வியாழன், 17 செப்டம்பர், 2009

சிட்டி பஸ்ஸூ..!

நம்ம மெட்ராஸூல ரொம்ப பேமஸ் எதுங்க? "பீச்சு"ன்னு சொல்லாதீங்க. அதான் தெரியுமே? அப்போ.. செத்த காலேஜ்? சத்யம், தேவி, ஐனாக்ஸ்? அட! வேற என்னப்பா? டைட்டில்லயே கொடுத்திருக்கேனே, அதையும் கொஞ்சம் கவனியுங்களேன். பஸ்ஸுங்கோ பஸ்ஸு. சிட்டி பஸ்ஸூ.
நம்ம மெட்ராஸ் (சென்னைன்னு நீங்க மாத்திட்டா அதை நாங்க கேட்கணுமா? எங்களுக்கு இன்னும் மெட்ராஸ் தாங்க) சிட்டியில மட்டும் நெறைய ஸ்பெஷல் பஸ்ஸூங்க உண்டு. அதுக்கு சிட்டி பஸ்ஸூன்னு அழகா ஒரு பேரும் உண்டு. அண்ணா போக்குவரத்துக்கழகம், பல்லவன் போக்குவரத்துக்கழகம், எம்.டி.ஸி ன்னு என்னா பேரு வையி. சிட்டி பஸ்ஸூன்னு சொன்னாதான் நல்லா இருக்குது. அதுல டிராவல் பண்றதே அலாதி(!) சுகம்தான்.
ஆனா கொஞ்சமாச்சும் ரிஸ்க் எடுக்கணுமில்ல. லோக்கல் ஆளுங்களுக்கு ஓ.கே. பழகிட்டாங்க. ஆனா எவனாவது வெளியூர்க்காரன் வந்தான்... செத்தான். அவங்க ஊர்ல கவர்மென்ட் பஸ்ஸோ தனியார் பஸ்ஸோ.. டி.வி., எஃப்.எம், ரேடியோன்னு குஷியா டிராவல் பண்ணிருப்பான். ஏன்? சில ஊர்கள்ல டிவிடில புதுப்படமே போடுறாங்க லோக்கல் பஸ்ல. இங்க வந்தா அவங்களுக்கு அதிர்ச்சிதான் மிச்சம். இதுல எதுவும் நம்ம சிட்டி பஸ்கள்ல இருக்கவே இருக்காது.
ஓனிக்ஸ் வண்டிதான். (சாரி... சாரி...) கான்டிராக்ட் மாறிடுச்சுல்ல. நீல் மெட்டல் வண்டில ஏறிட்டமோன்னு சந்தேகத்தோடதான் உள்ள வருவாரு நம்மாளு. (என்ன நம்மாளா? ஆமாம். நம்ம ஊருக்கு வந்துட்டாருல்ல. அப்ப நம்மாளுதான்) அம்பூட்டு குப்பை இருக்கும். கூடவே மண்ணு போனஸ். அதுலயும் டிரைவர் அண்ணாத்தயச் சுத்தியிருக்குற இடத்தைப்பாத்தா மயக்கமே வந்துரும். குப்பைத்தொட்டியை விட சூப்பரா இருக்கும். சுத்தமா? மூச்! எப்டிதான் அதுக்குள்ளாற உக்காந்துகினு வண்டி ஓட்டறாங்களோன்னு நீங்களே சர்டிபிகேட் கொடுப்பீங்க.
கண்டக்டர் குடுப்பாரு சீட்டு. உக்கார இல்லீங்கோ. அது பயணச்சீட்டு. அப்போ உக்கார்ற சீட்டு? உக்கார்ற சீட்டா? அப்டின்னா? ரெக்ஸின் இருந்தா பஞ்சு இருக்காது. பஞ்சு இருந்தா ரெக்ஸின் இருக்காது. ரெண்டும் இருந்தா கம்பி இருக்காது. கம்பி இருந்தா சாயுறதுக்கு பலகையே இருக்காது. இந்த பஸ்ஸையெல்லாம் அப்பப்போ "ஆய்வுக்காக"ன்னு கம்பீரமா போர்டு போட்டு ஊரையே சுத்தி வருவாங்க. ஆனா "ஓய்வுக்காக" போக வேண்டிய வண்டியை எல்லாம் பட்டி பாத்து டிங்கிரிங் பண்ணி மறுபடியும் உட்டா என்னத்துக்கு ஆகும் சொல்லுங்க?
என்னடா நீ. இப்படியே புலம்பிகிட்டு இருக்க. சமீபத்துல தான் நம்ம முதல்வரய்யா புதுசு புதுசா எண்ணூறோ ஆயிரமோ வண்டிங்க உட்டாரே. அதெல்லாம் என்னாச்சுங்கறீங்களா? வர்றேன், வர்றேன்.. அதுங்கல்லாம் தாங்க கொஞ்சம் பரவாயில்லை. நல்லா ஓடுது. ஆனா... சீட்டு சைஸையும் அதுங்களுக்கு இடையில இருக்குற கேப்பையும் கம்மி பண்ணிபுட்டாய்ங்களே. நம்மள மாதிரி சன்னமா இருந்தா பரவாயில்ல. ரெண்டு பேர் இடிச்சு புடிச்சு உக்காந்துடலாம். ஆனா வர்றதெல்லாம் சகாதேவன், மகாதேவன், கணேஷ்கர், ஆர்த்தி சைஸுலயில்ல இருக்கு. எப்பிடி அட்ஜஸ்ட் பண்ணுறது? இது பரவாயில்லை. கொஞ்சம் பிதுங்கியாச்சும் உக்காந்துடலாம். ஆனா இப்ப இருக்குற புள்ளைங்கல்லாம் சாதாரண ஹைட்டா இருக்காங்க? காம்ப்ளானும் ஹார்லிக்ஸூமா குடிச்சு ஒண்ணொண்ணும் இஷாந்த் ஷர்மா உயரத்துல வளந்திருக்குதுங்களே. அப்போ முன்னாடி சீட்டுல கால் இடிக்குமா? இடிக்காதா? (யோசிங்க மக்களே! யோசிங்க).
இதுல இன்னொன்னு.. நெறைய புது பஸ்ஸூகள்ல வெல்வெட் துணியில சீட் தச்சுருக்காங்க. மழை கிழை வந்துச்சு. அவ்ளோதான்... அழுக்குத் தண்ணி தங்கிடும். வெயில் நாள்ல தூசியும் மண்ணும் சேரும். எது எப்டியிருந்தாலும் மொத்தத்துல நம்ம டிரஸ்ஸூ... அரோகரா (இல்லைன்னா.. கோவிந்தா) தான்.
இன்னொரு விஷயம். இங்க தனியார் பஸ்ஸூங்க கிடையவே கிடையாது. கஷ்டமோ நஷ்டமோ எம்.டி.ஸி (அட.. கவர்மென்ட் பஸ்ஸூதாம்பா) தான். ஒரு ஸ்டாப்புல நிக்குற வண்டி அடுத்த ஸ்டாப்புல நிக்காது. எல்லாம் ஒண்ணு விட்ட சித்தப்பா, ஒண்ணு விட்ட பெரியப்பா பையன் கதைதான். அதாவது... ஒரு பஸ் ஸ்டாப் விட்டு ஒரு பஸ் ஸ்டாப்ல தான் நிக்கும். அப்பால வேற இன்னா? மஞ்சள் போர்டு, பச்சை போர்டு, வெள்ளை போர்டு, டீலக்ஸ், எக்ஸ்பிரஸ், டிரெய்லர், தாழ்தள சொகுசுப்பேருந்து, ஏ.ஸி, மொபசல்னு டிசைன் டிசைனா வண்டிங்க இருக்கும். ஒவ்வொன்னுலயும் ஒவ்வொரு விதமான டிக்கெட் வசூல் உண்டு.
எந்த பஸ்ஸூல என்ன டிக்கெட் ரேட்டுன்னு (ஒரே ஸ்டாப்பு, ஒரே ஏரியா, மனப்பாடம் பண்ண ஒரு வாரம் டைம் குடுத்தும்) கரெக்டா யார்னா சொல்லிட்டா அவங்களுக்கு ஒரு பஸ்ஸயே எழுதி வக்கலாம். அவ்ளோ கன்ஃப்யூஷன். ஆனா சும்மா சொல்லக்கூடாது. யாருக்கோ பிரிண்ட் அடிச்ச பழைய டிக்கெட்ட கிழிச்சு கொடுத்து உங்கள அவமானப்படுத்த மாட்டாங்க. உங்கள மதிச்சு உங்களுக்காகவே ஸ்பெஷலா மெஷின் வச்சு டிக்கெட்ட பிரிண்ட் அடிச்சுதான் குடுப்பாங்க. அதுவும் தங்கத்தாய்மொழியாம் தன்னிகரில்லாத தமிழ்ல.
அப்பால இன்னொன்னு... தாழ்தள சொகுசுப் பேருந்துகள்ல ஆட்டோமேடிக் கதவு. நீ ஏறுனவுடனே மூடிக்கும். பாதுகாப்பானது. ஆனா டிரைவராண்ட இருக்குது சுட்சு. மேட்டர் இன்னன்னா... நீ ஏறிட்டியா இல்லையான்னு அவருக்கு தெரியாது. கூட்டம் அதிகமா இருக்கும் போது உனக்கு எதிரி மூடுற கதவே தான். நீ காலி. நசுங்கிடுவே, இல்ல பிதுங்கிடுவே. கண்ணுக்கு குளிர்ச்சியா கலர் கலரா வரும் பஸ்ஸூ. இதெல்லாம் கவருமெண்டு பஸ்ஸான்னே சொல்ல முடியாது. அவ்ளோ அழகா இருக்கும். ஆனா வழக்கம் போல நம்ம கலாசாரப்படி, மின்னாடி பின்னாடின்னு நோட்டீசு ஒட்டி (கவர்மெண்ட் தனியா, பிரேவேட் தனியா) அசிங்கப்படுத்திருப்பாங்க.
ஒரு பஸ்ஸூ பயங்கர கூட்டத்தோட வந்தா யோசிக்கவே கூடாது. அத உட்ரணும். முப்பதே செகண்டுல அதே நம்பர்ல இன்னொரு பஸ்ஸூ காலியா வந்து அசரடிக்கும். அதுவுமில்லாம ஒரே பஸ் ஸ்டாப்ல மூணு வெவ்வேற இடத்துல வண்டிங்க நிக்கும். உங்க வண்டி எங்க நிக்கும்னு கண்டு பிடிக்க அரை அவர் ஆகும். (டிரைவர் என்ன உங்கண்ணனா? ஒரே இடத்துல நிறுத்த. அவன் இஷ்டத்துக்குதான் நிறுத்துவான்(ர்)).
அப்போ கண்டக்டரண்ணன்? தன் பங்குக்கு ஏதாவது செய்யணுமில்ல. தல சீட்ட உட்டு எந்துருச்சே வர மாட்டாரு. பணத்தை பாஸ் செஞ்சு தான் அனுப்பனும். இதனால டிக்கெட் மாறிப்போகலாம். சில்லறை தவறிப்போகலாம். அது உன் ரிஸ்க்கு. பஸ் காலியாவே இருந்தாலும் சில கண்டக்டர்கள் எந்திரிச்சு வர்றதில்ல. அவுங்க இடத்துக்கு போய் டிக்கெட் வாங்கணும். நீ வித் அவுட்ல போற ஐடியா இருந்தா ஜாலிதான். உனக்கு சாதகமாகும். ஆனா செக்கிங் வந்தா மாட்ன பங்காளி.. பீ கேர்ஃபுல்.
நெறைய பஸ்ஸூல இறங்குறதுக்கு முன்னாலயே விசில் அடிச்சுடுவாங்கோ. கேட்டா சீக்கிரம் இறங்கித்தொலைய வேண்டியதுதானேம்பாங்கோ. சிக்னல்ல இறங்க வேண்டியதுதானம்பாரு ஒரு கண்டக்டரு. சிக்னலில் இறங்குறியே அறிவில்ல-ம்பாரு இன்னொரு கண்டக்டரு. என்னா பண்றதுன்னு உனுக்கு குழம்புமா? குழம்பாதா? ஆனா நூறு மீட்டருக்கு ஒரு சிக்னல் வேற இருக்கும். பாத்துக்கோ. அப்போ ஸ்லோவாப்போகுமில்ல. இறங்கிடலாமேன்னு ஊர் ஞாபகத்துல யோசிக்காத. பஸ்ஸூக்கு சைடுல எமன் வருவான். எமனா? என்னா வண்டியில? பல்சரு.. ஹோண்டா.. ஷேர் ஆட்டோ.. நேனோ.. தண்ணி லாரி.. அட ஆம்புலன்ஸே கிடைச்சாலும் ஏறி வருவான் எமன். நீ ரன்னிங்குல இறங்குன... மவனே எதுனா வண்டியோட வீலுக்குல்லதான் போவ.. ஜாக்ரதை.
நீள நீளமா டிரெய்லர் பஸ்ஸூ உட்ருப்பாங்க. ஒண்ணே முக்கா வண்டி சைஸூக்கு இருக்கும். பெரிய சைஸூ. பெரிய படிக்கட்டு. வசதியான சீட்டுங்க. எல்லாமே சூப்பரா இருக்கும். எல்லாம் நல்லா இருந்தா ஏன் வரமாட்டான் எடக்கு நாட்டான்? ரெண்டு கண்டக்டருங்க இருப்பாங்க அதுல. ஆளுக்கொரு நேரத்தில் விசிலடிச்சு டிரைவரையே குழப்பி உட்ருவாங்க. அப்பால ஏது நிம்மதி?
அப்போ என்ன பண்லாம். ஏ.ஸி பஸ்ஸூல போலாமா? போலாமே.. ஏ.ஸி பஸ்ஸூங்க தான் கை நீட்ற இடத்துலல்லாம் நிக்கும். கேட்குற இடத்துலல்லாம் நிறுத்தி இறக்கி விடும். ஆனால் பீக் அவர் டிராஃபிக்ல அதுவும் முடியாது. ஏன்னா ஏ.ஸி பஸ்ஸூலயும் ஸ்டாண்டிங்கிலயும் போவாங்க பயணிங்க. ஆனா டிக்கெட் ரேட்ட கேட்டியானா மூச்சு வாங்கும். பாத்துக்க. சிட்டி முழுக்க நிறைய சிட்டி பஸ்ஸூ இருந்தாலும் தேவையான அளவு பஸ்ஸூ இல்லை. டூ வீலர், வேன், கார், ஆட்டோ, ஷேர் ஆட்டோ, பஸ், ரயில், டாக்ஸி என எது கிடைச்சாலும் ஏறிப்போய்டு. அப்பத்தான் நேரத்துக்கு வேலைக்குப்போய்ச் சேரலாம். இல்லின்னா அவ்ளோதான். லாஸ் ஆஃப் பே. முதலாளிகிட்ட திட்டு.
மழை நாளு.. மனித சங்கிலி நாளுன்னு போராட்டம் நடந்துச்சா.. ஜம்முன்னு பஸ்ஸ உட்டு இறங்கி நடந்துடு. செங்கல்பட்டுக்கே போகணும்னாலும் நடைதான் பெஸ்ட்டு. சும்மா இல்ல. அஞ்சு ஆறு மணி நேரம் டிராபிக் ஜாமாவும். வழியில இறங்கி டிரெயின் மாறிப்போகலாம். ஆனா திடீர்னு ஒன் அவருக்கு ஒரு டிரெயின்தான்னு சொல்லிடுவாங்க. உனக்கு மெட்ராஸ சுத்திப் பாக்குற வாய்ப்பும் போயிடும். நைட் நேரத்துல நெறையா வண்டிங்க திடீர் திடீர்னு பிரேக் டவுன் ஆயி நிக்கும். அதையும் மேனேஜ் பண்ணப் பழகிக்கணும்.
வெளியூரு நண்பா... இத்தயெல்லாம் உனக்கு வெளாவாரியா ஏன் சொல்றேன்னா... லைஃபுல ஒரு தபாவாச்சும் மெட்ராஸூக்கு போகணும், செத்த காலேஜ், மெரினா பீச் பாக்கணும், காணாமப் போன அத்த பொண்ண கண்டு பிடிச்சு கல்யாணம் பண்ணிக்கணும், எம்.ஜி.ஆர் சமாதில காது வச்சு வாட்ச்சு ஓடுதான்னு கேட்கணும்னு உனக்கும் பல லட்சியங்கள் இருக்கும். அப்டி வரும்போது நீ கஷ்டப்படக்கூடாதில்ல.. அதுக்குத்தான். இதப் படிச்சு வச்சுக்கோ. வரும்போது கொஞ்சம் கூடுதலா கற்பனை பண்ணிக்கோ. சிம்பிள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக