ஞாயிறு, 10 செப்டம்பர், 2017

ஜிகர்தண்டாவும் தீவிர இலக்கியமும்....

மூன்றாண்டுகளுக்கு முன்பு 08 செப்டம்பர் 2014 அன்று ஃபேஸ்புக்கில் எழுதியது.

ஜிகர்தண்டா பற்றிய ஒரு "நுண்ணிய" விமர்சனம் (அப்படித்தான் அதை எழுதியவர் சொல்லிக் கொள்கிறார்) படித்தேன். சத்தியமாக இரண்டு பாராவுக்கு மேல் படிக்க முடியவில்லை. (பாராகிராஃப் பிரிப்பதற்கும் சில வரையறைகள் இருக்கின்றன. அதுவும் இல்லை. கை போன போக்கில் எண்டர் தட்டி பெரிய பெரிய பாராகிராஃப்-களாக எழுதி இருக்கிறார்) எவ்வளவு அபத்தமாக, எவ்வளவு குழப்பமாக எழுத முடியுமோ அப்படி ஒரு கட்டுரை.

கார்த்திக் சுப்பராஜ் பாவம், அந்த மனுசன் படம் எடுத்தது ஒரு குத்தயமாய்யா என்றுதான் எனக்குத் தோன்றியது.

மூத்திர நாத்தத்துடன் கூடிய பஸ் ஸ்டாண்டு வெளிப்புறக் கடைகளில் கொத்து பரோட்டா சாப்பிட்டிருக்கிறீர்களா?

ஆவித் தண்ணீர் விழுந்து ஓரம் ஊறி நைந்து போன, தீய்ந்து போன பரோட்டாக்களை கிழித்துப் போட்டு, பெரும்பாலும் கெட்டுப் போன தக்காளி, ஒரு நல்ல முட்டை, ஒரு கெட்டுப் போன முட்டை, மேலே சேர்வை என்று கோழிக் கொழுப்பு மிதக்கும் குழம்பு என எதையெதையோ எடுத்து ஊத்தி, கொத்திக் குதறி, குழப்பி சத்தமெழுப்பி தட்டில் கொண்டு வந்து போடுவார்கள். அதில் புரோட்டா இருக்கிறது, தக்காளி இருக்கிறது என்று மட்டும் தான் உங்களுக்குத் தெரியும், பசி நேரத்தில் தட்டில் சுடச்சுட வந்து விழும் ஒரு வஸ்துவை நன்றாக இருக்கிறது என்று உங்கள் மனம் நம்பினால் அது மாயை. அப்படித்தான் இருக்கிறது இந்த மாதிரி ஒரு இலக்கியக் கட்டுரை.

அதிலும் இது ஸ்பெஷல் வகை. அதே கொத்து புரோட்டாவை வெந்தும் வேகாமல் தின்று விட்டு அதே பஸ் ஸ்டாண்டுக்குள் உள்ள பொதுக் கழிப்பறையில் கழிந்து விட்டு வந்தால் எப்படி இருக்குமோ அப்படி இருக்கிறது அந்த விமர்சனம். கருமம், படத்தை பாராட்றானா, கய்வி ஊத்துறானான்னே புரியலை.

பொதுவாகவே தீவிர இலக்கியங்கள் பக்கம் முடிந்தவரை நான் போவதில்லை. சேலத்தில் இருந்த வரை ஒரு இலக்கியப் புத்தகத்தை ரெகுலராக வாங்கிக் கொண்டிருந்தேன். அம்மா (எங்க அம்மா) அதைப் படித்து விட்டு லூஸாடா நீ என்று என்னைத் திட்டுவார். ஓசூர் வந்தபிறகு இலக்கியப் புத்தகங்கள் கிடைப்பதுமில்லை. ஒரு புத்தகத்துக்கு சந்தா கூட கட்டிப் பார்த்தேன். புத்தகம் வீட்டுக்கு வரவே இல்லை. தொடர்பு கொள்ளும் எண், எப்போதும் தொடர்பு எல்லைக்கு வெளியேவே இருக்கிறது. இருந்தாலும் அதை ஒரு அளவுகோலாக பலர் வைத்திருப்பதாலும், அதில் ஏதோ ஒரு விஷயம் (என்னன்னு தான் புரியலை) நடந்து கொண்டே இருப்பதனாலும், அவ்வப்போது தீவிர இலக்கியம் பக்கம் எட்டிப் பார்ப்பதுண்டு.

படிப்பவனுக்குப் புரியாமல் எழுதுதல், ஏதேனும் ஒரு வட்டார வழக்கில் எழுதுதல், எழுத்து நடையில் ஊர் வழக்கு கெட்ட வார்த்தைகளை புகுத்துதல், குறியீடு என்ற பெயரில் எழுதியவருக்கு மட்டுமே புரியும் வகையில் குறியீடுகள் வைத்தல், எதிரணியில் உள்ள இலக்கிய எழுத்தாளரை தன் கதையில் அலிகொரி வைத்து திட்டித் தீர்த்தல், திரையிலும் நிஜத்திலும் சாதாரணமாக நடைபெறும் சம்பவங்களில் கூட தலித்திய கூறுகள், புலி கூறுகள், பெண்ணிய கூறுகள், டாஸ்மாக் கூறுகளை வேலை மெனக்கெட்டு கண்டுபிடித்தல், தன் எழுத்துக்கும் நிஜவாழ்விற்கும் சம்பந்தமே இல்லாமல் நடந்து கொள்வது, சொந்தக் காசில் மட்டுமே வௌியிட முடியும் என்ற வகையில் குழப்பமான எழுத்து நடையை மெயின்டெய்ன் செய்வது போன்றவை நான் ஆழ்ந்து அவதானித்த வகையில் தீவிர இலக்கியத்தின் கூறுகளாக அறிகிறேன். (கருமம், எனக்கும் அதே மாதிரி வருது, ஒரு கட்டுரை தான்யா படிச்சேன்) ஸாரி, நான் கவனித்த வகையில் இன்றைய தீவிர இலக்கியம் இதுபோன்ற விஷயங்களைத் தான் கொண்டிருக்கிறது.

நான் ஒரு (ஆங்கில) இலக்கிய மாணவன் என்ற முறையில் ஆறரை வருடங்கள் (மக்கடித்தேனும்) இலக்கியம் பற்றிக் கொஞ்சமேனும் படிப்பிக்க வைக்கப்பட்டேன் என்பதை மிகுந்த தன்னடக்கத்துடன் கூறிக் கொள்கிறேன். இலக்கியம் என்றால் என்ன, அது எத்தனை வகைப்படும், அவற்றின் உட்பிரிவுகள் என்ன, அவற்றின் தோற்றம், வளர்ச்சி ஆகியவை, நீங்கள் எதை எழுதினாலும் அதை இலக்கியத்தின் எந்தப் பிரிவுக்குள் கொண்டு வரலாம், நவீனத்துவம், பின் நவீனத்துவம், இஸங்கள் பற்றிக் கொஞ்சம் (சித்தாந்தங்கள் மட்டும் எனக்குக் கொஞ்சம் புரிவதில்லை) என்றெல்லாம் எங்கள் ஆசிரியர்கள் எங்களுக்குச் சொல்லித்தந்தார்கள் என்பதையும் இங்கே டிஸ்கி (அல்லது முஸ்கி) யாக மீண்டும் மிகுந்த தன்னடக்கத்துடன் சொல்லிக் கொள்கிறேன்.

தயவு செய்து புரியுற மாதிரி எழுதுங்கள். மேலும் புரியுற மாதிரி எழுதும் (வெகுஜன எழுத்தாளர்கள் என்று நீங்கள் தூற்றும்) எழுத்தாளர்களை கிண்டலடிப்பதையும் நிறுத்துங்கள். இப்படியே போச்சுன்னா, அப்பறும் நானும் இலக்கியவாதி ஆகி கமல் மாதிரி மய்யமா புரியாமயே எழுத ஆரம்பிச்சுடுவேன். ஜாக்கிரதை. பீ கேர்ஃபுல் (நான் என்னச் சொன்னேன்)

வியாழன், 3 ஆகஸ்ட், 2017

நீங்க யாரு?

மூன்று  ஆண்டுகளுக்கு முன்பு (3 ஆகஸ்டு 2014) முகநூலில் எழுதியது.

முகநூல் நண்பர் ஒருவரின் மகன் மிக அழகாக வரைந்து கொண்டிருந்த ஒரு மயில் படத்தின் போட்டோவை பார்த்ததும் எழுதத் தோன்றியது.

நாம் எல்லாருமே தத்தம் வாழ்வில், சிறு வயதில் இருந்த நம்முள் ஏதோ ஒரு விஷயத்தை, திறமையை, வளர வளர வேலை, கமிட்மெண்ட்ஸ். கல்யாணம், குடும்பம், என்ற சுழற்சியில் இழந்து விடுகிறோம். அது நம் கேரியரையே மாற்றியிருக்கக் கூடிய ஒரு பெரும் திறமையாகக் கூட இருக்கலாம்.

அப்படி நான் மறந்தது என்னுடைய ஓவியத் திறமை. பள்ளி நேரங்களில் பல முறை, அதாவது மாதம் ஒரு முறையேனும், ஒவியம் (அ) ஏதேனும் கிராஃப்ட் போட்டிகளில் பரிசு வாங்க ஸ்கூல் அசெம்பிளி ஏறி விடுவேன். அப்போதைய நிலையில் பார்த்ததை பார்த்தபடி வரைய என்னால் முடியும். விகடனில் வந்து கொண்டிருந்த ஸ்யாமுடைய படங்களயும், மதனுடைய கார்ட்டூன் ஸ்ட்ரோக்குகளையும், ரவி வர்மா போன்ற ஓவியர்கள் வரைந்த படங்களை அளவீடுகள் வைத்து (பிரதி / ட்ரேஸ் எடுக்காமல்) அப்படியே வரைந்து பழகுவேன். எங்கள் பள்ளியில் (கோகுலநாத இந்து மகாஜன பள்ளி, சேலம்) கோகுலாஷ்டமி பண்டிகைக்காக ஒரு குழலூதும் கிருஷ்ணர் படத்தை (ஒரிஜினல் ஒன்றை அப்படியே பார்த்து) வரைந்து கொடுத்தேன். அதை அவர்கள் அன்று பூஜையில் வைத்தார்கள். இன்றைக்கும் அந்தப் படத்தை பத்திரமாக வைத்திருப்பதாகக் கேள்விப் பட்டேன்.

தனிப்பட்ட சுயமான ஸ்ட்ரோக்குகளை நான் பழகத் துவங்கிய நேரத்தில் கல்லூரிப் படிப்பு, பணப் பற்றாக்குறையால் பார்ட் டைம் வேலை என என் வாழ்க்கை தடம் மாறியது. 1999 ல் இருந்து கணக்கெடுத்தால் 15 வருடங்களாக நான் படம் வரையவில்லை. ஒன்றிரண்டு சந்தர்ப்பங்களைத் தவிர. ஆதித்ய பிர்லாவில் வேலை செய்யும் போது, 2008 என்று நினைக்கிறேன். அதன் எம்.டி-யை பென்சில் ஸ்ட்ரோக்காக சிறிய அளவில் வரைந்து பிரேம் செய்து கொடுத்தேன். அவர் இன்றைக்கும் அதை தன் பர்சனல் அறையில் வைத்திருப்பதாகக் கேள்வி.

இன்றும் என்னுள் லேசான ஒரு ஓவியப் பார்வை இருப்பதை உணர்கிறேன். ஒரு பொருளையோ ஆளையோ கவனிக்கும் போது நான் மற்றவர்களை விட ஒரு 5 சதவீதமேனும் அதிக உன்னிப்பாக கவனிக்கிறேன் என்று நினைக்கிறேன். அதாவது, ஒரு ஆளை பார்த்தால் அவரை மற்றவர்களிடம் இருந்து வித்தியாசப் படுத்தும் feature உள்ளதா? ஒரு திரைப்பட டைட்டிலை பார்க்கும் போது அதன் ஃபான்ட் என்ன என்பது, ஒரு ஆங்கிலப் பட போஸ்டரை அப்படியே வரைந்தால் அதை ஸ்கெட்ச் பேனாக்களா, கிரேயானா, கலர் பென்சில்களா, எதன் மூலம் வரைந்தால் அந்த எஃபெக்ட் அப்படியே வரும்? மார்க்கெட்டில் பார்க்கும் ஒரு மாம்பழத்தை அப்படியே வரைந்தால் அதிலுள்ள மஞ்சள், பச்சை, ஆரஞ்சை எந்த மிக்ஸ்சர் வைத்து வரைய வேண்டியிருக்கும்? என்பது போன்ற எண்ணங்கள் மனதில் ஓடுகின்றன.

சைனாவில் வடிவேல் சொல்வது போல எல்லாத்தையும் ப்ளான் பண்ணி பண்ணுவாங்களாம். உதாரணமாக பத்துப் பனிரண்டு வருடங்களுக்குப் பிறகு வரப்போகும் ஒலிம்பிக் போட்டிகளுக்காக இன்றிலிருந்தே மூன்று நான்கு வயதுக் குழந்தைகளை மோல்ட் செய்ய ஆரம்பித்து விடுவார்களாம். குருகுலக் கல்வி போல, தேவையான ஏட்டுப் படிப்பை கொஞ்சூண்டு மட்டும் கொடுத்து விட்டு, ஏதேனும் ஒரு திறமையை மட்டும் திரும்பத் திரும்ப, திரும்பத் திரும்ப, திரும்பத் திரும்ப, திரும்பத் திரும்ப, ப்ராக்டீஸ் கொடுத்துக் கொண்டே இருப்பார்களாம். இது சம்பந்தப் பட்ட சில டார்ச்சர் புகைப்படங்களை கூகிளடித்தால் நீங்கள் தேடி எடுக்கலாம்.

கொஞ்சம் யோசித்தால், அது போல என் துறை ஓவியமாக (மற்றும் அது சம்பந்தப்பட்ட கிராபிக்ஸ், அனிமேஷன்) தேர்ந்தெடுக்கப்பட்டிருந்திருந்தால்? பதினைந்து வருடங்கள் விடாமல் வரைந்து பழகியிருந்தால், ஒரு நாளைக்கு 2 படங்கள் என்று வைத்தால் கூட பத்தாயிரம் படங்கள் வரைந்து, எவ்வளவு பர்ஃபெக்ஷன் வந்திருக்கும்?

நினைத்தாலே ஆயாசமாக இருக்கிறது...

நீங்கள் தொடர மறந்த, தொடர முடியாத உங்கள் திறமை எது?செவ்வாய், 20 ஜூன், 2017

ஹாவேரி2016 ஜூன் 16 ஆம் தேதி ஃபேஸ்புக்கில் எழுதியது.

கர்நாடகாவில், ஹாவேரி என்றொரு ஊரில் ஒரு பள்ளியில், ஆசிரியைகளுக்குப் பயிற்சி வகுப்பு எடுக்கப் போயிருந்தேன். அதுவே மிகச் சிறிய ஊர். அதிலிருந்து இன்னும் 40 கி.மீ உள்ளே தள்ளிப் போய் ஒரு கிராமத்தில் இருந்தது பள்ளி. அந்தக் கிராமமும், பள்ளியும் இருந்த நிலையைப் பார்த்தால் அந்தப் பள்ளியைத் தாண்டி அடுத்த காம்பவுண்டு தான் உலகத்தின் எல்லை என்பது போல இருந்தது.
.
இரண்டு நாள் வகுப்பு. முதல் நாள் 10 ஆசிரியைகள் வந்தால் இரண்டாம் நாள் அதில் மூன்று பேரைக் காணவில்லை. என்ன சார் என்றால், பி.ஏ எக்ஸாம் எழுதப் போயிருக்காங்க சார் என்று கேஷூவலாக பதில் வந்தது.
.
இங்கே பள்ளிகளில் ஆசிரியைகளுக்கு அவர்களின் படிப்பு தவிர பி.எட் இல்லை என்று புலம்பல் வெகுவாகக் கேட்கிறது. அய்யா, அங்கே ஒரு சாதாரண டிகிரி கூட இல்லை. பன்னெண்டாப்பு படித்த லோக்கல் பிள்ளைகளை ஆசிரியைகளாக வைத்துப் பள்ளி நடத்திக் கொண்டிருக்கிறார்கள். பொதுவாகவே கர்நாடகாவில் கல்வி சதவிகிதம் மிகக் குறைவு.
.
இதே போல் இன்னும் இரு அனுபவங்களுக்குப் பிறகு, பெங்களூர் என்ற ஒற்றை நகரத்தை வைத்துக் கொண்டு கர்நாடகர்கள் நம்மையெல்லாம் சீன் காட்டி ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள் என்று நன்றாகப் புரிந்தது.

திங்கள், 15 மே, 2017

தாய் தந்த பிச்சையிலே..........

சிறு குழந்தைகளும் டீ, காபி குடிப்பதைப் பற்றிய மிக நீண்ண்ண்ண்ணட பதிவொன்றை எழுதி வைத்திருந்தேன். தேடினேன். கிடைக்கவில்லை. ஒன்றுமில்லை. ஜிம்பிள் மேட்டர். குழந்தைகள் அவற்றைக் குடித்துப் பழக நாமே காரணம் என்பதும், முடிந்தவரை அவற்றைத் தவிர்க்கலாம் என்பதுமே என் பாயிண்ட். எதிர்த்து வரும் பல எதிர்கேள்விகளுக்கு, 30 வருடங்கள் முன் நமது முன்னோர்கள் தினசரி டீயோ காபியோ குடித்தார்களா? 40 வருடங்கள் முன்? 50 வருடங்கள் முன்? வெறும் பால்? அதன் முன்? சாதம் ஊறிய நீச்ச தண்ணி? அதற்கும் முன் கேப்பை கூழ்? கம்பங்கூழ்? அதற்கும் முன்? பழைய சோறு? வயிறு நிறைய வெறும் நீர்? அதற்கும் முன்? என்று நூல் பிடித்துப் போனால், அது உணவுப் பழக்கவழக்கம், கலாச்சாரம், உலகமயமாக்கல் மூலம் உள்வந்த நிறுவனங்களின் வியாபாரம் என எந்தத்திசையில் வேண்டுமானால் போகக் கூடும். வேண்டாம்.

நான் சொல்ல வந்தது, நாம் பழக்கும் விதத்தில் தான் எல்லாமே என்று. என் ஜூனியரை இன்று வாரம் ஒருமுறை வீட்டிலேயே காலை உணவாகக் கம்மங்கூழ் குடிக்கப் பழக்கி இருக்கிறேன். எங்கள் அம்மா இருக்கையில், சோட்டா வயதிலேயே எனக்கும், பப்பிக்கும் (தங்கை) வெறும் பால் தான் தினமும் என்று கொடுத்துப் பழக்கியிருந்தார். அதுவும் டீயாறும், காப்பியாறும் தேனாக ஓடிய இந்த உழைப்பாளிகளின் தேசத்தில். நோ டீ, நோ காப்பி. காரணம், அவர் தனது சிறு வயதில் (சுமார் 9 வயதில் தந்தையை இழந்தவர் என்று சொல்லக் கேட்டதுண்டு) செய்ய வேண்டிருந்த அதீத உடலுழைப்பு சார்ந்த வேலைகளால் தொடர்ந்து டீ குடித்துக் குடித்து, தான் டீ - க்கு அடிமையானதை முன்னிட்டு, தம் பிள்ளைகளும் அப்படி ஆக வேண்டாமே என்று. (ஒருமுறை தாரமங்கலம் கோவிலுக்குப் போய்விட்டுத் திரும்பிய போது பஸ்ஸில் அவரது விரல்கள் நடுங்குவதைக் கண்டேன். ஒரு டீ வாங்கிக் கொடுத்ததும், போதை ஊசி போட்டது போல அந்த நடுக்கமும், உதறலும் நின்றதையும் கண்டேன்)

அப்போதிருந்தே நான் பாலுக்கு அடிமை. சிறுவயதில், எங்கேயாவது அக்கம் பக்கத்தில் பால் காய்ச்சும் நிகழ்வுகளுக்குப் போனால் கூட, எங்களைப் பார்த்து "இந்தப் பிள்ளைங்களுக்கு பால் கொடு" என்பார்கள். மற்றவர்கள், சிறியவர்கள் உட்பட எல்லாரும் "வெறும் பாலா?" என முகம் சுளித்து டீ கேட்க நாங்கள் இருவர் மட்டும் காய்ச்சிய பாலை வாங்கிக் குடிப்போம். அது என்னவோ தெரியவில்லை, எனக்கு வெறும் பால் மீது அவ்வளவு விருப்பம். இன்றும் கூட வீட்டில் ஆறிப்போன பால் இருந்தால் ஒரு டம்ளரில் ஊற்றி அப்படியே குடித்து விடுவேன். பப்பி மெள்ள மெள்ள தன் புதிய குடும்பத்தினர் சார்ந்து, டீக்கு மாறி விட்டாலும், என்னவோ நான் இன்னும் பால் பக்கம் தான். பால், பால், பால். அவளது பிள்ளைகளோ, என் ஜூனியரோ டீ வேணும் என்று கேட்டுக் குடிக்கும் போது அவ்வப்போது என் தொட்டில் பழக்கத்தைப் பற்றி பெருமையாக இருக்கும்.

பள்ளி, காலேஜ் படிக்கும் காலத்திலும் சரி, வேலைக்குப் போன போதும் அப்படியே. பல ஊர்கள், பல நிறுவனங்கள் மாறியும் கூட இந்த டீ, காப்பிப் பழக்கம் என்னைத் தொற்றவில்லை. பால் மட்டுமே. எனக்காக டீக்கடைகளில் சொல்லி பால் வாங்கிக் கொடுத்த நண்பர்கள் உண்டு. அங்கங்கே வலுக்கட்டாயத்தால் டீ குடித்தாலும் ஒருமுறை, இருமுறை மீறி மீண்டும் பாலுக்குத் திரும்பிவிடுவேன். இன்றும் கூட தினம் காலையில் ஒரு டம்ளர் பால் தான். சூடாக இருந்தால் ஹார்லிக்ஸ் உடன். அல்லது வெறும் பாலே. என் மொத்த குடிப் பழக்கத்தில் டீயின் சதவீதம் 1 இருக்கலாம். வயது ஏறுவதாலும், வேலை, டென்ஷன் தலைவலியைக் குறைப்பதாலும் காப்பிக்கு என்ஓட்டு அவ்வப்போது. ஆனால் அதுவும் இன்னும் 5 சதம் கூடத் தாண்டியதில்லை. பழைய மாதிரி பால், பால் தான். கார்த்திக் ஒரு டீ டோட்லர் என்று டீம் ஆட்கள் யாரேனும் (பல பேர் நக்கலாக) சொல்கையில் பெருமையாகவே இருக்கும், அவன் டீ கூட குடிக்காத டீ டோட்லர் என்று ஒரு வரி சேர்ப்பார்கள். (அதற்காக கெட்ட பழக்கமே இல்லையா எனாதீர்கள். எனக்கும் பிடித்த விஷயத்தில் ஒரு போதை உண்டு)


சரி, இப்போது எதற்கு இந்தப் பால் புராணம் என்பவர்களுக்கு. இருக்கு. ஞாயிறன்று ஈரோட்டில் ஜே.சி.ஐ நடத்திய விழா ஒன்றிற்குச் சென்றிருந்தோம். அங்கே "போன் டென்சிடி" எனும் செக் அப் செய்தார்கள். உடன் வந்திருந்த உறவினர் பெண்மணிக்கு கால்ஷியம் குறைவால் போன் டென்சிடி "- 1" (மைனஸ் 1) வந்தது. ஆனால் அது நார்மல் என்றார்கள். நானும் உட்கார்ந்தேன். எனக்கு செக் அப் செய்த போது அட்டெண்டரின் முகம் மாறியது. "உங்களுது +0.38 சார்" என்றார் பிரைட்டாக. அதாவது - 1 ல் இருந்து "0" வந்தது மட்டுமின்றி மேலும் ஒரு "0.38" கள். "காலைல இருந்து யாருக்கும் இவ்வளவு வரலை சார்" என்று மேலும் நெய் ஊற்றினார். ரொம்பப் பெருமையாக இருந்தது. "பல்வாள் தேவன் சிலை நிறுவுகையில், பாகுபலி கோஷம் முழங்க எழுந்து நிற்கும் பாகுபலியின் பிரம்மாண்ட சிலை போன்று உணர்ந்தேன்". அந்தக் கணம் என் மனைவியிடம், "இதுக்கெல்லாம் காரணம் எங்க அம்மாதான் தெரியுமா?" என்றேன் பெருமையுடன். "இன்னிக்கு மதர்ஸ் டே (14 மே) தெரியுமா?" என்று பதிலிறுத்தார் அவர்.

ஊரே டாஸ்மாக்ல குடிக்குது என்பதற்காக நாமும் குடித்தே ஆக வேண்டும் என்றில்லை. வீட்ல எல்லாரும் டீ, காபி குடிக்கிறாங்க என்று நாமும் குடிக்க வேண்டியதில்லை. ஊரே கடன் வாங்கி ஏமாத்துது என்பதற்காக நாமும் கடன் வாங்கித் திருப்பிக் கட்டாமல் ஏமாற்ற வேண்டியதில்லை. நாம் தொடரும் நல்ல விஷயங்களை நாலு பேர் கிண்டலடிக்கிறார்கள் என்று நம்மை நாம் மாற்றிக் கொள்ள வேண்டிதில்லை. "போடா ---------------------------" என்று மனதுக்குள் திட்டி விட்டு அடுத்த வேலையைப் பாருங்கள். உங்கள் நல்ல பழக்கத்திற்காக நீங்கள் பெருமைப்படும் ஒரு கணம் வந்தே தீரும்.

என்னைச்சுற்றியிருப்பவர்களெல்லாம் கண்ணாடி போட என் டாக்டர் "எல்லா டெஸ்டிலும் உங்க கண் பர்ஃபெக்ட், இன்னும் 20 வருஷம் ஆனாலும் கண்ணாடி போட வேண்டாம்" எனும்போதும், என் பேங்கர் "மற்றவர்கள் 750 க்கு முக்க உங்க சிபில் ஸ்கோர் 840 சார்" எனும் போதும், நன்றாய்ப் படித்தவர்களே "என்னது? நீங்க நாலு டிகிரியா?" எனும் போதும் அது போன்ற பெருமைக் கணங்கள் என் வாழ்வில் கிராஸ் ஆகிக் கொண்டுதான் இருக்கின்றன. வெறெந்த கெட்ட பழக்கமும் வேண்டாம். அந்த போதை ஒன்றே போதும்.
"என்னய்யா, பெருமை பீத்தல் பதிவா?" என்பவர்களுக்கு, குட்டியோடும், புட்டியோடும் இருக்கும் புகைப்படங்களையே பெருமையாக ஷேர் செய்யும் பனாதிகள் கூட்டத்தில் நான் பைத்தியக்காரனாகத் தெரிந்தால், தெரிந்து விட்டுப்போகிறேன். விட்டுடுங்க.


வெள்ளி, 28 ஏப்ரல், 2017

ஹேண்ட் சேனிடைசர்

கடந்த வருடம் இதே நாள் (28.04.2016) ஃபேஸ்புக்கில் எழுதியது.

சமீபமாக ஒரு ஹேண்ட் சேனிடைசர் விளம்பரம்.

இது பற்றிய ஒரு எதிர்ப்பு செய்தி வாட்ஸ் அப் பில் பரவுகிறது. (நானும் அதை ஆமோதிக்கிறேன்)

ஸ்கூலுக்குப் போகும் போது குழந்தைகளை ஹேண்ட் சேனிடைசர் எடுத்துட்டுப் போகச் சொல்லி. மிக மோசமான ஒரு விஷயத்தை விஷத்தைப் பரப்பும் ஒரு விளம்பரம் அது. பிஸினஸ் ஆகணும்னா என்ன வேணாலும் செய்வாங்க.
குழந்தைகள் கை கழுவ வெறும் தண்ணீர் மட்டும் போதும். வேண்டுமானால் சோப் போடலாம் (அதுவே கடந்த 20 வருடங்களாகத்தான்)

எல்லாவற்றையும் பழகினால் தான் இம்யூனிட்டி வளரும். அபார்ட்மெண்டில் வளரும் மிடில் கிளால் குழந்தையை விட மண்ணில் புரண்டு வளரும் குறவர்கள் (ஒரு உதாரணம் தான், சண்டைக்கு வராதீக) குழந்தைக்குத் தான் இம்யூனிட்டி அதிகம். அவ்வளவு சீக்கிரம் நோய்கள் தாக்காது.

ஹான்ட் சேனிடைசர் லாம் ரொம்ப அநியாயம். அதை உபயோகிக்க ஆரம்பிச்சா, பழகின பிறகு, அது இல்லாம இருக்க முடியாது. சின்னச் சின்ன டஸ்டுக்கெல்லாம் அலர்ஜி வரும். பிரச்சினை வரும்.

பல ஆண்டுகளா வீடுகள்ல கொசு மருந்து வச்சு, வச்சு, வச்சு அந்த காம்பினேஷனுக்குக் கொசு பழகிடுச்சு. கொசு ஒழிஞ்சுதா? இல்லை. மருந்துல இருக்குற விஷத்தின் அளவு அதிமாயிட்டே தான் வருது.

Evolution காமெடி படத்துல ஒரு சீன். நூற்றாண்டுகள் அளவு நேரத்தில் நடக்கக்கூடிய பரிணாம வளர்ச்சி படத்துல சில மணி நேரங்கள்ல நடக்கும். அதாவது, குரங்கிலிருந்து மனிதன் வர சிலபல நூற்றாண்டுகள் ஆகும்னா, இந்தப் படத்துல இரண்டே நாட்களில் நடக்கும்.

ஒரு பறக்கும் வகை டைனோசர் வகையறா மிருகத்துக்கு குட்டி பிறந்து உடனே இறந்து போகும். "அதுக்கு வெளிக்காற்று ஒத்துக்கலை"ன்னு ஹீரோ சொல்வார். இரண்டு நிமிடங்களில் வேறொரு டைனோசர் முட்டையிட்டு குட்டி வெளிவந்து வெற்றிகரமா பறக்கும். "சூழ்நிலைக்குப் பழகிடுச்சு" என்பார் ஹீரோ.

இது எல்லா உயிர்களுக்கும் பொருந்தும். Survival of the fittest னு கூடச் சொல்லலாம். ஹான்ட் சானிடைசர் போட்டுப் பழகிட்டா, கிருமிகள் இன்னும் பலமா ஆகும். சில வருடங்கில் சானிடைசர் போட்டாலும் பத்தாது.

கார்ப்பரேட்ஸ் இன்றைக்கு தண்ணீரை அந்த மாதிரி ஆக்கி வச்சிருக்காங்க. சின்ன வயசுல கிரவுண்டுல விளையாடும் போது கிடைச்ச பைப் தண்ணியைக் குடிச்சதில்ல? நமக்கு ஏதாவது ஆச்சா?

இன்று வரை நான் மினரல் வாட்டர் வாங்குவது இல்லை (குடுத்தா குடிப்பேன்). எல்லா தண்ணீரையும் குடிப்பேன். அப்போ தான் எங்கே எப்படிப் பட்ட தண்ணீருக்கும் என் தொண்டை பழகும். இத்தனைக்கும் நான் ஒரு ட்ரெயினர். எனக்கு குரல் முக்கியம். டிரெயின்ல போகும்போது ஒவ்வொரு ஸ்டேஷன்லயும் குடிதண்ணீர் பைப் வச்சிருக்கான். அதை விட்டுட்டு ஏன் 20 ரூபா (ஆக்சுவலி அது 15 ரூபா தான்) கொடுத்து ரயில் நீர் வாங்கணும்?

மினரல் வாட்டர் குடிச்சுப் பழகிட்டு அது கிடைக்காத ஒரு கிராமத்துல மாட்னா, அன்னைக்கு வரும் இன்ஃபெக்ஷன்.

வெள்ளி, 24 மார்ச், 2017

விலை வாசி

ஃபேஸ்புக்கில் 2015 மார்ச்சில் எழுதியது.

மூன்றரை வருடம் (அதாகப்பட்டது 2011 செப் - அக் சமீபம்) முன்பு எனக்காக நான் ஸ்மார்ட் போன் வாங்கிய போது அதன் விலை சுமார் ரூ.18,500. அப்போதைய என் ஒரு மாத சம்பளத்தை விட அதிகம். ஆனால் ஒருநாள் நாளாக நாளாக பல புதிய ஃபீச்சர்களுடன் ஸ்மார்ட் போன்கள் வரத்துவங்கிய பின்பு ஒரு வருடம் முன் என் தங்கைக்காக கிட்டத்தட்ட என் போனில் இருந்த அதே ஃபீச்சர்களுடன் மொபைல் வாங்கிய போது அதன் விலை ரூ.7500 மட்டுமே.

அவ்வப்போது என் போன் செகண்ட் ஹேண்டாக என்ன விலைக்குப் போகும் என்று விசாரித்து வைத்துக் கொள்வேன். கடைசியாக விசாரித்த போது இரு மாதம் முன் 3000 க்கு எடுத்துக்கலாம் என்றார்கள். ஆனால் ஒருநாள் சடாரென்று IMEI காணாமல் போனதில் என் போன் செத்துப் போனது. இன்றைக்கு அதன் மதிப்பு ஜீரோ.

உறவினர் ஒருவர் பதினைந்தாயிரம் ரூபாய் போட்டு டி.வி ஒன்றை வாங்கினார் தன் தாயாரின் விருப்பத்தின் பேரில் சுமார் பத்து வருடங்கள் முன்பு. அவரது தாயாருக்கு அவ்வளவு விபரம் கிடையாது. ஆனால் வீட்டின் முடிவுகளை எடுப்பவர் அவர்தான். ஆகவே டி.வி வாங்கப் பட்டது. கௌவி சாகும் வரை சந்தோசமாக சீரியல் பார்த்து செத்துப் போனது. ஆனால் உறவினருக்கோ தான் குடியிருந்த சந்து முக்கில் இருந்த மூன்று சென்ட்டு நிலம் 15000 க்கு வருகிறது என்று கேள்விப்பட்டதும் அதை வாங்க ஆசை.

ஆனால் அவரது உறவினர் ஒருவர், இந்த வயதான தாயாரிடம், அது பன்னியெல்லாம் மேயுற இடம், டிச்சி குப்பையெல்லாம் அங்கதான் கொட்றாங்க, அதுவும் இல்லாம அதெல்லாம் ரொம்ப கீழ் ஜாதி ஆளுங்க, குறவங்க ல்லாம் டென்டு போட்டிருக்காங்க அதைப் போய் வாங்குறேன்-கிறான் இவன். என்றெல்லாம் சொல்லி, ஐ மீன் போட்டுக் கொடுத்து, நிலம் வாங்கும் ஐடியாவில் டிச்சி மண்ணைப் போட்டு மூடி விட்டார். இன்றைக்கு அந்த நிலத்தின் விலை சுமார் எட்டு இலட்சங்கள்.

இன்றைக்கும் (கிளவி அவுட்) அந்த 15000 ஓவா டி.வி அவர் வீட்டில் ஓடிக் கொண்டுதான் இருக்கிறது. அது இன்று 400 ரூபாய்க்கு கூட விலை போகாது.

(சொந்தச் சம்பளத்தில்) எலக்ட்ரானிக்ஸ் பொருளெல்லாம் வாங்குபவர்கள் கொஞ்சம் யோசித்து வாங்குங்கள். நாளைக்கே புது மாடல் இன்னைக்கு ரேட்டை விட கம்மியா வரும். ஏன் உங்களுக்கு இந்த அட்வைஸ் என்றால் அப்பன் சொத்தில் அனுபவிக்கும் அன்பர்களுக்கு பணத்தின் மதிப்பு தெரியாது. கல்யாணம் ஆனப்புறம் புள்ள குட்டி, ஆஸ்பத்திரி செலவு, ஸ்கூல் பீஸ், ஆபீஸ் தொந்திரவு, ஃபயரிங்-னு ஆயிரம் பிரச்சினைகள் வரும் போது தான் பணத்தின் மதிப்பு தெரியும்.

அதற்காக எதையுமே வாங்க வேண்டாம் அனுபவிக்க வேண்டாம் என்று சொல்லவில்லை. இன்றைக்கு 20000 போட்டு மொபைல் வாங்க என்னால் முடியும் எனும் போது மனதை சமாதானப் படுத்திக் கொண்டு 10,000 அ 13,000 என்று கொஞ்சம் இறங்கி வரலாம். 50000 போட்டு லேப்டாப் வாங்க நினைப்பவர்கள் 30000 க்கு இறங்கி வரலாம். 2.5 இலட்சம் போட்டு புது நேநோ வாங்க நினைப்பவர்கள் ஒரு இலட்சத்தில் ஓ.எல்.எக்ஸில் செகண்ட் ஹேண்ட் தேடலாம். அட்லீஸ்ட் இரண்டு வருடம் கழித்து மனதைத் தேற்றிக் கொள்ள உதவும்.

ஞாயிறு, 12 மார்ச், 2017

காங் - தி ஸ்கல் ஐலண்ட்.

பழைய பியர். புதிய பேக்கிங். நிறைய ஃப்ளேவர்களுடன்.ஸ்பாய்லர் அலர்ட் - ஸ்பாய்லரா? - ஹி. ஹி.. ஹாலிவுட் படங்கள் கதைக்காகப் பார்க்கப்படுகின்றன என்று நம்பும் அப்பாவியா நீங்கள்? அவை விஷூவல்ஸூக்காகவும் இன்ன பிற வஸ்துக்களுக்காகவும் பார்க்கப் படுகின்றன என்பதால் கதையைச் சொல்வதில் யாதொரு குற்றமுமில்லை என்று நம்புகிறேன்.

கதை? 
சிம்பிள் தான். இதுவரை வரைபடத்திலேயே இல்லாத ஒரு தீவான "ஸ்கல் ஐலண்ட்" ஐ அமேரிக்காவின் சாட்டிலைட் ஒன்று கண்டுபிடிக்க, அப்படி ஒன்று உள்ளது என நெடுநாட்களாக நம்பும் விஞ்ஞானி ஒருவர், போட்டி நாடான ரஷ்யா அதைக் கண்டுபிடிக்கும் முன் நாம் போய் இறங்க வேண்டும் எனப் போராடி அனுமதி வாங்கி, ஒரு ராணுவப் படை, விஞ்ஞானிகள், வழிகாட்டி, போட்டோகிராபர், ஹெலிகாப்டர்கள், நிறைய எக்ஸ்ப்ளோஸிவ்கள் சகிதம் போய் இறங்குகிறார். கதை 1973 ல் நடக்கிறது மக்களே. 

ஆராய்ச்சி செய்கிறேன் என்ற பெயரில் தீவினில் நுழைந்த உடனேயே குண்டுகளைப் போட்டதால் வெறியாகித் தாக்கும் தீவு வாசியான ஒரு மிகப்பெரிய விலங்கு, அதான் "காங்" கிடம் தோற்று, ஹெலிகாப்டர்களையும், படைவீரர்களையும் இழந்து, மீதமுள்ளோர் தீவின் வடக்குப் பகுதிக்கு இரண்டு டீமாகப் பிரிந்து செல்கையில் மற்றும் பல வித்தியாசமான விலங்குகள், பூச்சிகள், பல்லிகளால் பல பேர் இறக்க, 28 ஆண்டுகளுக்கு முன் 1944 உலகப் போரின் போது அந்தத் தீவில் விழுந்து உயிர் தப்பி ஆதிவாசிகளுடன் வாழ்ந்து வரும் அமெரிக்க விமானியைச் சந்திக்கிறார்கள். இவர்களுக்காக அவர் விமான உதிரிகளால் ஆன ஒரு போட் - ஐ உருவாக்கி உதவுகிறார். இரண்டு டீம்களும் முழுதாகத் தப்பித்தார்களா? வீம்பு பேசும் ஆர்மி கர்னலுக்கும், "காங்" கிற்கும் நடக்கும் போராட்டத்தில் வெற்றி யாருக்கு என்பதை வெள்ளித்திரையில் அல்லது - அமேசான் ப்ரைமில் காண்க.

முழு ஸ்பாய்லர்களும், பிற விபரக் குறிப்புகளும் - 
சுமார் 15 - 20 வருடங்களுக்கு முன் "காட்ஸில்லா வெர்சஸ் தி கிங் மான்ஸ்டர்" என்றொரு படத்தை சேலம் பி.என்.கே தியேட்டரில் பார்த்தேன். (இப்போது அந்த தியேட்டரே இல்லை) அது ஒரு ஜப்பானியப் படம். "மான்ஸ்டர்" படங்களைப் பற்றி எனக்கு ஒரு ஐடியா கிடைத்தது அதில் தான். பின்னாளில் "தி பஸிஃபிக் ரிம்" போன்ற படங்கள் வந்த போது ஜப்பானிய கைஜூ மிருகங்கள் பற்றி ஒரு தௌிவான பார்வை கிடைத்தது. ஆனால் 40 அ 60 மாடி உயர மிருகங்கள், அவற்றின் வாயில் இருந்து வரும் லேசர் வீச்சு, என "இது ஏன் இப்படி இருக்கு?" என லாஜிக்கெல்லாம் பார்க்கக் கூடாது. ஏன்னா? "அஜூக்கு இன்னா அஜூக்கு தான். குமுக்கு இன்னா குமுக்கு தான்" என்று இருந்தது படம். ஆனால் வருடங்கள் செல்லச்செல்ல, காலம் மாற, மாற எல்லாவற்றையும் லாஜிக்கையும், ரியாலிட்டிக்கு அருகிலும் எதிர்பார்க்கும் நமக்கு, ஆயிரம் கேள்விகள் எழுவதையும் தவிர்க்க முடியாது.

ரியாலிட்டிக்கு அருகில், நோலன் ரீ-பூட் செய்த பேட்மேன் சீரிஸ் ட்ரிலாஜி படங்களைப் பார்த்து விட்டுப் பின்னாளில் "பேட்மேன் வெ சூப்பர்மேன்" மின் டமால் டுமீல்களைப் பார்த்தபோது "என்னடா இது?" என்று தோன்றியது. ஆனால் இது போன்ற திரைப்படங்களுக்கு காமிக்ஸ்கள், கார்ட்டூன்கள் என (பேட்மேன், சூப்பர்மேன், கைஜூ, மான்ஸ்டர், காட்ஸில்லா, கிங் காங் என) ஒரு பரந்த பின்புலம் இருப்பது புரிந்தால், இவை உறுத்தலாகத் தோன்றாது. உதாரணமாக நேரடியாக சிங்கம் 3 பார்க்கும் ஒருவரை விட, சிங்கம் மூன்று பாகங்களையும் வரிசையாகப் பார்க்கும் ஒருத்தருக்குக்கிடைக்கும் புரிதல் வேறு அல்லவா? 

இதுவரை கிங் காங் படங்களைப் பார்க்காத புதிய தலைமுறையைச் சேர்ந்தவர்களுக்கு "ஸ்கல் ஐலண்ட்" ஒரு "வாவ்" அனுபவம். ஆனால் நீங்கள் குறைந்தது இரண்டு, மூன்று கிங் காங் படங்களையேனும் அட்லீஸ்ட் ஒன்றேனும் பார்த்திருக்கும் பட்சத்தில், படத்தில் வரும் எல்லாவற்றையும் ஒப்பிடத் துவங்குவீர்கள் - "காங்" கின் உருவம், காடு, நல்ல அல்லது கெட்ட ஆதிவாசிகள், ஹீரோயின் (பலி? or no), மற்ற காட்டு விலங்குகள், புதிய பூச்சிகள், "காங்" Vs மனிதர்களுக்கிடையேயான சண்டை, "காங்" ஊருக்குள் வருவது, வராமலே இருப்பது என. நீங்கள் 70 கள், 80 களில் வெளியான "கிங் காங்" படங்களைப் பார்த்திருந்தாலும் சரி, 2005ல் வெளிவந்த பீட்டர் ஜாக்சனின் ரீ பூட் "கிங் காங்" பார்த்திருந்தாலும் சரி, இந்தப் படத்தில் நிறைய மாற்றங்கள் உங்கள் கண்ணுக்குப் புலப்படும். அவை பிடித்திருக்கிறதா? இல்லையா? என்பது மட்டும் உங்கள் விருப்பத்தைப் பொறுத்து.

அதில் மிக முக்கியமான ஒன்று, இந்தப் பட கிளைமாக்ஸில் கிங் காங் சாகவில்லை. சிங்க நடை போட்டு சிகரத்தில் ஏறிப் போய் விடுகிறது. காரணம்? பின்னால் சொல்கிறேன். மேலும், "காங்" வில்லன் அல்ல. ஹீரோ. மேலும் எப்போதும் வருவது போல இந்த முறை கிங் காங் நகரத்திற்கு வந்து அதகளம் செய்வதில்லை. காட்டிலேயே படம் முடிகிறது. மேலும் காங் - கிற்கு ஏகப்பட்ட ஹீரோ பில்டப். சாமுயேல் எல்.ஜாக்சன் தான் கிட்டத்தட்ட காங் - கின் முகஜாடையில் வில்லன் போல இருக்கிறார். என் ஆட்களைக் கொன்ற காங் - கைக் கொல்லாமல் விடமாட்டேன் என நம்மைக் கடுப்பேற்றுகிறார். சும்மா இருந்த தீவுக்குள் வீம்பாகப் போய் குண்டுகளைப் போட்டு விட்டு காங் வந்து எதிர்த்து அழிக்கிறதே என்றால்? தியேட்டரிலேயே திட்டுகிறார்கள். இது போன்ற வெளிப்படையான உறுத்தல்கள் படத்தில் உண்டு. கொஞ்சம் கவனித்திருக்கலாம். 

டைனோசர்களையெல்லாம் கொண்டு வந்து 2005 கிங் காங் கில் நுழைத்து காமெடி செய்த பீட்டர் ஜாக்சனுக்கு சவால் விடும் விதமாக ராட்சத ஸ்பைடர், ராட்சத ஆக்டோபஸ், "ஸ்கெர் பஃபேல்லாே" எனும் ராட்சத எருமை,  மரத்தாலான வெட்டுக்கிளி என்றெல்லாம் உருவங்களை உருவாக்கி உலவ விட்டிருக்கிறார்கள். அதனால் கதையோட்டத்தில் பல கதாபாத்திரங்கள் இறக்கிறார்கள். "காங் இல்லாவிட்டால் ராட்சதப் பல்லிகளிடம் (ஆம், தமிழில் தான் பார்த்துத் தொலைத்தேன்) இருந்து இந்த ஆதிவாசி கிராமத்தை யாரும் காப்பாற்ற முடியாது" என்று வசனத்திலேயே இந்தப் படத்தின் ஹீரோ "காங்" தான் என்ற மெஸேஜ் அழுத்தமாகச் சொல்லப் படுகிறது.

"காங்" ஹீரோ ஆதலால், பின்னங்கால்கள் இல்லாத "pit lizard" என்ற பல்லி போன்ற உயிரினத்தை 1933 ன் "கிங்காங்" ஒரிஜினல் படத்தில் இருந்து எடுத்து இதில் வில்லன் ஆக்கியிருக்கிறார்கள். Ramarak என்றும் அழைக்கப்படும் அந்த "pit lizard" க்கு "skull crawlers" என்று பெயர் மாற்றி, 33 க்குப் பின்னால் வந்த பல படங்களின் உயிரினங்களை ரெஃபரன்ஸ் எடுத்து இன்றைய காலகட்டத்திற்கேற்ப மெருகேற்றியிருக்கிறார்கள். ரெகுலராகப் படம் பார்க்கும் உங்களுக்கு வேறு பட அனிமல்களின் உருவ அமைப்புகள் நினைவுக்கு வரலாம். "ஸ்பிரைட்டட் அவே (இந்தப்படம் என்னிடம் இருக்கிறது, ஒரு அமானுஷ்ய லோன்லி ஃபீல் தரும், என்னமோ செய்யுதுல - என்பது போன்ற படம்) போகிமான் போன்றவற்றில் இருந்து ரெஃபரன்ஸ் எடுத்திருப்பதாகவும் காமிக் கான் ஃபெஸ்டிவல் - ன் போது பேட்டியில் சொல்லியிருக்கிறார் டைரக்டர்.

கிங் காங்கின் உருவத்திலும் நிறைய மாற்றங்கள். அவை பீட்டர் ஜாக்சனின் APE போன்ற உருவாக்கத்தில் இருந்து முழுக்க மாறுபட்டு பழைய காங் படங்களோடு ஒத்துப் போகின்றன. காரணம்? இருக்கிறது. (காமிக்ஸ்கள், பொம்மைகள், ஆர்ட் விஷயங்களுக்கும், மார்க்கெட்டிங்குகளுக்கும் உபயோகப் படும் வகையில்) ஒரு பள்ளிச் சிறுவன் கூட வரையும் வகையில் காங்கின் உருவம் அமைய வேண்டும் என்று நாங்கள் விரும்பினோம் என்று படத்தின் இயக்குனர் ஒரு பேட்டியில் சொல்லியிருக்கிறார். அதனால் நிமிர்ந்த நிலையில் இரண்டு கால்களில் மனிதன் போல நிதானமாக நடந்து போகும் பழைய ஸ்டைல் காங் - ஐ இந்தப் படத்தில் நீங்கள் பார்க்கலாம்.

அது மட்டும் அல்ல. கடந்த 2014 ல் வெளியான "காட்ஸில்லா ரீபூட்" நினைவிருக்கிறதா? 1997 ல் ஹாலிவுட் காட்ஸில்லாவுக்கு டைனோசர் ஸ்டைலில் "ரோலண்ட் எம்மரிக்" கொடுத்த புது உருவமும் பழையபடி மாற்றப்பட்டு, மீண்டும் ஜப்பானிய மான்ஸ்டர் காட்ஸில்லாவின் உருவம் கொடுக்கப்பட்டிருந்தது. அந்தப் படத்தில் காட்ஸில்லா வும் சாவதில்லை. அது மனிதர்களுக்கு வில்லனும் அல்ல, ஹீரோ. அதன் வில்லன் "ம்யூடோ" என்ற உயிரி. ம்யூடோவுடன் போராடி அழித்து விட்டு, அங்கேயும் ஒரு சிங்க நடை. காட்ஸில்லா கடலில் இறங்கி சாதுவாக நடந்து போய் விடுவது போல கிளைமாக்ஸ் அமைத்திருந்தார்கள். 

ஒருவேளை, இந்த இரண்டு சிங்கங்களும் சந்தித்தால்? அதே...
"கிங்காங் - காட்ஸில்லா" பிஸினஸ் ஃப்ரான்ச்சைஸ் சீரிஸ் துவங்கப்பட்டு அதில் "காட்ஸில்லா Vs காங்" என்ற படம் பிரம்மாண்டமாக உருவாகிக்கொண்டிருக்கிறது 2020 மே மாதத்தில் ரிலீஸ் என்ற அறிவிப்புடன். அந்தப் படத்திற்கான அடித்தளமாகத்தான் "காட்ஸில்லா 2014" மற்றும் "காங் - ஸ்கல் ஐலண்ட் 2017" படங்கள் ஸ்டிராங் ஆன ஸ்டேண்ட் அலோன் படங்களாக அமைக்கப்பட்டுள்ளன. இதற்கிடையில் காட்ஸில்லாவின் பவரை இன்னும் கொஞ்சம் தூக்கி நிறுத்த "காட்ஸில்லா - கிங் ஆஃப் மான்ஸ்டர்ஸ்" என்ற ஒரு படமும் 2019 மார்ச் ல் வரவிருக்கிறது. ஆக, இனிமேல் படங்களையெல்லாம் தனித்தனியாகப் பார்க்காமல், சீரிஸாகப் பார்க்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.

ஓவரால் வெர்டிக்ட் - அட்டகாசம். அனிமல்ஸ் அட்டகாசம். தியேட்டரில் பார்க்கலாம்.

மற்றபடி அவ்வப் போது "அவதார்" (ஹெலிகாப்டர்கள் குண்டு போடும் காட்சி), "ஜர்னி டு தி சென்டர் ஆஃப் தி எர்த் - 2" (பல்லிகள் மனிதர்களைத் துரத்தும் காட்சி), "அனகோண்டா 1" அல்லது "ஜூராஸிக் பார்க் 2" (போட் - டில் காட்டு நதியில் செல்லும் காட்சி, தண்ணீர் ஏரிகளில் நடந்து செல்லும் காட்சிகள்), "ஜூராஸிக் பார்க் 4" (காட்டில் நடக்கும் துரத்தல்கள்), "கிங் காங் 2005" (காங்கும் பெரிய பல்லியும் போடும் சண்டை) "காட்ஸில்லா" (சேதமான கப்பல்) இன்ன பிற பல படங்கள் உங்கள் கண் முன்னால் வந்து போனால் நீங்கள் உங்கள் ஞாபக சக்தியை மட்டுமே மெச்சிக் கொள்ள வேண்டும். காப்பி, இன்ஸ்பிரேஷன் என்றெல்லாம் சொல்லி சினிமாப் போராளி மூடுக்கு மாறக்கூடாது என்று கேட்டுக் கொள்கிறோம்.

ஏதேனும் பாடாவதி தியேட்டரில் பார்க்காதீர்கள். நல்லதொரு தியேட்டர் உத்தமம். வீட்டில் இருந்தபடியே 1080 என்ற தரத்தில் டவுன்லோடுகள் கிடைக்கும் போது, தியேட்டரில் இருக்கும் இடைஞ்சல்கள் நம்மைக் கடுப்பேற்றும். அவ்வளவே.
.

வியாழன், 2 பிப்ரவரி, 2017

ஒரு உதவி தேவை - பள்ளி மாணவர்களுக்கு தேர்வுக்கான பேனாக்கள் வழங்க.

நேற்று இரவு என்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் இந்தப் பதிவு இடப்பட்டது.

ஒரு உதவி தேவை.

கோவை அருகே உள்ள அரசுப்பள்ளி ஒன்றில் பயிலும் மாணவர்கள் 256 பேர் இந்த வருடம் பத்தாம் மற்றும் பனிரெண்டாம் வகுப்புத் தேர்வு எழுத இருக்கிறார்கள். பலரும் ஒரு நல்ல பேனா வாங்கக் கூட வசதி இல்லாத மாணவர்கள்.

பள்ளியின் கோரிக்கையின் பேரில் அவர்கள் அனைவருக்கும் "இங்க் பேனா - ஆளுக்கு ஒன்று" வழங்க இருக்கிறோம். நான் உறுப்பினர் மற்றும் செயலாளர் ஆக உள்ள "ஜே.சி.ஐ கோயம்புத்தூர் ஆனந்தம்" தன்னார்வத் தொண்டு அமைப்பு மூலம் இந்த முயற்சியை முன்னெடுக்கிறோம்.

20 ரூ மதிப்புள்ள பேனா என்றால், இதற்கான செலவு சுமார் ஆறாயிரம் ரூபாய் ஆகலாம். அதை உறுப்பினர்களான எங்களாலேயே தந்து விட முடியும் என்றாலும் இந்த வருடம் முழுவதும் மாதா மாதம் இதே போன்ற திட்டங்கள் உள்ளதால் பிப்ரவரி மாதத்திற்கான இந்த நற்செயலில் பங்கு பெற உதவிகள் கிடைத்தால் நன்றாக இருக்கும்.

ஆகும் செலவில் மூன்றில் ஒரு பங்கினை "ஜே.சி.ஐ கோயம்புத்தூர் ஆனந்தம்" வழங்கும். மீதி இரண்டு பங்குத் தொகைக்கு உதவ விருப்பம் உள்ள நண்பர்கள் தொடர்பு கொள்ளவும். அதிகம் வேண்டாம். ஒன்று அல்லது இரண்டு பேர் முன்வந்தால் போதும்.

குறிப்பு - நோ ஊழல், நோ பஞ்சாயத்து, முழுக்க முழுக்க வெளிப்படைத் தன்மையுடன் உதவுபவர்களை நேரடியாக அந்தப் பள்ளிக்கே இணைத்து வைக்கிறோம். சந்தேகமில்லாமல் உதவி செய்யலாம்.

பிற விபரங்கள்தேவைப்பட்டால் கேட்கலாம்.

பிற்சேர்க்கை - உதவுவோர் எண்ணிக்கை நான்கு, ஐந்து எனக் கூடியதால் அவர்களது விபரங்கள் ஃபேஸ்புக் பேஜில் குறிப்பிடப்பட்டன. பணம் வசூலித்து உதவிகள் செய்து முடித்ததும் அவர்களது அனைத்து விபரங்களும் இந்தப் பக்கத்தில் பதிவு செய்யப்படும். 

தேவையான டாகுமெண்டுகள் உருவாக்கப்பட்டு அவை அனைத்தும், அனைவருக்கும் மெயில் மூலம் அனுப்பப்படும்.