ஞாயிறு, 23 ஆகஸ்ட், 2020

#முதல்_சம்பளம்_பதிவு 2

பள்ளியிறுதி ஆண்டுகள் படிக்கும் போது, நைனா முன்பு வேலை செய்த போட்டோ பிரேம் கடைக்கு வேலைக்குப் போனேன் "பார்ட் டைமா ஆள்வேணுமாம்" என்ற என்கொயரியின் பேரில். வெள்ளி மாலை, சனி முழு நாள், ஞாயிறு மாலை வரை என. வெள்ளிக்கு 10 ரூபாய் சம்பளம். சனி, ஞாயிறுக்கு 30 ரூபாய். அந்த நேரங்களில் தான் கூட்டம் நன்றாக வரும். சிறிதும் பெரிதுமாக நிறைய வேலைகள் இருக்கும். ஓனர் அப்பாவிடம் "தாத்தா, டீ சொல்லுங்க" என்பார்கள் யாரேனும். அப்படி ஒரு நாளைக்கு நான்கைந்து டீ அல்லது காபி அல்லது பால் வரும். மாலையில் ஒரு வடை. அதுபோக முழு நாளுக்கு பேட்டா 10 ரூபாய்.


அங்கே சீனி என்றொரு பயல் இருந்தான். சாணி என்றோ, சகுனி என்றோ, சீன் என்றோ பெயர் வைத்திருக்கலாம். ஓவர் வாய். "நான் உனக்கு முந்தி சேந்துருக்கேன். எனக்கு 5 ரூபாய் பேட்டா. உனக்கு ஒன்னும் தரமாட்டாங்க. ஒழுங்கா வேலை பாக்கணும்" என்று மிரட்டுவான். ஒரே வாரத்தில் எனக்கு பேட்டா 10 ரூபாய் என்றதும் ஓனரிடம் போய் வாதித்துக் கொண்டிருந்தான். அவர் இரண்டு பேரையும் கூப்பிட்டு "ஒன்றை இஞ்ச் மஞ்சள் பிரேம் ஒரு துண்டு எடுத்து வாங்க" என்றார். நான் போய் எடுத்து வந்தேன். அவனுக்கு அப்படி என்றால் என்னவென்றே தெரியவில்லை. "இதுக்குத்தான் அவனுக்கு 10 ரூபா பேட்டா" என்றார் அவர்.

அது என் அப்பா மற்றும் தாத்தா வின் தொழில் என்பதால் அப்பா கூடவே பல வருடங்களாக இருந்து இருந்து அவர் செய்வதைப் பார்த்துப் பார்த்து, சின்னச் சின்ன எடுபுடி வேலைகள் செய்து, போட்டோ பிரேம் தொழில் பற்றிய அனைத்து விபரங்களும் எனக்கே தெரியாமல் என்னுள் ஊறியிருந்தன. எனவே வேலைக்குப் போன இரண்டாம் நாளே அது என்னிடமிருந்து வெளிப்பட்டிருக்கிறது. பிரேம் அறுப்பது, ஹாட்போர்டு அறுப்பது, ஆணி அடிப்பது என எல்லா வேலைகளையும் சட்டென செய்யத் துவங்கினேன்.

அந்த தைரியத்திலும், ஓனர் சந்தோஷமாக வரவேற்றதாலும், கல்லூரி படிக்கையில் தினம் மாலை வேளையில் போக ஆரம்பித்தேன். அரசுக்கல்லூரி என்பதால் 4 மணிக்கு முடிந்து விடும். வீட்டுக்குப் போய் பேக்கைக் கடாசி விட்டு, இருப்பதைச் சாப்பிட்டு விட்டு 6 மணிக்குக் கடைக்கு வருவேன். கடை சாத்த 10 மணி ஆகும். சம்பளம் தினம் 30 ரூபாய் ஆனது. சனிக்கிழமை 70 ஆ 60 ஆ என்று நினைவில்லை. வழக்கம் போல பேட்டா, டீ, வடை உண்டு. முகூர்த்த நாட்களில் காலை சீக்கிரம் போனால் உபரியாக டிபனுக்கு 20 ரூபாய் தருவார்கள். 15 ரூபாயில் மூன்று பரோட்டா அடித்து விட்டு 5 ரூபாய் சேர்த்து வைத்துக் கொள்ளலாம்.

ஆனால் ஒருமுறை வேறொரு வாய்ப்பு வந்தது. பழைய மெடிக்கல் ஓனரின் நண்பர் அரசுப் பொருட்காட்சியில் ஸ்டால் போட்டு, பாதாம் பால் கடை போட்டார். 6 முதல் 11 மணி வரை. "இரண்டு மாதம் வேலை. போறியா?" என்று கேட்டார்கள். 40 ரூபாய் சம்பளம். 10 ரூபாய் அதிகம் என்றதும், எப்போதாவது போகும் எக்ஸிபிஷனில் தினசரி வேலை என்பதும், பெரும் கூட்டத்திற்கு நடுவில் பணி என்பதும் காரணமற்ற ஒரு பரவசத்தைத் தந்தது எனக்கு. உடல் உழைப்பும் கிடையாது. டோக்கன் தரும் கஸ்டமருக்கு, டம்ப்ளரில் பாலை ஊற்றித் தர வேண்டும். அவ்வளவே. போகலாம் என்று தோன்றி விட்டது எனக்கு. பிரேம் கடை ஓனர் என்ன நினைப்பார். சனி, ஞாயிறு முழு நாள் வேலை என்னாகும் என்றெல்லாம் எனக்குத் தோன்றவே இல்லை.

ஒரு முதலாளியின் மனநிலை எப்படி இருக்கும் என்று தெரியாமல் அவரிடமே போய் "நான் அடுத்த வாரத்துல இருந்து வேலைக்கு வரல. எஜ்ஜிமிஷன்ல வேலைக்குப் போறேன்" என்றேன். முகம் மாறி "அங்க ஏன் போற?" என்றார். விபரம் புரியாமல் "உங்க கடையில 30 ரூபாய் தான். அங்க தினம் 40 ரூபாய் தருவாங்க" என்று அவரிடமே சொன்னேன். "ஓ, பத்து ரூபாய் எக்ஸ்ட்ரா கிடைக்குதுன்னு அங்கே போறியா?" என்றார். "ஆமாம்" என்று சொன்னேன்.

பிறகு என்ன நடந்தது, அவர் என்ன சொன்னார் என்று நினைவில் இல்லை. சரி போ என்று விட்டு விட்டார்.

தொடரும்......

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக