ஞாயிறு, 3 நவம்பர், 2013

கருத்து கந்தசாமிகள் - புரியலைடா சாமி.



பல முறை நீயா? நானா? வில் கருத்து சொல்வதற்காக ஒரு தடி கண்ணாடி போட்டுக்கொண்டு டாக்டர் மோகன் என்ற (படிப்பளவில்) பெரிய ஆள் ஒருத்தர் கருத்து சொல்ல வருகிறார். இன்றைக்கும் வந்தார். பி.ஹெச்.டி எல்லாம் படித்த பெரிய படிப்பாளி போலும். இருந்து விட்டுப் போகட்டும். ஆனால் பார்க்குறவங்களுக்கு புரிகிறதா? என்பது தான் கேள்வி.

அவர் பேச ஆரம்பித்தால் கலந்து கொள்பவர்களில் இரு பக்கமும் கொட்டாவி விட ஆரம்பிக்கிறார்கள். கோபியே ஓரமாக போய் படிக்கட்டில் அமர்ந்து கொள்கிறார். அவர் பாட்டுக்கு பேசிக்கொண்டேடேடேடேடே போகிறார். தான் பேசும் ஒவ்வொரு வாக்கியத்திற்கும் அவர் மனதிற்குள் டிஸ்கிளெய்மர் ஓடுகிறது. எவனொருவன், தான் பேசவும் வேண்டும், தன் கருத்துக்கு எதிர்ப்பும் வரக்கூடாது, தான் சொல்ல நினைத்ததையும் முழுதாக சொல்ல வேண்டும், எந்தப் பிரச்சினையும் வரக்கூடாது என்றெல்லாம் நினைக்கிறானோ அவன், தான் சொல்லும் ஒவ்வொரு வரியையும், வார்த்தையையும் ஜஸ்டிஃபை செய்ய விரும்புவான். அவனது பேச்சும் வளவளவென்று இழுத்துக்கொண்டே போகும்.

பொதுவாக கம்பெனிகள் தான் இப்படி ஒவ்வொரு வரிக்கும் டிஸ்கிளெய்மர் வைப்பார்கள். குறிப்பாக இன்ஷூரன்ஸ், மியூச்சுவல் ஃபண்டுகள். எந்த வரியிலும் தனக்கு பிரச்சினை வந்து விடக்கூடாது என்று அப்படிப்பட்ட கம்பெனிகள் நினைப்பதன் காரணமாகத்தான் ஒவ்வொரு அக்ரிமெண்டும் பக்கம் பக்கமாக ஓடுகிறது. உங்களிடம் பதினாறு கையெழுத்துக்கள் கேட்கிறார்கள்.

சமீபத்தில் குமுதம் இன்டர்நெட் ஸ்பெஷலில் ஒரு வரியை கவனிக்க நேர்ந்தது. இன்டர்நெட்டில் "சங்கொலி மங்க முழங்கும் யாக்கை" என்றெல்லாம் கடினமான வரிகளைப்போட்டு கவிதை எழுதுவார்கள் சிலர். "தல, சுத்தமா புரியல ஆனா சூப்பரா இருக்கு, தொடருங்கள்" என்று பின்னூட்டம் இட்டு அவர்களை உற்சாகப்படுத்துவார்கள் சிலர், என்று குறிப்பிட்டிருந்தார்கள்.

கல்லூரியில் என்னுடைய புரபஸர் ஒருத்தர் இருந்தார். பாடம் நடத்த ஆரம்பித்து விட்டால் நடத்திக்கொண்டே இருப்பார் அருவித்தண்ணீர் போல, யாருக்காகவும் நிறுத்தாமல். புரியவில்லை என்றால் திருப்பி நடத்த மாட்டார். நடுவில் யாரேனும் எழுந்து போனால் கண்டுகொள்ளவும் மாட்டார். ஒன்றிரண்டு முதல் பெஞ்ச் மாப்பிளைகள் மட்டும் அவரை கவனிப்போம். மாணவனுக்கு புரியும் படி நடத்துபவன் தான் ஒரு நல்ல ஆசிரியன் அவரோ என் கடமை பாடம் நடத்துவது மட்டுமே என்பதே அவரது எண்ணம். நாலு பெஞ்சு இருந்தாலும் போதும், நான் பாடம் நடத்துவேன் என்று சொல்வார். ஆனால் அப்படி நடத்தி என்ன பிரயோசனம்? அவர் அறிவாளி, படிப்பாளி என்பது மட்டுமே நாம் அந்த இடத்தில் புரிந்து கொள்ளும் விஷயம்.

அதுபோல யாருக்கும் புரியாமலே எழுதுவது, பேசுவது என்று கொள்கை வைத்துக்கொண்டு திரிகிறார்கள் சிலர். என்னுடைய கேள்வி - அப்படி என்னத்தை அய்யா சாதிக்கப்போகிறீர்கள் கேட்பவனுக்குப் புரியாமல்? நீங்கள் அறிவாளி எனக்காட்டிக் கொள்ளும் உத்வேகம் மட்டும் தான் தெரிகிறது உங்கள் பேச்சில். அவரை சப்போர்ட் செய்பவர்களும் அப்படித்தான். அவரை சப்போர்ட் செய்வதன் மூலம் தானும் ஒரு அறிவாளி என்று காட்டிக்கொள்ள நினைக்கிறார்கள். ஆனால் தமக்கும் சுத்தமாக புரியவில்லை என்பதை வெளியே சொல்வதில்லை. (சொல்பவனை கூட்டாக சேர்ந்து கும்மி வேறு அடிப்பது உண்டு)

அவர் கலந்து கொள்ளும் ஷோவில் அவர் பேச ஆரம்பித்தால் நான் கண்களையெல்லாம் இடுக்கிக்கொண்டு அவரையே கூர்ந்து கவனித்து அவர் சொல்வதைப்புரிந்து கொள்ள முயற்சி செய்கிறேன். ஆனால் வீட்டில் (அப்பா, மனைவி, தங்கை, மச்சான், குழந்தைகள், மாமியார், மாமனார் என பலரும்) டேய், சேனலை மாத்தேண்டா. லூஸூ மாதிரி (சத்தியமாக இந்த வார்த்தையை சொன்னார்கள்) புரியாமயே பேசிட்டு இருக்கான். மாத்துறியா? இல்லையா? என்கிறார்கள் என்னிடம்.

ஒருமுறை குழந்தைகள் பற்றிய ஷோ ஒன்றிலும் இப்படித்தான் குழந்தைகளின் பழக்க வழக்கங்கள் எப்படி வந்தன என்று விளக்க ஆரம்பித்து ஆப்பிரிக்கா, அண்டார்டிகா, ஜீன், ஜெனடிக்ஸ், இலக்கியம், மருத்துவ விளக்கம் என குழப்போ குழப்பென்று குழப்பியடித்து சுமார் 20 நிமிடம் பேசித் தள்ளி விட்டார். சத்தியமாய் கோபிநாத்-திற்கே புரிந்திருக்காது. இரு குழந்தைகள் தூங்கியே விட்டன. எதிர்சாரியில் அமர்ந்திருந்த பல பெற்றோர் மோகனை முறைக்க ஆரம்பித்தார்கள். அதே போல் கோபி பேச ஆரம்பித்த பிறகு மோகனின் கருத்துக்களின் சுவடே இன்றிப் பேச வேண்டியிருந்தது. அல்லது மோகனின் பேச்சை அப்படியே எடிட்டிங்கில் கட் செய்து உருவி எடுத்து விட்டால் அந்த நிகழ்ச்சிக்கு எந்த பாதிப்பும் வராது என்ற நிலையிலேயே இருந்தது அவரது பேச்சு.

மற்றொரு முறை ஆண்களின் உடை மற்றும் அப்பியரன்ஸ் சம்பந்தப் பட்ட நிகழ்ச்சியிலும் அப்படித்தான். ஒவ்வொரு முறையும் நீயா? நானா? வை ரசித்துக் கொண்டிருக்கும் எங்கள் குடும்பம் மோகனின் இரு நிமிடங்கள் பேச்சை பார்த்ததும் சேனல் மாற்றுகிறது. இன்றைக்கு எனக்குத் தெரிந்து நான்காவது முறை.

என்னுடைய தாழ்மையான கருத்து - எப்போதுமே எந்தப் படைப்பும், பேச்சும், இலக்கியமும், ஓவியமும், கதை, கட்டுரை, சினிமாக்களும் பார்வையாளனுக்கு / ரசிகனுக்கு / ஆடியன்ஸூக்குப் புரிய வேண்டும். அப்போது தான் அது வெற்றி பெறும். அப்படி இல்லாமல் போனால் அது தோல்வியே. வேண்டுமானால் கருத்து ரீதியாக அது வெற்றிதான் என்று ஆறுதலாக நமக்கு நாமளே சொல்லிக்கொண்டு படிக்கட்டில் அமர்ந்து மூக்கு சீந்திக் கொள்ளலாம் அல்லது தன் கருத்தையொத்த இன்னும் சிலரை சேர்த்து வைத்து மாறி மாறி சொரிந்து கொள்ளலாம். சுகமாக இருக்கும்.