புதன், 30 ஜூன், 2010

தடியெடுத்தவன் எல்லாம் தாணாக்காரன்

யார் என்று கேட்கிறீர்களா? தாணாக்காரன் என்று அக்காலத்திலும், தற்போது செல்லமாக மாமா என்றும் அழைக்கப்படும் போலீஸ்காரர்கள்தான் அவர்கள். சமீபத்தில் நண்பர் ஒருவருடன் டூ வீலரில் போகும்போது ரேஷ் டிரைவிங், ஓவர் ஸ்பீடு என்று போலீஸ் பிடித்தது. ஆனால் சாதாரண காக்கி யூனிபார்ஃம். இதில் சிவில், கிரிமினல் மற்றும் டிராஃபிக் போலீஸ் என்ற பிரிவுகள் வேறு. அது மட்டுமில்லை. யார் எந்த டூட்டி பார்க்கிறார்கள் என்று சாதாரண குடிமகனுக்குக் குழப்பமாக இருக்கிறது.

அய்யா லைசென்ஸ் இருக்கா என்றால் காமிக்கலாம். ஆர்.சி இருக்கிறதா என்றால் நிரூபிக்கலாம். ரேஷ் டிரைவிங், ஓவர் ஸ்பீடு என்று சொன்னால் ஒரு சாதாரண குடிமகன் எப்படி அய்யா பொய்யென்று நிரூபிப்பான்? ரெண்டு நாள் ஸ்டேஷனுக்கும் கோர்ட்டுக்கும் அலைவதை விட காசைக் கொடுத்துத் தொலையலாமே என்று தான் தோன்றியிருக்கிறது நண்பருக்கு. அதையும் ரகசியமாகக் கேட்டிருக்கிறார். இது வழக்கம்தான். ஆனால் என்னவோ தெரியவில்லை. நம்ம போலீஸ் அய்யாவுக்கு கடமை உணர்ச்சி தடுத்து விட்டது. வேண்டாம் என்று சொல்லிவிட்டார்.

என்னடாவென்று பார்த்தால் மெள்ளக் குனிந்தபடி "இன்ஸ்பெக்டர் இருக்காருப்பா. அதான் வேற வழியில்லாம கேஸ் பிடிக்கிறோம். எழுதியாச்சு. கம்முன்னு போயிடுங்க. நாளைக்குக் கோர்ட்டுக்கு வந்து ஃபைன் கட்டி லைசென்ஸை திருப்பி வாங்கிக்கோங்க" என்றபடி வாங்கி உள்ளே போட்டுவிட்டார். முடிந்தது கதை. (நல்லவேளை. இன்று வரை என்னிடம் லைசென்ஸூம் இல்லை. வண்டியும் இல்லை. ஓட்டவும் தெரியாது. இருந்தாலும் கற்றுக்கொள்ளும் ஐடியா இல்லை. எங்க மாமாவோட பாலிஸிதான். மனுஷன் அறுவது வயசாகப்போவுது. இன்னமும் சைக்கிள் கூட ஓட்ட மாட்டேங்கிறார்.)

லைசென்ஸை வாங்க பத்து நாட்கள் அலைந்தும் முடியவில்லை. கோர்ட்டுக்குப் போனால் போலீஸ் ஸ்டேஷன் போ என்று பதில். ஸ்டேஷனுக்குப் போனால் அங்கேயிருக்கும் பொம்பளை போலீஸ்காரம்மா ஜெராக்ஸ் எடுத்து வரச் சொல்கிறார். ஒரு குயர் ரூல்டு பேப்பர், டீ, காபி, வடை வகையறாக்கள் சப்ளை தனி. என்ன செய்வது? இதையெல்லாம் பொறுத்துக்கொண்டு போக சாதாரண குடிமகனுக்கு பொறுமை இருக்க வேண்டும். பொறுமை கடலினும் பெரிது (எருமை அதனினும் பெரிதாமே).

லேசாக முகம் சுளித்தாலே போதும். தினமும் ஸ்டேஷனுக்கு வந்தாக வேண்டும். வரவழைக்கப்பட்டு நம் மனஉறுதியை அடித்து நொறுக்குகிறார்கள். கிட்டத்தட்ட ‘அஞ்சாதே’ படத்தில் போலீஸான நரேனுக்கு நேரும் சில அனுபவங்கள் சாதாரணனான நம்மை எதிர்கொள்கின்றன. மூன்று நாட்கள் ஒரு போலீஸ் ஸ்டேஷனில் இருந்து பாருங்களேன். அங்கு நடக்கும் சம்பவங்கள், அலட்சியங்கள், பிரச்சினைகள் உங்களை பதப்படுத்தி விடும்.

சென்னையில் பணிபுரிந்தபோது இரு வருடங்களுக்கு முன் இதேபோல் ஒரு சம்பவம். -------வாக்கம் என்ற ஒரு ஏரியா போலீஸ் ஸ்டேஷன். சாதாரண பாஸ்போர்ட் அட்ரஸ் வெரிஃபிகேஷனுக்கு வீட்டுக்கு வந்த போலீஸ்காரர்கள் வீட்டில் ஆள் இல்லாததால் ஆளைப் பார்க்க வேண்டும், ஸ்டேஷனுக்கு வரச்சொல்லுங்க என்று சொல்லிப்போய்விட்டார்கள். பாஸ்போர்ட் விஷயம் ஒரு மணி நேரத்தில் முடித்து விடலாம் என்று ஸ்டேஷனுக்குப் போனால் ஸ்டேஷனில் மூன்று முழு நாட்கள். இரவு முழுக்க ஆபீஸ், பகல் முழுக்க இங்கே, மறுபடி இரவு ஆபீஸ், மீண்டும் பகல் முழுக்க இங்கே என்று போனது பொழுது.

மூன்றாவது நாள்தான் ஆய்வாளர் (இன்ஸ்பெக்டர்) கண்ணிலேயே பட்டார். ஆனால் அதற்குள் ஸ்டேஷனில் நடந்த விஷயங்கள், வெட்டு, குத்து கேஸுகள், பஞ்சாயத்துகளை எல்லாம் பார்த்து மனதில் இருந்த கொஞ்ச நஞ்ச தைரியமும் போய்விட்டது. ஓரமாய் மர பெஞ்சில் உட்கார வைத்து வருகிற போகிற எல்லா போலீஸாரும் என்னய்யா என்ன விஷயம் என்று கேட்டால் எழுந்து எழுந்து பதில் சொல்லி, தேவையே இல்லாமல் அவர்கள் முறைப்பை எல்லாம் வாங்கிக்கொண்டு..... மூன்றாவது நாள்தான் அந்தப் பேப்பரக் கொண்டாய்யா என்று கையெழுத்துப் போட்டார் ஆய்வாளர்.

அப்படியும் அவரது அடிப்பொடிகள் இருநூறு ரூபாய் பிடரியைச் சொரிந்தபடி வாங்கி விட்டுத்தான் விட்டார்கள். மூன்று நாள் பழக்கத்தில் ஏட்டைய்யா (அப்படித்தான் கூப்பிட வேண்டுமாம்) விடம் கேட்டால், என்ன தம்பி பண்றது? ஒரு ஸ்டேஷன் நடத்த (?) மாசத்துக்கு குறைஞ்சது பத்தாயிரத்துல இருந்து இருவதாயிரம் ரூபாயாவது செலவாகுது. அதுக்கு எங்க போறது? இப்படி எல்லாம் கொஞ்சம் கொஞ்சம் வசூல் பண்ணிக்கறது தான், என்று நியாயப்படுத்துகிறார் அந்த அப்பாவி (?) போலீஸ்மேன்.

மதுரையிலோ எங்கோ இருந்தபடியே தன் துறை பற்றியெல்லாம் ப்ளாக் எழுதுகிறாரே ஒரு போலீஸ் அண்ணாச்சி, நல்ல மனுசன் பாவம். அவர் இதைப் படித்தால் கொஞ்சம் கண்டுகொள்ளச் சொல்லுங்கள், அட்லீஸ்ட் கருத்தாவது சொல்லச் சொல்லுங்களேன். கம்ப்யூட்டர், லேப்டாப் என்றால் என்னவென்று கூட இவர்களுக்குத் தெரியவில்லை. தப்பாய்ச் சொல்லவில்லை. அவர்களின் ஆபீஸ் அட்மாஸ்பியரில்(?) அதையெல்லாம் கற்றுக்கொள்ளும் நேரம் அவர்களுக்கில்லை.

சமீபத்தில் வழக்கம் போல் பழைய புத்தகக் கடையில் நோண்டும்போது பலான செக்ஸ் டாக்டர் பிரகாஷ் எழுதிய ஒரு புத்தகம் கிடைத்தது. (பலான புத்தகம் அல்ல). சிறையென்னும் போதி மரத்தடியில் தான் பெற்ற பாடங்களையும், கூட இருப்பவர்களின் கதைகளையும் எழுதியிருக்கிறார் இந்த நவீன புத்தன் ஆகிய பெண் பித்தன். கிட்டத்தட்ட இருபது விதமான கதைகள். ஆனால் ஒவ்வொன்றும் நாம் தினசரி நியூஸ் பேப்பர்களில் படித்த முக்கிய கேஸ்களின் அதிர்ச்சியூட்டும் மறுபக்கங்களின் விஷயங்கள்.

நாம் பேப்பரில் அந்தக் கேஸ்கள் பற்றிப் படிப்பவை எல்லாம் புனையப்பட்ட கதைகள். பிரகாஷ் சொல்லும் அவற்றின் மறு பக்கங்கள் பகீரென்று இருக்கின்றன. டிராபிக்கில் சிக்னல் மீறி, கப்பம் கட்ட மறுத்து 15 நாள் ரிமாண்டில் உள்ளே வந்து வாழ்க்கையே மாறிப்போனவன் கதையெல்லாம் படிக்கும்போது போலீஸைப் பார்த்தாலே வணக்கம் சொல்லி விட்டுப் பேசாமல் ஒதுங்கிப் போகத்தான் தோன்றுகிறது.

இந்த இடத்தில் இன்னொன்றையும் சொல்லியே ஆக வேண்டும். தமிழ்ப் படத்தின் அபத்தக் களஞ்சியங்கள் அதன் ஹீரோக்களின் திருவிளையாடல்கள். நமது விசிலடிச்சான் குஞ்சுகள் சீனுக்கு சீன் விசிலடித்துப் பார்க்க உதவும் ஓட்டை லாஜிக் விஷயங்கள் நிறைய. திரைப் படங்களில் போலீஸுக்கு முன்னால் எதிரே தைரியமாக நின்று தூசு பறக்க தொடை தட்டி வசனம் பேசும் ஓமக்குச்சி ஹீரோவைப்பார்த்து விட்டுப் போய் போலீஸிடம் உங்கள் வாலை, இல்லையில்லை, அட் லீஸ்ட் வாயைக் காட்டிவிடாதீர்கள். அப்படி எல்லாம் செய்து விட்டு, படம் முழுக்க சுற்றிக் கொண்டிருக்கும் ஹீரோ போல் செய்ய முயற்சித்தால் முடிந்தது. சிம்பிளாக ஒரே ஒரு கஞ்சா கேஸ். தூக்கி உள்ளே வைத்து விடுவார்கள். முடித்து வெளிவருவதற்குள் உங்கள் வாழ்க்கையே மாறியிருக்கும்.

உங்களில் பலருக்கும் தெரிந்திருக்கும். வக்கத்தவனுக்கு வாத்தியார் வேலை, போக்கத்தவனுக்கு போலீஸ் வேலை (உண்மையில் அது, வாக்கு கற்றவனுக்கு வாத்தியார் வேலை, திருடனின் போக்கு கற்றவனுக்கு போலீஸ் வேலை) என்ற சொலவடை இன்னும் புழங்கி வருகிறது. ஊரில் சண்டித்தனம் செய்து சுற்றித் திரியும் இளவட்டங்கள் எல்லாம் கான்ஸ்டபிள் வேலைக்கும் பி.சி. வேலைக்கும் இன்டர்வியூவுக்கு அனுப்பப்படுகிறார்கள். ‘அஞ்சாதே’ மீண்டும் உதாரணத்துக்கு. அவர்கள் எதிர்கொள்ளும் ஆரம்பகால விஷயங்கள் அவர்களது போலீஸ் கேரியரை பில்ட் செய்வதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. சரியாக ஷேப் செய்யப்படாத கேரியர் கொண்ட சிலரிடம் மாட்டிக்கொள்வது நம் போன்ற பொதுஜனம்தான்.

பெருமாள் சாமியை தமிழில் "பெருமல் சமி" என்று பேங்க் சலானில் இட்டு நிரப்புகிறார் இருபத்தைந்து வருடம் சர்வீஸ் போட்ட ஒரு போலீஸ்காரர் என்று புலம்புகிறார் ஒரு வாரமலர் வாசகர். தான் ஒரு சிறு ஆக்ஸிடென்ட் கேஸுக்காக அலையும் போது அந்த ஏரியாவில் எந்த போலீஸ் ஸ்டேஷனிலும் இன்னும் கம்ப்யூட்டர் எட்டிப்பார்க்கவில்லை என்று ‘விகட’னில் தொடர் எழுதுகிறார் அன்டன் பிரகாஷ் என்ற ஒரு கட்டுரையாளர். இரயில்வே ஸ்டேஷனில் பிச்சைக்காரர் பையில் இருந்து காசு எடுத்து ரயில்வே ஊழியர்களிடம் அடிவாங்கிய போலீஸ்காரர் கதையைச் சொல்லிச் சொல்லி சிரிக்கிறது ஒரு தினசரி நாளிதழ். லேப்டாப், ஐபாட் என்றால் என்ன என்று கேட்கும் நிலைமையில் தான் போலீஸ்காரர்களின் டெக்னிகல் அறிவு இருக்கிறது என்று புள்ளி விவரம் காண்பிக்கிறது ஒரு இணைய இதழ்.

எத்தனை திரைப் படங்கள் எடுத்தாலும், எத்தனை மனித உரிமை மீறல் கேஸ்கள் போட்டாலும், என்கவுன்டரும், கஞ்சா கேஸும் போட்டு உள்ளே அனுப்பி கணக்கை முடிக்கும் மக்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். ஆனால் சிரிப்பு போலீஸாய் வடிவேலுகளும், விவேக்குகளும் வேஷம் போட்டுக் கலாய்க்கும் நிலையில்தான் இன்றைய கடைநிலை போலீஸும் இருக்கிறது. காவல்துறை உங்கள் நண்பன் என்று ஃபிளக்ஸ் போர்டு போட்டு வரவேற்றுக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால் சாதாரண பாமர ஜனங்கள் ஐயா என்று கூப்பிட வேண்டும், சார் என்று கூப்பிடக் கூடாது என்பதெல்லாம் கண்டிஷன்கள் - அவர்களுக்குள் மட்டுமல்ல, பொதுமக்களுக்கும் கூட.

அரசியல் கட்சி ஸ்பெஷல் மீட்டிங் போட்ட இடத்தில் மசால் பஜ்ஜிக்கு பையில் இருந்து சில்லறை கொடுத்துவிட்டுப் புலம்பியபடியே ஸ்பெஷல் டூட்டி பார்க்கும் அப்பாவி போலீஸ்களும், பழைய பெரிய சைஸ் கேரியர் வைத்த சைக்கிளில் நீளமான மூங்கில் குச்சியைக் குத்தி வைத்து ரோந்து போகும் போலீஸ்களும், கேஸ் கொடுத்து விட்டு சோகமாய்ச் செல்லும் பெண்மணியிடம் ஆறுதலாய்ச் சில வார்த்தைகள் பேசி அனுப்பும் போலீஸ்களும், ஸ்பெஷல் டூட்டியைக் கோவில் டூட்டியாயக் கேட்டு வாங்கி கோயிலைச் சுற்றிச் சுற்றி வரும் போலீஸ்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

ஆனால் எனக்கு இன்னும் பயம் போகவில்லை.

-------
-----------------------------------------------------

படிச்சாச்சா.........?

அப்புறம்... இன்ட்லி லோகோ இருக்கா பக்கத்துல....?

தமிழ்மணம் லோகோ இருக்கா மேல....?

புடிச்சிருந்தா ஓட்டுப்போடுங்க...

புடிக்கலன்னாலும் ஓட்டுப்போடுங்க...
--------------------------------------

ஞாயிறு, 27 ஜூன், 2010

திருக்கருகாவூர், திருநள்ளார் மற்றும் சனிப்பெயர்ச்சி...

-எஸ்கா

சினிமா பட பேர் மாதிரியே இருக்குல்ல? ரொம்ப முக்கியம். யோவ் அதை விடுங்கய்யா, கதைக்குப் போவோம்..


கோயிலுக்கா?. சீச்சி.. தூத்தூ.. பேப்பே.. நான் வரல.. அந்த நேரத்துக்கு மல்லாக்கப் படுத்துகிட்டு மைண்டை ஃப்ரீ பண்ணி ரெஸ்ட் எடுத்தா எவ்ளோ சொகமா இருக்கும்னு சொல்ற ஆளு நானு. கூப்புடுற ஆளு நம்ம கிட்ட பதில் பேச முடியாது. எங்கெங்கயோ நாத்திகம் பத்தியும், பெரியாரைப் பத்தியும் பிட்டு பிட்டா படிச்சதையெல்லாம் அப்போதான் எடுத்து உடுவோம். சனியனே போய்த் தொலைன்னு விட்டுடுவாங்க. ஆனா அவங்ககிட்டயே என்னைய மாட்டி உட்றா மாதிரி சனிப்பெயர்ச்சி வந்துதய்யா வசதியா. அதாவது நம்ம ராசிக்கு சனி பகவானோட பலன் சரியில்லையாம். பரிகாரம் பண்ணணுமாம்.


ஏழரைச் சனி எட்டிப்பார்க்கும். அஷ்டமச் சனி ஆட்டிப் பாக்கும்னு வீட்ல எவனோ கொளுத்திப் போட்டுட்டான். சனிப்பெயர்ச்சிக்கு ப்ரீதி (பரிகாரமாம்) பண்ணியே ஆகணும்னு ஒரே அடம் வீட்டுல. டார்ச்சர் தாங்காம தலையைச் சொறிஞ்சு கிட்டே போய் ராமகிருஷ்ணன் சார் கிட்ட "சார், மண்டே ஒருநாள் லீவு". அவுரு "ஏன் கார்த்திக் சாட்டர்டே வேற லீவு வருதுல்ல", நாம "ஆமாம், சார், அதையும் சேர்த்தா மூணு நாளு லீவு. சனிப்பெயர்ச்சி வருது அதான் நம்ம ராசிக்கு (நம்ம வாயிக்கு) ஏற்கனவே ஏழரை சனி ஊடு கட்டி அடிக்குறான். இதுல அஷ்டமச் சனி வேறயாம். வீட்ல திருநள்ளாறு போலாம்கிறாங்கன்னேன்".


யோசிச்சாரு. இங்க இத்தனாம் தேதி டிரெயினிங். அங்க அத்தனாம் தேதி டிரெயினிங்குன்னு கொஞ்சம் பீதியக் கெளப்புனாரு. அப்புறம் “நோ இஷ்ஷூஸ். யூ கோ அஹெட்” அப்டின்னாரு. யப்பா எஸ்கேப்புன்னு கெளம்பிருக்க வேண்டியது. ஆனா சந்தோஷமா வெளிய வரும் போது திடீர்னு விக்ரம் வந்தாருய்யா. அவரு ஒரு சீனியர் மேனேஜரு.


"கார்த்திக் நாளைக்கு அண்ணா நகர் பிராஞ்சுல நாம எல்லாரும் மீட் பண்றோம். வி ஆர் கோயிங் டு ப்ரிப்பேர் மெட்டீரியல்ஸ் ஃபார் டிரெய்னிங்" அப்டின்னாரு. கார்ப்பரேட் பாஷைல சொன்னா "ங்கொய்யால, நீ ப்ரிப்பேர் பண்றே மவனே! உன்னை நொங்கெடுத்து நொட்டை சொல்ற வேலை மட்டும் எங்கள்து, நான் சைட்ல உக்காந்திருப்பேன்னு அர்த்தம். பகீர்னு ஆகிப்போச்சு. அப்புறம் பாலா மேம்கிட்ட போன் பண்ணி விக்ரம் கிட்ட கொஞ்சம் சொல்லுங்கன்னு சிபாரிசு லெட்டர் வாங்கி பெனிஃபிட் ஆஃப் டவுட்டுல லீவை வாங்க வேண்டியதாப் போச்சு.


எனக்கு ஏற்கனவே மனசுல – வாங்குற சம்பளமே கம்மி. இருக்குற மார்க்கெட் க்ராஷூக்கு இன்க்ரிமெண்ட் வேற வருமான்னு தெரியல. சும்மாவே சனிய எதும் சொல்ல முடியாது. இதுல நமக்கு வீட்டு ஓனரே அந்தாளுதான். அதான்பா ராசி அதிபதி. ஆனா என்னமோ பரிகாரம் பண்ணினா புதன் ஊட்ல போய் உக்காந்துகினு நம்மள ஓரக்கண்ணால பாப்பாருன்னாங்க. அப்படியே கோயிலுக்குப் போய் நெய் தீபம் போட்டுட்டு வந்தா நெய் மெதப்புல மதமதன்னு கொஞ்சம் கண்ணசருவாரு. நாம எஸ்ஸாயிடலாம்னு சொன்னாங்க. ரைட்டு ஓக்கே வரேன்னாச்சு.


நான் தனி ஆளு தான், ஆனா தனி ஆளு இல்ல.. (நாட்ல எவனெவன் பஞ்ச் டயலாக் பேசறதுன்னே இல்ல - இல்லலல?) அதான் அப்பிடியே திருநள்ளாறு சனி, சூரியனார் கோயில், சுவாமி மலை, முடிஞ்சா கும்பகோணம் சுத்தி இருக்குற நவக்கிரக கோயிலுக்கெல்லாம் ஒரு விஸிட் போயிட்டு வரலாம்னு திடீர் பிளான். ஒரு பில்கிரிமேஜ் மாதிரி. நான் இப்போ கும்பகோணம் போகணும், தனியா. (அதைத்தானுங்க பஞ்ச் டயலாக் மாதிரி சொன்னேன்) அங்கருந்து கோவிலுக்கு.


என் பாசமலர் ஏற்கனவே கெளம்பிட்டா கோயமுத்தூர்ல இருந்து கும்பகோணத்துக்கு. நாலு நாள் முன்னாடி அதுக்கு என்னா கூத்துன்றீங்க. ஸ்டேஷன்ல போய் கியூவுல நின்னு டிக்கெட் வாங்க முடியாதாம் அவளுக்கு. கோயமுத்தூர்ல இருந்து கும்பகோணம் போறதுக்கு மக்களே மெட்ராஸ்ல இருந்து ஆன்லைன்ல புக்கிங் பண்ணணுமாம். சரியே (விதியே)ன்னு நானும் பண்ணியாச்சு. சனிக்கிழமை காலைல கெளம்பி மதியம் போறா மாதிரி ஜன சதாப்தில டிக்கெட் போட்டாச்சு.


நாங்க இங்க இருந்து ஆன்லைன் ஃபண்ட் டிரான்ஸ்ஃபர்ல டிக்கெட் புக் பண்ணுவோமாம். அதை பாவாவோட தம்பிக்கு மெயில் பண்ணுவோமாம். அவரு ஆபீஸூல பிரிண்ட் எடுப்பாராம். பாவாகிட்ட கொண்டு போயி குடுப்பாராம். அவரு கொண்டு போய் மேடத்துகிட்ட குடுப்பாங்களாம். மகாராணி நோகாம நோம்பு கும்பிடுவாங்களாம். எப்படி இருக்கு பாருங்க கதை. கேட்டா டெக்னாலஜி ஹேஸ் இம்ப்ரூவ்டு-ங்கிறா...


ஆனா நாங்க மட்டும் லொங்கு லொங்குன்னு ஆபீஸூல வேலையை முடிச்சுட்டு கெடைக்கிற பஸ்ஸைப் புடிச்சு நைட்டு தூக்கம் கெட்டு வந்து மெட்ராஸூல இருந்து கும்பகோணம் வந்து சேரணுமாம். 200 ரூபா பஸ்ஸூ டிக்கெட்டு. உள்ள கந்தசாமி ஓடுது. அதக்குடுத்து மறுபடி கந்தசாமி பாத்துத்தொலையணுமான்னு (ஏற்கனவே மாயாஜால்ல மேனஜர் ட்ரீட்ல பாத்தாச்சு) யோசிச்சேன். தனியாத்தான போறோம். ஏன் எறநூறு குடுத்துப்போவானேன். கொஞ்சம் வெயிட் பண்லாம். கொஞ்ச நேரத்துல நூத்தைம்பது ரூவா நூத்தைம்பது ரூவான்னு வந்தான் ஒருத்தன்.


சரின்னு ஏறிட்டேன். ஆனா கந்தசாமியே பரவாயில்லைன்னு சொல்றா மாதிரி ஆகிப்போச்சு நிலைமை. இதுல ராஜாதி ராஜா. காதுல, கண்ல கம்பி உட்டுக் காய்ச்சின மாதிரி ஆகிப்போச்சு. ஒவ்வொரு டயலாக்குமே பஞ்ச் டயலாக் மாதிரி இருக்கு. விஷ்ஷூ விஷ்ஷூன்னு ரீ ரிக்கார்டிங் வேற. சீட்ட விட்டு எந்திரிக் முடியலை. எப்படிப் போக முடியும்? இருக்கறது பஸ்ஸூலயாச்சே. சவுண்டைக் கூட குறைக்காம முழுப்படமும் பாக்க வச்சாரு கண்டக்டரண்ணன்.


அந்து அவலாகி, நொந்து நூலாகி, வெந்து வீணாகி அங்க போய் இறங்குனா படை பரிவாரத்தோட மேடம் ரெடியா நிக்குறாங்க. எந்தங்கச்சி, அவ புருஷன், எங்கண்ணன், அவன் பொண்டாட்டி, அதாவது அண்ணி, அவுங்க பையன்னு சொல்லி ஒரு கும்பலே மேக்கப் போட்டுகிட்டு ரெடியாயிட்டு இருக்கு. யோவ் என்னய்யா இது? எனக்குத்தான பரிகாரம். நீங்க என்ன பண்றீங்கன்னா "நாங்களும் வரோம், குடும்பத்தோட கோயிலுக்குப் போனா புண்ணிந்தான...." -னு எம்டன் மகன் டயலாக் வேற.


எங்கக்காளுக்கு சில மாசங்களுக்கு முன்னால தான் கல்யாணம் ஆச்சி. எதெதுக்கோ கோயிலுக்குப் போறோம் (எனக்கு சனிப் பெயர்ச்சி பரிகாரம் பண்றதுதான் எதெதுக்கோ) அப்படியே இதுக்கும் (கும்பகோணம் பக்கத்துல திருக்கருகாவூர்) போயிட்டு வந்துருவோம்னு சொன்னாங்க. ஆஹா, இப்ப புரியுதா மாஸ்டர் பிளான். திருநள்ளாறா? திருக்கருகாவூரா? எது மேஜர் லொக்கேஷன்னு தெரியுதா? திருக்கருகாவூர் போனா தம்பதிகளுக்கு நல்லதாமே. சீக்கிரம் குழந்தை பாக்கியம் கிடைக்குமாமேன்னு ஒரு பிட்டு.


சரி, ஆனது ஆயிப்போச்சு, போகலாம்னு சொல்லி கோயிலுக்கும் போயாச்சு. முதல்ல திருநள்ளார். ஆனா அங்க போன கதையெல்லாம் வெளாவாரியா சொல்லிகிட்டு இருக்க முடியாது. புளிமூட்டை பஸ்ஸூல போனது, ஸ்பெஷல் தரிசனத்துக்கு காசு தரமாட்டேன்னு சொல்லி அனுமார் வால் கியூவுல எரியுற வெளக்கை கைல புடிச்சிகிட்டே மூணு மணி நேரம் நின்னது, செருப்பு விடுற இடத்துல பிரச்சினை பண்ணினது, அழுக்குத் தண்ணி குளத்துல குளிச்சது, அங்க என் ஜட்டி மிஸ்ஸானது, குளத்துல பழைய டிரஸ்ஸை விடப்போயி கால் ஸ்லிப்பாயி என் ஆதாரத்துக்கே சேதாரமானது, பிரசாதம் வாங்கப்போயி பிரச்சினை ஆனது, பூஜைக்குக் குடுத்த தேங்காய் அழுகியிருந்தது, பிரகாரம் சுத்தி வர்றதுக்குள்ள அம்மன் சன்னிதி க்ளோஸ் ஆனது, திரும்பி வர்றப்ப பஸ்ஸூல சீட்டு கிடைக்காம என் பாச மலரை மடியில உட்கார வச்சிகிட்டு வந்தது (நான் நாப்பத்தேழு, அவ அறுபது கிலோ), ஆட்டோ ஃபேர் மட்டுமே ஐநூறு ரூபாய் அழுததுன்னு சொல்லிகிட்டே போனா ஏ ஃபோர்ல ஏழு பேஜூ வரும், பரவாயில்லையா?


இதையெல்லாம் முடிச்சிட்டு வீடு போய்ச் சேர்ந்துட்டு மறுநாள் மறுபடியும் திருக்கருகாவூர். அங்கயும் எல்லா எடமும் போயி, எல்லா பார்மாலிட்டி பூஜையும் பண்ணி நல்லபடியா கோயில், குளம், ஆறு எல்லாம் சுத்திட்டு வந்தோமய்யா.. நல்ல வேளை அங்க எனக்கு அதிக தலைவலி இல்லை. கேஷ் ட்ரான்ஸாக்ஷன் மட்டும் தான் நான். மத்ததையெல்லாம் பாவா பாத்துகிட்டாரு. ஆனாலும் ஒரே அலைச்சல். வீட்டுக்கு வந்ததும் என்னோட புலம்பல்ஸை கேட்டுட்டு "கவலைப்படாதடா, நல்ல விஷயத்துக்ககாகதானே கோயிலுக்குப் போனீங்க. பலன் சீக்கிரமே தெரியும்"னு பெரியம்மா அட்வைஸூ வேற.


க்ளைமாக்ஸ்: ஆனாலும் கோயிலுக்குப் போயிட்டு வந்தா அதுக்கான பலன் இவ்ளோ சீக்கிரம் கிடைக்கும்னு சத்தியமா எதிர்பார்க்கலை. அரசமரத்தை சுத்திட்டு உடனே வயித்தை தடவிப் பார்க்குற மாதிரின்னு ஒரு கதை சொல்லுவாங்க. வீட்டுக்கு வந்த ரெண்டு மணி நேரத்துல மூச்சப் புடிச்சிகிட்டு பாத்ரூம் போனவன்தான்யா எங்கண்ணன். சரி சரி எங்கண்ணர்ர்ர்ர்ர்.......... ஓக்கே? வயித்தப் புடிச்சிகிட்டு எடுக்குறான்யா அப்பிடி ஒரு வாந்தி. என்னப்பா ஆச்சுன்னு அவம்பையன் கேட்க நானு "உங்கப்பனுக்கு பாப்பா பொறக்கப்போகுதுடா குட்டி, தங்கச்சி வேணுமா, தம்பி வேணுமா"ன்னு கொளுத்திப்போட்டேன். கத இங்க இப்படி ஒரு டிவிஸ்ட் ஆகும்னு நான் எதிர்பார்க்கலை. ஆக மொத்தம் சுபம். முடிஞ்சு போச்சி.


நன்றி, வணக்கம். ----------


இன்னோரு காமெடி கலக்காத க்ளைமாக்ஸ்: கோயிலுக்குப்போயிட்டு வந்த பலனோ என்னவோ எதிர்பார்த்த பலனும் கிடைச்சாச்சு. அவளுக்கு இப்போ அஞ்சு மாசம். பஞ்ச தந்திரத்துல தேவயானி சொல்ற மாதிரி "ஹே, ராம். என்னடா செஞ்சே. எனக்கு வாந்தி வாந்தியா வருது" ன்னு காமெடி பண்ணிகிட்டு இருக்கா.. (மச்சான் பேரு ராம்) . ஓக்கேவா?


இன்னோரு டெரர் க்ளைமாக்ஸ்: அதெல்லாம் சரி. இவ்ளோ பில்டப்பு குடுத்துகிட்டே போனியே, உனக்கு என்னாச்சுங்கறீங்களா? நமக்கு நல்லது நடந்துட்டா தான் உலகம் அழிஞ்சுடுமே.. நமக்குத்தான் எப்பயுமே பாலா பட கிளைமாக்ஸ்தான் எழுதி வச்சிருக்கு விதி. எல்லாம் முடிஞ்சு செவ்வாய்க்கிழமை ஆபீஸூக்கு வந்தா ரிவீட்டு (ரிவீட்டு தெரியுமா ரிவீட்டு? நோ ஆணி, ஒன் சைடு ஒன்லி. மாமு... அப்பிடியே வச்சு அடிச்சி பச்சக்குன்னு உள்ள எறக்கிறணும். வெளியில எடுக்க முடியாது) பெருசு பெருசா...


ஆபீஸுல செவ்வாய்க்கிழமை நாலஞ்சு ஹிந்தித் தலையா நடமாடிட்டு இருந்தது. என்ன நியூஸூன்னா.... மார்க்கெட் க்ராஷ், கம்பேனி டேக் ஓவர், மூணு ஜெனரல் மேனேஜர்கள் (நான் நல்ல பேரு வாங்கி வச்சிருந்த ரெண்டு பேரு உட்பட) ரிஸைன் பண்ணிட்டாங்க, ஹெட் ஆபீஸ் மும்பை போகுதாம், பழைய எம்ப்ளாயீஸை முடிஞ்ச வரை தூக்கப் போறாங்க - ன்னு ஏகப்பட்ட குட் (?) நியூஸூ. எப்ப்ப்ப்ப்பபூபூபூபூடிடிடிடி...........? என் டிபார்ட்மெண்ட் ட்ரெயினிங் டிபார்ட்மெண்ட்டு. அது? இனிமே டிரெயினிங்கை மும்பை ஆபீஸ் பாத்துக்குமாம். அப்போ நானு.. மாப்பு, இதோட உன் ரீலு ஸ்டாப்பு. கெளம்பு கெளம்பு அப்டின்னுட்டாய்ங்க. ஊஊஊஊஊஊ.... ஊஊஊஊஊ......... சனிப்பெயர்ச்சி வேலையைக் காட்டிடுச்சுல்ல...


இப்போ வேற வேலை தேடிட்டு இருக்கேன் சாமி. ஏதோ பெரியவுங்கள்லாம் ஆசீர்வாதம் பண்ணுங்க. நல்ல ஆஃபர் எதுனா இருந்தா கூட கொஞ்சம் சொல்லுங்க..


சனி பகவானே போற்றி போற்றி..
-------

நண்பர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள். தமிழிஷில் ஓட்டும் போடுங்கள். மறக்காமல்.

-------
-------

செவ்வாய், 22 ஜூன், 2010

சுஜாதாவும் மனுஷ்ய புத்திரனும்

- எஸ்கா

வழக்கம் போல் எல்லா சாதாரண புத்தக ரசிகனும் எதிர்பார்ப்புடன் படிக்கும் சுஜாதாவுக்கு நானும் ரசிகன். மெட்ராஸூக்குப் போனால் எம்.ஜி.ஆரையும், ரஜினியையும் பார்க்கலாம் என்பது மாதிரி புத்தகக் கண்காட்சிக்குப்போனால் சுஜாதாவைப் பார்க்கலாம் என்று பலரும் சொன்னார்கள். ரொம்ப நாளாக எனக்கு அவரிடம் தான் ஆட்டோகிராஃப் வாங்க வேண்டும் என்று ஆசை. அவருடைய படத்தையெல்லாம் பென்சில் ஸ்கெட்ச் ஆக வரைந்து வைத்திருந்தேன். அதன் மேல் ஆட்டோகிராஃப் வாங்கலாம் என்று. பாவி மனுஷன் போய்ச்சேர்ந்து விட்டார். செம ஹைட்டாய் இருப்பாராமே...


2008, 2009 என்று இரண்டு வருடங்கள் முயற்சி செய்தும் புத்தகக் கண்காட்சிக்குப் போக முடியவில்லை. இந்த வருடம் போய்ப்பார்த்தே தீருவது என்று முடிவு செய்து விட்டு, சொன்னால் நம்ப மாட்டீர்கள், ஒன்பது தடவை திரும்பத் திரும்பப் போனேன் கண்காட்சிக்கு. போய் என்னடா வாங்கினாய் என்றெல்லாம் கேட்காதீர்கள். எவ்வளவு அய்யா வாங்க முடியும்?


வாங்குகிற சம்பளத்துக்கு கண்காட்சியில் புத்தகம் வாங்கினால் கட்டுபடி ஆகாது என்று கண்காட்சிக்கு எதிர் சாரியில் செகண்ட் ஹாண்ட் புத்தக் கடைகள் வரிசையில் போய் புத்தகங்கள் வாங்கியாயிற்று. உள்ளே வாங்கினது மட்டும் என்னவாம்? வாங்கியது எல்லாம் சீப் எடிஷன் புத்தகங்கள். அதிலும் தமிழன் புத்தகாலயம் (என்று ஞாபகம்) ஐந்து ரூபாய், பத்து ரூபாய் புத்தகங்களாக நிறைய டாபிக்குகளில் போட்டிருந்தார்கள். கிட்டத்தட்ட முப்பது நாற்பது புத்தகங்கள் வாங்கினேன்.


உயிர்மை ஸ்டால் பக்கம் போகையில் எல்லாம் ஓரமாக நின்று பார்த்துக் கொண்டே இருந்தேன். அங்கே தான் சுஜாதா உட்காருவார் என்றார்கள். இப்போது மனுஷ்யபுத்திரன் இருந்தார். கொஞ்ச நேரம் நின்று அவரையே பார்த்துக் கொண்டு இருப்பேன். வாசகர்களுக்கு ஆட்டோகிராஃப் போட்டுக் கொண்டு இருப்பார். சாருவும் தான். ஆனால் அந்த மனுஷனிடம் போய்ப் பேச எனக்குப் பயம். எதாவது திட்டி வைத்து விடுவாரோ என்று. தேவையில்லாமல் எதற்கு அந்த ஆளிடம் திட்டு வாங்க வேண்டும்? எங்க அப்பா திட்டினாலே எனக்குக் கோவம் வரும்.


சொன்னால் நம்ப மாட்டீர்கள். நான் ஆட்டோகிராஃப் வாங்கிய ஒரே ஆள் மனுஷ்ய புத்திரன்தான். சென்னையில் இருந்த மூன்று வருட காலத்தில் மயில்சாமியில் ஆரம்பித்து காந்திமதி, தமன்னா வரை பார்த்திருக்கிறேன், யாரிடமும் போய்ப் பேசவோ, ஆட்டோகிராஃப் வாங்கவோ தோன்றவில்லை.


உயிர்மையில் போய் ஹைக்கூ, ஒரு எளிய அறிமுகம் (சுஜாதா) புத்தகம் ஒன்று வாங்கினேன். அதைக் கொண்டு போய் எதுவும் பேசாமல் நீட்டியபோதே ஆட்டோகிராஃப் போட தன் பச்சைப் பேனாவைத்திறந்தார். ஆட்டோகிராஃப் போடத் துவங்கினார். தமிழ்வணிகம் டாட் காம் என்ற எங்கள் வலைமனையில் பொருளாதாரம், ஷேர் மார்க்கெட் பற்றிய கட்டுரைகள் எழுதுகிறேன் என்று அறிமுகப்படுத்திக் கொண்டேன்.


உடனே நிமிர்ந்து பார்த்து "அப்படியா? உங்கள் எல்லா கட்டுரைகளையும் எடுத்து வாருங்களேன். புத்தகமாக வெளியிடலாம்" என்றார். இதை நான் எதிர்பார்க்கவில்லை. எனக்கு பகீரென்றது. அய்யய்யோ அந்த அளவெல்லாம் கட்டுரைகள் எழுதியதில்லை அய்யா, ஒரு நான்கைந்து தான் இருக்கும். மற்றபடி பொதுவான கட்டுரைகள் இருபதுக்கும் மேல் எழுதியிருக்கிறேன் என்றேன்.


சரி நிறைய எழுதுங்கள். புதிய பதிப்பகத்தின் பேரில் சில புத்தகங்கள் வெளியிடும் எண்ணம் இருக்கிறது. இப்போதைக்கு உயிரோசை டாட் காமில் எழுதுங்கள். தளம் மிகப் பிரபலாமானதாயிருக்கிறது. உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் படிக்கிறார்கள். எழுதுங்கள். எப்போது வேண்டுமானாலும் கூப்பிடுங்கள் என்று விட்டு புத்தகத்தில் அலைபேசி எண்ணை எழுதித்தந்தார்.


