ஞாயிறு, 24 அக்டோபர், 2021

இந்தியத் தொலைக்காட்சிகளில் முதன் முறையாக

"இந்தியத் தொலைக்காட்சிகளில் முதன் முறையாக" - ன்னு சொல்ற மாதிரி "இன்னிக்கு என் வாழ்க்கையிலேயே முதன் முறையாக" ஒரு நல்ல காரியத்தைச் செஞ்சேன். கோவை ரோட்டரியும் - கோவை வாசவி க்ளப்பும் இணைந்து நடத்திய முகாம் ஒன்றுக்காக நண்பர் அழைச்சிருந்தார். நமக்கெல்லாம் இதுபோல ஒரு எக்ஸ்டர்னல் புஷ் தேவைப்படுதில்லையா? சந்தோஷமாப் போய் கொடுத்துட்டுவந்தேன்.

இதுக்கு முன்னாடி ரெண்டு - மூணு முறை சந்தர்ப்பம் அமைஞ்சும் "நான் ரத்தம் தரவா" - ன்னு போனப்போ "நீ அண்டர்வெயிட்டு, ச்சீ ஓடிப்போ" ன்னு பத்தி விட்ருக்காங்க. ஆனா இப்போ கொரோனா புண்ணியத்தில் நல்லா உக்காந்து தின்னு தின்னு வெயிட் போட்டு "க்வாலிஃபை" ஆகிட்டேன் போல. போனதுமே என்னை வெயிட் போட்டுப் பாத்து "இந்தக் கோழி தாங்கும், உள்ள கூட்டிட்டுப்போங்க"ன்னுட்டாங்க.
ஒரு பெரிய்ய ஃபார்ம் ஒன்னு கொடுத்து ஃபில்-அப் பண்ணச் சொன்னாங்க. அதுல "நான் என் சொந்த முடிவில தான் ரத்ததானம் பண்றேன்" னு டிஸ்க்ளெய்மர் உட்பட அதுல ஊருல இருக்குற எல்லா வியாதிகளும் பேரும் வரிஸ்ஸையா போட்டு இருந்தது. இதுக்கு முன்னாடி தெரியாத சில வியாதிகள் கூட இருந்தது. அது எல்லாத்தையும் "ஆம் அல்லது இல்லை" ன்னு டிக்கு போடச்சொன்னாங்க. அதுல நான் "ஆம்" போட்ட ஒரே இடம் - "கடந்த நாலு மணி நேரத்துக்குள்ள எதாவது தின்னியா?" வுக்குத் தான்.
நம்ம ரத்தம் எலிஜிபிலா?-ன்னு பார்க்க ஹீமோக்ளோபின் டெஸ்ட் செய்யணுமாம். ஆனா, பொதுவா, நார்மலா இருக்கிற ஆண்களுக்கு டெஸ்ட் எடுக்கத் தேவையில்லைன்னு சொல்ட்டாங்க. எதுக்கும் இருக்கட்டும்னு எடுத்துப் பாருய்யா... ன்னு சொன்னா கடுப்புல அந்த மனுசன் மோதிரம் போடாத என் மோதிர விரலைப் புடிச்சி நறுக்குன்னு ஒரு ஊசியைச் சொருகி ஒரு சொட்டு ரத்தத்தைப் (அதுவும் நல்லா பெரிய சொட்டு) பிழிஞ்சு ஏதோ ஒரு கெமிக்கல் ரொம்பின ஒரு டம்ப்ளர்ல உட்டாரு. அது நல்ல செவப்பா சொய்ன்னு கீழ போச்சு. “எலிஜிபிள் தான், ரத்தம் எடுக்கலாம்”-னு சொல்ட்டாரு. அந்தக் கெமிக்கல் முறை ஏதோ பழைய முறையாம்.
ஆனா பெண்களுக்கு, பிரசவம் அது இதுன்னு பல விதங்களில் ரத்த இழப்பு வாய்ப்பு இருக்கறதால ஹீமோக்ளோபின் டெஸ்ட் கட்டாயமாம். குட்டியா ஒரு டெஸ்ட் மெஷின் இருந்தது. அதுல எந் தங்கமணி உட்பட பல பெண்களுக்கு டெஸ்ட் பாத்தாங்க. ஹீமோக்ளோபின் லெவல் 12.5 பாயிண்ட் இருக்கணுமாம். ஆனா வந்த பெண்கள் மூன்று, நான்கு பேருக்குமே 11 முதல் 11.4 வரைன்னு குறைவாவே இருந்ததால அவங்களை "உன் ரத்தம்லாம் வேணாம், நீ முதல்ல நல்லாத் தின்னு உடம்பைத் தேத்து" ன்னு பத்தி விட்டுட்டாங்க.




நமக்கு அந்தப் பிரச்சினையில்லை. உள்ள போனா, பெட்ல படுக்க வச்சி, கையில் டைட்டா ஒரு கட்டு கட்டி, அப்டியே நாலு தட்டு தட்டி, தனுஷ் கை நாக்குப்பூச்சி மாதிரி என் நாடி நரம்பையெல்லாம் எழுப்பி அதுல நல்லதா ஒன்னைச் சூஸ் பண்ணி, நல்ல கனத்த ஊசி ஒன்னை அழுத்திச் சொருகி அந்த ப்ளட் பாக்கெட்டில் போட்டு விட்டாங்க. கையில ஒரு ஸாஃப்ட் பால் கொடுத்து "அமுக்கு ராசா"ன்னாங்கள்.
அத ஒரு பத்து தபா அமுக்குறதுக்குள்ள, சரசரன்னு ஏழெட்டு நிமிஷத்தில ஃபுல் பாக்கெட் நொம்பிருச்சி. அதை ஒரு மெஷினோட கனெக்ட் செஞ்சிருந்தாங்க. அது வேலை முடிஞ்சதும் சிம்பு மாதிரி "பீப், பீப்" னு கத்திச்சு. ரொம்பின பாக்கெட்டை உத்துப் பார்த்தா அது கருஞ்சிவப்புக் கலர்ல, பார்க்கக் கொஞ்சம் பயமாத்தான் இருந்தது. இருந்தாலும் அதை நர்ஸக்கா எடுத்துட்டுப் போகும் போது "குஷி" ஜோதிகாவோட ப்ளட் பாக்கெட்டை க்ளோஸப்ல காட்டி எஸ்.ஜே.சூர்யா பேசுற வாய்ஸ் ஓவர் என் காதுல ரொம்பத் தெளிவாக் கேட்டுது.
ரத்தம் குடுத்து முடிச்சதும் கொஞ்சம் கிர்ருன்னு வந்துது. ஒரு யூனிட் ரத்தத்தை எட்டே நிமிஷத்துல எடுத்தா பின்ன? "அப்படித்தான் இருக்கும், கொஞ்சம் இருங்க"ன்னு அந்த ஆட்டோமேடிக் பெட்-டை தலை-கீழா கால் மேலா திருப்பி வச்சி விட்டார், "இப்ப தலைக்கு ரத்தம் பாயும், 5 நிமிஷத்துல சரியாகிடும்"னு சொன்னாரு. சோலி முடிஞ்சதும் "கொஞ்ச நேரம் போய் உட்காருங்க. நிக்கக்கூடாது, நின்னா மயக்கம் வரும்"ன்னு சொல்லி வெளிய அனுப்பினாரு.
வெளிய வந்ததும் அங்கேயே ரெண்டு டெட்ரா பேக் மேங்கோ ஜூஸ் குடுத்தாய்ங்கள். குடிச்சுப்புட்டுக் கொஞ்ச நேரம் உக்காந்திருந்தேன். கூட வந்தவுங்கள்ல சிலர், போன முறை இவர் சொன்ன அட்வைஸையும் கேட்காம, சூஸையும் குடிக்காம பார்க்கிங்ல போய் தலைசுத்தின கதையையும், அப்டியே கைத்தாங்கலா டீக்கடைக்குப் பொத்துனாப்ல போய் பன்னு வாங்கித் தின்ன கதையையும் சொன்னதைக் கேட்டு "அப்பா" பட நாராயணன் மாதிரி "நமக்கு எதுக்குடா கார்த்திகேயா வம்பு"ன்னு கம்ன்னு அங்கயே உக்காந்துட்டேன்.
மறுபடி அவர்ட்ட போய், "நாங்குடுத்த அதே அளவு ரத்தம் எனக்கு மறுபடி எப்ப ஊறும்?" னு கேட்டேன். "24 மணிநேரத்துல ஊறிடும்"னாரு. அப்போ "நாளான்னிக்கு ரத்தம் குடுக்கச் சொல்லி மறுபடி கூப்டுவாங்களா? ஒருநாள் விட்டு ஒருநாள் ரத்தம் குடுத்தா உடம்பு தாங்குமா?" ன்னு டவுட்டோடவே வெளிய வந்தப்போ, அனுபவசாலி ஒர்த்தர் கூப்ட்டு "பாஸூ, அவங்கெடக்கான், ரத்தத்துக்கு ஈக்வலா லிக்விட் மட்டும் தான் 24 மணிநேரத்துல ஊறும். ஆனா சரியான அளவு ப்ளேட்லெட்ஸ் வளர 3 மாசம் ஆவும்"ன்னாரு. நீங்க மறுபடி 3 - 4 மாசம் கழிச்சித்தான் ரத்தம் கொடுக்க முடியும் னாரு. "அப்பச்சரி, அப்பச்சரி" ன்னு கெளம்பிட்டேன்.
இந்தக் கூத்துக்கு நடுப்புற தங்கமணியும் பசங்களும் நான் ஏதோ உலக சாதனை செஞ்சா மாதிரி உள்ளே வந்து எட்டி எட்டிப் பார்த்துட்டும், போட்டோ எடுத்திட்டும், ஆளுக்கொரு ஜூஸைக்குடிச்சிகிட்டும் இருந்தாங்க. நானும் கக்கூஸ் கண்ணாடியில போய்ப்பார்த்தேன். "எதையோ சாதிச்ச திருப்தி அவன் முகத்துல" ன்னு சந்திரமுகியில சொல்ற மாதிரி தான் இருந்தது மூஞ்சி.
இப்படிக்கி
- ரத்த வழங்கி எசுக்கா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக