃபர்ஸ்ட் கிளாஸ், “கிளாடியேட்டர்” 20 ரூபாய், “மைட்டி ஜோ யங்”-குக்கு 22 ரூபாய் பால்கனி, பிறகு டிக்கெட் விலை ஏறிய பின் “கஸீனோ ராயல்”-கு 30 ரூபாய், “க்வான்டம் ஆஃப் சோலேஸ்” 35 ரூபாய், அப்புறம் சென்னையில் காசு கொடுத்து பார்த்த “போக்கிரி” 40 ரூபாய், ஆபீஸில் தவிர்க்க முடியாமல் டீமாகப்போன “சரோஜா” 85 ரூபாய்.

ஆசைப்பட்டு பார்த்த ஒரே படமான அவதார் 120 ரூபாய் (நூற்றியிருபது ரூபாய் - த்ரீ டி கண்ணாடி உட்பட சத்யம் தியேட்டரில் - அது விதிவிலக்கு). அது தவிர என் வாழ்க்கையிலேயே முதன் முறையாக ஒரு படத்துக்கு நூத்தி ஐந்து ரூபாய் கொடுத்து பார்த்திருக்கிறேன் என்றால் அது எந்திரனுக்குத்தான். அதே போல் முதல் நாளிலேயே பார்த்த ஒரே தமிழ் படமும் இது தான். மத்ததெல்லாம் நிதானமாக ஒரு மாதம் கழித்து பார்த்தாலே போதும். ஆனால் தமிழ்நாட்டின் இண்டு, இடுக்கு, மூலை, முடுக்கு மற்றும் பிட்டு படம் போடும் தியேட்டர்களில் எல்லாம் எந்திரன் மட்டுமே ஓடினால் டிக்கெட் ஈஸியாகக் கிடைக்காதா என்ன?

அதுவும் நைட் ஷோ இரண்டு டிக்கெட். எனக்கொன்று. எங்க நைனாவுக்கு ஒன்று. ப்ளஸ் ஒரு முறுக்கு பாக்கெட். இரண்டு பாப்கார்ன். மூன்று ஸ்பிரைட். இரண்டு ஸ்வீட் கார்ன். ஒரு வாட்டர் பாட்டில். (நைனாவை பக்கத்தில் வைத்துக்கொண்டே கத்தித் தீர்த்ததில் கட்டிப்போன தொண்டையை சரி செய்ய) ஒரு ஸ்ட்ரெப்சில்ஸ். ஆக மொத்தம் எந்திரனுக்காக இந்த மாத குடும்பச்செலவில் கை வைத்தது ரூபாய் முன்னூற்று முப்பத்து இரண்டு. அதுவும் சேலம் என்ற ஊரில் ஒரு சாதாரண ஒதுக்குப்புறமான தியேட்டரில், இதையே சத்யத்தில் பார்த்துத் தொலைத்திருந்தால் ஆயிரத்தைநூறு ரூபாய் மொய்யாகி இருக்கும். (நான் போயிருக்கவே மாட்டேன். அது வேற விஷயம்..)

அப்புறம் நேற்று எந்திரன் பார்த்து விட்டு இன்றைக்கு வேலைக்குப்போகாமல் எங்க நைனா கட்டடித்ததில் மார்ஜினல் லாஸ் தனி. அதையும் கூட்டிக் கொள்ளுங்கள். இனிமேல் அவரையெல்லாம் கூட்டிக்கொண்டு போகக்கூடாது என்று தோன்றினாலும் அந்த மனுஷனுக்கு ரஜினியும், ராமராஜனும் ரொம்பப்பிடிக்கும் என்பதால் மன்னித்து விட்டு விட்டேன். பாட்ஷாவும், கரகாட்டக்காரனும் அவரது ஃபேவரைட். டிவியில் அந்தப்படங்கள் போடும் அன்றைக்கு வேலைக்கு லீவு போட்டு விடுவார்.

சரி. சொந்தக் கதை எதுக்கு? போதும். எந்திரன் படம் பற்றிப்பேசுவோம். பயப்படாதீர்கள். நான் விமர்சனம் எழுதவில்லை. நெட்டில் நோண்டும் பலரும் படம் பார்த்திருப்பீர்கள் அல்லது உங்களுக்குக் கதை தெரிந்திருக்கும். அப்படியும் தெரியாதவர்கள் "எந்திரன்" என கூகுளிட்டோ, தமிழ்மணத்திலோ, இன்ட்லியிலோ கதையைப்படித்து விட்டு வாருங்கள். இரண்டே நாள்தான் ஆகியிருக்கிறது. ஆனால் கிட்டத்தட்ட அனைத்து பதிவர்களும் "எந்திரன்" பற்றி பதிவு போட்டுள்ளார்கள். நாமளும் எதையாவது போடுவோம் என்று தோன்றியது...

பதிவாகப்போடுவதற்குப் பதில் கேள்வியாகக்கேட்டால்? (போட்ட காசுக்கு நாலு கேள்வியாவது கேட்கணும் இல்லையா?) இந்தக்கேள்விகளை பலரும் கேட்கிறார்கள்.. கேட்காவிட்டாலும் பலர் மனதில் இந்தக் கேள்விகள் உட்கார்ந்திருக்கின்றன.. காப்பி என்று சொல்லாதீர்கள். ரெடி.. விடு ஜூட்.. கதையை படித்துத் தெரிந்து கொண்டு விட்டு இந்தக் கேள்விகளை படியுங்கள்..

இதோ கேள்விகள்...

21-ம் நூற்றாண்டின் இம்மாம் பெரிய அச்சீவ்மெண்டைச் செய்யும் விஞ்ஞானிக்கு இருக்கும் உதவியாளர்கள் இவ்வளவு மொக்கையாக இருப்பார்களா?

டிரெயினில் முப்பது நாற்பது பேரை புரட்டியெடுக்கும் ஒருவரை போலீஸ் தேடவே தேடாதா?

நாடே பரபரக்கும் ஒரு பெரிய வழக்கில் ஒரு ரோபோவின் சாட்சியை நீதிமன்றம் ஏற்றுக்கொள்ளுமா?

இந்தியாவில் எந்தக் கேஸ் ஒரே நாளில் முடிகிறது?

ரோபோவை டிஸ்மேன்டில் பண்ணிடுங்க - என்று சிம்பிளாகச் சொன்னால் போதுமா? அதை உருவாக்கிய ஃபார்முலா வசீகரனின் மண்டையிலும் ஃபைலிலும் இருக்காதா? அதை என்ன செய்வதாம்?

அழிவு செய்யும் ரோபோவின் ஓனரான விஞ்ஞானியை அரெஸ்ட் செய்யாமல் அவரையே புராஜெக்டுக்கு தலைவராக்கும் மாங்கா போலீஸ் எந்த ஊரில் இருக்கிறது?

ரோபோவை உருவாக்கவே பத்து வருட ஆராய்ச்சி தேவைப்பட்டால், அதற்கு உணர்ச்சிகள் கொடுக்க சும்மா போர்டில் பாடம் நடத்தினால் போதுமா?

சர்வ வல்லமை உள்ள ஒரு ரோபோ தயாரானால் அந்த ஃபார்முலாவைக் கவர சர்வதேசத் தீவிரவாதிகளோ, காங்க்லோமெரேட் கம்பெனிகளோ முயற்சிக்க மாட்டார்களா?

நூற்றுக்கணக்கான போலீஸையும், ராணுவத்தையும், பொது மக்களையும் கொலை செய்யும் ரோபோவை தயாரித்த ஒரு விஞ்ஞானியை மனித உரிமை ஆர்வலர்கள் சும்மா விட்டு விடுவார்களா?
ரோபோவைத் துரத்தும் போலீஸ்காரர்கள் ஐஸ்வர்யா ராய் காருக்குள் இருக்கிறார் என்பதைப்பார்க்காமலே சுடுவார்களா?

ராணுவத்திற்கு கொடுக்க ரோபோவை உருவாக்கும் ஒரு விஞ்ஞானிக்கு அதற்கான கமாண்டு-களை யார் வேண்டுமானாலும் மாற்றலாம் என்ற சின்ன விஷயம் தெரியாதா?

பத்து வருடம் உழைத்து தயாரித்த ஒரு ரோபோவை "நியூரோ சிப்"பை டெமாலிஷ் செய்யாமல் சும்மா தூக்கி குப்பையில் போடுவாரா ஒரு விஞ்ஞானி?

ரஜினியே இரண்டு அல்லக்கை அரைகுறை விஞ்ஞானிகளை வைத்திருக்கும் போது அயல்நாட்டு தீவிரவாதிகளுக்கு ரோபோ சப்ளை செய்யும் அளவுக்கு பெரியாளான அவரது விஞ்ஞானி புரபஸர் ஆள் பலம் இல்லாமல் தனியாகச் சுற்றுவாரா?

ஒரு சாதாரண குடிமகனின் பத்து இலட்ச ரூபாய் டீலிங்கில் எல்லாம் தலையிடும் ரெளடிகள், அரசியல் வாதிகள் எல்லாம் இவ்ளோ பெரிய மேட்டர்களில் தலையிடவே மாட்டார்களா?

ரோபோ பற்றியே படம் எடுத்தாலும் கும்பல் கும்பலாகவே ஆட்கள் வரிசையாக நின்று ஆடும் டான்ஸ்களை எப்போது நிறுத்துவார்கள்?

சுஜாதா இருந்திருந்தால் படத்தைப்பார்த்து விட்டு என்ன சொல்லியிருப்பார்?

வில்லனாக ரகுவரன் இருந்திருந்தால் எப்படி இருந்திருக்கும்?

----------------------------------------------------------------------------------

சரி போகட்டும். கொஞ்சம் பொது அறிவு கேள்விகள் கேட்கலாமா?...

இது ரஜினி படமா? ஷங்கர் படமா?

இந்தப்படத்தில் அஜீத் அல்லது கமல் நடித்திருந்தால் என்ன ஆகியிருக்கும்?

கிளைமாக்ஸ் கதை விவாதத்தில் இராம.நாராயணன் கலந்து கொண்டாரா?

ஒரு சூப்பர் ஸ்டாரே சாதாரணமாக அறிமுகம் ஆவதைப்பார்த்தாவது சுமோ டாப்பைக்கிழித்து, ஏரோப்ளேனில் ஃபுட்போர்ட் அடித்து, ஆட்டோவைக்கையால் தூக்கியபடி அறிமுகமாகும் மற்ற ஹீரோக்கள் கொஞ்சமாவது திருந்துவார்களா?.

போட்ட காசுக்கு மேல் திரும்பி வந்தால் மீண்டும் இதே கூட்டணியில் படம் எடுப்பாரா கல்லா நிறைய நிதி வைத்திருக்கும் மாறன்?

எந்திரனில் எடுக்கும் காசை கலாநிதி மாறன் மருதநாயகம் தயாரிப்பில் விடுவாரா?

எந்திரனில் ரஜினியின் சம்பளம் எவ்வளவு இருக்கும்? சம்பளமாக இருக்குமா? பர்சன்டேஜாக இருக்குமா?

டிவியில் கலாநிதி மாறன் பேரை காண்பிக்கும் போதெல்லாம் பின்னணியில் கேட்கும் ஆய், ஊய், விசில் சத்தங்கள் தியேட்டரில் கேட்கவில்லையே ஏன்?

எதிர்பார்த்தபடி கலெக்ஷன் ஆகி இலாபம் வந்தால், சன் டி.வி ஷேர் விலை எவ்வளவு ஏறும்?

காமன் வெல்த் போட்டிக்கு வரும் வெளிநாட்டு வி.ஐ.பிக்களுக்கு எந்திரன் படத்தை போட்டுக்காண்பிப்பார்களா?

எந்திரன் படத்தைப்பார்த்து பாராட்டியதற்காக கலைஞர் ஐயா அவர்களுக்கு பாராட்டு விழா வைப்பார்களா? அப்படி வைத்தால் அது சன் டி.வியில் வருமா? கலைஞர் டி.வியில் வருமா?

எல்லா தியேட்டரிலும் எந்திரனே ஓடினால் மற்ற படங்களை பார்க்க விரும்புபவர்கள் எங்கே போவது?

ஷங்கர், "த்ரீ இடியட்ஸின்" பிரசவக் காட்சியை சுட்டு எந்திரனில் வைத்திருக்கிறாரே? தன் அடுத்த படமான த்ரீ இடியட்ஸ் தமிழ் ரீமேக்கில் அந்தக் காட்சியை என்ன செய்வார்?

அமரர் சுஜாதாவுக்கு ஒரு அஞ்சலி கார்டு போட்டிருக்கக் கூடாதா?

படம் பார்க்காதவர்களை படம் பார்த்தவர்கள் இன்னுமா (?) எந்திரன் பாக்கலை என்று துக்கம் விசாரிக்கிறார்களே, ஏன்?

ரஜினி அடுத்த படத்துக்கு என்ன செய்வார்? இந்த அளவுக்கு பில்டப் யார் கொடுப்பார்கள்?
ரஜினியின் அடுத்த படத்தைத் தயாரிக்கப்போவது க்ளவுட் நைன் மூவீஸ் தயாநிதி அழகிரியா? ரெட் ஜெயன்ட் மூவீஸ் உதயநிதி ஸ்டாலினா?
----------------------------------------------------------------------------------

ஓக்கே, படித்தாயிற்றா? கமர்ஷியல் படத்தில் லாஜிக் எல்லாம் பார்க்கக் கூடாது என்று அட்வைஸ் செய்ய வருவீர்களே? அல்லது என் மீது கோபப்பட்டாலும் படுவீர்களே? நோ டென்ஞன் பாஸ்.. எந்திரன் மேல் எனக்கொன்னும் கோவம் இல்லை. நானும் ரஜினி ரசிகன்தான். ஆனா சும்மா நாமளும் இருக்கோம்கிறதை காட்டிக்கணும் இல்லையா? அதுக்குத்தான்.. ஓக்கேவா? கூல்... (இன்னும் நிறைய கேள்விகள் இருக்கு. எல்லாத்தையும் கேட்டால் அடிக்க வருவீர்கள். பை பை..)

-----------------------------------
படித்தாயிற்றா? ஒரு உதவி பண்ணுங்கள்? என்ன உதவியா? உங்களை நான் என்ன கேட்கப்போகிறேன். இன்ட்லியில் ஒரே ஒரு ஓட்டு, அவ்ளோதான். நன்றி.
-----------------------------------