வெள்ளி, 29 அக்டோபர், 2021

புனீத் ராஜ்குமாரும், இன்ஷூரன்ஸூம்

புனீத் ராஜ்குமாருக்கெல்லாம் சாகுற வயசா? உடம்பை பயங்கர ஃபிட்டா வச்சிகிட்டு, துள்ளிக்குதிச்சு, ஆடிப்பாடி, பறந்து பறந்து அடிச்சுப் புடிச்சு கமர்ஷியல் படம் பண்ணிட்டிருந்த மனுசன். ஹார்ட் அட்டாக்காம். ஜஸ்ட் 46 வயசு. 

அவர் குடும்பத்துக்கு மனசளவில் இது ஒரு பெரிய்ய இழப்பா இருந்தாலும், திரைத்துறையில் கோலோச்சிய ஒரு மிகப்பெரிய நடிகரின் மகன் என்பதாலும், இவரே ஒரு பிரபல கமர்ஷியல் நடிகர் என்பதாலும் ஃபினான்ஷியலா அவங்களுக்குப் பிரச்சினை (நம்மள மாதிரி) இருக்காது. 



அதுவே நம்மளை மாதிரி, அவர் ஒரு சாதாரண நிறுவனத்தில் சம்பளத்திற்கு வேலைக்குப் போயிட்டிருந்த ஒருத்தரா இருந்திருந்தா? அல்லது ஒற்றை ஆளா நின்னு ஒரு பிஸினஸ் பண்ற ஆளா இருந்திருந்தா? இன்னிக்கு அவர் குடும்பத்தின் நிலை என்ன? இதைத்தாண்டி வரும் வரை இன்னும் சில வருஷங்களுக்கு அந்தக் குடும்பம் என்ன செய்யும்?

சரி, பச்சையாவே கேட்குறேன். இது நம்மள்ல ஒருத்தருக்கு நடந்திருந்தா? ஒரு ஐந்தாறு வருடங்களுக்கு குடும்பத்துக்கு வருமானம் குடுக்கும் அளவுக்கு ஒரு ஏற்பாடு செஞ்சிருக்கீங்களா? (குறிப்பா - "கொஞ்சமா பணம் கட்டி", இழப்பு ஏற்பட்டா "மட்டும்" ரிட்டன் வர்ற மாதிரியான டெர்ம் இன்ஷூரன்ஸ்). 

நீங்க இன்ஷூரன்ஸ் எடுத்துட்டீங்களா?

பி.கு - நான் இன்ஷூரன்ஸ் ஏஜண்ட் இல்லை

விகடன்ல உள்ள ஆள் இருக்கா?

10 செகண்ட் கதைகள் - ஆனந்த விகடன்

ஒவ்வொரு முறையும் என் கதையோ, ஜோக்கோ பத்திரிகைகளில் வெளியாகும் போது பலரும் பாராட்டுவார்கள். சுஜாதா சொன்னது போல (அதுக்காக என்னை சுஜாதாவாகவோ, என்னிடம் பேசுபவர்களை சாதாரணமாகவோ சத்தியமாக நான் நினைக்கவில்லை, நானெல்லாம் சும்மா கொசு) பாராட்டுகளுடன் சேர்த்து "நான் கூட எழுதுவேண்டா, எழுதுவேண்ணே, எழுதுவேன் சார், எழுதுவேன் பாஸ், எழுதுவேன் தம்பி, எழுதுவேன் கார்த்திக்" என்ற பதில்களும் சேர்த்தே கிடைக்கும். இது பரவாயில்லை.
"ஆனா எனக்கு நேரமில்லை" (அப்ப, நாம சும்மா இருக்கோமோ)
"மொக்கை கதையெல்லாம் போடறாங்க" (நம்மளுதைத் தான் சொல்றாங்களோ?) "நம்ம கதையை போட மாட்டேங்கிறாங்க,
"உள்ள ஆள் இருக்கணும் சார் அப்பதான் போடுவாங்க" (ஆமாம், எங்க மச்சான் அங்கதான் எடிட்டரா இருக்காரு, போங்கய்யா யோவ்) என்றெல்லாம் சொல்வது தான் டூ மச்.

(இதே மாதிரி ஒரு போட்டோ கிராபரைப் Deva Rajan பார்த்தால் "நான் கூட நல்லா போட்டோ எடுப்பேன் என்பது)

விடுங்க சார், நீங்க வேற விஷயத்துல பெரியாளா இருக்கலாம். பேச்சுலயோ, பிஸினஸ்லயோ? நீங்க கதை எழுதலைங்கறது இங்க மேட்டரே இல்லை. பிச்சை எடுப்பவனைப் பார்த்து "நான் கூட பிச்சை நல்லா எடுப்பேன், ப்ச், நேரம் இல்லை அதான்" என்று சொல்லிப் பாருங்களேன்.
(சத்தியமாக உண்மையாகவே தன் படைப்பு வர வேண்டும் என்று எழுதுபவர்களை மேலே குறிப்பிடவில்லை, அவர்களைக் கிண்டல் செய்யும் பதிவல்ல இது. அது வேற குரூப். அவர்களைப் பாராட்டவே செய்கிறேன்)
நிஜமாக எழுதுபவர்களுக்காக ஒரு விஷயம் - நான் சொல்லும் பதில் "தொடர்ந்து அனுப்பி கிட்டே இருந்தா உங்களதும் வரும்" என்பது தான். ஒரு உண்மையைப் புரிந்து கொள்ளுங்கள். உங்களைப் போல நூற்றுக்கணக்கான பேர் கதைகளை எழுதி அனுப்பிக்கொண்டேடேடேடே இருக்கிறார்கள். "நானும் ரெண்டு அனுப்பியிருக்கேன் சார், போடவே இல்லை" என்றார் சேலத்தில் நான் சந்தித்த ஒரு கல்லூரிப் பெண். "நான் ரெண்டு கதை அனுப்பினேன். இந்த வாரம் வந்திருக்கான்னு பார்க்கிறேன்" என்று உறுதியுடன் சொன்னார் ஒரு நண்பர் (ஆனால் வரவில்லை). "4 கதை அனுப்பியிருக்கேன். ஆனா போடவே மாட்டேங்கிறாங்க. ஃபெட் அப் ஆகி "எழுதறதையே" நிறுத்திட்டேன்" என்றார் இன்னொருத்தர். முடியலைண்ணே. சத்தியமா முடியலை...
ஒரு சின்ன கணக்கு. விகடனுக்கு ஐம்பது பேர் (இதுவே கம்மிதான்) எழுதுகிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். லீடிங் எழுத்தாளர்கள் எல்லாம் ஒரு நாளைக்கு ஐந்து கதைகளாவது (10 செகண்ட் கதை) அனுப்புகிறார்களாம். ஸோ, ஒரு நாளைக்கு குறைந்த பட்சம், 200 கதைகள் வரும். வாரத்துக்கு 1400 கதைகள். 1400 ல் இருந்து 10 கதைகளை எடுக்க வேண்டும் என்றால் (நான் அறிந்த வரை, அவர்கள் ஸ்கிப் செய்வதில்லை) அவர்கள் எவ்வளவு கஷ்டப் பட வேண்டும்? மேலும் இந்த மூட்டை மூட்டையான கதைகளில் உங்கள் கதை நான்காவது வார்த்தையிலேயே அவர்களைக் கவர வேண்டும். இல்லாவிட்டால் அடுத்த கதை தான். நாம் எழுதியது நமக்கு நன்றாகத்தான் தோன்றும். ஆனால் எடிட்டர் தான் வாசகர் மனநிலை அறிந்து, எது நன்றாக ரீச் ஆகும் என்று படித்துத் தேர்ந்தெடுப்பார். நீங்க ஒரு போட்டிக்கு நடுவரா இருந்தா எப்படித் திணறுவீங்க, யோசிங்களேன்.
இந்த வார விகடனில் வெளியான இரண்டு கதைகளுடன் சேர்த்து இதுவரை எனது 5 கதைகள் வெளியாகி உள்ளன. (ஐந்தே ஐந்து தான், இதுக்கே இவ்ளோ பெரிய பதிவு போடறியா? என்று சொல்கிறீர்களா? ஒரே ஒரு கதை கூட வராத ஒருத்தன், என்னை நேத்து, ரோமிங்கில், 15 நிமிடம் வறுத்தான், எனக்கு எவ்ளோ கோபம் வரும்?) ஆனால் நான் இதுவரை எழுதி அனுப்பியது எத்தனை தெரியுமா? 104 கதைகள். 104 ல் 5 கதைகள் அவர்களுக்குப் பிடித்துப் போய் வெளியாகியுள்ளன. அப்போ மீதி? அவ்ளோ தான் (பாட்ஷா, விஜயகுமார் ஸ்டைலில் படிக்கவும்)
இன்னோரு பொதுவான சோகம் என்னவென்றால், இந்த வாரம் நம்ம படைப்பு ஒன்று வந்து விட்டால் அவற்றுடன் அனுப்பிய மற்ற எல்லாம் ரிஜக்டட் என்று நாம் புரிந்து கொள்ள வேண்டும். ஸோ, 104 எழுதிப் பிரயோஜனமில்லை. எல்லாம் போச்சு, "எல்லாக் கோட்டையும், அழி. நான் முதல்ல இருந்து சாப்பிடுறேன்" கதைதான். எனவே, நான் மீண்டும் நாளையில் இருந்து புதிதாக அனுப்பத் துவங்க வேண்டும்.
கே.லக்ஷ்மணன், ரிஷிவந்தியா பாஸ்கர், கே.ஆனந்தன், பர்வீன் யூனுஸ், சகிதா முருகன், இந்தியா வாசன், அஜித், மினிமீன்ஸ் என்று விகடனில் அடிக்கடி வரும் பெயர்களைப் பார்த்திருக்கிறீர்களா? இவர்களைப் போன்றோர் எழுதித்தள்ளிக்கொண்டே இருக்கிறார்கள். இவர்கள் எல்லாரது உறவினர்களும் விகடனில் வேலை பார்க்கிறார்களா?
ஸோ, இப்போ நான் அனுப்பிய மத்த கதையெல்லாம் இன்வேலிட். இனிமே புதுசா எழுதணும்.


புதன், 27 அக்டோபர், 2021

ஸ்கூல் பீசுக்குப் பணம் சேர்க்க ஒரு ஐடியா

நம்ம ஃபைனான்ஸ் லேர்னிங் குரூப்பில் எழுதியது. 

நான் என் ரெண்டு பசங்க பேர்லயும் தனித்தனியா ஐசிஐசிஐ யங் ஸ்டார் சேவிங்க்ஸ் அக்கவுண்ட் ஆரம்பிச்சு, என் சேவிங்க்ஸ் அக்கவுண்டில் இருந்து வாரா வாரம் தானா அவங்க அக்கவுண்டுக்கு பணம் போற மாதிரி ஃபண்ட் ட்ரான்ஸ்பர் செட் பண்ணிட்டேன். திங்கள் பெரியவனுக்கு, வியாழன் சின்னவனுக்கு. தானா பணம் போயிடும். 

எப்பனா பெருசா தேவைப்பட்டா அவங்க அக்கவுண்ட் ஓப்பன் பண்ணிப்பாத்தா 7000, 8000 கெடக்கும். மிக மிக முக்கியமான செலவு இருந்தா மட்டும் எடுத்து செலவு பண்ணுவேன்.

அதுலயும் பெரியவனுக்கு இசுக்கூல் பீஸ் எவ்வளவுன்னு பார்த்து அதை 52 ஆல வகுத்து அந்தப் பணம் என் அக்கவுண்டில் இருந்து Auto debit ஆகுற மாதிரி செட் பண்ணியிருக்கேன். மார்ச், ஏப்ரல்ல அவன் அக்கவுண்டுல இருந்து எடுத்து அவனுக்கே இசுக்கூல் பீ'ஸ் கட்டிடுவேன். 

ஆயிரம் செலவுகள் ஆகுற அக்கவுண்டுல இப்படி தானா போறது பெருசா தெரியாது. (தெரிஞ்சா மட்டும்? பீசு கட்டித்தானே ஆகணும்) ரெண்டு வருஷமா இப்படித்தான் ஓடுது. 

ஐடியா நல்லாருக்குன்னு தோணுனா யூஸ் பண்ணிக்குங்க. 

குறிப்பு - இவ்விடம் அனைத்து விதமான தீபாவளிப் பரிசுகளும் ஏற்றுக் கொள்ளப்படும். அந்த ஆயிர ரூவாக் கட்டு உட்பட.

கிரிப்டோ கரன்ஸி பற்றித் தெரிஞ்சுக்கணுமா?

எங்க ஃபினான்ஸ் குரூப் மக்களுக்காக எழுதியது. அதை அப்படியே இங்க தர்றேன்.

குரூப்ல கிரிப்டோ கரன்ஸி பற்றிய பதிவுகள் வரவர ரொம்ப அதிகமா இருக்கு. குழு அன்பர்கள் அவை பற்றிய பதிவுகளைக் குறைக்கவும். கண்டிப்பாக டிஸ்க்ளெய்மர் தனித்தனி கிரிப்டோ பதிவுக்கும் போட வேண்டும்.
இன்னிக்கு கிரிப்டோக்கள் ஏறும்போதும், கொஞ்சம் சம்பாதிக்கும் போதும் எல்லாருக்கும் நல்லா இருக்கும். ஆனா அதில் 1000 பிரச்சினைகள் உண்டு. ஒரு காலத்தில் நான் காலேஜ் படிக்கும் போது MLM மிகப்பெரிய வரவேற்பைக் கொண்டிருந்தது. இப்போ மாதிரி MLM ல பொருள் விற்பனைலாம் இல்லை. வெறுமனே நீங்க பணம் கட்டி ஆள் சேர்த்தா போதும். அதற்குக் கீழே ஆள் சேர சேர உங்களுக்குப் பணம் வந்துட்டே இருக்கும். கிட்டத்தட்ட இன்னிக்கு கிரிப்டோ அப்படித்தான் இருக்கு.
அப்போ MLM ல ஈடுபட்டவங்க, அதில் சம்பாரிச்சவங்க இப்போ கிரிப்டோல ஈடுபட்டுள்ளவங்க, சம்பாதிக்கிறவங்க க்ரிப்டோவுக்கு ஆதரவா எப்படியெல்லாம் பேசுறாங்களோ அதே பேட்டர்ன்ல தான் அப்ப பேசுவாங்க. ஆனா அடிப்படையே இல்லாத ஒரு பிஸினஸ்ல எப்படி நிக்க முடியும்? சதுரங்க வேட்டைன்னு ஒரு படம் வரும் அளவுக்கு இலட்சக்கணக்கான பேர் MLM உட்பட பலவிதமான பிஸினஸில் கோடிக்கணக்குல இழந்தாங்க.
இன்னிக்கு கிரிப்டோ அப்படித்தான் விளம்பரம் செய்யப்படுது. க்ரிப்டோ கரன்ஸி என்ற ஒரு பொது கரன்ஸி உண்டு தான். ஆனா அது பி.ஹெச்.டி பண்ற அளவுக்கான ஒரு டாபிக். அதைப் பற்றி எதுவுமே சொல்லாம மொட்டையா "பத்தாயிரம் போடு, ஒரு லட்சம் ஆகிடும்னு" மண்டபம் புக் பண்ணி அறியாமைல இருக்குற மக்களை இழுக்குறாங்க.
இது எப்படின்னா "ரெண்டு லட்சரூவா குடு, நீதான் இந்தப்படத்து ஹீரோ, ரெண்டே வருஷத்துல நீதான் ரஜினி" ன்னு சொல்ற மாதிரி இருக்கு. எல்லாரும் ரஜினி ஆகிட முடியுமா? என்பது தான் கேள்வி. கோடம்பாக்கம் தெருவுல இன்னிக்கு போனாக்கூட வாழ்க்கையை இழந்த 500 ரஜினிக்களை நீங்க புடிக்கலாம்.
சரி மறுபடி க்ரிப்டோவுக்கு வருவோம். அதை ஆதரிக்கும் நீங்க, ஒருவேளை அதில்
1. ஆராய்ச்சி பண்ணி இன்வெஸ்ட் (இதுவே சரியான வார்த்தையா?) பண்ணலாம். உங்களுக்கு அதுல கொஞ்சம் அறிவு இருக்கலாம். ஆனா எல்லாருக்கும் இருக்குமா?
2. அல்லது ஒரு 10 % போனா போகுதுன்னு நீங்க இன்வெஸ்ட் பண்ணி வைக்கலாம். ஆனா அது தெரியாம உங்களை நம்புற ஒருத்தர் 100% போடலாம். இது சந்தை - மந்தைக் குணம். காலம் காலமா இருக்குறது.
3. கிரிப்டோ கரன்ஸி எதிர்காலத்தில் அவசியமாக மாற"லாம்". ஆனா எல்லா காயினும் நிக்காது. இன்னிக்கு செல்போன் முக்கியமானதா இருக்கு. ஆனா யுனினார்-லாம் எங்கபோச்சு? வலியது மட்டுமே வாழும். அதுபோல சில காயின்லாம் கண்டிப்பா நக்கிட்டுப் போகும். அதுல இன்வெஸ்ட் பண்ணவன் கதி?
4. கிரிப்டோ கரன்ஸி ஒரேடியா காணாமலே கூடப் போகலாம். தேக்குமர இன்வெஸ்ட்மெண்ட்லாம் என்னாச்சு? கலைமகள் சபா மண்டபம் புக் பண்ணி காசு வாங்கி கூட்டா நிலம் வாங்குறேன்னு சொன்னான். எங்க போனான்? கட்ன காசு என்னாச்சு?
லவ் பண்ணும் போது உடம்புல ஜிவ்வுன்னு சொகமா இருக்கும். மத்தவங்க எதாவது சொன்னா அவங்க மேல காண்டாவத்தான் செய்யும். ஆனா அதே பொண்ணை கட்டிகிட்டு பாய்ஸ் ல வர்ற அப்பா மாதிரி பத்து வருஷம் கழிச்சு ஒரு மிடில் கிளாஸ் குடும்பஸ்தனா நிற்கும் போது தான் அதன் கஷ்டம் தெரியும்.
இப்ப பிரச்சினை நீங்க இல்ல. உங்களை நம்பி க்ரிப்டோவுல ஒருத்தன் பணம் போட்டு நட்டமானா? பத்து வருஷம் கழிச்சு அவன் யார்கிட்ட போய்க் கேப்பான்? சில ரியல் உதாரணங்கள் கீழே.
1. எங்கப்பா கலைமகள் சபா திட்டத்துல இருந்தாரு? இப்ப யாரைப் போய் கேட்குறது?
2. எங்க அரிசிக்கடை சித்தப்பா பென்னி ஸ்டாக்குல பணத்தைக் கொட்டினாரு. மூணு நாலு வருஷத்துல எல்லாம் போச்சு. இப்ப யாரைப் போய் கேட்குறது?
3. எங்க மாமா ஒர்த்தர் தேக்கு மர வளர்ப்புத் திட்டத்துல காசு போட்டிருந்தார். இப்ப யாரைப் போய் கேட்குறது?
4. என் நண்பன் ஃபியூச்சர் வர்த்தகத்துல கான்ட்ராக்ட்ல (உதா - 2 இலட்சம் கட்டு, மாசம் 10% எடுத்துத்தருவோம்) பணம் போட்டிருந்தான். கடந்த மார்க்கெட் டவுன்ல மொத்தமா அவனுக காணாமப் போயிட்டானுக. இப்ப யாரைப் போய் கேட்குறது?
5. எங்க பெரியப்பா காளான் சாமி (மண்ணுள்ளிப்பாம்பு மாதிரி, காளான் சாமியை டிபன் பாக்ஸ்ல இருட்ல வச்சி வளக்கணும், ப்ளாக் டீ ஊத்தணும், அது வளர வளர ஐஸ்வர்யம் வருமாம்) மேட்டரை நம்பி இருந்தாரு. அது ஹம்பக்னு தெரிஞ்சதும் இப்ப யாரைப் போய் கேட்குறது?
இது போல பலதையும் பார்த்தவங்க நாங்க. இப்டி எது சொன்னாலும், விடாம க்ரிப்டோ மேல பயங்கர பாஸிடிவா இருக்குறவங்க அமேசான் ப்ரைம்ல The Big Short ஒரு படம் இருக்கு. அதைப் பாருங்க. 2008 சப் ப்ரைம் பிரச்சினை வரும்வரை அதை யாராலயும் நம்ப முடியலை. ஆனா வந்த பிறகு உலகம் முழுக்க கோடிக்கணக்கான பேரைக் கதற அடிச்சது அது.
கமெண்ட்ல வந்து ஆர்க்யூ பண்ணாதீங்க. நாளைக்கு க்ரிப்டோல பிரச்சினை வரும்போது அதை இன்னிக்கு ஆதரிச்ச பலர் சிம்பிளா குரூப்பை விட்டுக் கிளம்பிடுவாங்க. ஆனா அட்மினோ, மாடரேட்டர்களோ உங்களுக்காக மொத்து வாங்க முடியாது. இதுல ஒரு பைசா எங்களுக்கு ஆதாயம் இல்ல. கோபப்படாம யோசிங்க. மீறியும் தொடர் ஆதரவுப் பதிவுகள் வந்தா அவை டிக்லைன் செய்யப்படும். அவ்வளவுதான்.
வன்றி. நமக்கம்.

