ஞாயிறு, 16 ஆகஸ்ட், 2020

சினிமாவும் சாதிகளும்

19 செப் 2015 அன்று ஃபேஸ்புக்கில் எழுதியது. 

வாட்ஸ் அப்பில் ஒரு சினிமா குரூப்பில் என்னைச் சேர்த்து விட்டுவிட்டார்கள். எல்லா குரூப்பையும் போல கன்னா பின்னாவென்று கண்டதையும் ஃபார்வர்டு செய்தவர்களைக் கெஞ்சி "இங்கே சினிமா மட்டும் ப்ளீஸ்" என்று ஒரு வழிக்குக் கொண்டு வருவதே பெரும் பாடாக இருந்தது. இன்றைக்கும் அதில் பலர் நம் போஸ்டுகளைப் பார்ப்பதே இல்லை. மீண்டும் மீண்டும் பிள்ளையார் சிலை, ரெட்டை வால் நாய், அஞ்சு தலை பாம்பு, பம்பு செட்டில் ஒண்ணுக்கடிக்கும் பையன், அப்துல் கலாம், நேதாஜி, வளையல் டிசைன், ரத்தம் கக்கி சாவான் என வகைதொகையில்லாமல் வாரிக் குமித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். 

ஆனால் அதை விடப் பெரும் பிரச்சினை, எங்கு எதைச் சுற்றினாலும், எதைப் பற்றிப் பேசினாலும் "சாதி"யிலேயே வந்து நிற்கிறார்கள். வேணாம்யா, என்னை விட்ருங்கய்யா என்றால் விட மாட்டேன்கிறார்கள். நமக்கு இந்த வம்பே வேணாம்டா என்று வெளியில் வந்தால் கோவை சரளா (அட்மின்) வடிவேலு (மெம்பர்) லுங்கியை இழுந்து உள்ளே போடும் மீம் பார்த்திருக்கிறீர்களா? அதைப் போல இழுத்து இழுத்து உள்ளே போடுகிறார்கள். 

நான் குரூப்பை விட்டு வெளியே ஓடிய போது அட்மின் எனக்குப் போன் செய்து 15 நிமிடம் பேசி என்னை கன்வின்ஸ் செய்து, இனிமே சாதி பற்றிப் பேச வேண்டாம்னு சொல்றேன் என்று சொல்லி என்னை அட்மினாக வேறு ஆக்கி விட்டு விட்டார். ஆனால் மீண்டும் அடங்க மாட்டேன் என்கிறார்கள். 

மறுமலர்ச்சி - ராசு படையாச்சி - அவர்கள் பெருமை

தேவர் மகன் - தேவர் சாதிப் பெருமை

எந்தெந்த இயக்குனர், எந்த நடிகர்லாம் "நாடார்" இனத்தைச் சேர்ந்தவர்கள்? 

சுந்தர பாண்டியன் படத்தில் ஏன் "முத்துராமலிங்கம்" சிலையைக் காண்பிக்கணும். 

"நண்பன்" படத்தில் வசந்த் விஜய் தலித் ஆம். அதனால் அந்த கேரக்டரை கொன்று விட்டார்களாம் (அடேய், அது ஹிந்தி ரீமேக்டா) 

மெட்ராஸ் படத்தின் தலித் கூறுகள். 

ஹேராம் படத்தில் என்ன ஜாதியை உயர்த்திக் காண்பித்தார்கள் 

என்று தான் திரும்பத் திரும்ப டிஸ்கஷன் நடக்கிறது. வேண்டாம் என்றால் "சினிமா மட்டும் பாப்பீங்களாம், அதில் உள்ள ஜாதியைப் பற்றி ஏன் பேச மறுக்கிறீர்கள்" என்கிறார்கள். சரி பேசுங்க, என்னைய விட்ருங்க என்றாலும் விட மாட்டேன் என்கிறார்கள். 

இப்போ நான் என்ன செய்ய?

.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக