புதன், 24 பிப்ரவரி, 2021

ஐமேக்ஸ் அனுபவங்கள்

ஐமேக்ஸில் ஆங்கிலப் படங்கள் பார்த்த நண்பர்களின் சுகானுபவங்களைக் கேட்ட பிறகு அதில் ஒரு படமேனும் பார்த்து விட வேண்டும் என்று வெறிகொண்டு திரிந்துகொண்டிருந்தேன். என்ன செய்ய? கோவையில் "ஐமேக்ஸ்" இல்லை, ப்ரோசோன் மால் இல் "ஐநாக்ஸ்" மட்டுமே இருக்கிறது. எனவே நமக்குக் கொடுத்து வைக்கவில்லை. சென்னை அல்லது பெங்களூரு தான் அதற்கு ஒரே வழி. ஆனால் சென்னைக்கெல்லாம் மீட்டிங்குக்காக போன வேகத்தில் திரும்பி வந்ததால் பார்க்க நேரம் அமையவில்லை. எனவே அது கிட்டத்தட்ட நான்கு வருட ஆசை.

"ஜங்கிள் புக்" ரிலீஸ் ஆன சமயம் ஒருமுறை பெங்களூர் சென்றிருந்தேன். படம் பல தியேட்டர்களில் ரிலீஸ் ஆகியிருந்தபடியால், அன்று பார்த்தே தீர்வேன் பேர்வழி என்று கிளம்பி, ஐமேக்ஸூக்கும் ஐநாக்ஸூக்கும் வித்தியாசம் தெரியாமல் ஐநாக்ஸில் டிக்கெட் புக் செய்து, அதிலும் பெங்களூர் டிராஃபிக்கை கணக்குப் போடத் தெரியாமல் நீந்திப்போய் படம் துவங்கி 40 நிமிடம் கழித்துப் போய் சேர்ந்து (ஐநாக்ஸ் அனுபவம் என்னவோ நன்று தான்) பாதியிலிருந்து படம் பார்த்து "என்னடா இது? ஸ்கிரீன் நார்மல் சைஸ் அளவுக்குத்தான் இருக்கிறதே" என்று யோசித்து மண்டை குழம்பி பின்னாளில் இது "ஐமேக்ஸ்" இல்ல பக்கி, இது "ஐநாக்ஸ்" என்று ஒரு பெரிய பல்பு வாங்கியிருந்தேன்.
- எஸ்கா