ஞாயிறு, 28 மார்ச், 2021

தலைமுறை இடைவெளி

28 மார்ச் 2019 அன்று ஃபேஸ்புக்கில் எழுதியது. 

ஒரு தலைமுறை என்பது எத்தனை ஆண்டுகள் என்பதற்குப் பொதுவாக சொல்லப்படும் பதில் 33 ஆண்டுகள் என்பது. ஆனால் இன்றைய காலத்தில் பார்த்தால் 10 ஆண்டுகளே மிகப்பெரிய வித்தியாசத்தை உணர வைக்கின்றன. உங்கள் வயது 30 ஆ? உங்களைச் சுற்றி உள்ள 20 வயது இளையோரைக் கவனித்துப் பாருங்கள். உங்களுக்கும் அவர்களுக்கும் பெரும் வித்தியாசத்தைக் காண முடியும். உங்கள் பழக்க வழக்கங்களுக்கும் அவர்கள் பழக்க வழக்கங்களுக்கும், உங்கள் செய்கைகள், பாஷை, என பல விஷயங்களில் மாற்றங்கள் தெரியும். அதே போல் மேல்நோக்கியும். 40 வயதுடையோரைக் கொஞ்சம் கவனியுங்கள். போலவே 20 வயது இளைஞர்களுக்கும் 10 வயது சிறுவர்களுக்கும் உள்ள வித்தியாசமும் மலைக்க வைக்கிறது. 

தகவல் தொடர்பும், தொழில்நுட்பமும் வளரும் வேகம் இந்த மாற்றத்தைச் சாத்தியமாக்கியிருக்கிறது. அது நன்மையை நோக்கிய மாற்றமா? கலாச்சாரமோ, கல்வியோ, தொழிலோ - நுனிப்புல் அறிவு கொண்டு - அழிவு நோக்கிய மாற்றமா என்பது உங்கள் பார்வைக்கே விட்டு விடுகிறேன்.

தலைவரே

29 மார்ச் 2019 அன்று ஃபேஸ்புக்கில் எழுதியது. 
போனமாசம் நமக்கு வண்டி ஓட்டிய ஒரு ஓலா கேப் டிரைவர் "இப்ப இருக்குற தலைவர்கள்லயே சிறந்தவர் சரத்குமார் தான் சார்" என்றார். எனக்கு தூக்கி வாரிப் போட்டது. அவர் சரத் அனுதாபி போல. அதுவும் அவரது சாதிகாரணமாக. 
எம்.ஜி.ஆர் ஒருமுறை "காமராஜர் என் தலைவர், ஆனால் அண்ணா என் வழிகாட்டி" என தவறுதலாகச் சொல்லி, அது பெரும் பிரச்சினையாக மாற........ அதை வேறொரு பொது மேடையில் வாலியை வைத்து சமாளிப்ஸ் செய்யச்சொல்லி அவரும் எம்.ஜி.யாரைக்காப்பாற்ற வேண்டி "வழிகாட்டி" என்ற வார்த்தையை உயர்த்திப் பேசி, "தலைவர்" என்ற வார்த்தையை "பஞ்சாயத்துத் தலைவர், கட்சித்தலைவர்" என்று குடலாப்பரேஷன் செய்து "தலைவர்" என்ற வார்த்தைக்கு அர்த்தத்தை மாற்றியது போல......... 
பள்ளிப்பாடத்தில் நான் படித்த "தலைவர்" என்ற வார்த்தைக்கு அர்த்தம் வேறு.............. இன்றைக்கு "தலைவரே" என்ற வார்த்தை எப்படியெல்லாம் மாறி விட்டது?