வியாழன், 17 செப்டம்பர், 2009

"இந்நிலையும் மாறிவிடும்" - ஸென் கதை

தியான வகுப்பு ஒன்றில் புதிதாய் சேர்ந்த மாணவன் ஒருவன் தனது குருவிடம் சென்று

"என்னுடைய தியானம் மிகக்கடுமையாயிருக்கிறது. இதனால் என் மனநிலையே மாறிப்போகிறது. கால்கள் மிகவும் வலியெடுக்கின்றன. மேலும் தொடர்ந்து நான் தூக்கத்தையே உணர்கிறேன். என்னால் தாங்க முடியவில்லை. பயங்கரமாக இருக்கிறது, முன்னெப்போதும் இப்படி உணர்ந்ததில்லை" என்றான்.

குரு நிதானமாகச் சொன்னார் "இந்நிலையும் மாறிவிடும்"

ஒரு வாரம் கழித்து, அதே மாணவன் மீண்டும் ஆசிரியரிடம் சென்று சொன்னான்

"என்னுடைய தியானம் மிகவும் அருமையாயிருக்கிறது. இதனால் நான் அமைதியாகவும், மிகவும் சந்தோஷமாகவும் இருக்கிறேன். என்னையே நான் உணர்கிறேன்" என்றான்

குரு நிதானமாகச் சொன்னார் "இந்நிலையும் மாறிவிடும்"

-------------------------------------------------------
நெட்டில் உலாவும் போது கிடைத்த ஆங்கில ஸென் கதையை மொழிபெயர்த்து அனுப்பியிருக்கிறேன்.

சிங்கம் இல்லீங்க.. தங்கம்

தங்கமே தங்கம் - சிறுகதை

முருகேசனுக்கு திடீரென்று எதிர்காலத்திற்குப்போகும் ஆசை வந்தது. எப்படிப்போவது என்றுதான் தெரியவில்லை. நண்பர்களிடம் கேட்டுப்பார்த்தான். அவர்களோ அது நடக்கவே நடக்காது என்றார்கள். சினிமாக்களில் பார்க்கும் டைம் மெஷின்கள் எல்லாம் கற்பனைதான். அவை நிஜத்தில் கிடையாது என்று சொன்னார்கள்.

அவனுக்கு திடீரென ஒரு யோசனை தோன்றியது.

'தவம் செய்து கடவுளிடம் வரம் கேட்டால் என்ன?'

சரியான ஐடியா!

இரவு பகல் பார்க்காமல் கடுமையாக தவம் செய்ய ஆரம்பித்தான்.

xஒருநாள் "டொய்ங்க்..." என்று ஒரு சத்தம். அவன் முன் தோன்றினார் கடவுள். "(அதேதான்) பக்தா! உன் பக்திக்கு மெச்சினோம். என்ன வரம் வேண்டும் கேள்"
புல்லரித்துப்போனது முருகேசனுக்கு.

"எனக்கு எதிர்காலத்திற்குப்போகும் சக்தியைக்கொடு ஆண்டவா".

யோசிக்கவே இல்லை கடவுள். "அப்படியே ஆகட்டும். கண்களை மூடிக்கொள். கண்களைத்திறக்கும் போது நீ எதிர்காலத்தில் 25 வருடங்கள் தாண்டியிருப்பாய்"
சொல்லிவிட்டு காணாமல் போனார் கடவுள்.

கண்களை மூடினான் முருகேசன். சில வினாடிகள் காத்திருந்தான். கண்களைத்திறந்து பார்த்தான். ஒன்றும் நடக்கவில்லை. கடவுளையும் காணவில்லை. ஏமாற்றத்துடன் சுற்றுமுற்றும் பார்த்தான். எதிரில் டீக்கடையில் மக்கள் டீ சாப்பிட்டுக்கொண்டிருந்தார்கள். பெஞ்சில் வழக்கம் போல பேப்பர் ஒன்று கிடந்தது. சரி! கடவுள் நம்மை ஏமாற்றி விட்டார் என்று நினைத்துக்கொண்டான். சரி, பேப்பர் படித்து விட்டுப்போகலாமே என்று பெஞ்சில் போய் உட்கார்ந்தான் அவன்.

பேப்பரை எடுத்து புரட்ட ஆரம்பித்தான்.

ஏ.ஆர்.ரஹ்மானுக்கு மற்றொரு தேசிய விருது. . . .

காவிரிப்பிரச்சினைக்காக மீண்டும் கூடுகிறது நடுவண் நீதிமன்றம். . . .

பாகிஸ்தானுடன் பேச்சு வார்த்தை நடத்த வெளியுறவுத் துறை அமைச்சர் இலங்கை பயணம். . . .

இலங்கையுடன் விடுதலைப்புலிகள் தொடர்பாண பேச்சுவார்த்தைக்கு ஐ.நா. அழைப்பு. . .

காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் தீவிரவாதிகளுடன் இந்திய ராணுவம் மோதல். . . .

பிரதமர் சென்னை வருகை: வரலாறு காணாத பாதுகாப்பு. . . .

முல்லைத் தீவு வீழ்ந்தது-விரைவில் புலிகள் பிடிபடுவார்கள்: இலங்கை அதிபர் பேட்டி. . . .

இந்தியா பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டிக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு. . . .

ஆப்கன், ஈராக்கில் வீரர்களைக் குவித்தது அமெரிக்கா. . . .

என்று செய்திகள் இருந்தன. வெறுத்துப்போனான் முருகேசன்.

என்னடா இந்தக்கடவுள், இப்படி எதிர்காலத்துக்கு அனுப்புகிறேன் என்று சொல்லி நன்றாக ஏமாற்றி விட்டாரே! எல்லாமே இப்படி வழக்கமான செய்திகளாகவே இருக்கிறதே என்று வருத்தமும் கோபமுமாய் பக்கத்தைத்திருப்பினான். முதல் பக்கம் பார்க்கலாம் என்று பேப்பரை மடித்தவனின் கண்ணில் தலையங்கம் பட்டது.

"தங்கம் விலை உச்சத்தைத்தொட்டது. ஒரு கிராம் ஆபரணத்தங்கத்தின் விலை இன்று 500 ரூபாய் உயர்ந்து ரூ. 19,255 ஐத்தொட்டது. ஒரு சவரன் (8 கிராம்) தங்கத்தின் விலை ரூ. 1,52,000 ஐத்தாண்டியது". என்று அச்சாகியிருந்தது.

ஆச்சரியத்துடன் தேதியைப்பார்த்தான் முருகேசன்.

01 மே 2035 என்று இருந்தது.

வாலிப, வயோதிக (எஸ்.எம்.எஸ் அனுப்பும்) அன்பர்களே!

மொபைல் போனுன்னு ஒண்ணு வந்தாலும் வந்துது... எவன் கைல பாத்தாலும் போனு. அதுலயும் கால்ஸ விட வர வர இந்த எஸ்.எம்.எஸ்ஸூங்கிற இம்சை ரொம்ப ரொம்ப அதிகமாகிப்போச்சு. எதுக்கும் போன் பண்ணிப்பேசற வேலையே இல்ல. எல்லாமே மெஸேஜ் தான். விடியற்காலைல ஆரம்பிச்சு நைட்டு தூங்குற வரைக்கும் (அதையும் தாண்டி நடுராத்திரிவரைக்கும்) சளைக்காம மெஸேஜ் அனுப்பித்தள்ளிகிட்டு இருக்கானுங்க.

அதுவும் நார்மல் மெஸேஜ விட ஃபார்வேர்டு மெஸேஜூதான் அதிகம். எது வந்தாலும் ஃபார்வேர்ட் பண்றதுன்னு ஒரு கொள்கைப்பிடிப்போட செயல்படுறாங்க. இதுல வயசு வித்தியாசம் கிடையாது. பத்து வயசுப்பய புள்ளைல இருந்து அறுபது வயசு ரிட்டையர்டு ஜெண்டில்மேன் வரைக்கும் பாசக்கார பயகளா தான் இருக்காங்க. மெஸேஜக்குன்னு கார்டு வாங்கிப்போட்டுட வேண்டியது. சிறீலங்கா குண்டு வீச்சு மாதிரி படபடபடன்னு போட்டுத்தள்ளிகிட்டே இருக்க வேண்டியது...

ஆனா அந்தக் கருமத்தையாவது ஒழுங்கா செய்யுறாங்களான்னா, அதான் கிடையாது. நைட்ல அனுப்ப வேண்டியத காலைல அனுப்பறது, காலைல அனுப்பறத மத்யானம் அனுப்பறது. பசங்களுக்கு அனுப்பவேண்டியத பொண்ணுங்களுக்கு அனுப்பறது. பொண்ணுங்களுக்கு அனுப்பவேண்டியத ஆன்ட்டிங்களுக்கு அனுப்பறது. ஏன்யா இப்படி பண்றீங்க.. குழப்பத்திலகங்களா? அனுப்புற மெஸேஜூக்கும் ரிஸீவ் பண்ற ஆளுக்கும் சம்பந்தமே இருக்கறதில்ல.

இந்து பண்டிகைக்கு மத்த மதத்துக்காரங்களுக்கு வாழ்த்து சொல்றது. மத்த பண்டிகைக்கு இவுங்களுக்கு பிக்சர் மெஸேஜ் அனுப்பறதுன்னு சாவடிக்கிறாங்க. இப்போ வர்ற மொபைல்லல்லாம் பல்க் மெஸேஜ் (send to all) வசதி வேறயா. ஒரு 50, 100 பேர செலக்ட் பண்ணி பல்க்கா அடிச்சு விட்டுற வேண்டியது. அதுங்க தபதபன்னு வந்து நம்ம மொபைல்ல எறங்கிடுது.

தீபாவளி, பொங்கல், பக்ரீத்து, மொகரம், கிறிஸ்துமஸ்ஸூ, குட் ஃப்ரைடே, வேலன்டைன்ஸ் டே, மதர்ஸ் டே, உமன்ஸ் டே, நியூ இயர், ஸ்டிரைக்கு, எலக்ஷ்னு எதையும் உட்றதில்லை. எல்லாத்துக்கும் வாழ்த்துக்கள் சொல்லிடணும்னு பாரபட்சம் பாக்காம மெஸேஜா அனுப்பறது. கிரிக்கெட் ஸ்கோரு, அப்டேட் நியூஸூ, டுடே ஸ்பெஷல்னு எதையெல்லாமோ அனுப்பறது... என்னமோ ஃப்ரீ நியூஸ் ஏஜன்ஸி நடத்துறதா நெனப்பு.

இப்பிடித்தான் ஒரு ரெண்டு வாரம் முன்னாடி மதர்ஸ் டே அன்னிக்கும். காலைல இருந்து ஒரே மெஸேஜா வந்துகிட்டிருக்கு. அம்மாவ பாத்துக்கோ, அம்மாக்கு மரியாத குடு, அம்மாதான் தெய்வம், அம்மாதான் எல்லாம், அன்புன்னா அம்மா, மத்ததெல்லாம் சும்மான்னு ஒரே டார்ச்சர். ஆளாளுக்கு அட்வைஸ் மெஸேஜ். நாம ஒரு வேளை நம்ம அம்மாவ ரொம்ப கொடும கிடுமப்படுத்துறோமோன்னு யோசிக்க வச்சுட்டாய்ங்க. இல்ல எலக்ஷ்ன் டைமாச்சே, நம்மள ஏதும் நமக்கே தெரியாம ஏ.டி.எம்.கே-ல அட்மிஷன் போட்டு விட்டுட்டாங்களோன்னு வேற எனக்கு ஒரு டவுட்டு.

(ஒரு நிமிஷம் சீரியஸா பேசுவோமா? மேட்டர் என்னன்னா, எங்க அம்மா இறந்து போய் ஒன்றரை வருஷமாச்சு. இந்த நெலமைல எனக்கு இப்படி 20க்கும் மேல மெஸேஜ் மேல மெஸேஜா வந்தா எவ்வளோ கடுப்பாகும். கொஞ்சம் யோசிச்சுப்பாருங்க? - எல்லாமே நம்ம மேல உள்ள பாசத்தாலதான் அனுப்புறாய்ங்க. ஓ.கே... ஆனா என்னோட நிலைமை?)

இதுல ஏற்கனவே போன் கம்பெனிக்காரன், விளம்பரக்கம்பெனிக்காரன், லோன் குடுக்குறவன், (குண்டூசி விக்கிறவன், புண்ணாக்கு விக்கிறவன்லாம் தொழிபராம்பா) னு எவன் எவனோ நம்ம நம்பர கண்டு பிடிச்சி மெஸேஜ் அனுப்புறானுங்க. இப்ப எலக்ஷ்னுக்கு கூட கேன்வாஸ் பண்றாங்கப்பா.. அமெரிக்கா எலக்ஷ்னப்ப ஒபாமா கூட அப்டிப் பண்ணாராமே? (ட்விட்டர்...?)

நாம போன் பில்லக்கொஞ்சம் கம்மி பண்ணலாமேன்னு நம்ம நெருங்கின சர்க்கிள்ல மெஸேஜ் மூலமா கம்யூனிகேட் பண்ணிட்டு இருப்போம்... அதுவும் எங்க ஆபீஸூல ஒரு நல்ல பழக்கம், டாப் லெவல் ஆளுங்களுக்கெல்லாம் ஏதாவது மெஸேஜ் அனுப்புனா கர்ம சிரத்தையா உடனே ரிப்ளை பண்ணுவாங்க. அப்போ நாமளும் அந்த மாதிரி இருக்கணுமா? வேணாமா?

டெக்னாலஜி வேற அட்வான்ஸ்டா இருக்கா? நம்ம மொபைல்ல போன் பேங்கிங், ECS மெஸேஜ், கிரெடிட் கார்டு ரிமைண்டர், பர்த்டே ரிமைண்டர், மியூச்சுவல் பண்டு, ஆன்லைன் பில்லிங் வசதில்லாம் போட்டு வச்சிருப்போம்.... அப்பிடி ஏதும் போட்டு இருந்தது... போச்சு.

இந்த வெட்டி ஆபீஸர்ஸ் அனுப்புற குப்பையில அதுங்க கதி அதோ கதிதான். நமக்கு வரவேண்டிய முக்கியமான மெசேஜ் வந்து தொலையாது. இன்பாக்ஸ் ஃபுல், இன்பாக்ஸ் ஃபுல்லுன்னு மட்டும் காமிச்சுட்டு இருக்கும். அப்புறம் உக்காந்து ஒவ்வொண்ணா டெலிட் பண்ணிட்டு இருக்கணும். நெட்வொர்க் பிஸியில அந்த முக்கியமான மெஸேஜூ ஊரையெல்லாம் சுத்திட்டு மூணு நாள் கழிச்சு தான் நம்ம கிட்ட வந்து சேரும், அதுக்குள்ள டைம் லிமிட் கிராஸாகியிருக்கும்.

இந்த தொந்திரவெல்லாம் வேணாம்னு மெஸேஜ் ஃபெஸிலிட்டிய ப்ளாக் பண்ணி வச்சா வர வேண்டிய முக்கியமான மெஸேஜூம் வந்து தொலையாது. டோட்டலா ப்ளாக் ஆயிடும். அதுக்கு பயந்துகிட்டே அமைதியா இருக்க வேண்டியிருக்கு. அதுவும் இந்த புதுசா மொபைல் வாங்குற பயபுள்ளைக இருக்கானுங்களே. ஆறு மாசத்துக்கு அடங்க மாட்டானுங்க. ஆர்ட்டின் போட்டு அதுல அம்ப உட்டுத்தான் குட்மார்னிங் சொல்லுவானுங்க. அது இல்லாட்டி ஒரு குட்டிப்பையன் குஞ்சாமணிய ஆட்டிட்டு வந்து நிப்பான், அதுவும் இல்லைன்னா அருவா படம்லாம் சொந்தமா வரைஞ்சு அனுப்புவானுங்க.. முடியலப்பா, முடியல..

ஆகவே வாலிப, வயோதிக (எஸ்.எம்.எஸ் அனுப்பும்) அன்பர்களே! யாருக்காவது மெஸேஜ் அனுப்புறதுக்கு முன்னாடி தயவு செஞ்சு கொஞ்சம் யோசிங்க. இது தேவையா? அவசியம் இவனுக்கு குட்மார்னிங் சொல்லித்தான் தொலையணுமா? நாம சொல்லலைன்னா இவன் எந்திரிச்சு வேலையப்பாக்க மாட்டானா? இல்ல அட்லீஸ்ட் ஒரு நாளைக்கு ரெண்டு ஃபார்வேர்ட் பண்ணாப் போதாதா? இல்ல நமக்கு வேற ஏதாவது வேலை இருக்கான்னாவது யோசிங்க

இதையும் மீறி மறுபடி மறுபடி தொந்திரவு பண்ணிட்டே இருந்தீங்க... பீ கேர்ஃபு்ல்.. அப்புறம் நானும் மெஸேஜ் கார்டு வாங்கிப்போட வேண்டியிருக்கும்... ஜாக்கிரதை..

பேசுங்க பேசுங்க பேசிக்கிட்டே இருங்க

ஹலோ! வணக்கமுங்கோவ். ஹலோ! எப்படி இருக்கீங்க? ஹலோ! உங்களத்தான். ஹலோ! ஹலோ! இங்க! இங்க! என்னது ஹலோவா? எதுக்கு இத்தன ஹலோ! ஆமாம். எப்ப பாத்தாலும் போன்லயே பேசிக்கிட்டு இருக்கோமில்ல.. அந்த ஞாபகம்தான்.. சமீபத்துல ஒரு மொபைல் நெட்வொர்க் விளம்பரம் பாத்துருப்பீங்களே.. ஹலோ! ஹலோ! ன்னு சொல்லிக்கிட்டே இருக்குற வியாதி வந்தா எப்படி இருக்கும்னு. அது கிடக்கட்டுங்க.. நினைச்சுப்பாருங்க. மொபைல் போன் கைல இல்லன்னா கிறுக்குப் பிடிச்சாப்புல இருக்குல்ல.. இன்கமிங், அவுட்கோயிங், எஸ்.எம்.எஸ்ஸூ, எம்.எம்.எஸ்ஸூ, ரிங் டோனு, காலர் டியூனு, எம்.பி.த்ரீ பாட்டுங்க, எஃப்.எம்மு, ப்ளூடூத்து, கேம்ஸூ, இன்டர்நெட்டுன்னு.... அப்பப்பா.. என்னா அட்டகாசம்?

கொஞ்சம் யோசிச்சுப்பாருங்க.. மொதல்லலாம் (நம்ம தாத்தாஸ் பீரியட்ல) ஒரு டெலிபோன் கனெக்ஷ்ன் வேணுமின்னா என்ன பாடு படணும்? எக்ஸ்சேஞ்சுக்குப்போயி நம்ம பேர பதிவு பண்ணிட்டு வெயிட் பண்ணி, என்னமோ நாம அந்த போனுல இந்திய ராணுவ ரகசியத்தையே பாகிஸ்தானுக்கு கடத்துற மாதிரி பில்டப்லாம் குடுத்து, அவனுங்க கேக்குற ஆயிரத்தெட்டு டீட்டெயிலயும் குடுத்து எம்ப்ளாய்மெண்ட் எக்ஸ்சேஞ்சுல பதிஞ்சு வச்சு வேலை வாங்குறது மாதிரி காத்திருக்கணும். அப்டியும் அவ்ளோ சுளுவா கனெக்ஷ்ன் குடுத்துடுவாங்களா? சீனியாரிட்டி, பாப்புலாரிட்டி எல்லாம் பாத்துட்டு அது வந்து சேர்றதுக்குள்ள நம்ம வீட்ல ரெண்டு மூணு சீனியர் சிட்டிசன்ஸ் பர்மனெண்ட் டிக்கெட்டே வாங்கிடும்க. அவ்ளோ கஷ்டமான விஷயம்.

பழைய சினிமாலல்லாம் பாத்தீங்கன்னா (பொதிகைல போடுறாங்க பாஸ், உங்க ஏரியால கரண்ட் கட் ஆகாம இருந்தா பாக்கலாம்) நம்ம மேஜர் சுந்தர்ராஜனோ, வி.எஸ்.ராகவனோ "ஹலோ! என்னது? மெட்ராஸூல இருந்து டிரங்க் காலா? சொல்லுங்க. என்ன? பாஸ்கருக்கு ஆக்ஸிடென்டா? (டொய்ங்க்...னு பேக்கிரவுண்ட் பிஜிஎம் போடுவாங்க) எங்க? திருவான்மியூர்லயா? எப்படி இருக்காரு? என்னது? உயிருக்கு ஆபத்தான நிலைமையா? - அப்டின்னு அவுங்களே கேள்வியும் கேட்டு அவுங்களே பதிலும் சொல்லிக்குவாங்க. அப்படி இருந்தது நிலைமை. ஒரு போன் பேசணும்னா டிரங்க் கால் புக் பண்ணி அது கனெக்ட் ஆகற வரைக்கும் தேவுடான்னு வெயிட் பண்ணணும். எம்.ஜி.ஆர், சிவாஜிக்கு மட்டும் தான் கரெக்டா லைன் கிடைக்கும். அதுவும் ஒழுங்கா பேச முடியுமான்னா கிடையாது. பாதியில டிங்குன்னு கட் ஆயிடும். ஹலோ ஹலோன்னு கதறிகிட்டே கிடப்பாங்க. கத்தி கத்தியே பாதி பேருக்கு ஹார்ட் அட்டாக் வந்துடும். ரொம்பக் கஷ்டம்.

அப்புறமாதான் வந்துதுங்க டெலிபோனு (நம்ம மம்மி, டாடீஸ்லாம் குட்டிப்பசங்களா பிளாக் & ஒயிட்ல சுத்துன பீரியட்). டார்க் கருப்பு கலர்ல குட்டிப் பன்னி மாதிரி பெரிய சைஸூல, டிபன் பிளேட் அளவுல டயலோட அட்டகாசமா என்ட்ரி குடுத்துது. எல்லா வீடுகள்லயும் அந்த போன்தான் இருக்கும். ஆனா அதுல போன் பண்ணினாலும் சாமானியமா லைன் கிடைக்காது. கிடைச்சாலும் பாதியில கட் ஆயிடும். மறுபடியும் ஒண்ணொண்ணா எல்லா நம்பரையும் சுத்தணும். நம்பர் சுத்தி சுத்தியே விரல் வீங்கி நகச்சுத்தி வந்துடும். அவ்ளோ டார்ச்சராயிருக்கும்.

அப்புறமா கொஞ்சம் கொஞ்சமா டெவலப் பண்ணி சைஸைக்குறைச்சு டிசைன் டிசைனா டெலிபோன்லாம் வர ஆரம்பிச்சுது. ரூமுக்கொரு போனு வைக்க ஆரம்பிச்சாங்க. போனு இருந்தாதான் கெளரவம், போன் இருக்குற வீடு பெரிய பணக்காரங்க வீடுன்னு ஆச்சு. எங்க வீட்ல போனு இருக்குன்னு பெருமையா வெளில சொல்லிக்குவாங்க. கொஞ்ச நாள்ல எல்லாரும் போனு வாங்க ஆரம்பிச்சாங்க. தெருவுக்குத்தெரு எஸ்.டி.டீ பூத்துங்க மொளச்சுது. பூத்துகள்லயும், பூத்துகள் மூலமாவும் காதல்கள் முளைச்சுது. அத வச்சு ஸ்கிரீன் கிழியுற அளவு சினிமாவா எடுத்துத்தள்ளினாங்க. டெலிபோன் காதல்-லாம் ஆச்சுது.

பொறவு வந்துதுங்க செல்போனு. செங்கல் சைஸூல. அம்மாம்பெருசா. எங்க வேணாலும் எடுத்துட்டுப்போலாம். வயர்லெஸ் மாதிரி. கார்ட்லெஸ் மாதிரினு. அப்புறமா சைஸைக்கொறைக்க ஆரம்பிச்சு அது ஃபேமஸாயி, இப்ப பாருங்க எங்க பாரு செல்போனு, அதுக்கு ஊரெல்லாம் சிக்னல் டவரு.. மரம், செடி, கொடிய விட செல்போன் டவருதாம்பா ஜாஸ்தியா இருக்கு.

ஏர்டெல்லு, ஏர்செல்லு, வோடபோன், ஐடியா, ரிலையன்ஸூ, டாடா இண்டிகாமு, ஸ்பைஸூ, விர்ஜின், எல்லாத்துக்கும் மேல பெரியண்ணன் பி.எஸ்.என்.எல்லுன்னு வரிஞ்சு கட்டிட்டு எறங்கி இருக்காங்க. பேசுங்க பேசுங்க பேசிக்கிட்டே இருங்கன்னு (அப்பாடி டைட்டில் வந்துடுச்சு) அள்ளிக்குடுக்க ஆரம்பிச்சாங்க. நம்ம ஜனங்க மேல அப்டி என்னதான் பாசமோ தெரியல இவுங்களுக்கு. இப்பப்பாரு. புதுசா ஒருத்தன் வந்திருக்கான். ஏதோ எம்.டி.எஸ்ஸாமே.. டெய்லி நூத்தம்பது நிமிசம்னு கணக்கு வச்சு பத்து லட்சம் நிமிசம் ஃப்ரீயாம். யப்பே. கணக்குப்பாத்தா எல்லாத்தயும் பேசி முடிக்க பதினெட்டு பத்தொம்பது வருசம் ஆகுமே. யாத்தே. சும்மாவே நம்மாளுங்களுக்கு பேச சொல்லித்தரணுமா? இப்போ ஃப்ரீயா வேறயாம். இன்கமிங் ப்ரீ, அவுட்கோயிங் ப்ரீ, செல் டு செல் ப்ரீன்னு ஒரே ஆஃபர்தான்.

தூங்காத, சாப்புடாத, ஆய் போகாத, போனாலும் கக்கூஸூக்கு எடுத்துட்டுப்போ இந்தான்னு ஆளாளுக்கு கொண்டாந்து கைல திணிக்கிறாங்க செல்ல. அதிலயும் இந்த அம்பானி அண்ணனுங்கள பத்தி சொல்லியே ஆவணும். எல்லாத்தயும் ஆரம்பிச்சு உட்ட புண்ணியவானுங்களாச்சே. கூறு கட்டியில்ல வித்தாங்க செல்ல.. பத்தாயிரம் ரூபா செல்லு ஆயிரம் ரூபா, ஆயிரம் ரூபா வேணாம், ஐநூறு கொடு போதும், முடியலயா நூறு ரூபா கொடு, அட காசில்லயா ஒரு ரூபா குடுத்து எடுத்துட்டு போ மீதிய அப்பால குடுன்னு என்னா அராஜகம். அப்பதான இவ்ளோ ஃபேமஸாச்சு செல்லு. யம்மாடி, நம்ம ஊட்டு நண்டு சிண்டுக கைலல்லாம் செல்லத்திணிச்சுபுட்டாங்களே.

ப்ரீபெய்டு வேணுமா, போஸ்ட் பெய்டு வேணுமா? இன்கமிங் ப்ரீ, அவுட்கோயிங் ப்ரீ, செல் டு செல் ப்ரீ, அது இதுன்னு என்னென்ன பண்ண முடியுமோ அதெல்லாம் பண்ணிட்டு இருக்காங்க. சிம்மு வேணுமா வாங்கிக்கோ ஆயிரம் ரூபான்னாங்க முதல்ல. அப்பறம் ஐநூறாச்சு, நூறாச்சு, இப்போ ஒர்ரூபா குடு சிம் வாங்கிக்கோ, அதும் லைப் டைம் ப்ரீ ஆஃபர்னு ஆளாளுக்கு சிம்மு விக்க ஆரம்பிச்சுட்டாய்ங்க.

நம்ம சீனி இப்டிதான் திடீர்னு புதுசா ஒரு டவுட்டக் கெளப்புனான். ஒரு சிம்மு விலை 50 ரூவா, 99 ரூவா, 150 ரூவா, 499 ரூவானு இப்டியே இந்தியா முழுக்க சிம் வித்துட்டு டவர் வைக்கலன்னா என்ன பண்ணுவன்னான். எனக்கு டார்ச்சராயிடுச்சு. இதுல இன்னோன்னு.. நாம கூட இந்த மாதிரி கம்பெனி ஆரம்பிச்சு நெறய சிம் வித்துட்டு கம்பெனிய மூடிட்டு ஓடிடலாம்னான். ஆடிப்போயிட்டேன் நானு. (யாராவது இதுக்கு பதில் சொல்லுங்கப்பா, நான் அவன்ட்ட சொல்லணும்).

கொஞ்சம் யோசிச்சுப்பாருங்க பத்து வருஷத்துக்கு முன்னாடி எவனாவது தனியா, அதுவும் தலய தலய (அஜித் ரசிகர்கள் கோச்சுக்காதீங்க) ஆட்டிக்கிட்டே பேசிக்கிட்டுப் போனா அவன என்னன்னு நினைப்போம் நாம, பைத்தியக்காரன்னு கல்ல உட்டு அடிக்க மாட்டோம்? இப்ப பாருங்க ரோட்ல.. எல்லா பசங்களும் புள்ளைங்களும் ஆளாளுக்கு ஒரு (சிலது ரெண்டு, சிலது மூணு) செல்ல வச்சுக்கிட்டு இயர்போன மாட்டிகிட்டு தானா நடுரோட்டுல சிரிச்சிகிட்டே, முனகிக்கிட்டே போகுதுங்க.

இதுல என்னடான்னா இப்போதைக்கு இந்தியாவுல மொத்த மக்கள் தொகையில மொத்தம் இருபதோ இருபத்தஞ்சு சதவீதமோ தான் மொபைல் யூஸ் பண்றாங்களாம். புள்ளி விபரம் வேற. மீதி இருக்குற எல்லாரையும் போன் வாங்க வைக்காம விட மாட்டோம்னு எல்லாரும் இறங்கிட்டாங்க. நோக்கியா, ஸேம்ஸங், எல்.ஜி, விர்ஜின், மோட்டோரோலா, கொரியாக்காரன், சைனாக்காரன் செல்லுன்னு இப்பவே இப்டி இருக்கே. இது அம்பது, அறுபது இல்ல நூறு சதவீதம் ஆயிடுச்சுன்னா என்ன ஆகும்? யோசிக்கவே பயமாருக்கே. எல்லா பயபுள்ளகளும் சாமியாடிக்கிட்டே இருக்குமே.

பட்டி மன்றம் முதல் நீயா நானா வரை.

தமிழ் நாட்டின் பாரம்பரிய பண்பாட்டு, கலை நிகழ்ச்சிகள் என்று ஒரு லிஸ்ட் எடுத்தால் அவற்றில் பட்டிமன்றங்களுக்கு ஒரு ஸ்பெஷல் பங்கு உண்டு. பிற நிகழ்ச்சிகள் வெறும் நேரக்கொல்லிகளாக இருந்த போது (ஓரளவுக்காவது) அறிவூட்டிகளாக இருந்தவை பட்டிமன்றங்களே. ஆனால் அழுது வடியும் அரங்க அமைப்பையும், தூங்கி வழியும் நேயர்களையும் வைத்துக் கொண்டு போரடிக்கும் தலைப்பு ஒன்றையும் எடுத்துக்கொண்டு ஜவ்வாக இழுத்துக்கொண்டிருந்தன பழைய பட்டி மன்றங்கள். தலைப்புகள் பெரும்பாலும் இராமாயண, மகாபாரத, புராண, இதிகாசங்களிலிருந்தே கொடுக்கப்பட்டுக் கொண்டிருந்தன.

இரண்டு ஓய்வு பெற்ற தமிழாசிரியர்களும், இரண்டு கல்லூரி (தமிழ்!) விரிவுரையாளர்களும், லீவு அதிகமாகக் கிடைக்கும் சில அரசு "அலுவலர்களும்" கலந்து கொண்டு இரு அணிகளாகப்பிரிந்து மோதிக்கொள்வார்கள். பட்டி மன்ற நடுவருக்கு என வரையறுக்கப்பட்ட சில குணாதிசயங்களுடன் (தள்ளாடும் வயது, குழப்பல் பேச்சு, அரசு அலுவலராகவோ, பேராசிரியராகவோ இருந்து ரிட்டையர் ஆகியிருத்தல் நலம்) ஒரு நடுவரும் உண்டு. நடுநடுவே "நடுவர் அவர்களே" என்ற வரியை மட்டும் நூறு முறை நீங்கள் கேட்க முடியும்.

"கற்பில் சிறந்தவள் கண்ணகியா? சீதையா?" "வீரத்தில் சிறந்தவன் இராமனா? வாலியா?" "நட்பில் சிறந்தவன் குகனா? சுக்கிரீவனா?" என்ற ரீதியில் காலம் காலமாக வழங்கி வந்த அவற்றை திசை மாற்றி கமர்ஷியல் தலைப்புகளைக்கொடுத்து பெயருக்கேற்றார்போல் உண்மையாகவே பட்டி தொட்டியெங்கும் கொண்டு சென்ற பெருமை முதலில் சாலமன் பாப்பையாவின் தலைமையிலான டீமையே சேரும்.

பட்டி மன்ற விவாதங்களில் குடும்பம் சார்ந்த தலைப்புகளைக் கொடுத்து அனைவரையும் (முக்கியமாக) பெண்குலங்களைக் கவர்ந்தது (அன்புத் தாய்மார்களே!! அருமைக் குழந்தைகளே) பாப்பையாவின் அணுகுமுறை. "கூட்டுக்குடும்பம் சிறந்ததா? தனிக்குடித்தனம் சிறந்ததா?", "குடும்பச் சக்கரம் நன்றாய்ச் சுழலக் காரணமாயிருப்பது மாமியாரா? மருமகளா?" "காதல் திருமணம் சிறந்ததா? நிச்சயிக்கப்பட்ட திருமணம் சிறந்ததா?" என்று மிஸ்டர் பப்ளிக்கின் வீட்டுக்குள் உரிமையுடன் நுழைந்தன இவரது மன்றங்கள். பட்டி மன்றங்களில் நகைச்சுவையைப்புகுத்தியதும் எதிரணியை நக்கலடிக்கும் பாணியைத் துவக்கி வைத்ததும் இவரே. மேடை மிமிக்ரிக் கலைஞர்களின் லிஸ்டில் நேயர்களின் விருப்பக்குரலாக இடம்பெறும் அளவு பிரபலமாகிப்போனது இவரது குரல்.

மத, இன வாடையற்ற ஒரு வெள்ளந்தி கிராம மனிதனின் சொல்மொழியும், உடல்மொழியும் இவரது மிகப்பெரிய பலம். ஆனால் இவரது டீமும் முழுக்க அரசுப்பள்ளி வாத்தியார்களைக் கொண்டிருந்தது பட்டிமன்ற இலக்கணம் உடையாமலிருந்ததன் உள்ளங்கை நெல்லிக்கனி. ஆனால் ஸ்டீரியோ டைப்பிலான (இதுக்கு என்னப்பா அர்த்தம்?) விவாதங்களும், எதிரணிக்காரரை பர்சனலாக இழுத்து நக்கலடிப்பது போன்ற விஷயங்களும் இவரது மைனஸாகிப் போனதாகச் சொல்லலாம். இயக்குனர்களின் அன்பு வற்புறுத்தலுக்கிணங்கி சினிமாக்களிலும் நடித்தார். ("வாங்க பழகலாம். என்கிட்ட ரெண்டு இருக்கு, புடிச்சா கல்யாணம், இல்லேன்னா ஃப்ரண்ட்ஸா இருப்போம்" - என்று வாயைக்கொடுத்து வாங்கிக் கட்டிக்கொண்டார்)

அவரின் நீட்சியாய் மிஸ்டர் ஐ. லியோனி ஃப்ரம் திண்டுக்கல் பட்டி மன்றங்களை இன்னும் பிரபலமாக்கினார். ஆனால் அவர் எடுத்துக்கொண்டவை முழுக்க முழுக்க சினிமாத்தலைப்புகள். "நகைச்சுவையில் சிறந்தவை பழைய படங்களா? புதிய படங்களா?" "காதல் ரசம் பொங்கி வழிவது பழைய பாடல்களிலா? புதிய பாடல்களிலா?" என்று தரை ரேட்டுக்கு இறங்கி அடித்தது இவரது டீம். தலைப்பைப் படிக்கும் போதே உங்கள் மனதில் லியோனியின் குரல் எதிரொலிப்பது அவருக்குக் கிடைத்த வெற்றி. பாப்பையா ரீச் ஆகாத இடங்களிலும் நுழைந்து அடிமட்ட லெவல் விசிலடிச்சான் குஞ்சுகளையும் கவர்ந்தவர் இவர்.

இந்த திண்டுக்கல்காரரது ஸ்டைல் வேறு. இளையராஜா & வகையறாக்களின் தமிழ்த் திரைப்பாடல்கள் பிரபலமாகியிருந்த 80-90 களில் (அப்போதைய) டெக்னாலஜியை லாவகமாகப் பயன்படுத்தினார் அவர். நேரடி பட்டி மன்றங்களை விட ஸ்டுடியோக்களில் பதிவு செய்யப்பட்டு கேசட் வடிவில் வெளிவரத் துவங்கின இவரது மன்றங்கள். லியோனியின் குரல் ஒலிக்காத டவுன் மற்றும் மொபசல் பஸ்களே இல்லை எனுமளவு பரபரப்பாக அவரது கேசட் விற்பனை தூள் பரத்தியது. ஆனால் திகட்டிப்போகுமளவு சினிமாத்தலைப்புகள் இந்தக் கேசட்டை ஏற்கனவே கேட்டு விட்டோமோ என்று எண்ண வைத்தன. தொடர்ந்து கடி காமெடிகளும் (பள்ளிக்கூட வாத்தியார், மாணவன் ஜோக்குகள்) ரிப்பீட்டடித்தன. ஆனால் பாப்பையாவுக்கு முன்னோடியாக சினிமாவில் என்ட்ரி கொடுத்தவர் இவர். இவரைப்பார்த்து ஆசைப்பட்டுத்தான் சினிமாக்களில் தலை (வாய்!) காட்டினார் பாப்பையா.

இவற்றின் தொடர்ச்சியாக குழப்ப வசனக்காரர், இயக்குனர் விசு பட்டிமன்ற வடிவத்தை சற்றே மாற்றி விசு வின் "அரட்டை அரங்கம்" என்ற பேச்சரங்க நிகழ்ச்சியாக்கி டிவிக்குக் கொண்டு வந்தார். சன் டிவியின் பிரபல்யத்தினாலும் விசுவின் சென்டிமெண்டான நடையினாலும் மிக விரைவில் கடைக்கோடி ரசிகன் வரை ரீச் ஆனது அரட்டை அரங்கம். ஆனால் நிறைய நலத்திட்ட உதவிகள் செய்ய ஆரம்பித்து நாம் அரட்டை அரங்கம் பார்க்கிறோமா? அல்லது உதவும் கரங்கள் வித்யாகரின் நிகழ்ச்சியைப் பார்க்கிறோமா எனுமளவு அழுவாச்சி மன்றம் ஆனது அரட்டை அரங்கம். கொடுக்கப்பட்ட தலைப்புகளும் கிட்டத்தட்ட பல வாரங்கள், சில மாதங்களுக்கு இழுக்கப்பட்டன.

பல ஆண்டுகள் தொடர்ந்து ஒளிபரப்பாகிய இதனை மற்ற டிவிக்களும் மெள்ள மெள்ள காப்பி அடிக்கத்துவங்கின (ஒளிபரப்பாகும் டிவியின் அரசியல் சார்பைப் பொறுத்து லேசான கட்சி வாடையுடன்). அரட்டை அரங்கத்திலிருந்து விசு விலகியதும் அது கைமாறியது அடுக்கு மொழிக்காரர் டி.ஆரிடம். (இடையில் சில வாரங்களுக்கு பாப்பையாவும், அவரது செல்லம் ராஜாவும் எடுத்துக்கொண்டனர்) ஆனால் அது டி.ஆரிடம் படும்பாடு சொல்லி மாளாது. அதற்குத்தனி மன்றம் தேவை. விசுவாவது பரவாயில்லை. இவரோ, உதவி பண்ணுங்க என்று நேரடியாகவே நேயர்களைக் கேட்கத்துவங்கி "அய்யா சாமி, தர்மம் பண்ணுங்க" ரேஞ்சுக்கு நிகழ்ச்சியைக்கொண்டு போய்விட்டார். கேப்பில் டி.வி. தாவி ஜெயாவில் போய் "மக்கள் அரங்கம்" என்று அதையே நடத்திக்கொண்டிருக்கிறார் விசு அதே டர்க்கி டவல், மூக்குறிஞ்சான் டயலாக்குகளுடன்.

ஊர்களில் (இளந்தாரிகளுக்கான ரெக்கார்ட் டான்ஸ் மற்றும் ஸ்பெஷல் (!!!!) கரகாட்டங்களால் தத்தெடுக்கப்பட்ட) திருவிழாக்களில் நடக்கும் பட்டி மன்றங்கள் கிட்டத்தட்ட வழக்கொழிந்து இன்று விசேஷ தினங்களை சிட்டியில் ஏ.ஸி ஹாலுக்குள் (கட்டணத்துடன்) நடக்கும் பட்டிமன்றங்கள் ஆக்கிரமிக்கின்றன. டிவியில் தீபாவளி, பொங்கல், சுதந்திர தினங்களில் கட்டாயம் ஒரு பட்டிமன்றம் உண்டு. அவையும் அதே லியோனி, பாப்பையா மற்றும் அவர்களது அடிப்பொடிகளுடன்.

இவற்றையும் தாண்டி (உலகெங்கும்) சீரியல் பார்த்து போரடித்துப்போன மக்களிடம் டாக் ஷோக்கள் பிரபலமாகத் துவங்கிய நேரத்தில் விஜய் டி.வி, கோபிநாத் மூலம் "நீயா நானா" என்ற டாக் ஷோவை அறிமுகப்படுத்தியது. இந்நிகழ்ச்சி பட்டிமன்ற வடிவத்தை ஒரு புதிய பரிமாணத்திற்குக் கொண்டு செல்கிறது. நிகழ்ச்சியின் குறிப்பிடத்தகுந்த அம்சங்களாகச் சொன்னால், மற்ற அரங்கங்கள் போன்ற நாடகத்தன்மையும், போரடிக்கும் தலைப்புகளும் இல்லை. ஒரே தலைப்பை வைத்து மாதக்கணக்கில் இழுக்கும் இழுவை இல்லை. எவ்வளவு சுத்தத் தமிழில் பேசினாலும் புரியுமாறு பேசுவது, நடத்துனரின் (ஹோஸ்ட்) கண்ணியமான நடை, உடை, பாவனை, பேச்சு, (வி)வாதம் தலைப்பில் இருந்து விலகிச்செல்கையில் சாதுர்யமாக அதை வளைத்துச்சென்று சரியான திசைக்குத்திருப்பும் திறமை என்று முந்தைய மன்றங்களிலும் ஷோக்களிலும் இருந்த மைனஸ்களை கழித்துக்கட்டி ப்ளஸ்கள் அதிகரிக்கப்பட்டு ஒரு சரிவிகித காக்டெயிலாக அமைந்திருக்கிறது. இவற்றால் இந்நிகழ்ச்சிக்கு விசுவின் அரட்டை அரங்கத்தை விட அதிகபட்ச வரவேற்பு. கட்சி சார்பற்ற, மத, இன, மொழி சார்பற்ற, உணர்ச்சி வசப்படாத வாதமும் அதன் மற்றொரு ப்ளஸ். ஆனால் இவை அனைத்தும் நீடிக்குமா? அல்லது மற்ற நிகழ்ச்சிகளைப்போல காலப்போக்கில் போரடித்து நீர்த்துப்போகுமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

பழம்பட்டிமன்றங்களில் இருந்து நீயா? நானா? வரை பரிணாம வளர்ச்சி கொண்ட இதன் வடிவம் எதிர்வரும் காலங்களில் இன்னும் எப்படியெல்லாம் மாறும்? (காஃபி வித் (கரன்) அனு, ஓப்ரா வின்ஃப்ரே ஷோ, நையாண்டி தர்பார், ஹரி, கிரி அசெம்பிளி போன்றவை இவற்றில் சேராது. அவை லைவ் இண்டர்வியூவின் கூறுபாடுகள் கொண்ட வேறு வடிவத்தைச் சேர்ந்தவை) ஆனால் பட்டிமன்றம் எனும் விவாத மேடை எத்தனை வடிவங்கள் மாறி வந்தாலும் அவை அனைத்துமே அறிவுப்பூர்வமான விவாதங்களையும் சிந்தனைகளையும் தூண்டுவதால் வரவேற்கத்தக்கவையே. அழுவாச்சி சீரியல்களையும், கடி காமெடிகளையும், டான்ஸ் போட்டிகளையும், மூளை மழுக்கி நிகழ்ச்சிகளையும் ரசிகக்கண்மணியை வாயைப்பிளந்து கொண்டு பார்க்க வைக்கும் இடியட் பாக்ஸ் கொஞ்சமேனும் அவனை சிந்திக்க வைக்கிறதென்றால் அது இவை போன்ற ஒன்றிரண்டு நிகழ்ச்சிகளின் மூலமே.