ஞாயிறு, 24 அக்டோபர், 2021

இந்தியத் தொலைக்காட்சிகளில் முதன் முறையாக

"இந்தியத் தொலைக்காட்சிகளில் முதன் முறையாக" - ன்னு சொல்ற மாதிரி "இன்னிக்கு என் வாழ்க்கையிலேயே முதன் முறையாக" ஒரு நல்ல காரியத்தைச் செஞ்சேன். கோவை ரோட்டரியும் - கோவை வாசவி க்ளப்பும் இணைந்து நடத்திய முகாம் ஒன்றுக்காக நண்பர் அழைச்சிருந்தார். நமக்கெல்லாம் இதுபோல ஒரு எக்ஸ்டர்னல் புஷ் தேவைப்படுதில்லையா? சந்தோஷமாப் போய் கொடுத்துட்டுவந்தேன்.

இதுக்கு முன்னாடி ரெண்டு - மூணு முறை சந்தர்ப்பம் அமைஞ்சும் "நான் ரத்தம் தரவா" - ன்னு போனப்போ "நீ அண்டர்வெயிட்டு, ச்சீ ஓடிப்போ" ன்னு பத்தி விட்ருக்காங்க. ஆனா இப்போ கொரோனா புண்ணியத்தில் நல்லா உக்காந்து தின்னு தின்னு வெயிட் போட்டு "க்வாலிஃபை" ஆகிட்டேன் போல. போனதுமே என்னை வெயிட் போட்டுப் பாத்து "இந்தக் கோழி தாங்கும், உள்ள கூட்டிட்டுப்போங்க"ன்னுட்டாங்க.
ஒரு பெரிய்ய ஃபார்ம் ஒன்னு கொடுத்து ஃபில்-அப் பண்ணச் சொன்னாங்க. அதுல "நான் என் சொந்த முடிவில தான் ரத்ததானம் பண்றேன்" னு டிஸ்க்ளெய்மர் உட்பட அதுல ஊருல இருக்குற எல்லா வியாதிகளும் பேரும் வரிஸ்ஸையா போட்டு இருந்தது. இதுக்கு முன்னாடி தெரியாத சில வியாதிகள் கூட இருந்தது. அது எல்லாத்தையும் "ஆம் அல்லது இல்லை" ன்னு டிக்கு போடச்சொன்னாங்க. அதுல நான் "ஆம்" போட்ட ஒரே இடம் - "கடந்த நாலு மணி நேரத்துக்குள்ள எதாவது தின்னியா?" வுக்குத் தான்.
நம்ம ரத்தம் எலிஜிபிலா?-ன்னு பார்க்க ஹீமோக்ளோபின் டெஸ்ட் செய்யணுமாம். ஆனா, பொதுவா, நார்மலா இருக்கிற ஆண்களுக்கு டெஸ்ட் எடுக்கத் தேவையில்லைன்னு சொல்ட்டாங்க. எதுக்கும் இருக்கட்டும்னு எடுத்துப் பாருய்யா... ன்னு சொன்னா கடுப்புல அந்த மனுசன் மோதிரம் போடாத என் மோதிர விரலைப் புடிச்சி நறுக்குன்னு ஒரு ஊசியைச் சொருகி ஒரு சொட்டு ரத்தத்தைப் (அதுவும் நல்லா பெரிய சொட்டு) பிழிஞ்சு ஏதோ ஒரு கெமிக்கல் ரொம்பின ஒரு டம்ப்ளர்ல உட்டாரு. அது நல்ல செவப்பா சொய்ன்னு கீழ போச்சு. “எலிஜிபிள் தான், ரத்தம் எடுக்கலாம்”-னு சொல்ட்டாரு. அந்தக் கெமிக்கல் முறை ஏதோ பழைய முறையாம்.
ஆனா பெண்களுக்கு, பிரசவம் அது இதுன்னு பல விதங்களில் ரத்த இழப்பு வாய்ப்பு இருக்கறதால ஹீமோக்ளோபின் டெஸ்ட் கட்டாயமாம். குட்டியா ஒரு டெஸ்ட் மெஷின் இருந்தது. அதுல எந் தங்கமணி உட்பட பல பெண்களுக்கு டெஸ்ட் பாத்தாங்க. ஹீமோக்ளோபின் லெவல் 12.5 பாயிண்ட் இருக்கணுமாம். ஆனா வந்த பெண்கள் மூன்று, நான்கு பேருக்குமே 11 முதல் 11.4 வரைன்னு குறைவாவே இருந்ததால அவங்களை "உன் ரத்தம்லாம் வேணாம், நீ முதல்ல நல்லாத் தின்னு உடம்பைத் தேத்து" ன்னு பத்தி விட்டுட்டாங்க.




நமக்கு அந்தப் பிரச்சினையில்லை. உள்ள போனா, பெட்ல படுக்க வச்சி, கையில் டைட்டா ஒரு கட்டு கட்டி, அப்டியே நாலு தட்டு தட்டி, தனுஷ் கை நாக்குப்பூச்சி மாதிரி என் நாடி நரம்பையெல்லாம் எழுப்பி அதுல நல்லதா ஒன்னைச் சூஸ் பண்ணி, நல்ல கனத்த ஊசி ஒன்னை அழுத்திச் சொருகி அந்த ப்ளட் பாக்கெட்டில் போட்டு விட்டாங்க. கையில ஒரு ஸாஃப்ட் பால் கொடுத்து "அமுக்கு ராசா"ன்னாங்கள்.
அத ஒரு பத்து தபா அமுக்குறதுக்குள்ள, சரசரன்னு ஏழெட்டு நிமிஷத்தில ஃபுல் பாக்கெட் நொம்பிருச்சி. அதை ஒரு மெஷினோட கனெக்ட் செஞ்சிருந்தாங்க. அது வேலை முடிஞ்சதும் சிம்பு மாதிரி "பீப், பீப்" னு கத்திச்சு. ரொம்பின பாக்கெட்டை உத்துப் பார்த்தா அது கருஞ்சிவப்புக் கலர்ல, பார்க்கக் கொஞ்சம் பயமாத்தான் இருந்தது. இருந்தாலும் அதை நர்ஸக்கா எடுத்துட்டுப் போகும் போது "குஷி" ஜோதிகாவோட ப்ளட் பாக்கெட்டை க்ளோஸப்ல காட்டி எஸ்.ஜே.சூர்யா பேசுற வாய்ஸ் ஓவர் என் காதுல ரொம்பத் தெளிவாக் கேட்டுது.
ரத்தம் குடுத்து முடிச்சதும் கொஞ்சம் கிர்ருன்னு வந்துது. ஒரு யூனிட் ரத்தத்தை எட்டே நிமிஷத்துல எடுத்தா பின்ன? "அப்படித்தான் இருக்கும், கொஞ்சம் இருங்க"ன்னு அந்த ஆட்டோமேடிக் பெட்-டை தலை-கீழா கால் மேலா திருப்பி வச்சி விட்டார், "இப்ப தலைக்கு ரத்தம் பாயும், 5 நிமிஷத்துல சரியாகிடும்"னு சொன்னாரு. சோலி முடிஞ்சதும் "கொஞ்ச நேரம் போய் உட்காருங்க. நிக்கக்கூடாது, நின்னா மயக்கம் வரும்"ன்னு சொல்லி வெளிய அனுப்பினாரு.
வெளிய வந்ததும் அங்கேயே ரெண்டு டெட்ரா பேக் மேங்கோ ஜூஸ் குடுத்தாய்ங்கள். குடிச்சுப்புட்டுக் கொஞ்ச நேரம் உக்காந்திருந்தேன். கூட வந்தவுங்கள்ல சிலர், போன முறை இவர் சொன்ன அட்வைஸையும் கேட்காம, சூஸையும் குடிக்காம பார்க்கிங்ல போய் தலைசுத்தின கதையையும், அப்டியே கைத்தாங்கலா டீக்கடைக்குப் பொத்துனாப்ல போய் பன்னு வாங்கித் தின்ன கதையையும் சொன்னதைக் கேட்டு "அப்பா" பட நாராயணன் மாதிரி "நமக்கு எதுக்குடா கார்த்திகேயா வம்பு"ன்னு கம்ன்னு அங்கயே உக்காந்துட்டேன்.
மறுபடி அவர்ட்ட போய், "நாங்குடுத்த அதே அளவு ரத்தம் எனக்கு மறுபடி எப்ப ஊறும்?" னு கேட்டேன். "24 மணிநேரத்துல ஊறிடும்"னாரு. அப்போ "நாளான்னிக்கு ரத்தம் குடுக்கச் சொல்லி மறுபடி கூப்டுவாங்களா? ஒருநாள் விட்டு ஒருநாள் ரத்தம் குடுத்தா உடம்பு தாங்குமா?" ன்னு டவுட்டோடவே வெளிய வந்தப்போ, அனுபவசாலி ஒர்த்தர் கூப்ட்டு "பாஸூ, அவங்கெடக்கான், ரத்தத்துக்கு ஈக்வலா லிக்விட் மட்டும் தான் 24 மணிநேரத்துல ஊறும். ஆனா சரியான அளவு ப்ளேட்லெட்ஸ் வளர 3 மாசம் ஆவும்"ன்னாரு. நீங்க மறுபடி 3 - 4 மாசம் கழிச்சித்தான் ரத்தம் கொடுக்க முடியும் னாரு. "அப்பச்சரி, அப்பச்சரி" ன்னு கெளம்பிட்டேன்.
இந்தக் கூத்துக்கு நடுப்புற தங்கமணியும் பசங்களும் நான் ஏதோ உலக சாதனை செஞ்சா மாதிரி உள்ளே வந்து எட்டி எட்டிப் பார்த்துட்டும், போட்டோ எடுத்திட்டும், ஆளுக்கொரு ஜூஸைக்குடிச்சிகிட்டும் இருந்தாங்க. நானும் கக்கூஸ் கண்ணாடியில போய்ப்பார்த்தேன். "எதையோ சாதிச்ச திருப்தி அவன் முகத்துல" ன்னு சந்திரமுகியில சொல்ற மாதிரி தான் இருந்தது மூஞ்சி.
இப்படிக்கி
- ரத்த வழங்கி எசுக்கா

articles - ல் எங்கே a போட? எங்கே an போட?

நண்பர் ஒருவருக்கு ஆங்கில இலக்கணத்தில் வரும் articles - ல் பலத்த சந்தேகம். எந்த இடத்தில் a போட வேண்டும்? எந்த இடத்தில் an போட வேண்டும்? என்னிடம் கேட்டார். சொல்லிக் கொடுத்தேன். (இந்த இடத்தில் நான் ஒரு முன்னாள் ஆங்கில வாத்தி என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்).

இன்றைக்கும் அவர் அனுப்பும் மெயில்களில் பல இடங்களில் அவருக்கு இந்த டவுட்டு வருகிறது. இந்தக் குழப்பம் எல்லோருக்கும் வருவது சகஜம். பெரிய பெரிய ஆட்கள் அனுப்பும் மெயில்களில் கூட articles - ல் தவறு இருக்கிறது. (articles ல் the என்ற வார்த்தையும் உண்டு. ஆனால் பலருக்கும் சந்தேகம் a மற்றும் an - ல் தான். ஆகவே the பற்றி இங்கே பார்க்கப் போவதில்லை).
அவருக்குச் சொன்னது மற்றவர்களுக்கும் உபயோகப்படலாம். அது பலருக்கும் பயனளிக்கும் என்பதால் இங்கே பதிகிறேன். இப்படி பதியச் சொன்னது கூட என் நண்பரின் ஐடியா தான். சரிஓ.கே.. போலாமா?
அடிப்படை தகவல் - ஆங்கிலத்தில் வெறும் 26 எழுத்துக்கள் மட்டுமே. அதை வைத்துத் தான் எல்லா வித்தையும் காட்டுகிறார்கள். vowels எனக் கூறப்படும் a, e, i, o, u என்ற ஐந்தும் உயிர் எழுத்துக்கள். மற்ற 21-ம் consonants எனப்படும் மெய் எழுத்துக்கள். தமிழிலோ மற்ற இந்திய மொழிகளிலோ இருப்பது போல உயிர் மெய் எழுத்துக்கள் (கா, கீ, கூ, கெ, கை) எனும் கூட்டெழுத்துக்கள் கிடையவே கிடையாது.
பிரச்சினையே இங்கே தான். a, e, i, o, u என்ற உயிர் எழுத்தில் ஆரம்பிக்கும் வார்த்தைக்கு முன்பு an போடு. consonants - ல் ஆரம்பிக்கும் வார்த்தைகளுக்கு முன்பு a போடு என்று பள்ளிக்கூடத்தில் சொல்லிக் கொடுத்திருப்பார்கள். அதன் படி நியாயமாகப் பார்த்தால் u என்பது vowel என்பதால் கீழே வரும் எல்லா வார்த்தைகளுக்கும் முன்பு an தானே போட வேண்டும்?
MLA, umbrella, untold story, university, useful gift, union, uniform (ஒரு எம்.எல்.ஏ, ஒரு குடை, சொல்லப்படாத ஒரு கதை, ஒரு உபயோகமான பரிசு, ஒரு அமைப்பு, ஒரு சீருடை) ஆனால் அப்படி போட முடியாது. ஏன்? சரியான விடைகள் கீழே. (இது போக பல இடங்களில் the வரும். அது அடுத்த ஸ்டெப். இப்போதைக்கு நம் கேள்வி. எங்கே a? எங்கெங்கே an? என்பதே)
சரியான விடைகள் -
a university (யுனிவர்சிட்டி)
a useful gift (யூஸ்ஃபுல் கிஃப்ட்)
a union (யூனியன்)
a uniform (யூனிஃபார்ம்)
an MLA (எம்.எல்.ஏ)
an umbrella (அம்ப்ரெல்லா)
an untold story (அன்டோல்ட் ஸ்டோரி)
எப்படி என்கிறீர்களா? அடைப்புக்குள் உள்ளவை க்ளூக்கள். அதை வைத்து கண்டுபிடிக்கப் பாருங்கள். நினைவு வருகிறதா? எஸ். கரெக்ட். ஒரு வார்த்தை vowel ல் ஆரம்பிக்கிறது என்பதால் மட்டுமே அதற்கு முன் an போட முடியாது. vowel sounds என்று சொல்லியிருப்பார்கள். அதாவது உயிர் எழுத்தின் ஒலியில் அந்த வார்த்தையின் உச்சரிப்பு துவங்க வேண்டும். எழுத்து consonant ஆகக் கூட இருக்கலாம். (MLA வை கவனிக்கவும்) ஒலி தான் முக்கியம்.
விடை காணும் வழி - நாம் தமிழர்கள். ஆகவே நமக்கு இதனை கண்டுபிடிப்பது ரொம்ப சிம்பிள். தமிழ் உயிர் எழுத்துக்கள் உங்கள் எல்லோருக்கும் தெரியும் அல்லவா? (அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஐ, ஒ, ஓ, ஔ). கொடுக்கப்படும் ஆங்கில வார்த்தையை மனதுக்குள் ஒரு முறை படியுங்கள். அதன் ஒலி தமிழ் அ-னா, ஆ-வன்னாவில் துவங்குகிறதா? சிம்பிள். அங்கே an போட்டு விடுங்கள்.
க, ங, ச என்ற 18 மெய்யெழுத்துக்களின் ஒலியிலோ அல்லது கை, கே, கோ போன்ற 216 உயிர் மெய் எழுத்துக்களின் ஒலிகளிலோ அந்த ஆங்கில வார்த்தை துவங்கினால் அதன் முன்பு a தான் வர வேண்டும். அவ்வளவு தான்.
இப்போ ஹோம்வொர்க். கீழ்க்கண்ட வார்த்தைகளுக்கு எந்த "ஆர்ட்டிகில்" போட வேண்டும்?
ordinary man (ஆர்டினரி மேன்)
octopus (ஆக்டோபஸ்)
ancient (ஏன்சியன்ட்)
apple (ஆஏப்பிள்)
x – ray (எக்ஸ் ரே)
hour (ஹவர் அல்ல ஆர் (edited))
european country (யூரோப்பியன் கன்ட்ரி)
one rupee note (ஒன் அல்ல வன்)
ஆனால் ஒரு முக்கிய விஷயம். ஆங்கில வார்த்தைகளின் சரியான உச்சரிப்பு நமக்குத் தெரிந்திருக்க வேண்டும். ஒரு வார்த்தையின் தவறான பதத்தை சரி என்று நினைத்துக் கொண்டு எத்தனை முறை படித்தாலும் விளங்காது.
டிசுக்கி - மேற்கொண்டு டவுட்டுகளுக்கும், குறை, நிறைகள் பாராட்டவும் இன்பாக்ஸூக்கு வரவும். தவறிருந்தால் கண்டிப்பாய் திருத்திக் கொள்கிறேன்.

24 அக்டோபர் 2014 அன்று ஃபேஸ்புக்கில் எழுதியது

செவ்வாய், 19 அக்டோபர், 2021

மாற்றான் பார்த்து விட்டு மனசு மாறிய குடும்பஸ்தர்கள் சங்கம்.

அன்புள்ள கே.வி.ஆனந்த் மற்றும் சுபா அவர்களுக்கு,

எனர்ஜி ட்ரிங்க் பவுடர் வாங்குவது இப்போது எல்லார் வீட்டிலும் கட்டாயம் ஆகிவிட்டது. காம்ப்ளான் சாப்பிட்டால் சீக்கிரம் உயரமாக வளர்கிறார்கள் (என்று ஆராய்ச்சி மூலமாக நிரூபிக்கப்பட்டிருப்பதாக அவர்களே கூறுவதால்) ஹார்லிக்ஸ் குடிப்பதால் ஷார்ப்பாக வளர்கிறார்கள் என்பதால், நாங்களும் எங்கள் வீட்டுப்பசங்கள் சீக்கிரம் உயரமாக வேண்டும், ஷார்ப்பாக வேண்டும் என்று ஆசைப்பட்டு அவர்களுக்கு எனர்ஜி ட்ரிங்க் வாங்கிக் கொடுக்கிறோம்.



மாற்றான் பார்த்த பிறகு அவற்றில் நீங்கள் குறிப்பிட்ட படி ஏதேனும் ஜெனடிக், ஸ்டீராய்டு கசமுசாக்கள் இருக்குமோ என்று பயம் வந்து விட்டது.

ஆகவே இனிமேல் எங்க வீட்டுப் பசங்களுக்கு மன்னா ஹெல்த் மிக்ஸ், வீட்டிலேயே தயார் செய்த கம்மங்கூழ், கேப்பை கூழ், பக்கத்து தெரு மாவு மெசினில் அரைத்த தானிய மாவுக்கஞ்சி போன்ற அயிட்டங்களையே கொடுப்பதாக குடும்பத்தோடு உட்கார்ந்து கும்மியடித்து யோசித்து முடிவு செய்துள்ளோம்.

இனிமேல் காம்ப்ளான் (அ) ஹார்லிக்ஸ் வாங்குவதாக இல்லை. அதனால் மிச்சமாகும் மாத பட்ஜெட்டுகளை உங்களது அடுத்தடுத்த படங்கள் பார்த்து அறிவை வளர்த்துக்கொள்வதற்கு தேவையான தியேட்டர் செலவுகளுக்கு ஒதுக்கி விட்டோம்.

உங்கள் சேவைக்கு நன்றி. இதற்காக காம்ப்ளான் மற்றும் ஹார்லிக்ஸ் கம்பேனிகள் வருத்தப்பட்டால் அதற்கு நாங்கள் பொறுப்பல்ல..

இப்படிக்கு,
மாற்றான் பார்த்து விட்டு மனசு மாறிய குடும்பஸ்தர்கள் சங்கம்.
20 அக்டோபர் 2012 அன்று ஃபேஸ்புக்கில் எழுதியது.

வெள்ளி, 15 அக்டோபர், 2021

ஜாக்கிரதை - மார்க்கெட் ஏறும் போதும் - ஜாக்கிரதை

நம்ம இன்வெஸ்ட்மெண்ட் குரூப்புக்காக எழுதியது. குரூப் லிங்க் இதோ

கடந்த ஒன்றரை வருஷமா ஷேர் மார்க்கெட்டுக்கு உள்ள வந்தவங்க, இலாபம் பார்த்தவங்க எல்லாருக்கும் ஒரு விஷயம் அறிவுறுத்துறேன். இது புல் (காளை) மார்க்கெட். எல்லாத்துறைக்கும் பிரகாசமான எதிர்காலம் இருக்குற மாதிரியே தெரியுது.

போர்ட்ஃபோலியோ முழுக்க பச்சையா இருக்குது. எந்த ஷேர் வாங்குனாலும் ஏறுது. நாம வாங்கின ஷேரெல்லாம் ஏறிடுச்சு, அதுனால நாம பெரிய இன்வெஸ்ட்மெண்ட் புலி ஆகிட முடியாது. இந்த மார்க்கெட் எங்க போய் முடியும்னு தெரியாது. எப்ப திரும்பும்னு தெரியாது.

மார்க்கெட்ல ஆவரேஜா மூன்று வருடத்துக்கு ஒருமுறை ஒரு fall இருக்கும்னு சொல்வாங்க. ஒரு பெரிய fall 10 வருடத்துக்கு ஒருமுறை வரும்னு சொல்வாங்க. 2008 ல லேமென் ப்ரதர்ஸால லெஃப்ட்ல ஒரு மரண அடி வாங்கின மார்க்கெட் மறுபடி 2020 ல கொரோனாவால ரைட்ல ஒரு வாங்கு வாங்குச்சு.

அதுபோக நடுவுல அப்பப்ப சின்னச்சின்ன இறக்கங்களும் இருந்துச்சு. எனவே, 10 வருஷமா, 20 வருஷமா ட்ரேடிங்கோ, இன்வெஸ்ட்மெண்டோ பண்றவங்க கிட்ட அட்வைஸ் கேளுங்க. நீங்களா கேக்காட்டியும் அவங்களா சொல்றதையாச்சும் கேளுங்க. உஷாரா இருங்க.

ஷேர் ப்ரோக்கிங் நிறுவனத்துல வேலை செஞ்சப்போ 2008 பேர் (கரடி) மார்க்கெட்ல சத்யம் ஷேர்ல, அதுவும் ஃப்யூச்சர்ல மரண அடி வாங்கி ரத்தக் கண்ணீர் விட்டவனை ரெண்டடி தூரத்துல இருந்து பார்த்தவன் நானு. 420 ரூபாய்ல இருந்து ரெண்டுமுணு நாள்ல 6 ரூபாயில போய் நின்னது அது.

RMS னு சொல்லப்படுற ரிஸ்க் மேனேஜ்மெண்ட் சர்வீஸ் டிபார்ட்மெண்ட் உள் பூட்டு போட்டுட்டு எவனையும் உள்ள விடாம மார்ஜின் கட்டாதவங்களோட நூத்துக்கணக்கான பொஸிஷன்ஸை செல்லிங் அடிச்சித் தள்ளுனதைப் பார்த்தவன். அதுல செத்தவன் சில பேரு. பணத்தை இழந்ததால "வெற்றிக்கொடி கட்டு சார்லி" மாதிரி பைத்தியம் புடிச்சவன் பல பேரு.

MCX புரோக்கிங் ஆஃபீஸ் ல வேலை செய்யும் போது இதுக்கு நேர்மாறா வெள்ளி கன்னா பின்னான்னு விலை ஏறிப்போக, ஆனா "இறங்கும்னு நினைச்சு" ஏகப்பட்ட லாட் செல்லிங் அடிச்சு வச்சவங்கள்லாம் வட்டிக்குக் கடன் வாங்கி பொஸிஷன் க்ளோஸ் பண்ண பணம் கட்டுனதையும், அவங்களுக்கு பிராஞ்ச் ஓனர் ஆறுதல் கூட்டம் (ஆறுதல் கூட்டமா அது? இரங்கல் கூட்டம் மாதிரி இருந்தது) நடத்தினதைப் பார்த்தவன்.

அதுக்கு முன்னாடி இதே போல சில இறக்கங்கள்ல மொத்த சொத்தை இழந்தவர்களை கண்ணால பார்த்தவன் (எங்க அரிசிக்கடை சித்தப்பா காமிச்சாரு). ஜாக்கிரதை. ஜாக்கிரதை. ஜாக்கிரதை. இன்னும் ரெண்டரை வருஷத்துல பி.எம் எலக்ஷன் வரும்போது ரத்தக்களறி நடக்க"லாம்".

ஒரு pandemic க்குக்கு மொத்தம் ஏழு வேவ் இருக்குன்னு ஒரு டாக்டர் சொன்னாரு. முதல் மற்றும் இரண்டாவது வேவ் போல மிக அதிமா மறுபடி ஒரு பரவல் வந்தால், மறுபடி ஃபுல் லாக் டவுன் போட்டா உங்க போர்ட்ஃபோலியோ சிவப்பைப் பார்க்கலாம். டச் உட் - இதெல்லாம் நடக்கக் கூடாதுன்னு வேண்டிக்குவோம்.

இப்போதைக்கு மார்க்கெட் உள்ள வந்து, ஆனால் வேற முழு நேர வேலை, தொழில் பார்க்குற எல்லாருக்கும் சில அட்வைஸூகள்.

1. உங்க உபரிப்பணத்தை மட்டும் மார்க்கெட்ல போடுங்க.

2. மார்க்கெட்ல எவ்வளவு போட்டாலும், வந்தாலும், போனாலும், இறங்கினாலும், ஏறினாலும் அதைப் பத்தி "பயப்படாதீங்க". கொஞ்சம் கஷ்டம்தான். ஆனா முயற்சி பண்ணுங்க.

3. கொஞ்சம் மியூச்சுவல் ஃபண்டுகள் லயும் போடுங்க.

4. நல்லா ஆராய்ச்சி பண்ணி 10, 20, 30 ஆண்டுகளா இருக்குற நல்ல ஷேர்கள்ல போடுங்க.

5. டிரேடிங், இன்ட்ரா டே, ஆப்ஷன்ஸ், ஃப்யூச்சர்ஸ், அது இதுன்னு கன்ஃபர்மா மாசம் இத்தனை பர்சன்ட் தர்றேன்னு சொன்னா நம்பவே நம்பாதீங்க. அப்படி சொல்லி அப்ஸ்காண்ட் ஆனவங்க பல பேரை என் கண்ணால பாத்திருக்கேன். ஐ மீன் அப்ஸ்காண்ட் ஆகும் முன்.

6. இன்வெஸ்ட்மெண்டை SIP மோடுல பண்ணுங்க.

7. வட்டி கம்மியா வந்தாலும் பரவால்ல. முக்கியச் செலவுகளுக்குத் தேவையான பணத்தை பேங்க் FD ல வையுங்க.

8. டெர்ம் இன்ஷூரன்ஸ், மெடிக்கல் இன்ஷூரன்ஸ் எடுத்து வைங்க.

9. கொஞ்சம் தங்கம் வாங்கி வைங்க. அவசரத்துக்கு அதைத் தான் அடகு வைக்க முடியும்.

10. முடிஞ்சா வெள்ளித்தட்டு கிட்டு வாங்கி வைங்க. பெரிய்ய பிரச்சினைன்னா அதைக்கூட விற்க முடியும். ஆனா ஃப்ரீஸ் ஆன ஷேரையோ, டீலிஸ்ட் ஆன ஷேரையோ விக்க முடியாது.

11. டாக்டர்கிட்ட இன்வெஸ்ட்மெண்ட் பத்திக் கேக்காதீங்க. வாத்தியார் கிட்ட வைத்தியம் கேக்காதீங்க. ஆட்டோக்காரன் கிட்ட ஆப்பாயில் கேக்காதீங்க. 

அனுபவப் பட்டவர்கள், இவற்றில் விட்டுப் போன அட்வைஸூகளை சேர்க்கலாம். புல் மார்க்கெட் தொடர வாழ்த்துக்கள். 

வியாழன், 14 அக்டோபர், 2021

இந்தத் துறைக்கு வந்தது எப்படி?

ஃபேஸ்புக்கில் பதிவேற்றிய, ஆசிரியர்களுக்கு நான் பயிற்சி கொடுக்கும் புகைப்படம் ஒன்றில் "இந்தப் பயிற்றுவிப்பாளர் துறைக்கு வந்தது எப்படி?" என்று அறிவன் அறிவன் அவர்கள் ஒரு கேள்வியைப் போட்டிருந்தார். என்னுடைய 20 வருடத்தைத் திரும்பிப் பார்க்க வைக்கும் ஆழமான கேள்வியாக இருந்தது அது.
அதற்கான பதிலை யோசிக்கையில் "தொடர்ந்த படிப்பும், அடுத்தது என்ன?" என்ற ஆர்வமும் தான் காரணம் என்று சொல்லலாம் எனத் தோன்றியது..
தொழில் செய்தால் இலாபம் வரலாம். நட்டமும் வரலாம், கியாரண்டி கிடையாது. "நட்டம் தான் வரும்" என்று ஒரு பய பிம்பத்தை என்னைச் சுற்றி இருந்து பலவித தொழில்கள் செய்த பெரும்பாலான உறவினர்கள் தங்கள் வாழ்க்கை மூலம் காட்டி விட்டார்கள். எனவே, "தங்கையின் திருமணம், அப்பாவின் கடன்" போன்ற கமிட்மெண்டுகள் இருந்த எனக்கு வேலைக்குப் போவது தான் சிறந்தது என என் சிறு மூளையில் பதியப்பட்டது.
ஆனால், நல்ல படிப்புகளை நானே தேர்வு செய்யும் வாய்ப்புகள் இன்றி, தமிழகத்தின் பெரும்பாலான வசதியற்ற மாணவர்களைப் போல, அரசு உதவிபெற்ற பள்ளிகள், அரசாங்கக் கல்லூரி, கரஸ்பாண்டன்ஸ் கோர்ஸ்கள், என்று தொடர்ந்து, கிடைத்தவற்றைப் படித்தவன்தான் நான். அதே போல திரவியம் தேடியாக வேண்டிய நிர்ப்பந்தத்தில் வேலைச் சந்தையில் "ஏதோ ஒரு வேலை" என்று உள்ளே நுழைந்தவன் தான்.
என் முதல் முழு நேர வேலையாக சேலம் தினமலரில் எடிட்டோரியலில் இரவு ஷிஃப்டில் வேலை செய்த போது எம்.ஏ ஆங்கில இலக்கியமும் படித்துக் கொண்டிருந்தேன். அதனால் அப்போது "டீச்சருக்கு இங்கே என்னய்யா வேலை?" என்று ஜாலியாகக் கலாய்த்து ஏற்றி விட்டார்கள். அப்போது தான் எனது தடம் மாறியது. அங்கிருந்து வேலை மாறுகையில் பள்ளி ஆசிரியராக வேலைக்குச் சேர்ந்தேன். அங்கே துவங்கியது "அடுத்தது என்ன?" என்ற கேள்வி.
அது தான் இங்கே வரை அழைத்து வந்திருக்கிறது என்று நினைக்கிறேன். கல்வித் தகுதிகள், பணத் தேவைகள் போன்ற பல காரணங்களால், பள்ளி ஆசிரியரில் இருந்து கல்லூரி ஆசிரியர், அடுத்தது (வெளிநாடுகளுக்கு) ஆன்லைன் கல்வியாளர், பங்குச் சந்தையில் பயிற்றுவிப்பாளர், எட்-டெக் எனும் கல்வித் தொழில் நுட்பம் சார்ந்த நிறுவனங்களில் பயிற்றுவிப்பாளர், ஃப்ரீலான்ஸ் ஆக கல்வி நிறுவனங்கள் சார்ந்த பலவித வேலைகள், பேச்சு, எழுத்து, மொழிபெயர்ப்பு என மெள்ள நகர்ந்து, இன்று ஒரு நிறுவனத்தில் மீண்டும் பயிற்றுவிப்பாளர் (மற்றும் கல்வி மேலாளர்) ஆக இருக்கிறேன்.
பலரின் வாழ்க்கையை மாற்ற வாய்ப்பிருக்கும் துறை என்பதால் கல்வித்துறையிலேயே இருக்க வேண்டும் என்ற எண்ணம் இன்று ஆழமாக வேரூன்றி விட்டது. (மனத்திருப்தி சார்ந்த வருமானம்)
இடையில் குறும்படம், கதைகள், படைப்புகள், மின்புத்தகங்கள், நீயா? நானா?, ஒரு திரைப்படத்தில் நடிப்பு, யூடியூப் சேனல் எனப் பொழுதுபோக்கு சார்ந்தும் இயங்கிக் கொண்டு இருக்கிறேன். (ஆசைக்காக)

தூண்டிய கேள்விக்கு நன்றி.  




ரொம்பவும் குட்டிக் கதை

சென்ற மாதம் 22.09.21 தேதியிட்ட குமுதம் வார இதழில் வெளியான என்னுடைய குட்டிக் கதை ஒன்று. "சிங்கிள் வரி சிறுகதைகள்" என்ற பெயரில் வாராவாரம் குமுதத்தில் வெளியாகும் பகுதியில் வெளியானது.