வெள்ளி, 24 மார்ச், 2017

விலை வாசி

ஃபேஸ்புக்கில் 2015 மார்ச்சில் எழுதியது.

மூன்றரை வருடம் (அதாகப்பட்டது 2011 செப் - அக் சமீபம்) முன்பு எனக்காக நான் ஸ்மார்ட் போன் வாங்கிய போது அதன் விலை சுமார் ரூ.18,500. அப்போதைய என் ஒரு மாத சம்பளத்தை விட அதிகம். ஆனால் ஒருநாள் நாளாக நாளாக பல புதிய ஃபீச்சர்களுடன் ஸ்மார்ட் போன்கள் வரத்துவங்கிய பின்பு ஒரு வருடம் முன் என் தங்கைக்காக கிட்டத்தட்ட என் போனில் இருந்த அதே ஃபீச்சர்களுடன் மொபைல் வாங்கிய போது அதன் விலை ரூ.7500 மட்டுமே.

அவ்வப்போது என் போன் செகண்ட் ஹேண்டாக என்ன விலைக்குப் போகும் என்று விசாரித்து வைத்துக் கொள்வேன். கடைசியாக விசாரித்த போது இரு மாதம் முன் 3000 க்கு எடுத்துக்கலாம் என்றார்கள். ஆனால் ஒருநாள் சடாரென்று IMEI காணாமல் போனதில் என் போன் செத்துப் போனது. இன்றைக்கு அதன் மதிப்பு ஜீரோ.

உறவினர் ஒருவர் பதினைந்தாயிரம் ரூபாய் போட்டு டி.வி ஒன்றை வாங்கினார் தன் தாயாரின் விருப்பத்தின் பேரில் சுமார் பத்து வருடங்கள் முன்பு. அவரது தாயாருக்கு அவ்வளவு விபரம் கிடையாது. ஆனால் வீட்டின் முடிவுகளை எடுப்பவர் அவர்தான். ஆகவே டி.வி வாங்கப் பட்டது. கௌவி சாகும் வரை சந்தோசமாக சீரியல் பார்த்து செத்துப் போனது. ஆனால் உறவினருக்கோ தான் குடியிருந்த சந்து முக்கில் இருந்த மூன்று சென்ட்டு நிலம் 15000 க்கு வருகிறது என்று கேள்விப்பட்டதும் அதை வாங்க ஆசை.

ஆனால் அவரது உறவினர் ஒருவர், இந்த வயதான தாயாரிடம், அது பன்னியெல்லாம் மேயுற இடம், டிச்சி குப்பையெல்லாம் அங்கதான் கொட்றாங்க, அதுவும் இல்லாம அதெல்லாம் ரொம்ப கீழ் ஜாதி ஆளுங்க, குறவங்க ல்லாம் டென்டு போட்டிருக்காங்க அதைப் போய் வாங்குறேன்-கிறான் இவன். என்றெல்லாம் சொல்லி, ஐ மீன் போட்டுக் கொடுத்து, நிலம் வாங்கும் ஐடியாவில் டிச்சி மண்ணைப் போட்டு மூடி விட்டார். இன்றைக்கு அந்த நிலத்தின் விலை சுமார் எட்டு இலட்சங்கள்.

இன்றைக்கும் (கிளவி அவுட்) அந்த 15000 ஓவா டி.வி அவர் வீட்டில் ஓடிக் கொண்டுதான் இருக்கிறது. அது இன்று 400 ரூபாய்க்கு கூட விலை போகாது.

(சொந்தச் சம்பளத்தில்) எலக்ட்ரானிக்ஸ் பொருளெல்லாம் வாங்குபவர்கள் கொஞ்சம் யோசித்து வாங்குங்கள். நாளைக்கே புது மாடல் இன்னைக்கு ரேட்டை விட கம்மியா வரும். ஏன் உங்களுக்கு இந்த அட்வைஸ் என்றால் அப்பன் சொத்தில் அனுபவிக்கும் அன்பர்களுக்கு பணத்தின் மதிப்பு தெரியாது. கல்யாணம் ஆனப்புறம் புள்ள குட்டி, ஆஸ்பத்திரி செலவு, ஸ்கூல் பீஸ், ஆபீஸ் தொந்திரவு, ஃபயரிங்-னு ஆயிரம் பிரச்சினைகள் வரும் போது தான் பணத்தின் மதிப்பு தெரியும்.

அதற்காக எதையுமே வாங்க வேண்டாம் அனுபவிக்க வேண்டாம் என்று சொல்லவில்லை. இன்றைக்கு 20000 போட்டு மொபைல் வாங்க என்னால் முடியும் எனும் போது மனதை சமாதானப் படுத்திக் கொண்டு 10,000 அ 13,000 என்று கொஞ்சம் இறங்கி வரலாம். 50000 போட்டு லேப்டாப் வாங்க நினைப்பவர்கள் 30000 க்கு இறங்கி வரலாம். 2.5 இலட்சம் போட்டு புது நேநோ வாங்க நினைப்பவர்கள் ஒரு இலட்சத்தில் ஓ.எல்.எக்ஸில் செகண்ட் ஹேண்ட் தேடலாம். அட்லீஸ்ட் இரண்டு வருடம் கழித்து மனதைத் தேற்றிக் கொள்ள உதவும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக