ஞாயிறு, 24 அக்டோபர், 2021

இந்தியத் தொலைக்காட்சிகளில் முதன் முறையாக

"இந்தியத் தொலைக்காட்சிகளில் முதன் முறையாக" - ன்னு சொல்ற மாதிரி "இன்னிக்கு என் வாழ்க்கையிலேயே முதன் முறையாக" ஒரு நல்ல காரியத்தைச் செஞ்சேன். கோவை ரோட்டரியும் - கோவை வாசவி க்ளப்பும் இணைந்து நடத்திய முகாம் ஒன்றுக்காக நண்பர் அழைச்சிருந்தார். நமக்கெல்லாம் இதுபோல ஒரு எக்ஸ்டர்னல் புஷ் தேவைப்படுதில்லையா? சந்தோஷமாப் போய் கொடுத்துட்டுவந்தேன்.

இதுக்கு முன்னாடி ரெண்டு - மூணு முறை சந்தர்ப்பம் அமைஞ்சும் "நான் ரத்தம் தரவா" - ன்னு போனப்போ "நீ அண்டர்வெயிட்டு, ச்சீ ஓடிப்போ" ன்னு பத்தி விட்ருக்காங்க. ஆனா இப்போ கொரோனா புண்ணியத்தில் நல்லா உக்காந்து தின்னு தின்னு வெயிட் போட்டு "க்வாலிஃபை" ஆகிட்டேன் போல. போனதுமே என்னை வெயிட் போட்டுப் பாத்து "இந்தக் கோழி தாங்கும், உள்ள கூட்டிட்டுப்போங்க"ன்னுட்டாங்க.
ஒரு பெரிய்ய ஃபார்ம் ஒன்னு கொடுத்து ஃபில்-அப் பண்ணச் சொன்னாங்க. அதுல "நான் என் சொந்த முடிவில தான் ரத்ததானம் பண்றேன்" னு டிஸ்க்ளெய்மர் உட்பட அதுல ஊருல இருக்குற எல்லா வியாதிகளும் பேரும் வரிஸ்ஸையா போட்டு இருந்தது. இதுக்கு முன்னாடி தெரியாத சில வியாதிகள் கூட இருந்தது. அது எல்லாத்தையும் "ஆம் அல்லது இல்லை" ன்னு டிக்கு போடச்சொன்னாங்க. அதுல நான் "ஆம்" போட்ட ஒரே இடம் - "கடந்த நாலு மணி நேரத்துக்குள்ள எதாவது தின்னியா?" வுக்குத் தான்.
நம்ம ரத்தம் எலிஜிபிலா?-ன்னு பார்க்க ஹீமோக்ளோபின் டெஸ்ட் செய்யணுமாம். ஆனா, பொதுவா, நார்மலா இருக்கிற ஆண்களுக்கு டெஸ்ட் எடுக்கத் தேவையில்லைன்னு சொல்ட்டாங்க. எதுக்கும் இருக்கட்டும்னு எடுத்துப் பாருய்யா... ன்னு சொன்னா கடுப்புல அந்த மனுசன் மோதிரம் போடாத என் மோதிர விரலைப் புடிச்சி நறுக்குன்னு ஒரு ஊசியைச் சொருகி ஒரு சொட்டு ரத்தத்தைப் (அதுவும் நல்லா பெரிய சொட்டு) பிழிஞ்சு ஏதோ ஒரு கெமிக்கல் ரொம்பின ஒரு டம்ப்ளர்ல உட்டாரு. அது நல்ல செவப்பா சொய்ன்னு கீழ போச்சு. “எலிஜிபிள் தான், ரத்தம் எடுக்கலாம்”-னு சொல்ட்டாரு. அந்தக் கெமிக்கல் முறை ஏதோ பழைய முறையாம்.
ஆனா பெண்களுக்கு, பிரசவம் அது இதுன்னு பல விதங்களில் ரத்த இழப்பு வாய்ப்பு இருக்கறதால ஹீமோக்ளோபின் டெஸ்ட் கட்டாயமாம். குட்டியா ஒரு டெஸ்ட் மெஷின் இருந்தது. அதுல எந் தங்கமணி உட்பட பல பெண்களுக்கு டெஸ்ட் பாத்தாங்க. ஹீமோக்ளோபின் லெவல் 12.5 பாயிண்ட் இருக்கணுமாம். ஆனா வந்த பெண்கள் மூன்று, நான்கு பேருக்குமே 11 முதல் 11.4 வரைன்னு குறைவாவே இருந்ததால அவங்களை "உன் ரத்தம்லாம் வேணாம், நீ முதல்ல நல்லாத் தின்னு உடம்பைத் தேத்து" ன்னு பத்தி விட்டுட்டாங்க.
நமக்கு அந்தப் பிரச்சினையில்லை. உள்ள போனா, பெட்ல படுக்க வச்சி, கையில் டைட்டா ஒரு கட்டு கட்டி, அப்டியே நாலு தட்டு தட்டி, தனுஷ் கை நாக்குப்பூச்சி மாதிரி என் நாடி நரம்பையெல்லாம் எழுப்பி அதுல நல்லதா ஒன்னைச் சூஸ் பண்ணி, நல்ல கனத்த ஊசி ஒன்னை அழுத்திச் சொருகி அந்த ப்ளட் பாக்கெட்டில் போட்டு விட்டாங்க. கையில ஒரு ஸாஃப்ட் பால் கொடுத்து "அமுக்கு ராசா"ன்னாங்கள்.
அத ஒரு பத்து தபா அமுக்குறதுக்குள்ள, சரசரன்னு ஏழெட்டு நிமிஷத்தில ஃபுல் பாக்கெட் நொம்பிருச்சி. அதை ஒரு மெஷினோட கனெக்ட் செஞ்சிருந்தாங்க. அது வேலை முடிஞ்சதும் சிம்பு மாதிரி "பீப், பீப்" னு கத்திச்சு. ரொம்பின பாக்கெட்டை உத்துப் பார்த்தா அது கருஞ்சிவப்புக் கலர்ல, பார்க்கக் கொஞ்சம் பயமாத்தான் இருந்தது. இருந்தாலும் அதை நர்ஸக்கா எடுத்துட்டுப் போகும் போது "குஷி" ஜோதிகாவோட ப்ளட் பாக்கெட்டை க்ளோஸப்ல காட்டி எஸ்.ஜே.சூர்யா பேசுற வாய்ஸ் ஓவர் என் காதுல ரொம்பத் தெளிவாக் கேட்டுது.
ரத்தம் குடுத்து முடிச்சதும் கொஞ்சம் கிர்ருன்னு வந்துது. ஒரு யூனிட் ரத்தத்தை எட்டே நிமிஷத்துல எடுத்தா பின்ன? "அப்படித்தான் இருக்கும், கொஞ்சம் இருங்க"ன்னு அந்த ஆட்டோமேடிக் பெட்-டை தலை-கீழா கால் மேலா திருப்பி வச்சி விட்டார், "இப்ப தலைக்கு ரத்தம் பாயும், 5 நிமிஷத்துல சரியாகிடும்"னு சொன்னாரு. சோலி முடிஞ்சதும் "கொஞ்ச நேரம் போய் உட்காருங்க. நிக்கக்கூடாது, நின்னா மயக்கம் வரும்"ன்னு சொல்லி வெளிய அனுப்பினாரு.
வெளிய வந்ததும் அங்கேயே ரெண்டு டெட்ரா பேக் மேங்கோ ஜூஸ் குடுத்தாய்ங்கள். குடிச்சுப்புட்டுக் கொஞ்ச நேரம் உக்காந்திருந்தேன். கூட வந்தவுங்கள்ல சிலர், போன முறை இவர் சொன்ன அட்வைஸையும் கேட்காம, சூஸையும் குடிக்காம பார்க்கிங்ல போய் தலைசுத்தின கதையையும், அப்டியே கைத்தாங்கலா டீக்கடைக்குப் பொத்துனாப்ல போய் பன்னு வாங்கித் தின்ன கதையையும் சொன்னதைக் கேட்டு "அப்பா" பட நாராயணன் மாதிரி "நமக்கு எதுக்குடா கார்த்திகேயா வம்பு"ன்னு கம்ன்னு அங்கயே உக்காந்துட்டேன்.
மறுபடி அவர்ட்ட போய், "நாங்குடுத்த அதே அளவு ரத்தம் எனக்கு மறுபடி எப்ப ஊறும்?" னு கேட்டேன். "24 மணிநேரத்துல ஊறிடும்"னாரு. அப்போ "நாளான்னிக்கு ரத்தம் குடுக்கச் சொல்லி மறுபடி கூப்டுவாங்களா? ஒருநாள் விட்டு ஒருநாள் ரத்தம் குடுத்தா உடம்பு தாங்குமா?" ன்னு டவுட்டோடவே வெளிய வந்தப்போ, அனுபவசாலி ஒர்த்தர் கூப்ட்டு "பாஸூ, அவங்கெடக்கான், ரத்தத்துக்கு ஈக்வலா லிக்விட் மட்டும் தான் 24 மணிநேரத்துல ஊறும். ஆனா சரியான அளவு ப்ளேட்லெட்ஸ் வளர 3 மாசம் ஆவும்"ன்னாரு. நீங்க மறுபடி 3 - 4 மாசம் கழிச்சித்தான் ரத்தம் கொடுக்க முடியும் னாரு. "அப்பச்சரி, அப்பச்சரி" ன்னு கெளம்பிட்டேன்.
இந்தக் கூத்துக்கு நடுப்புற தங்கமணியும் பசங்களும் நான் ஏதோ உலக சாதனை செஞ்சா மாதிரி உள்ளே வந்து எட்டி எட்டிப் பார்த்துட்டும், போட்டோ எடுத்திட்டும், ஆளுக்கொரு ஜூஸைக்குடிச்சிகிட்டும் இருந்தாங்க. நானும் கக்கூஸ் கண்ணாடியில போய்ப்பார்த்தேன். "எதையோ சாதிச்ச திருப்தி அவன் முகத்துல" ன்னு சந்திரமுகியில சொல்ற மாதிரி தான் இருந்தது மூஞ்சி.
இப்படிக்கி
- ரத்த வழங்கி எசுக்கா

articles - ல் எங்கே a போட? எங்கே an போட?

நண்பர் ஒருவருக்கு ஆங்கில இலக்கணத்தில் வரும் articles - ல் பலத்த சந்தேகம். எந்த இடத்தில் a போட வேண்டும்? எந்த இடத்தில் an போட வேண்டும்? என்னிடம் கேட்டார். சொல்லிக் கொடுத்தேன். (இந்த இடத்தில் நான் ஒரு முன்னாள் ஆங்கில வாத்தி என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்).

இன்றைக்கும் அவர் அனுப்பும் மெயில்களில் பல இடங்களில் அவருக்கு இந்த டவுட்டு வருகிறது. இந்தக் குழப்பம் எல்லோருக்கும் வருவது சகஜம். பெரிய பெரிய ஆட்கள் அனுப்பும் மெயில்களில் கூட articles - ல் தவறு இருக்கிறது. (articles ல் the என்ற வார்த்தையும் உண்டு. ஆனால் பலருக்கும் சந்தேகம் a மற்றும் an - ல் தான். ஆகவே the பற்றி இங்கே பார்க்கப் போவதில்லை).
அவருக்குச் சொன்னது மற்றவர்களுக்கும் உபயோகப்படலாம். அது பலருக்கும் பயனளிக்கும் என்பதால் இங்கே பதிகிறேன். இப்படி பதியச் சொன்னது கூட என் நண்பரின் ஐடியா தான். சரிஓ.கே.. போலாமா?
அடிப்படை தகவல் - ஆங்கிலத்தில் வெறும் 26 எழுத்துக்கள் மட்டுமே. அதை வைத்துத் தான் எல்லா வித்தையும் காட்டுகிறார்கள். vowels எனக் கூறப்படும் a, e, i, o, u என்ற ஐந்தும் உயிர் எழுத்துக்கள். மற்ற 21-ம் consonants எனப்படும் மெய் எழுத்துக்கள். தமிழிலோ மற்ற இந்திய மொழிகளிலோ இருப்பது போல உயிர் மெய் எழுத்துக்கள் (கா, கீ, கூ, கெ, கை) எனும் கூட்டெழுத்துக்கள் கிடையவே கிடையாது.
பிரச்சினையே இங்கே தான். a, e, i, o, u என்ற உயிர் எழுத்தில் ஆரம்பிக்கும் வார்த்தைக்கு முன்பு an போடு. consonants - ல் ஆரம்பிக்கும் வார்த்தைகளுக்கு முன்பு a போடு என்று பள்ளிக்கூடத்தில் சொல்லிக் கொடுத்திருப்பார்கள். அதன் படி நியாயமாகப் பார்த்தால் u என்பது vowel என்பதால் கீழே வரும் எல்லா வார்த்தைகளுக்கும் முன்பு an தானே போட வேண்டும்?
MLA, umbrella, untold story, university, useful gift, union, uniform (ஒரு எம்.எல்.ஏ, ஒரு குடை, சொல்லப்படாத ஒரு கதை, ஒரு உபயோகமான பரிசு, ஒரு அமைப்பு, ஒரு சீருடை) ஆனால் அப்படி போட முடியாது. ஏன்? சரியான விடைகள் கீழே. (இது போக பல இடங்களில் the வரும். அது அடுத்த ஸ்டெப். இப்போதைக்கு நம் கேள்வி. எங்கே a? எங்கெங்கே an? என்பதே)
சரியான விடைகள் -
a university (யுனிவர்சிட்டி)
a useful gift (யூஸ்ஃபுல் கிஃப்ட்)
a union (யூனியன்)
a uniform (யூனிஃபார்ம்)
an MLA (எம்.எல்.ஏ)
an umbrella (அம்ப்ரெல்லா)
an untold story (அன்டோல்ட் ஸ்டோரி)
எப்படி என்கிறீர்களா? அடைப்புக்குள் உள்ளவை க்ளூக்கள். அதை வைத்து கண்டுபிடிக்கப் பாருங்கள். நினைவு வருகிறதா? எஸ். கரெக்ட். ஒரு வார்த்தை vowel ல் ஆரம்பிக்கிறது என்பதால் மட்டுமே அதற்கு முன் an போட முடியாது. vowel sounds என்று சொல்லியிருப்பார்கள். அதாவது உயிர் எழுத்தின் ஒலியில் அந்த வார்த்தையின் உச்சரிப்பு துவங்க வேண்டும். எழுத்து consonant ஆகக் கூட இருக்கலாம். (MLA வை கவனிக்கவும்) ஒலி தான் முக்கியம்.
விடை காணும் வழி - நாம் தமிழர்கள். ஆகவே நமக்கு இதனை கண்டுபிடிப்பது ரொம்ப சிம்பிள். தமிழ் உயிர் எழுத்துக்கள் உங்கள் எல்லோருக்கும் தெரியும் அல்லவா? (அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஐ, ஒ, ஓ, ஔ). கொடுக்கப்படும் ஆங்கில வார்த்தையை மனதுக்குள் ஒரு முறை படியுங்கள். அதன் ஒலி தமிழ் அ-னா, ஆ-வன்னாவில் துவங்குகிறதா? சிம்பிள். அங்கே an போட்டு விடுங்கள்.
க, ங, ச என்ற 18 மெய்யெழுத்துக்களின் ஒலியிலோ அல்லது கை, கே, கோ போன்ற 216 உயிர் மெய் எழுத்துக்களின் ஒலிகளிலோ அந்த ஆங்கில வார்த்தை துவங்கினால் அதன் முன்பு a தான் வர வேண்டும். அவ்வளவு தான்.
இப்போ ஹோம்வொர்க். கீழ்க்கண்ட வார்த்தைகளுக்கு எந்த "ஆர்ட்டிகில்" போட வேண்டும்?
ordinary man (ஆர்டினரி மேன்)
octopus (ஆக்டோபஸ்)
ancient (ஏன்சியன்ட்)
apple (ஆஏப்பிள்)
x – ray (எக்ஸ் ரே)
hour (ஹவர் அல்ல ஆர் (edited))
european country (யூரோப்பியன் கன்ட்ரி)
one rupee note (ஒன் அல்ல வன்)
ஆனால் ஒரு முக்கிய விஷயம். ஆங்கில வார்த்தைகளின் சரியான உச்சரிப்பு நமக்குத் தெரிந்திருக்க வேண்டும். ஒரு வார்த்தையின் தவறான பதத்தை சரி என்று நினைத்துக் கொண்டு எத்தனை முறை படித்தாலும் விளங்காது.
டிசுக்கி - மேற்கொண்டு டவுட்டுகளுக்கும், குறை, நிறைகள் பாராட்டவும் இன்பாக்ஸூக்கு வரவும். தவறிருந்தால் கண்டிப்பாய் திருத்திக் கொள்கிறேன்.

24 அக்டோபர் 2014 அன்று ஃபேஸ்புக்கில் எழுதியது

செவ்வாய், 19 அக்டோபர், 2021

மாற்றான் பார்த்து விட்டு மனசு மாறிய குடும்பஸ்தர்கள் சங்கம்.

அன்புள்ள கே.வி.ஆனந்த் மற்றும் சுபா அவர்களுக்கு,

எனர்ஜி ட்ரிங்க் பவுடர் வாங்குவது இப்போது எல்லார் வீட்டிலும் கட்டாயம் ஆகிவிட்டது. காம்ப்ளான் சாப்பிட்டால் சீக்கிரம் உயரமாக வளர்கிறார்கள் (என்று ஆராய்ச்சி மூலமாக நிரூபிக்கப்பட்டிருப்பதாக அவர்களே கூறுவதால்) ஹார்லிக்ஸ் குடிப்பதால் ஷார்ப்பாக வளர்கிறார்கள் என்பதால், நாங்களும் எங்கள் வீட்டுப்பசங்கள் சீக்கிரம் உயரமாக வேண்டும், ஷார்ப்பாக வேண்டும் என்று ஆசைப்பட்டு அவர்களுக்கு எனர்ஜி ட்ரிங்க் வாங்கிக் கொடுக்கிறோம்.மாற்றான் பார்த்த பிறகு அவற்றில் நீங்கள் குறிப்பிட்ட படி ஏதேனும் ஜெனடிக், ஸ்டீராய்டு கசமுசாக்கள் இருக்குமோ என்று பயம் வந்து விட்டது.

ஆகவே இனிமேல் எங்க வீட்டுப் பசங்களுக்கு மன்னா ஹெல்த் மிக்ஸ், வீட்டிலேயே தயார் செய்த கம்மங்கூழ், கேப்பை கூழ், பக்கத்து தெரு மாவு மெசினில் அரைத்த தானிய மாவுக்கஞ்சி போன்ற அயிட்டங்களையே கொடுப்பதாக குடும்பத்தோடு உட்கார்ந்து கும்மியடித்து யோசித்து முடிவு செய்துள்ளோம்.

இனிமேல் காம்ப்ளான் (அ) ஹார்லிக்ஸ் வாங்குவதாக இல்லை. அதனால் மிச்சமாகும் மாத பட்ஜெட்டுகளை உங்களது அடுத்தடுத்த படங்கள் பார்த்து அறிவை வளர்த்துக்கொள்வதற்கு தேவையான தியேட்டர் செலவுகளுக்கு ஒதுக்கி விட்டோம்.

உங்கள் சேவைக்கு நன்றி. இதற்காக காம்ப்ளான் மற்றும் ஹார்லிக்ஸ் கம்பேனிகள் வருத்தப்பட்டால் அதற்கு நாங்கள் பொறுப்பல்ல..

இப்படிக்கு,
மாற்றான் பார்த்து விட்டு மனசு மாறிய குடும்பஸ்தர்கள் சங்கம்.
20 அக்டோபர் 2012 அன்று ஃபேஸ்புக்கில் எழுதியது.

வெள்ளி, 15 அக்டோபர், 2021

ஜாக்கிரதை - மார்க்கெட் ஏறும் போதும் - ஜாக்கிரதை

நம்ம இன்வெஸ்ட்மெண்ட் குரூப்புக்காக எழுதியது. குரூப் லிங்க் இதோ

கடந்த ஒன்றரை வருஷமா ஷேர் மார்க்கெட்டுக்கு உள்ள வந்தவங்க, இலாபம் பார்த்தவங்க எல்லாருக்கும் ஒரு விஷயம் அறிவுறுத்துறேன். இது புல் (காளை) மார்க்கெட். எல்லாத்துறைக்கும் பிரகாசமான எதிர்காலம் இருக்குற மாதிரியே தெரியுது.

போர்ட்ஃபோலியோ முழுக்க பச்சையா இருக்குது. எந்த ஷேர் வாங்குனாலும் ஏறுது. நாம வாங்கின ஷேரெல்லாம் ஏறிடுச்சு, அதுனால நாம பெரிய இன்வெஸ்ட்மெண்ட் புலி ஆகிட முடியாது. இந்த மார்க்கெட் எங்க போய் முடியும்னு தெரியாது. எப்ப திரும்பும்னு தெரியாது.

மார்க்கெட்ல ஆவரேஜா மூன்று வருடத்துக்கு ஒருமுறை ஒரு fall இருக்கும்னு சொல்வாங்க. ஒரு பெரிய fall 10 வருடத்துக்கு ஒருமுறை வரும்னு சொல்வாங்க. 2008 ல லேமென் ப்ரதர்ஸால லெஃப்ட்ல ஒரு மரண அடி வாங்கின மார்க்கெட் மறுபடி 2020 ல கொரோனாவால ரைட்ல ஒரு வாங்கு வாங்குச்சு.

அதுபோக நடுவுல அப்பப்ப சின்னச்சின்ன இறக்கங்களும் இருந்துச்சு. எனவே, 10 வருஷமா, 20 வருஷமா ட்ரேடிங்கோ, இன்வெஸ்ட்மெண்டோ பண்றவங்க கிட்ட அட்வைஸ் கேளுங்க. நீங்களா கேக்காட்டியும் அவங்களா சொல்றதையாச்சும் கேளுங்க. உஷாரா இருங்க.

ஷேர் ப்ரோக்கிங் நிறுவனத்துல வேலை செஞ்சப்போ 2008 பேர் (கரடி) மார்க்கெட்ல சத்யம் ஷேர்ல, அதுவும் ஃப்யூச்சர்ல மரண அடி வாங்கி ரத்தக் கண்ணீர் விட்டவனை ரெண்டடி தூரத்துல இருந்து பார்த்தவன் நானு. 420 ரூபாய்ல இருந்து ரெண்டுமுணு நாள்ல 6 ரூபாயில போய் நின்னது அது.

RMS னு சொல்லப்படுற ரிஸ்க் மேனேஜ்மெண்ட் சர்வீஸ் டிபார்ட்மெண்ட் உள் பூட்டு போட்டுட்டு எவனையும் உள்ள விடாம மார்ஜின் கட்டாதவங்களோட நூத்துக்கணக்கான பொஸிஷன்ஸை செல்லிங் அடிச்சித் தள்ளுனதைப் பார்த்தவன். அதுல செத்தவன் சில பேரு. பணத்தை இழந்ததால "வெற்றிக்கொடி கட்டு சார்லி" மாதிரி பைத்தியம் புடிச்சவன் பல பேரு.

MCX புரோக்கிங் ஆஃபீஸ் ல வேலை செய்யும் போது இதுக்கு நேர்மாறா வெள்ளி கன்னா பின்னான்னு விலை ஏறிப்போக, ஆனா "இறங்கும்னு நினைச்சு" ஏகப்பட்ட லாட் செல்லிங் அடிச்சு வச்சவங்கள்லாம் வட்டிக்குக் கடன் வாங்கி பொஸிஷன் க்ளோஸ் பண்ண பணம் கட்டுனதையும், அவங்களுக்கு பிராஞ்ச் ஓனர் ஆறுதல் கூட்டம் (ஆறுதல் கூட்டமா அது? இரங்கல் கூட்டம் மாதிரி இருந்தது) நடத்தினதைப் பார்த்தவன்.

அதுக்கு முன்னாடி இதே போல சில இறக்கங்கள்ல மொத்த சொத்தை இழந்தவர்களை கண்ணால பார்த்தவன் (எங்க அரிசிக்கடை சித்தப்பா காமிச்சாரு). ஜாக்கிரதை. ஜாக்கிரதை. ஜாக்கிரதை. இன்னும் ரெண்டரை வருஷத்துல பி.எம் எலக்ஷன் வரும்போது ரத்தக்களறி நடக்க"லாம்".

ஒரு pandemic க்குக்கு மொத்தம் ஏழு வேவ் இருக்குன்னு ஒரு டாக்டர் சொன்னாரு. முதல் மற்றும் இரண்டாவது வேவ் போல மிக அதிமா மறுபடி ஒரு பரவல் வந்தால், மறுபடி ஃபுல் லாக் டவுன் போட்டா உங்க போர்ட்ஃபோலியோ சிவப்பைப் பார்க்கலாம். டச் உட் - இதெல்லாம் நடக்கக் கூடாதுன்னு வேண்டிக்குவோம்.

இப்போதைக்கு மார்க்கெட் உள்ள வந்து, ஆனால் வேற முழு நேர வேலை, தொழில் பார்க்குற எல்லாருக்கும் சில அட்வைஸூகள்.

1. உங்க உபரிப்பணத்தை மட்டும் மார்க்கெட்ல போடுங்க.

2. மார்க்கெட்ல எவ்வளவு போட்டாலும், வந்தாலும், போனாலும், இறங்கினாலும், ஏறினாலும் அதைப் பத்தி "பயப்படாதீங்க". கொஞ்சம் கஷ்டம்தான். ஆனா முயற்சி பண்ணுங்க.

3. கொஞ்சம் மியூச்சுவல் ஃபண்டுகள் லயும் போடுங்க.

4. நல்லா ஆராய்ச்சி பண்ணி 10, 20, 30 ஆண்டுகளா இருக்குற நல்ல ஷேர்கள்ல போடுங்க.

5. டிரேடிங், இன்ட்ரா டே, ஆப்ஷன்ஸ், ஃப்யூச்சர்ஸ், அது இதுன்னு கன்ஃபர்மா மாசம் இத்தனை பர்சன்ட் தர்றேன்னு சொன்னா நம்பவே நம்பாதீங்க. அப்படி சொல்லி அப்ஸ்காண்ட் ஆனவங்க பல பேரை என் கண்ணால பாத்திருக்கேன். ஐ மீன் அப்ஸ்காண்ட் ஆகும் முன்.

6. இன்வெஸ்ட்மெண்டை SIP மோடுல பண்ணுங்க.

7. வட்டி கம்மியா வந்தாலும் பரவால்ல. முக்கியச் செலவுகளுக்குத் தேவையான பணத்தை பேங்க் FD ல வையுங்க.

8. டெர்ம் இன்ஷூரன்ஸ், மெடிக்கல் இன்ஷூரன்ஸ் எடுத்து வைங்க.

9. கொஞ்சம் தங்கம் வாங்கி வைங்க. அவசரத்துக்கு அதைத் தான் அடகு வைக்க முடியும்.

10. முடிஞ்சா வெள்ளித்தட்டு கிட்டு வாங்கி வைங்க. பெரிய்ய பிரச்சினைன்னா அதைக்கூட விற்க முடியும். ஆனா ஃப்ரீஸ் ஆன ஷேரையோ, டீலிஸ்ட் ஆன ஷேரையோ விக்க முடியாது.

11. டாக்டர்கிட்ட இன்வெஸ்ட்மெண்ட் பத்திக் கேக்காதீங்க. வாத்தியார் கிட்ட வைத்தியம் கேக்காதீங்க. ஆட்டோக்காரன் கிட்ட ஆப்பாயில் கேக்காதீங்க. 

அனுபவப் பட்டவர்கள், இவற்றில் விட்டுப் போன அட்வைஸூகளை சேர்க்கலாம். புல் மார்க்கெட் தொடர வாழ்த்துக்கள். 

வியாழன், 14 அக்டோபர், 2021

இந்தத் துறைக்கு வந்தது எப்படி?

ஃபேஸ்புக்கில் பதிவேற்றிய, ஆசிரியர்களுக்கு நான் பயிற்சி கொடுக்கும் புகைப்படம் ஒன்றில் "இந்தப் பயிற்றுவிப்பாளர் துறைக்கு வந்தது எப்படி?" என்று அறிவன் அறிவன் அவர்கள் ஒரு கேள்வியைப் போட்டிருந்தார். என்னுடைய 20 வருடத்தைத் திரும்பிப் பார்க்க வைக்கும் ஆழமான கேள்வியாக இருந்தது அது.
அதற்கான பதிலை யோசிக்கையில் "தொடர்ந்த படிப்பும், அடுத்தது என்ன?" என்ற ஆர்வமும் தான் காரணம் என்று சொல்லலாம் எனத் தோன்றியது..
தொழில் செய்தால் இலாபம் வரலாம். நட்டமும் வரலாம், கியாரண்டி கிடையாது. "நட்டம் தான் வரும்" என்று ஒரு பய பிம்பத்தை என்னைச் சுற்றி இருந்து பலவித தொழில்கள் செய்த பெரும்பாலான உறவினர்கள் தங்கள் வாழ்க்கை மூலம் காட்டி விட்டார்கள். எனவே, "தங்கையின் திருமணம், அப்பாவின் கடன்" போன்ற கமிட்மெண்டுகள் இருந்த எனக்கு வேலைக்குப் போவது தான் சிறந்தது என என் சிறு மூளையில் பதியப்பட்டது.
ஆனால், நல்ல படிப்புகளை நானே தேர்வு செய்யும் வாய்ப்புகள் இன்றி, தமிழகத்தின் பெரும்பாலான வசதியற்ற மாணவர்களைப் போல, அரசு உதவிபெற்ற பள்ளிகள், அரசாங்கக் கல்லூரி, கரஸ்பாண்டன்ஸ் கோர்ஸ்கள், என்று தொடர்ந்து, கிடைத்தவற்றைப் படித்தவன்தான் நான். அதே போல திரவியம் தேடியாக வேண்டிய நிர்ப்பந்தத்தில் வேலைச் சந்தையில் "ஏதோ ஒரு வேலை" என்று உள்ளே நுழைந்தவன் தான்.
என் முதல் முழு நேர வேலையாக சேலம் தினமலரில் எடிட்டோரியலில் இரவு ஷிஃப்டில் வேலை செய்த போது எம்.ஏ ஆங்கில இலக்கியமும் படித்துக் கொண்டிருந்தேன். அதனால் அப்போது "டீச்சருக்கு இங்கே என்னய்யா வேலை?" என்று ஜாலியாகக் கலாய்த்து ஏற்றி விட்டார்கள். அப்போது தான் எனது தடம் மாறியது. அங்கிருந்து வேலை மாறுகையில் பள்ளி ஆசிரியராக வேலைக்குச் சேர்ந்தேன். அங்கே துவங்கியது "அடுத்தது என்ன?" என்ற கேள்வி.
அது தான் இங்கே வரை அழைத்து வந்திருக்கிறது என்று நினைக்கிறேன். கல்வித் தகுதிகள், பணத் தேவைகள் போன்ற பல காரணங்களால், பள்ளி ஆசிரியரில் இருந்து கல்லூரி ஆசிரியர், அடுத்தது (வெளிநாடுகளுக்கு) ஆன்லைன் கல்வியாளர், பங்குச் சந்தையில் பயிற்றுவிப்பாளர், எட்-டெக் எனும் கல்வித் தொழில் நுட்பம் சார்ந்த நிறுவனங்களில் பயிற்றுவிப்பாளர், ஃப்ரீலான்ஸ் ஆக கல்வி நிறுவனங்கள் சார்ந்த பலவித வேலைகள், பேச்சு, எழுத்து, மொழிபெயர்ப்பு என மெள்ள நகர்ந்து, இன்று ஒரு நிறுவனத்தில் மீண்டும் பயிற்றுவிப்பாளர் (மற்றும் கல்வி மேலாளர்) ஆக இருக்கிறேன்.
பலரின் வாழ்க்கையை மாற்ற வாய்ப்பிருக்கும் துறை என்பதால் கல்வித்துறையிலேயே இருக்க வேண்டும் என்ற எண்ணம் இன்று ஆழமாக வேரூன்றி விட்டது. (மனத்திருப்தி சார்ந்த வருமானம்)
இடையில் குறும்படம், கதைகள், படைப்புகள், மின்புத்தகங்கள், நீயா? நானா?, ஒரு திரைப்படத்தில் நடிப்பு, யூடியூப் சேனல் எனப் பொழுதுபோக்கு சார்ந்தும் இயங்கிக் கொண்டு இருக்கிறேன். (ஆசைக்காக)

தூண்டிய கேள்விக்கு நன்றி.  
ரொம்பவும் குட்டிக் கதை

சென்ற மாதம் 22.09.21 தேதியிட்ட குமுதம் வார இதழில் வெளியான என்னுடைய குட்டிக் கதை ஒன்று. "சிங்கிள் வரி சிறுகதைகள்" என்ற பெயரில் வாராவாரம் குமுதத்தில் வெளியாகும் பகுதியில் வெளியானது.
ஞாயிறு, 12 செப்டம்பர், 2021

அபத்தமான ஸ்ட்ராடஜி

தமிழன், இந்தியன், சேட்டு, சிறு வியாபாரி, கார்ப்பரேட் வெங்காயம் என்பதையெல்லாம் ஒதுக்கி வைத்து விட்டுப்பார்த்தால் லாஜிக் மிகவும் சிம்பிள் - உலகம் தோன்றிய காலத்தில் இருந்தே ஒரு கன்ஸ்யூமர் தனக்கு எது இலாபமோ, விலை குறைவோ அதை நோக்கியே நகர்வான். ஏனென்றால் அவன் சம்பாதிக்கும் ஒவ்வொரு ரூபாயும் அவனுடைய வியர்வையும், இரத்தமும்.
------------------------------------------------------
ஒரு பதிவில் கீழை அ.கதிர்வேல் கதிர்வேல் சார் எழுதி இருந்தது.
//கேளம்பாக்கம் கடைத்தெருவில் மகள் சாமிக்கு பூ வாங்கி வரச் சொன்னார் ரோட்டோர கடையில் ஒரு பெண்மணி கதம்பம் முழம் 30 ரூபாய் என்று சொன்னார் எனக்கு அது அதிகமாக தெரிந்தது ஒரு பூ மொத்த விற்பனை கடையில் 20 ரூபாய்க்கு உதிரிப்பூ வாங்கிவிட்டு அருகிலேயே ஒரு பெண்மணி மாடிப்படி அருகில் பூ தொடுத்துக் கொண்டிருந்தார் ஒருவேளை அவரிடம் கம்மியாக இருக்குமோ என்று எண்ணி முழம் எவ்வளவு என்றேன் அவரும் 30 ரூபாய் என்று சொன்னதால் இங்கே எல்லா இடத்திலும் இதே விலைதான் என்று நினைத்துவிட்டு ஒரு முழம் வாங்கிட்டு முப்பது ரூபாய் கொடுத்தேன் இன்னும் இருபது ரூபாய் கொடுங்கள் என்றார் எதற்கு என்று கேட்டேன் முழம் 50 ரூபாய் நீங்கள் தான் சரியாக காதில் வாங்கவில்லை என்று பழியை என் மீது போட்டார் என்னால் ஒன்றும் சொல்ல முடியவில்லை 30 ரூபாய் பேசிவிட்டு நீங்கள் வெட்டியவுடன் 100 ரூபாய் கூட சொல்வீர்கள் போல என்றேன் சரி சரி 10 ரூபாய் கொடுங்கள் என்று வாங்கிக் கொண்டார்//
அதே போல எனக்கு நடந்த ஒரு அனுபவம்.
இப்படி மாத்தி சொல்லி வியாபாரம் செய்வது ஒரு புத்திசாலித்தனமான ஸ்ட்ராடஜி என்று அபத்தமாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் சில வியாபாரிகள். நீங்கள் 25 ரூபாய்க்குக் கேட்க வாய்ப்பிருக்கிறது என்று நினைத்து "நான் 30 சொல்லலை 50 தான் சொன்னேன்" என்பது. பிறகு "நீ 30 தானம்மா சொன்னே" என்றால், மறுத்து விட்டு "சரி போ, 30 ரூபாய் கொடு" என்று வாங்கிக் கொள்வது. இதில் அவர்களுக்கு நீங்கள் குறைத்துக் கேட்க வாய்ப்பிருந்த அந்த 5 ரூபாய் லாபம் என்று அவர்களே நினைத்துக் கொள்கிறார்கள்.
அச்சு மாறாமல் இதே அனுபவம் எனக்குப் போன வாரம். இதே ஸ்ட்ராடஜியை சைக்கிள் கடை சேட் ஒருத்தன் என்னிடம் முயற்சி செய்தான். கடையில் அவன் 3500 ரூபாய் சொன்ன சைக்கிளை நாங்கள் ஆராய்ந்து பார்த்து விட்டு பேரம் பேசினோம். 3200 கேட்ட போது, "நான் 3800 சொன்னேன்" என்றான். "இல்லப்பா 3500 தான் சொன்னே, ஒரே நேரத்துல எனக்கும் என் பொண்டாட்டிக்கும் காது கேட்காமப் போகாது" என்றதுக்கு, "இல்லை 3800 தான் சொன்னேன். சரி, 3500 க்கு வேணா பண்ணித் தரேன்" என்றான்.
போய்யா என்று சொல்லிவிட்டு எதிரிலேயே வேறு கடைக்குப் போய் கிட்டத்தட்ட அடுத்த மாடல் 2500 க்கு வாங்கிவிட்டோம். அவனுக்குத் தான் நஷ்டம்.
நிறைய கடைகள் இருக்கிற பஜார் போறது நமக்கு நல்லது. இன்னோரு கடையில் ஆல்வின் மாடல் 16 இன்ச் 3800 சொல்லி பேரம் பேசின பிறகு லாஸ்ட் ப்ரைஸ் 3100 க்கு தரேன்னு சொன்னாங்க. ஆனா நம்ம பட்ஜெட் கம்மின்னு வேற கடை வந்துட்டோம்.

சில ஆண்டுகள் முன்பு Scooter type ஒன்னு வாங்கினப்போ பஜார் ரேட் 1100+. ஆனா அப்போ இருந்த பக்கத்து வீட்டுக்காரர் அமேசான்ல செல்லர். எனவே அவரு ஹோல்சேல் வாங்குவார். அவர் எனக்கு 750 க்கு வாங்கித் தந்தார்.

.

அக்கவுண்ட்ல கோடிக்கணக்குல காசு இருந்தா எவ்ளோ கெத்தா சுத்தலாம்?

 நான்லாம் "இனிமே ஷேர் மார்க்கெட்ல சம்பாரிச்சு நாம செலவு பண்ண முடியாது. எதுல போட்டாலும் லாங் டெர்ம் தான் - அது என் ரிட்டையர்மெண்டுக்கோ அல்லது பிள்ளைகளுக்கோ தான்" என்று மாறி ரெண்டு வருஷம் ஆச்சு. இனிமே எந்த ஷேர்ல போட்டாலும் 20 வருசம் தான். (அதுவரை மனசு அலைபாயாம இருக்கணும் ஆண்டவா).

வேலைல சேர்ந்த புதுசுல, சின்ன வயசுல ஷேர்ல போட்டதெல்லாம் "கேட்டது, பாத்தது" வச்சித்தான். சுஸ்லான், எஜூகாம்ப், தம்பிப்பய ரிலையன்ஸ், சத்யம்னு நெறைய்ய பல்பு வாங்கியிருக்கேன். இன்ஃபோஸிஸ், அண்ணங்காரன் ரிலையன்ஸ், L&T (மனைவியார் பர்ச்சேஸ்) மாதிரி நல்ல ஷேர்ஸ் கூட என்ட்ரி டைம், எக்ஸிட் டைம் தெரியாம எப்பயாவது நுழைஞ்சு, எப்பயாவது வெளிய வர்றதுதான். ஆனா எல்லாமே 5 ஷேர், 10 ஷேர், 20 ஷேர் ரேஞ்சுன்றதால அடி கம்மியா இருந்தது. பின்னாளில் யெஸ் பேங்க் (மனைவியோட பர்ச்சேஸ்) ல கூட எப்படியோ ஆவரேஜ் பண்ணி 3000 ரூவா நட்டத்தோட தப்பிச்சேன்.
ஆனா 2008 மார்க்கெட் க்ராஷ் ல என் இன்வெஸ்ட்மெண்ட் 40% க்கு மேல நக்கிட்டுப்போச்சு. ஆனா தங்கை கல்யாணத்துக்காக அப்போ என் பணத்தை எடுத்தே ஆக வேண்டிய நிலைமை. நட்டத்துல எடுத்தேன். அதுக்கப்புறம் அவளோட கல்யாணக் கடன் கட்றது, என்னோட கல்யாணக் கடன் கட்றது, டூ வீலர் லோன், ஜூவல் அடமான லோன்கள் கட்றது, அதுகளுக்கு வட்டி கட்றது, அப்டி இப்டின்னு வாழ்க்கை ஓடிடுச்சு. ஒன்றரை வருடம் வேலையில்லாம ஃப்ரீலான்சரா "கிடைச்சதை செஞ்சு, கொடுத்ததை வாங்கி" வாழ்க்கை நடத்தினேன். கையில இருந்த FD லாம் காலி.
தங்கை கல்யாணத்தப்போ "பர்சனல் லோன்"னு ஒன்னு இருக்கு யாரும் எனக்குச் சொல்லியிருந்தா நல்லாயிருந்திருக்கும். (இந்த குரூப் ஆரம்பிச்சது கூட அது போல எண்ணத்தில் தான். பல பேருக்கு "ஓ, இப்படி ஒன்னு இருக்கா" ன்னு அவங்களுக்குத் தெரியாததை சொல்லிக்குடுக்கலாமே. ஒரு கூட்டு முயற்சி மூலம்).
அதுக்கப்புறம் "இந்த வம்பே வேணாம்டா சாமி" ன்னு மார்க்கெட்டுக்கே பெரிய்ய கேப் விட்டேன். கடந்த 2006 ல இருந்து இருக்கேன். ஆனா 15 வருஷத்துல ஷேர்ல சம்பாரிச்சதே இல்லை. 2008 க்கு முன், ஆரம்பத்துல கூட வெறும் இன்ட்ரா டே செஞ்சு 100, 200 ன்னு தான் பார்த்தேன். பிறகு தான் இந்த 2008 க்ராஷூம், பெரிய்ய கேப்பும். மனைவியும் "அவங்க சொன்னாங்க, டிப்ஸ் வந்துச்சு"ன்னு சில ஷேர்ஸ் வச்சிருந்தாங்க. அதிலும் பெரிய லாபம் இல்லை. ஆவரேஜ் பார்த்தா ஆறேழு வருஷத்துல போட்ட காசு மட்டும் தான் திரும்ப வந்துச்சு.
நான் மார்க்கெட்ல இலாபம் பார்த்ததுன்னா போன வருஷம் தான். "வாங்கி, வச்சு, வித்து"ன்னு சுமார் 10% எடுத்தேன். மார்க்கெட் பத்தி கொஞ்சம் படிச்சேன். டீட்டெயில்ட் டெக்னிகல் அனாலிஸிஸ் லாம் எனக்குப் புரியாது. நான் ஸ்டேட் போர்டு - தமிழ் மீடியம் வேற. எனவே எனக்குப் புரியும் அளவுக்குக் "கொஞ்சம்" படிச்சேன்.
இப்போ ஒரே முடிவுதான். மாசாமாசம் "கொஞ்சமா" என்னால முடிஞ்சதை மட்டும் ஷேர்ல போடுறது. அதுவும் ஏற்கனவே தன்னை ப்ரூவ் செஞ்ச மார்க்கெட் லீடர்ஸ்ல மட்டும். அப்புறம், ரிட்டையர் மெண்ட் வரை வெயிட் பண்றது. (தேவைப்பட்டா பசங்க வளர்ந்ததும், அவங்க தேவைக்கு அவங்களுக்கு கொஞ்சம் பர்சன்டேஜ் எடுத்துக் கொடுக்கலாம்).
ஒரு 60 - 65 வயசுல அக்கவுண்ட்ல கோடிக்கணக்குல காசு இருந்தா எவ்ளோ கெத்தா சுத்தலாம்?

புதைப்பதா? எரிப்பதா? எது சரி?

 ஒரு அன்பர் குரூப் ஒன்றில் ஒரு பதிவு போட்டிருந்தார். அதன் சாராம்சம் - "குடும்பத்தில் இறந்தவர்களை இஸ்லாத்தில், நீர் உற்றி கழுவி சுத்தம் செய்து, துணியில் சுற்றி 4 அடிக் குழியில் புதைப்பார்கள். இதுபோல் கிறிஸ்த்துவர்கள் இறந்த சடலத்தை கண்ணியத்தோடு சர்ச் பாதர் தலைமையில் சவப்பெட்டியில் வைத்து அடக்கம் செய்கிறார்கள். ஆனால் இந்துக்கள் ஒரு நபர் இறப்பின் அவரை குடும்ப நபரே எரியூட்டுவதை என்னால் ஏற்றுகொள்ள முடியவில்லை" என்று எழுதியிருந்தார்.

அவர் அந்த இரண்டில் ஒரு மதத்தைச் சேர்ந்தவர். அவர் எவ்வளவுதான் ஸாஃப்டாக எழுதியிருந்தாலும், "புதைப்பது தான் சரி" என்பது போல அவரது போஸ்ட்டின் சப்டெக்ஸ்ட் சொல்கிறது. அது சப்கான்ஷியஸ்லி அவர் வளர்ந்த விதம், அவரது மனதுக்குள் புதைக்கப்பட்ட எண்ணம். எப்படி "செளத் இந்தியான்னா பெண்கள் சேலை தான் கட்டுவாங்க" ன்னு நார்த் இன்டியன்ஸ் புரிஞ்சு வச்சிருக்கிற மாதிரி. இந்துக்களுக்கு இறந்தவர் உடலை எரிப்பதில் எந்தக் குற்ற உணர்வும் வருவதில்லை. மனவலி, அழுகை எல்லாம் "இறந்துட்டாரே" என்பதில் தான்.
எனக்குத் தெரிந்த ஒரு முஸ்லிம் நண்பரை புதைத்த இடத்தை க்ராஸ் செய்யும் போதெல்லாம் அந்த மனிதர் இங்கே தான் அடியில் இருக்கிறார் என்பது எனக்கு ஒரு மாதிரி சிலிர்ப்பையும், நடுக்கத்தையும் தான் தருகிறது. அதுவே என் தந்தையை எரித்த இடத்தை கிராஸ் செய்யும் போது அந்தப் பயம் வருவதில்லை. இது நான் வளர்ந்த விதம். அதுக்காக "எரிப்பது தான் சரி" என்று கிறிஸ்தவர்களிடமும், முஸ்லிம்களிடமும் நான் போய்ச் சொன்னால் என்னை அடிக்க வருவார்கள்.
அமெரிக்காவில் ஒரு நிறுவனம் இறந்தவர்களின் உடலை ஃபார்மலின் போன்றவற்றில் ஊற வைத்து ஒருவித கண்ணாடிக் கெமிக்கல் பெட்டிக்குள் நீங்கள் பார்ப்பது போல பேக்கிங் செய்து கொடுப்பார்கள். அப்படி வாங்கிச் சென்றவர்கள் சில மாதங்களுக்குப் பிறகு வீட்டில் அதை வைத்துக்கொள்ளப் பிடிக்காமல் புதைக்கக் (அல்லது அவர்கள் வழக்கப்படி டிஸ்போஸ் செய்யக்) கொடுத்து விட்டார்களாம். ஒரு பிரபல எழுத்தாளரின் பாடியும் இப்படி ஒரு மியூசியத்தில் உள்ளதாம். முதலில் சில மாதங்கள் தினமும் வந்து பார்த்த அவர் மனைவி "அவர் போயிட்டார், இது வெறும் பாடி" என்று மனம் உணர்ந்த பிறகு அங்கே செல்வதை நிறுத்தி விட்டாராம்.
இன்னும் சில ஆண்டுகளில் புதைப்பதற்கு இடம் இல்லாமல் எல்லா மதங்களும் "எரிப்பதை"த் தான் வலியுறுத்தும் என்று ஒரு கட்டுரையும் படித்தேன்.
செளத் ஆப்ரிக்காவில் சில பழங்குடியினர், யாரேனும் இறந்தால் அவர்கள் உடலை பூஜை, மரியாதையெல்லாம் செய்து காட்டுக்குள் சென்று போட்டு விட்டு வந்து விடுவார்களாம். காட்டு நாய், நரிகள், கழுதைப்புலிகள் அந்த உடலைக்கிழித்து உண்ணுமாம். அல்லது அந்த உடல் அழுகி, புழு வைத்து, செடி முளைத்து, மண்ணோடு மண்ணாக டீகம்போஸ் ஆகி விடுமாம். அதற்காக அவர்கள் வருத்தப்படுவதில்லை. அறிவியலில் கூட "life cycle of a man" படி, பூமியில் இருந்து கிடைத்தவற்றைத் தின்று வளர்ந்த உடம்பு பூமியுடன் டீகம்போஸ் ஆகிக் கலப்பது தான் சரி. அதன் படி அந்தப் பழங்குடியினர் செய்வது சரி தானே.
அதற்காக, அந்த சமூகத்தைச் சேர்ந்த ஒருத்தர் இதே போல வந்து போஸ்ட்டில் சொன்னால், நாம நம்ம சொந்தக்காரரின் உடலை கழுதைப் புலி கிழித்துத் தின்பதை ஒத்துக் கொள்வோமா?
அவரவர்க்கு அவரவர் வழக்கம்.

வியாழன், 9 செப்டம்பர், 2021

ஆன்லைன் வகுப்பில் இப்படியெல்லாமா நடக்குது?

#Activity_Based_learning  

#Real_Life_Examples 

3rd Std EVS - Online Classroom Observation செய்து கொண்டிருந்தேன். டீச்சர் போனை எடுத்துக் கொண்டு நேராக தோட்டத்திற்குச் சென்றார். ஒரு இலையைப் பறித்து அதைக் கேமராவில் காட்டி ஒவ்வொரு பாகமாகத் தொட்டுக் காட்டி "இது என்ன?" என்று கேட்கிறார். பிள்ளைகள் ஒவ்வொன்றாக பதில் சொல்கிறார்கள். அதிலிருந்து அப்படியே Photosynthesis - ஒளிச்சேர்க்கை டாபிக்கைத் தொட்டு நடத்தத் துவங்குகிறார். ஆர்வமாக கவனிக்கிறார்கள் குழந்தைகள் 

(ஒரு பையனின் தந்தை பின்னால் துண்டுடன் க்ராஸ் செய்கிறார். கேமரா ஆஃப் பண்ணு என்று சொல்லியிருப்பார் போல. ஓக்கே என்று தலையாட்டியபடி கேமராவை ஆஃப் செய்கிறான் அவன்)

Photosynthesis க்காக ஒரு வீடியோ போட்டுக்காண்பித்தார். அதைப்பார்த்து முடித்ததும் ஒரு பயல் நேயர் விருப்பம் போல "வேற வீடியோ போடுங்க மிஸ்" என்கிறான். 

Sunlight, Chrolophyl, Carbon Dioxide, Water என்று சொல்லும் போது குழந்தைகள் திரும்பச் சொல்கிறார்கள். ஒரு குழந்தை Chrolophyl ஐ "கோலோபில்" என்றது. அழகாக இருந்தது. 

இதுபோலக் குழந்தைகளுடன் கிடைக்கும் நேரத்திற்காகவே இந்தத்துறையை விட்டு இன்னும் விலகாமல் இருக்கிறேன். 

செவ்வாய், 7 செப்டம்பர், 2021

ஒண்ணரை வருசம் சுலோவாவே

கும்பகோணம் திருமஞ்சன வீதி நடுநிலைப்பள்ளின்னு ஒரு இஸ்கோலு.. (ஆரம்பப் பள்ளியோ?)

அங்கதான் எங்கம்மாவும் சின்ன மாம்ஸூம் படிச்சாங்களாம்... சரீரீ.... படிப்பை ஆரம்பிச்சாகளாம்.. எப்போவா? அது இருக்கும் ஒரு 56 - 58 வருசம்...
அங்கன பெரிய வாத்தியார்னு ஒருத்தர் இருந்தாரு. அவுங்களுக்கும் அவர்தான் பெரிய வாத்தியாரு. எனக்கும் தான். அவரு தெருவுல நடந்து வந்தா சைக்கிள் ஓட்டுறவங்க கே.எஸ்.ரவிக்குமார் ஆக்சன் சொன்னவுடனே ரோட்டோரமா நின்னு வணக்கம் வச்சுட்டு வாத்தியார் போனப்பறம் தான் சைக்கிள எடுப்பாங்களாம்...
அந்தப் பெருமையை சொல்லிப்போட்டு என்னையையும் கொண்டு போயி அந்த ஸ்கூலுலயே, ஸாரி பள்ளிக் கோடத்துலயே சேத்தாக.. ஸாரி... சேக்க முயற்சி பண்ணுனாக... 5 வயசுல..
(நடுவால ரெண்டு வருசம் முன்னால கான்வென்டுல எல்லுகேஜி சேக்குறேன்னு எங்க நைனா அடிச்ச கூத்து அங்கன பீஸ் கட்டாததால ஈ-ன்னு பல்ல இளிச்சு நாந்திரும்பி வீட்டுக்கே வந்த கதை இதுல சேராது)
அவரு தான் அந்தக் காலத்து ஆளாச்சே.. அந்தக் காலம் னா கொஞ்ச நஞ்சமில்ல. 58 வருசம் முன்னாலயே "அந்தக்காலம்"னா என்னா வயசிருக்கும் அவருக்கு. அவரு க்ரைடீரியா என்னன்னா "டேய், பயலே வலது கைய தூக்கு. அதை உன் தலை மேல சுத்தி வச்சு இடது காதை தொடு" தொட்டேன். ஸாரி, தொட முயற்சி பண்ணேன். மிடில... நாம தான் முத பெஞ்சிலயே எப்பயும் உக்கார்ற அளவு பொடுசாச்சே. குட்டிக் கை. எப்புடி எட்டும்?
அவ்ளோதான். மேகி சூடாகி இறக்கி வைக்கிற நேரம் கூட இல்ல... இன்டர்வியூ ஓவர். "பய ரொம்ப சிறுசா இருக்கான். போயிட்டு அடுத்த வருசம் வாடா நாராயணா". பேக் டு தி பெவிலியன். நம்ம கேரியர்-ல ஒரு ஒண்ணரை வருசம் போச்சு. அரோகரா... மத்தவன் லாம் 5 வயசுல ஒண்ணாப்பு படிச்சா, நான் மட்டும் ஆறரையில சேந்தேன்.
அப்போ ஆரம்பிச்சது. வாழ்க்க இன்னிய வரை ஒரு ஒண்ணரை வருசம் சுலோவாவே போவுது. சரி உடு. ஒரு வருசம் முன்னாடியே படிச்சிருந்தா மட்டும்? அடுத்த மாசம் நம்மூருக்கு வாராறே ஆர்னால்டு.. அவருக்குப் போட்டியா கலிபோர்னியாவுக்கு கவர்னராவா ஆயிருக்கப் போறேன்?
லூஸ்ல விட்டுட்டு வாத்திக்கு ஒரு வணக்கம் வையி... பெரிய வாத்தியார் வாழ்க... ஸாரி... அவரு போயிட்டாரு. அவரு புகழ் வாழ்க...
ஹேப்பி (பிலேட்டட்) டீச்சர்ஸ் டே
--------------------
7 செப்டம்பர் 2014 அன்று ஃபேஸ்புக்கில் எழுதியது.

வெள்ளி, 27 ஆகஸ்ட், 2021

நா ஒன் டாய் போட்டு வந்தேன் மிஸ், திம்ப சொங்க மிஸ்

 இன்றைக்கு ஆன்லைன் க்ளாஸ் ஆப்ஸர்வேஷனில் நடந்த ஒரு சுவாரஸ்யமான சம்பவம்.

ஒன்றாம் வகுப்பு மாணவர்களுக்கான EVS அதாவது "சுற்றுச்சூழல் அறிவியல்" வகுப்பு நடந்துகொண்டிருந்தது. ஒன்றாப்பு எனில், எல்.கே.ஜி மட்டும் பள்ளியில் படித்து விட்டு, கோவிட் காரணமாக யு.கே.ஜி முழு வருடம் பள்ளிக்கே போகாமல், ஒன்றாம் வகுப்புக்கு வந்துள்ள குழந்தைகள். சிலர் நேரடியாக எல்.கே.ஜி, ஊக்கேஜியெல்லாம் படிக்காமல் வந்தவர்கள்.
அழகாக, பொறுமையாக வகுப்பை நடத்திக்கொண்டிருந்தார் அந்த ஆசிரியை. ஆன்லைன் வகுப்புகளுக்கென்று சில விதிகளும், நியமங்களும் உண்டு. இருமொழி உபயோகம், பெற்றோர் அருகில் இருத்தல், கேமரா ஆனில் இருந்தல், மைக் மியூட்-டில் இருத்தல், கையில் வொர்க் புக் இருத்தல், அவ்வப்போது ஓரிருவர் பெயர் சொல்லி செக் செய்தல், தேவையான போது விதிகளைத் திரும்பச் சொல்லல், இதர, இதர. அவை அனைத்தையும் சரியாக பின்பற்றிக் கொண்டு இருந்தார் அவர். குழந்தைகளும் மிஸ் சொல்வதைக் கேட்டு சரியாக உள்வாங்கிக் கொண்டிருந்தார்கள்.
பாடம் முடித்து Exercise - பயிற்சிப் பாடம் நடக்கையில் திடீரென அழகான கொஞ்சும் குரல் ஒன்று கேட்டது - "மிஸ், நா ஒன் டாய் (சூச்சூ) போட்டு வந்தேன் மிஸ், திம்ப சொங்க மிஸ்" என்றது அந்தக் குரல். வார்த்தைகள் புரியவில்லை ஆனால் குழந்தை என்ன சொல்ல வருகிறது என்று புரிந்தது. இதுபோல கோரிக்கை வரும்போது, வெவ்வேறு வகுப்புகளில் வெவ்வேறு வித மறுமொழிகள் வரும். இந்த மிஸ் என்ன சொல்லப் போகிறார் என்று அமைதியாக கவனித்துக் கொண்டிருந்தேன்.
மிஸ், உடனே "என்னடா தங்கம்? பாத்ரூம் போயிட்டு வந்தியா? நான் திரும்ப பேஜ் 51 ஐப் படிக்கணுமா?" என்றார். "ஆமங் மிஸ்" என்று பதிலியது அந்தக் கொஞ்சும் குரல். சரி என்று "பசங்களா நான் மறுபடி இந்த எக்சைஸ் படிக்கப் போறேன்" என்று சொல்லிவிட்டு அந்தப் பயிற்சியை மீண்டும் தெளிவாகச் செய்து காட்டினார் அந்த ஆசிரியை. 30 நொடிகள் தான் என்றாலும், நெட்வொர்க் உள்ளிட்ட எத்தனையோ பிரச்சனைகள் வரக்கூடிய ஆன்லைன் வகுப்பில் ஒற்றைப் பிள்ளைக்கான கோரிக்கையை முன்னெடுத்துச் செய்வது பெரிய விஷயம்.
தன் ஆசிரியை மேல் என்ன ஒரு நம்பிக்கையும், பிணைப்பும், உறவும் இருந்திருந்தால் அந்தக் குழந்தை கொஞ்சம் கூடப் பயமும், தயக்கமும் இன்றி இந்தக் கோரிக்கையை வைக்கும் என்று எண்ணிய போது பெருமையாகவும், சந்தோஷமாகவும் இருந்தது. அந்த அளவு சுதந்திரத்தையும் அந்த ஆசிரியை கொடுத்திருக்கிறார் என்பது குறிப்பிட வேண்டிய விஷயம்.
வகுப்பறைகள் மாறி வருகின்றன. கற்றல் முறை மாறி வருகிறது. ஆசிரியர்கள் - மாணவர்கள் இடையேயான அணுகுமுறையும் நன்றாக மாறி வருகிறது. மாற்றத்திற்குத் தயாராக இல்லாத ஆசிரியர்கள் பின்தங்கிப் போவார்கள்.

வியாழன், 26 ஆகஸ்ட், 2021

அவார்டு வாங்கலையோ அவார்டு.

26 ஆகஸ்ட் 2014 அன்று ஃபேஸ்புக்கில் எழுதியது. 

கொஞ்ச நாளா ஒரு அவார்டு மேட்டர் ஃபேஸ்புக்ல ஓடிட்டிருக்கு. நம்ம கருத்து என்னன்னா, அவார்டு வாங்கறதை விட... அவார்டு குடுப்போம். அப்போ, நாம தானே பெரிய ஆளு, என்னங்கறீங்க? 

"அவன் என்னடா நமக்கு கடன் குடுக்கறது? நாம பேங்கு ஆரம்பிப்போம், எல்லாருக்கும் கடன் கொடுப்போம்"-னு ஒரு படத்துல தலைவர் கவுண்டர் சொல்லுவாரு. ஸோ, "அவன் என்னடா நமக்கு அவார்டு குடுக்கறது? நாம கமிட்டி ஆரம்பிப்போம், எல்லாருக்கும் அவார்டு கொடுப்போம்" 

இந்த ஞானோதயம் எனக்கு சில வருடங்களுக்கு முன்பு ஒரு தடவை (நான் பல கம்பேனீஸ்-ல ஒர்க்-கிருக்கேன். அதுல ஒரு) பழைய மன்னார் அண்டு கம்பேனி மீட்டிங் போயிருந்தப்ப வந்தது. பாலிடிக்ஸ்-னா பாலிடிக்ஸ். செம்ம பாலிடிக்ஸ். என் டீம்ல இருந்த நாலு பேருக்கும் (என்னையும் சேத்து அஞ்சு) ஒருத்தனுக்கும் ஒரு கேட்டகிரியில கூட அவார்டு இல்ல. 

அவுங்க கீழ் நக்கிங்களுக்கு (அடி வருடியோட நிஜ மீனிங்) மட்டும் ஏதாவது ஒரு கேட்டகிரியில அவார்டு. இதுக்காகவே பல புதுப் புது கேட்டகிரியே உருவாக்கி வச்சிருந்தாங்க. உதா - கலெக்ஷன், டீம் ஹேண்ட்லிங், இங்கிலிபீஷ் எதுலயும் ஒரு ம------ரையும் புடுங்காத ஒருத்தன் இருந்தா அவனுக்கு "எனர்ஜடிக் யங் மேன்" னு ஒரு அவார்டு. அதுக்கு என்ன க்ரைடீரியா (இதுக்கு என்னப்பா தமிழ்-ல) ன்னே யாருக்கும் தெரியாது. ஆனா அவார்டு குடுத்தாச்சு. பர்ப்பஸ் சால்வுடு. 

நமக்கு புரிஞ்சு போச்சு. இது வேலைக்காவாதுன்னு. இதுல நம்ம டீம் பசங்களுக்கு அவார்டை தடுத்து நிறுத்துனவங்க பக்கத்துல தான் உட்கார வேண்டிய நிலைமை வேற. ஸோ, எல்லாத்தையும் மறந்து அடுத்தவங்களுக்கு கை தட்டி, நக்கல்  உட ஆரம்பிச்சேன். என் டீம்ல என் வயசுல ஒருத்தன் இருந்தான். அவனுக்கும் சேம் ஃபீலிங்ஸ். எல்லா பாலிடிக்ஸையும் பாத்தவன் அவன். விட்றா, சப்ப மேட்ரு-ன்னு சொல்லிட்டான். ஆனா என் டீம்ல இருந்த ரெண்டு நிஜ எனர்ஜெடிக் யங் மேன்களுக்கு தாங்க முடியல. மூஞ்சி காட்டிக் கொடுத்துடுச்சு. ஆனா என்ன புண்ணியம். அவங்களை வெறுப்பேத்த நினைச்சவங்களுக்கு சந்தோசம் தான். அவங்க பர்ப்பஸ் சால்வ்டு. 

அதுவும் மெட்ராஸ்ல ஒரு பெரிய தலை இருந்தது. அதுக்கு கீழ நாலு லேயர்ல 32 பேர் இருந்தாங்க. அநியாயம் என்னன்னா, ஒருத்தன் உடாம எல்லாருக்கும் அவார்டு. அடங்கொக்கமக்கா. ஏண்டா அது எப்டிடா ஒருத்தன் உடாம 32 பேரும் சூப்பரா ஃபர்ஃபார்ம் பண்ணுவாங்க? சிட்டுக்குருவி ஏதும் லேகியம் சாப்டுவானுங்களோ? 

புதன், 25 ஆகஸ்ட், 2021

காசுக்கேத்த பணியாரம்

எப்போதும்....

கால் வைத்த இடத்திலெல்லாம் சேறும், முறைத்தபடியே விரல் விட்ட தண்ணி டம்பளரை டொங்கென்று வைத்துப்போகும் சப்ளையர்களும், புளித்த வாடை அடிக்கும் மகா கேவலமான சாப்பாடும், காலாவதியான தேதியுடனான ஆனால் டபுள் ரேட் லேஸ் பாக்கெட்டுகளும், காரல் வாசமடிக்கும் காஞ்ச மிச்சர் பாக்கெட்டுகள் தொங்கும் ஹைவே மோ(ச)ட்டல்களில் வண்டியை நிறுத்தும்,
கழுத்தை சாய்த்து தோள் பட்டையில் செல்ஃபோனை வைத்து பேசியபடி ஸ்டியரிங்கை மட்டும் ஆட்டி ஓட்டும்,
ஆளே இல்லாத இடத்திலும் "ங்கொய், ங்கொய்" என அழுத்தியபடியே வண்டியோட்டும் ஹாரனுக்குப் பொறந்த டிரைவர்களும்,
சில்லறை பாக்கி வைத்து, இறங்கும் போதும் சில்லறை தராத, நம்மைத் திட்டுகிற, ஹோட்டலில் நிற்கும் என்று சொல்லாமல் ஹோட்டலில் நிறுத்தி லேட்டாக்கி நம்மை நகம் கடிக்க வைத்து கடுப்பேற்றும் கண்டக்டர்களும்,
எப்பயோ இசுக்கூல்ல பாட்டு கிளாசுல நம்மள அடிச்ச வாத்தி மேலயே கோபமும், எரிச்சலும் வரும் அளவு மொக்க பாடல் சிடிக்களை போட்டு பஸ் பூரா இருக்கும் ஸ்பீக்கர்களை அலற விடும் தனியார் வண்டி அஜிஸ்டேண்டு கண்டக்டர்களும்,
நிறைந்த
எடைக்கும் போடும் ஸ்பேர் பார்ட்டுகளுடன் இருந்தாலும், எல்லா பார்ட்டும் ஆடினாலும் வெறுமனே "EXP" என்று சாக்பீஸ் கோடுகளால் மட்டும் எழுதிவிட்டு அதிக சார்ஜ் வாங்கும் அர"சு"ப் பேருந்துகளிலேயே பயணிப்பவன் நான்.
இன்றைக்கு மஹிந்திரா-வின் "Xylo" வண்டியில் பயணிக்க நேர்ந்தது. அட்டகாசம்யா... வண்டி மிதக்கிறது. 165 கிலோ மீட்டர் தூரத்தை ஹைவேயில் இரண்டே மணி நேரத்தில் கடந்து வந்தது வண்டி.
120 கிமீ வேகத்தில் போனாலும் ஒரு உதறல் இல்லை, ஒரு உறுமல் இல்லை. தேவையின்றி டிரைவர் ஹாரன் அடிக்கவில்லை. அடித்தாலும் உள்ளே சத்தம் அதிகமாக கேட்கவில்லை. எங்கே அமர்ந்தாலும் முகத்திலறையும் குளிர்காற்று வேறு, அருமைய்யா...
சொம்மாவா சொன்னாங்க பெரியவங்க, "காசுக்கேத்த பணியாரம்"னு...

26 ஆகஸ்ட் 2014 அன்று ஃபேஸ்புக்கில் எழுதியது.

செவ்வாய், 10 ஆகஸ்ட், 2021

கவுண்டரின் மகிழ்ச்சி

10 ஆகஸ்ட் 2015 அன்று எழுதியது. 

உறவில் சர்வேஷ், அர்விந்த் என்று இரண்டு பெரிய மனிதர்கள் இருக்கிறார்கள். யு.கே.ஜி போன்ற பெரிய படிப்பு படிப்பவர்கள் அவர்கள். 

அதர்வன் (மகனார்) அவர்களில் எவரையேனும் பார்த்தால் "ஆயிரம் வாட்ஸ் பிரகாசம்" என்று கதைகளில் படித்திருப்பீர்களே, அதை முகத்தில் காண்பிப்பான். பரவசம், பரவசம் என்பார்களே அது உடலில் தெறிக்கும், மற்ற எல்லா வித சிரிப்புகளிலும் அப்போது வரும் சிரிப்பு அவ்வளவு வித்தியாசமாக இருக்கும். அவர்களிடம் போய் உரசியவாறு நின்று கொள்வான். கட்டிப்பிடிக்கவும் தெரியாது. அடுத்து என்ன செய்வது என்றும் தெரியாது. எட்டு வயதுப் பையனிடம் திடீரென் ஆயிரம் ரூபாய் கொடுத்து "என்ன வேணா வாங்கிக்கோ, பண்ணிக்கோ, கேக்க மாட்டேன்" என்றால் அவன் நிலை எப்படி இருக்கும்? 

"இப்போ எதாவது செய்யணும், ஆனா என்ன செய்யறதுன்னு தெரியலையே" என்ற அவனது நிலை பதினைந்து இலட்சம் லாட்டரி விழுந்தவுடன் "அய்யோ நான் இப்போ எதையாவது வாங்கியாகணுமே" என்ற கவுண்டரின் மகிழ்ச்சி நிலைக்கு ஈடானது.


ஏர்டெல் அராஜகம்.

10 ஆகஸ்ட் 2017 அன்று எழுதியது. 

ஜியோ வந்தாலும் சரி, பியோ வந்தாலும் சரி, அய்யோ வந்தாலும் சரி, இந்த ஏர்டெல் காரனின் ரேட் அராஜகம் குறைவதே இல்லை. கிட்டத்தட்ட நம்பர் 1 நான்தான் என்ற கெத்தில் இருக்கிறான். இப்போது கதை என்னவென்றால், பல மாதங்களாக போஸ்ட் பெய்டில் உள்ள என் கனெக்ஷனுக்கு கொள்ளை காசு தெண்டம் கட்டிக் கொண்டிருந்தேன் சென்ற மாதம் வரை. புதிய ப்ரீ பெய்டு சிம்முக்கு வெறும் 300 ஓவாவுக்கு வழங்கும் சலுகைகளை விட, 5 மடங்கு கட்டினாலும் எனக்கு பாதி சலுகை தான் வழங்கிக் கொண்டிருந்தான். ஜியோ வந்து ஆறு மாதம் ஆகியும் போஸ்ட் பெய்டு ஸ்கீம்களில் மாற்றம் செய்யவே இல்லை. கஸ்டமருக்காக உயிரையே கொடுப்பேன் என்பது போலக் காண்பிப்பதெல்லாம் விளம்பரங்களில் மட்டும் தான். 

கஸ்டமர் கேருக்கு கால் செய்து "தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்", "ஹிந்தி மே ஜான்காரி கேலியே தோ தபாயியே" "செவுத்தில் முட்டிக் கொள்வதற்கு எண் மூன்றை அழுத்தவும்" என்றெல்லாம் செய்து ஒன்றும் நடக்காமல் ஆர்.எஸ்.புரம் ஏர்டெல் ஆபீஸூக்கு நேரே போய் டோக்கன் எடுத்து கியூவில் உட்கார்ந்து கம்ப்ளெயிண்ட் எழுதி, "ரேட்டைக் குறைக்கிறியா? ப்ரீ பெய்டு வாங்கிக்கவா? இல்லை, ஜியோவுக்கு மாறிக்கவா? என்றெல்லாம் மிரட்டி, ப்ரீ பெய்டுக்கு அவ்ளோ சலுகை வழங்கும் போது போஸ்ட் பெய்டு கட்டும் நான் மட்டும் இளிச்சவாயனா?" என்றெல்லாம் சண்டை போட்டு, "சார் நான் உங்களுக்கு 10 ஜி.பி ஃப்ரீயா தர்றேன்" என்ற ஆசை வார்த்தைகளைக் கேட்டு, "யோவ், ப்ரீபெய்டுக்கு 30 ஜி.பி தருவியாம், எனக்கு பத்து ஜி.பி பிச்சையா?" என்று சண்டை போட்டு", அடுத்த கட்ட ப்ராஸஸ், ப்ராஸஸ், என்று (கார்ப்பரேட் அல்லவா?) பல முறை போனிலும், நேரிலும் ஃபாலோ அப் செய்து இந்த மாதம் ஸ்கீம் ரேட்டைப் பாதியாகக் குறைத்திருக்கிறேன். இதற்குத் தலையால் தண்ணீர் குடிப்பது என்பார்கள் அல்லவா? அதந்த ரேஞ்சுக்குப் போக வேண்டியதாகி விட்டது. 

அதில் இரண்டு முறை கஸ்டமர் கேர் எக்ஸிகியூட்டிவ்கள் வாய்க்கு வந்த ஸ்கீமைச் சொல்வது, அதை என் நம்பருக்கு மாற்றுவது (அதில் ஒரே ஒரு நன்மை. அது கடைசியில்) அடுத்த எக்ஸிகியூட்டிவ் முந்தையவன் சொல்லிய ஸ்கீம் வழக்கத்திலேயே இல்லை என்பது, நான் உடனே "உனக்கு மேலே யாரு? நான் கம்ப்ளெயிண்ட் செய்யணும்" என்பது, மீண்டும் ஒரு ஸ்கீம் சேஞ்ச், நான் ஒரு கம்ப்ளெயிண்ட், அதுக்கு ஒரு நம்பர், அதற்கு ஒரு ஃபாலோ அப் என ஒரு வாரம் கிட்டத்தட்ட தாவு தீர்ந்து விட்டது. "போய்யா வெண்ணை, நான் ஜியோவுக்குப் போறேன்" என்று போகலாம். ஆனால் நாளை அவன் இதைச் செய்யமாட்டான் என என்ன நிச்சயம்? எந்த விஷயமாயிருந்தாலும், இந்த "ப்ராஸஸ்" வகையாறக்களை முடிந்த வரை ஸ்டெப் பை ஸ்டெப் ஆக முட்டிப் பார்ப்பது என் வழக்கம். என்னமோ? 13 வருஷம் ஓடிப்போச்சு. கடைசி வரை இந்த ஏர்டெல்லுடன் தான் குப்பை கொட்ட வேண்டும் என்று விதியோ என்னவோ?

சரி, அந்த நன்மை என்னவென்றால் பல முறை ஸ்கீம் மாற்றியதில் என் அக்கவுண்டில் 42 ஜி.பி பேலன்ஸ் உள்ளது. இந்த மாதம் கடைசியில் எக்ஸ்பையரி ஆகி விடும். அதை நல்ல விதமாகக் கரைக்க நண்பர்கள் வழி ஏதேனும் சொல்லவும்.


வெள்ளி, 6 ஆகஸ்ட், 2021

முத்தம் காமத்தில் சேர்த்தி இல்லை

"முத்தம் காமத்தில் சேர்த்தி இல்லை" ரேஞ்சுக்கு ஒரு நாள் சினேகன் நாலைந்து பேரை வைத்து "முத்தம் புனிதமானது, உலகிலேயே தூயது" என்று கிளாஸ் எடுத்ததை நீங்கள் பார்த்திருக்கலாம். 

சினேகன் பற்றிய முன்னாள் வீடியோ ஒன்றை தேடினால் கிடைக்கும். "டைனமிக் திருமணம்" என்ற பெயரில் திருமணங்கள் நடத்தி, கல்யாணத்திற்கு வருபவர்கள், போகிறவர்களையெல்லாம் கட்டிப் பிடித்து முத்தம் கொடுத்து ஒரு மாபெரும் "புதுமை" ஒன்றை மூன்று முறை செய்திருக்கிறார், இதே தமிழ்நாட்டில். 

இன்றைக்கு ஆண்டவரே சொன்ன மாதிரி, விந்திய மலை தாண்டி ஸ்டார் விஜய் பிக் பாஸ் நிகழ்ச்சியை இங்கே கொண்டு வந்த போது அவர்கள் நினைவில் வைக்க வேண்டிய விஷயங்கள் நிறைய. இங்கே இருக்கும் கல்ச்சர் வேறு. என்னதான் கையில் நிறையப் பணம் புரளும் ஒரு தலைமுறை எல்லாவற்றையும் லைட்டாக எடுத்துக் கொண்டு (அப்படி மனதில் நினைத்துக் கொண்டு) திரிந்தாலும் அது மிஞ்சிப் போனால் 2 சதம் இருக்கலாம். ஆனால் மீதி 98 சதம் ஊர் எரிப்பு, பஸ் ஸ்டாண்டில் வெட்டு, தண்டவாளத்தில் கிடத்தல் எனும் அளவு இங்கே கொஞ்சம் சீரியஸ் கல்ச்சர் தான். 

சமீபத்தில், வட இந்தியாவில் ஒரு முறை கார்ப்பரேட் நிறுவனங்களுக்கான மீட்டிங் மற்றும் சந்திப்புகள் நடந்த போது (அங்கே மக்கள் எப்படி இருப்பார்கள் எப்படிப் பழகுவார்கள் என்று சொல்ல வேண்டியதில்லை, இருந்தாலும்) ஆண், பெண் வித்தியாசமின்றி அனைவரும் ஹக் செய்து கொண்டுதான் அன்பைத்தெரிவித்துக் கொள்வார்கள். அறிமுகமே கூட அப்படித்தான். நானும் என்னுடைய சென்னை கொலீக் ஒருவரும் மட்டுமே மற்றவர்களிடம் வெறும் கை குலுக்கலோடு நிறுத்திக் கொண்டவர்கள். அவர்கள் கட்டிப் பிடித்தாலும், அதை நாம் செய்ய முயற்சித்தாலும், அது நமக்கு இயல்பாக வராது, வரவில்லை. 

பெண்கள் கூட என்னை ஹக் செய்து (கட்டிப் பிடித்து என்றால் நல்லா இல்லை) பழகும் போது "you south guys are the only people who didn't hug me yar" என்று அந்த நேஷனல் ஹெட் டே வாய் விட்டுச் சொல்லி விட்டார். அது தான் நாம். நமக்கு இதெல்லாம் பழக இன்னும் தலைமுறைகள் ஆகலாம். 

இதையெல்லாம் யோசிக்காமல், இந்த சினேகனின் "கட்டிப்புடி, முத்தா குடு" அறிவுரையை நம்பி ஆரவ் கேஷூவலாகச் செய்த ஒரு விஷயம் இன்றைக்கு அவரை எப்படிப் பட்ட ஒரு தர்ம சங்கடத்தில் கொண்டு வந்து விட்டது. பாவம். இந்த வாரம் பூரா ஆரவ் புலம்பப் போகிறான் பாருங்கள்.

6 ஆகஸ்ட் 2017 அன்று ஃபேஸ்புக்கில் எழுதியது. 

வியாழன், 5 ஆகஸ்ட், 2021

கிரியேட்டிவ் ஆக கேக் செய்பவர்களுக்கும், வாங்குபவர்களுக்கும் ஒரு வார்த்தை.

ஃபேஸ்புக்கில் 2015 ஆகஸ்ட் 8 அன்று எழுதியது.

கிரியேட்டிவ் ஆக கேக் செய்பவர்கள் முக்கியமாக வாங்குபவர்களுக்கு ஒரு வார்த்தை.

.
நீங்க நாய்க்குட்டி, சோட்டா பீம், சுட்கி, தேவதை, மனித உருவங்கள் போன்ற வடிவங்களில் செய்யும் வாங்கும் கேக்குகள் பார்க்க நன்றாக இருக்கின்றன. ஆனால் அதை வெட்டும் போது? நன்றாகவா இருக்கிறது? அவரது கிரியேட்டிவிடியையும் கொல்வது போல இருக்கிறது.
.
இதிலென்ன சென்டிமெண்ட், கேக்தானே? நிஜத்தையா வெட்றோம்? என்பீர்களானால் அப்போ பிறந்த நாள் கொண்டாடுவதே ஒரு சென்டிமெண்ட்
தானே? அதைக் கொண்டாடாமல் விட வேண்டியது தானே?
.
சுரைக்காயை வெட்டும் போது கூட பலர் தலை போன்ற பாகத்தை முதலில் வெட்டி தனியாக வைப்பார்கள். என் தாயார், முதலில் குறுக்காக இரண்டாக வெட்டுவார். பிறகு தான் துண்டு துண்டாக. கேட்டால் "அப்படி வெட்டுனா என்னமோ ஒரு குழந்தை கழுத்துல கை வைக்கிற மாதிரி இருக்குடா" என்பார்.

திங்கள், 26 ஜூலை, 2021

வாட்ஸ் அப் பயன்படுத்த கட்டணம்

 26 ஜூலை 2020 அன்று ஃபேஸ்புக் கில் எழுதியது. 


வாட்ஸ் அப் பயன்படுத்த கட்டணம் கட்டணும்னு ஒரு விவாதம் ஓடிக் கொண்டிருப்பதாகச் செய்தி. என்னைக் கேட்டால் அது வரவேற்கத்தக்கது. காரணம் 


1, ஃப்ரீயாக கிடைப்பதால்தான் எல்லா லோலாயித்தனங்களும் நடக்குது. 

2, Nothing comes for free என்பதை மக்கள் உணர வேண்டும். 

2 a, உருவாக்கியவனுக்கு அவன் உழைப்பின் பலன் தரப்பட வேண்டும். 

2 b, நாம் இலவசமாக எதிர்பார்த்தால் அவன் நமக்கே தெரியாமல் நம்மிடமிருந்து சம்பாதிக்கத்தான் பார்ப்பான். 

3, வதந்தி பரவும் வேகம் மட்டுப்படும். 

4, இதை வாட்ஸ் அப்புக்கு மட்டும் செய்யாமல், ஃபேஸ்புக், ஷேர் சேட், இதர சோஷியல் நெட்வொர்க்குகளுக்கும் விரிவு படுத்த வேண்டும். 

5, கட்டணத்தை அமல்படுத்துகிறீர்களோ இல்லையோ, கட்டுப்பாடுகளை அமல்படுத்துங்கள். 


இந்திய தகவல்தொழில்நுட்பத்துறை இது போன்ற விஷயங்களில் சில ஸ்டிராங்கான நிலைப்பாடுகளை எடுத்தே ஆக வேண்டும். மேலும் அவ்வப்போது அந்நிலைப்பாடுகளை தேவைக்கேற்ப புதுப்பிக்க வேண்டும்.

அட்லீ படத்துல லாஜிக் இல்லையாம்.

26 ஜூலை 2020 அன்று ஃபேஸ்புக் கில் எழுதியது.

அட்லீ படத்துல லாஜிக் இல்லையாம். அந்தத்தாத்தா மேட்டர்ல. மீம் ல சொல்றாங்க. நான் சொல்றேன் லாஜிக்லாம் இல்லாம இல்ல.


அந்தத் தாத்தாவோட பொண்ணை மினிஸ்டர் வானமாமலை பையன் கொன்னுட்டான். அதை விஜய்குமார் ஐ.பி.எஸ் கிட்ட சொல்லி அவர் அந்தப் பையனை கொன்னுடுறார். அதுக்கு அவர் விஜய்குமார் ஃபேமிலியைக் கொன்னது உங்களுக்கே தெரியும். கடைசியில விஜய்குமார் வானமாமலையையும் கொன்னுடுறார். ஆனா சீக்ரெட்டா வானமாமலைக்கு இன்னோரு பையன் இருக்கான் அப்பாவோட சாவுக்குப் பழிவாங்க வர்ற அவனை அந்தத் தாத்தாவே கொன்னுடுறார் (இதெல்லாம் தெறி ஸ்கொயர்ல வருது). ஏன்னா அவருக்கு உதவி பண்ண வேண்டிய விஜய்குமார், தன் சுப்பீரியர் பிரபு உத்தரவுப் படி கோஸ்ட் ஆபீஸரா லடாக் போயிடுறார்.

அதனால அந்தத் தாத்தாவை ஜெயில்ல போட்டுடுறாங்க. அங்க தான் பக்கத்து செல்லுல சிவாஜி இருக்கார். இதைத்தான் "ராஜா ராணி" ஃப்ளாஷ்பேக்ல ஆர்யாவும் சந்தானமும் பாக்குறாங்க. சிவாஜி ரிலீஸ் ஆகி நிறைய ஸ்கூல், காலேஜ் தொறந்ததால, அதுல தன் பையன் இலவசமா படிச்ச நன்றிக் கடனுக்காக (சிவாஜியை லத்தியால அடிக்க மாட்டேன்னு சொல்வாரே அந்த போலீஸ் கான்ஸ்டபிள் அவரு, ப்ரமோஷன்ல ஜெயிலர் ஆகிடுறாரு). சிவாஜி கூட ஜெயில்ல இருந்த எல்லாரையும் ரிலீஸ் பண்றாரு. அதுல அந்தத் தாத்தாவும் ரிலீஸ் ஆயிடுறாரு.
ரிலீஸ் ஆனப்புறம் சிவாஜி ஆபீஸ் ரூம் போட்டு ஹவாலா மணியை இந்தியாவுக்குக் கொணாந்து நிறைய பேரை கன்ட்ரோல் பண்றார், கிங் மேக்கர் ஆதிசேஷனை கொன்னது உங்களுக்குத் தெரியும். மினிஸ்டர் குழந்தை வேலை கத்தியால குத்துனதுல ஆறு மாசம் கழிச்சு செப்டிக் ஆகி அவர் செத்துடறார். இப்போ சிவாஜி தான் கிங் மேக்கர், கிங்கு எல்லாமே. சிவாஜி அமைச்சர் ஆனதும் நெறைய பேப்பர்ல சரக் சுருக்னு ரெண்டு கையால கையெழுத்துப் போடுவார். அதுக்கு வசதியா இடது கை பிரிண்ட் அவுட்டை ரிவர்ஸ் ல எடுத்ததால அதைப் படிக்காமயே கையெழுத்துப் போட்டு 70 வயசானவங்களுக்கும் அரசு வேலை உண்டுன்னு உத்தரவு ஆகிடுது.
அந்த உத்தரவு மூலமா தான் நம்ம தாத்தா ரெஜிஸ்த்ரார் ஆபீஸ் ல கவர்மண்டு வேலைக்கு சேருறார். அங்கதான் ரெஜினா - சூர்யா (ஜெய்) வை கல்யாணம் பண்ணிக்க வேண்டி வர்றாங்க. தாத்தாவும் ஒரு பொண்ணைப் பெத்து பிறகு இழந்தவர்ங்கறதால ரெஜினாவுக்கு அட்வைஸ் பண்ணி வீட்டுக்குப் போம்மா ன்னு சொல்றார். இப்போ புரியுதா லாஜிக்?
பின் குறிப்பு - தெறி, ராஜாராணி டைம்லைன் மேட்ச் ஆகலையேன்னு கேக்காதீங்க. ஆக்சுவலி ராஜா ராணியோட ப்ரீக்வல் மெளன ராகம்லயே ரெஜினா - திவ்யான்ற பேருல ரெஜிஸ்ட்ரார் ஆபீஸ் போய் வெயிட் பண்றாங்க. ஒரு வேள கன்பீசன் இருந்தா கொஞ்சம் வெயிட் பண்ணுங்க. முருகதாஸ் கதை எழுதி, மணி ரட்னம் ப்ரொடக்ஷன்ஸ்ல அட்லீ எடுக்கப்போற ராஜா ராணி சீக்வெல் 2 (அதாவது மெளன ராகம் 3) வரும்போது இதையெல்லாம் உடைக்கிறோம்.
மணி எப்டி ஏமாறுவாருன்னு கேக்குறீங்களா? அட என்னங்க நீங்க? அவரோட அக்னி நட்சத்திரத்தையே - அவரு ப்ரொடக்ஷன்லயே வஸந்த் - நேருக்கு நேர்னு எடுக்கல? (இங்க தான் நாம சூர்யா-வை உள்ள கொண்டு வர்றோம். வரும்போது "ப்ராஜக்ட் 24" வாட்ச்சை எடுத்துட்டு வாய்யா மெக்கானிக்னு சொல்லி, அதை வச்சு மின்னாடி பின்னாடி டிராவல் பண்ணி எல்லாப் படத்தோட டைம்லைனையெல்லாம் அஜ்ஜஸ் பண்றோம்). எப்பூடி?
- எஸ்கா
--------------------------------------------------------------
பிற்சேர்க்கை - Viswa Nathan போன்ற இன்டலக்சுவல்களுக்காக.
ரட்னம் - குறியீடு.
எந்த ஒரு படைப்பையும் மூன்று விதமாக அணுகலாம்.
வழக்கமான ஒரு பார்வை (பெரும்பாலான ஜெகுஜனங்களின் பார்வையும் இதுவே).
ரசிகனாக ஒரு பார்வை (அந்தப் படைப்பைப் பற்றிய அனைத்து விவரங்களையும் தெரிந்து கொண்டு, அவரது முந்தைய படைப்புகள் / படைப்பாளிகளுடன் படைப்பைத் தொடர்பு படுத்திக் கொண்டாடுவது - மெளன ராகம், சத்ரியன் இதுபோல)
ஒரு கன்னோசர் ஆக (Connoisseur) படைப்பை அணுகுவது.
நம்மில் எல்லோருமே வழக்கமான ஒரு பார்வையாளனாகவே நமது பயணத்தைத் துவக்குகிறோம். சிலர் அங்கேயே தேங்கி விடுகிறார்கள். கே டீவியில் படம் பார்ப்பார்கள். தினமும் குரூப்பில் ஜெயா டி.வி படத்தின் லிஸ்ட் கேட்பார்கள். அதில் தவறில்லை.
தொடர்ந்த ஆர்வத்தின் காரணமாக சிலர் அட்லீ ரசிகனாக மாறுவதுண்டு.
இங்கேதான் ஒரு படைப்பில் இருக்கும் Reading between the lines, sub text, metaphor, Political Context, Hidden agenda, vijay's inner expectations என்று அனைத்தையும் உணர ஆரம்பிக்கிறோம். ஆனால், இந்த நிலையை அடைய சரியான புரிதலும், ஆழமான தேடலும் தேவை.
இதைப் புரிந்த தனது ரசிகனுடன் படைப்பாளி ரகசியமாக ஒரு விதமான ஆட்டம் ஆடுவார்.
இதெல்லாம் ஹருகி முரகாமி, ஜப்பானிய கைஜூ படங்கள், ஹாலிவுட் ட்வென்டி டாரண்டினோ, மைக்ரோவேவ் ஓவன் வில்சன் படங்களைப் பார்த்தவர்களுக்குத் தான் புரியும்.
ஏதாவது புரிஞ்சிச்சின்னா சொல்லுங்க. நானும் புரிஞ்சிக்கிறேன்.
.

செவ்வாய், 29 ஜூன், 2021

இப்படியும் / எப்படியும் ஏமாத்தலாம்.வெஜிடேரியன் எக் பிரியாணியாம். எப்டிடா?ன்னா கோழிக்கு சைவ டயட் குடுத்து முட்டை போட வச்சானுகளாம். தைரியமா விளம்பரம் தரானுக. அது 599 ஓவா. அதையும் நூறு பேர் வாங்குறான். 

அரை கிலோ மீட்டர் தள்ளி இருக்குற கடையில் 70 ரூபாய்க்கு விக்கிற மாம்பழத்தை "ஆர்கானிக்" னு ஒரு வார்த்தையை சேர்த்து இங்கிட்டு ஒர்த்தன் 100 ரூபாய்க்கு விக்கிறான். அதையும் வரிசைல நின்னு வாங்குறானுக. 

ஆன்லைன் க்ளாஸ் அதிகமானதால - குழந்தைகள் கண்கள் கெடாமல் இருக்க இந்த கண்ணாடி வாங்கிப்போடுங்க - ன்னு 499 ஓவாவுக்கு விக்கிறானுங்க. ஒரு டாக்டர்கிட்ட கேட்டா அது டுபாக்கூர்-ன்றார். அதையும் நூறு பேர் வாங்குறானுக. 

காலையில் வடக்கு பக்கம் நின்னா லட்சுமி என்ன பண்ணும், தெக்கு பக்கமா நின்னா காசு வரும், காசு நிறையா கொட்டணும்னா தலைகீழா நிக்கணும்னு வீடியோ போட்டா அதை மூணு இலட்சம் பார்த்து 30,000 பேர் லைக் போட்றான். நாளைக்கு எப்படி நிக்கணும் குருஜின்னு கேள்வி வேற.

வீட்டிலேயே பிரசவம் பாப்பது எப்படி? ன்னு ஒரு நாள் (ஆமாங்க ஒரே நாள் வொர்க்ஷாப்) க்ளாஸ் எடுக்குறேன்னு ஒர்த்தன் அனவுன்ஸ் பண்ணா அன்னிக்கே ஃபுல் சீட்டும் புக் ஆகுது. 

கொரோனவுக்கு வெளிய வராதன்னா கேக்க மாட்டேன்னு கறிவாங்க வரானுக. ஆனா கிரகணத்தப்போ வெளிய வந்தா எதோ தோஷம்னு சொன்னா மூடிட்டு வீட்ல இருக்கானுக. ரோடு வெறிச்சோடுது. 

திடீர் திடீர்னு புது ஹேண்ட் சானிடைசர் ப்ராண்ட் 250 ரூபாய்க்கு முளைக்குது. கப சுர குடிநீர் 150 ரூபாய்ன்னு பாட்டில் போட்டு விக்குறானுக. அரசாங்கத்துகிட்ட பர்மிஷன் வாங்காம சாதா துணியில டிசைன் டிசைனா மாஸ்க்குன்ற பேருல (அதனுடைய மைக்ரான் அளவு கொரோனாவைத் தடுக்காது) எதையோ தயாரிச்சு விக்குறானுக. 

கைதட்டுனா காந்த ஒலி வரும்றானுக. ரூவா நோட்ல மைக்ரோ சிப் இருக்குன்னா கோடிப் பேர் நம்புறான். (ஆனா இதுக்கு கிரெடிட் பி.ஜே.பிக்கு). ஊருக்குள்ள எதைச் சொன்னாலும் நூறு பேர் நம்புறான். காசைக் கொணாந்து கொட்றான். 

ஆனா அறிவுப் பூர்வமா எதையாவது எடுத்துச் சொன்னா கேக்க மாட்டேன்றானுக. தப்பைத் திருத்திக்கச் சொன்னா சண்டைக்கு வரானுக. ஒவ்வொரு விஷயத்துலயும் காண்டாயிட்ருக்கேன். 

இப்டியே போச்சுன்னா ஒரு நாள் என்னையும் ஏதோ ஒரு சாமியாராகவோ, சாமியாகவோ, - ஏமாறுபவர்களுக்கு ஒரு வாய்ப்புத் தரும் வேற ஏதாகவோ - பார்த்தீர்களானால் ஆச்சரியப் படாதீர்கள். You tube வீடியோ போட்டால் சப்ஸ் செய்து பெல் லை அமுக்கி பாத்து உய்யவும். 

இங்கே ஏமாறுபவர்களுக்குப் பஞ்சமில்லை. These guys are forcing me into the situation. 

BTW, அந்த மொட்டை என்து தான். 

29 ஜூன் 2020 அன்று ஃபேஸ்புக்கில் எழுதியது.