டெய்ல் பீஸ்: இந்தக்கட்டுரையை முடிக்கும் நேரத்தில் விஜய் டி.வியில் திண்டுக்கல் ஐ. லியோனியின், விவாதக்களத்துடனான புதிய நிகழ்ச்சி "அந்தக்காலம், இந்தக்காலம்" துவங்கப்போவதாக அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இது மேற்குறிப்பிட்ட நிகழ்ச்சிகளின் மற்றொரு புதிய வடிவமா? அல்லது அரைத்துச்சலித்த பழைய மாவா? என்று வரும் வாரங்களில் தெரிந்துவிடும்.

நீங்கள் நிச்சயம் இவற்றில் சிலவற்றைத்தாண்டித்தான் உங்கள் பால்யத்தைக் கடந்திருப்பீர்கள். உங்கள் கருத்துக்களையும் எழுதுங்களேன்.

yeskha@gmail.com

இந்தியாவும் கடவுளும்

உலகத்தைப்படைக்கும் வேலையில் ஈடுபட்டிருந்தார் கடவுள். படைப்புத்தொழிலின் சூட்சுமங்களை தன்னுடனிருந்த மற்ற தேவதைகளுக்கு விளக்கிக்கொண்டிருந்தார் அவர். எல்லா படைப்பிலும் ஒரு சமநிலை இருக்க வேண்டும், ஆக்கமும் அழிவும் சேர்ந்தே படைக்கப்பட வேண்டும் என்றார் அவர். உதாரணமாக 10 மான்களைப்படைத்தால் 1 சிங்கத்தைப்படைக்க வேண்டும். 100 சாதுக்களைப்படைத்தால் அவற்றிற்கு ஒரு வைரியைப்படைக்க வேண்டும்.

இதோ பாருங்கள், இதுதான் அமெரிக்கா. உலகிலேயே மிக்க செல்வச்செழிப்பான, பணக்காரர்கள் நிறைந்த நாடாகப் படைத்திருக்கிறேன். ஆனால் அதே நேரம் பாதுகாப்பின்மையையும் பதற்றத்தையும் தந்துள்ளேன். இது ஆப்பிரிக்கா. இங்கே எழில் கொஞ்சும் இயற்கையழகையும், வற்றாத கனிம வளங்களையும் படைத்துள்ளேன். ஆனால் அதே நேரம், மிக மோசமான பருவ நிலைகளையும், எதிரிகளையும் அளித்துள்ளேன்.

அடுத்தது தென் அமெரிக்கா. மிக அடர்ந்த கானகப்பகுதிகள் உண்டு. ஆனால் குறைவான நிலப்பகுதிகள் காரணமாக அவர்கள் காடுகளை அழித்தே வாழ வேண்டும். ஆபத்தும் உண்டு. இது ஜப்பான். அறிவார்ந்த மக்கள். நல்ல வளமை. ஆனால் எண்ணற்ற எரிமலைகள். எப்போதும் உயிர் பயம். ஆகவே, நண்பர்களே, எந்தப்படைப்பிலும் ஒரு சமநிலை இருக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள் என்றார்.

உடனே ஒரு தேவதை கேட்டது - "கடவுளே, இவற்றில் மிகவும் அழகான தேசம் எது?" புன்னகைத்தபடியே சொன்னார் கடவுள் - "எல்லாவற்றுக்கும் மகுடம் போல் அமைந்திருக்கும் இந்தியாதான் அது. என்னுடைய படைப்புகளிலேயே மிக உயர்வான ஒன்று. அனைத்து வகை கலாசாரங்களும் இணைந்த நாடு, மிகுந்த இயற்கை வளங்கள், தொழில்வளம், தொழில்நுட்ப வளம், மக்கள் வளம், நல்ல கலாசாரம் என அனைத்து வளங்களையும் ஒருசேர அளித்துள்ளேன் என்றார்.

ஆச்சரியமடைந்த தேவதை கேட்டது - ஆனால் நீங்கள் எல்லாவற்றிலும் ஒரு சமநிலை இருக்க வேண்டும் என்றீர்களே?" "இந்தியாவுக்கு எல்லாமே வளமையான விஷயங்கள் தானா? பிரச்சினைகளே கிடையாதா?"

பதிலாக உரக்கச் சிரித்தபடியே கடவுள் கூறினார்.

"ஹா. ஹா. ஹா., அதற்குத்தான் இந்தியாவுக்கு அண்டை நாடுகளைக் கொடுத்திருக்கிறேனே"

ரிப்ளையோ ரிப்ளை

ரிப்ளையோ ரிப்ளை
-எஸ்கா

"ப்ளீஸ் கால் மீ" ன்னு பொண்ணுங்களுக்கு பசங்க மெஸேஜ் அனுப்பினா பொண்ணுங்க என்னென்ன ரிப்ளை பண்ணுவாங்க?

1) ஸாரிப்பா, நான் நல்லா தூங்கிட்டேன். (ஏந்திரி அஞ்சலி ஏந்திரி)
2) ஸாரிடா, அப்பா பக்கத்துல இருந்தாங்க அதான் கூப்பிடலை. (இல்லேன்னா மட்டும்?)
3) பேட்டரி சார்ஜ் இல்லம்மா.
4) நெட்வொர்க் ப்ராப்ளம், கால் போக மாட்டேங்குதுடா செல்லம். (அது நெட்வொர்க் ப்ராப்ளம் இல்லம்மா, பேலன்ஸ் ப்ராப்ளம்)
5) பேலன்ஸ் இல்ல, 50 ரூபீஸ் டாப் அப் போட்டு விடேன் கண்ணா. (500-ஆ போட்டியின்னா ரொம்ப சந்தோஷம்)
6) ஸாரியா, மெஸேஜ லேட்டாதான் பாத்தேன். (நாங்க பண்ணினா மட்டும் ஃபர்ஸ்ட் ரிங்குலயே எடுக்குறீங்க?)
7) படிச்சுட்டு இருந்தேன் டியர். (அம்மா அய்யேயெஸ்ஸூ)
8) இன்னைக்குன்னு பாத்து ஹலோ டியூனுக்கு காசு எடுத்துட்டாண்டா புஜ்ஜிக்குட்டி. (அவுங்க டோரா, நாம புஜ்ஜி. அதாவது கொரங்கு)
9) பேலன்ஸ் மைனஸ்ல இருக்கு ஹனி. (என்னைக்கு அது ப்ளஸ்ல இருந்துச்சு?)
10) மொபைல வீட்ல வச்சுட்டு கோயிலுக்கு போயிட்டேன்பா. (பக்திமயமான ஃபேமிலி கேர்ளாம்)
11) கஸின் வந்திருந்தாம்பா, அதான் கொஞ்சம் பிஸியா இருந்தேன் (வில்லன்ன்ன்ன்ன்......... அவன் வந்தா நீ ஏன் பிஸியாகுற?)
12) க்ளாஸ்ல இருந்தேன்டா (க்ளாஸ்ல நீங்க என்ன பண்றீங்கன்னு எங்களுக்குத் தெரியாது?)

இதத்தவிர வேற ஏதாவது ரிப்ளை வந்துதுன்னா காலைல பீக் அவர் டிராபிக்ல நடு மெளண்ட் ரோடுல நிக்க நான் தயார். (ஆனா கால் மட்டும் வரவே வராது)


எனக்கு வந்த ஒரு எஸ்.எம்.எஸ்ஸில் சில மாற்றங்கள் செய்து, சிலவற்றை புதிதாய் சேர்த்திருக்கிறேன்.

பார்ட் டூ - மிலே சுரு மேரா துமாரா! தோ சூரு பனே ஹமாரா

முந்தைய கட்டுரையில் விடுபட்டுப் போன என்னுடைய சொந்த அனுபவங்களோடு, அக் கட்டுரையை படித்து கருத்து தெரிவித்த நண்பர்கள், உறவினர்களது அனுபவங்களையும் சேர்த்து இக்கட்டுரையை எழுதியிருக்கிறேன்.

பார்ட் டூ - மிலே சுரு மேரா துமாரா! தோ சூரு பனே ஹமாரா
-எஸ்கா

ஹாய்! ஹாய்! ஹாய்! ஹாய்! ஹாய்!

ஐ யாம் பேக்...

மக்களே! இது தூர்தர்ஷன் கட்டுரையோட பார்ட் டூ.
முதல் கட்டுரைய படிக்காதவுங்க, படிக்க ஆசைப்படுறவங்க இந்த லிங்க்-க

http://youthful.vikatan.com/youth/yeskhastory20052009.asp

க்ளிக் பண்ணி படிச்சுக்கோங்க. திரும்ப வர்ற வரைக்கும் வெயிட் பண்றேன், ஓ.கே? ...... இப்போ போலாமா? உடு ஜூட்..

இப்போ மாதிரில்லாம் செட்டாப் பாக்ஸ், கேபிள் ஒயர்லாம் அப்ப ஏது? அப்போல்லாம் ஏரியல்தானே (ஆன்ட்டெனா)... மொட்ட மாடிலயோ, இல்ல ஓட்டு மேலயோ கொண்டு போய் கட்டியிருப்போம். அது மேலதான் காக்கா, குருவி, புறால்லாம் ஒக்காரும். (ஒக்காந்து ஆய் போவும்) தூக்கணாங்குருவி கூடு கட்டி வைக்கும். எப்பயாவது பலமா காத்தடிச்சா அவ்ளோதான், ஏரியல் பொஸிஷன் மாறிடும். உள்ளதும் போச்சி நொள்ளக்கண்ணா (இந்தக் கதை யாருக்குனா முழுசாத்தெரிஞ்சா சொல்லுங்கப்பா) டிவியில பிக்சரே வராது. கொர்ர்ர்.......ருன்னு ஒரே இரைச்சலா இருக்கும்.

அப்பா தான் அதை ஓட்டு மேல ஏறி நின்னுட்டு சரி பண்ணுவாரு. அம்மா கிச்சன்ல டிபனோ, சமையலோ ரெடி பண்ணிட்டு இருப்பாங்க, தங்கச்சி (தம்பி இருந்தா தம்பி) டிவிகிட்ட உக்காந்துக்குவா, நானு ரெண்டு பேருக்கும் நடுவுல, நடுத்தெருவுல. மீடியேட்டர் வேல, மீடியேட்டர். அவ என்கிட்ட சொல்ல, நான் எங்கப்பாகிட்ட கத்திகிட்டே சிக்னல் காமிக்க... அவுரு ஆன்டெனாவ அட்ஜஸ்ட் பண்ணுவாரு.. "இப்போ பிக்சர் கிளியரா வருதா? வரலையா? இப்ப, இப்ப, மெள்ள மெள்ள, ஆ லெஃப்டு, ஆ ரைட்டு, இன்னும் கொஞ்சம்"-னு ஒரே அலப்பறையா இருக்கும். கொஞ்சம் கொஞ்சமா மில்லி மீட்டர், மில்லி மீட்டரா தான் திருப்பணும்.

காத்துக்கே இப்பிடி.. மழை கிழை வந்துச்சு, அவ்ளோதான், இடி ஃப்ரீ, ஊர்ல எங்கனா ஒரு எடத்துல ஒரு பெரிய இடி விழும், உடனே ஊர்ல இருக்குற எல்லா டிவியும் அவுட்டு, ஆனா இதை நாமளே சரி பண்ண முடியாது. டிவி ரிப்பேர்காரன்தான் வரணும், ஊருக்கே ஒருத்தன் தான் இருப்பான். எல்லார் வீட்லயும் டிவி அவுட்டாயிருக்குமா? அவன் ரொம்ப பிஸியாயிடுவான். எப்பயாவது நம்ம வீட்டுக்கு முதல்ல வந்தா, அது நம்ம அதிர்ஷடம். ஆனா வந்துட்டா அவன் கூடவே உக்காந்து டி.வி ரிப்பேர் வேலய கத்துக்குவோம். வேற வேல..? எங்கருந்து பிக்சர் வருது, எங்கருந்து சவுண்டு வருது, எந்த பார்ட் அவுட்டுன்னு போட்டு கொடஞ்சு எடுத்துடுவோம் அவன, அப்படி முக்கியமான மேட்டரே டையோடுல தான்-ன்னு கண்டுபுடிச்சோமுல்ல.

அதே மாதிரி எப்போ டிவிய ஆன் பண்ணிணாலும் பிக்சர் வரவே மூணு நிமிஷம் ஆகும், அப்படியே திகில் படம் மாதிரி குடும்பத்தோட உக்காந்து டிவியவே பாத்துட்டு இருப்போம். ஆஃப் பண்ணும் போதும் ரவுண்ட், ரவுண்ட்டா ஆகி டொய்ங்குன்னு ஒத்தப் புள்ளில போய் முடியும். அப்பல்லாம் இத்தன டிவி ஏது? சும்மா நாலஞ்சு மாடல்தான். ஓனிடா, டயனோரா, டெலிவிஸ்டா, சாலிடேய்ர்-னு. அதுலயும் பெரிசா மரப்பொட்டி வச்சு வரும். அதுக்கு ரெண்டு கதவு வேற. என்னமோ நூறு பவுன் நகைய வச்சிப் பூட்டுற மாதிரி டெய்லி நைட்டு தூங்கப் போகும் போது அத மூடி (சில வீடுங்கள்ல பூட்டெல்லாம் போட்டாங்க), ஒயரயெல்லாம் கழட்டி விட்டுட்டுதான் படுக்கணும்.

பொதுவா டிவி இருக்குற வீடுங்கள்ல கிரைண்டர் இருக்கும், அங்கதான் மத்த எல்லா வீட்டுக்காரங்களும் இட்லிக்கு மாவு அரைக்க குடுப்பாங்க. கிலோவுக்கு முப்பது பைசா, அம்பது பைசான்னு. மாவரைக்க நான் போறேன், நான் போறேன்னு எங்களுக்குள்ள ஒரே தகராறா இருக்கும். அப்பதான அங்க போய் டிவி பாக்கலாம். ஆனா அதே அரிசி மாவு மில்லுக்குன்னா போக முடியாது. அங்க போனா கார நெடி மூக்குல ஏறும், தும்மல் வரும், க்யூவுல நிக்கணும். மூணு நாளைக்கு மொளகா நெடி மூக்குலயே நிக்கும். அதுவுமில்லாம டிவியும் பாக்க முடியாது.

டிவில கேபிள் கரண்டு போச்சின்னா அவ்ளோதான். திரும்ப எப்ப வரும்னு யாருக்கும் தெரியாது. எந்திருச்சு ஒரே ஓட்டம் தெருவுக்கு. இதுக்காகவே அப்பாவோட சைக்கிள் எப்படா பஞ்சர் ஆகும்னு காத்திருப்போம், டயர் வெடிச்சுது... அவ்ளோதான். அதை எடுத்துகிட்டு போயி ரிவர்ஸ்ல திருப்பி ஓடைல மீன் புடிப்போம். தண்ணிக்கு குறுக்குல, கோணலா ஒரு மாதிரி பொஸிஷன்ல டயரை போட்டு வச்சு மீன் வரும் போது ஒரே இழுப்பு. தண்ணியோட மீன்களும் சேந்து கரையில வந்து விழும். அதுவும் ஓடைல சமயத்துல பாம்பெல்லாம் வரும், பச்சப்பாம்பு, தண்ணிப்பாம்பு, ஓலைப்பாம்பு. கிடைச்சா ஒரே போடு பாம்பு காலி, மறுநாள் ஸ்கூலுக்கு எடுத்துட்டுப்போயி பசங்கள்ட்ட காமிச்சு ஒரே ரணகளம்தான். (ஆனா பெரிய வாத்தியாருக்கு தெரிஞ்சுது, அவ்ளோதான், டவுசர கிழிச்சுடுவாரு)

கும்பகோணத்துல ரெட்டிராயர் குளம்னு ஒண்ணு இருக்கு. காவிரி ஆத்துல இருந்து குளத்தோட வடகரை வரைக்கும் ஒரு வாய்க்கால் வெட்டியிருப்பாங்க, தண்ணி விடுறதுக்கு. ரெண்டு சைடுல மட்டும் சிமெண்டு பூசி. அது கரெக்டா மாமா வீட்டுக்கு அண்டர்கிரவுண்டுல போகும். அதனாலதான் மாமா வீட்டுக்கு போறது. குளத்துக்கு குளம், டிவிக்கு டிவி, ஜாலிக்கு ஜாலி. ஹால்ல உக்காந்து எவ்ளோ நேரம் டி.வி பாத்தாலும் பாட்டம் குளிர்ச்சியா இருக்கும். மொக்க ப்ரோக்ராமா இருந்தாலும் பார்ப்போம். வெளிய எவ்வளவு வெயில் இருந்தாலும் சும்மா சிலு சிலுன்னு இருக்கும்.

வெடிச்ச சைக்கிள் டியூப்பை அப்பா பஞ்சர் போடறத்துக்கு முன்னாடியே தள்ளிட்டு போய் கத்திரிக்கோல் வச்சு வெட்டி பால் ரெடி பண்றது. ஒரு பேப்பர உருண்டையா சுத்திகிட்டு அதுமேல (அப்பாவோட) சைக்கிள் டியூப ரிங் ரிங்கா கட் பண்ணி போட்டு சுத்தி சுத்தி சுத்தி சுத்தி பெரிய பால் ஆக்குவோம். டயர் பால் ரெடிபண்ணி அதுலதான் விளையாடுவோம். எப்படிதான் போகுமோ தெரியாது, ஆனா பாலை அடிச்சா அது நேரா பறந்து போயி எதாவது ஒரு டிவி பெட்டியதான் உடைக்கும். கும்பலோட எஸ்கேப். ஓடத்தெம்பில்லாத ஏதோ ஒரு கைப்புள்ள தான் டிவி உடைஞ்ச வீட்டுக்காரங்ககிட்ட மாட்டுவான்.

அதே மாதிரி புது பால் வாங்க கடைக்குப்போனா தவ்ளூண்டு பால்தான் கிடைக்கும், பின்ன ஆளுக்கு பத்து பைசா போட்டு பன்னண்டு பேரு, ஒண்ணேகால் ரூவா சேத்து பால் வாங்கப்போனா? ஒரு நல்ல பால் விலை ரெண்டரை ரூபா இருக்கும். பெட் மேட்சுல்லாம் நடக்கும். அதுக்கு ரூல்ஸூ? அதான் தூர்தர்ஷன்ல போடுவாங்களே, அஞ்சு நாள் டெஸ்ட் மேட்சு. கவாஸ்கர், ரவி சாஸ்திரி, கபில்தேவ், க்ரிஷ்(ணமாச்சாரி காந்த்), ராமன் லம்பா (தலைல பாலால அடிவாங்கி செத்துப்போனாரே, அவருதான்) இவங்கெல்லாம் எங்களோட சூப்பர் ஹீரோஸ், அப்புறம் குட்டியா ஒரு சின்னப்பையனும் வந்தாரு, பேரு சச்சினாம். அந்த மேட்சுகளப்பாத்து புரிஞ்ச வரைக்கும் நோட்ல எழுதி வச்சு, எங்களுக்கும், கிரவுண்டுக்கும்(?) ஏத்த மாதிரி கொஞ்சம் வளைச்சு புது ரூல்ஸ் ஃபார்ம் பண்ணுவோம்.

ஆட்டமெல்லாம் அடங்கி மறுபடி டி.வி பாக்க உக்காந்தா நைட்டு வரைக்கும் டி.விதான். சனிக்கிழமை நைட்டு அலிஃப் லைலா பாக்கணும்னா தயிர்சாதம் சாப்பிட்டாதான் பாக்க விடுவேன்ங்கும் எங்க பாட்டி. இல்லாட்டி டிவிய ஆஃப் பண்ணிடும். ஆனா சன்டேன்னா, காலைல பிரச்சினையில்லாம சந்திரகாந்தா பாத்துக்கிட்டே ப்ரேக்ஃபாஸ்ட் முடிஞ்சுடும். அடுத்ததா கேப்டன் வியோம். கேப்டன் வ்யோமும், ஸ்டார் டிரெக்கும் சரியான போட்டி. ஆக்சுவலி ரெண்டுமே ஸ்டுடியோக்குள்ள ஸ்பேஸ் ஷிப் செட் போட்டு எடுத்த நாடகம்தான், அது தெரியாத மாதிரி (அந்த காலத்து) கிராபிக்ஸ்-லாம் செஞ்சு விண்வெளியில நடக்குற மாதிரி காமிப்பாங்க. வாயப்பொளந்து கிட்டு பே-ன்னு டிவி பாப்போம்.

இதுல கண்டிப்பா தூர்தர்ஷன் லோகோவைப்பத்தி சொல்லியே ஆகணும். காலைல ஓபன் பண்ணும்போதே சூப்பரா ஒரு மியூஸிக்கோட டிடி லோகோ சுத்திகிட்டே வரும் (ஆக்சுவலி... அந்த மியூஸிக்க எழுத்துல கொண்டு வரவே முடியாது). பிசிரு பிசிரா ஆரம்பிச்சு அப்படியே சுத்திகிட்டே மெள்ள முன்னாடி வந்து அழகா செட் ஆகி "தூர்தர்ஷன்(ஹிந்தி லெட்டர்ஸ்ல)" அப்டின்னு நிக்கும்.

டைரக்டர் பாலச்சந்தருக்கு தூர்தர்ஷன்னா ரொம்பப்பிடிக்கும். அவரோட அழகன் படத்துல கூட "சங்கீத ஸ்வரங்கள் ஏழே கணக்கா, இன்னும் இருக்கா, என்னமோ மயக்கம்….." அப்டிங்குற பாட்டுல நைட் பூரா மம்மூட்டியும் பானுப்ரியாவும் போன்ல பேசிட்டே இருப்பாங்க. அப்போ மம்மூட்டி வீட்ல நைட்ல ஆரம்பிச்சு விடியற்காலைல தூர்தர்ஷன் லோகோ சுத்துற வரைக்கும் டிவி ஓடிட்டே இருக்கும். அதே போல வானமே எல்லை பட கிளைமாக்ஸூல டிடி நியூஸ் ரீடர் ராமகிருஷ்ணனை நடிக்க வச்சாரு. புதுப்புது அர்த்தங்கள் படத்துல அப்போதைய ஃபேமஸ் சாலிடேய்ர் டிவி மாடலா சைடு வில்லன் கிரிக்கெட் ப்ளேயர் வர்றா மாதிரி காமிச்சாரு. அதே படத்துல சாலிடேய்ர் டிவிக்கு அமலா போஸ்டரையும் காமிச்சாரு. அதுக்கப்புறம் கொஞ்ச நாள் கழிச்சு தூர்தர்ஷன் ஸ்லாட்லயே "ரயில் சினேகம்" னு ஒரு நாடகம் கூட எடுத்தாரு. கே.பி டச்சோட இருக்கும்.

ஒருநாள் த்ரீ டி படமான மை டியர் குட்டிச்சாத்தான் டிடியில போட்ட அன்னிக்கு என்னா ஆர்ப்பாட்டம்? டிவில படம் பாக்கவும் த்ரீ டி கண்ணாடி வாங்கியாகணும்னு எவனோ ஒரு அறிவுஜீவி கொளுத்திப்போட்டுட்டான். எங்க கண்ணாடி கிடைக்கும்? எங்க கண்ணாடி கிடைக்கும்னு அலைய ஆரம்பிச்சாச்சு. அப்பா விசாரிச்சுகிட்டு இருக்கும் போதே எனக்கொண்ணு, அம்மாக்கு ஒண்ணு, பப்பிக்கு ஒண்ணுன்னு லிஸ்ட் ரெடி பண்ணிட்டோம். சாந்தா அக்கா வேலை செஞ்ச கடையில சொல்லி வேற வச்சாச்சு. அப்பறமா கண்ணாடில்லாம் தேவையில்லைன்னு தெரிஞ்ச பிறகுதான் அப்பாக்கு ரிலாக்ஸாச்சு.

பகல் நேரத்துல வீட்ல லேடீஸ் எல்லாரும் பூ கட்டிகிட்டே டிவில நாடகம் பாப்பாங்க. ஸ்கூல்ல மத்தியான நேரம் வேதவல்லி டீச்சர், வீட்டுக்குப்போய் ஒரு பெரிய (நாட்டாமைல வர்றா மாதிரி ஒரு) சொம்புல தண்ணி வாங்கிட்டு வரச்சொல்லுவாங்க. ஸ்கூல்ல வர்ற கிணத்துத்தண்ணி பிடிக்காது அவுங்களுக்கு. கார்த்தி, வீட்டுக்குப்போய் தண்ணி எடுத்துட்டு வான்னுவாங்க. எங்க வீடு ரொம்பப்பக்கம். மூச்சைப் பிடிச்சிட்டு ஓடுனா முப்பதே செகண்டுல போயிடலாம். வீட்டுக்குப் போய் பாத்தா எல்லாரும் உக்காந்துகிட்டு "ஒரு பெண்ணின் கதை" பாத்துகிட்டிருப்பாங்க. தண்ணி கேட்டா கூட கிடைக்காது. நீயே போய் கழுவிட்டு எடுத்துக்கடான்னுடுவாங்க.

அதே மாதிரி "வடிவேலு வாத்தியார்" னு ஒரு தொடர் (அந்த வாத்தியார் நடிகர், பூர்ணம் விஸ்வநாதன் மாதிரி இருப்பாரு, பேரு....? திருடா திருடி படத்துல கூட ஹீரோயினுக்கு அப்பாவா வருவாரே) அது ஒரு நல்லாசிரியர் கதை. அந்த கதையை எங்க ஸ்கூல் வாத்தியாருங்களோட கம்பேர் பண்ணிக்குவோம். அப்பெல்லாம் கார்ப்பரேஷன் ஸ்கூல் / கவர்மெண்ட் ஸ்கூல் / பஞ்சாயத்து ஸ்கூல் தான. கதைகள்ல வர்ற மாதிரி, வாத்தியாருங்கல்லாம் நிஜமாவே ஏழைங்க. இப்போ மாதிரி சிக்ஸ்த் பே கமிஷன் (ஆறாவது ஊதியக் குழு)-லாம் போட்டு சேலரி வாங்கல. இப்போ நான் படிச்ச காலேஜ்ல ஒரு ப்ரொபஸருக்கு அஞ்சு டீக்கடை, மூணு சொந்த வீடு இருக்கு. இன்னொருத்தர் ரெண்டு ஜூஸ் கடை வச்சிருக்காரு, லட்சக்கணக்குல பணத்தை வட்டிக்கு விட்டு சம்பாதிக்கிறாரு (கும்பகோணம் இல்லீங்கோ).

செவ்வாய்க்கிழமை ஸ்டூடியோ செட்ல நடக்குற ஒரு மணி நேர நாடகத்துல நடிச்ச நடிகர் ஒருத்தர் விஜயோட துள்ளாத மனமும் துள்ளும் படத்துல டவுசர் பாண்டியா நடிச்சாரு. பொதிகைல அவரு வர்ற நாடகத்துல எல்லாம் பெரும்பாலும் அவர்தான் ஹீரோ. ஆனா பாவம், சினி பீல்டுல ஒரே படம்தான், ரெண்டாவது படம் ஷூட்டிங் போயிட்டு வரும்போதே ஆக்ஸிடெண்ட்ல போயிட்டாரு. எங்களுக்கெல்லாம் ரொம்ப வருத்தமாப் போச்சு. பழைய நடிகர் ஒரு விரல் கிருஷ்ணாராவ் (அவரு "ப்ரியா" படத்துல ரஜினிக்கு அஸிஸ்டென்டா, சுஜாதாவோட வசந்த் வேஷத்துல நடிச்சிருக்காருப்பா) வேற்றுகிரக மனுஷனா நடிச்ச ஒரு நாடகம் வந்துட்டு இருந்தது. அந்த நாடகத்துல இருந்துதான் விளம்பர இடைவேளை விட ஆரம்பிச்சாங்க. அதுக்கு முன்னாடி எந்த நிகழ்ச்சிக்குமே விளம்பர இடைவேளை கிடையாது.

நமக்கு வெள்ளிக்கிழமை ஒளியும், ஒலியும் மாதிரி மாநில மொழிப்பாடல்களுக்கு (அதாவது தென்மாநில மொழிகள் எல்லாத்துலயும்) சித்ரமாலான்னு ஒரு ப்ரோக்ராம் வியாழக்கிழமை அன்னிக்கு. இப்போ எஸ்.எஸ் மியூஸிக் பண்ணிட்டு இருக்குற வேலையை அப்பவே தூர்தர்ஷன் பண்ணிடுச்சு. கலாசாரக் கோவை மாதிரி நிகழ்ச்சி அது. அதப்பாத்துதான் மத்த மொழி நடிகர்களோட பேர்லாம் தெரிஞ்சுக்குவோம். டவுட்டு வந்தா ராஜேந்திரன் மாமா கிட்ட கேட்டா கரெக்டா சொல்லிடுவாரு, என்ன படம், யாரு டைரக்டர்? மியூஸிக் யாரு? நடிகர், நடிகை பேரு என்னன்னு... ஹிண்டு படிப்பாருல்ல...

அதே மாதிரி.......

கார்த்திக்....

கார்த்திக்....

எஸ் ஸார்...

யப்பா.. பாஸ் கூப்புட்றாரு, போயிட்டு வந்துர்றேன்.

வந்து மிச்ச கதையெல்லாம் பேசுவோம்... என்ன?

மிலே சுரு மேரா துமாரா. தோ சூரு பனே ஹமாரா

வாங்க நண்பா வாங்க. வெல்கம் டு யு. டைட்டில பாத்தவுடனே புரிஞ்சுகிட்டு க்ளிக் பண்ணி உள்ள வந்துருந்தீங்கன்னா நீங்க கண்டிப்பா 22/23 வயசுக்கு கீழ இருக்க மாட்டீங்க. அட்லீஸ்ட் 26 அண்டு எபவ். நம்மள மாதிரி ஆளுகளுக்குத்தான இதெல்லாம் மலரும் நினைவுகள் மாதிரி. ஞாபகம் இருக்கா? 16/18 வருஷத்துக்கு முன்னாடி கதை இது... தூர்தர்ஷன். அப்போதைய சூப்பர் ஸ்டாருல்ல. நமக்கு பொதிகைன்னு தமிழ்ல வருமே.

அது சும்மா ரேடியோ பொட்டிங்க மட்டும் இருந்த காலம். நம்ம அக்காக்கள் அம்மாக்கள்லாம் டிசைன் டிசைனா உல்லன் துணியில ஸ்வெட்டர் தச்சுப் போட்டு அந்தப்பொட்டிய அழகா மூடி வச்சிருப்பாங்க. அது மேல பூனைக்குட்டி போய் படுத்திருக்கும். விவித பாரதி, சிலோன் ரேடியோன்னு பாடிட்டு கிடக்கும் அது. காலைல "ஆகாஷ வாணியின் செய்தியறிக்கை. செய்திகள் வாசிப்பது சரோஜ் நாராயண்சுவாமி"ன்னு கேட்டுகிட்டே எந்திரிப்போம். தென்கச்சியார் வேற சைட்ல வருவாரு. ரெண்டு நிமிஷக் கதைய ஜவ்வா இழுத்து பத்து நிமிஷம் சொல்லி கடைசில தத்துவம் கூட ஒண்ணு சொல்லுவாரு. டி.வி-லாம் அப்போ ரொம்ப ரொம்ப கம்மி. அதுவும் தூர்தர்ஷன் மட்டும்தான்.

ஞாயித்துக்கிழமை காலையில தூர்தர்ஷன்-ல வந்து "மிலே சுரு மேரா துமாரா. தோ சூரு பனே ஹமாரா"னு பாடுவாரு பாலமுரளி கிருஷ்ணா (ன்னு ஞாபகத்துல இருந்தது. ஆனா ஆக்சுவலி அதப்பாடினது பீம்ஷென் ஜோஷின்னு ஒருத்தரு, பெரிய சிங்கருங்கோவ்). பாலமுரளி "நாம் இசைந்தால் இருவரின் சுரங்களும் நமதாகும்" னு பாடுவாரு. ஆனா சும்மா சொல்லக்கூடாதுங்க. என்னா குரல் வளம்?

கூடவே லதா மங்கேஷ்கர், வாணி ஜெயராம், கமல்ஹாசன், பிரகாஷ் படுகோன் (நம்ம தீபிகா படுகோனோட அப்பா), மீனாட்சி சேஷாத்ரி, ஷபனா ஆஸ்மின்னு எத்தன பேரு... வந்து அவுங்கவுங்க லேங்குவேஜூல பாடிட்டு போவாங்க. ஞாயித்துக்கிழமை ஆரம்பமே அசத்தலா ஆரம்பிக்கும். அஞ்சு வயசுல இருந்து பதினஞ்சு வயசு வரைக்கும்னு அரை டிக்கெட்டுங்க எல்லாம் கும்பல் சேந்து டி.வி. பாக்க உக்காந்துக்குவோம்.

அதெல்லாம் ஒரு கனாக்காலம்ங்க. வெள்ளிக்கிழமை சாயங்காலமே மாமா வந்து என் தங்கச்சிய அவுங்க வீட்டுக்கு கூட்டிட்டுப்போயிடுவாரு. அவருக்கு பெண்குழந்தைங்கன்னா இஷ்டம். (அவுங்க வந்தா அத்தைக்கு கூடமாட வேலை செய்வாங்க, நாம செய்வமா?) நாம ஞாயித்துக்கிழமை தான் என்ட்ரி. எங்க வீட்ல டி.வி கெடயாது. மாமா வீட்லதான். அதுவும் பிளாக் & ஒயிட் டி.வி தான். கலர் டி.விலாம் ரொம்ப அதிசயம். ஞாயிற்றுக்கிழமை சாயந்திரம் போடுற படத்தைப்பார்க்க கூட்டம் முண்டியடிக்கும். எங்க வீட்டுக்கிட்ட சில வெவரமான ஆளுங்க டிக்கெட் அம்பது பைசா வச்சு வசூல் பண்ணுவாங்க. செம கலெக்ஷ்ன் ஆகும். (அப்போ சிலேட்டுக் குச்சி அஞ்சு பைசா, தவிட்டு பிஸ்கட் அஞ்சு பைசாக்கு ரெண்டு, குச்சி ஐஸ் பதினஞ்சு பைசா, ரேஷன் மண்ணெண்ணெய் லிட்டர் ஒண்ணே முக்கா ரூபா)

ஞாயித்துக்கிழமை காலைல இராமாமாமாமா....யணம் போடுவாங்க. இராமனையும், சீதாவையும், அந்த ஸ்மைலி கிருஷ்ணனையும் மறக்க முடியுமா? கெழடு கட்டைல இருந்து கால் டிக்கெட்டுங்க வரைக்கும் ஒண்ணா உக்காந்து பாத்த ஒரே நாடகம். இப்போ வர்ற இராமயணம்லாம் சும்மா. அப்புறம் சந்திரகாந்தா-ன்னு ஒரு டப்பிங் நாடகம். போட்டு ஜவ்வு இழு இழுத்தாங்கல்ல. அது முடிஞ்சவுடனே மத்தியானத்துக்கு மாநில மொழித்திரைப்படம். கீழ சப் டைட்டிலோட எல்லா மொழிப்படத்தையும் போடுவாங்க. வங்காளி, போஜ்பூரி, கொங்கணின்னு... சத்யஜித் ரே படம்லாம் கூட போடுவாங்க.

அதுல எப்படா தமிழ்ப்படம் போடுவாங்கன்னு தேவுடு காப்போம். ஆனா பெரியவங்க யாரும் அதை பாக்க மாட்டாங்க. மத்யானம் இட்லிக்கு மாவரைக்க போயிடுவாங்க. அப்பதான வேலையெல்லாம் முடிச்சுட்டு ஈவினிங் உக்காந்து தமிழ் படம் பாக்க முடியும். நொய்யி நொய்யின்னு விளம்பரம் தொந்திரவெல்லாம் கிடையாது அப்ப. ஞாயித்துக்கிழமை ஃபுல்லா இப்டியே போகும்.. ஏண்டா திங்கக்கிழமை வருது, ஸ்கூலுக்குப் போணுமேன்னு கடுப்பா இருக்கும்.

கொஞ்ச நாள் கழிச்சு வெள்ளிக்கிழமையானா ஒளியும் ஒலியும் போட ஆரம்பிச்சாங்க. அரை மணிநேரத்துக்கு சினிமாப் பாட்டு தூள் பறக்கும். (அதுலயும் நோ விளம்பரம்) "அதை ஒரு மணி நேரம் ஆக்கினாலே போதும் மக்கள் நமக்கு ஓட்டு போட்டுடுவாங்க. நாம ஈஸியா ஜெயிச்சுடலாம்"னு படத்துல வசனம்லாம் வந்துது. அவ்ளோ ஃபேமஸ். அதே மாதிரி புதன்கிழமைன்னா ஹிந்தி பாட்டுங்களுக்கு சித்ரஹார்னு ஒன்னு, ரங்கோலின்னு ஒரு ப்ரோக்ராம். அப்புறம் வியாழக்கிழமை திரைமலர்னு சொல்லி அரை மணி நேரம் எதாவது ஒரு படம் (ரேண்டமா செலக்ட் பண்ணி) போடுவாங்க.

அதுக்கப்புறம் ஞாயிறு மட்டுமில்லாம வெள்ளிக்கிழமையும் படம் போட ஆரம்பிச்சாங்க. நைட்டு பத்து மணிக்கு ஆரம்பிச்சு ரெண்டு மணிக்கு முடியும். திரைப்படத்தின் இப்பகுதியை உங்களுக்கு வழங்குவோர் டாபர் லால் தன்த் மஞ்சன், விக்கோ டர்மரிக் (இல்ல காஸ்மடிக்), உஜாலா (சொட்டு நீலம் டோய், ஹோய் ஹோய் சொட்டு நீலம் டோய்), 501 பார் சோப், ஹீரோ சைக்கிள், கோல்கேட், ஹமாரா பஜாஜ், வாஷிங் பவுடர் நிர்மா, மாலா டி, டீலக்ஸ் நிரோத்-னு அது ஒரு பெரிய லிஸ்ட்டே வாசிப்பாங்க. சூப்பரா இருக்கும். அப்பா கடையில இருந்து பூஜை போட்டு கொண்டு வர்ற பொரிகடலை மூட்டையோட படம் பாக்க உக்காந்தா பொரி முடிஞ்சு, கடலை முடிஞ்சு, பட்டாணி எல்லாம் முடிஞ்சு, தேங்காவ காலி பண்ணி, வாழைப்பழத்த முழுங்கி... அதுக்கப்புறம் தான் படம் முடியும்.

அதே மாதிரி, வயலும் வாழ்வும்னு ஒரு நிகழ்ச்சி. சும்மா பட்டையக்கிளப்பும். ஆடு மேய்க்கறது எப்பிடி? பூச்சி மருந்து தெளிப்பது எப்பிடி? உரம் (விஜய் 17-17-17) போட்றது எப்பிடி? வெட்டுக்கிளிய தொரத்தறது எப்பிடி? கரும்பு மகசூல் சாகுபடி முறைன்னு வெரைட்டியா போட்டுத்தாக்குவாங்க. நடுநடுவே கோவணத்தோட திரியிற நம்ம மண்ணின் மைந்தர்களோட பேட்டியும் (நீங்க எத்தன வருஷமா ஆடு மேய்க்கிறீங்க? ஆடு நெறயா புழுக்கை போட்டா என்ன பண்ணுவீங்க? ஆடு மட்டும்தான் மேய்ப்பீங்களா? இல்ல எருமையுமா?) உண்டு.

செவ்வாய்க்கிழமையானா ஒரே ஸ்டுடியோல ஒரே செட்டப்போட்டு அதுக்குள்ளாறயே நடக்குற ஒரு மணி நேர நாடகம் போடுவாங்க, பகல் நேரத்துல திங்கள் முதல் வெள்ளி வரை "சாந்தி..சாந்தி..சாந்தி.." ன்னு ஒரு மெகா சீரியல் (அதாவது நெடுந்தொடர்) இப்போதைய தொடருக்கெல்லாம அண்ணன், அக்கா எல்லாம் அதான். ஹீரோயின் சாந்தி யாரு தெரியுமா? சொன்னா இப்போதைய சின்னப்பசங்க கூட ஜொள்ளு உடுவீங்க. கிரிக்கெட், சிம்பு மற்றும் லோ கட் ஜாக்கெட் புகழ் மந்திரா பேடிதான். (அவுங்களுக்கு இப்போ 37 வயசாம், பாத்தா அப்டியா இருக்கு?) அப்புறம் ஜூனூன்னு ஒரு நாடகம். ஸ்வாபிமான்(சுயமரியாதை)ன்னு ஒண்ணு. எல்லாமே தமிழ் டப்பிங்.

அப்பப்ப நிகழ்ச்சிகளுக்கு நடுவுல "பீய்ங்க்க்....... ன்னு சவுண்ட் குடுத்துகிட்டே.. தடங்கலுக்கு வருந்துகிறோம்னு கார்டு போடுவாங்க வானவில் கலர்ல. புதன்கிழமையானா எதிரொலின்னு ஒரு நிகழ்ச்சி. நேயர்களோட கடிதங்கள படிப்பாங்க. எவ்ளோ திட்டி எழுதிருந்தாலும் நல்லவங்க மாதிரி சிரிச்சுகிட்டே படிப்பாங்க. அந்த காலத்து பி.ஏ படிச்ச அண்ணணுங்க எல்லாம் அதுக்கு லெட்டர் எழுதி போடுவாங்க (அத மட்டும் டிவில படிச்சுட்டாங்கன்னா அவுங்கள கைல புடிக்க முடியாது. டைப் இன்ஸ்டிடியூட் வாசல்ல போயி நின்னுட்டு அக்காங்க முன்னாடி சீன் போடுவாங்க) சனிக்கிழமை நைட்டு "முன்னோட்டம்". அடுத்த ஒரு முழு வாரத்துக்கு வரப்போற நிகழ்ச்சிகளோட லிஸ்ட வாசிப்பாங்க.

இது போக மத்த நாட்கள்லல டர்னிங் பாயிண்ட் இண்டியா, வொண்டர் பலூன் (இதுல சின்ன வயசுல ஏ.ஆர்.ரஹ்மான் கீ போர்டு வாசிச்சிருக்காருப்பா) இராமாயணம் தொடர் முடிஞ்சதும் மகாபாரதம், அலிஃப் லைலா (ஆயிரத்தோரு இரவுகள்), திப்பு சுல்தான், சுரபி (ரேணுஹா சஹானே), ஷா ருக் கான் நடிச்ச "பாஜி", நம்ம மேடி மாதவனோட "ஸீ ஹாக்ஸ்", சின்னக்கலைவாணர் விவேக்கோட "மேல் மாடி காலி", ஒய்.ஜி.மகேந்திரன் நடிச்சு "துப்பறியும் சாம்பு", அவரோட பொண்ணு ஒய்.ஜி.மதுவந்தி யோட அந்தாக்ஷரின்னு எத்தனை சூப்பர்ஹிட் ப்ரோக்ராம்ஸ்.. ஹிட் ரைட்டர் சுஜாதாவோட ஹிட் நாவல் "மீண்டும் ஜீனோ" கூட நாடகமா வந்துது.

எட்ரை மணி டிடி நியூஸ் பயங்கர ஹிட். ஷோலே, பாட்ஷால்லாம் கூட அதுகிட்ட நிக்கக்கூட முடியாது. அதுலயும் நியூஸூன்னா சோபனா ரவிதான், சேலை, ஜாக்கெட், ஸ்டிக்கர் பொட்டு கலர்லாம் மேட்சிங்கா போட்டுட்டு வருவாங்க (நதியாக்கு முன்னாடியே) பிறகு ஃபாத்திமா பாபு கொஞ்சம் ஃபேமஸ், வரதராஜன், நிஜந்தன், ஹேண்டிகேப்டு (சாரிங்க) ஒருத்தரு பேரு மறந்து போச்சி (அழகன் படத்துல கூட வருவாரு). மத்தியானத்துல ஊமை நியூஸ் (ஒரு அக்கா நியூஸ் வாசிக்கும், இன்னோரு அக்கா சைகைல விளக்கம் சொல்லும்-பாராளுமன்றத்துக்கு ஒரு பெரிய வட்டம் போட்டு சைகை காமிக்கும் பாருங்க, செமையா இருக்கும்)

குட்டிப் பசங்களுக்குன்னு கண்மணிப்பூங்கா, காண்போம் கற்போம்னு அறிவுப்பூர்வமான லோக்கல் நிகழ்ச்சிகளும் உண்டு. வெஸ்டர்ன் ஹிட்ஸா ஹீ மேன், ஜங்கிள் புக், டேல்ஸ்பின், டக் (வாத்து) டேல்ஸ், ஸ்பைடர் மேன், ஜெயண்ட் ரோபாட்டுன்னு, டிடிய அடிச்சுக்க யாராலயும் முடியாது.. "சக்திமான்" ஒண்ணு போதும் குட்டீஸூக்கு. சக்திமானா நடிச்சது ஹிந்தி சூப்பர் ஆக்டர் முகேஷ் கன்னா. பார்லே-ஜி அதுலேர்ந்துதான் ரொம்ப ஃபேமஸ் ஆச்சு. கேப்டன் வ்யோம்-னு மும்பை மாடல் மிலிந்த் சோமன் நடிச்ச தொடர் ஒண்ணு(பச்சைக்கிளி முத்துச்சரம்ல ஜோதிகாக்கு ஜோடியா வருவாரே - நீள முடி வில்லன், அவர்தான்).

