ஞாயிறு, 23 ஆகஸ்ட், 2020

#முதல்_சம்பளம்_பதிவு 3

அதன் பிறகு தினமும் எக்ஸிபிஷனில் பாதாம் பால் ஸ்டாலில் வேலைக்குப் போக ஆரம்பித்தேன். தினம் காசு கையில். அந்த வயதில் அது ஜாலியாகவே இருந்தது. ஆனால் தெரிந்தவர்கள் யாராவது பார்த்தால் என்ன செய்வது என கொஞ்சம் மனதுக்குள் பயமாக இருக்கும். காலேஜ் பசங்கள் யாராவது பார்த்து விட்டால் என்ன செய்வது என்று கூச்சமாகவும் இருக்கும். அதுவே மறுபக்கம் "நாம என்ன தப்பா பண்றோம்? அப்பா, அம்மா கிட்ட சொல்லிட்டு பார்ட் டைம் வேலைக்குத் தானே வர்றோம்" என்றும் தோன்றும். 

நைட் ஸ்டால் மூடியதும் வீட்டிற்குக் கிளம்பும் முன் பாதாம் பால் மிச்சமிருந்தால் "நீங்க குடிங்கப்பா" என்பார் ஓனர். ஒரு வாரம் நன்றாக இருந்தது. அதன் பின் "பழகப் பழகப் பாலும் புளிக்கும்" தான். பிறகு, ஸ்டால் மூடும் நேரத்தில் அங்கங்கே சுற்றிக் கொண்டிருக்கும் கடைசி நேரக் கஸ்டமர்களைக் கூவி அழைத்துப் பாதி விலைக்கு விற்போம். அதையும் மீறி மிச்சமிருந்தால் மற்ற கடைகளில் வேலை செய்து களைப்பாகக் கிளம்பும் ஆட்களை அழைத்து இலவச விநியோகமும் செய்வோம். 

ஒருநாள் என் காலேஜ் சீனியர் ரமேஷ் அந்தப் பக்கம் வந்தபோது ஆச்சரியமாக புருவம் உயர்த்தி விட்டுப் பார்த்தார். மற்ற கடைகளில் 10 ரூபாய். எங்கள் கடையில் 20 ரூபாய் என்றாலும், "கார்த்தி, உனக்காகத்தான் வாங்குறேன்" என்று சொல்லி அவர் நண்பருடன் வாங்கிக் குடித்து விட்டுப் போனார். கொடுமை என்னவென்றால் அவர் போன அரை மணி நேரத்தில் "பாதி விலைக் கூவல்" துவங்கியது. பிறகு சில நிமிடங்களில் இலவசப் பால். அடடா, நம்மளால ரமேஷ் மாமா (அப்டித்தான் கூப்பிடுறது) வுக்கு 40 ரூபா நட்டமாச்சே. நம்ம ஒரு நாள் சம்பளமாச்சே என்று வருத்தப்பட்டேன். 

அடுத்த பார்ட் டைம் வேலை கொரியர் போடுவது. காலேஜ் நண்பன் கோவிந்தராஜ் (இப்போ யுனிவர்சிடி புரொபஸர்) பார்ட் டைமில் புரொபஷனல் கொரியரில் காலையில் டெலிவரி போடும் வேலையில் இருந்தான். எனக்கும் கேட்டிருந்தேன். ஆனால் அங்கே வேகன்ஸி இல்லை. அதனால் அவனுடன் சேர்ந்து சில நாட்கள் காலையில் சுற்றிக் கொண்டிருப்பேன். அந்த அனுபவத்தில் பிறகு எப்போதாவது அவன் லீவு எனும் பட்சத்தில் அவன் கவர்களை நான் டெலிவரி செய்வதுண்டு. சம்பளம் கிடையாது. 

தொடரும்.... 

#முதல்_சம்பளம்_பதிவு 2

பள்ளியிறுதி ஆண்டுகள் படிக்கும் போது, நைனா முன்பு வேலை செய்த போட்டோ பிரேம் கடைக்கு வேலைக்குப் போனேன் "பார்ட் டைமா ஆள்வேணுமாம்" என்ற என்கொயரியின் பேரில். வெள்ளி மாலை, சனி முழு நாள், ஞாயிறு மாலை வரை என. வெள்ளிக்கு 10 ரூபாய் சம்பளம். சனி, ஞாயிறுக்கு 30 ரூபாய். அந்த நேரங்களில் தான் கூட்டம் நன்றாக வரும். சிறிதும் பெரிதுமாக நிறைய வேலைகள் இருக்கும். ஓனர் அப்பாவிடம் "தாத்தா, டீ சொல்லுங்க" என்பார்கள் யாரேனும். அப்படி ஒரு நாளைக்கு நான்கைந்து டீ அல்லது காபி அல்லது பால் வரும். மாலையில் ஒரு வடை. அதுபோக முழு நாளுக்கு பேட்டா 10 ரூபாய்.


அங்கே சீனி என்றொரு பயல் இருந்தான். சாணி என்றோ, சகுனி என்றோ, சீன் என்றோ பெயர் வைத்திருக்கலாம். ஓவர் வாய். "நான் உனக்கு முந்தி சேந்துருக்கேன். எனக்கு 5 ரூபாய் பேட்டா. உனக்கு ஒன்னும் தரமாட்டாங்க. ஒழுங்கா வேலை பாக்கணும்" என்று மிரட்டுவான். ஒரே வாரத்தில் எனக்கு பேட்டா 10 ரூபாய் என்றதும் ஓனரிடம் போய் வாதித்துக் கொண்டிருந்தான். அவர் இரண்டு பேரையும் கூப்பிட்டு "ஒன்றை இஞ்ச் மஞ்சள் பிரேம் ஒரு துண்டு எடுத்து வாங்க" என்றார். நான் போய் எடுத்து வந்தேன். அவனுக்கு அப்படி என்றால் என்னவென்றே தெரியவில்லை. "இதுக்குத்தான் அவனுக்கு 10 ரூபா பேட்டா" என்றார் அவர்.

அது என் அப்பா மற்றும் தாத்தா வின் தொழில் என்பதால் அப்பா கூடவே பல வருடங்களாக இருந்து இருந்து அவர் செய்வதைப் பார்த்துப் பார்த்து, சின்னச் சின்ன எடுபுடி வேலைகள் செய்து, போட்டோ பிரேம் தொழில் பற்றிய அனைத்து விபரங்களும் எனக்கே தெரியாமல் என்னுள் ஊறியிருந்தன. எனவே வேலைக்குப் போன இரண்டாம் நாளே அது என்னிடமிருந்து வெளிப்பட்டிருக்கிறது. பிரேம் அறுப்பது, ஹாட்போர்டு அறுப்பது, ஆணி அடிப்பது என எல்லா வேலைகளையும் சட்டென செய்யத் துவங்கினேன்.

அந்த தைரியத்திலும், ஓனர் சந்தோஷமாக வரவேற்றதாலும், கல்லூரி படிக்கையில் தினம் மாலை வேளையில் போக ஆரம்பித்தேன். அரசுக்கல்லூரி என்பதால் 4 மணிக்கு முடிந்து விடும். வீட்டுக்குப் போய் பேக்கைக் கடாசி விட்டு, இருப்பதைச் சாப்பிட்டு விட்டு 6 மணிக்குக் கடைக்கு வருவேன். கடை சாத்த 10 மணி ஆகும். சம்பளம் தினம் 30 ரூபாய் ஆனது. சனிக்கிழமை 70 ஆ 60 ஆ என்று நினைவில்லை. வழக்கம் போல பேட்டா, டீ, வடை உண்டு. முகூர்த்த நாட்களில் காலை சீக்கிரம் போனால் உபரியாக டிபனுக்கு 20 ரூபாய் தருவார்கள். 15 ரூபாயில் மூன்று பரோட்டா அடித்து விட்டு 5 ரூபாய் சேர்த்து வைத்துக் கொள்ளலாம்.

ஆனால் ஒருமுறை வேறொரு வாய்ப்பு வந்தது. பழைய மெடிக்கல் ஓனரின் நண்பர் அரசுப் பொருட்காட்சியில் ஸ்டால் போட்டு, பாதாம் பால் கடை போட்டார். 6 முதல் 11 மணி வரை. "இரண்டு மாதம் வேலை. போறியா?" என்று கேட்டார்கள். 40 ரூபாய் சம்பளம். 10 ரூபாய் அதிகம் என்றதும், எப்போதாவது போகும் எக்ஸிபிஷனில் தினசரி வேலை என்பதும், பெரும் கூட்டத்திற்கு நடுவில் பணி என்பதும் காரணமற்ற ஒரு பரவசத்தைத் தந்தது எனக்கு. உடல் உழைப்பும் கிடையாது. டோக்கன் தரும் கஸ்டமருக்கு, டம்ப்ளரில் பாலை ஊற்றித் தர வேண்டும். அவ்வளவே. போகலாம் என்று தோன்றி விட்டது எனக்கு. பிரேம் கடை ஓனர் என்ன நினைப்பார். சனி, ஞாயிறு முழு நாள் வேலை என்னாகும் என்றெல்லாம் எனக்குத் தோன்றவே இல்லை.

ஒரு முதலாளியின் மனநிலை எப்படி இருக்கும் என்று தெரியாமல் அவரிடமே போய் "நான் அடுத்த வாரத்துல இருந்து வேலைக்கு வரல. எஜ்ஜிமிஷன்ல வேலைக்குப் போறேன்" என்றேன். முகம் மாறி "அங்க ஏன் போற?" என்றார். விபரம் புரியாமல் "உங்க கடையில 30 ரூபாய் தான். அங்க தினம் 40 ரூபாய் தருவாங்க" என்று அவரிடமே சொன்னேன். "ஓ, பத்து ரூபாய் எக்ஸ்ட்ரா கிடைக்குதுன்னு அங்கே போறியா?" என்றார். "ஆமாம்" என்று சொன்னேன்.

பிறகு என்ன நடந்தது, அவர் என்ன சொன்னார் என்று நினைவில் இல்லை. சரி போ என்று விட்டு விட்டார்.

தொடரும்......

#முதல்_சம்பளம்_பதிவு_1

ஃபேஸ்புக்கில் "உங்கள் முதல் சம்பளம் என்ன?" என்றொரு கேள்வி ஓடிக் கொண்டிருக்கிறது. இப்போதைய டிரெண்ட் போலும். சில பதிவுகள் கமெண்ட்கள் பார்த்த பிறகு எழுதத் தோன்றிய ஒரு மெமரீஸ் பதிவு இது. இதையெல்லாம் எழுதணுமா என்று தோன்றினாலும், வருடங்கள் ஓட ஓட, இந்த மூளை குப்பைகளை நிறையச் சேர்த்து வைக்கிறது. பல பழைய சந்தோஷமான விஷயங்கள் மறந்தே போகின்றன. அட் லீஸ்ட் எதிர்காலத்தில் அமைதியாக அமர்ந்து நான் எனக்கு அசை போடவாவது இவை தேவைப்படலாம் என்ற எண்ணத்தில் பதிந்து வைக்கிறேன். சில நண்பர்கள் எழுதியுள்ள படி சிலருக்கு இது மோட்டிவேஷனல் ஆகக் கூட இருக்கலாம்.

என்னுடைய முதல் வேலை சேலத்தில் ஒன்பதாப்பு படித்த போது விடுமுறையில் ஒரு மெடிக்கல் ஷாப்பில் வேலைக்குப் போனது. மாதச் சம்பளம் 300 ரூபாய். அதுதான் நான் கையில் வாங்கிய எனது முதல் சம்பளம். அடுத்த வருடம் அதே கடையில், டாக்டர் சீட்டுப் படித்து மருந்துகள் எடுத்துக் கொடுக்கும் அளவு கொஞ்சம் விபரம் தெரிந்ததும் அது 500 ரூ ஆனது. ஆனால் அந்த வேலை வருடத்துக்கு ஓரிரு மாதங்கள் மட்டுமே. ஓனரும் இளைஞர் என்பதால் பெரும்பாலும் கடைக்கு வரவே மாட்டார். நான் மட்டும். வீட்டுப்பாட லாங் சைஸ் நோட்டு எடுத்துப் போய் கடையிலேயே உட்கார்ந்து ஆள் இல்லாத போது எழுதிக் கொண்டிருப்பேன்.
அதற்கு முன்பு அஞ்சாப்பு படிக்கையில் கும்பகோணத்தில் அப்பாவின் கடைக்கு எதிரே இருந்த எலக்ட்ரிக்கல் கடையில் அப்பா சொல்லி ஒரு மாதம் சும்மா அதை "எடு" இதைப் "புடி" வேலைக்குச் சென்றேன். அங்கே வெயிட்டாக எதையோ தூக்கிக் கால் சுண்டு விரலில் போட்டுக் கொண்டது மட்டுமே நினைவிருக்கிறது. வெறெதுவும் நினைவில் இல்லை. அவ்வேலைக்கு அவர்கள் ஏதோ சம்பளம் கொடுத்ததாகவும் அதை "உங்கப்பாரே அதைச் செலவு பண்ணிட்டாரு. வீட்டுக்குக் கொடுக்கலை" என்று என் கங்கம்மா நெடுநாட்கள் புலம்பிக் கொண்டிருந்தாள்.
அதுபோக எட்டாப்பு படிக்கையில் ஒரு முறை கல்யாண வீடியோகிராபருக்கு அஸிஸ்டெண்ட் ஆக இரண்டு நாட்களுக்கு ஒயர் சுற்றவும் லைட் தூக்கவும் ஒரு முறை போயிருக்கிறேன். செம ஜாலியாக இருந்தது. ஆனால் மூன்று மணிநேரம் கூடத் தூங்க முடியவில்லை. இடது தோளில் ஒயர்பாக்ஸ் மாட்டி ஷோல்டர் வலி. வலது கையைத் தூக்கி லைட் காண்பித்ததில் வலது கை வலி ஒரு வாரம் பின்னியது. ஆனால் அதற்குச் சம்பளம் "எனக்கு" வரவில்லை. ஆனால் காசு - நைனா - தம்மு செலவு - கங்கம்மா - புலம்பல் மறுபடியும்.
தொடரும்....

புதன், 19 ஆகஸ்ட், 2020

இது அரசு ஆதரவுப் பதிவல்ல. நெட் போராளிகள் எதிர்ப்புப் பதிவு.

 1. ஆவின் பால் விலையேறியதற்குப் பொங்கும் ஃபேஸ்புக் போராளிகளே, வீட்டில் உண்மையாகவே ஆவின் பால் தான் வாங்குகிறீர்களா?

2. ஆவினின் நேரடி விலையேற்றம் ஒரு பக்கம் இருக்கட்டும். இன்னும் இந்த "கூலிங் காசு" என்று உபரித் தொகை வைத்து விற்கும் வியாபாரிகளை எப்போது தட்டிக்கேட்கப் போகிறீர்கள் அதிகாரிகளே? அதிலும் ஆவின் விலை ரவுண்டாக இல்லாமல் 20.50 என்று இருப்பதால் விலை ஏற்றி வாகாக 22 ரூபாய் என்றார்கள். இப்போது 23.50 ஆனதும் 25 ரூபாய் என்கிறார்கள்.
3. ஏற்றப்பட்ட விற்பனை விலையை மட்டும் காட்டிக்குமுறும் போராளிகளே. அரசு கொள்முதல் விலையையும் தானே ஏற்றியிருக்கிறது? பால் கொள்முதல் விலையை உயர்த்தி தர வேண்டும் என்று பால் உற்பத்தியாளர்கள் சங்கங்கள் மற்றும் பால் உற்பத்தியாளர்கள் அரசுக்கு தொடர்ந்து கோரிக்கை வைத்ததன் விளைவாகத்தானே ஏற்றப்பட்டிருக்கிறது?
4. இதே "கரும்பு கொள்முதல் விலையை ஏற்றவில்லை, உப்பு கொள்முதல் விலையை ஏற்றவில்லை, ஏழை உற்பத்தியாளர்களின் வயிற்றில் அடிக்கிறது அரசு" என்று தனியாக வேறு பக்கம் கூவிக்கொண்டிருக்கிறார்கள். அதுவே பால் கொள்முதல் விலையை ஏற்றி பால் உற்பத்தியாளர்களுக்கு நன்மை நடந்தால் "அய்யய்யோ, பால் விலையை ஏற்றி விட்டார்களே, இனிமேல் குடும்பஸ்தன் என்ன செய்வான்? ஏழைகள் பாலுக்கு என்ன செய்வார்கள்?" என்று வேறு விதமாக கூக்குரல்.
5. விலையேறுனா எனக்கும் கஷ்டம் தான். நானும் விலைவாசி உயர்வை எதிர்க்கிறேன். ஆனால் என் சிற்றறிவில் தோன்றும் இன்னோர் மாற்றுக்கருத்து என்னன்னா, "வருடங்கள் கூடக்கூட விலைவாசி ஏறத்தானே செய்யும்? அநியாயமா ஏறுனா தான் தப்பு. 2001 ல இருந்த பால் விலையே இப்பவும் இருக்குமா என்ன?"
உங்களுக்கு என்ன தான்யா வேணும் போராளிகளே?
டிஸ்கி - இது அரசு ஆதரவுப் பதிவல்ல. நெட் போராளிகள் எதிர்ப்புப் பதிவு.
- எஸ்கா

ஞாயிறு, 16 ஆகஸ்ட், 2020

சினிமாவும் சாதிகளும்

19 செப் 2015 அன்று ஃபேஸ்புக்கில் எழுதியது. 

வாட்ஸ் அப்பில் ஒரு சினிமா குரூப்பில் என்னைச் சேர்த்து விட்டுவிட்டார்கள். எல்லா குரூப்பையும் போல கன்னா பின்னாவென்று கண்டதையும் ஃபார்வர்டு செய்தவர்களைக் கெஞ்சி "இங்கே சினிமா மட்டும் ப்ளீஸ்" என்று ஒரு வழிக்குக் கொண்டு வருவதே பெரும் பாடாக இருந்தது. இன்றைக்கும் அதில் பலர் நம் போஸ்டுகளைப் பார்ப்பதே இல்லை. மீண்டும் மீண்டும் பிள்ளையார் சிலை, ரெட்டை வால் நாய், அஞ்சு தலை பாம்பு, பம்பு செட்டில் ஒண்ணுக்கடிக்கும் பையன், அப்துல் கலாம், நேதாஜி, வளையல் டிசைன், ரத்தம் கக்கி சாவான் என வகைதொகையில்லாமல் வாரிக் குமித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். 

ஆனால் அதை விடப் பெரும் பிரச்சினை, எங்கு எதைச் சுற்றினாலும், எதைப் பற்றிப் பேசினாலும் "சாதி"யிலேயே வந்து நிற்கிறார்கள். வேணாம்யா, என்னை விட்ருங்கய்யா என்றால் விட மாட்டேன்கிறார்கள். நமக்கு இந்த வம்பே வேணாம்டா என்று வெளியில் வந்தால் கோவை சரளா (அட்மின்) வடிவேலு (மெம்பர்) லுங்கியை இழுந்து உள்ளே போடும் மீம் பார்த்திருக்கிறீர்களா? அதைப் போல இழுத்து இழுத்து உள்ளே போடுகிறார்கள். 

நான் குரூப்பை விட்டு வெளியே ஓடிய போது அட்மின் எனக்குப் போன் செய்து 15 நிமிடம் பேசி என்னை கன்வின்ஸ் செய்து, இனிமே சாதி பற்றிப் பேச வேண்டாம்னு சொல்றேன் என்று சொல்லி என்னை அட்மினாக வேறு ஆக்கி விட்டு விட்டார். ஆனால் மீண்டும் அடங்க மாட்டேன் என்கிறார்கள். 

மறுமலர்ச்சி - ராசு படையாச்சி - அவர்கள் பெருமை

தேவர் மகன் - தேவர் சாதிப் பெருமை

எந்தெந்த இயக்குனர், எந்த நடிகர்லாம் "நாடார்" இனத்தைச் சேர்ந்தவர்கள்? 

சுந்தர பாண்டியன் படத்தில் ஏன் "முத்துராமலிங்கம்" சிலையைக் காண்பிக்கணும். 

"நண்பன்" படத்தில் வசந்த் விஜய் தலித் ஆம். அதனால் அந்த கேரக்டரை கொன்று விட்டார்களாம் (அடேய், அது ஹிந்தி ரீமேக்டா) 

மெட்ராஸ் படத்தின் தலித் கூறுகள். 

ஹேராம் படத்தில் என்ன ஜாதியை உயர்த்திக் காண்பித்தார்கள் 

என்று தான் திரும்பத் திரும்ப டிஸ்கஷன் நடக்கிறது. வேண்டாம் என்றால் "சினிமா மட்டும் பாப்பீங்களாம், அதில் உள்ள ஜாதியைப் பற்றி ஏன் பேச மறுக்கிறீர்கள்" என்கிறார்கள். சரி பேசுங்க, என்னைய விட்ருங்க என்றாலும் விட மாட்டேன் என்கிறார்கள். 

இப்போ நான் என்ன செய்ய?

.

வியாழன், 13 ஆகஸ்ட், 2020

கின்டில் குப்பைகள்

அமேசான் கின்டில் புதிய பிஸினஸ் மாடல் ஒன்றைக் கொண்டுவந்தாலும் கொண்டு வந்தது.  அங்கே குவிந்து கிடக்கும் குப்பைகள் ஏராளம். 

சிலர் யார் யாரோ எழுதிய ஆங்கிலக் கட்டுரைகளை அப்படியே கூகிள் ட்ரான்ஸ்லேட்டில் போட்டு அதை அப்படியே கின்டிலில் ஏற்றி, மின் நூலாகக் கொண்டு வருகிறார்கள். இரண்டாவது பாராவிலேயே பல்லிளிக்கிறது. 

சிலர் "எனக்கும் எழுதத் தெரியும்" என்று கேபிளில், ஓடிடியில் பார்த்த பல ஆங்கிலப்படங்களிலிருந்து எதையெதையோ உருவி கதை என்று கக்கி வைத்திருக்கிறார்கள். நான்கு பக்கம் தாண்ட முடியவில்லை. 

சிலர் ஏகப்பட்ட எழுத்துப் பிழைகளுடன் எழுதி வைத்திருக்கிறார்கள். அதற்கு அவர்கள் நண்பர் கூட்டம் சப்பைக் கட்டு வேறு. சந்தி, ஒருமை பன்மைப் பிழைகளை விடுங்கள். "அனைத்து - அணைத்து" வுக்குக் கூடவா வித்தியாசம் தெரியாது? தவறுடன் எழுதுவது ஆரம்பத்தில் தவறில்லை. ஆனால் மிகச் சாதாரணமாக வார இதழ்கள், தினசரிப் பத்திரிகைகள் வாசித்தால் கூடப் போதுமே. எழுத்துப் பிழைகள் தனக்கே தெரியுமே. அதுகூடவா முடியாது? 

சிலருக்கு வரிகள் அமைக்கக் கூடத்தெரியவில்லை. ரோட்டுக்கடை கொத்துபரோட்டாவில் எதையெதையோ அள்ளிப்போட்டு "நல்லாருக்கா? இல்லையா?" என்று முடிவுக்கே வர முடியாதது போல வேறு யார்யோரோ எழுதிய, எங்கெங்கோ படித்த வார்த்தைகளை அப்படியே ரைமிங்குக்காக அள்ளிப்போட்டு எழுதி வைத்திருக்கிறார்கள். 

சிலர், நாட்டுடைமையாக்கப் பட்ட நூல்களைத் தங்கள் பெயரில் வெளியிட்டு ஏதாவது காசு பார்க்க முடியுமா என்று பார்க்கிறார்கள். 

நகுலன் சொன்னாராம் "ஏய், வாசகா, உனக்குத் தான் எத்தனை எழுத்தாளர்கள்" என்று. இன்றைய நிலையில் அவர் இருந்திருந்தால் "ஏய் வாசகா, உனக்குத் தான் எத்தனை குழப்பங்கள் என்று. 

அன்னப்பறவையாய் இருக்க வேண்டும்.


ஞாயிறு, 9 ஆகஸ்ட், 2020

விநாயகரும் நானும் - 1

வரவிருக்கும் "விநாயகர் சதுர்த்தி"யை முன்னிட்டு தினசரி ஒரு விநாயகர் படத்தை அப்லோடலாம் என்றிருக்கிறேன். இன்று முதலில் சிம்பிளாக ஆரம்பிக்கலாம். படம் 1.

முன் கதை - ஆக்சுவலி படத்தின் பின்(னால் உள்ள) கதை - பள்ளியிறுதியிலும், கல்லூரிக் காலத்திலும் பார்ட் டைமாக ஒரு போட்டோ பிரேம் கடையில் நான்காண்டுகள் வேலை பார்த்தேன். அப்போது ஒருமுறை ஒரு A4 முழுக்க குட்டிக்குட்டியாக, விதவிதமான விநாயகர் படங்களை பிரேம் போடக் கொண்டு வந்தார் ஒருவர். அவர் அனுமதியுடன் ஜெராக்ஸ் போட்டு வைத்துக்கொண்டு ஒன்னொன்றாக மூன்று மாதங்களில் கலரில் 20 படங்கள் வரை, வரைந்து கொண்டிருந்தேன். ப்ளஸ் டூ படிக்கையிலா, கல்லூரிக் காலமா என்று நினைவில்லை. குமுதத்திற்கு அனுப்பும் முன் ஒரு செட் ஆக ஜெராக்ஸ் எடுத்து வைத்துக் கொண்டேன், மெமரீஸ்-க்காக.
"நல்லாருக்கு, இதையெல்லாம் பத்திரிகைக்கு அனுப்புடா" என்று யாரோ சொன்னதைக் கேட்டு பல்க் ஆக அவற்றை அப்படியே குமுதத்திற்குக் கொரியர் போட்டேன். ஆனால் இரண்டு பிரச்சினைகள். 1. ஒரு பத்திரிகையில் இல்லாத பகுதிக்கு நாம் எதையாவது அனுப்பினால் அது எப்படி பப்ளிஷ் ஆகும் என்று எனக்குத் தெரிந்திருக்கவில்லை. 2. மூன்றாண்டுகள் கழித்து தினமலரில் வேலைக்குச் சேர்ந்த போதுதான், கம்ப்யூட்டர் ஃபான்ட்-களிலேயே இப்படி விதவிதமான விநாயகர்கள் உண்டு என்று தெரிந்தது. அதை எப்படி குமுதத்தில் பப்ளிஷ் செய்வார்கள் என்று அப்போது தான் என் மரமண்டைக்கு உறைத்தது.
சில ஸ்கெட்ச் பென்களிலும், சில வாட்டர் கலரிலும் வரைந்தது. சில அவுட்லைன் மட்டும், சில அவுட்லைன் வெள்ளை விட்டுவிட்டு பிறபகுதிகள் முழுக்க கலரும் (அடுத்தடுத்த படங்களில் வரும்). பிள்ளையார் - விநாயகர் என் இஷ்ட தெய்வம், வரைவதில். டப்பென்று ஒரு வளைவைப் போட்டு வரைந்து விடலாம். எளிமையாக சில கோடுகளிலும் வரையலாம், காம்ப்ளிகேட்டட் ஆக நுணுக்கி நுணுக்கி அலங்காரங்கள் செய்தும் வரையலாம். கோபித்துக் கொள்ள மாட்டார்.
.

புதுக் கேள்வி

2014 ஆகஸ்ட் 9 அன்று ஃபேஸ்புக்கில் எழுதியது. 

டி.வி பார்க்கும் போது, சேனல் மாற்றும் போது, சினிமா பார்க்கையில் நாம கெத்தா "சினி மினி", "கிசு கிசு" மேட்டர்களையெல்லாம் அப்பப்போ எடுத்து விட்டா நம்ம பேமிலி மெம்பர்ஸ் பெருமையா "அப்படியா" என்று கேட்டுக்கொள்வார்கள். எதிர் கேள்வி கேட்க மாட்டார்கள். 

உதா 1 - "முன்பே வா, என் அன்பே வா" பாடல் முதலில் "அன்பே வா, என் முன்பே வா" என்று தான் எழுதப்பட்டிருந்தது. ஆனால் வார்த்தையை மாற்றிப்போட்டால் கொஞ்சம் பெட்டர் ஃபீலிங் கிடைக்கும் என்று ஏ.ஆர்.ரஹ்மான் சொன்னதால் வாலி ஓ.கே சொல்லி மாற்றிவிட்டார் (நன்றி - "நினைவு நாடாக்கள்" - வாலி) 

உதா 2 - "லகான்" படத்தில் கிரவுண்டில் மேட்ச் நடக்கையில் அவர்கள் ஓடுவது, மண் தரையில் குதிப்பது, பேட் சத்தம் போன்றவை ஒரு க்ளோஸ்டு ஸ்டுடியோவுக்குள் மண் தரை உருவாக்கப்பட்டு அஸிஸ்டெண்டுகள் எல்லாவற்றையும் செய்ய சவுண்ட் என்ஜினியரால் ரெக்கார்டு செய்யப்பட்ட சத்தங்கள் (நன்றி - "சினிமா" - செல்லா) அவற்றை உருவாக்குவதற்கு மட்டும் 45 நாட்கள் ஆனதாம். 

ஆனா, அந்த கெத்தெல்லாம் ஒரு காலம். எனக்கு கவுன்டர் கொடுப்பதில் தங்கமணி கில்லாடி. எதிர்பார்க்காத (அதாவது எனக்கு பதில் தெரியாத) ஒரு கேள்வியை கேட்டு விட்டு போய்விடுவார். மீ "ங்ஙே".. 

"மின்சார கனவு" படத்தில் பிரபு தேவாவுக்கு பின்னணி குரல், அப்போது டப்பிங் ஆர்டிஸ்டாகவும் சின்னச் சின்ன வேடத்திலும் நடித்துக்கொண்டிருந்த நம்ம நடிகர் "விக்ரம்" என்று சொன்னேன். காதலன்-ல கூட அப்படித்தான் என்றும் சொன்னேன். 

அவுக கேட்டாக... "ஏன் பிரபுதேவாவுக்கு விக்ரம் டப்பிங் பேசணும்? பிரபுதேவா தான் பல படங்கள்-ல சொந்தக் குரல்-ல பேசியிருக்காருல்ல. அப்புறம் ஏன்?" 

தெரியலையேம்மா... தெரியலையே.... 

ஏதோ ஒரு விளம்பரத்தில் கஜோலிடம் ஒரு குட்டிப்பையன் கேட்ட கேள்விக்கு கஷ்டப் பட்டு மறுநாள் அவர் ப்ரிப்பேர் செய்து கெத்தாக போய் உட்கார்ந்தால் அந்தப் பையன் புதுக்கேள்வி கேட்பான். நினைவிருக்கிறதா?

.

சனி, 8 ஆகஸ்ட், 2020

"ஆடாதடா, ஆடாதடா, மனிதா"

2016 ஆகஸ்ட் 8 ஆம் தேதி ஃபேஸ்புக்கில் எழுதியது. 

2018 ஆகஸ்ட் 8 ஆம் தேதி - யின் அப்டேட் - அவன் இறந்து விட்டான்

--------------------------------------------------------------

கார் வாங்குவதோ, வீடு வாங்குவதோ முக்கியம் அல்ல. அடுத்தவன் வயித்துல அடிக்காம இருக்கணும். அதான் முக்கியம். நிம்மதி முக்கியம். கடந்த 15 ஆண்டுகளில் நான் அப்ஸர்வ் செய்த வகையில் நாம் செய்ததற்கான பலன் கிடைத்தே தீர்கிறது என்பது என் அவதானிப்பு. நல்லதோ, கெட்டதோ. நான் கடந்து வந்த பலரும், தன் இயல்புகளுக்கேற்ற பலன்களைப் பெற்று வருவதைப் பார்க்கையில் பல பாடங்களைப் படிக்க முடிகிறது.

.
"தெய்வம் நின்று கொல்லும்" என்றெல்லாம் பழமொழி பேசவில்லை. படைத்தவனை விட்டு விட்டு, படைப்புகளைத் தெய்வமாக்கி இருக்கிறோம் என்ற வகையில், "தெய்வம் இருக்கிறது - இல்லை" என்ற இடைப்பட்ட நிலையில் நின்றுகொண்டிருப்பவன் நான். நமக்கென ஏதோ ஒரு பற்றுக் கோலாக நம்பிக்கை வைக்க தெய்வத்தை விட்டால் "வேறொரு அழுத்தமான ஒரு பொருள் (அல்லது கான்செப்ட்)" இல்லாமையே பலரும் கடவுளை விட்டு நாத்திகனாக மாறாமல் ஆத்திலொரு கால், சேத்தில் ஒரு கால் என்று தடுமாறக் காரணம் என்பது என் கணிப்பு. சரி இதை இந்த அளவில் விடுவோம்.
.
நேற்று மற்றுமொரு உதாரணம். பழைய நண்பனொருவன் குடி மற்றும் சில போதைகளுக்கு கடும் அடிமையாகி வெகுவாகப் பாதிக்கப் பட்டு மீண்டு வர முடியாமல் துடித்துக் கொண்டிருப்பதாகத் தகவல். "அய்யோ, பாவம்" என்று சொல்ல அவன் அவ்ளோ யோக்கியன் இல்லை. செஞ்ச அட்டகாசமும் கொஞ்ச நஞ்சமும் இல்லை. "செஞ்சியில்ல, படு" என்று சொல்ல மனம் வரவும் இல்லை. சாலையில் அடிபட்ட பிராணியொன்றை "த்சொ, த்சொ" என்றபடி கடந்து போகும் சாமானியனாகக் கடந்து போகிறேன்.
.
"ஆடாதடா, ஆடாதடா, மனிதா"

மிருதன் பார்ட் டூ

2016 ஆகஸ்ட் 8 ஆம் தேதி ஃபேஸ்புக்கில் எழுதியது. 

ஸோம்பி வைரஸால் தாக்குதலுக்குள்ளான ஜெயம் ரவி ஸோம்பி சென்னை செல்கிறது. சென்னையில் (அடையாளமாக ஆம்பா ஸ்கைவாக், ஜெமினி பிரிட்ஜ், சென்ட்ரல் ரயில் நிலையம் போன்ற) பல இடங்களில் பல பேரைக் கடித்து வைக்கிறது. ஆயிரக்கணக்கான (பட்ஜெட்டைப் பொறுத்து இலட்சக் கணக்கான) மக்கள் பாதிக்கப் படுகிறார்கள். அவர்களும் பல பேரைக் கடிக்கிறார்கள், தரை டிக்கெட் எடுத்து ஸ்கிரீன் அருகில் உட்கார வேண்டாம். அதே நேரம் கோயமுத்தூரில் அவரது தங்கை உடம்பில் இருந்து ஆன்டி பயாடிக் கை கண்டுபிடிக்கிறார் அப்துல் கலாமுக்கு அடுத்த படியான இடத்தில் இருக்கும் ஒரே கிரேட் சயண்டிஸ்ட் அலையாஸ் டாக்டர் லக்ஷ்மி மேனன். அதை எடுத்துக் கொண்டு கூடவே ஒரு வேனில் ஒரு மஸில் பாடி போலீஸ் உதவியுடன் சென்னை செல்கிறார். ஹீரோ ஜெயம் ரவி ஸோம்பி ஆகி விட்டதால் படத்தில் வேறு வில்லன் கிடையாது. ஆகவே இந்த கேரக்டர் கிட்டத்தட்ட செகண்ட் ஹீரோ போல என்பதால், கோணைத்தமிழ் கணேஷ் வெங்கட்ராம், அட்வைஸ் சமுத்திரக்கனி போன்றவர்களில் ஒருத்தர் (கூடவே மைண்ட் வாய்ஸ் தம்பி ராமய்யா, வேன் டிரைவர் நமோ நாராயணன்) உடன் லக்ஷ்மி மேனன் ஊசி கொண்டு போக, ஆன் தி வே வில் அந்த போலீஸையும் ஆஜானுபாகுவாக ஒரு ஸோம்பி (பெசன்ட் நகர் ரவி?) கடித்து வைக்க, அங்கே ஒரு பைட் முடித்து, அவருக்கு ஆன்டி பயாடிக் ஊசி போட்டு அது சக்சஸ் ஆக "ரவியைக் காப்பாத்திடலாம்" என்ற மைண்ட் வாய்ஸூடன் சென்னை போகும் லக்ஷ்மி மேனனைப் பார்த்து எல்லாேரையும் கடித்துக் கொண்டிருக்கும் ஜெயம் ரவி ஸ்லோ ஃப்ரீஸ் டெக்னாலஜியில் ஒரு ஸாங் பாடுகிறார். ஆனாலும் வைரஸ் பாதிப்பில் முக்கால் மைண்ட் அப்செட்டாகி இருக்கும் ஜெயம் ரவி, கட்டிப்பிடித்து ஊசி போடப் போகும் லக்ஷ்மி மேனனையும் கடித்து வைக்க.... ஜெயம் ரவி குணமாக.... லக்ஷ்மி மேனன் ஸோம்பி ஆக....

மிருதி பார்ட் 3 தொடரும்......
.

செவ்வாய், 4 ஆகஸ்ட், 2020

என் அடுத்த டார்கெட் - "வையா பூரி"....

2017 ஆகஸ்ட் 4 அன்று ஃபேஸ்புக்கில் எழுதியது.

பிக் பாஸ் சீஸன் 1 ஐ முன்வைத்து. 

எதையும் பகிர்ந்து கொள்ளக் கூட ஆளில்லாத போது, மனம் வெதும்பி தனியனாத் திரியும் வேதனையை நானும் அனுபவித்துள்ளேன். 2009 - 2010 களின் பொங்கல் பண்டிகைகளின் நேரத்தில் ஊரே வெறிச்சோடிப் போன சென்னையில் தெருவில் திரிந்திருக்கிறேன். 

காய3 போல மற்றவர்கள் மேல் மேட்டிமை விஷ வெறுப்பைக் கொட்டவோ ஜூலி மாதிரி மசாஜ் செய்து உருவி விடும் சந்தர்ப்பவாதியாக மாறவோ நான் வளர்க்கப் படவில்லை. 

மற்றவர்கள் சொல்வதை நம்பி சாமியாடும் ஷக்தியாகவும் இருந்திருக்கிறேன். எல்லாரிடமும் டிப்ளமேடிக் ஆக இருக்க முயற்சி செய்யும் கணேஷாக இருக்க விரும்பி பல்பும் வாங்கியிருக்கிறேன். 

ஒரு காலத்தில் தனிமையில் பரணியையும் மனத்தால் உணர்ந்திருக்கிறேன். ஓவியா போல் தனிமைப் படுத்தப் பட்டும் "எனக்கு நானே சப்போர்ட் பண்ணிக்கிறேன்" நிலையையும் தொட்டேன். 

என் அடுத்த டார்கெட் - வயதாலும், வாழ்க்கை அனுபவத்தாலும் பிரச்சினையை விட்டு வெளியில் இருந்து பொதுவாய் யோசித்து அட்வைஸூம் "வையா பூரி"....
.