புதன், 27 ஏப்ரல், 2011

அப்டேட்டட் தலைமுறை - குட்டிக் கதை

வீட்டுக்குள் நுழைந்து சாவியைச் சுண்டும் போதே ப்ளாக்பெர்ரி வீறிட்டது. ஜி.எம்.. நம்பர். எடுத்தேன். ஆனால் மறுமுனையில் பாஸ்...

"ஹலோ! சொல்லுங்க ஸார், யெஸ் ஸார்"

"......."

"நோ ப்ராப்ளம் ஸார், கைல நெட் கனெக்ட் இருக்கு. ஒன் அவர் டைம் குடுங்க. ப்ரசன்டேஷனை முடிச்சு லெவன் பிப்டீனுக்குள்ள மெயில் பண்ணிடறேன்."

பேசி முடித்து போனை அமர்த்தும்போதே அயர்ச்சியாக இருந்தது. அசந்திருந்த உடல், என்னைக்கொஞ்சம் இளைப்பாற விடேன் என்றது. மினுவைப்பார்த்தேன், கொஞ்சமாவது அவளுக்கு ஹெல்ப் செய்யலாம். அவளும் பாவம்தானே.

அயர்ன் செய்தபடியே திரும்பி எனைப்பார்த்த மினுவின் பார்வையில் இருந்தது அனுதாபமா, ஆத்திரமா, ஆதூரமா என அவதானிக்க முடியவில்லை.

"என்னாச்சு?" என்றாள் ஒற்றை வார்த்தையில்.

"போர்டு மீட்டிங்மா"

"அதுக்கு?"

"ஒரு ப்ரசன்டேஷன், எல்லா டேட்டாவையும் கலெக்ட் பண்றதுக்கு லேட்டாயிடுச்சு, அதான்... நாளைக்கும் கொஞ்சம் சீக்கிரம் போகணும்"

போர்டு மீட்டிங்குக்கும் டிரெய்னிங் டிபார்ட்மெண்டுக்கும் என்ன சம்பந்தம் என்று எனக்குப் புரியவே இல்லை. நல்ல வேளை நாளைய மீட்டிங்குக்கு சீக்கிரம் போய்த்தொலைய வேண்டுமென்பதால் சீக்கிரம் விட்டு விட்டான்கள். அதனால் பத்து மணிக்கே வீட்டுக்கு வந்தாயிற்று.

"எனக்கும் காலைல சீக்கிரம் போகணும். பேங்களூர். காலைல 6.15க்கு ஃப்ளைட்"

"எத்தனை மணிக்குக் கிளம்பணும்? கார் வேணுமா?"

"வேணாம், நீங்க வர லேட்டானதுனால கேப் சொல்லிட்டேன், அஞ்சேகாலுக்கு வந்துடும். திங்க்ஸ் எல்லாம் கூட பேக் பண்ணிட்டேன்."

எங்கள் பேச்சினால் கவனம் கலைந்து என்னைப்பார்த்து ரிமோட்டோடு கையாட்டினாள் அபி. என் செல்லம்.

"டாடி, நைட்டு லெவன் தர்ட்டிக்கு சோனி பிக்ஸ்ல "கில் பில்" போடறான், நான் முழிச்சிருந்து பாக்கப் போறேன், வில் யூ ஜாயின் மீ?"

மையமாகத் தலையாட்டி வைத்தேன்.

சரளமான ஆங்கிலப் பிரயோகமும், படிப்புச் சூழ்நிலை தந்த தைரியமும், நவீன ஜங்க்-ஃபுட் உணவுக் கலோரிகள் தந்த வாளிப்பும் எட்டு வயதை பதிமூன்றாகக் காட்டியது.

லேப்டாப்பைப் பார்த்ததும் "பேரண்ட்ஸ் மீட்டிங் வராததுக்கு ஸாரி சொல்லி மறக்காம மிஸ்ஸூக்கு ஒரு மெயில் போட்டிடு டாடி" என்றாள்.

டெக்னாலஜியுடன் வளரும் அப்டேட்டட் தலைமுறை. எல்லாம் தெரிகின்றது இவர்களுக்கு. தீனி போடத்தான் நம்மால் முடியுமா?

மினு "ரவி பத்திரிகை வைக்க வந்திருந்தார். ஆகஸ்ட் 24ம் தேதி அவருக்குக் கல்யாணமாம். அவரு கிளம்பும் போதுதான் நான் வந்தேன். அவருக்கு நம்ம அபியைப்பார்த்து பெருமை தாங்கலை" என்றாள்.

அவனுக்கு அபியை ரொம்பப் பிடிக்கும். கல்லூரியில் ஆங்கிலத்துறை ஹெச்.ஓ.டியாய் இருந்தாலும் என்னை விட சூப்பரா இங்கிலீஷ் பேசுறாடா என்பான்.

"கொஞ்ச நேரம் பழைய கதையெல்லாம் பேசிட்டுப் போனார். உங்களுக்காக வெயிட் பண்ணிப்பார்த்தார். ஆனா பத்து மணிக்கு சேலம் பஸ்ஸாம், அதான் சாப்பிட்டுட்டு கிளம்பிட்டார்"

சேலம் என்றதும் பழைய நினைவுகள் கிளம்பின. ரவியும் நானும் ஸ்கூல் பருவ நண்பர்கள்., காலேஜ் வயதிலேயே அவனுக்கு தலை சொட்டையாகி முடி கொட்டி விட்டதால் பெண் கிடைப்பது தள்ளிப் போனபடியே இருந்தது. ஒரு வழியாய் 34 வயதில் இப்போதுதான் சொந்தத்திலேயே அமைந்திருக்கிறது.

பழைய நண்பர்களைச் சந்திக்கையில் தான் எத்தனையோ நினைவுகள் அலைமோதும்.. ப்ரசன்டேஷன் செய்து கொண்டிருக்கும் போதே கொசுவத்தி சுற்றத்துவங்கியது. சிறு வயது நினைவுகள்.. அப்போதெல்லாம் வீட்டிற்குள் அப்பா வரும்போது எல்லோரும் அடங்கிப் போய் அமர்ந்திருப்போம், அவர் இருக்கும் போது யாரும் பேசியதே இல்லை.

நானும் ரவியும் சின்ன வயதில் சேர்ந்து செய்த அட்டகாசங்கள் அதிகம். செம்பருத்தி பூ, தோட்டம், நாய் துரத்தல்கள், எதிர் கேங்குடன் காவேரி மணலில் சண்டை, சப்பரம், பாதாம் கொட்டை, குரங்கு பெடல், காலரா ஊசி, பதினைஞ்சு பைசா பால் ஐஸ், பாட்டியின் துணி மரப்பெட்டி என எங்கள் அட்டகாசங்களுக்கு சோர்ஸ் கொடுத்த விஷயங்கள் எத்தனையெத்தனை?

"அபி... நாளைக்கு மம்மி, டாடி ரெண்டு பேருமே இருக்க மாட்டோம், யூ வில் ஹேவ் டு ப்ரிபேர் யுவர்செல்ஃப் பார் ஸ்கூல், கோ டு பெட் நெள"

"டூ மினிட்ஸ் மம்மி.."

அபியைத் தூங்க அழைத்துக் கொண்டிருந்த மினுவின் பேச்சினால் என் கவனம் கலைந்தது. இருவரையும் கவனித்தேன்.

பீன் பேக்கில் சாய்ந்து கொண்டு கெலாக்ஸ் சாப்பிட்டபடியே வாரான் வாரான் பூச்சாண்டியும், கில் பில்லும், பாய்ஸ் வெர்சஸ் கேர்ள்ஸூம் ரிமோட்டால் மாற்றி மாற்றிப் பார்த்துக் கொண்டிருந்த அபி கேட்டாள்.

"மம்மி ஒரு டவுட்"

"என்ன?"

"ரைஸ் எங்கருந்து வருது மம்மி?"

-------------------
--------------------
படிச்சாச்சா.........?

அப்புறம்... இன்ட்லி லோகோ இருக்கா பக்கத்துல....?

தமிழ்மணம் லோகோ இருக்கா மேல....?

புடிச்சிருந்தா ஓட்டுப்போடுங்க...

புடிக்கலன்னாலும் ஓட்டுப்போடுங்க...
--------------------

ஞாயிறு, 24 ஏப்ரல், 2011

த்ரீ இடியட்ஸ் – தமிழ் "நண்பன்" – யார் இடியட்ஸ்? சில கேள்விகள், சில ஐடியாக்கள்..

த்ரீ இடியட்ஸ் படம் பார்த்தேன், இது நாலாவது முறை.. எத்தனை முறை பார்த்தாலும் அலுக்காத படம்.. நாவலையும் ஒருமுறை படித்தாயிற்று. முழுக்க முழுக்க நாவலை படமாக்கவில்லை என்றாலும் படத்தின் அடிநாதமாக ஓடும் கதை சேதன் பகத்தின் "ஃபை பாயிண்ட் சம் ஓன்" ஐத் தழுவியதே.. த்ரீ இடியட்ஸ் கூடவே ஹிந்தி கஜினியும் பார்த்தவர்கள் கண்டிப்பாக ஆமிருக்கு ரசிகர்கள் ஆவது உறுதி.. அப்படி ஆகவில்லை என்றால் தாரே ஸமீன் பர்-ஐயும் பார்க்கவும். மூன்றுமே மொழி அறிவு தேவைப்படாத படங்கள்..

த்ரீ இடியட்ஸ் படம் - ராஜூ ரஸ்தோகி (ஷர்மான் ஜோஷி - ஜீவா), ரான்ச்சோட் தாஸ் ஷ்யாமல்தாஸ் சான்ச்சட் (எ) ரான்ச்சோ (எ) ஃபுன்ஸூக் வாங்க்டு (ஆமிர் கான் - டாக்டர் விஜய்), பியா (கரீனா கபூர் - இலியானா குரூஸ்), சதுர் ராமலிங்கம் (ஓமி வைத்யா -எஸ்.ஜே.சூர்யா), ஃபர்ஹான் குரேஷி (மாதவன் - ஸ்ரீகாந்த்), வீரு ஷகஸ்த்ரபுத்தே (எ) வைரஸ் (போமன் இரானி - சத்யராஜ்) ஆகியோரை சுற்றிச் சுழழும் கதை.








தமிழில் செய்வது என்று பேச்சு வந்த போதே மாதவன் கேரக்டருக்கு முதலில் மாதவனே கேட்கப்பட்டு மறுத்து விட்டார்.. அதன் பின் ஸ்ரீகாந்த் என முடிவாகியதாம்.. ஹீரோவாக டாகுடரு விஜய், பின் சூர்யா, ஆனால் சூர்யா ஏழாம் அறிவில் பிஸியான பிறகு மறுபடி டாகுடரு விஜய். அதன் பிறகே மற்றவர்கள் முடிவாகியிருக்கிறார்கள்.. ஆனால் அந்த அயர்ன் மேன், ஸாரி, அயர்ன் பாய் கேரக்டருக்கு யாரு பாஸ்?? பார்க்கலாம்..

ஹிந்திப்படத்தில் பல இடங்களில் தமிழனை நக்கலடித்திருக்கிறார்கள். சரி விடுங்கள். நாம்தான் நம் படங்களில் எல்லா ஹிந்திக்காரர்களையும், குறிப்பாக சேட்டுகளை கள்ளக்கடத்தல் ஆட்களாகவே காட்டுகிறோமே... (தீவிரவாதிகள் என்றால் முஸ்லிம்கள்). தானிக்கும், தீனிக்கும் சரியாப்போச்சு (தெலுங்குப் பழமொழிங்கோவ்)

"தமிழ் நண்பனை" டாகுடர் விஜய் அவர்கள் மறுத்திருப்பது சத்தியமாக ஸ்கிரிப்டுக்கு நல்லது. ஜீவா நல்ல சாய்ஸ். ஹீரோ கேரக்டருக்கு சூர்யா மிகப்பொருத்தமே.. என்றெல்லாம் எழுத நினைத்தேன்.. ஆனால் விதி வலியது.. ஹீரோ நம்ம டாக்டர் விஜய் தான் என்றான பிறகு ஒன்றும் செய்யமுடியாது.. படப்பிடிப்பும் துவங்கி பாதி முடிந்தே விட்டதாம்.. படத்தில் ஃபைட்டே கிடையாது. பாவம் விஜய்..

படத்தை பார்த்த பிறகு என்னிடம் சில கேள்விகள் மற்றும் சில சஜஷன்ஸ்.. அதாகப்பட்டது சில கருத்துக்கள் என் சிற்றறிவுக்கு எட்டிய வரை..

ரீமேக் படங்களில் பலரும் மிஸ் செய்யும் விஷயம் நேட்டிவிட்டி. அந்தப்படத்தில் என்ன இருக்கிறதோ அதை அப்படியே ஈயடிச்சான் காப்பி அடிப்பது.. நம்மூருக்கு பொருந்துமா என்று பார்ப்பதில்லை.. (உதா- யோகி படத்தில் லுங்கி கட்டிய ஹீரோயின்..) முழுப்படம் என்றால் சமீபமாக ராவணன் பக்கா உதாரணம்.. ஆனால் எனக்கென்னவோ ராவணனில் தவிர்க்க முடியாமல் தெரிந்தே அந்தத் தவறை செய்திருக்கிறார் என்று தான் தோன்றியது. கோடிகளைக்கொட்டி உருவாக்கிய செட்டுகளை தமிழுக்காக மாற்றித்திருத்திப்போட முடியாது என்று.. ஆகவே.... ஹிந்தி ராவண்-ல் செட்டாகியிருந்த நேட்டிவிட்டி தமிழில் டப்பிங் படம் பார்க்கும் உணர்வைத் தான் தந்தது.

சமீப வருடங்களாக என்.ஆர்.ஐ-களையும் உலக விருதுகளையும் குறி வைக்கும் மணிரத்னம் நேட்டிவிட்டியை, அதாவது தமிழ் நேட்டிவிட்டியை விட்டு முழுக்க விலகிவிட்டார். ஆனால் சும்மா சொல்லக்கூடாது. அவர் எங்கே தான் கற்றுக்கொண்டாரோ? அவரது ஹிந்தி நேட்டிவிட்டி பக்கா.. குரு படம் ஒன்றே போதும்.. அந்த ஊர் கலாச்சாரம், மக்கள் ஆகிவற்றை டிட்டோவாக நேட்டிவிட்டியுடன் காண்பித்திருந்தார். அதிலும் அபி-ஐஸ் கல்யாணக்காட்சியில் தண்ணீர் அலைகளை தடவியபடி எழுந்து, மெள்ள படிகளில் ஏறி, கல்யாண மேடையின் பூ அலங்கார செட்டின் மேலே தவழ்ந்து, டாப் ஆங்கிளில் அபியையும் ஐஸையும் காட்டும் ஜிம்மி ஜிப் காட்சி - அடடா, அட்டகாசம். இதற்காகவே இன்னோரு முறை மனமுவந்து அவர்கள் கல்யாணம் செய்து கொண்டிருப்பார்கள்.

சேது-வின் தெலுகு ரீமேக்கில் டாக்டர் ராஜசேகர் ஹீரோ.. காலேஜ் ஹீரோ கேரக்டருக்கு ஆள் கொஞ்சம் பார்க்க முத்தலாக இருப்பதால் ஹீரோ சில வருடங்கள் ஜெயிலில் இருந்துவிட்டு வந்தது போல லேசாக மாற்றியிருந்தார்கள். அதே போல் தெலுகு "ஆடவாரி மாடலுகு அர்த்தாலே வேறுலே" வில் வெங்கடேஷ் பத்து வருடம் வேலையில்லாதவராக வருவார்.. அதை தமிழ் "யாரடி நீ மோகினி"-யில் தனுஷ் சைஸூக்கு ஐந்து வருடமாக மாற்றியிருந்தார்கள்.

ஆகவே... இதோ டைரக்ட் (டைரக்டருக்கு என்) கேள்விகள்

ஹீரோவின் "ரான்ச்சோட் தாஸ் ஷ்யாமல்தாஸ் சான்ச்சட்"... "ஃபுன்சுக் வாங்க்டு", இவ்வளவு அழகான பெயர்களுக்கு தமிழில் மாற்று என்ன?

சதுர் ராமலிங்கம்.. உகாண்டாவில் பிறந்து வளர்ந்து, பாண்டிச்சேரியில் படித்த கேரக்டர்.. ஹிந்திப்படத்தில் தமிழன்.. அந்த கேரக்டர் தமிழில் எந்த ஊராக இருக்கும்?

படத்திலேயே பட்டையைக்கிளப்பும் ஸ்டேஜ் ஷோ-வின் "சமத்கார்", "பலாத்கார்" ஜோக்குகளை எப்படி தமிழாக்கப் போகிறார்கள்?

ஷங்கர் த்ரீ இடியட்ஸின் உயிர்நாடியான கிளைமாக்ஸ் பிரசவக்காட்சியை ஆல்ரெடி எந்திரனில் டுமீல் செய்து வைத்து விட்டார். இந்தப்படத்திற்கு அந்தக்காட்சியை என்ன செய்யப்போகிறார்? திரும்பவும் வந்தால் காப்பி அல்லது ரிபீட்டு போலத் தோன்றுமே..

கொஸ்டின் பேப்பர் திருட்டு கிட்டத்தட்ட சில திருத்தங்களுடன் வசூல் ராஜா எம்.பி.பி.எஸ் படத்தில் ஏற்கனவே வந்து விட்டது.. ஸோ.....?

கிளைமாக்ஸ் லிப் டு லிப் கிஸ்ஸிங் காட்சி என்ன ஆகும்? தமிழ் படம் என்பதால் தூக்கி விடுவார்களா? அல்லது குஷி படத்தில் வந்து விட்டதே, அப்புறம் என்ன இருக்கட்டும் என்று வைத்துக்கொள்வார்களா? (ஆனால் அந்தக் காட்சி கண்டிப்பாக இருக்க வேண்டும். ஆமிர் தன் கனவை இரண்டு மூன்று முறை விவரிக்கும் போது கிளைமாக்ஸ் பொருத்தமாக இருக்கும்..)

ராகிங் காட்சிகள் உட்பட பல சீன்களில் ஜட்டியோடு ஹீரோக்கள் நடிப்பார்களா? சூர்யா செய்வார்.. ஜீவா கூட கன்வின்ஸ் ஆவார்.. டாகுடரு விஜய்?

ராஜூ வீட்டில் சப்பாத்தி சுட்டபடியே சோகமான அட்வைஸ் செய்யும் காட்சி இருக்கிறதே... சப்பாத்தி அவர்களது தேசிய உணவு.. அந்த பூரிக்கட்டை காமெடி??? நம்மூரில் இட்லியும், சாம்பார் சாதமும் வழக்கம்.. அந்தக் காட்சியை இட்லி சுடப்படுவது போல மாற்றுவார்களா?

வடக்கத்தி கல்யாணங்களில் மாப்பிள்ளை முகம் மூடி அமர்ந்திருப்பதே வழக்கம். இங்கே நம்ம ஊர் கல்யாணங்களில் அந்த வழக்கம் கிடையாது.. அந்த சீனில் கரீனாவை கூட்டிக்கொண்டு ஓடும் போது போமன் இரானி ஷாக்காகி பீப்பியை கையால் பொத்துவதும் ஒரு அசத்தலான பஞ்ச்.. காமெடி, சீன் க்ளோஸ், ஷாக் எல்லாவற்றையும் அந்த ஒரு பீப்பி ஷாட் உணர்த்தி விடும். ஆனால் அந்த மாதிரி பீப்பி நம்ம ஊர் கல்யாணத்தில் கிடையாது. இங்கே நாதஸ்வரம் தான்.. ஸோ.. என்ன செய்யப்போகிறார்கள்?

த்ரீ இடியட்ஸில் பத்து வருட ஃப்ளாஷ்பேக் இடைவெளி கொஞ்சம் அதிகம்.. பத்து வருடம் கழித்தும் அத்தனை பேரும் இளமையாகவே இருப்பது, பத்து வருடம் கழித்து தான் ஹீரோயின் திருமணம் செய்து கொள்கிறாள் (அதுவும் அதே மாப்பிள்ளையை) என்பதெல்லாம் லாஜிக்கை இடிக்கின்றன... அதையெல்லாம் கொஞ்சம் கவனித்து மாற்றுவார்களா?? அல்லது அந்த ஈயைப்புடிடா, அடிடா, அதே இடத்துல காப்பி அடிச்சு ஒட்டுடா-வா?

அதே போல் படத்திற்கு என்னுடைய சில கருத்துக்கள் (சஜஷன்ஸ்)

புரஃபசர் ரோலுக்கு ஷங்கரின் முதல் சாய்ஸ் பிரகாஷ் ராஜாகத்தான் இருந்திருக்கும். ஆனால் படத்தை வழக்கத்தை விட சீக்கிரமாக முடிக்க வேண்டும் என்று சத்யராஜை போட்டிருப்பார் என்று நினைக்கிறேன். அவரும் நல்ல சாய்ஸ் தான்.. பெரியார், ஒன்பது ரூபாய் நோட்டு படங்களுக்குப்பிறகு நல்ல ஒரு நடிகரை பார்க்க முடிகிறது. ஆனால் கோபம் வந்தால் பல்லைக்கடித்து பேசும் டயலாக் டெலிவரி இதிலும் இருந்தால் ரொம்பக் கஷ்டம்.

ஜீவாவின் அந்த நோயாளி நோஞ்சான் அப்பா கேரக்டருக்கு என் சாய்ஸ் மனோபாலா (கனவுக்காட்சியில் ஸ்கூட்டி ஓட்டும் போது கலக்கலாக இருக்கும்). அப்புறம் ஷங்கர் சார்... அந்த அழுகாச்சி அம்மாவுக்கு கூத்துப்பட்டறை கலைராணி, தயவு செய்து வேண்டாம்... ஓவர் டிராமாவாக இருக்கும். அதற்கு பதில் "நான் மகான் அல்ல" கார்த்தியின் அம்மாவாக வருவாரே....... "யுத்தம் செய்" லக்ஷ்மி.. அவர் பொருத்தமாக இருப்பார்.

இலியானவை கல்யாணம் செய்யும் பணக்கார வாலிபன் கேரக்டருக்கு கோலங்கள் அபியின் வில்லன் பொருத்தமாக இருக்கலாம். யாரை போட்டிருப்பார்கள்...?

இசை ஹாரிஸ் ஜெயராஜ் இருந்தால் நல்லது... ஏன் ஏ.ஆர்.ரஹ்மான் வேண்டாம்? தேவையில்லாத ரிச்னஸைக்கொடுக்கும். தலைவர் டியூனெல்லாம் உலகத்தரத்துக்கு இருக்கும்.. வைரவாலிமுத்துக்குமாரவிஜய்களின் வரிகள் சேர்த்து படத்திற்கு தேவையில்லாத பாடல்காட்சிகள் செருகப்படும். (இந்தக்கட்டுரை மூன்று மாதங்களுக்கு முன்பு எழுதியது, படம் அறிவிப்பு வந்த போதே. அப்போது அவர்கள் இதையெல்லாம் முடிவு செய்திருக்கவில்லை)

ஷங்கர்ஜி இன்னொன்று... ப்ளீஸ்.. ப்ளீஸ்.. ப்ளீஸ்.. தயவு செய்து கும்பலோ கும்பல் டான்ஸெல்லாம் மட்டும் வேண்டாம்.. வரிசையாக நின்று கொண்டு, ஒரே கலர் டிரஸ்ஸில்.. முடியல..

இவர்கள் நால்வருக்குள் பிரச்சினையும், வெறுப்பும் சவாலும் வரக்காரணமான அந்த பிளாஷ்பேக் வாட்டர் டேங்க் பேச்சுக் காட்சி உயிரோட்டத்துடன் தமிழுக்கேற்றவாறு மாற்றப்படுமா?..

கிளைமாக்ஸ் பிரசவக்காட்சியில் ஹீரோ குரூப், தேவையான உபகரணங்களைச் செய்கிறார்கள்.. அவற்றைச் செய்வதற்கான நேரம் குறைந்து அரை மணிநேரம் ஆகும். அந்த நேரத்தில் கர்ப்பிணிப்பெண் மயங்கியோ அல்லது வேறேதேனும் ஆபத்தாகி விடாதா? அல்லது அந்த நேரத்தில் கரீனாவே (இலியானாவே) ஆஸ்பத்திரியில் இருந்து கிளம்பி வந்து விடலாமே... அதைக்கொஞ்சம் லாஜிக்கலாக மாற்றலாம்..

அதே போல் குழந்தை பிறந்ததும் குழந்தையின் முதுகில் தேய்ப்பதற்குப் பதிலாக, குழந்தையின் கால்களைப்பிடித்து தலைகீழாக தொங்கவிட்டு (கிராமத்துப்பாட்டி வைத்திய பிரசவ முறைப்படி) முதுகில் தட்டுவது போல் காட்சியை வைக்கலாம். (ஆனால் அந்தக் காட்சி ஒரு விஜயகாந்த் படத்தில் வந்து விட்டது. பாதகமில்லை. ஒரு ஷாட் தானே, சுட்டுக்கொள்ளலாம்)

அந்த பிரசவக் காட்சியில் கர்ப்பிணியைத்தவிர வேறு பெண் கிடையாது. மேற்கண்ட ஐடியாவைச்சொல்வதற்காக ஒரு கிழவியைக் காட்சியில் நுழைத்து வைக்கலாம். கொஞ்சம் லாஜிக் கிடைக்கும். (தேனி குஞ்சாரம்மா பெஸ்ட் சாய்ஸ்.. கிடைக்காத பட்சத்தில் வடிவேலு ஜோக்குகளில் அவரைக்கலாய்க்குமே ஒரு கிழவி அது ஓக்கே)..

ஏழை வீட்டு இளைஞன் என்பதால் ஜீவாவுக்கு ஈ படத்தில் வந்தது போல கொஞ்சமாக பல் கறை சேர்க்கலாம்..

கமர்ஷியல் வேல்யூவுக்காக விஜய் தவிர மற்ற இருவருக்கும் ஹீரோயின் சேர்க்காமல் இருக்க வேண்டும்..

மேற்கண்ட ஐடியாக்கள் எல்லாம் முழுக்க முழுக்க நானே சிந்திச்சது.. மண்டபத்துல நாகேஷ் சிவாஜிகிட்ட வாங்கின மாதிரி வாங்கினது இல்லை.. இந்த திருத்தங்கள் படத்தில் உபயோகப்படுத்தப்பட்டால் நான் ரொம்ப ரொம்ப ரொம்ப சந்தோஷப்படுவேன். காப்பிரைட்டெல்லாம் கிடையாது.. என்னிடம் கேட்காமலே படத்தில் உபயோகப்படுத்திக் கொள்ளலாம்... இதைப்படிக்கும் யாரேனும் பிரபல பதிவர் அல்லது யாரேனும் அஜிஸ்டென்ட் டைரக்டர் ஒரு பிரிண்ட் அவுட் எடுத்துப்போய் யூனிட்டில் தருமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்..

அப்புறம் இன்னொன்று.. இந்தப்படம் மட்டும் சொதப்பாமல் சொன்னபடி ஹிந்தி ஒரிஜினல் போலவே வெளிவந்து விட்டால் தளபதி விஜய்க்கு காவலனில் கிடைத்திருக்கும் ஸாஃப்ட் பாய் இமேஜ் கொஞ்சம் ஏறுவது உறுதி.. இப்படத்தின் கிளைமாக்ஸ் பிரசவக் காட்சியால்...... (தல... எங்கய்யா இருக்கீங்க? மங்காத்தா, பில்லா 2.. எல்லாம் அறிவிப்போட நிக்குதே.. எப்போ தான் வருவீங்க?)

--------------------
படிச்சாச்சா.........?

அப்புறம்... இன்ட்லி லோகோ இருக்கா பக்கத்துல....?

தமிழ்மணம் லோகோ இருக்கா மேல....?

புடிச்சிருந்தா ஓட்டுப்போடுங்க...

புடிக்கலன்னாலும் ஓட்டுப்போடுங்க...
--------------------

சனி, 23 ஏப்ரல், 2011

தங்கம்.. தங்கம்.. தங்கம் வாங்கலியோ தங்கம்.. இல்லாட்டி வெள்ளி...?

டி.வியில வர்ற ஜோஸ் ஆலுக்காஸ் விளம்பரம் பாத்தீங்களா? ஆக்சுவலி நெம்ப நாளாவே அது ஜோஸ் ஆலுக்காஸூக்கு விளம்பரமா? இல்ல விஜய்க்கு விளம்பரமான்னு எனக்கு ஒரு டவுட்டு.. (எங்க ஊர்ல எங்க வீட்டுகிட்டயே ஒரு பிராஞ்சு வந்திருக்கே....எவ்ளோ பெருசு.. யப்பாடி... அதுக்கு எதிர்ல ஒரு இட்லிகடை இருக்கு, நமக்கு நைட்டு டிபன் அங்கதான். மூணு இட்டிலி பத்து ரூவா? விலையெல்லாம் ஏறிப்போச்சு). சொந்தம்ங்கறது தங்கம் மாதிரி.. எவ்வளவு இருக்கோ அவ்வளவு சந்தோசம்... சரிதான் சாமி... உங்களுக்கு ஓக்கே.. எங்க நிலைமை? நீங்க ஒரு படத்துல (ஏன் ஒரு விளம்பரத்துல) சம்பாதிக்கிற காசை நாங்க பார்க்க எத்தனை வருசமாகும்..?

ஒரு படத்துக்கு (எவ்வளவு வாங்குறீங்கன்னு தெளிவா தெரியலை, ஆனா) நாலு கோடி ரூபாய்ன்னு வச்சா கூட, மாசம் பத்தாயிரம் ரூவா சம்பளம் வாங்குற ஒருத்தன் அந்த நாலு கோடியை பார்க்க மொத்தமா எத்தனை வருசம் ஆகும்? (கால்குலேட்டர் எடுத்து கணக்கு போட்டுப்பாருங்கப்பா) ம்ம்ம்..... 333 வருசம் ஆகும்.. யம்மாடியோவ்.. அப்புறம் வருசத்துக்கு எட்டு பர்சன்ட் பேங்க் வட்டி கணக்குப்போட்டா எவ்ளோ வரும்? இது ஒரு பட கணக்கு.. வருசத்துக்கு ரெண்டு மூணு படம் நடிக்கிறீங்க.. ஒரு நாலஞ்சு வருசம் பீக்ல இருக்கீங்கன்னு வச்சா கூட நல்லா தேறும் போல இருக்கு.. ம்.. சொக்கா.. எனக்கில்ல.. எனக்கில்ல.. (டிவிடி வாங்கி படம் பாத்தா மட்டும் தப்புங்கிறாய்ங்க)

ஓக்கே.. ஓக்கே.. சீரியஸ்..

நான்கு மாதங்களுக்கு முன்பு என் டீம் பையன் ஒருவருக்கு ஒரு அரை பவுன் கோல்டு காயின் வாங்க ஐடியா கொடுத்து காயினும் வாங்கிக்கொடுத்தேன் (அவர் காசில் தான்).. 7350 ரூபாய். ரொம்பநாள் கழித்து போன வாரம் மற்றொரு அரை பவுன் கோல்டு காயின் வாங்கினார் அதே ஆள்... எவ்ளோ தெரியுமா? (22 காரட் தான் என்பதை நிரூபிக்கும் ஹால்மார்க் லோகோ அச்சடிக்கத் தேவையான நூறு ரூபாயையும் சேர்த்து) 8085 ரூபாய்.. எவ்வளவு விலை ஏறியிருக்கிறது பாருங்கள்... இன்றைக்கு ஒரு கிராம் சுமார் 2020 ரூபாய்.. மக்களே... இது வெறும் காயினுக்கான விலை மட்டுமே.. இதையே நீங்கள் நகையாக செய்வதாக இருந்தால் ஒரு கிராமுக்கு சுமார் 250 முதல் 300 ரூபாய் செய்கூலியாம் (டிசைனை பொறுத்து). ஆக ஒவ்வொரு பவுனுக்கும் சுமார் 2400 ரூபாய் வரை சேர்த்துக்கொள்ளுங்கள். அது போக சேதாரம் தனி..

ஆக ஒரு சாமானியன் தன் வீட்டுப் பெண்ணுக்கு ஒரு பத்து பவுனாவது போட்டு நல்ல இடமாக பார்த்து கல்யாணம் செய்து வைக்கலாம் என்று ஆசைப்பட்டால் (கல்யாண செலவுகளையும் சேர்த்து) குறைந்தது மூன்று இலட்சம் ரூபாயாவது ஆகும்.. முடியுமா? ஏற்கனவே வீட்டில் பழைய நகைகளாக இருந்தால் உருக்கி புதிதாக செய்து கொள்ளலாம். ஆனால் இல்லாதவன் என்ன செய்வான்?

தற்போது பஸ்ஸில் போகும் போதெல்லாம் கவனிக்கிறேன் புறநகர் மற்றும் கிராமப்புறப் பெண்களை. காதில் எண்ணெய் ஏறிய பழைய ஒரு ஜோடி கம்மல் தவிர எவரிடமும் தங்க நகைக்கான அறிகுறியே இல்லை. கழுத்திலிருப்பது அப்பட்டமான கவரிங்.. கைகளில் கலர் கலராய் பிளாஸ்டிக் அல்லது கண்ணாடி வளையல்கள். இதில் எப்படி கல்யாணத்திற்கு தங்கம் சேர்க்கிறார்களோ? (சமீபத்தில் கூட தெரிந்தவர் வீட்டுக் திருமணம் ஒன்று.. பத்து என்று ஆரம்பித்த பட்ஜெட் இந்தப் பிரச்சனைகளால் கொஞ்சம் கொஞ்சமாக ஏறி பனிரெண்டரை, பதிமூன்று என ஆகி விட்டதாக சொன்னார்கள்..)

அவ்வளவு ஏன்? 2007 மே-ல் பப்பி நிச்சயதார்த்தத்தின் போது ஒரு பவுன் 8000 ரூபாய்.. மூன்றே மாதத்தில் கல்யாணத்தின் போது ஜூலை மாதம் அதே ஒரு பவுன் விலை 10000 ரூபாய்... 25 பர்சன்ட் எகிறி விட்டது. கல்யாண செலவு என்னவாகியிருக்கும் என்று யோசித்துப்பாருங்கள்.. கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருந்தது. எதிர்பார்க்கவில்லை.. ஆனால் பரவாயில்லை. எங்கோ எப்படியோ உருட்டி புரட்டி ஒருவாறு சமாளித்தாயிற்று.. இப்போது அதே தங்கத்தின் விலை ஒரு பவுன் 16000 ரூபாய். வாங்கி வைக்கலாம் என்று நினைத்தால் கூட முடியாது.. யோசித்துப்பாருங்கள். மூன்றரை வருடத்தில் நூறு சதவீதம். அதாவது ஒரு இலட்ச ரூபாய்க்கு தங்கம் வாங்கியிருந்தால் அது இப்போது இரண்டு இலட்ச ரூபாய்.. வேறெந்தப் பொருள் இவ்வளவு விலையேறுகிறது? (ரியல் எஸ்டேட். ஆனால் அதற்கு இலட்சங்களில் பணம் தேவை - சாமானியர்களால் முடியாது)

2006 துவக்கத்தில் ராசிபுரத்தில் வேலையில் இருக்கும் போது, என்னோடு வேலை செய்த டீச்சரிடம், மாதா மாதம் ஒரு கிராம் தங்கம் வாங்கி வையுங்கள், உங்கள் பெண் ஆறாம் வகுப்பு படிக்கிறாள் அல்லவா? உபயோகப்படும் என்றேன். எங்க சார்? வாங்குற 3000 ரூபாய் சம்பளத்துல 750 ரூபாய் (அப்போதைய ஒரு கிராம் விலை) தங்கம் வாங்கிட்டா எப்படி? கொஞ்சம் விலை குறையட்டும் என்றார்.. சரி என்று விட்டு விட்டேன். எனக்கும் ஒரு புத்தி கெட்ட மனுஷன் கிராம் 450 ரூபாய் இருக்கும் போது அட்வைஸ் செய்தார். மண்டையில் ஏறுமா நமக்கு? நானும் வாங்கவில்லை... போன மாதம் போன் செய்திருந்தார் அதே டீச்சர். அவர் பெண் இப்போது ப்ளஸ் டூ போகப்போகிறாள். தங்கம் ஒரு கிராம் 2020-ஐத் தாண்டியிருக்கிறது.

அதை விடுங்கள்.. வெள்ளி? அதற்கு மேல் அநியாயம்.. போன வாரம் தம்பிக்குட்டி சர்வேஷ்-க்கு பெயர் வைக்க நாமகரணம் வேலையாக அலைந்து கொண்டிருந்த போது சில்வர் விலை போர்டு ரேட் கிராம் ஒன்றுக்கு 64.50 என்று காண்பித்துக்கொண்டிருந்தது. சரி நம்மகிட்ட இருக்கிற சிறுசேமிப்பு காசுக்கு தங்கம்லாம் வாங்க முடியாது என்று பாவாவிடம் ஒரு ஐம்பது கிராம் வெள்ளிக்காசு வாங்கி வைக்கலாமா? எங்கே வாங்கலாம்? என்றேன். ஃபங்க்ஷன் வேலை இருக்கிறது யோசித்து இரண்டு நாளில் சொல்கிறேன் என்றார்.. இரண்டு நாளில் விலை 67.. அதற்கப்புறம் முந்தாநாள் அவர் அக்கவுண்டுக்கு ஃபண்ட் டிரான்ஸ்பர் செய்யும் போது 68.50. நேற்று குட் பிரைடே ஆதலால் அந்த அமவுண்ட் இன்றைக்கு தான் அவர் அக்கவுண்டில் கிரெடிட்டே ஆனது..

இன்றைக்கு வெள்ளியின் விலை, அதிகமில்லை ஜென்டில்மேன் கிராம் ரூபாய் 70.00 மட்டுமே.. நாலு நாள் முன்னாடி வாங்கியிருந்தால் இன்றைக்கு விலை வித்தியாசம் 275 ரூபாய் 50 கிராமுக்கு.. ம்ஹூம்.. ஒரு 3500 ரூபாய்க்கு சேமிப்பு செய்ய இந்தப்பாடு.. நாமள்லாம் எங்க போய் வெள்ளி, தங்கம், வண்டி, வாகனம், வீடு, வாசல், நிலம், நீச்சு இதெல்லாம் வாங்கி செட்டில் ஆகறது.. போங்கப்பா... யப்போவ்... அந்த ரிமோட்டை எடு டி.வி பாக்கலாம்.. விஜய் படம் இல்லாட்டி ரஜினி படம் எதுலயாவது போட்டிருக்கானா பாரு...

--------------------
படிச்சாச்சா.........?

அப்புறம்... இன்ட்லி லோகோ இருக்கா பக்கத்துல....?

தமிழ்மணம் லோகோ இருக்கா மேல....?

புடிச்சிருந்தா ஓட்டுப்போடுங்க...

புடிக்கலன்னாலும் ஓட்டுப்போடுங்க...
--------------------

வெள்ளி, 22 ஏப்ரல், 2011

கிரிக்கெட்.. கிரிக்கெட்.. கிரிக்கெட்.. (புலம்பஸ்தான், வேறென்ன?)

முதலில் விகடனில் வெளிவந்த ஒரு பிட்டு நியூஸூ.... இன்பாக்ஸ் பகுதியில்
"""சென்னை எம்.ஏ.சிதம்பரம் மைதானத்துக்கு புதுவரவு ஸ்பைடர் கேமரா. மைதானத்துக்கு மேல் கயிற்றில் கட்டப்பட்டு இருக்கும் இந்த கேமரா, போட்டி நடைபெறும்போதே ஸ்டெம்ப் முதல் பவுண்டரி எல்லை வரை எல்லா இடங்களையும் சுற்றிச் சுழன்றுவிட்டு, மீண்டும் உயரத்துக்கு வந்துவிடுமாம். எல்லாம் துட்டு!"""


டி.ட்வெண்டி-யில் ஃபைனல்ஸா, அல்லது செமி ஃபைனல்ஸா என்று ஞாபகம் இல்லை... மேட்ச் நடக்கும் போது சி.எஸ்.கே (சென்னை சூப்பர் கிங்ஸ்) அணியின் ஒரு வீரருக்கு (ஐ திங்க் முரளி விஜய்) காலர் மைக் போட்டு விட்டு மைதானத்திற்குள் அனுப்பியிருந்தார்கள். மைதானத்தில் பீல்டிங் (என்ற சும்மா இருக்கும் வேலையை) செய்யும் போதே அக்கம் பக்கத்தில் நடப்பதையெல்லாம் தன் பார்வையில் ரன்னிங் கமெண்டரி கொடுத்துக்கொண்டிருந்தார் அவர்.. இதெல்லாம் அநியாயமாக இல்லை...

ஒரு மனுசனை அவன் வேலை நேரத்தில் இன்னொரு வேலையை செய்யச்சொல்லலாமா? இப்படி வைத்துக்கொள்ளுங்கள்... நான் ஆபீஸில் வேலை செய்து கொண்டிருக்கும் போதே காதில் ஹெட்போனை மாட்டிக்கொண்டு அதன் மூலம் இன்னோரு வேலையையும் செய்து கொண்டு (அதன் மூலம் வருமானமும் ஈட்டிக்கொண்டு) இருந்தால் எப்படி இருக்கும்? அதாவது ஷேர் மார்க்கெட்டில் ஆன்லைன் வர்த்தகம் அல்லது யாருக்காவது ஆன்லைன் டியூஷன் அல்லது என் வேலையைப்பற்றி ரன்னிங் கமெண்டரி இன்னோரு கம்பேனிக்கு? என் பாஸ் என்னை பின்னி விட மாட்டாரோ?

சாரு (தான் என்று நினைக்கிறேன்) ஒரு முறை தன் ப்ளாக்கில்.. (ஸாரி, வெப்சைட்டா?) குமுறியிருந்தார் கிரிக்கெட் ஒரு சோம்பேறி விளையாட்டு.. மூளைக்கு வேலை இல்லை. விளையாடும் பேட்ஸ்மென்களைத்தவிர மற்ற எல்லாரும் சுற்றி வெட்டியாக நின்று வேடிக்கை தான் பார்த்துக்கொண்டிருப்பார்கள். பந்து வரும், அடிக்க வேண்டும், பந்து வரும், அடிக்க வேண்டும், பந்து வரும், அடிக்க வேண்டும், அவ்வளவுதான்.. அப்படி.. இப்படி என்று... புட்பால் என்றால் நல்ல சுறுசுறுப்பான விளையாட்டு என்றெல்லாம் சொல்வார்கள்..

அப்போதெல்லாம் எனக்குத்தோன்றும்... புட்பாலில் என்னடா இருக்கிறது.. அங்கேயும், இங்கேயும் ஓடி, ஓடி பந்தை துரத்த வேண்டியது தானே, இதற்குப்போய் ஏன் இப்படி கத்தி கதறி மேட்ச் பார்க்கிறார்கள் என்று... கிரிக்கெட் என்றால் ரன், பவுண்டரி, சிக்ஸர், விக்கெட், பெளலிங், செஞ்சுரி, ஹாஃப் செஞ்சுரி என்று பல விஷயங்கள் இன்டரஸ்டிங்காக இருக்கிறதே என்று நினைப்பேன்.. முரளி விஜய் (????????) நிறுத்தி நிதானமாக கமெண்டரி கொடுத்துக்கொண்டிருந்ததை பார்த்துக்கொண்டிருந்த போது தான் சாரு சொல்வது எவ்வளவு சரி என்று பட்டது... கூடவே இன்னொன்றும் ஞாபகம் வந்தது. பதினோரு முட்டாள்கள் விளையாடுவதை பதினோராயிரம் முட்டாள்கள் பார்க்கிறார்கள் என்கிற மேட்டர்.. அதில் நானும் ஒருவன்..

"சக் தே இந்தியா" படத்தில் ஷாருக்கின் டீமில் இருந்து ஹாக்கி வேர்ல்டு கப் போட்டிக்கு தேர்வாகும் ஒரு பெண் ப்ளேயரிடம் அவரது உட் பி-யான கிரிக்கெட் ப்ளேயர் சொல்வார்.. தட் ஈஸ் ஜஸ்ட் ஹாக்கி, விளையாடப்போகாதே விட்டு விடு, என்று. அதற்கு அவள் நீ மட்டும் கிரிக்கெட் வேர்ல்டு கப்பில் விளையாடப்போகிறாயே என்பதற்கு திஸ் ஈஸ் கிரிக்கெட் யார்.....என்பார் அந்த ஆள்.. அப்படி என்ன திஸ் ஈஸ் கிரிக்கெட் யார்..... ங்கொய்யால.. ஹாக்கி போல அதுவும் ஒரு கேம் தானடா என்று தோன்றும் அந்த சீனை பார்க்கும் போது...









இப்போது ஸ்பைடர் கேமரா வேறு வந்திருக்கிறது... இந்த டி.ட்வெண்டி மேட்சுகள் சிலவற்றில் கிரவுண்டில் மேலே இருந்து கீழ் வரைக்கும் இறங்கி சென்னை 28, லகான், பெப்ஸி விளம்பரங்கள் ரேஞ்சுக்கு ஃபோர், சிக்ஸ், ரன் அவுட் போன்றவற்றை சில க்ளோஸ்-அப் ஷாட்டுகளில் சினிமாவில் பார்ப்பது போல பார்த்தேன்.. என்னடா இது... பவுண்டரியில் இருந்து கொண்டே இவ்வளவு ஜூம் செய்யும் அளவுக்கு புதிதாய் கேமராக்கள் வந்துவிட்டனவா? அவ்வளவு அளவுக்கு டெக்னாலஜி முன்னேறி விட்டதா? என்று நினைத்தேன்.. இப்போது இந்த நியூஸை பார்த்த பிறகுதான் தெரிந்தது ரகசியம்..

எல்லாம் காசு படுத்தும் பாடு. உஷாராகிக்கோங்க மக்களே.. எல்லாம் விளம்பரம்.. இவர்கள் என்ன செய்தாலும் காசு.. ஆனால் நமக்கு? டி.ட்வெண்டி சீரிஸ் முடிந்தவுடன் நாம் வாங்கும் ஹார்லிக்ஸூ, ஹமாமு, ஆசீர்வாத் ஆட்டா, ரவா, மைதா, பர்ஃப்யூமு, வாட்டர் கூலரு, ஏ.ஸி, பைக்கு, காரு, பீரு, குவாட்டரு எல்லாமே கொஞ்சூண்டு விலை ஏறி இருக்கும். செக் பண்ணிப்பாருங்க... அடடா, அடுத்து ஐ.பி.எல் வேற இருக்குல்ல? அது முடிஞ்சதும் இன்னும் கொஞ்சூண்டு ஏறும்.. பின்ன? இதுல செலவு பண்ண காசையெல்லாம் எதுல இருந்து எடுப்பாய்ங்களாம்? நீ டி.வி பாக்குறியோ, இல்லையோ? உனக்கும் சேத்து தான் விலை ஏறும்.. உன் பாக்கெட்ல இருந்து தான் காசை எடுப்பாய்ங்க...

போன வருசம் சச்சின் நாப்பத்து நாலு கோடி விளம்பர வருமானம் பாத்தாராம், தோனி நாப்பத்தொம்போது கோடி பாத்தாராம்னு கல்யாண வீட்லயும், காலேஜ் கேம்பஸ்லயும் பெருமையா புள்ளி விபரம் பேசும் ரமணா ரசிகர்களுக்கும் சேர்த்துதான் இந்த விலை ஏற்றம். நான்லாம் கிரிக்கெட் பாக்க மாட்டேனாக்கும் என்று சொல்லும் (என் ஆர்.எம் மாதிரி) ஆட்களுக்கெல்லாம் சேர்த்தே சொல்லிக்கொள்கிறேன்.. முதலாளித்துவம் முதலாளித்துவம் என்று வினவு மாதிரி ஆட்களெல்லாம் பேசும் மேட்டர் தான் அது.. தோனிக்கும், சச்சினுக்கும் (யோவ், இன்வெர்ட்டர், கொசுவத்தி விளம்பரத்துக்கெல்லாம் கூட கிரிக்கெட் ப்ளேயர்ஸ் வர்றாங்கய்யா, அதுக்கெல்லாம் எதுக்கய்யா இவுங்க) கொடுக்கப்படும் காசெல்லாம் அந்தந்தப்பொருட்களில் அசல்-ல் தான் போய்ச் சேரும்... விலை கொஞ்சம் கொஞ்சமாய் ஏறும். நாம் என்ன செய்ய? (ஒண்ணும் செய்ய முடியாது.. டைம் வேஸ்ட் பண்ணாம போய் பொழப்பப் பாரு)

நான் நண்பர்களிடம் சொல்லும் ஒரு ஐடியா (காமெடியோ, சீரியஸோ, முடியுமோ, முடியாதோ) ஷேர் மார்க்கெட்டில் அந்தந்த கம்பெனியின் ஷேர்களை வாங்கி வைக்கலாம்.. விலை ஏற்றம் மூலமாக வரும் லாபமெல்லாம் அந்தந்த கம்பெனிக்குத்தான் போகும்.. ஷேரை வாங்கியிருந்தால் நமக்கும் நல்ல இலாபம்... (சேதுராமன், சாத்தப்பன், நாகப்பன், புகழேந்தி, சோம.வள்ளியப்பன் வகையறாக்கள் கோபித்துக்கொள்ளாதீர்கள்) வெறும் இலாபம் மட்டுமே எப்போதும் கிடைக்காது.. நஷ்டம் வருவதற்கும் பல வாய்ப்புகள் உண்டு... ஷேர் வாங்கப்போகும் ஆட்கள் இவர்கள் மாதிரி பெரிய அனுபவசாலிகளிடம் ஐடியாக்கள் பெற்றுக்கொள்ளுங்கள். பல்வேறு சமயங்களில் ஒரு பெரும் படுகுழியாய் இழுத்துவிட்டு வேடிக்கை பார்த்திருக்கிறது ஷேர் மார்க்கெட். (நான் பொறுப்பல்ல - டிஸ்க்ளெய்மர்)

கிரிக்கெட் ஒரு மதம் என்று யாரோ சொன்னார்கள்.. மதச்சார்பற்ற (நாடு என்று பீத்திக்கொண்டு திரியும்) இந்தியாவிற்கு இன்றைக்கு அந்த மதம் தான் பிடித்திருக்கிறது.. அதன் கடவுள் சச்சினாம்.. அது போதாது என்று இன்றைக்கு டீம், டீமாக பிரித்துக்கொண்டு நிறைய கடவுள்கள்... உள்ளுக்குள் உட்பிரிவுகள்... அடித்துக்கொண்டு சாவதற்கு.... கடவுளே, எங்களுக்குள் நாங்கள் அடித்துக்கொண்டு அழிந்து விடாமல் காப்பாற்று.. கூட வேலைபார்க்கிற ஆந்திராக்காரன் நான் டெக்கான் சார்ஜர் என்கிறான்.. நார்த் இன்டியாக்காரன்கள் நான் மும்பை இண்டியன், இல்லாவிட்டால் டெல்லி டேர்டெவில்ஸ், இன்னும் இரண்டு டீம்கள் என்று சொல்லிக்கொண்டு முறைக்கிறார்கள்.

இதே டி.ட்வெண்டியில் இந்தியா, பாகிஸ்தான் மேட்ச், செமி ஃபைனல்ஸ், ஃபைனல்ஸ் மேட்ச்களை எல்லாரும் பார்த்திருப்பீர்கள்.... இந்திய பிரதமர்(கள் - அதாவது மன்மோகன்சிங், சோனியா காந்தி, ராகுல் காந்தி மூன்று பிரதமர்களும்), பாகிஸ்தான் பிரதமர், மல்லைய்யா, செல்லைய்யா, அம்பானி, கும்பானி வகையறா பிஸினஸ் முதலைகள், ரஜினி, அமிதாப், ஷாருக், ஆமிர் போன்ற சூப்பர் ஸ்டார்கள் வேலைக்கு லீவு போட்டு இறங்கி வந்து பார்க்கும் அளவுக்கு கிரிக்கெட்டை ஏன் வளர்த்து விடுகிறார்கள்? இது எங்கே போய் முடியும்?

இவ்வளவையும் சொல்லிட்டு டி.வியை ஆஃப் பண்றானா பாத்தியான்னு எங்க நைனா சவுண்டு உட்டுட்டு போறாரு... சும்மா இரப்போவ்... இன்னைக்கு மும்பை இண்டியன்ஸ்.. சி.எஸ்.கே மேட்சுல மோதுறாங்க... சச்சினா? தோனியான்னு பாக்கணும்.. நைட்டு நீ போய் வெளிய படுத்துக்க... குட் நைட்... கொசுவத்தி எடுத்துகிட்டு போ....

--------------------
படிச்சாச்சா.........?

அப்புறம்... இன்ட்லி லோகோ இருக்கா பக்கத்துல....?

தமிழ்மணம் லோகோ இருக்கா மேல....?

புடிச்சிருந்தா ஓட்டுப்போடுங்க...

புடிக்கலன்னாலும் ஓட்டுப்போடுங்க...
--------------------