புதன், 26 பிப்ரவரி, 2014

வௌங்கிரும்


கோழி மாவட்டத்தில் உள்ள ரொம்பப் பிரபலமான ஒரு பள்ளி அது...

எங்கள் நிறுவனத்தின் சார்பாக பயிற்சி வகுப்பு (பயிலரங்கம்) எடுக்கச் சென்றிருந்தேன். அது ஒரு முழு நாள் தேவைப் படுகிற வகுப்பு. பயிற்சித் திட்டம் என்னவென்றால்

முதலில் இன்ட்ரோ
பின் கம்பெனி பற்றி, புராடெக்ட் பற்றி, உலக அளவில் கல்வித்துறை வளர்ச்சி பற்றி கொஞ்சம்.
அடுத்ததாக நம் ஆசிரியர்கள் இந்த புதிய கான்செப்ட் - ஐ புரிந்து கொள்ள வேண்டும்.
அடுத்ததாக (பழைய முறையிலேயே பாடம் நடத்திக் கொண்டிருக்கும் ஆசிரியர்களுக்கு) டெக்னாலஜியின் மேல் உள்ள பாமரத்தனமான பயத்தை போக்க வேண்டும்.
அடுத்ததாக, பழைய வகுப்பு முறையுடன் இந்த தொழில்நுட்பத்தை எப்படி இணைக்க வேண்டும் என்று ஐடியாக்கள் பகிர்ந்து கொள்ளப்பட வேண்டும்.
அடுத்ததாக, எப்படி அதனை இயக்குவது என்று தெரிந்து கொள்ள வேண்டும். அவர்கள் அதனை குறித்துக் கொள்ள வேண்டும்.
கடைசியாக, செயல் முறை பயிற்சியாக ஒரு நான்கைந்து பேரையாவது கைவைத்து உபயோகிக்க வைக்க வேண்டும்.

இதற்கு ஒரு முழு நாள் தேவை. ஆனால் என்ன ஒரு கொடுமை என்றால் ஒரு குரூப் ஆசிரியர்களை முக்கால் மணி நேரம் தான் அனுப்புவார்களாம். அந்தந்த பீரியடில் யாரெல்லாம் ஃப்ரீயாக இருக்கிறார்களோ அவர்களை மட்டும் அனுப்பி வைப்பார்களாம். மொத்த டிரெயினிங்கையும் முக்கால் மணி நேரத்தில் முடித்துக் கொள்ள வேண்டுமாம். அடுத்த பீரியடில் அடுத்த பேட்ச் வருமாம். இப்படியே ஒவ்வொரு பீரியடாக பேட்ச் பேட்ச் ஆக நடத்த வேண்டுமாம்.

எனக்கு அங்கேயே மனசு விட்டுப் போயிற்று. முக்கால் மணி நேரத்திற்கு ஒரு முறை நான் மறுபடி மறுபடி ஏ, பி, சி, டி-யில் இருந்து (மறுபடியும் மொதல்ல இருந்தா என்று) ஆரம்பிக்க வேண்டுமே? முதலில் ஒரு டிரெயினிங் வகுப்பு என்றால் அந்த பாடத்தில் அவர்கள் மனம் லயிக்க இருபது முப்பது நிமிடங்கள் ஆகும். அதன் பின்பே நாம் சொல்வது அவர்கள் மனதில் ஏறும்.

எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் பிரின்ஸிபாலே புரிந்து கொள்வதாக இல்லை. வேண்டா வெறுப்பா புள்ளைய பெத்து காண்டா மிருகம்-னு பேரு வச்சாங்களாம் என்பது போலவே பேசிக்கொண்டிருந்தார். வௌங்கிரும் என்று நினைத்துக் கொண்டேன். இலட்சக் கணக்கில் செலவு செய்து புதிய தொழில்நுட்பத்தை அறிமுகப் படுத்தி விட்டு அதை உபயோகிக்கத் தெரியாமல் இருந்தால் எப்படி? 













பழைய பீரியட் ஞாபகத்திலே சில ஆசிரியர்கள் வருவார்கள், சிலர் அடுத்த பீரியடுக்கான தயாரிப்புக்காக புத்தகத்துடனே வருவார்கள். சிலர் டீ-யை வாங்கி டம்ளரை ஆஆஆஆத்திக் கொண்டே வருவார்கள், சிலர் நோட்புக் கூட இல்லாமல் வெறும் கையை வீசிக் கொண்டு, சிலர் நுழைந்ததுமே நேராக ஃபேனுக்கு அடியில் போய் மேல் பட்டனை கழற்றி காற்றாட உட்கார்வார்கள், மதிய வகுப்பில் சில நாம மாமாக்கள் அரைக் கண் சொக்கியபடியே வந்து அமர்வார்கள், எக்ஸாம் டியூட்டி டிஸ்கஷன், வரும் சனிக்கிழமை விடுமுறையா? ஹெச்.ஓ.டி திட்டினாரா விவாதங்கள் பலமாக நடக்கும், லேட்டாக வரும் கேஸ்கள் தனி, பிரின்ஸிபல் சொன்னாருன்னு வந்தேன், இதெல்லாம் எனக்கு தேவையா? என்று என் காதுபடவே சொல்லி அமரும் சில சோடாபுட்டி மிஸ்ஸூகளும் உண்டு.

இவ்வளவையும் மனதில் ஏற்றிக் கொள்ளாமல் டிரெயினிங்கை ஆரம்பிக்க வேண்டும். சரி விடுடா கார்த்திகேயா, எப்படியும் குரூப்புக்கு ரெண்டு காமெடி பீஸ் வரும், அதை ஓட்டி ஜாலி பண்ணி மனசை தேத்திக்க வேண்டியது தான் என்று நினைத்துக் கொண்டேன்.

கிட்டத்தட்ட இதே தோரணையில் ஆறு பேட்ச் டிரெயினிங் ஓடியது அன்றைக்கு. கடைசி பேட்ச் ஏழாவது பேட்ச். அங்கே தான் எனக்கு செம என்டர்டெயின்மெண்ட். என்னுடைய பழைய (கல்லூரி) சீனியர் ஒருவன். கொஞ்சம் அசமஞ்சம். ரொம்ப சின்சியர் போல பாவலா காண்பிப்பான். ஆனால் இரண்டு முறை அவனிடம் பேசினாலே அவன் அசடு என்று தெரிந்து விடும். அந்தப்பள்ளியில் தான் ஆங்கில ஆசிரியர் போலும். ஹாய் கார்த்தி என்றபடி வந்து உட்கார்ந்தான்.

எனக்கும் எங்கேயோ பார்த்த ஞாபகம். கால் மணி நேரம் போனதும் ஞாபகம் வந்தது. அவன் பெயர் ராமலிங்கம் என்று வைத்துக் கொள்ளுங்களேன். கல்லூரியில் படிக்கும் போது நான் கஷ்டப்பட்டு லைப்ரரியில் தேடி படிக்க எடுத்து வந்த தலையணை சைஸ் டிராகுலா புக்கை "நானும் புக்கெல்லாம் நல்லா படிப்பேன்" என்று சொல்லி இரவல் வாங்கிப்போய் ஹாஸ்டலில் (நிஜமாகவே) தலைக்கு அடியில் வைத்து படுத்துத் தூங்கிய நாய் தானேடா நீ என்று நினைத்துக் கொண்டேன்.

அவன் ஆச்சரியமாக என்னையே பார்த்துக் கொண்டிருந்தான். நான் சொல்வதையெல்லாம் சின்சியராக நோட் செய்து கொண்டான். முதல் முறையாக பெரிய திரையில் சினிமா பார்க்கும் சின்னப் பையனின் ஆச்சரியத்துடன் முக்கால் மணி நேரமும் மூஞ்சியை வைத்துக் கொண்டிருந்தான். எல்லாம் முடிந்ததும் என்னிடம் வந்து "டேய் சண்முகமணி, என் கூடயே படிச்சுட்டு எனக்கே நீ வாத்தியாரா வருவேன்னு நான் எதிர்பார்க்கவே இல்லடா. ரொம்ப சந்தோசம்டா.." என்று வேறு மகா ஆச்சரியத்துடன் சொன்னான்.

எப்படி ஷட் டவுன் செய்வது? எப்படி எல்லாவற்றையும் ஆஃப் செய்வது என்றும் கேட்டுத் தெரிந்து கொண்டான். கொஞ்சம் குசலம் விசாரித்து விட்டு கடைசியாக அந்த உலகப் புகழ் பெற்ற கேள்வியைக் கேட்டான் பாருங்கள்.... நான் அப்படியே ஆடிப் போய்விட்டேன்.

ஆமா கார்த்தி? இதுல சன் டி.வி வருமா?