வியாழன், 13 ஆகஸ்ட், 2020

கின்டில் குப்பைகள்

அமேசான் கின்டில் புதிய பிஸினஸ் மாடல் ஒன்றைக் கொண்டுவந்தாலும் கொண்டு வந்தது.  அங்கே குவிந்து கிடக்கும் குப்பைகள் ஏராளம். 

சிலர் யார் யாரோ எழுதிய ஆங்கிலக் கட்டுரைகளை அப்படியே கூகிள் ட்ரான்ஸ்லேட்டில் போட்டு அதை அப்படியே கின்டிலில் ஏற்றி, மின் நூலாகக் கொண்டு வருகிறார்கள். இரண்டாவது பாராவிலேயே பல்லிளிக்கிறது. 

சிலர் "எனக்கும் எழுதத் தெரியும்" என்று கேபிளில், ஓடிடியில் பார்த்த பல ஆங்கிலப்படங்களிலிருந்து எதையெதையோ உருவி கதை என்று கக்கி வைத்திருக்கிறார்கள். நான்கு பக்கம் தாண்ட முடியவில்லை. 

சிலர் ஏகப்பட்ட எழுத்துப் பிழைகளுடன் எழுதி வைத்திருக்கிறார்கள். அதற்கு அவர்கள் நண்பர் கூட்டம் சப்பைக் கட்டு வேறு. சந்தி, ஒருமை பன்மைப் பிழைகளை விடுங்கள். "அனைத்து - அணைத்து" வுக்குக் கூடவா வித்தியாசம் தெரியாது? தவறுடன் எழுதுவது ஆரம்பத்தில் தவறில்லை. ஆனால் மிகச் சாதாரணமாக வார இதழ்கள், தினசரிப் பத்திரிகைகள் வாசித்தால் கூடப் போதுமே. எழுத்துப் பிழைகள் தனக்கே தெரியுமே. அதுகூடவா முடியாது? 

சிலருக்கு வரிகள் அமைக்கக் கூடத்தெரியவில்லை. ரோட்டுக்கடை கொத்துபரோட்டாவில் எதையெதையோ அள்ளிப்போட்டு "நல்லாருக்கா? இல்லையா?" என்று முடிவுக்கே வர முடியாதது போல வேறு யார்யோரோ எழுதிய, எங்கெங்கோ படித்த வார்த்தைகளை அப்படியே ரைமிங்குக்காக அள்ளிப்போட்டு எழுதி வைத்திருக்கிறார்கள். 

சிலர், நாட்டுடைமையாக்கப் பட்ட நூல்களைத் தங்கள் பெயரில் வெளியிட்டு ஏதாவது காசு பார்க்க முடியுமா என்று பார்க்கிறார்கள். 

நகுலன் சொன்னாராம் "ஏய், வாசகா, உனக்குத் தான் எத்தனை எழுத்தாளர்கள்" என்று. இன்றைய நிலையில் அவர் இருந்திருந்தால் "ஏய் வாசகா, உனக்குத் தான் எத்தனை குழப்பங்கள் என்று. 

அன்னப்பறவையாய் இருக்க வேண்டும்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக