புதன், 7 அக்டோபர், 2009

இது உங்கள் சொத்து (வடிவேலு ஸ்டைல்ல படிங்கப்பா)

சின்ன வயசுல ஊருக்கு போகசொல்லோ எதுல போகலாம்னு கேட்டா என்ன சொல்வீங்க? மொத சாய்ஸ் ரயில்தான். சரி.. ரயில்ல வெளியூர் மட்டும்தான் போகணுமா என்ன? லோக்கல்லயே சுத்தக்கூடாதா? சுத்தலாம். ஆனா எப்டின்னு கேக்குறீங்களா? நீங்க எந்த ஊரு? அதச்சொல்லுங்க முதல்ல. வெளியூரா? கெட் லாஸ்ட். மெட்ராஸா? கெட் இன். சாதா ரயில் மட்டுமில்ல. பறக்கும் ரயில் வேற கீதுப்பா இங்க. படா ஷோக்கா இருக்கும். பறக்கும் ரயில்னா பறந்து போகுமான்னு கேனத்தனமா யோசிக்காத. பாலத்து மேல போகும். கூடிய சீக்கிரம் மெட்ரோ ரயில் வேற உடுறாங்களாம்.

மெட்ராஸ்லதான் எல்லா டிரான்ஸ்போர்ட் வசதியும் உண்டு. பஸ்ஸூ, காரு, ஷேர் ஆட்டோ, கால் டாக்ஸின்னு எத்தன டிரான்ஸ்போர்ட் இருந்தாலும் மெட்ராஸூன்னா ரயில்தான் ஸ்பெஷல். சினிமால கூட இந்த ரயில் வருதுப்பா. சும்மா சூப்பரா. அலைபாயுதே பாத்தியில்ல. அதுல ஹீரோவும் ஹீரோனியும் ரயில்லயே லவ்ஸ் உடுவாங்கோ. கதை மெட்ராஸூலதான் நடக்குதா இல்லாங்காட்டி டில்லில நடக்குதான்ற அளவுக்கு ஷோக்கா ரயில் காமிச்சாரு மணிரத்னம்.

எல்லாமே லோக்கல் ரயிலு. இப்போதைக்கு நாலு ரூட்ல ஓடுதுப்பா ரயிலு. பீச்சுல இருந்து திருமயிலை வரைக்கும் ஒரு ரூட்டு, திருமயிலையில இருந்து வெளச்சேரி வரைக்கும் ஒரு ரூட்டு, வெளச்சேரியில இருந்து பரங்கி மலை வரைக்கும் ஒரு ரூட்டு, அப்பால அங்கேருந்து வில்லிவாக்கம் வரையில ஒரு ரூட்டுன்னு படா ஜோரா போவும்.

காலையில ஆபீஸ் போறவங்க, கம்பெனிக்கு வேலைக்கு போறவங்கன்னு சரியான கும்பல் இருக்கும். காலை சீக்கிரமா கெளம்புறவங்க ரெண்டு டிபன் பாக்ஸ் எடுத்துட்டு வருவாங்க. வீடு மாதிரியே மெயின்டெய்ன் பண்ணுவாங்க. அடுப்பு ஒண்ணுதான் இருக்காது. மத்த எல்லாம் பொட்டிக்குள்ளயே நடக்கும். தலை சீவறது, ஜடை போட்டுக்கறது, பேப்பர் புக்கு படிக்கறது, காலை டிபன் சாப்புடறது, சாண்ட்விச் ரெடி பண்றது, கொஞ்ச நேரம் அப்படியே கண் அசற்ரது.

விகடன்ல கூட ஒருதபா எழுதியிருந்தாங்கோ. யானை, ரயில், கடல், ஜே.கே.ரித்தீஷ் எல்லாம் பாக்கப்பாக்க சலிக்காத விஷயங்கள்னு. யானையைக்கூட உங்க ஊர்ல பாக்கலாம். ஆனா மத்த மூணு? மூணு என்ன? நாலுமே உனக்கு கிடைக்கிற இடம் மெட்ராஸ்தான். கெளம்பி வா....

செங்கல்பட்டுல இருந்தே லோக்கல் (சப் அர்பன்) ரயில் ஆரம்பிச்சுடும். பீச் வரைக்குமே அதுல போலாம். ஜாலியா ஒரு ஞாயித்துக்கிழமை பீச்சுக்கு போலாம்னு முடிவு பண்ணிட்டு கெளம்பிடலாம். தாம்பரத்துல இருந்தோ இல்ல செங்கல்பட்டுல இருந்தோ மெரினா பீச்சுக்கு எலக்ட்ரிக் டிரெயின்ல போலாம். பொழுது போகலைன்னா என்ன பண்றது? ஆங்... ரயில் பெட்டில உள்ளாற முழுக்க ஸ்கெட்ச் பேனாவால எதுனா எழுதலாம், நல்லா டைம் பாஸாவும். என்ன வேண்ணா கிறுக்கி வைக்கலாம். அதுவும் மார்க்கர் பேனா இருந்தா பெட்டர். உன்னை யாரும் எதுவும் சொல்ல மாட்டாங்க.

என்னது? என்ன எழுதறதா? என்னப்பா இது? உங்களுக்கு பிடிச்ச நடிகர் நடிகைக்கு வாழ்த்துகள் சொல்லுங்க, வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன், எலக்ஷ்ன் டைம்ல உங்க அரசியல் கட்சி விளம்பரங்கள் எழுதுங்க, நீங்க காதல் வயப்பட்டிருப்பவரா? உங்க காதலோட தெய்வீகத்தையும் மகத்துவத்தையும் எழுதுங்க. ஜோடியோட பேரு, அப்புறம்.. உங்களுக்கு பிடிக்காதவங்கள மேல வசவுன்னு என்னல்லாம் தோணுதோ அதையெல்லாம் எழுதுங்க. எழுதறத்துக்கா விஷயம் இல்ல நம்மகிட்ட?

இல்ல..... நீங்க சுய தொழில் முனைவோரா, வேலை வாய்ப்பு தருபவரா, அல்லது மூல வியாதிக்கு மருத்துவம் தர்றவரா, ஜோதிடம் பார்க்குறவரா? எப்படி உங்களுக்கு நீங்க விளம்பரம் பண்ணிக்குவீங்க? சிம்பிள். துண்டு பிரசுரம் பிரிண்ட் போடுங்க. கொண்டாந்து ரயில் பெட்டில ஒட்டுங்க. வெளியில ஒட்டிறாதீங்கப்பா. அதெல்லாம் சரவணா ஸ்டோர்ஸ், சென்னை சில்க்ஸ், குமரன் தங்க மாளிகை மாதிரி பெரிய கடைங்களுக்கு. டிரெயின் முழுக்க வெளிப்பக்கத்துல அந்தக் கடைக்காரங்க விளம்பரத்தை ஃபிளக்ஸ் பிரிண்ட் போட்டு அழகா ஒட்டியிருப்பாங்க. ஆனா அதெல்லாம் ரொம்பப் பெரிய லெவல். பைசா அதிகம் செலவாகும். நாம சிம்பிளாவே முடிச்சுக்கலாம்.

அதே மாதிரி, டிரெயின்ல நல்லா கூட்டமா இருந்தா ஃபர்ஸ்ட் கிளாஸ் பொட்டில கூட ஏறிக்கலாம். உன்னை யாரும் ஏதும் சொல்ல மாட்டாங்க. ஃபர்ஸ்ட் கிளாஸ்னா எப்டி இருக்கும்னு யோசிக்காத. ஃபர்ஸ்ட் கிளாஸ்னு எழுதிருக்கும். அவ்ளோதான். மத்தபடி சாதா பொட்டிக்கும் அதுக்கும் நோ டிபரன்ஸ். செக்கிங் சத்தியமா வரமாட்டாங்க, டோன்ட் ஒர்ரி. (அப்படின்னு தான் போன வாரம் வரைக்கும் நெனச்சுட்டு இருந்தேன் நானும்? ஒருநாள் ஓடற டிரெயின்ல செக்கர் கிட்ட மாட்டிட்டு மொய் எழுத வேண்டியதாப் போச்சு. 287 ரூபாய். அந்தக் கதையை இன்னோரு சந்தர்ப்பத்துல சொல்றேன்)

சமயத்துல பசங்க லேடீஸ் கம்பார்ட்மென்ட்ல கூட ஏறிட்டுப்போவாங்க. பாத்துக்கலாம் விடுன்னு... ஆனா எந்த ஸ்டேஷனா இருந்தாலும் எவ்வளோ கூட்டமா இருந்தாலும் முப்பதே செகண்டுதான் வண்டி நிக்கும், அதுக்குள்ள எறங்கணும்னா எறங்கிக்கோ, ஏறணும்னா ஏறிக்கோ. சூதானம்பா..

ஆனா பொட்டிய விட்டு எறங்குறப்ப பாத்து எறங்கணுமப்போய். கிண்டில ஒருமாதிரி, செங்கல்பட்டுல ஒருமாதிரி, எக்மோர்ல ஒருமாதிரி, பீச்சுல ஒருமாதிரி, வெளச்சேரில ஒருமாதிரின்னு பிளாட்ஃபார்ம் ஒவ்வொரு இடத்துலயும் ஒரு உயரத்துல இருக்கும். தடுமாறி விழுந்தே அவ்ளோதான்.. டிராக்குலயே விழணும். சட்னி (சாம்பார்?) தான். இப்பதான் கொஞ்ச நாளா எல்லா பிளாட்ஃபார்ம்லயும் டைல்ஸ் போடுற வேலைய ஆரம்பிச்சுருக்காங்க. பாப்போம், எல்லா இடத்துலயும் ஒரே உயரத்துல டைல்ஸ் போடுறாங்களான்னு.

கடலை மிட்டாய்ல இருந்து உப்புக்கடலை, இஞ்சி மொரப்பா, கடலை பர்பி, லைட்டு பேனா, சீப்பு, வாழைப்பழம், தையல் ஊசி, பீப்பி, புதுப்பட டிவிடி, மார்க்கர் பேனா, செல்போன் கவர், பத்து ரூபாய் புத்தகம், சீசனுக்கு ஏத்தாப்போல சாத்துக்குடி, சப்போட்டா, கொய்யாப்பழம், மாம்பழம்னு எல்லா வியாபாரமும் உள்ளாறயே நடக்கும். நம்ம டிரெயினுப்பா? என்ன இப்ப? எவன் கேள்வி கேக்குறது? பார்வை இல்லாத வியாபாரிங்க, பிச்சைக்காரங்க, எம்.எல்.எம் பிஸினஸ் பண்றவங்கன்னு எல்லாமும் நடக்கும். இது உங்கள் சொத்து. என்ன வேணும்னாலும் பண்ணலாம். யாரும் எதுவும் கேக்க மாட்டாங்க.

வடிவேலண்ணன் மாதிரி ஆளில்லாதப்ப ரெண்டு பொட்டியையும் வித்து காசு பண்ணலாம் அது உங்க சாமர்த்தியம். வடிவேலண்ணன் என்ன? அவராவது பஸ்ஸதான் விக்கப்பாத்தாரு. ஆனா அவருக்கே அண்ணன் ஒருத்தன் வந்தான். நியூஸ்ல பாத்துருப்பீங்களே. கொஞ்ச நாள் முன்னாடி ஒரு ஆள் டிரெயினயே எடுத்துட்டுப் போனதை. ப்ரீயா இருந்தா, உனக்கு ஓட்டத் தெரிஞ்சா, ஒரு முழு டிரெயினயே கூட கிளப்பிகினு போலாம். அந்த அளவுக்கு ஃபெஸிலிட்டி பண்ணிக் குடுத்திருக்காங்க நம்ம ரயில்வேல. பாத்து யூஸ் பண்ணிக்க வேண்டியது உங்க பொறுப்பு. அவ்ளோதான் நாஞ்சொல்லுவேன்.

ஆக இப்போ எல்லாரும் சேந்து ஒரு தபா சத்தமா சொல்லுங்க பாக்கலாம்... இது உங்கள்... சாரி... எங்கள் சொத்து.