ஞாயிறு, 3 நவம்பர், 2019

சிறப்புக் கட்டுரை: உஷார்- ஆன்லைன் தளங்களின் தந்திரங்கள்

மின்னம்பலம் இணைய இதழில் 30.10.19 அன்று வெளியான கட்டுரை.
-------------------------------------------------------------------------------------------------------------

-எஸ்கா

நேற்று அமேஸான் ஆன்லைன் புத்தகக் கடையில் உலாத்திக் கொண்டிருந்தேன். அதில் முன்பே "கின்டில் அன்லிமிடெட்" சந்தா கட்டியிருக்கிறேன். அது ஒரு வாடகைத் திட்டம். அந்தத் திட்டத்தில் உள்ள ஆயிரக்கணக்கான புத்தகங்களை சந்தா காலத்தில் எப்போது வேண்டுமானாலும் எடுத்துப் படித்துக் கொள்ளமுடியும்.

புதிதாக ஏதாவது வாங்க வேண்டும் என புத்தகங்கள் தேடும்போது வாடகைத் திட்டத்தில் உள்ள புத்தகங்களுக்கு மேலே kindle unlimited என்றொரு லேபிள் காண்பிக்கும். வேண்டுமென்றால் வாங்கிக் கொள்ளலாம். மற்ற புத்தகங்களுக்கு அப்படி இருக்காது. ஆனால் சில சமயம் புத்தகத்துக்கு மேலே அந்த லேபிளுக்கு பதிலாக அதே போல "lookinside" என்று வேறொரு லேபிளைக் காண்பித்து சட்டென தோற்ற மாயையை உருவாக்குகிறது.

பொதுவாக "kindleunlimited" என்றுள்ள புத்தகத்தை வாங்க வேண்டி க்ளிக்செய்தால் "send to device" என்பது போலக் காண்பிக்கும். க்ளிக் செய்தால் நீங்கள் வைத்துள்ள கின்டில் கருவிக்கோ, கின்டில்ஆப்-புக்கோ சென்றுவிடும். ஆனால் சிலசமயம் "read for free" என்றுவரும். வேறு சில சமயங்களில் "buy now" அல்லது சில சமயம் "add to kart" என்று எதையேனும் மாற்றிக் காண்பித்துக் குழப்பிவிட்டு விடுகிறது.

நேற்று ஒரு புத்தகத்தை "buy with one click" னு காண்பித்தது. உற்றுக் கவனியாமல் "kindle unlimited" புத்தகம் என்று நினைத்து க்ளிக் செய்துவிட்டேன். ஒரே நொடிதான். அவர்களின் உள் கணக்கான "amazon pay" அக்கவுண்டில் கொஞ்சம் பணம் வைத்திருந்தேன். அதில் இருந்து 151 ரூபாய் போச்சு. உடனடியாக ஆர்டர் ஆகிவிட்டது.

பிறகு சுதாரித்து தேடிப் பார்த்தால் பணம் குறைந்திருந்தது. அப்புத்தகம் கின்டில் வெர்ஷன் புத்தகம் என்பதால் ஆர்டரை கேன்சல் செய்யவும் முடியவில்லை. எல்லா ஆப்ஷன்களையும் சுற்றிசுற்றிப் பார்த்துவிட்டேன். போனது போனதுதான்.

இது போன்ற தோற்ற மாயைகளை அமேஸான், ப்ளிப்கார்ட், ஸ்னாப்டீல்,பிக்பாஸ்கெட் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களும் வேண்டுமென்றே வலிந்து உருவாக்குகிறார்கள் என்பது ஒரு மிக முக்கிய தகவல். இவற்றை "Dark patterns" என்கிறார்கள். உதாரணத்திற்கு சில.

தந்திரமான கேள்விகள்

"உங்களுக்கு வேண்டாமா?" என்ற கேள்வியும் "உங்களுக்கு வேண்டாம் என்று நான் சொன்னால் நீங்கள் உறுதியாக மறுப்பீர்கள் என்று நான் நம்புகிறேன்" என்பதன் அர்த்தமும் வேறுவேறு. ஆனால் இரண்டாவது உங்களைக் குழப்புகிறதா? "வேண்டும்" என்ற வார்த்தையை நம்பி அதை நீங்கள் க்ளிக் செய்து விடுவீர்கள்.

தூண்டில்கள் மற்றும் சொடுக்குகள்

தீர்ந்து போன பொருட்களின் புகைப்படங்களை முன் பக்கத்தில் காண்பித்து நீங்கள் உள்ளே சென்றதும் "உப்புலேது பப்புஉந்தி" என்பது போல அதுஇல்ல, ஆனா அதுக்குப் பதிலா இது இருக்கு என முந்தைய பொருளை ஒத்த , பலவித வேறு பொருட்களைக் காண்பித்து உங்களை வாங்கத் தூண்டுவது.

தவறாக திசை திருப்புதல்

சில வடிவமைப்புகள் உங்களைக் கவர்வதற்காகவே உங்கள் வயதுக்கேற்ற வண்ணங்கள், வடிவங்கள் கொண்டு உருவாக்கப்பட்டு அவர்கள் விரும்பிய, ஆனால் உங்களுக்குத் தேவையே இல்லாத ஒரு பொருளை நோக்கி உங்களைத் திசை திருப்புவது.

தள்ளுபடிகள் மற்றும் பேக்கிங் கட்டணங்கள்

ஒரு பொருளின் விலையில்– உதாரணமாக 400 ரூபாய் பொருளுக்கு 70 ரூபாய் தள்ளுபடி தருதல். ஆனால் பணம் கட்டும் பேஜில் 80 ரூபாய் பேக்கேஜிங் மற்றும் கூரியர் கட்டணமாக வைத்தல். மொத்தவிலை 410. அதே பொருளை அதே தளத்தில் வேறு விற்பனையாளரிடம் தேடினால் 390 ரூபாய்க்கு கிடைக்கும்.

மறைவான விளம்பரங்கள்

நீங்கள் உலாவும் தளத்தில் உள்ள அதே போன்ற வண்ணங்கள், வடிவமைப்புகள், வாக்கியங்கள் மற்றும் உள்ளடக்கத்துடன் விளம்பரங்கள் என்றே தெரியாத விளம்பரங்களை வைத்தல். மிகப்பொடி எழுத்துக்களில் ad என்று சில தளங்கள் வைத்திருக்கும். கவனிக்காமல் பொருளை க்ளிக் செய்து வாங்கிவிட்டு, அது நன்றாயிருந்தால் தப்பித்தீர்கள். ஆனால் பிரச்சினை என திரும்பிச் சென்றால் "அவை விளம்பரதாரர் பொறுப்பு. அது வேறு வெப்சைட். நான் பொறுப்பல்ல" என்று கைவிரித்தல்.

பதுக்கி வைத்தல்

நீங்கள் பல பொருட்கள் வாங்கும் போது, அதே போன்ற வேறொரு பொருளையும் உங்களுக்குத் தெரியாமல் உங்கள் ஷாப்பிங் கார்ட்டில் பதுக்கி வைத்தல். ஏழெட்டு வாங்கும்போது, இன்னோர் பொருள் சேர்ந்து வருவது சட்டென நம் புலனுக்குப் புலப்படாது.

Roach motel

ஒரு குறிப்பிட்ட சந்தா கட்டவோ, தொடர் டொனேஷன்கள் தரவோ, ஒரு சேவையை உபயோகப்படுத்தவோ, ஆன்லைனில் ஒரே ஒரு க்ளிக் செய்தால் போதும். ஆனால் அதனை கேன்சல் செய்ய ஆன்லைனில் வழியிருக்காது. ஒருபடிவத்தை டவுன்லோட் செய்து, பிரிண்ட் அவுட் எடுத்து, அதை நிரப்பி, கையெழுத்திட்டு ஏதேனும் முகவரிக்கு அனுப்பவோ அல்லது ஆபீஸில் கொண்டு போய்க் கொடுத்தால் தான் அது கேன்சல் ஆகும் என்று தலைசுற்றும் வழிமுறைகளை வைத்தல். இதனை Roach motel என்கிறார்கள். உள்ளே நுழைவது எளிது. வெளியே வருவது கஷ்டம்.

இதேபோல இன்னும் வாடிக்கையாளர்களை மயக்கும் பல தந்திரமான வழிமுறைகளை நிறுவனங்கள் வைத்துள்ளன. செல்ஃபோன் நிறுவனங்கள் "காலர்டியூன்" என்ற பெயரில் உங்கள் அக்கவுண்டில் மாதம் 30 ரூபாய் கழித்த கதையெல்லாம் நினைவிருக்கிறதா? மக்கள் உஷாராகி ஒரு குறிப்பிட்ட பொறியில் இருந்து தப்பினால், அதைத் தாண்டி மேலும் மேலும் புதிய வழிமுறைகளைக் கண்டு பிடித்துக் கொண்டும் உள்ளன. ஆகவே வாடிக்கையாளர்கள் எப்போதும் உஷாராக இருப்பது நல்லது.

ஆனால் அதே நேரம் ஆன்லைன் வழி முறைகளும் வர்த்தகங்களும் எத்தனையோ பரிமாற்றங்களை எளிதாக்கி விட்டன, இலட்சக்கணக்கான, கோடிக்கணக்கான புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கியிருக்கின்றன என்பதை மறுக்க இயலாது. சாலையில் இறங்கினால் விபத்து ஏற்படுகிறது என்று சாலையில் இறங்காமல் இருக்கமுடியுமா? விபத்து ஏற்படாமல் இருக்கத் தேவையான வழிமுறைகளை நாம் தான் உஷாராகக் கைக்கொள்ள வேண்டும். அது ஆன் லைனுக்கும் பொருந்தும்.

சனி, 16 பிப்ரவரி, 2019

சொல்வது ஒன்று செய்வது வேறு.

15 பிப்ரவரி 2018 அன்று ஃபேஸ்புக்கில் எழுதியது.

டிஸ்கிளெய்மர் - என் நட்பு வட்டத்தில் உள்ள சிலர் இதைத் தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம். இது அனைவரையும் தாக்கும் பொதுப் பதிவு அல்ல. இது போன்ற அலங்கார வாழ்க்கை வாழ்பவர்களை மட்டுமே.

சமீபத்தில் ஒரு பிரபலரின் பட்டிமன்ற பேச்சு ஒன்றின் சிறு பகுதியைக் கேட்க நேர்ந்தது. (அவரது தனிப்பட்ட ஆட்டிட்யூட் பற்றி, வேறு ஒன்று கேள்விப் பட்டேன். அது கிடக்கட்டும்) அவர் கேரளாவில் ஒரு ஸ்டேஷனில் தாய்ப்பால் ஊட்டும் பெண்களுக்காக ஒரு சிறு அறை ஒன்றைப் பார்த்ததைப் பற்றி "மனிதநேயம், ஆஹா, ஊஹூ" என்று வியந்தோதிக் கொண்டிருந்தார். அவர் கண்களில் தமிழ்நாடு அரசு ஒவ்வொரு பஸ் ஸ்டாண்டிலும் கட்டிவைத்திருக்கும் "தாய்ப்பாலூட்டும் அறை"கள் படுவதே இல்லை போலும்.

பேச்சை முடிக்கும் முன்னாவது அதைப் பற்றி ஒருவார்த்தையாவது பேசுவார் என்று பார்த்தேன். இல்லை. அதுசரி, தெரிந்திருந்தால் தானே வரும்? அரசுப் பேருந்தில் பயணித்தால் தானே இங்குள்ள நிஜம் தெரியும். வால்வோ, ஏஸி ஸ்லீப்பர் தனியார் பேர, செகண்ட் ஏஸி டிரெயின் கோச், முடிந்தால் எகனாமிக் க்ளாஸ் விமானப் பயணம் என்று கேட்டு வாங்கிப் பயணிக்கும் "பிரபல" பட்டிமன்றப் பேச்சாளர்களுக்கு தமிழக அரசு பஸ் நிலையங்களில் கட்டி வைத்திருக்கும் "தாய்மார்கள் அறை" பற்றி எங்கே தெரியும்?

தன் தேவைகள், தன் எதிர்கால வாய்ப்புகளுக்காக எதைச் "செய்தால்", எதைப் "படித்தால்", எவரைக் "கவனித்தால்" போதும் என்பது மட்டுமே நான் பார்த்த பலரின் பாதை. நன்றாக வாயில் வடை சுடுவார்கள். தன்னை அலங்கரித்துக் கொள்வார்கள். ஆண், பெண் பேதமில்லை. தான் பேசுவதை நான்கு பேர் நம்ப வேண்டும். அவர்கள் தான் வெகுவேகமாக பிரபல்யத்திலும் பொருளாதாரத்திலும் முன்னேறி மேலேறிப் போய்க்கொண்டே இருக்கிறார்கள். தரையில் கால் வைத்து நிஜம் பேசும் நாம் தரையிலேயே நின்று கொண்டுதான் இருக்க வேண்டி இருக்கிறது. மேடைக்கு ஒரு பேச்சு, நிஜ வாழ்க்கைக்கு ஒரு பேச்சு என்று வாழ்பவர்கள் தானே பலர்.

நியூஸ் பேப்பர் படிப்பதை விட, மேடைப்பேச்சுக்கு ஆகும் என்று கம்பராமாயணத்தை வாங்கிப் புரியாததையும் நெட்டுரு போடுபவர்களையும் பார்த்திருக்கிறேன். மூன்றாண்டுகளுக்கு ஒரு "யூஸ்லெஸ் சோடாபுட்டி ஃபெலோ" ஒருத்தனைச் சந்தித்தேன். என்னமோ மார்ஸ் கிரகத்தில் இருந்து இறங்கி வந்தவன் போல், நிஜவாழ்க்கை மக்களைப் பற்றி எதுவுமே அறியாமல் லூஸூ மாதிரியே எல்லாவற்றும் தர்க்கம் செய்து கொண்டிருந்தான். சரி, என்ன செய்கிறீர்கள் என்றால் "பட்டிமன்றப் பேச்சாளர், கம்ப இராமாயணச் சொற்பொழிவாளர்" என்றான். நம்பர் கேட்டான். தரவில்லை. நல்லாயிரு, என்னை விட்ரு என விலகி விட்டேன்.

மேடையில் வாய் கிழிய அன்பு, காதல், பாசம், நட்பு, உதவி, மனித நேயம், சேவை பற்றி அலங்காரமாக வார்த்தைகள் கோர்த்துப் பேசும் பலரும் நிஜ வாழ்க்கையில் அதற்கு எக்ஸ்ட்ரீம் ஆப்போஸிட் ஆக இருக்கிறார்கள். மேலே சேவை, மனித நேயம் பற்றிப் பேசிவிட்டு கீழே தன் உதவியாளரை சிறு விஷயத்திற்காக அடிப்பது. மேலே கல்லூரி மாணவர்கள் எதிர்காலம் பற்றிப் பேசிவிட்டு கீழே, இவனுங்கள்லாம் வேஸ்ட்டு, தறுதலைப் பசங்க என்று கமெண்ட். மேலே நட்பு பற்றிப் பேசிவிட்டு, கீழே வந்து, கூடப் பேசுபவர்கள் வாய்ப்பைப் பறிப்பது, குழி பறிப்பது...... இதர....

பேசிப்பேசியே ஆட்சியைப் பிடித்தவர்கள் என்று திராவிடக் கட்சியினரைப் பற்றிச் சொல்வார்கள். அதே திராவிடக் கட்சிகளிலும், மற்ற கட்சிகளிலும், சமீபமாக மேடையில் பேசத் தெரியாமல் உளறிக் கொட்டி, தம் கட்சியின் பிம்பத்தைச் சிதைத்துக் கொண்டிருப்பவர்களையும் பார்க்கிறோம். "பேச்சு" மிக வலிமையான ஆயுதம். ஆனால் அதைப் பயன்படுத்தி மக்களை ஏமாற்றிக் கொண்டே இருப்பதைத்தான் தாங்க முடியவில்லை. அலங்காரப் பேச்சுகளை தலையாட்டி நம்பும் ஆட்டு மந்தைக் கூட்டமாக நம் மக்கள் இருப்பது தான் வருத்தமாக இருக்கிறது.

முட்டாள்கள் சூழ் உலகு


ஊர் முழுக்க முட்டாள்களாலும், மூடர்களாலும் நிரம்பி வழிகிறது. மாற்ற முயற்சித்தாலும், திருத்த முயற்சித்தாலும் "மாட்டேன்" என உறுதியாக இருக்கிறார்கள். முன்னால் தலையாட்டி விட்டு பின்னால் போய் அவதூறு பேசுகிறார்கள். நாம் சொல்வதை ஜஸ்ட் "புரிந்து கொள்ளவே" சிலருக்கு மூளை இல்லை. ஆன்மிகமோ, அரசியலோ தம்மை ஏமாற்றுபவனிடமே போய் தஞ்சம் புகுகிறார்கள். கடந்த சில மாதங்களாக சில பர்சனல் அனுபவங்களின் பேரில் சொல்கிறேன்.

மந்திரத்தில் மாங்காய் வரும் என்றால் நம்புகிறார்கள். எப்படியாவது பணம் வரும் வழியைக் காட்டுகிறேன் வா என்றால் கண்ணை மூடிக்கொண்டு போய் விழுகிறார்கள். இலவசம் கொடுத்தால், அது தேவையில்லையென்றாலும் போய் வாங்கிக் குப்பையில் கொட்டுகிறார்கள். திரையில் வரும் நாயகனை அப்படியே நம்பி மிக்ஸியை நெருப்பில் போடுகிறார்கள். செய்யும் வேலையில் ஒழுங்கு இருப்பதில்லை. வியாபாரம் செய்வோர் கஸ்டமரை ஏமாற்றாமல் இருப்பதில்லை.

ஒன்றுமே செய்யாமல் பணம் வர வேண்டும் என்கிறார்கள். தவறு செய்தால் அதை நியாயப்படுத்த குரூப் சேர்கிறார்கள். தன் மதம், தன் மொழி, தன் இனம் என கூட்டுச் சேர்ந்து எந்த அநியாயத்தையும் செய்யலாம் என்கிறார்கள். நியாயம் பேசுபவனை பைத்தியக்காரன் என்கிறார்கள். "ஏன்டா, ஒரு வேலையை சரியாகச் செய்யலாம்ல" என்றால் மூடிட்டுப் போடா என்கிறார்கள். இங்கே இதுதான் பெரும்பான்மை.

ஒரே பாடம் தான் - ஹன்ட்ரண்ட் அப்துல் கலாம்ஸ் வந்தாலும் இவர்களைத்திருத்த முடியாது. அவர்களை சுபாவத்தை வைத்து பணம் பண்ணுகிறான் பார்த்தீர்களா? அவன் தான் புத்திசாலி. பாவம் பார்த்து, பாடம் சொல்லி, திருத்த முயற்சித்தால் நாம் தான் மூக்குடைபடுவோம். யூடியூபில் கூடப் போய்ப் பாருங்கள். கிசுகிசுக்களும், மந்திரம், ஜோஸியம், எதைச் செய்தால் பணம் வரும் பதிவுகளும் இலட்சக்கணக்கான வ்யூஸ் தாண்டுகின்றன. நல்ல வீடியோக்கள் 1000 வ்யூஸ் தாண்டுவதில்லை.

டிஸ்கி - இது அனுபவங்களின் பேரில் விளைந்த "ரியாலிட்டி" பதிவு. "பாஸிடிவ்கள், உலகம் அழகானது" போன்றவர்கள் யூ டர்ன் போடவும். அந்த அனுபவங்கள் எனக்கும் உண்டு. அவற்றையெல்லாம் வேறு பதிவாகத் தனியாக எழுதுகிறேன்.

ஞாயிறு, 20 ஜனவரி, 2019

Fake முகமூடிகள்

"சிறு வியாபாரிகள் பாவம் ப்ரோ, அவங்க கிட்ட பொருள் வாங்குங்க ப்ரோ"
"டேய், எனக்குத் தேவையான பொருள் அவங்க கிட்ட இல்லடா"
"பராவல்ல ப்ரோ, அவங்க கிட்ட வாங்குங்க ப்ரோ"
"டேய், இல்லாத பொருளை எப்டிடா வாங்குறது?"
"அமேசான்லாம் கார்ப்பரேட் கம்பனி ப்ரோ"
"டேய், இருக்கலாம்டா, ஆனா அதுல விக்கறதும் வாங்கறதும் நம்மூர் வியாபாரிங்க தான்டா. சரி. நீ உன் ஃபோனை எதுல வாங்குன?"
"ஃப்ளிப்கார்ட் ப்ரோ, 2500 ரூபாய் ஆஃபர் ப்ரோ"
"அது மட்டும் கார்ப்பரேட் இல்லயடா?"
"சிறு வியாபாரியெல்லாம் பாவம் ப்ரோ"
"டேய் நான் கேட்டதுக்கு பதில்சொல்றா"
"புக் ஃபேர் போனீங்களா ப்ரோ?"
"இல்லடா. நீ போனியா?"
"போகணும் ப்ரோ. புக் விற்பனை குறைஞ்சு போச்சாம். பப்ளிஷர்ஸ்லாம் பாவம். இந்த அமேசானால தான் எல்லாம்"
"சரி, நீ போய் ஒரு 1000 ரூபாய்க்கு புக் வாங்கலாம்ல?"
"இல்ல ப்ரோ, மூணு இலவச பி.டி.எஃப் குரூப்ல இருக்கேன். அதுலயே எல்லாம் வந்துடும்"
"டேய், இலவச பி.டி.எஃப் இல்லீகல்டா"
"ப்ரோ, அதுதான் ப்ரோ கன்வீனியன்டா இருக்கு. இதனால எத்தனை நண்பர்கள் பயனடையுறாங்க தெரியுமா?"
"டேய், அது இல்லீகல்டா"
"ப்ரோ, எத்தனை பேருக்கு அது உபயோகமா இருக்கு தெரியுமா? இந்த அமேசான் தான்..."
"டேய் நாயே, அது இல்லீகல்டா"
"விவசாயிங்கல்லாம் பாவம் ப்ரோ, மழையே இல்ல. உங்க வாட்ஸ் அப், ஃபேஸ்புக் டி.பி மாத்தி ஆதரவு குடுங்க ப்ரோ"
"டேய், வாட்ஸ் அப் டி.பி க்கும் விவசாயிக்கும் என்னடா சம்பந்தம்?"
"விடுங்க ப்ரோ, விஸ்வாசம் பாத்தீங்களா? தல மீச வெறித்தனமா இல்ல?"
.................................... continues.............
.
முடியலய்யா. தனக்குன்னு ஒரு ரூல்ஸூ. தான் செஞ்சா கரெக்ட்டு. மத்தவன் லாம் பைத்தியக்காரன். இந்த வாட்ஸ் அப் ஃபார்வர்டை உண்மைன்னு நம்பி வாழ்ற ஒரு கூட்டம். "விவசாயி பாவம், சிறு வியாபாரி பாவம்" னு fake முகமூடிகள். ஆனா அந்த விவசாயிக்கோ, சிறு வியாபாரிக்கோ நீ என்ன செஞ்சேன்னு கேட்டா பதில் இல்ல.
இவனுகளை திருத்த முடியாது. சத்தியமா இன்னும் 50 வருஷத்துக்கு திருந்த மாட்டானுங்க. யோவ் சோசப்பு விஜய், முருகதாசு... நீங்க பண்றதுதான்யா கரெக்ட்டு. இவனுகளை உசுப்பேத்தி விட்டு நாம சம்பாரிச்சுட்டுப் போயிடணும்யா.

தமிழ்நாடு அரசின் "1100" டோல் ஃப்ரீ

ஃபேஸ்புக்கில் 2016 ஜனவரி 19 அன்று எழுதியது.

108 போல "1100 டோல் ஃப்ரீ" ஒரு நல்ல initiative, கட்சி பேதம் இன்றி பார்க்கையில்.
.
சில ஆசைகள்.
.
138 பேருடன் துவங்கப்பட்டுள்ள இந்த சேவை, நல்லபடியாகத் தொடர்ந்து நடக்க வேண்டும், தேர்தலை உத்தேசித்த சம்பிரதாயமாக முடிந்து விடக் கூடாது. தேவையான மாற்றங்களுடன், அப்டேட்டுகளுடன் சீராக இயங்க வேண்டும். கஸ்டமர் கேர் போல தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும், பிரெஞ்சுக்கு 47 ஐ அழுத்தவும், வேகமாக அழுத்தவும், மெதுவாக அழுத்தவும், மீண்டும் திரும்ப 9 ஐ அழுத்தவும் எனச் சுற்ற விடக் கூடாது. ஒரு நாளைக்கு 15000 கால்கள் ஏற்கப்படும் என்ற எண்ணிக்கை, அவற்றில் எத்தனைக்கு தீர்வுகள் கிடைக்கும் என்ற அளவில் போய் நிற்க வேண்டும். சும்மா கலாய்ப்பதற்காகவும், வம்பிழுப்பதற்காகவும் கஸ்டமர் கேருக்கு போன் செய்யும் விஷமக்காரர்கள் 1100 ஐயும் ஒரு கை பார்க்க வாய்ப்புண்டு. அவர்களையெல்லாம் செவுளில் அறையும் அளவுக்கு 1100 ஐ தொந்திரவு செய்வர்களை (த) கண்டிக்கும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
.
1100 எந்தெந்த விதமான குறைகளுக்காக பயன்படுத்தப் படலாம் என்ற தெளிவு மக்களுக்குத் தரப்பட வேண்டும். 100 ன்னா போலீஸ், 101 என்றால் ஃபயர் சர்வீஸ், 108 ன்னா ஆம்புலன்ஸ், 1098 ன்னா சைல்ட் கேர் என்பது போல 1100 ன்னா எதுக்கு என்ற குழப்பமற்ற தெளிவு அனைவருக்கும் அளிக்கப்பட வேண்டும். அல்லது எதிர்காலத்தில் அனைத்தும் ஒன்றாகி அமெரிக்காவின் 911 போல எல்லா சர்வீஸூக்கும் இந்த எண் என மக்கள் எளிதாக நினைவிலிறுத்தும் வகையில் ஏதேனும் ஒரு எண்ணாகச் சுருக்கப்பட வேண்டும். நிஜமான குறை தீர்ப்புகள் மக்களுக்குக் கிடைக்க வேண்டும். உங்கள் புகார் சம்பந்தப் பட்ட துறைக்கு அனுப்பப் பட்டது என்று சம்பிரதாயத்துக்கு முடங்கி, பின் வழக்கம் போல அரசு அலுவலகங்கள் போல மந்தமாக இயங்கக் கூடாது. அல்லது "1100 க்கு கம்ப்ளெயிண்ட் பண்ணியா, இரு உன்னை வச்சிக்கிறேன்" என சம்பந்தப் பட்ட அதிகாரி பொதுமக்களைப் பழி வாங்கும் அளவுக்கு ஆகக்கூடாது. பிரச்சினையான ஒரு விஷயம் என்றால் தகவல் தருபவரின் எண் ரகசியம் காக்கப் பட வேண்டும். ..... டும்.. டும்.. டும்.. டும்.. டும்.. டும்.. டும்.. ஆயிரம் டும்கள்.
.
108 போல் தழைத்து 911 போல் வேரூன்ற வாழ்த்துக்கள்.

ஜல்லிக்கட்டு - நடுநிலையா? ஒரு சார்பா?

ஃபேஸ்புக்கில் 2017 ஜனவரி 20 அன்று எழுதிய கட்டுரை.

பொதுவாகவே எந்த ஒரு விவாதம், போராட்டம் என்றாலும் அதற்கு இரண்டு பக்கங்கள் உண்டு. ஆனால் "ப்ளாக் அண்டு ஒயிட்" என்பதைத் தாண்டி "க்ரே" என்றொரு மூன்றாவது பக்கமும் அதற்கு உண்டு. அதுதான் நடுநிலை என்பது. இரண்டு புறமும் ப்ளஸ், மைனஸ், ப்ரோஸ் அன்டு கான்ஸ் இருக்கவே செய்யும். எனவே நடுநிலையில் உள்ளவர்கள் இரண்டையும் அலசி, அலசி, அலசி, லாஜிக்குளையும் பேசி, சென்டிமெண்டுகளையும் நினைத்து "நடுநிலையாளர்களாகவே" இருந்து விடுவது வழக்கம். அப்படி ஒரு நடுநிலையாளன் தான் நானும். நடக்கும் ஜல்லிக்கட்டுக்கான போராட்ட விஷயத்திலும் அப்படியே.

இந்தப் போராட்டத்தில் எத்தனையோ ஹிட்டன் அஜெண்டாக்கள் உண்டு. எத்தனையோ கேள்விகளும் உண்டு. பீட்டாவின் உண்மை நோக்கம் என்ன? மாடுகள் வதைதான் பிரச்சினையா? நாட்டு மாடுகள் ஒழிப்பா? பியூச்சர் பிஸினஸா? இந்தப் போராட்டத்தின் ஆரம்பப்புள்ளி என்ன? ஜெ இருந்திருந்தால் இப்படி நடக்க விட்டிருப்பாரா? காரணமற்ற ரயில் மறியல் எதற்கு? மத்திய அரசு தமிழகத்தைப் புறக்கணிக்கிறதா? ஓ.பி.எஸ் சுறுசுறுப்பாகக் களம் இறங்கியது எப்படி? ஒரு எழுத்தாளர் தன் விருதைத் திருப்பித் தரலாமா? த்ரிஷா வைத் இப்படித் திட்டலாமா? ஒரு காலத்தில் பீட்டாவை ஆதரித்த விஜய் அது வேற வாயி என்பது போல எதிர் அறிக்கை விடலாமா? போராட்டக் காரர்கள் சினிமாக்காரர்களைத் திட்டலாமா? இளைஞர்கள் டிராஃபிக்கை மறிக்கலாமா? போராட்டத்தில் மோசமான மொழியை இளைஞர்கள் உபயோகிக்கலாமா?

மருத்துவக் கவுன்சிலிங்கில் நடக்கும் அநியாயத்துக்கு இவர்கள் போராடினார்களா? 110 விவசாயிகள் சாகையில் யாரும் பேசாதது ஏன்? காவிரிக்காக ஏன் போராடவில்லை? ஃபேஸ்புக்கில் பந்தாவாகப் போட்டோ போடலாமா? பீட்டாவுக்கு ஸ்பெல்லிங் தெரியுமா? இதில் எங்கே பெப்ஸி, கோக் எதிர்ப்பு நுழைந்தது? அந்நிய நாட்டுப் பொருட்களை முற்றிலுமாகத் தவிர்த்து வாழ முடியுமா? போராட்டத்தில் அமர்ந்துள்ள குழந்தைக்கு என்ன புரியும்? இளைஞர்களின் எழுச்சிக்கு உண்மையிலேயே இனமானம் காரணமா? அல்லது "செல்ஃப் பிரைடு" காரணமா? தலைவன் இல்லாத போராட்டம் எதில் முடியும்? கூட்டத்தில் பொங்கிய போலீஸ்காரனுக்கு வேலை போகுமா? அவசரச் சட்டம் நிறைவேறுமா? அதுதான் வெற்றியா? நிறைவேறினாலும் உள்குத்து இருக்குமா? ஜல்லிக்கட்டு ஒன்னு நடந்துட்டா எல்லாம் சரியாயிடுமா?

என்றெல்லாம் தொடர்ந்து முளைக்கும் கேள்விகளுக்கு இடையில் "நீ எந்த சைடு?" என்றொரு கேள்வியும் சேர்ந்து கேட்கப் பட்டாலோ, "நடுநிலை" லாம் கிடையாது நீ ஏதேனும் ஒரு ஸ்டேண்ட் எடுத்தே ஆக வேண்டும் என்ற நிலை ஏற்பட்டாலோ, எத்தனையோ பதிலற்ற லாஜிக்கல் கேள்விகள் மனதில் இருந்தாலும், போராட்டக் காரர்களில் சில அபத்தமான செயல்கள் பிடிக்காவிட்டாலும், போராட்ட வடிவங்களில் சில கேவலமாக இருந்தாலும், ஒட்டு மொத்தமாகப் பார்க்கையில் "அதிகமாக அழுத்தப்பட்ட ஒன்று வெடித்தே தீரும்" என்ற பாஸ்கல் தியரியின் படி "பல்வேறு சந்தர்ப்பங்களில், தேவைகளில் போராட வாய்ப்பு மறுக்கப்பட்ட ஒரு சமூகம் வெடித்துச் சிதறுவதற்கான ஒரு வாய்ப்பாக இந்த ஜல்லிக்கட்டைத் தேர்ந்தெடுத்திருக்கிறது" என்ற ஒரு பதிலுடன் "ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு ஆதரவு" என்ற நிலையினை எடுக்கிறேன்.
.
.