புதன், 26 பிப்ரவரி, 2020

ஏட்டா, சாய் வேணோ?

26 பிப் 2016 அன்று ஃபேஸ்புக்கில் எழுதியது. 

இங்க வாழைப்பழத்துக்கும், தேங்காய் எண்ணெய்க்கும் அடுத்த படியா சாய் வெள்ளமா ஓடுது.
"சேட்டா, என்ன இருக்கு?"
"இட்டிலி, புட்டு, கடலா, சப்பாத்தி, ப்ளா, ப்ளா, ப்ளா, ப்ளா, ப்ளா"
"புட்டு, கடலா" சொன்னேன், ஒக்கேன்னு சொல்லிட்டு அதோட சேத்து ஒரு சாய் கொண்டாத்து வச்சாரு.
"சாய் வேண்டா சேட்டா" ன்னா ஒரு மாதிரி பாத்து எடுத்துட்டுப் போய்ட்டாரு.
.
இன்னொரு கடைல பிரியாணி சொன்னேன். கூடவே "கொஞ்சம் வௌ்ளம் கொடு சேட்டா"ன்னேன்.
தண்ணி கேட்டா சாய் கொண்டு வந்து வச்சான். "இது வேண்டா, வெள்ளம், வௌ்ளம்" ஜாடை காமிச்சேன்.
"குடிவெள்ளமோ?" ன்னாரு. (அப்போ வெள்ளம்னா கூட இப்போ சாய் தானா?)
"அதே"
"சாய் வேண்டாமோ?"
"வேண்டா"
திரும்பக் கொண்டு போயிட்டு தண்ணி குடுத்தார்.
.
இதே அனுபவம் மறுபடி, மறுபடி. இட்டிலி கேட்டா கூடவே சாய், சப்பாத்தி கேட்டா கூடவே சாய், பரோட்டா கேட்டா கூடவே சாய், கப்பா கேட்டா கூட ஒரு சாய், கஞ்ஞி கேட்டா கூட ஒரு சாய், பழம்பொரி (நேந்திரம் பழ பஜ்ஜி) கூட ஒரு சாய், அது நமக்கு ஒரு மாதிரி ஒமட்டுது, என்ன காம்பினேஷனோ?" இப்படி ஓடுது. சாயா வை சைட் டிஷ் மாதிரி கல்ப் கல்ப்பா அடிக்குறாங்க. எந்த ஹோட்டல்லயும், சுத்தி பாத்தா எல்லா பயலுகளும் சாயாவை நாம தண்ணி குடிக்கிற மாதிரி சாப்பாட்டுக்கு நடுவுல நடுவுல குடிச்சிகிட்டு இருந்தானுங்க.
.
புரிஞ்சு போச்சு. இனிமே நம்ம Parisalkaaran Krishna Kumar செஞ்சா மாதிரி "வடை இல்லாம ப்ளெயின் இட்லி, வடை இல்லாம ப்ளெயின் தோசை, வடை இல்லாம ப்ளெயின் பொங்கல்" ரேஞ்சுக்குப் போயிடணும்னு முடிவு பண்ணிட்டேன். இப்போலாம் "சாய் இல்லாம ஒரு புட்டு, கடலா", "சாய் இல்லாம ஒரு செட் சப்பாத்தி", "சாய் இல்லாம உப்புமா", "சாய் இல்லாம பிரியாணி" தான். ஆனாலும் இவ்வளவு உஷாரா இருந்தும் என்னை எங்க அசர அடிச்சாங்க தெரியுமா?
.
காலைல ஒரு கடையில போய் "சாய் ஒன்னு கொடு சேட்டா" ன்னேன். "ம்"முன்னு சொல்லிட்டு சாய் - க்கு சைட் டிஷ்ஷா இன்னோரு சாய் கொண்டு வந்து வச்சான் பாருங்க..."
.
"அடேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்..."

.

திங்கள், 24 பிப்ரவரி, 2020

புரிஞ்சுதா?

24 பிப் 2014 அன்று ஃபேஸ்புக்கில் எழுதியது.

நம்ம ஊரில் நடந்த ஒரு சம்பவம் இது.

ஒரு பள்ளியில் ஒரு வருடத்திற்கான ஈ.எம்.ஐ பென்டிங். பணம் கேட்கப் போயிருந்தேன்.

அந்தப் பள்ளியின் கரஸ்பான்டன்ட் சிட்டிங் எம். எல். ஏ.. வராண்டாவில் நடந்து கொண்டிருந்தார் எம்மெல்லே.
"தம்பி இங்க வாங்க"
தோளில் கைபோட்டார்.

"தம்பி, பஸ் ஸ்டாப் தாண்டி ஒரு பெட்ரோல் பங்க் இருக்கே பாத்துருக்கீங்களா?"
"ஆமாம் சார். அந்த ஸ்பீடு பிரேக்கர் கூட இருக்கே"
"ஆமாம் தம்பி"
"அங்க தான் சார் பஸ்ல வரும்போது ரன்னிங்ல குதிச்சு இறங்கி வருவோம்"
"அது நம்மள்து தான்" என்றார்
அங்கே தான் ஒருமுறை ஏதோ கட்டப்பஞ்சாயத்து விஷயமாக ஒரு ஆளை நான்கைந்து பேர் மரண ஊனு ஊனிக் கொண்டிருந்ததை பார்த்தேன். கருக்கென்றது.

"எதிர்ல பாருங்க. அதோ தெரியுதே ரயில் வே டிராக்கு"
"ஆமா சார்"
"அது வரைக்கும் நம்ம இடம் தேன். இஸ்கோலுக்கு பசங்க வெளையாட கிரவுண்டு கட்டணும். ஆனா சர்வேயர் இடம் பத்ததாதுங்கிறான்"
அந்த டிராக்கில் அடிபட்டு இறந்ததாக ஆறு மாதம் முன்பு கைமைவான ஒரு ஆளின் போட்டோவை நியூஸ் பேப்பரில் பார்த்திருந்தேன்.

"இடது பக்கம் பாருங்க தென்னந்தோப்பு தெரியுதா?"
"எங்க சார்?"
"அட அங்க பாருங்க தம்பி"
கண்ணைக் குறுக்கி கிழவி போல் நெத்திக்கு சன் ஷேடு வைத்துப்பார்த்தேன். அது இருக்கும் முக்கா கிலோ மீட்டர். தூரத்தில் லேசாக தென்னை மரங்கள் தெரிந்தன. அடேங்கப்பா. அவ்ளோ தூரமும் இவர் இடம் தானா?

அப்படியே வலது பக்கமும் குத்து மதிப்பாக ஒரு தூரத்தை காண்பித்தார். இதையெல்லாம் எதுக்கு நம்ம கிட்ட சொல்றாரு. நாம பணம் வாங்கிட்டுப் போகத்தானே வந்தோம்-னு நெனச்சேன். சொல்லிவிட்டு ஏதோ போன் வரவும் தலைவர் உள்ளே போய்விட்டார்.

வெள்ளை வேட்டி, கக்கத்தில் கந்து வட்டி பை சகிதம் அந்தப் பக்கமாக ஒரு அல்லக்கை வந்தது. "ஏண்ணே, இதையெல்லாம் என் கிட்ட சொல்றாரு?"ன்னேன்.

அவன் "வெள்ளந்தியா இருக்கியே தம்பி. தேவையில்லாம வாயக் கொடுத்துடாத. மறுபடி பணம் கேட்டு வந்தியின்னா இவ்ளோ இடம் இருக்கு, எங்கியாவது ஒரு இடத்துல உன்னை புதைச்சுடுவேன்னு அர்த்தம்"

அண்ணாந்து தண்ணீர் குடித்துக் கொண்டிருந்தேன். குடித்த தண்ணீர் அப்படியே நீலகண்டன் போல தொண்டையில் நின்றது.

"சர்ண்ணே... சா... சாரிண்ணே.."
.

திங்கள், 10 பிப்ரவரி, 2020

லவ் லெட்டர் - காதலர் தினத்தை முன்னிட்டு

2015 பிப் 8 அன்று ஃபேஸ்புக்கில் எழுதியது.

லவ் லெட்டர் -

காதலர் தினத்தை முன்னிட்டு (லாம் எழுதவில்லை). காக்கா உக்கார கேஸ் தான். நான் போன மாதம் அனுப்பினேன். அது சரியாக சிச்சுவேஷன் பார்த்து வெளியாகியுள்ளது. ஆசிரியர் குழுவுக்கு தான் ஸ்பெஷல் தேங்க்ஸ். அச்சில் வந்த என் முதல் சிறுகதை / குட்டிக் கதை / ஒரு பக்கக் கதை / குறுங்கதை எப்படி வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளுங்கள். என் படைப்பை அங்கீகரித்து வெளியிட்ட குங்குமத்திற்கு கோடி நன்றிகள்.

பிலிம் நியூஸூக்கு ஒரு ஆனந்தன் ஐயா மாதிரி சிறு எழுத்தாளர்களுக்கு ஒரு நா. கோகிலன் நம்முடைய எந்தப்படைப்பு எந்தப் புத்தகத்தில் வந்தாலும், அந்தப் புத்தகத்தை நாம் வாங்காமல் விட்டிருந்தாலும் கவலைப்படத் தேவையில்லை. கோகிலன் உள்பெட்டியில் ஸ்கேன் காப்பி அனுப்பியிருப்பார். விடியும் போதே நம் மொபைலில் க்ளிங் என்று ஒரு மெஸேஜ் வந்து நிற்கும். என் பல ஜோக்குகளை நான் பார்க்கும் முன்பே, வாங்கும் முன்பே இன்பாக்ஸில் கொண்டு வந்து போட்டுவிட்டுப் போயிருக்கிறார் எந்தப் பிரதிபலனும் பாராமல். இத்தனைக்கும் அவர் எனக்கு நேரடி நண்பரில்லை. முகநூலில் தான் பழக்கம் அதுவும் வத்திராயிருப்பு தெ.சு.கவுதமன் அவர்கள் மூலமாகத் தான் அறிமுகம்.

அவருக்கு ஒரு ஸ்பெஷல் நன்றி.

ஒரு பக்கக் கதைகள் என்றாலே பால்ராசய்யா ராசய்யா அவர்களைப் பற்றிச் சொல்லியே ஆக வேண்டும். நூற்றுக்கணக்கான ஒரு பக்கக் கதைகள் எழுதிய எழுத்தாளர் அவர். ஒரு காலத்தில் அவரது பெயரை மட்டும் அடிக்கடி பார்ப்பேன். ஆனால் பின்னாளில் அவரையே நேரில் சந்திப்போம். தினசரி ஃபேஸ்புக்கில் அளவளாவுவோம் என்றெல்லாம் நினைத்துக் கூட பார்த்ததில்லை. ஒரு கதையை எப்படி எழுத வேண்டும் எனத் துவங்கி பல குறிப்புகள் கொடுத்திருக்கிறார். நான் இப்போது ஒரு பக்கக் கதைகள் எழுதுவதற்கு அவரும் ஒரு காரணம். நான் ஏகலைவன், அவர் துரோணாச்சாரியார்.லைகா பிரச்சினைஸ்

2018 பிப் 10 அன்று ஃபேஸ்புக்கில் எழுதியது.

அன்றொரு நாள்..

லைகா பிக்சர்ஸ் பிரச்சினை நினைவிருக்கிறதா? ஈழத்தமிழர்கள் பிரச்சினை வந்த போது எத்தனையோ அமைப்புகள் லைகா பிக்சர்ஸூக்கு எதிராகக் கொந்தளித்தார்கள். ஆனால் இன்றைக்கு? குடிகாரன் பேச்சு விடிஞ்சா போச்சு என்பது போல ஆகிவிட்டது. "கத்தி" படம் வந்த போதே கவனித்தேன். லைகா புரொடக்ஷன்ஸ் என்று பேனர். அப்போது மட்டும் லேசாக சலசலப்பு இருந்தது. ஆனால் அவ்வளவு தான். அதற்குப்பிறகு அந்தப் பொங்கல் அமைப்புகள் எங்கே போனார்கள் என்று தெரியவில்லை.

இன்று வரை லைகா பிக்சர்ஸ் வரிசையாக வெற்றிகரமாகப் படம் தயாரித்துக் கொண்டு தான் இருக்கிறார்கள். பெரிய ஹீரோக்களான விஜய் (கத்தி), இப்போது ரஜினியை வைத்து 2.0 என்று படம் தயாரித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். நடுவில் விஜய் ஆன்டனியின் எமன், ஜி.வி யின் எ.இ.பே.இ என்று படங்கள். சமீபத்தில் கூட மலேஷியாவில் நடைபெற்ற கலை நிகழ்ச்சியில் கூட சன் டி.விக்கு ஒரு பெரிய துகை (அன்பளிப்பு அல்லது ஸ்பான்ஷர்ஷிப்) வழங்கினார்கள். 2.0 வும் சன் டி.வி கையில் தான்.

நேற்றைய மணிரத்னத்தின் பேனர் பார்த்தீர்களா? கிட்டத்தட்ட 15 - 20 வருடங்களாக சொந்த பேனரிலேயே படம் எடுத்த மணிரத்னம் கூட "செக்கச் சிவந்த வானம்" படத்திற்காக லைகாவுடன் இணைந்திருக்கிறார். எங்கே போனார்கள் அந்தப் போராட்ட அமைப்புகள்?

அல்லது கார்ப்பரேட்டுகளை நாம் தவிர்க்க முடியாது என்பதைச் சொல்கிறதா இது? மேகிக்கு எதிராக அவ்வளவு போராட்டங்கள் நடந்ததே, இப்போது என்ன ஆயிற்று? மீண்டும் புதிய பரிமாணத்தில் விலை கூட்டப் பட்ட மேகி கடைகளில். ஒரு காலத்தில் கேட்பரீஸ் சாக்லெட்டுகளில் புழு இருக்கிறது என்று கிளப்பி விடப் பட்டதே. இன்றைக்கு சாக்லெட் என்றாலே அதில் கேட்பரீஸைத் தவிர்க்க முடியுமா உங்களால்?

இது யாருக்கு எதிரான பதிவும் அல்ல. ஈழம், தமிழன், தெலுங்கன், ஜல்லிக்கட்டு, இந்து, முஸ்லிம், தலித், பார்ப்பனன் என்று சீஸனுக்கு ஏற்றாற்போல், உங்களை வைத்து ஒரு கூட்டமே எங்கோ, எதிலோ, எப்படியோ ஆதாயம் பார்த்துக் கொண்டிருக்கிறது. அவர்களின் அரசியலுக்கு நீங்கள் தீனி ஆகி விடாதீர்கள். அவ்வளவு தான்.
.
- எஸ்கா

தூசு தட்டினார் ரஜினி


2016 பிப் 9 அன்று ஃபேஸ்புக்கில் எழுதியது.

ரஜினியைப் பற்றி அக்ஷய் குமார் ஆங்கிலத்தில் (அல்லது ஹிந்தியில்) என்னத்தைச் சொன்னாரோ? அதை நம் அறிவாளி லோக்கல் லேங்க்வேஜ் ரிப்போர்ட்டர் "தூசு தட்டினார்" என அபத்தமாக மொழிபெயர்த்து வைத்து இன்றைக்கு அச்செய்தியை வைரலாக்கி வைத்திருக்கிறார். ரஜினி செய்யும் வேறு சில அரசியல்கள் எனக்கும் பிடிக்காது தான். சென்னை வெள்ளத்துக்கு அவர் வெறும் பத்து இலட்சம் நன்கொடை தந்த போது "ஏன் இவ்ளோ கம்மி?" என்று கேட்டு நண்பர்களிடம் திட்டு வாங்கினேன். ஆனால் இந்த விஷயத்தில் புரியாமல் அவரைக் கழுவி ஊற்றும் ஸ்டேட்டஸ்கள் வேண்டாமே. இங்கே கூட புரிந்து கொண்டு கமெண்ட் செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

ஒரு விஷயம் யோசியுங்கள். நமக்கு ரெண்டு கோடி ரூபாய் சொத்து இருந்தால் என்னா ஆட்டம் ஆடுவோம்? கார்ல ஏசி, கக்கூஸ்ல ஏசி என்று கவுண்டர் ஸ்டைலில் கௌப்ப மாட்டோம்? ரியல் எஸ்டேட் விளம்பரத்திற்கு உங்கள் ஊருக்கு வரும் ஒரு சாதாரண காமெடி நடிகரைப் பார்க்கக் கூட எத்தனை அல்லக்கைகள் தாண்ட வேண்டும் என்று கவனித்திருக்கிறீர்களா? டவுசர் நாயகன் பீக்-கில் இருந்த போது, முதல்வர் கனவில் தன் உதவியாளர்களில் யாருக்கு எந்தத் துறை, யார் எதற்கு மந்திரி என்று ஒதுக்கி ப்ளான் போட்டதைக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? அப்படி ஒரு பந்தா நிறைந்த உலகம் ஆயிற்றே அது.

அதுவும் ஜூஸ் டம்ளர் பிடிக்க, ஷூ கழட்ட, ஃபேன் பிடித்து நிற்க, சட்டையை மாட்டி விட என்று எல்லா விஷயத்துக்கும் அசிஸ்டெண்ட் வைத்திருக்கும் சினி ஃபீல்டில் 500 கோடி ரூபாய் பிஸினஸ் வேல்யூ உள்ள ஆசியாவிலேயே ஒரு பெரும் நடிகருக்கு 15 அஸிஸ்டெண்டுகள் (அதுவும் 300 கோடி முதலீட்டில் தயாரிக்கப் படும் ஒரு படத்துக்கு) இருப்பதும் அவர் அவர்களிடம் வேலை வாங்குவதும் தவறாகத் தெரியவில்லையே. அதை மறுத்து தன் வேலையை தானே செய்ததை, இதை விட பந்தா நிறைந்த ஹிந்தி சினி ஃபீல்டைச் சேர்ந்த ஒரு நடிகர் பெருமையாகச் சொன்னதை, இங்கே உள்ள லோக்கல் தமிழ் நிருபர் மொழிபெயர்க்கத் தெரியாமல் எழுதியதால் விளைந்த அபத்தம் அது. எழுதும் விதத்தில் எழுதினால் எதையும் செய்தியாக்கலாம், எதையும் அபத்தமாகவும் ஆக்கலாம்.

மற்றும் ஒன்று. நமக்கெல்லாம் பறந்து பறந்து வில்லன்களை உதைக்கும் சூப்பர் ஸ்டார் என்றாலும் உண்மையில் 66 வயதுப் பெரியவர் அவர். அதே 66 வயதில் என் தந்தை இருந்த போது அவருக்கு சில விஷயங்களுக்கு என் உதவி தேவைப்பட்டது. பல முறை தரையில் உட்கார்ந்த அவர் முட்டி வலியால் எழ முடியாமல் என் கை பிடித்துத்தான் எழுவார். 65 வயதில் சுஜாதா, ஒரு ரூமில் இருந்து இன்னோரு ரூமுக்குச் செல்வதற்குள் எதற்குச் சென்றோம் என்று மறந்து விடுகிறது என்று எழுதினார். அதன் படி பார்த்தாலும் ஒரு 66 வயதுப் பெரியவர் மற்றவர் உதவி இன்றி தன் வேலையைத் தான் செய்வதை பாராட்ட அல்லவா வேண்டும்.

அது சரி, சுனாமியை பல மாதங்களுக்கு "டிசுனாமி" என்று எழுதிய, "அழகி" என்ற வார்த்தையை ஆபாசமாக்கிய பத்திரிகை தானே அது? அதைப் படிக்கும் மக்களிடம் இருந்து எப்படி ஒரு தெளிவான எதிர்வினையை எதிர்பார்க்க முடியும்?

- எஸ்கா

பி.கு - 2.0 பட்ஜெட் எவ்வளவாக மாறிப்போச்சு என்பது உங்களுக்கே தெரியும்.

வெள்ளி, 7 பிப்ரவரி, 2020

என்னய்யா தகப்பன் இவன்?


2019 பிப்ரவரி 7 அன்று ஃபேஸ்புக்கில் எழுதியது.


ஸ்ருதியும், அக்ஷராவும் மிகவும் மாடர்ன் ஆக, பச்சையாக சொன்னால், உடல் தெரிய கவர்ச்சியாக உடை உடுத்தினால் "என்னய்யா தகப்பன் இவன்?" என்று கமல்ஹாசனைச் சாடும் அதே சமூகம் தான், கதீஜா முழுமையாக முக்காடு உடுத்தி மேடையேறினால் ஏ.ஆர்.ரஹ்மானையும் "என்னய்யா தகப்பன் இவன்?" என்று சாடுகிறது. ஏ.ஆர். ரஹ்மான் பிறப்பால் ஒரு இந்து என்பதையும், பின்னாளில் விரும்பி இஸ்லாம் சென்றதையும், கமல்ஹாசன் குழந்தையில் ஆத்திகன் என்பதையும், பின்னாள் வாழ்வில் விரும்பி நாத்திகன் ஆனதையும் வசதிக்கேற்ப மறந்து விடுகிறது இச்சமூகம். முஸ்லிம், ஐயங்கார், இந்து, மலையாளி, தமிழன் என்ற பச்சைகளை தன் வசதிக்கேற்ப, நேரத்திற்கேற்ப யார் மேலேனும் குத்தவும் அது தயங்குவதில்லை.

இங்கே மதம் பிரதானமல்ல. பிரபல்யமே பிரதானம். எவரையேனும் ஏதேனும் குறை கூறிக்கொண்டே இருக்க வேண்டும் என்ற பொதுப்புத்தி மனநோயின் வெளிப்பாடாகவும் இதைப் பார்க்கவேண்டும். தவறு செய்யும் ஒருவரைக் குறை கூறுவது தவறில்லை. ஆனால் எது செய்தாலும், பிரபலங்களைக் குறை சொல்வதில் நமக்கு ஓர் அலாதி ஆனந்தம். "பெரிய ஆளை எதிர்த்தா தான் நாம பெரிய ஆளு" என்ற சொத்தையான சுய வாதத்தைத் துணைக்கு அழைத்துக் கொண்டு ஆனந்திப்பதும், வேறொரு விஷயத்திற்காகச் சேர்த்து வைத்திருந்த காழ்ப்பைக் கொண்டு போய் சந்தர்ப்பம் பார்த்துக் கொட்டுவதையும் காலம் காலமாகவே இந்தச் சமூகம் செய்து வருகிறது.

ஆனால், அந்த இரு தகப்பன்களும் தன் குழந்தைகளை தன்னிஷ்டப்படிச் செயல்பட முழுச் சுதந்திரத்தை வழங்கியிருக்கிறார்கள் என்பதையோ, அப்பேர்ப்பட்ட சிறந்த தகப்பன்களைப் பெற்ற அந்தப் பிள்ளைகள் எவ்வளவு பாக்கியசாலிகள் என்பதையோ, தன் தகப்பன்களிடம் அடிமையாய் வாழ்ந்து, அடி உதை வாங்கி, பெற்றோர் சொன்னதைப் பிடிக்காமல் படித்து, பிடித்தோ, பிடிக்காமலோ பெற்றோர் சொன்ன பெண்ணை மணந்து, ஏதோ ஓர் கட்சிக்கோ கார்ப்பரேட்டுக்கோ அடிமை வாழ்க்கை வாழும் நாம் உணர்வதே இல்லை.
.