இப்படி வெரைட்டியா வெளுத்துக்கட்டி தனிக்காட்டு ராஜாவா ரொம்ப நாள் இருந்ததுதுங்க தூர்தர்ஷன். அப்புறமாதான் கொஞ்சம் கொஞ்சமா கேபிள் டி.விங்க வர ஆரம்பிச்சுது. முதல்ல பெரியண்ணன் சன் டி.வி. ஒரு நாளைக்கு ரெண்டு மணி நேரம், மூணு மணி நேரம்னு ஆரம்பிச்சாங்க. அத அப்படியே 24 மணி நேரமாக்கி, தம்பி தங்கச்சிங்களா நிறைய சேனல் ஆரம்பிச்சு, சினிமாவுக்குன்னே ஒரு தனி சேனல போட்டு... இப்போ தான் உங்களுக்கே தெரியுமே. எத்தனை சேனல். இதனால நம்ம ஊர்கள்ல புறநகர்ப்பகுதியில இருந்த சினிமாத் தியேட்டருங்களையெல்லாம் மூட வேண்டிய அளவுக்கு ஆகிப்போச்சு நிலைமை. "வேக வேகமாக மூடப்பட்டு வரும் புறநகர்ப்பகுதி சினிமாக்கொட்டகைகள்-ஒரு சிறப்புப் பார்வை"ன்னு அதுக்கு அவுங்களே அதுக்கு ஒரு நியூஸூம் போட்டாங்க. "வெயில்" பிளாஷ்பேக்ல கூட வருமே.

ஆனா என்னதான் இருந்தாலும் சளைக்காம அடிக்கறதுன்னா நம்ம தூர்தர்ஷனை மிஞ்சற ஆள் என்னைக்குமே கிடையாது. எத்தனை சன் வந்தாலும் இன்னைக்கும் கன் மாதிரி நிக்கிறாங்கல்ல.

சிட்டி பஸ்ஸூ..!

நம்ம மெட்ராஸூல ரொம்ப பேமஸ் எதுங்க? "பீச்சு"ன்னு சொல்லாதீங்க. அதான் தெரியுமே? அப்போ.. செத்த காலேஜ்? சத்யம், தேவி, ஐனாக்ஸ்? அட! வேற என்னப்பா? டைட்டில்லயே கொடுத்திருக்கேனே, அதையும் கொஞ்சம் கவனியுங்களேன். பஸ்ஸுங்கோ பஸ்ஸு. சிட்டி பஸ்ஸூ.
நம்ம மெட்ராஸ் (சென்னைன்னு நீங்க மாத்திட்டா அதை நாங்க கேட்கணுமா? எங்களுக்கு இன்னும் மெட்ராஸ் தாங்க) சிட்டியில மட்டும் நெறைய ஸ்பெஷல் பஸ்ஸூங்க உண்டு. அதுக்கு சிட்டி பஸ்ஸூன்னு அழகா ஒரு பேரும் உண்டு. அண்ணா போக்குவரத்துக்கழகம், பல்லவன் போக்குவரத்துக்கழகம், எம்.டி.ஸி ன்னு என்னா பேரு வையி. சிட்டி பஸ்ஸூன்னு சொன்னாதான் நல்லா இருக்குது. அதுல டிராவல் பண்றதே அலாதி(!) சுகம்தான்.
ஆனா கொஞ்சமாச்சும் ரிஸ்க் எடுக்கணுமில்ல. லோக்கல் ஆளுங்களுக்கு ஓ.கே. பழகிட்டாங்க. ஆனா எவனாவது வெளியூர்க்காரன் வந்தான்... செத்தான். அவங்க ஊர்ல கவர்மென்ட் பஸ்ஸோ தனியார் பஸ்ஸோ.. டி.வி., எஃப்.எம், ரேடியோன்னு குஷியா டிராவல் பண்ணிருப்பான். ஏன்? சில ஊர்கள்ல டிவிடில புதுப்படமே போடுறாங்க லோக்கல் பஸ்ல. இங்க வந்தா அவங்களுக்கு அதிர்ச்சிதான் மிச்சம். இதுல எதுவும் நம்ம சிட்டி பஸ்கள்ல இருக்கவே இருக்காது.
ஓனிக்ஸ் வண்டிதான். (சாரி... சாரி...) கான்டிராக்ட் மாறிடுச்சுல்ல. நீல் மெட்டல் வண்டில ஏறிட்டமோன்னு சந்தேகத்தோடதான் உள்ள வருவாரு நம்மாளு. (என்ன நம்மாளா? ஆமாம். நம்ம ஊருக்கு வந்துட்டாருல்ல. அப்ப நம்மாளுதான்) அம்பூட்டு குப்பை இருக்கும். கூடவே மண்ணு போனஸ். அதுலயும் டிரைவர் அண்ணாத்தயச் சுத்தியிருக்குற இடத்தைப்பாத்தா மயக்கமே வந்துரும். குப்பைத்தொட்டியை விட சூப்பரா இருக்கும். சுத்தமா? மூச்! எப்டிதான் அதுக்குள்ளாற உக்காந்துகினு வண்டி ஓட்டறாங்களோன்னு நீங்களே சர்டிபிகேட் கொடுப்பீங்க.
கண்டக்டர் குடுப்பாரு சீட்டு. உக்கார இல்லீங்கோ. அது பயணச்சீட்டு. அப்போ உக்கார்ற சீட்டு? உக்கார்ற சீட்டா? அப்டின்னா? ரெக்ஸின் இருந்தா பஞ்சு இருக்காது. பஞ்சு இருந்தா ரெக்ஸின் இருக்காது. ரெண்டும் இருந்தா கம்பி இருக்காது. கம்பி இருந்தா சாயுறதுக்கு பலகையே இருக்காது. இந்த பஸ்ஸையெல்லாம் அப்பப்போ "ஆய்வுக்காக"ன்னு கம்பீரமா போர்டு போட்டு ஊரையே சுத்தி வருவாங்க. ஆனா "ஓய்வுக்காக" போக வேண்டிய வண்டியை எல்லாம் பட்டி பாத்து டிங்கிரிங் பண்ணி மறுபடியும் உட்டா என்னத்துக்கு ஆகும் சொல்லுங்க?
என்னடா நீ. இப்படியே புலம்பிகிட்டு இருக்க. சமீபத்துல தான் நம்ம முதல்வரய்யா புதுசு புதுசா எண்ணூறோ ஆயிரமோ வண்டிங்க உட்டாரே. அதெல்லாம் என்னாச்சுங்கறீங்களா? வர்றேன், வர்றேன்.. அதுங்கல்லாம் தாங்க கொஞ்சம் பரவாயில்லை. நல்லா ஓடுது. ஆனா... சீட்டு சைஸையும் அதுங்களுக்கு இடையில இருக்குற கேப்பையும் கம்மி பண்ணிபுட்டாய்ங்களே. நம்மள மாதிரி சன்னமா இருந்தா பரவாயில்ல. ரெண்டு பேர் இடிச்சு புடிச்சு உக்காந்துடலாம். ஆனா வர்றதெல்லாம் சகாதேவன், மகாதேவன், கணேஷ்கர், ஆர்த்தி சைஸுலயில்ல இருக்கு. எப்பிடி அட்ஜஸ்ட் பண்ணுறது? இது பரவாயில்லை. கொஞ்சம் பிதுங்கியாச்சும் உக்காந்துடலாம். ஆனா இப்ப இருக்குற புள்ளைங்கல்லாம் சாதாரண ஹைட்டா இருக்காங்க? காம்ப்ளானும் ஹார்லிக்ஸூமா குடிச்சு ஒண்ணொண்ணும் இஷாந்த் ஷர்மா உயரத்துல வளந்திருக்குதுங்களே. அப்போ முன்னாடி சீட்டுல கால் இடிக்குமா? இடிக்காதா? (யோசிங்க மக்களே! யோசிங்க).
இதுல இன்னொன்னு.. நெறைய புது பஸ்ஸூகள்ல வெல்வெட் துணியில சீட் தச்சுருக்காங்க. மழை கிழை வந்துச்சு. அவ்ளோதான்... அழுக்குத் தண்ணி தங்கிடும். வெயில் நாள்ல தூசியும் மண்ணும் சேரும். எது எப்டியிருந்தாலும் மொத்தத்துல நம்ம டிரஸ்ஸூ... அரோகரா (இல்லைன்னா.. கோவிந்தா) தான்.
இன்னொரு விஷயம். இங்க தனியார் பஸ்ஸூங்க கிடையவே கிடையாது. கஷ்டமோ நஷ்டமோ எம்.டி.ஸி (அட.. கவர்மென்ட் பஸ்ஸூதாம்பா) தான். ஒரு ஸ்டாப்புல நிக்குற வண்டி அடுத்த ஸ்டாப்புல நிக்காது. எல்லாம் ஒண்ணு விட்ட சித்தப்பா, ஒண்ணு விட்ட பெரியப்பா பையன் கதைதான். அதாவது... ஒரு பஸ் ஸ்டாப் விட்டு ஒரு பஸ் ஸ்டாப்ல தான் நிக்கும். அப்பால வேற இன்னா? மஞ்சள் போர்டு, பச்சை போர்டு, வெள்ளை போர்டு, டீலக்ஸ், எக்ஸ்பிரஸ், டிரெய்லர், தாழ்தள சொகுசுப்பேருந்து, ஏ.ஸி, மொபசல்னு டிசைன் டிசைனா வண்டிங்க இருக்கும். ஒவ்வொன்னுலயும் ஒவ்வொரு விதமான டிக்கெட் வசூல் உண்டு.
எந்த பஸ்ஸூல என்ன டிக்கெட் ரேட்டுன்னு (ஒரே ஸ்டாப்பு, ஒரே ஏரியா, மனப்பாடம் பண்ண ஒரு வாரம் டைம் குடுத்தும்) கரெக்டா யார்னா சொல்லிட்டா அவங்களுக்கு ஒரு பஸ்ஸயே எழுதி வக்கலாம். அவ்ளோ கன்ஃப்யூஷன். ஆனா சும்மா சொல்லக்கூடாது. யாருக்கோ பிரிண்ட் அடிச்ச பழைய டிக்கெட்ட கிழிச்சு கொடுத்து உங்கள அவமானப்படுத்த மாட்டாங்க. உங்கள மதிச்சு உங்களுக்காகவே ஸ்பெஷலா மெஷின் வச்சு டிக்கெட்ட பிரிண்ட் அடிச்சுதான் குடுப்பாங்க. அதுவும் தங்கத்தாய்மொழியாம் தன்னிகரில்லாத தமிழ்ல.
அப்பால இன்னொன்னு... தாழ்தள சொகுசுப் பேருந்துகள்ல ஆட்டோமேடிக் கதவு. நீ ஏறுனவுடனே மூடிக்கும். பாதுகாப்பானது. ஆனா டிரைவராண்ட இருக்குது சுட்சு. மேட்டர் இன்னன்னா... நீ ஏறிட்டியா இல்லையான்னு அவருக்கு தெரியாது. கூட்டம் அதிகமா இருக்கும் போது உனக்கு எதிரி மூடுற கதவே தான். நீ காலி. நசுங்கிடுவே, இல்ல பிதுங்கிடுவே. கண்ணுக்கு குளிர்ச்சியா கலர் கலரா வரும் பஸ்ஸூ. இதெல்லாம் கவருமெண்டு பஸ்ஸான்னே சொல்ல முடியாது. அவ்ளோ அழகா இருக்கும். ஆனா வழக்கம் போல நம்ம கலாசாரப்படி, மின்னாடி பின்னாடின்னு நோட்டீசு ஒட்டி (கவர்மெண்ட் தனியா, பிரேவேட் தனியா) அசிங்கப்படுத்திருப்பாங்க.
ஒரு பஸ்ஸூ பயங்கர கூட்டத்தோட வந்தா யோசிக்கவே கூடாது. அத உட்ரணும். முப்பதே செகண்டுல அதே நம்பர்ல இன்னொரு பஸ்ஸூ காலியா வந்து அசரடிக்கும். அதுவுமில்லாம ஒரே பஸ் ஸ்டாப்ல மூணு வெவ்வேற இடத்துல வண்டிங்க நிக்கும். உங்க வண்டி எங்க நிக்கும்னு கண்டு பிடிக்க அரை அவர் ஆகும். (டிரைவர் என்ன உங்கண்ணனா? ஒரே இடத்துல நிறுத்த. அவன் இஷ்டத்துக்குதான் நிறுத்துவான்(ர்)).
அப்போ கண்டக்டரண்ணன்? தன் பங்குக்கு ஏதாவது செய்யணுமில்ல. தல சீட்ட உட்டு எந்துருச்சே வர மாட்டாரு. பணத்தை பாஸ் செஞ்சு தான் அனுப்பனும். இதனால டிக்கெட் மாறிப்போகலாம். சில்லறை தவறிப்போகலாம். அது உன் ரிஸ்க்கு. பஸ் காலியாவே இருந்தாலும் சில கண்டக்டர்கள் எந்திரிச்சு வர்றதில்ல. அவுங்க இடத்துக்கு போய் டிக்கெட் வாங்கணும். நீ வித் அவுட்ல போற ஐடியா இருந்தா ஜாலிதான். உனக்கு சாதகமாகும். ஆனா செக்கிங் வந்தா மாட்ன பங்காளி.. பீ கேர்ஃபுல்.
நெறைய பஸ்ஸூல இறங்குறதுக்கு முன்னாலயே விசில் அடிச்சுடுவாங்கோ. கேட்டா சீக்கிரம் இறங்கித்தொலைய வேண்டியதுதானேம்பாங்கோ. சிக்னல்ல இறங்க வேண்டியதுதானம்பாரு ஒரு கண்டக்டரு. சிக்னலில் இறங்குறியே அறிவில்ல-ம்பாரு இன்னொரு கண்டக்டரு. என்னா பண்றதுன்னு உனுக்கு குழம்புமா? குழம்பாதா? ஆனா நூறு மீட்டருக்கு ஒரு சிக்னல் வேற இருக்கும். பாத்துக்கோ. அப்போ ஸ்லோவாப்போகுமில்ல. இறங்கிடலாமேன்னு ஊர் ஞாபகத்துல யோசிக்காத. பஸ்ஸூக்கு சைடுல எமன் வருவான். எமனா? என்னா வண்டியில? பல்சரு.. ஹோண்டா.. ஷேர் ஆட்டோ.. நேனோ.. தண்ணி லாரி.. அட ஆம்புலன்ஸே கிடைச்சாலும் ஏறி வருவான் எமன். நீ ரன்னிங்குல இறங்குன... மவனே எதுனா வண்டியோட வீலுக்குல்லதான் போவ.. ஜாக்ரதை.
நீள நீளமா டிரெய்லர் பஸ்ஸூ உட்ருப்பாங்க. ஒண்ணே முக்கா வண்டி சைஸூக்கு இருக்கும். பெரிய சைஸூ. பெரிய படிக்கட்டு. வசதியான சீட்டுங்க. எல்லாமே சூப்பரா இருக்கும். எல்லாம் நல்லா இருந்தா ஏன் வரமாட்டான் எடக்கு நாட்டான்? ரெண்டு கண்டக்டருங்க இருப்பாங்க அதுல. ஆளுக்கொரு நேரத்தில் விசிலடிச்சு டிரைவரையே குழப்பி உட்ருவாங்க. அப்பால ஏது நிம்மதி?
அப்போ என்ன பண்லாம். ஏ.ஸி பஸ்ஸூல போலாமா? போலாமே.. ஏ.ஸி பஸ்ஸூங்க தான் கை நீட்ற இடத்துலல்லாம் நிக்கும். கேட்குற இடத்துலல்லாம் நிறுத்தி இறக்கி விடும். ஆனால் பீக் அவர் டிராஃபிக்ல அதுவும் முடியாது. ஏன்னா ஏ.ஸி பஸ்ஸூலயும் ஸ்டாண்டிங்கிலயும் போவாங்க பயணிங்க. ஆனா டிக்கெட் ரேட்ட கேட்டியானா மூச்சு வாங்கும். பாத்துக்க. சிட்டி முழுக்க நிறைய சிட்டி பஸ்ஸூ இருந்தாலும் தேவையான அளவு பஸ்ஸூ இல்லை. டூ வீலர், வேன், கார், ஆட்டோ, ஷேர் ஆட்டோ, பஸ், ரயில், டாக்ஸி என எது கிடைச்சாலும் ஏறிப்போய்டு. அப்பத்தான் நேரத்துக்கு வேலைக்குப்போய்ச் சேரலாம். இல்லின்னா அவ்ளோதான். லாஸ் ஆஃப் பே. முதலாளிகிட்ட திட்டு.
மழை நாளு.. மனித சங்கிலி நாளுன்னு போராட்டம் நடந்துச்சா.. ஜம்முன்னு பஸ்ஸ உட்டு இறங்கி நடந்துடு. செங்கல்பட்டுக்கே போகணும்னாலும் நடைதான் பெஸ்ட்டு. சும்மா இல்ல. அஞ்சு ஆறு மணி நேரம் டிராபிக் ஜாமாவும். வழியில இறங்கி டிரெயின் மாறிப்போகலாம். ஆனா திடீர்னு ஒன் அவருக்கு ஒரு டிரெயின்தான்னு சொல்லிடுவாங்க. உனக்கு மெட்ராஸ சுத்திப் பாக்குற வாய்ப்பும் போயிடும். நைட் நேரத்துல நெறையா வண்டிங்க திடீர் திடீர்னு பிரேக் டவுன் ஆயி நிக்கும். அதையும் மேனேஜ் பண்ணப் பழகிக்கணும்.
வெளியூரு நண்பா... இத்தயெல்லாம் உனக்கு வெளாவாரியா ஏன் சொல்றேன்னா... லைஃபுல ஒரு தபாவாச்சும் மெட்ராஸூக்கு போகணும், செத்த காலேஜ், மெரினா பீச் பாக்கணும், காணாமப் போன அத்த பொண்ண கண்டு பிடிச்சு கல்யாணம் பண்ணிக்கணும், எம்.ஜி.ஆர் சமாதில காது வச்சு வாட்ச்சு ஓடுதான்னு கேட்கணும்னு உனக்கும் பல லட்சியங்கள் இருக்கும். அப்டி வரும்போது நீ கஷ்டப்படக்கூடாதில்ல.. அதுக்குத்தான். இதப் படிச்சு வச்சுக்கோ. வரும்போது கொஞ்சம் கூடுதலா கற்பனை பண்ணிக்கோ. சிம்பிள்.

அவனா நீ...

அவனவன் என்ன எழுதலாம்னு மண்டையையும் கீ போர்டையும் உடைச்சுகிட்டு இருக்குற நேரத்துல தான் நாம படிக்கவே ஆரம்பிக்குறது. அப்பால நிதானமா என்ன தோணுதோ உக்காந்து எழுத (அடிக்க) ஆரம்பிக்குறது. நானும் அதே மூட்லதான் இருந்தேன். ஆனா இந்த சீனிப்பயதான் எதுக்கு புதுசா யோசிக்கணும்.. நம்ம சொந்தக்கதை, வெந்தக்கதையெல்லாம் சொன்னாலே போதும். செமையா இருக்கும்னான். பயபுள்ளக்கி நான் பல்பு வாங்குன கதைய நாலு பேர்ட்ட சொல்றதுல அப்டி ஒரு சந்தோசம்.

----- நல்லா படியுங்க.. உங்களுக்கு காமெடியாதான் இருக்கும். டிராஜிடியா எனக்குத்தான -----

ஒருதபா ஆபீஸூல (நம்ம கம்பெனிய ஒரு பெரிய குரூப்பு கம்பெனி வாங்கிபுடுச்சிங்க) முக்கியமான ஒரு மீட்டிங்கு ஏற்பாடு பண்ணுணாங்க. மீட்டிங் கோ ஆர்டினேசனா? இந்த கார்த்திய கூப்புடும்பாரு வாசு சாரு. நானும் போயி பெருந்தன்மையா எல்ப் பண்ணிட்டு வருவேன். நமக்கு சம்மந்தமிருக்கோ இல்லையோ எதுக்கு சான்ஸை உடணும்னு ஒரு ஆசைதான். அன்னிக்கும் அப்டித்தான். ஆனா அந்த மீட்டிங் முடிய எட்டரை ஆயிடுச்சு. ஆபீஸூல எல்லா பயலுவலும் எஸ்கேப். உள்ளாற மீட்டிங்குல இருந்த ஆளுக மட்டும் கொட்டாவி உட்டுகிட்டே வெளிய வருதுங்க.. (பின்ன சாண்ட்விச்சும் குட் டே பிஸ்கட்டுமாத் தின்னா?)

சரி. ஆனது ஆயிப்போச்சு. அட்மின் ஆளுங்க ஒர்த்தனையும் காணோம். போயிட்டாங்க. அந்த புரஜக்டர (ஒரு லட்ச ரூபா ஒர்த்து) பத்திரமா உள்ளாற எடுத்து வச்சுடலாம்னு கீழ் புளோருல ஒரு டேபிள்ல வச்சுப்பூட்டி சாவியத்தூக்கி மேல் பாக்கெட்டுல.. வேணாம்னு.. கீழ் பாக்கெட்டுல பத்திரமா போட்டுகிட்டு கிளம்பிட்டேன். நாதாறிப்பசங்க (சாரி.. கோவிச்சுக்காதீங்க. அவ்ளோ கோவம் எனக்கு) மறுநாளும் மீட்டிங் இருக்குன்றத எவனுமே என்கிட்ட சொல்லல.

மறுநாள் நானும் வழக்கம் போல நிதானமா (நாம என்னைக்கு ஒம்பதரைக்கு முன்னால வந்துருக்கோம் - எட்டரை ஆபீஸூக்கு) கெளம்பி பஸ்ஸேறி வந்துகிட்டிருக்கேன்.. வருதுய்யா வரிசையா போனு மேல போனு.. எங்கருக்க எங்கருக்கன்னு. மீட்டிங் ஆரம்பிச்சுடுச்சு. புரஜக்டர் எங்கன்னு கேக்குது இந்த ஜோதி. என்னன்னு நான் பதில் சொல்ல? என்னது ஜோதி யாரா? அதாங்க நம்ம ரிசப்ஷனிஸ்டு. நாம அப்பதான் ஏர்போர்ட்டயே தாண்டி கத்திப்பாரா ஜோதி ஏறிக்கிட்டிருக்கோம். ஆபீஸ் வர சத்தியமா முக்கா மணி நேரமாவும். இதுங்க என்னடான்னா அஞ்சே நிமிசத்துல வா-ங்குதுங்க.. பறந்தா வர முடியும்..? ஆனா டேபிள் சாவி எங்கிட்ட இருக்குது. என்ன பண்றது?

ஆய் ஊய்ன்னு ஆளாளுக்கு சவுண்டு உட்டுப்பாத்தாங்க.. ஆனா என்ன பண்ண? நம்ம நிதானமா குடுத்த ரிப்ளைல டர்ராகி.. எப்படியாவது ஒரு இருவது நிமிசத்துக்குள்ளார வரப்பாருன்னு கெஞ்ச ஆரம்பிச்சுட்டாங்க. நானும் கிண்டி தாண்டி சைதாப்பேட்டை வந்தாச்சு. நம்ம டிராபிக் தெரியாதா? சாதாரண ஜாமில்ல.. கிஸான் ஜாமு ரேஞ்சுக்கு டிராபிக்கு. ஆனா போனு வந்துகிட்டேயிருக்கு.. எனக்கும் கை காலு உதற ஆரம்பிச்சுடுச்சு. சரி ஒரு ஆட்டோ புடிச்சாவது போய்த்தொலைவோம்னு பஸ்ஸ உட்டு எறங்கிட்டேன்.

எறங்கி ஆட்டோ புடிக்கலாம்னு பாத்தா அந்த ஜாமுல எவன் வருவான்? அப்டியும் ஒருத்தன் மாட்னான்.. அவன்ட்ட ஆட்டோ வருமான்னேன். அவன் என்ன மூட்ல இருந்தானோ.. கனல் கண்ணன் மாதிரி (முதல்வன்பா) செய்கையோட .."வருமே... தூக்கி தலைல வச்சுக்கோ... வரும்-னான்" கொலவெறியோட அவன் சொன்னதப்பாத்து பயந்து அவன்ட்ட இருந்து எஸ்கேப்பாயி சைதாப்பேட்டை சர்ச்சுகிட்ட ஒரு ஆட்டோவ புடிச்சி (மறிச்சி) ரன்னிங்குலயே ஏறிக்கிட்டு வேகமாப்போய்யான்னா போறான்யா அப்டி ஒரு ஸ்பீடு.

என்னா ஸ்பீடுங்கிறீங்க. சர்ச்சாண்ட நடந்து போயிட்டு இருந்த ஒருத்தர் எங்க ஆட்டோவ ஓவர்டேக் பண்ணிட்டு பேயிட்டாரு. அதப்பாத்து கடுப்பான நான் உட்டேன் பாருங்க ஒன்னு.. என்ன அடியா? உதையா? ன்னாதீங்க. இவ்ளோ சன்னமா இருந்து கிட்டு அதெல்லாம் பண்ண முடியுமா? நான் உட்டது டயலாக்தான். ஒண்ணும் பெரிசா கேக்கலை.. பழைய டயலாக்தான். "இது ஆட்டோவா? மாட்டு வண்டியா"ன்னு தான் கேட்டேன். இதுக்கு போய் டென்ஷனாயிட்டான் அவன். அப்டி ஒரு மொறை மொறைச்சான் பாருங்க...

அப்போதான் வந்துது மறுபடி போனு.. எங்க இருக்க? புரஜக்டர் என்னாச்சுன்னு? ஆட்டோக்காரன் கூட சண்டை போட்டுட்டிருந்த கடுப்புல நானு... "இதோ வந்து எடுத்து தர்றேன்யா என் இதே..." ன்னு சொல்லிட்டேன். அப்பால தான் தெரியும் ஆபீஸூல (அதுவும் கான்பரன்ஸ் ஹால்ல) டெலிபோன ஸ்பீக்கர்ல போட்டிருக்கானுங்கன்றது... அதுக்கப்புறம் என்னத்தப்புலம்பி என்ன பண்றது..

மொத்தம் இருபத்தி அஞ்சு பேரு.. மீட்டிங்குல... 8 ஜி.எம்மு. 4 ஏ.ஜி.எம்மு. 7 சீனியர் மேனேஜருங்க, ரெண்டு மேனேஜருங்க.. 4 பேரு டாப் மேனேஜ்மெண்டு (அதாம்பா.. சஞ்சய் ராமசாமி கணக்கா பிளைட்ல இருந்து டயம் பாத்து கிட்டே எறங்கற ஆளுங்க) இதுல சிஸ்டம்ஸ் (கஸ்டம்ஸ் இல்லிங்க. சிஸ்டம்ஸ்) டிபார்ட்மெண்டு ஆளு ஒர்த்தன். எல்லாரும் நமக்காகத்தான் வெயிட்டிங். ஒரு வழியா வந்துட்டமில்ல.. ஆனா டைமு? அதிகமில்லை ஜென்டில்மேன்.. ஜஸ்ட் ஒம்போது நாப்பதுதான். (மீட்டிங் ஸ்டார்ட் ஆனது எட்ரைக்கு) இதுல நமக்கு அட்டெண்டன்ஸ் பஞ்ச் கார்டு வேற. தலவலி.

தடாபுடான்னு ஓடிப்போய் டேபிளத்தொறந்து புரஜக்டர அள்ளி எடுத்து அவன் கைல குடுத்துட்டு அப்பாடான்னு ரிலாக்ஸாயி உக்காந்தேன். (இதெல்லாம் சகஜம்தான, இதுல என்ன பல்புன்றீங்களா? வெய்ட்டுப்பா வெய்ட்டு) நன்னாரிப்பய.. நீயும் வான்னு காலரப்புடிச்சு கான்பரன்ஸ் ஹாலுக்குள்ள என்னயும் இழுத்துட்டுப்போய்ட்டான். உள்ள போயி "திஸ் ஈஸ் கார்த்திக்"னு இன்ட்ரோ வேற. நானும் வழிஞ்சுகிட்டே குட்மார்னிங் சொன்னேன்.

சரி ஆனது ஆயிப்போச்சு.. அட்றா புட்றான்னு தூக்கிப்போட்டு, இருக்குற ஒயரயெல்லாம் கனெக்ட் பண்ணி ரிமோட்டக்குடுத்து லேப்டாப்ப ஆன் பண்ணி சுட்சப் போட்டா "புர்..."ன்னு ஒரு சத்தம். (தொப்பி.. தொப்பி..) என்ன கருமமோ? என்ன இழவோ? புரஜக்டர் அவுட்டு. (நேத்து வரைக்கும் நல்லாத்தானய்யா இருந்தது?) நம்ம பய சிஸ்டம்ஸூ.. தடவித்தடவிப்பாத்தான். ஒண்ணும் வேலைக்காவல.. சைடா என்னையும் பாத்தான். நானென்ன கம்ப்யூட்டருக்கா படிச்சுருக்கேன் பதில் சொல்ல..? ராவணன்ட்ட தனியா மாட்டுன ஜடாயு கணக்கா நின்னேன் நானு..

அப்டியே இருபத்தஞ்சு தலையும் திரும்பி என்னப்பாத்துது "அவனா நீ-ன்னு". அவ்ளோதான். மாவ அள்ளி மொளகாத்தூளப்போட்டு பிசைஞ்சு வாழக்காய உரிச்சி பீஸ் பீஸா சீவி, கொதிக்கிற எண்ணையில போட்டு... சொர்-ன்னு ஒரு சத்தம்...
அடுத்த நிமிஷம் ஹாலுக்கு வெளில சோபால கெடந்தேன்.

அன்னிலேர்ந்து இன்னி வரைக்கும் இன்க்ரிமெண்டப்பத்தி ஒரு வார்த்த கேட்டிருப்பேன் நானு... ம்ஹூம்.. மூச்சு விடமாட்டேனே...

-------

நண்பர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள். தமிழிஷில் அதாவது இட்லியில், ஸாரி, இன்ட்லியில்.... ஓட்டும் போடுங்கள். மறக்காமல்.

-------

பின்னூட்டத்தில் கருத்துக்கள் சொன்னால்தானே கட்டுரை எப்படி இருக்கிறதென்று எனக்குத் தெரியும்? பின்னூட்டம் போடுங்கள்..

-------