வியாழன், 14 அக்டோபர், 2021

இந்தத் துறைக்கு வந்தது எப்படி?

ஃபேஸ்புக்கில் பதிவேற்றிய, ஆசிரியர்களுக்கு நான் பயிற்சி கொடுக்கும் புகைப்படம் ஒன்றில் "இந்தப் பயிற்றுவிப்பாளர் துறைக்கு வந்தது எப்படி?" என்று அறிவன் அறிவன் அவர்கள் ஒரு கேள்வியைப் போட்டிருந்தார். என்னுடைய 20 வருடத்தைத் திரும்பிப் பார்க்க வைக்கும் ஆழமான கேள்வியாக இருந்தது அது.
அதற்கான பதிலை யோசிக்கையில் "தொடர்ந்த படிப்பும், அடுத்தது என்ன?" என்ற ஆர்வமும் தான் காரணம் என்று சொல்லலாம் எனத் தோன்றியது..
தொழில் செய்தால் இலாபம் வரலாம். நட்டமும் வரலாம், கியாரண்டி கிடையாது. "நட்டம் தான் வரும்" என்று ஒரு பய பிம்பத்தை என்னைச் சுற்றி இருந்து பலவித தொழில்கள் செய்த பெரும்பாலான உறவினர்கள் தங்கள் வாழ்க்கை மூலம் காட்டி விட்டார்கள். எனவே, "தங்கையின் திருமணம், அப்பாவின் கடன்" போன்ற கமிட்மெண்டுகள் இருந்த எனக்கு வேலைக்குப் போவது தான் சிறந்தது என என் சிறு மூளையில் பதியப்பட்டது.
ஆனால், நல்ல படிப்புகளை நானே தேர்வு செய்யும் வாய்ப்புகள் இன்றி, தமிழகத்தின் பெரும்பாலான வசதியற்ற மாணவர்களைப் போல, அரசு உதவிபெற்ற பள்ளிகள், அரசாங்கக் கல்லூரி, கரஸ்பாண்டன்ஸ் கோர்ஸ்கள், என்று தொடர்ந்து, கிடைத்தவற்றைப் படித்தவன்தான் நான். அதே போல திரவியம் தேடியாக வேண்டிய நிர்ப்பந்தத்தில் வேலைச் சந்தையில் "ஏதோ ஒரு வேலை" என்று உள்ளே நுழைந்தவன் தான்.
என் முதல் முழு நேர வேலையாக சேலம் தினமலரில் எடிட்டோரியலில் இரவு ஷிஃப்டில் வேலை செய்த போது எம்.ஏ ஆங்கில இலக்கியமும் படித்துக் கொண்டிருந்தேன். அதனால் அப்போது "டீச்சருக்கு இங்கே என்னய்யா வேலை?" என்று ஜாலியாகக் கலாய்த்து ஏற்றி விட்டார்கள். அப்போது தான் எனது தடம் மாறியது. அங்கிருந்து வேலை மாறுகையில் பள்ளி ஆசிரியராக வேலைக்குச் சேர்ந்தேன். அங்கே துவங்கியது "அடுத்தது என்ன?" என்ற கேள்வி.
அது தான் இங்கே வரை அழைத்து வந்திருக்கிறது என்று நினைக்கிறேன். கல்வித் தகுதிகள், பணத் தேவைகள் போன்ற பல காரணங்களால், பள்ளி ஆசிரியரில் இருந்து கல்லூரி ஆசிரியர், அடுத்தது (வெளிநாடுகளுக்கு) ஆன்லைன் கல்வியாளர், பங்குச் சந்தையில் பயிற்றுவிப்பாளர், எட்-டெக் எனும் கல்வித் தொழில் நுட்பம் சார்ந்த நிறுவனங்களில் பயிற்றுவிப்பாளர், ஃப்ரீலான்ஸ் ஆக கல்வி நிறுவனங்கள் சார்ந்த பலவித வேலைகள், பேச்சு, எழுத்து, மொழிபெயர்ப்பு என மெள்ள நகர்ந்து, இன்று ஒரு நிறுவனத்தில் மீண்டும் பயிற்றுவிப்பாளர் (மற்றும் கல்வி மேலாளர்) ஆக இருக்கிறேன்.
பலரின் வாழ்க்கையை மாற்ற வாய்ப்பிருக்கும் துறை என்பதால் கல்வித்துறையிலேயே இருக்க வேண்டும் என்ற எண்ணம் இன்று ஆழமாக வேரூன்றி விட்டது. (மனத்திருப்தி சார்ந்த வருமானம்)
இடையில் குறும்படம், கதைகள், படைப்புகள், மின்புத்தகங்கள், நீயா? நானா?, ஒரு திரைப்படத்தில் நடிப்பு, யூடியூப் சேனல் எனப் பொழுதுபோக்கு சார்ந்தும் இயங்கிக் கொண்டு இருக்கிறேன். (ஆசைக்காக)

தூண்டிய கேள்விக்கு நன்றி.  




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக