ஞாயிறு, 24 அக்டோபர், 2021

articles - ல் எங்கே a போட? எங்கே an போட?

நண்பர் ஒருவருக்கு ஆங்கில இலக்கணத்தில் வரும் articles - ல் பலத்த சந்தேகம். எந்த இடத்தில் a போட வேண்டும்? எந்த இடத்தில் an போட வேண்டும்? என்னிடம் கேட்டார். சொல்லிக் கொடுத்தேன். (இந்த இடத்தில் நான் ஒரு முன்னாள் ஆங்கில வாத்தி என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்).

இன்றைக்கும் அவர் அனுப்பும் மெயில்களில் பல இடங்களில் அவருக்கு இந்த டவுட்டு வருகிறது. இந்தக் குழப்பம் எல்லோருக்கும் வருவது சகஜம். பெரிய பெரிய ஆட்கள் அனுப்பும் மெயில்களில் கூட articles - ல் தவறு இருக்கிறது. (articles ல் the என்ற வார்த்தையும் உண்டு. ஆனால் பலருக்கும் சந்தேகம் a மற்றும் an - ல் தான். ஆகவே the பற்றி இங்கே பார்க்கப் போவதில்லை).
அவருக்குச் சொன்னது மற்றவர்களுக்கும் உபயோகப்படலாம். அது பலருக்கும் பயனளிக்கும் என்பதால் இங்கே பதிகிறேன். இப்படி பதியச் சொன்னது கூட என் நண்பரின் ஐடியா தான். சரிஓ.கே.. போலாமா?
அடிப்படை தகவல் - ஆங்கிலத்தில் வெறும் 26 எழுத்துக்கள் மட்டுமே. அதை வைத்துத் தான் எல்லா வித்தையும் காட்டுகிறார்கள். vowels எனக் கூறப்படும் a, e, i, o, u என்ற ஐந்தும் உயிர் எழுத்துக்கள். மற்ற 21-ம் consonants எனப்படும் மெய் எழுத்துக்கள். தமிழிலோ மற்ற இந்திய மொழிகளிலோ இருப்பது போல உயிர் மெய் எழுத்துக்கள் (கா, கீ, கூ, கெ, கை) எனும் கூட்டெழுத்துக்கள் கிடையவே கிடையாது.
பிரச்சினையே இங்கே தான். a, e, i, o, u என்ற உயிர் எழுத்தில் ஆரம்பிக்கும் வார்த்தைக்கு முன்பு an போடு. consonants - ல் ஆரம்பிக்கும் வார்த்தைகளுக்கு முன்பு a போடு என்று பள்ளிக்கூடத்தில் சொல்லிக் கொடுத்திருப்பார்கள். அதன் படி நியாயமாகப் பார்த்தால் u என்பது vowel என்பதால் கீழே வரும் எல்லா வார்த்தைகளுக்கும் முன்பு an தானே போட வேண்டும்?
MLA, umbrella, untold story, university, useful gift, union, uniform (ஒரு எம்.எல்.ஏ, ஒரு குடை, சொல்லப்படாத ஒரு கதை, ஒரு உபயோகமான பரிசு, ஒரு அமைப்பு, ஒரு சீருடை) ஆனால் அப்படி போட முடியாது. ஏன்? சரியான விடைகள் கீழே. (இது போக பல இடங்களில் the வரும். அது அடுத்த ஸ்டெப். இப்போதைக்கு நம் கேள்வி. எங்கே a? எங்கெங்கே an? என்பதே)
சரியான விடைகள் -
a university (யுனிவர்சிட்டி)
a useful gift (யூஸ்ஃபுல் கிஃப்ட்)
a union (யூனியன்)
a uniform (யூனிஃபார்ம்)
an MLA (எம்.எல்.ஏ)
an umbrella (அம்ப்ரெல்லா)
an untold story (அன்டோல்ட் ஸ்டோரி)
எப்படி என்கிறீர்களா? அடைப்புக்குள் உள்ளவை க்ளூக்கள். அதை வைத்து கண்டுபிடிக்கப் பாருங்கள். நினைவு வருகிறதா? எஸ். கரெக்ட். ஒரு வார்த்தை vowel ல் ஆரம்பிக்கிறது என்பதால் மட்டுமே அதற்கு முன் an போட முடியாது. vowel sounds என்று சொல்லியிருப்பார்கள். அதாவது உயிர் எழுத்தின் ஒலியில் அந்த வார்த்தையின் உச்சரிப்பு துவங்க வேண்டும். எழுத்து consonant ஆகக் கூட இருக்கலாம். (MLA வை கவனிக்கவும்) ஒலி தான் முக்கியம்.
விடை காணும் வழி - நாம் தமிழர்கள். ஆகவே நமக்கு இதனை கண்டுபிடிப்பது ரொம்ப சிம்பிள். தமிழ் உயிர் எழுத்துக்கள் உங்கள் எல்லோருக்கும் தெரியும் அல்லவா? (அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஐ, ஒ, ஓ, ஔ). கொடுக்கப்படும் ஆங்கில வார்த்தையை மனதுக்குள் ஒரு முறை படியுங்கள். அதன் ஒலி தமிழ் அ-னா, ஆ-வன்னாவில் துவங்குகிறதா? சிம்பிள். அங்கே an போட்டு விடுங்கள்.
க, ங, ச என்ற 18 மெய்யெழுத்துக்களின் ஒலியிலோ அல்லது கை, கே, கோ போன்ற 216 உயிர் மெய் எழுத்துக்களின் ஒலிகளிலோ அந்த ஆங்கில வார்த்தை துவங்கினால் அதன் முன்பு a தான் வர வேண்டும். அவ்வளவு தான்.
இப்போ ஹோம்வொர்க். கீழ்க்கண்ட வார்த்தைகளுக்கு எந்த "ஆர்ட்டிகில்" போட வேண்டும்?
ordinary man (ஆர்டினரி மேன்)
octopus (ஆக்டோபஸ்)
ancient (ஏன்சியன்ட்)
apple (ஆஏப்பிள்)
x – ray (எக்ஸ் ரே)
hour (ஹவர் அல்ல ஆர் (edited))
european country (யூரோப்பியன் கன்ட்ரி)
one rupee note (ஒன் அல்ல வன்)
ஆனால் ஒரு முக்கிய விஷயம். ஆங்கில வார்த்தைகளின் சரியான உச்சரிப்பு நமக்குத் தெரிந்திருக்க வேண்டும். ஒரு வார்த்தையின் தவறான பதத்தை சரி என்று நினைத்துக் கொண்டு எத்தனை முறை படித்தாலும் விளங்காது.
டிசுக்கி - மேற்கொண்டு டவுட்டுகளுக்கும், குறை, நிறைகள் பாராட்டவும் இன்பாக்ஸூக்கு வரவும். தவறிருந்தால் கண்டிப்பாய் திருத்திக் கொள்கிறேன்.

24 அக்டோபர் 2014 அன்று ஃபேஸ்புக்கில் எழுதியது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக