ஞாயிறு, 23 ஆகஸ்ட், 2020

#முதல்_சம்பளம்_பதிவு 3

அதன் பிறகு தினமும் எக்ஸிபிஷனில் பாதாம் பால் ஸ்டாலில் வேலைக்குப் போக ஆரம்பித்தேன். தினம் காசு கையில். அந்த வயதில் அது ஜாலியாகவே இருந்தது. ஆனால் தெரிந்தவர்கள் யாராவது பார்த்தால் என்ன செய்வது என கொஞ்சம் மனதுக்குள் பயமாக இருக்கும். காலேஜ் பசங்கள் யாராவது பார்த்து விட்டால் என்ன செய்வது என்று கூச்சமாகவும் இருக்கும். அதுவே மறுபக்கம் "நாம என்ன தப்பா பண்றோம்? அப்பா, அம்மா கிட்ட சொல்லிட்டு பார்ட் டைம் வேலைக்குத் தானே வர்றோம்" என்றும் தோன்றும். 

நைட் ஸ்டால் மூடியதும் வீட்டிற்குக் கிளம்பும் முன் பாதாம் பால் மிச்சமிருந்தால் "நீங்க குடிங்கப்பா" என்பார் ஓனர். ஒரு வாரம் நன்றாக இருந்தது. அதன் பின் "பழகப் பழகப் பாலும் புளிக்கும்" தான். பிறகு, ஸ்டால் மூடும் நேரத்தில் அங்கங்கே சுற்றிக் கொண்டிருக்கும் கடைசி நேரக் கஸ்டமர்களைக் கூவி அழைத்துப் பாதி விலைக்கு விற்போம். அதையும் மீறி மிச்சமிருந்தால் மற்ற கடைகளில் வேலை செய்து களைப்பாகக் கிளம்பும் ஆட்களை அழைத்து இலவச விநியோகமும் செய்வோம். 

ஒருநாள் என் காலேஜ் சீனியர் ரமேஷ் அந்தப் பக்கம் வந்தபோது ஆச்சரியமாக புருவம் உயர்த்தி விட்டுப் பார்த்தார். மற்ற கடைகளில் 10 ரூபாய். எங்கள் கடையில் 20 ரூபாய் என்றாலும், "கார்த்தி, உனக்காகத்தான் வாங்குறேன்" என்று சொல்லி அவர் நண்பருடன் வாங்கிக் குடித்து விட்டுப் போனார். கொடுமை என்னவென்றால் அவர் போன அரை மணி நேரத்தில் "பாதி விலைக் கூவல்" துவங்கியது. பிறகு சில நிமிடங்களில் இலவசப் பால். அடடா, நம்மளால ரமேஷ் மாமா (அப்டித்தான் கூப்பிடுறது) வுக்கு 40 ரூபா நட்டமாச்சே. நம்ம ஒரு நாள் சம்பளமாச்சே என்று வருத்தப்பட்டேன். 

அடுத்த பார்ட் டைம் வேலை கொரியர் போடுவது. காலேஜ் நண்பன் கோவிந்தராஜ் (இப்போ யுனிவர்சிடி புரொபஸர்) பார்ட் டைமில் புரொபஷனல் கொரியரில் காலையில் டெலிவரி போடும் வேலையில் இருந்தான். எனக்கும் கேட்டிருந்தேன். ஆனால் அங்கே வேகன்ஸி இல்லை. அதனால் அவனுடன் சேர்ந்து சில நாட்கள் காலையில் சுற்றிக் கொண்டிருப்பேன். அந்த அனுபவத்தில் பிறகு எப்போதாவது அவன் லீவு எனும் பட்சத்தில் அவன் கவர்களை நான் டெலிவரி செய்வதுண்டு. சம்பளம் கிடையாது. 

தொடரும்.... 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக