2016 பிப் 9 அன்று ஃபேஸ்புக்கில் எழுதியது.
ரஜினியைப் பற்றி அக்ஷய் குமார் ஆங்கிலத்தில் (அல்லது ஹிந்தியில்) என்னத்தைச் சொன்னாரோ? அதை நம் அறிவாளி லோக்கல் லேங்க்வேஜ் ரிப்போர்ட்டர் "தூசு தட்டினார்" என அபத்தமாக மொழிபெயர்த்து வைத்து இன்றைக்கு அச்செய்தியை வைரலாக்கி வைத்திருக்கிறார். ரஜினி செய்யும் வேறு சில அரசியல்கள் எனக்கும் பிடிக்காது தான். சென்னை வெள்ளத்துக்கு அவர் வெறும் பத்து இலட்சம் நன்கொடை தந்த போது "ஏன் இவ்ளோ கம்மி?" என்று கேட்டு நண்பர்களிடம் திட்டு வாங்கினேன். ஆனால் இந்த விஷயத்தில் புரியாமல் அவரைக் கழுவி ஊற்றும் ஸ்டேட்டஸ்கள் வேண்டாமே. இங்கே கூட புரிந்து கொண்டு கமெண்ட் செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
ஒரு விஷயம் யோசியுங்கள். நமக்கு ரெண்டு கோடி ரூபாய் சொத்து இருந்தால் என்னா ஆட்டம் ஆடுவோம்? கார்ல ஏசி, கக்கூஸ்ல ஏசி என்று கவுண்டர் ஸ்டைலில் கௌப்ப மாட்டோம்? ரியல் எஸ்டேட் விளம்பரத்திற்கு உங்கள் ஊருக்கு வரும் ஒரு சாதாரண காமெடி நடிகரைப் பார்க்கக் கூட எத்தனை அல்லக்கைகள் தாண்ட வேண்டும் என்று கவனித்திருக்கிறீர்களா? டவுசர் நாயகன் பீக்-கில் இருந்த போது, முதல்வர் கனவில் தன் உதவியாளர்களில் யாருக்கு எந்தத் துறை, யார் எதற்கு மந்திரி என்று ஒதுக்கி ப்ளான் போட்டதைக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? அப்படி ஒரு பந்தா நிறைந்த உலகம் ஆயிற்றே அது.
அதுவும் ஜூஸ் டம்ளர் பிடிக்க, ஷூ கழட்ட, ஃபேன் பிடித்து நிற்க, சட்டையை மாட்டி விட என்று எல்லா விஷயத்துக்கும் அசிஸ்டெண்ட் வைத்திருக்கும் சினி ஃபீல்டில் 500 கோடி ரூபாய் பிஸினஸ் வேல்யூ உள்ள ஆசியாவிலேயே ஒரு பெரும் நடிகருக்கு 15 அஸிஸ்டெண்டுகள் (அதுவும் 300 கோடி முதலீட்டில் தயாரிக்கப் படும் ஒரு படத்துக்கு) இருப்பதும் அவர் அவர்களிடம் வேலை வாங்குவதும் தவறாகத் தெரியவில்லையே. அதை மறுத்து தன் வேலையை தானே செய்ததை, இதை விட பந்தா நிறைந்த ஹிந்தி சினி ஃபீல்டைச் சேர்ந்த ஒரு நடிகர் பெருமையாகச் சொன்னதை, இங்கே உள்ள லோக்கல் தமிழ் நிருபர் மொழிபெயர்க்கத் தெரியாமல் எழுதியதால் விளைந்த அபத்தம் அது. எழுதும் விதத்தில் எழுதினால் எதையும் செய்தியாக்கலாம், எதையும் அபத்தமாகவும் ஆக்கலாம்.
மற்றும் ஒன்று. நமக்கெல்லாம் பறந்து பறந்து வில்லன்களை உதைக்கும் சூப்பர் ஸ்டார் என்றாலும் உண்மையில் 66 வயதுப் பெரியவர் அவர். அதே 66 வயதில் என் தந்தை இருந்த போது அவருக்கு சில விஷயங்களுக்கு என் உதவி தேவைப்பட்டது. பல முறை தரையில் உட்கார்ந்த அவர் முட்டி வலியால் எழ முடியாமல் என் கை பிடித்துத்தான் எழுவார். 65 வயதில் சுஜாதா, ஒரு ரூமில் இருந்து இன்னோரு ரூமுக்குச் செல்வதற்குள் எதற்குச் சென்றோம் என்று மறந்து விடுகிறது என்று எழுதினார். அதன் படி பார்த்தாலும் ஒரு 66 வயதுப் பெரியவர் மற்றவர் உதவி இன்றி தன் வேலையைத் தான் செய்வதை பாராட்ட அல்லவா வேண்டும்.
அது சரி, சுனாமியை பல மாதங்களுக்கு "டிசுனாமி" என்று எழுதிய, "அழகி" என்ற வார்த்தையை ஆபாசமாக்கிய பத்திரிகை தானே அது? அதைப் படிக்கும் மக்களிடம் இருந்து எப்படி ஒரு தெளிவான எதிர்வினையை எதிர்பார்க்க முடியும்?
- எஸ்கா
பி.கு - 2.0 பட்ஜெட் எவ்வளவாக மாறிப்போச்சு என்பது உங்களுக்கே தெரியும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக