சனி, 14 ஜனவரி, 2012

தி டார்க்கஸ்ட் ஹவர் (ஹாலிவுட் திரைப்பட விமர்சனம்)நம்ம ஊர் தமிழ்ப்படங்களில் காதல், போலீஸ், நகைச்சுவை என எவர்கிரீன் ஃபார்முலாக்கள் பல உண்டு. அதுபோல ஹாலிவுட்டின் பணம் குவிக்கும் சக்ஸஸ் ஃபார்முலாக்களில் ஒன்று ஏலியன்கள்.. அவை எந்த உருவத்தில் வேண்டுமானாலும் இருக்கலாம். அவற்றை வைத்து எந்த காம்பினேஷனிலும் படத்தை எடுக்கலாம். கலெக்ஷ்ன் நிச்சயம்.

ஒரு ஊர்ல மக்களெல்லாம் சந்தோஷமா வாழ்ந்துகிட்டு இருந்தாங்களாம். ஒருநாள் திடீர்னு வேற கிரகத்துல இருந்து ஜீவராசிங்கள்லாம் வந்து அந்த ஊர்ல வந்து இறங்குச்சாம். வந்து, திடீர் திடீர்னு ஊர் மக்களையெல்லாம் கொன்னு சாப்பிட ஆரம்பிச்சுச்சாம். அப்போ அர்னால்ட் மாதிரி, டாம் குரூஸ் மாதிரி ஒரு ஹீரோ தன்னோட நண்பர்களோட சேர்ந்து அதுங்களோட வீக்னஸை கண்டுபிடிச்சி, ஆயுதம் தயாரிச்சி அதுங்களையெல்லாம் அழிச்சானாம்.. அதோட கதை சரியாம். நம்மூர் பாட்டிகளைப்போல அமெரிக்க பாட்டிகள் கதை சொன்னால் இப்படித்தான் இருக்கும்.

ஹாலிவுட்டில் வெளியாகும் ஏலியன் திரைப்படங்களை பொதுவாக டிஸாஸ்டர் மூவி அல்லது ஹாரர் மூவி வகைகளில் சேர்க்கலாம். அவற்றில் எப்போதும் அமெரிக்கா மட்டுமே ஏலியன்களால் தாக்குதலுக்கு உள்ளாவது வழக்கம்.இந்த முறை ஒரு மாறுதலுக்கு "தி டார்க்கஸ்ட் ஹவர்" படத்தில் ரஷ்யாவின் மாஸ்கோ நகரில் வந்து இறங்குகின்றன ஏலியன்கள்..

மாஸ்கோவின் சனிக்கிழமை டிஸ்கோ பப் ஒன்றில் ஆட்டம் போட்டுக்கொண்டிருக்கும் நூற்றுக்கணக்கான ஜோடிகளின் பார்வையில் ஆரம்பிக்கிறது படம்.. இரவில் அவ்வப்போது மினுக்கும் ஆரஞ்சு பூ நிறத்தில் வந்து இறங்கும் கண்ணுக்குத் தெரியாத ஏலியன்கள் மனிதர்களை விபூதிச் சாம்பல் போல பீஸ் பீஸாக்கி உண்ணத் துவங்குன்றன. அவற்றின் தாக்குதலில் இருந்து இரண்டு ஜோடிகள் உள்ளிட்ட ஐந்து பேர் தப்பிக்க வழி தேடுவதே கதை.

படத்தின் காட்சிகள், ஸ்பீல்பெர்க்கின் "வார் ஆஃப் தி வேர்ல்ட்ஸ்" படத்தின் காட்சிகளைப்போல அமைந்திருப்பது ஒரு மெகா பலவீனம். தலையும் இல்லாமல் வாலும் இல்லாமல் தட்டையான திரைக்கதை.. ஹாலிவுட்டிலும் மொக்கை படங்கள் எடுப்பார்கள் என்பதற்கு இந்தப்படம் ஒரு உதாரணம். த்ரில் கூட்டும் ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ் மற்றும் 3 டி டெக்னாலஜி மட்டும் அருமையாக அமைந்திருக்கிறது. ஓரளவு போரடிக்காமல் சீட்டில் அமர வைப்பவை அவை மட்டுமே.

டைரக்டர் க்ரிஸ் கோரக் இதற்கு முன் எட்டுப்படங்களில் ஆர்ட் டைரக்டராக இருந்த திறமை இதில் பளிச்சென்று தெரிகிறது.. ஹீரோ, ஹீரோயின்கள் ஒளிந்திருக்கும் பெரிய ஷாப்பிங் காம்ப்ளக்ஸ், மாஸ்கோவின் பில்டிங்குகள், அவற்றின் உட்புறங்கள் ஆகியவற்றின் பளிச்சென்ற ஆர்ட் டைரக்ஷன் கண்ணைக்கவர்கிறது. பிராட் பிட்-டின் ஃபைட் கிளப், டாம் குரூஸ் நடித்த ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்-கின் மைனாரிட்டி ரிப்போர்ட் படங்களுக்கு தலைவர்தான் ஆர்ட் டைரக்டர்.பொதுவாக இந்த மாதிரியான ஹாரர் திரைப்படங்களை ஏதேனும் ஒரு பிரபல ஹிட் நாவலை பின்னணியாகக் கொண்டு எடுப்பது ஹாலிவுட்டின் வழக்கம். ஆனால் இந்தப்படத்தை எந்த நாவலில் இருந்தும் எடுக்காமல் நாலு பேர் ரூம்போட்டு யோசித்து மாமி மெஸ் இட்லி, கெட்டிச்சட்னியுடன் நாள் கடத்தி திரைக்கதை எழுதி எடுத்திருக்கிறார்கள். அவ்வளவு கற்பனை வறட்சி. எங்கிருந்து ஏலியன்கள் வருகின்றன, ஆரம்பத்தில் இரண்டிரண்டாக பிரியும் அவை பின் ஏன் மிகக் குறைவான எண்ணிக்கையில் இருக்கின்றன, ஏன் இரும்புக்கூண்டு ரூமுக்குள் வர முடியவில்லை, எலக்ட்ரானிக், மைக்ரோவேவினால் எப்படி பாதிக்கப்படுகின்றன, கடைசியில் வரும் சப்மெரின் எப்படி தப்பித்தது, அது எங்கே போகின்றது, பூமிக்குள் ஓட்டை போடும் காரணம் என்ன, சப்மெரினில் காணாமல் போன ஹீரோயின் அடுத்த நிமிஷமே நடு சிட்டியில் ஒரு பில்டிங்கிற்குள் போனது எப்படி என ஒரு லாஜிக்கும் இல்லாத காட்சிகள்.

போட்ட காசை வசூலில் எடுத்து விட்டாலும், இது மிகவும் சுமாரான படமே என உலகம் முழுக்க விமர்சகர்களால் விமர்சிக்கப்பட்டு, அனைத்து விதமான சினிமா ரேட்டிங்குகளிலும் மிகவும் ஆவரேஜான ரேட்டிங்கை மட்டுமே வாங்கியுள்ளது "தி டார்க்கஸ்ட் ஹவர்".

சுக்கு காபி குடித்திருக்கிறீர்களா? ஒவ்வொரு மடக்காக குடிக்க குடிக்க அடுத்து மடக்கில் என்னவோ பெரிய டேஸ்டுடன் வரப்போகிறது என்று தோன்றும். ஆனால் கடைசி வரை பெரிதாக ஏதுமின்றி அப்படியே முடிந்து போகும்.. அப்படி இருக்கிறது படம். எப்படா முடிப்பீங்க நொண்ணைகளா? என்று கத்தும் ரசிகக்கூட்டதை தியேட்டரில் காண முடிகிறது.

படமும் நீளம் ஒன்றுமில்லை. வெறும் ஒன்றரை மணிநேரம் மட்டுமே. தவிர்க்கலாம்.