திங்கள், 24 பிப்ரவரி, 2020

புரிஞ்சுதா?

24 பிப் 2014 அன்று ஃபேஸ்புக்கில் எழுதியது.

நம்ம ஊரில் நடந்த ஒரு சம்பவம் இது.

ஒரு பள்ளியில் ஒரு வருடத்திற்கான ஈ.எம்.ஐ பென்டிங். பணம் கேட்கப் போயிருந்தேன்.

அந்தப் பள்ளியின் கரஸ்பான்டன்ட் சிட்டிங் எம். எல். ஏ.. வராண்டாவில் நடந்து கொண்டிருந்தார் எம்மெல்லே.
"தம்பி இங்க வாங்க"
தோளில் கைபோட்டார்.

"தம்பி, பஸ் ஸ்டாப் தாண்டி ஒரு பெட்ரோல் பங்க் இருக்கே பாத்துருக்கீங்களா?"
"ஆமாம் சார். அந்த ஸ்பீடு பிரேக்கர் கூட இருக்கே"
"ஆமாம் தம்பி"
"அங்க தான் சார் பஸ்ல வரும்போது ரன்னிங்ல குதிச்சு இறங்கி வருவோம்"
"அது நம்மள்து தான்" என்றார்
அங்கே தான் ஒருமுறை ஏதோ கட்டப்பஞ்சாயத்து விஷயமாக ஒரு ஆளை நான்கைந்து பேர் மரண ஊனு ஊனிக் கொண்டிருந்ததை பார்த்தேன். கருக்கென்றது.

"எதிர்ல பாருங்க. அதோ தெரியுதே ரயில் வே டிராக்கு"
"ஆமா சார்"
"அது வரைக்கும் நம்ம இடம் தேன். இஸ்கோலுக்கு பசங்க வெளையாட கிரவுண்டு கட்டணும். ஆனா சர்வேயர் இடம் பத்ததாதுங்கிறான்"
அந்த டிராக்கில் அடிபட்டு இறந்ததாக ஆறு மாதம் முன்பு கைமைவான ஒரு ஆளின் போட்டோவை நியூஸ் பேப்பரில் பார்த்திருந்தேன்.

"இடது பக்கம் பாருங்க தென்னந்தோப்பு தெரியுதா?"
"எங்க சார்?"
"அட அங்க பாருங்க தம்பி"
கண்ணைக் குறுக்கி கிழவி போல் நெத்திக்கு சன் ஷேடு வைத்துப்பார்த்தேன். அது இருக்கும் முக்கா கிலோ மீட்டர். தூரத்தில் லேசாக தென்னை மரங்கள் தெரிந்தன. அடேங்கப்பா. அவ்ளோ தூரமும் இவர் இடம் தானா?

அப்படியே வலது பக்கமும் குத்து மதிப்பாக ஒரு தூரத்தை காண்பித்தார். இதையெல்லாம் எதுக்கு நம்ம கிட்ட சொல்றாரு. நாம பணம் வாங்கிட்டுப் போகத்தானே வந்தோம்-னு நெனச்சேன். சொல்லிவிட்டு ஏதோ போன் வரவும் தலைவர் உள்ளே போய்விட்டார்.

வெள்ளை வேட்டி, கக்கத்தில் கந்து வட்டி பை சகிதம் அந்தப் பக்கமாக ஒரு அல்லக்கை வந்தது. "ஏண்ணே, இதையெல்லாம் என் கிட்ட சொல்றாரு?"ன்னேன்.

அவன் "வெள்ளந்தியா இருக்கியே தம்பி. தேவையில்லாம வாயக் கொடுத்துடாத. மறுபடி பணம் கேட்டு வந்தியின்னா இவ்ளோ இடம் இருக்கு, எங்கியாவது ஒரு இடத்துல உன்னை புதைச்சுடுவேன்னு அர்த்தம்"

அண்ணாந்து தண்ணீர் குடித்துக் கொண்டிருந்தேன். குடித்த தண்ணீர் அப்படியே நீலகண்டன் போல தொண்டையில் நின்றது.

"சர்ண்ணே... சா... சாரிண்ணே.."
.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக