ஞாயிறு, 23 ஆகஸ்ட், 2020

#முதல்_சம்பளம்_பதிவு_1

ஃபேஸ்புக்கில் "உங்கள் முதல் சம்பளம் என்ன?" என்றொரு கேள்வி ஓடிக் கொண்டிருக்கிறது. இப்போதைய டிரெண்ட் போலும். சில பதிவுகள் கமெண்ட்கள் பார்த்த பிறகு எழுதத் தோன்றிய ஒரு மெமரீஸ் பதிவு இது. இதையெல்லாம் எழுதணுமா என்று தோன்றினாலும், வருடங்கள் ஓட ஓட, இந்த மூளை குப்பைகளை நிறையச் சேர்த்து வைக்கிறது. பல பழைய சந்தோஷமான விஷயங்கள் மறந்தே போகின்றன. அட் லீஸ்ட் எதிர்காலத்தில் அமைதியாக அமர்ந்து நான் எனக்கு அசை போடவாவது இவை தேவைப்படலாம் என்ற எண்ணத்தில் பதிந்து வைக்கிறேன். சில நண்பர்கள் எழுதியுள்ள படி சிலருக்கு இது மோட்டிவேஷனல் ஆகக் கூட இருக்கலாம்.

என்னுடைய முதல் வேலை சேலத்தில் ஒன்பதாப்பு படித்த போது விடுமுறையில் ஒரு மெடிக்கல் ஷாப்பில் வேலைக்குப் போனது. மாதச் சம்பளம் 300 ரூபாய். அதுதான் நான் கையில் வாங்கிய எனது முதல் சம்பளம். அடுத்த வருடம் அதே கடையில், டாக்டர் சீட்டுப் படித்து மருந்துகள் எடுத்துக் கொடுக்கும் அளவு கொஞ்சம் விபரம் தெரிந்ததும் அது 500 ரூ ஆனது. ஆனால் அந்த வேலை வருடத்துக்கு ஓரிரு மாதங்கள் மட்டுமே. ஓனரும் இளைஞர் என்பதால் பெரும்பாலும் கடைக்கு வரவே மாட்டார். நான் மட்டும். வீட்டுப்பாட லாங் சைஸ் நோட்டு எடுத்துப் போய் கடையிலேயே உட்கார்ந்து ஆள் இல்லாத போது எழுதிக் கொண்டிருப்பேன்.
அதற்கு முன்பு அஞ்சாப்பு படிக்கையில் கும்பகோணத்தில் அப்பாவின் கடைக்கு எதிரே இருந்த எலக்ட்ரிக்கல் கடையில் அப்பா சொல்லி ஒரு மாதம் சும்மா அதை "எடு" இதைப் "புடி" வேலைக்குச் சென்றேன். அங்கே வெயிட்டாக எதையோ தூக்கிக் கால் சுண்டு விரலில் போட்டுக் கொண்டது மட்டுமே நினைவிருக்கிறது. வெறெதுவும் நினைவில் இல்லை. அவ்வேலைக்கு அவர்கள் ஏதோ சம்பளம் கொடுத்ததாகவும் அதை "உங்கப்பாரே அதைச் செலவு பண்ணிட்டாரு. வீட்டுக்குக் கொடுக்கலை" என்று என் கங்கம்மா நெடுநாட்கள் புலம்பிக் கொண்டிருந்தாள்.
அதுபோக எட்டாப்பு படிக்கையில் ஒரு முறை கல்யாண வீடியோகிராபருக்கு அஸிஸ்டெண்ட் ஆக இரண்டு நாட்களுக்கு ஒயர் சுற்றவும் லைட் தூக்கவும் ஒரு முறை போயிருக்கிறேன். செம ஜாலியாக இருந்தது. ஆனால் மூன்று மணிநேரம் கூடத் தூங்க முடியவில்லை. இடது தோளில் ஒயர்பாக்ஸ் மாட்டி ஷோல்டர் வலி. வலது கையைத் தூக்கி லைட் காண்பித்ததில் வலது கை வலி ஒரு வாரம் பின்னியது. ஆனால் அதற்குச் சம்பளம் "எனக்கு" வரவில்லை. ஆனால் காசு - நைனா - தம்மு செலவு - கங்கம்மா - புலம்பல் மறுபடியும்.
தொடரும்....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக