ஞாயிறு, 11 டிசம்பர், 2016

#செயின்_ரியாக்ஷன் - பீப் சாங்கை முன் வைத்து

சென்ற வருடம் இதே நாளில் ஃபேஸ்புக்கில் போட்ட போஸ்ட் இது.

நகரம், மாநகரம், பெரு நகரம் இவை மூன்று மட்டுமே உலகில் இல்லை.

அங்குள்ள இளைஞர், இளைஞிகளை மட்டுமே பார்த்து விட்டு, இவர்கள் இப்படித்தான் இருப்பார்கள். இவர்கள் இதைத்தான் விரும்புகிறார்கள் என முடிவெடுப்பதும், அவர்களைக் குறி வைக்கும் சினிமாக்கள், பாடல்களை தயார் செய்து வெளியிடுவதும் மிகத் தவறு. அவர்களுக்காக உருவாக்கப்படும் படைப்புகளைத் தான் எல்லோரும் பார்த்தாக வேண்டும்.

சிறு நகரம், கிராமம், குக்கிராமம் போன்றவையும் இங்கே உள்ளன. அவர்களின் உலகம் வேறு. அங்குள்ளவர்களின் கலாச்சாரம் வேறு, வாழ்க்கை முறை வேறு, வருமானம் வேறு. மேற்சொன்ன பிரிவினரைக் குறிவைத்து எடுக்கப் பட்டுள்ள பீப் சாங், ஒரு கிராமத்தில் என்ன ஒரு விளைவைக் கொடுக்கும் என்பதைக் கொஞ்சம் கூட யோசிக்க முடியாதா? பொறுப்புணர்ச்சி கொஞ்சம் கூடக் கிடையாதா இவர்களுக்கு?

மாதர் சங்கங்கள் கண்ணில் இதெல்லாம் படாதா?

முதலில் சினிமாக்களுக்கு தமிழில் பெயர் வைத்தாலே வரிவிலக்கு என்ற விதியை நீக்குங்கள். அப்படி ஒரு விதி இருப்பதால் யாருக்குப் பயன்? தயாரிப்பாளர் என்ற ஒற்றை மனிதருக்கு மட்டுமே. பெயரை மட்டும் தமிழில் வைத்து விட்டு மிகக் கேவலமான கதைகளையும், காட்சிகளையும், படம் முழுக்க ஆங்கில வசனங்கள், ஆபாச வசனங்கள் போன்றவற்றை நிறைத்து வரும் படங்களுக்கு எதற்கு வரி விலக்கு?

சரி, அப்படி வரிவிலக்கு வாங்கி வெளிவந்த படங்கள் எல்லாம் வெற்றி பெற்றதா என்றால், இல்லை, இந்த வருடம் வந்த படங்களிலேயே மொத்தமே 15 அல்லது 18 படங்கள் தான் வெற்றி பெற்றவை என்கிறது இன்னோர் கணக்கு. ஆனால் வரி விலக்கு பெற்றவை எத்தனை படங்கள்? 60 க்கும் மேல். ஸோ, படம் ஓடாமல், மக்களுக்குப் பிடிக்காமல், அந்தத்தயாரிப்பாளர் நஷ்டப் பட்டுத்தான் போயிருக்கிறார்.

இதனால் மட்டும் 300 கோடி ரூபாய் அரசுக்கு வரி இழப்பு ஏற்பட்டிருப்பதாக ஒரு கணக்கு சொல்கிறது. கேவலமான படத்தை எடுத்து விட்டு தமிழில் பெயர் வைத்து விட்டு பல கோடிகளை வரி விலக்கு என்ற பெயரில் காப்பாற்றிக் கொள்ள முடிகிறது ஒரு தயாரிப்பு நிறுவனத்தால். ஆனால் மாதச் சம்பளத்திற்குச் செல்பவனை மட்டும் கழுத்தில் துண்டு போட்டு, வரியைக் கழித்து விட்டுத்தான் சம்பளத்தையே தருகிறது அரசு? இது என்ன முரண்?

அத்தியாவசியத் தேவைகளுக்காக, விவசாயத்திற்காக, கல்விக்கடனுக்காக வாங்கப் படும் லோன்களுக்கு எந்த உதவியும் கிடையாது. விலக்கு கிடையாது. (முந்தைய ஆட்சியில் தள்ளுபடி செய்யப்பட்ட ஒரே ஒரு கடன் தவிர) தயவு தாட்சண்யம் கிடையாது.

ஒரு விவசாயி டிராக்டர் வாங்க லோன் கேட்டால் 13.5 முதல் 16.80 சதம் வரை வட்டி விகிதம் இருக்கிறது. ஆனால் 9.45 சதவீதத்தில் கார் லோன் கிடைக்கிறது. எந்த ஊர் நியாயம் இது?

#செயின்_ரியாக்ஷன்

டி.விக்காரர்கள்

சென்ற வருடம் இதே நாளில் ஃபேஸ்புக்கில் போட்ட போஸ்ட் இது.

சென்னையில் வீடு மூழ்கிய நண்பர் ஒருவரிடம் பேசினேன். முன்னறிவிப்பின்றி ஏரி திறந்து விடப்பட்டதால் திபுதிபுவென வந்த தண்ணீரால் அரை மணி நேரத்தில் தரை தளம் முழுவதும் நிறைந்து விட்டதாம். அடுத்த மூன்று மணி நேரத்தில் முதல்தளமும். இரண்டாம் தளத்திற்கு ஓடியிருக்கிறார்கள். பல ஏரியாக்களில் இதுதான் நிலை.

கொஞ்சம் யோசித்துப் பாருங்கள், நாம் தூங்கும்போதோ, அல்லது வேலைக்குப் போயிருக்கும் போது திடீரென இப்படி நிகழ்ந்தால் வீட்டிலுள்ள பெண்கள், குழந்தைகள் என்ன செய்வார்கள்? வயதானவர்கள் எங்கே ஓடுவார்கள்? ஒரே தளம் மட்டுமே உள்ள வீடுகள் என்ன ஆகும்? என்ன நடக்கிறது, நடக்கப் போகிறது என்றே தெரியாமல் அரை மணி நேரத்தில் எதை எடுப்பது, எங்கே ஓடுவது என எப்படி முடிவெடுப்பது? ப்ளக் பாயிண்டிலும் புகுந்த தண்ணீரால் மின்சாரம் பரவியிருந்தால் என்ன செய்வது? தண்ணீர் வேகத்தில் கதவை இழுத்து மூடக் கூட முடியாதே?

இதுதான் ஆயிரக்கணக்கான குடும்பங்களின் நிலை. கிரைண்டர் போச்சு, மிக்ஸி போச்சு, கேஸ் போச்சு, பீரோ போச்சு, ஆவணங்கள் போச்சு, லேப்டாப், போன், மாத்திரைகள், ஏ.டி.எம் கார்டு, நகைகள், தையல் மிஷின், பாத்திரங்கள், ப்ரிஜ், அரிசி, பருப்பு பொருட்கள் என எவையெல்லாம் இருந்ததோ எல்லாம் போச்சு. இதையெல்லாம் எப்படி சமாளிப்பது? பணம்? எங்கே போய் வாங்குவது? இன்னும் படிந்துள்ள சேற்றழுக்கைக் கூட கழுவ காசு வேண்டும். ரோட்டில் தண்ணீர் வடிந்தால் போதுமா?

எதை வைத்து இயல்பு நிலை திரும்பியது என்று சொல்கிறார்கள் இந்த டி.விக்காரர்கள்? சாலைகளில் தண்ணீர் காய்ந்து, வாகனங்கள் ஓடத்துவங்கினால் ஆச்சா? 

புதன், 19 அக்டோபர், 2016

அளுகாச்சிஅதர்வன் பள்ளிக்குப் போகத் துவங்கி மூன்று மாதங்கள் ஆயிற்று. ஒழுங்காகத் தான் போய்க்கொண்டிருந்தான்.

ஆனால் கடந்த மூன்று நாட்களாக பள்ளிக்குப் போக ஒரே அழுகை. நடுவில் சில வாரங்கள் வெறும் சிணுங்கலோடு நிறுத்தியிருந்தவன், மீண்டும் அழுதுகொண்டே போகத் துவங்கியிருக்கிறான். கும்பகோணம் மகாமகம், பாம்பே ட்ரிப், உறவினர் வீட்டுக் கல்யாணம், விஜயதஸமி லீவுகள் கூடவே "நாங்களே எடுத்துக்குவோம்" லீவுகள், என நடுவில் சிலமுறை நெடும் விடுமுறைகள் எடுத்ததாலோ, அமைந்ததாலோ இருக்கும் இந்த அழுவாச்சி என்று நினைத்துக் கொண்டோம்.

ஆனால், நேற்று கவனித்ததில் விஜயதஸமிக்குப் பிறகு (பல) பள்ளிகளில் குழந்தைகள் கூட்டம் அதிகமாகியுள்ளது. முக்கியமாக ப்ரீ கே.ஜி, எல்.கே.ஜி க்களில். (அவ்வளவு ஏன்? எங்கள் வீட்டிற்குப் பின்னால் புதிய பள்ளியே ஒன்று முளைத்துள்ளது)

ப்ரீ கே.ஜியில் மொத்தமே மூன்று பேர் என்பதால் எல்.கே.ஜி யுடன் அமர வைத்திருக்கிறார்கள்.

எனக்கெல்லாம் நாராயணன் மாமா அஞ்சு வயசில் அட்மிஷனுக்குக் கூட்டிப் போன போது "வலது கையைத்தூக்கி தலைமேல் வைத்து இடது காதைத்தொடு" என்ற ஒரே ஆக்டிவிடியில் ஒரு வருடம் பிரேக் கொடுத்தார் கும்பகோணம் திருமஞ்சன வீதி பெரிய வாத்தியார் "காது எட்டலடா, சின்னப் பையன், அடுத்த வர்ஷம் வா" என்று. "சன் ஆஃப் தி மாஸ்க்" போல காதையும் "ஃபென்டாஸ்டிக் 4" போல கையையும் நீட்டி எட்டிப் பிடித்திருந்தால் ஹாரி பாட்டர் போல "ஹாக்வர்ட்ஸ்இல்" இடம் கிடைத்து நாமளும் பெரியாள் ஆகி இருக்கலாமோ என்னவோ?

ஆனால் இவன், ஒரு வருடம் அட்வான்ஸாகப் படித்துக் கொண்டிருக்கிறான். "என்னடா படிச்சே இன்னிக்கு?" என்றால் "வன், டூ, த்தீ, ஐ, சிச், ச்செவன், எய்ட், டென், எவன், டுவய், தட்டீன், பிட்டீன்" என விட்டு விட்டு ஒப்பிக்கிறான்.

முன்பு இவன் தான் இருப்பதிலேயே குட்டியாய், சிவில் டிரஸ் அணிந்தபடி சென்று கொண்டு இருந்தான். மற்றவர்கள் எல்லாம் யூனிஃபார்ம். அட்மிஷன் போதே இவனுக்கும் யூனிஃபார்ம் வேண்டுமா? எனக் கேட்டார்கள். கட்டாயமா? என்றேன். ஆப்ஷனல் தான் ஸார் என்றதும், வேண்டாம் என்று சொல்லி விட்டேன். ஒரு வருஷம் தானே. அடுத்த வருஷத்தில் இருந்து இன்னும் சுமார் 14 ஆண்டுகள் யூனிஃபார்ம் கட்டி அழ வேண்டுமே.. பாவம்.

இப்போது இவன் வகுப்பில் இவனை விடக் குட்டி குட்டியாய் மூன்று பேர் புதிதாய் சேர்ந்திருக்கிறார்கள். நான்கைந்து கூக்குரல்கள் விடாமல் அழுதபடியே..

சரிதான். புது சகவாசம்.. "பூவோட சேர்ந்த நார்", "மேயற மாட்டை நக்குற மாடு", எக்ஸட்ரா, எக்ஸட்ரா... 

சனி, 30 ஏப்ரல், 2016

பஞ்ச் சோந்தி பராக்

தமிழ் ஹிந்து தினசரியில் "
பஞ்ச் சோந்தி பராக்" என்றொரு பகுதி வருகிறது. மேலே ஒரு செய்தியும், கீழே அதற்கு ஒரு பஞ்ச் - சும் வெளியிடுவார்கள். யார் வேண்டுமானாலும் பஞ்ச் கள் அனுப்பலாம். பல மாதங்களாக விடாமல் அனுப்பிக் கொண்டு இருக்கிறேன். ஆனால் நேற்று தான் எனது முதல் பஞ்ச் வெளியானது. 
.
ஹிந்து வின் இந்த "பஞ்ச்" ஐப் பொறுத்த வரை "விடாமுயற்சி, விஸ்வரூப வெற்றி" ஒன்றே பலன் தரும். ஏனென்றால் ஜோக் போலவோ, சிறுகதை போலவோ, நல்லாருக்கே என்று எடுத்து வைத்தெல்லாம் வெளியிட முடியாது. மொத்தமும் கரண்ட் டாபிக்குகள். ஒரு நாள் தான் அதன் உயிர். மறுநாள் நூறு புதிய செய்திகளும் அதை வைத்து ஆயிரம் பஞ்ச் களும் வரும். இரண்டு நாள் முன்பு நாம் அனுப்பியிருந்தால், அது அரோகரா தான். விடாமல் தொடர்ந்து அனுப்பிக் கொண்டே இருந்ததால் தான் இது சாத்தியமாயிற்று. 
.

மீண்டும் வருமா? தெரியாது. அடிக்கடி பஞ்ச் வெளியாகும் பல எழுத்தாள நண்பர்களிடம் டிப்ஸ் கேட்க வேண்டும். 
.
வெளியிட்ட "தமிழ் ஹிந்து" வுக்கு நன்றி. 

சனி, 16 ஏப்ரல், 2016

10 செகண்ட் கதை - நட்பு - விகடன்


30.09.15 தேதியிட்ட விகடன் "10 செகண்ட் கதைகள்" ல் என்னுடைய ஒரு கதை.
.
நானும் நண்பர் விஷூவல் மீடியா செல்வமுரளி அவர்களும் "குறுங்கதைகள்" என்ற பெயரில் சென்ற வருடம் அறிமுகப்படுத்திய 50 வார்த்தைக் கதைகளின் வடிவம் நண்பர்களுக்கு நினைவிருக்கலாம். அப்போதே 50 வார்த்தைகளில் எப்படிக் கதை எழுதுவது, ரொம்பக் கஷ்டமா இருக்கு என்ற எதிர்வினைகள் எழுத்தாளர்களிடம் இருந்து வந்தன.
.
ஆனால் எப்போதும் புதுப்பாதை போட்டு நடக்கும் விகடன் அதையும் உடைத்து "10 செகண்ட் கதைகள்" என்ற வடிவத்தை அறிமுகப் படுத்தியது சென்ற மாதம். எந்தக்கதையும் அதிக பட்சம் 30 வார்த்தையைத் தாண்டியதே இல்லை. ஒவ்வொன்றும் பட்டாசுகள். ஐந்தே வார்த்தைகளில் கூட "சுருக்" கென்று சில கதைகள் வந்துள்ளன.
.
வெளியிட்ட விகடனுக்கு நன்றி. 10 செகண்ட் கதை - பரம்பரை - விகடன்


30.09.15 தேதியிட்ட விகடனில் வெளியான எனது "10 செகண்ட் கதை" ஒன்று 

வெளியிட்ட விகடனுக்கு நன்றி. 


10 செகண்ட் கதை - புகார் - விகடன்


14.10.15 தேதியிட்ட விகடனில் வெளியான எனது "10 செகண்ட் கதை". 

வெளியிட்ட விகடனுக்கு நன்றி. 


10 செகண்ட் கதை - சாவி - விகடன்


4.11.15 தேதியிட்ட விகடனில் என்னுடைய இரண்டு "10 செகண்ட் கதைகள்" வெளியாகியுள்ளன. இது முதலாவது கதை . 

வெளியிட்ட விகடனுக்கு நன்றி. 
10 செகண்ட் கதை - சூது - விகடன்


4.11.15 தேதியிட்ட விகடனில் என்னுடைய இரண்டு "10 செகண்ட் கதைகள்" வெளியாகியுள்ளன. இது இரண்டாவது கதை . 

வெளியிட்ட விகடனுக்கு நன்றி. 10 செகண்ட் கதை - டேஸ்ட் - விகடன்


23.12.2015 தேதியிட்ட விகடனில் என்னுடைய 10 செகண்ட் கதை ஒன்று.

வெளியிட்ட விகடனுக்கு நன்றி.
10 செகண்ட் கதை - பார்ட்டி... பயம் - விகடன்


13.01.2016 தேதியிட்ட விகடனில் என்னுடைய 10 செகண்ட் கதை ஒன்று.

படைப்புலகில் இந்த வருடத்தின் முதல் என்ட்ரி..

வெளியிட்ட விகடனுக்கு நன்றி.


10 செகண்ட் கதை - பாஸ்வேர்டு சீக்ரெட் - விகடன்


20.01.2016 தேதியிட்ட ஆனந்த விகடனில் எனது இரண்டு கதைகள் வெளிவந்தன. அதில் என்னுடைய முதலாவது "10 செகண்ட் கதை" இது.

வெளியிட்ட விகடனுக்கு நன்றி.

10 செகண்ட் கதை - லைக் - விகடன்


20.01.2016 தேதியிட்ட ஆனந்த விகடனில் எனது இரண்டு கதைகள் வெளிவந்தன. அதில் என்னுடைய இரண்டாவது "10 செகண்ட் கதை" இது. 

வெளியிட்ட விகடனுக்கு நன்றி. 


10 செகண்ட் கதை - விலை - விகடன்


03.02.2016 தேதியிட்ட விகடனில் வெளியாகியுள்ள என்னுடைய 10 செகண்ட் கதை ஒன்று. 

விகடனில் வெளியாகும் பத்தாவது "10 செகண்ட் கதை" இது. 

வெளியிட்ட விகடனுக்கு நன்றி. 


10 செகண்ட் கதை - உதவி - விகடன்


10.02.2016 தேதியிட்ட விகடனில் வெளிவந்த என்னுடைய "10 செகண்ட் கதை" ஒன்று

வெளியிட்ட விகடனுக்கு நன்றி.

இது எனக்கு நிஜத்தில் நடந்தது. ஆனால் வங்கிக்கு பதில் போஸ்ட் ஆபீஸ், இன்ஷூரன்ஸ் ஏஜண்டுக்கு பதில் போஸ்டல் ஏஜண்ட்.10 செகண்ட் கதை - வாங்க பேசலாம் - விகடன்


17.02.2016 தேதியிட்ட விகடனில் என்னுடைய "10 செகண்ட் கதை" ஒன்று வௌியாகியது. 

வெளியிட்ட விகடனுக்கு நன்றி. 

அச்சில் வந்த 12 வது பத்து செகண்ட் கதை இது. 
10 செகண்ட் கதை - அறியாதது - விகடன்


23.03.2016 தேதியிட்ட விகடனில் எனது பத்து செகண்ட் கதை ஒன்று வெளிவந்தது. 

வெளியிட்ட ஆனந்த விகடனுக்கு நன்றி. 


10 செகண்ட் கதை - நிலாப் பாட்டி - விகடன்


13.04.2016 தேதியிட்ட சென்ற வார விகடனில் என்னுடைய "பத்து செகண்ட் கதை" ஒன்று. 

வௌியிட்ட விகடன் இதழுக்கு நன்றி. 
10 செகண்ட் கதை - பேரம் - விகடன்உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்ட கதை. யார் அந்த வேட்பாளர் என்று கேட்காதீர்கள். பல பேர் உண்டு.

20.04.2016 தேதியிட்ட இந்த வார விகடனில் என்னுடைய "10 செகண்ட் கதை" ஒன்று.

வெளியிட்ட விகடனுக்கு நன்றி.

ஞாயிறு, 10 ஏப்ரல், 2016

தந்தை மகற்காற்றும்......ஜூனியருக்கு இரண்டரை வயதாகிறது. இன்றைக்கு ஒரு விஷயத்தைச் செய்வது, விரும்புவது. இரண்டே வாரங்களில் அடுத்த விஷயத்திற்குத் தாவுவது போன்ற குழந்தைகளுக்கே உரிய அனைத்து செயல்பாடுகளையும் அழகாக வெளிப்படுத்துகிறான். சுவற்றில் கிறுக்குவது, சாப்பிட அடம் பிடிப்பது, இதைத் தான் எல்லாக்குழந்தையும் செய்யுமே போன்ற எல்லாச் செயல்களையும் மீறிக் கவனித்ததில் அவன் ஒரு விஷூவல் லேர்னர் ஆக இருப்பான் என அவதானிக்கிறேன். சொல்லி, கேட்டுக் கற்பதை விட பார்த்துக் கற்பது அதிகமாக இருக்கிறது.
.
விளம்பரங்கள், நாடகங்கள், திரைப்படக் காட்சிகளை உற்றுக் கவனிக்கிறான். இரு முறை பார்த்து விட்டால் மூன்றாவது முறை அடுத்து வரப்போகும் சீனை இமிடேட் செய்து விடுகிறான். உதா - பர்ஃயூம் விளம்பரங்களில் கைகளைத் தூக்குவது, நீயா நானா விளம்பர இடைவேளை முடிந்து வெல்கம் பேக் சொல்கையில் கோபி யைப் போல விரல் இடைவெளிகளுடன் கைகளைக் கோர்த்துக் காண்பிப்பது, இதர. இவையெல்லாம் கொஞ்சம் மற்ற குழந்தைகளை விடச் சில சதவீதம் அதிகமாயிருக்கிறது.
.
அதை ஊக்கப் படுத்தும் வகையில் அவ்வப்போது RLE - Real life example களை காட்டி விடுகிறேன். Furious 6 கிளைமாக்ஸ் ஓடும் போதோ, டாட்டா க்ளூக்கோ ப்ளஸ் விளம்பரத்தின் போதோ, வெளியே நிஜ விமானம் பறக்கும் போதோ இவனது பொம்மை விமானத்தை டி.வி அருகில் வைத்துக் காண்பிப்பது, வேறு சில பொருட்களை, ஆட்களைக் காண்பிக்கையில் அதே போன்றவற்றை எடுத்துக் காண்பிப்பது, போன்றவை. இதனால் அவன் இயல்பில் சில மாற்றங்களை உணர முடிகிறது. சில விஷயங்களைக் கூடுதலாக நினைவில் நிறுத்துகிறான்.
.
கூடவே கொஞ்சம் சென்டிமெண்ட்ஸ் பார்ட்டியாகவும் இருக்கிறான். நாயக பாத்திரம் (ஹீரோ வேட்டையன், அல்லது சிறுவனாயிருந்தாலும் சரி - தாரே ஸமீன் பர் ஈனோ) பாதிக்கப்பட்டால் அழுகை வருகிறது. சண்டை போட்டால் ஆமோதித்தல், அடி வாங்கினால் வருத்தப் படுதல், பாராட்டப் பட்டால், பரிசு வாங்கினால் கை தட்டுதல், வணக்கம் சொன்னால் பதில் வணக்கம் (கடைசி மூன்றும் நான் பழக்கியது) செய்தல் போன்ற ரசிக்கும் விஷயங்களை தினசரி பார்ப்பது பெருமையாயிருக்கிறது.
.
ஹீரோயின் என்ட்ரிக்கு அய் (அல்லது ஊய்) என்று உற்சாகக் குரல் எழுப்புவது, ரொமான்ஸ் சீனையும் (நான் சேனல் மாற்றுவதில்லை, பார்த்துட்டுப் போ, என்ன இப்ப?) வெட்க முகத்தோடு ரசிப்பது போன்றவற்றை சொல்லித் தராமலே செய்கிறான். திரைப்படங்களை உணர்ந்து, ஒன்றி ரசித்துப் பார்க்கிறான். தியேட்டரிலேயே இருந்தாலும் அசதியோ, பிடிக்கவில்லையோ, நான் தூங்குறேன் என்று தூங்குகிறான். "நீங்க, டி.டிஸ் வேணா போடுங்க, டால்ஃபி வேணா போடுங்க, ஆரோ த்ரீ டி வேணா போடுங்க, எங்களுக்குத் தூங்கியே ஆகணும், ஹாங்.." "பிச்சைக்காரன்" செகண்ட் ஹாஃப் முழுக்கத் தூங்கினான். இதில் என் டிட்டோ. நான் செல்லாத்தா பாட்டே ஹை டெஸிபலில் ஓடினாலும் "ஹூ ஈஸ் தட் செல்லாத்தா" என்றெல்லாம் கேட்காமல் ஸ்பீக்கர் பக்கத்திலேயே குறட்டை விட்டுத் தூங்குகிற டைப். இதெல்லாம் ஜீனில் வருகிறது போலும்.
.
சுற்றியிருப்பவர்களைச் சட்டை செய்யாமல் நினைத்ததைச் செய்ய பழக்கப் படுத்திக் கொண்டிருக்கிறேன். சிறு வயதில் எனக்குக் கூச்ச சுபாவமும், பயமும் ரொம்ப அதிகம். அது வந்துவிடக் கூடாதே. சில குழந்தைகள் டான்ஸ் ஆடச் சொன்னால் ஆடவே ஆடாது. சிலது தன்னிஷ்டத்துக்கு ஆடும் - ஓப்பன் டைப். சிலது மற்றவர்கள் ஆதரித்தால் மெள்ளப் பயம் விலகி ஆடும். நம்மாள் மூன்றாவது டைப். மற்றவர்கள் முன் பயமின்றி இருக்கவும், எந்த விஷயத்தையும் ஃபீல் செய்து, அனுபவித்துச் செய்யவும் பழக்கிக் கொண்டிருக்கிறேன். பார்க்கலாம்.
.
என்னுடன் சேர்ந்து நிறையப் படங்கள் பார்க்கப் பழகி வருகிறான். பிடித்த படம், பிடித்த சீனை ரிப்பீட் செய்யச் சொல்வதும் கூட. தாரே ஸமீன் பர் இது வரை ஐந்து முறைக்கு மேல் பார்த்து விட்டான். அதில் இரண்டு முறை தனியாக. தர்ஷீல் அடி வாங்கும் சீன்களுக்கு மட்டும் என்னை அழைத்து ஃபார்வர்ட் செய்யச் சொல்லி விட்டு மீதியைத் தனியாகப் பார்ப்பான். ரஜினி முருகனின் மூன்று பாடல்களை (கன், கன், கன், என்னம்மா இப்படிப் பண்றீங்களேம்மா, ஓம் மேல ஒரு கண்ணு) வரிசையாகப் பார்க்க வேண்டும் அவனுக்கு. அவனது இஷ்ட ஹீரோ சிவகார்த்திகேயன்.
.
வருடத்திற்கு ஒரு முறையோ, இரு முறையோ தான் படம் பார்ப்பது என்ற குடும்பத்தில் இருந்து, வாரம் ஒரு படம் தியேட்டரில் படம் பார்த்தே ஆக வேண்டும் (அதுவும் தரை டிக்கெட் ரசிகன், ஃபர்ஸ்ட் கிளாஸில் உட்கார்ந்து நைஸ் நோ என்று மெள்ளச் சிரிப்பது நமக்கு ஆகாது) என்று கிளம்பிய ஆள் நான். டி.வியில் பார்ப்பது தனி. Fist of fury யில் ஆங்கிலப் படங்களின் மேல் எனக்குக் கிளம்பிய மோகம், Face off ல் வெறியாகி சொந்தக்காரங்க எல்லாம், கார்த்தி வந்தா ரிமோட் குடுத்துடாத, ஸ்டார் மூவிஸூம், HBOவும் தான் வைப்பான் என்ற அளவுக்குப் போயிருக்கிறது. ஆனால் ஒரு விஷயம் - பள்ளிக் காலத்தில் சேரி போன்ற சுற்றுப்புறத்தில் வாழ்ந்த நான், ஓரளவுக்கு நாலு விஷயங்கள் கற்றுக் கொள்ளவும், கொஞ்சம் இங்கிலீஷ் பேசவும் முடிகிறதென்றால் அதன் காரணம் ஹாலிவுட் படங்களே.
.
ஆகவே, எதிர்காலத்தில் அவன் வளர்ப்பில் இரு விஷயங்களை நான் செய்யப் போவதில்லை.
ஒன்று - டாப் ரேங்க்கில் வர வேண்டும் என்று இம்சிப்பது (நாம ஃபர்ஸ்ட் ரேங்க் எடுத்து என்னத்தைக் கிளிச்சிட்டோம்?)
இரண்டாவது - சினிமா பார்ப்பதைத் தடுப்பது. (நல்லாப் பாரு. இதில இருந்து என்ன கத்துகிட்டே? என்பது போல கொஞ்சம் நெறிப்படுத்தினால் போதும்). சுபம்.

செவ்வாய், 19 ஜனவரி, 2016

ஐ... இரண்டு முறை.

சரியாக ஒரு வருடம் முன்பு எழுதிய பதிவு. முகநூலில் ஸ்டேட்டஸ் ஆகப் போட்டது.

ஐ...

இரண்டு முறை.

முதல் மூன்று நாட்களாக குடும்பத்துடன் செல்லலாம் என்று ஆன்லைனில் புக் செய்ய எவ்வளவோ முயற்சித்தும் டிக்கெட் கிடைக்கவில்லை. மூன்று நாளாக இவன் நரம்புத் தளர்ச்சி வந்த மாதிரியே படபடப்பா இருக்கானே என்று சனிக்கிழமை என்னை பாவமாகப் பார்த்து தங்கமணியே நீங்க வேணா தனியா போய் (த் தொலைங்க) ட்டு வாங்க என்று அனுமதி கொடுத்ததில் ஒரு பாடாவதி தியேட்டரில் ரோபோ ஸ்டைல் கீச் அடிக்கும் ஒலித் தரத்திலும், ஒரு பெரிய ஹெச்டி டிவி தரம் மட்டுமே இருந்த, அதிலும் துணிதைத்த வெள்ளைக் கோடுகள் அச்சாக நன்றாகத் தெரிந்த ஒரு தியேட்டரில் பார்த்தேன். உள்ளே நுழையும் போதே போனில் "நாஸ்-ல மூட்டைப் பூச்சி இருக்குமே? அங்க ஏன் பாவா போனீங்க?" என்று வேறு மச்சான் சொல்லி விட்டார். இருக்கோ இல்லையோ, அவர் சொன்னபிறகு அங்கங்கே அரிப்பது போன்று ஒரு பிரமை. வீட்டுக்கு வந்ததுமே துஷ்டி வீட்டுக்குப் போன மாதிரி பாத்ரூமுக்கு ஓடி எல்லா டிரஸ்ஸையும் கழட்டிப் போட்டு விட்டேன். எதுக்கு வம்பு? ஒருவேளை இருந்திருந்தா? 120 ஓவா வேறு. டூ மச்.

மறுநாளே அடிச்சது லக்கிப்ரைஸ். ஞாயிற்றுக் கிழமைக்காக ஒரு நல்ல தியேட்டரில் 30, 40 பேருக்காக யாரோ குரூப்பாக புக் செய்திருந்ததில் நம்ம உறவினர் ஒருத்தருக்கு ரெண்டு டிக்கெட் இருந்தது. ஆனால் அண்ணார் அன்னார் அவர்கள் வெளியூரில் இருந்த காரணத்தினால் அதை நமக்கு தாரை வார்த்தார். ஓசு டிக்கெட், ஸ்னாக்ஸ் உடன். நல்ல ஒலித்தரத்தில், நல்ல பிரிண்டில், நல்ல ஸ்கிரீனில், ஜோடி சோபாவில் (நோ கற்பனை ப்ளீஸ், நடுவில் ஜூனியர் இருந்தான், நெளிந்து கொண்டே) ஐ-யை இரண்டாவது முறை பார்த்தேன்.

ஆனா, பயபுள்ள முதல் முறை தியேட்டர் அனுபவம் ஜூனியருக்கு. அரைமணி நேரம்தான் தாக்குப்பிடிக்க முடிந்தது அவனால். விளம்பரத்தையெல்லாம் ரசித்துப் பார்த்தான். லைட்ஸ் ஆஃப் ஆனதும் நெளிய ஆரம்பித்தான். தங்கமணி முறைச்சிங். அவுங்களும் எவ்ளோ நேரம் தான் சமாளிப்பாங்க. என்னை பார்த்து முறைச்சாங்க "நீதான் நேத்தே பாத்துட்ட இல்ல, அவனை தூக்கிட்டு வெளிய போயேன்" என்று அவர்கள் ஐ-யில் இருந்து கிராபிக்ஸில் சிவப்பு ஃபான்டில் லெட்டர் லெட்டராக வந்ததை என்னால் படிக்க முடிந்தது. யாருமில்லாத வராண்டாவில் நானும் அவனும் மட்டும் விளையாடி அவ்வப்போது உள்ளே வெளியே விளையாடி "தோ பாருடா கண்ணா, பெரிய டி.வி" என்று ஸ்கிரீனை காண்பித்து விளையாட்டு காட்டி ஏஸி குளிர் தாங்காமல் ஸ்வெட்டர், குல்லா மங்கி கேப் இத்யாதி இத்யாதிகளை மாட்டி விட்டு, பாட்டிலில் பால் கலக்கி குடிக்க வைத்து, இந்தக் களேபரத்தில் சில ரிவென்ஜ் சீன்களை மிஸ் செய்து, பிஸ்கட் கொடுத்து அவனை தூங்கவைத்து செகண்ட் ஆஃப் பார்த்து..... இடையில் அவன் கோக்கை முதல் முறையாக உறிஞ்சி சோடா எரிச்சலில் கத்தி, என அது ஒரு தனி எபிசோட்....

189 நிமிடப் படம் என்பதால் அரை டிக்கெட்டுகளும் கிழம் கட்டைகளும், நெளிய ஆரம்பித்து சிலர் ரயில் சண்டை சீனிலேயே வெளியே போய், நானும் பார்க்கிங்கில் மாட்டி, வண்டியை வெளியே எடுக்க முடியாமல், அதுக்குள் ஜூனியர் எழுந்து அழுது.. பார்க்கிங்கிலேயே படம் முடியும் வரை காத்திருந்து விளையாட்டு காட்டி... போங்க பாஸ் அது ஒரு குடும்பஸ்தன் கவலை... ஒரே ஆறுதல் என்னவென்றால் என்னை மாதிரி இன்னும் சில இளம் தகப்பன்கள் அடம் பிடித்த அவர்கள் ஜூனியர்களுடன் எனக்குத் துணையாக கேன்டீன் வராண்டாவில் விளையாடியது தான்.
என்னது? ஐ ரிவ்யூவா? போங்க பாஸ்...

இனிமே தேட்டர்ல படம் பாக்கறதெல்லாம் நமக்கு வேலைக்காவாது... வீட்ல ஈ.எம்.ஐ ல ஒரு புரொஜக்டர் வாங்கிப் போடப் போறேன். சேரன் சார். எப்போ C2H - ல படங்களை ரிலீஸ் பண்றீங்க?