(அந்தப் புத்தகத்தை பழைய கம்பேனியில் ஒரு மேனேஜரிடம் இரவல் கொடுத்து விட்டு இன்னும் வாங்க முடியவில்லை. அந்தப் பெரிய மனுஷன் மொபைல் நம்பரையும் மாற்றிவிட்டான், ஈ.மெயில் ஐடிக்கு போகும் மெயில்களும் பவுன்ஸ் ஆகின்றன.)


எனக்கு என்னவோ அவரைக் கூப்பிடவே பயமாக இருக்கிறது. நான் அந்த அளவுக்கு பெரிய ஆள் இல்லை என்று தான் தோன்றுகிறது. (சி.பி.ஐ அளவுக்கெல்லாம் நான் ஒர்த்து இல்லை சார்). ஆயிற்று ஆறு மாதம். தங்க முட்டையிடும் வாத்தை அந்த முட்டாள் அறுத்துத் தான் பார்த்தான், நான் பயந்து போய் விட்டு விட்டு ஓடி வந்து விட்டேனோ என்று இப்போது தோன்றுகிறது.


பார்க்கலாம். எங்கே போய்விடப்போகிறது. உலகம் ரொம்பச் சின்னது தானே. இப்போது உயிரோசை டாட் காமிலேயே என்னுடைய சில கட்டுரைகள் வெளியிடப்பட்டு விட்டன. நல்ல வரவேற்பு. கொஞ்ச நாள் போகட்டுமே.. பார்த்துக்கொள்வோம்.
-------

நண்பர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள். தமிழிஷில் ஓட்டும் போடுங்கள். மறக்காமல்.

-------
-------

ஞாநி அட்வைஸ் + இது இருபத்தைந்தாவது பதிவு

- எஸ்கா

அவனவன் நூற்றைம்பது பதிவு, நானூற்றைம்பது பதிவுகள் போடும் போது இருபத்தைந்தாவது பதிவுக்கு எதற்கு ஒரு தனிக் குறிப்பு என்று ஒரு கேள்வியை முதலில் நானே கேட்டுக்கொண்டேன்.


பதிவுலகில் ப்ளாக்கர் / பதிவர் என்று எத்தனையோ பேர் ஏற்கனவே எதையெதையோ எழுதிக் குவித்துக் கொண்டிருக்கும் போது நாமும் உள்ளே நுழைந்து என்ன செய்யப் போகிறோம் என்று தான் தோன்றியது. நாம் என்னத்தை பெரிதாக எழுதிக் கிழிக்கப் போகிறோம் என்றும் ஒரு யோசனை. ப்ளாக் என்பது நாம் எழுதும் டைரிபோல. அதைப் பொதுவில் வைப்பதால் என்ன பலன்? என்பது என் எண்ணம்.


மேலும் ஆரம்பத்தில் நான் பார்த்த பதிவுகள் எல்லாம் சொந்தக் கதை, சோகக் கதை பேசுபவை அல்லது விக்கிப்பீடியா டிரான்ஸ்லேஷன். அதையும் மீறினால் ஒருவரையொருவர் திட்டும் தண்ணி வராத குழாய்ச் சண்டைகள். பின் நவீனத்துவம், சே குவாரா, ஈழத்தமிழர் என்று அங்கங்கே தோன்றியதைத் தூவி தம் அறிவு ஜீவித் தனத்தை பறைசாற்றும் முயற்சிகளும் இருந்தன.


ஆகவே பிளாக்குகளைப் படிப்பது என்பதே ரொம்ப சுவாரசியமாக இருந்து கொண்டிருந்தது எனக்கு. வெரைட்டியாக, வெட்டியாக, பொழுது போக, ஆபீஸில் சீன் போட என்று செலக்ட் செய்து லிங்க், லிங்க்காகப் போய் படித்துக்கொண்டிருந்தேன். படிப்பதே போதும். எழுதுவதெல்லாம் தேவையில்லாத வேலை என்றிருந்தது எனக்கு.


ப்ளாக் என்பது சொந்தப் பத்திரிகை போல மனம் போன போக்கில் நாம் விருப்பப்பட்ட எதை வேண்டுமானாலும் எழுதி நாமே போட்டுக் கொள்வதாயிற்றே. இதில் என்ன பெரிய இது என்றெல்லாம் எண்ணிக் கொண்டுதான் இருந்தேன். நாம் எழுதுவதை நாமே பப்ளிஷ் செய்வதால் என்ன பயன்? நம் எழுத்தை மற்றவர் தானே அங்கீகரித்து பப்ளிஷ் செய்ய வேண்டும்?


அதனால் கடந்த ஆண்டு (2009) மார்ச் மாதத்தில் இருந்து யூத்ஃபுல் விகடனுக்கு கட்டுரைகளையும், நகைச்சுவைப் படைப்புகளையும் எழுதி அனுப்பத் துவங்கினேன். என்ன காரணமோ தெரியாது, என் கட்டுரைகள் எதுவும் நிராகரிக்கப் பட்டதே இல்லை, ஒன்றிரண்டைத்தவிர (நன்றி:விகடன் குழுமம்).


சிற்றிலக்கியக் கூறுகள் கொண்ட ஒன்றிரண்டு கட்டுரைகள் மட்டும் உயிரோசை டாட் காமுக்கு (நன்றி:மனுஷ்யபுத்திரன்) அனுப்பி வைக்கப் பட்டு உடனடியாக வெளியிடப்படும். பாதகமில்லை. அவரவர்க்கு அவரவர் பாலிஸி. இது தவிர தமிழ்வணிகம் டாட் காமில் பொருளாதாரம் சம்பந்தப் பட்ட சில கட்டுரைகள் வெளியாகிக்கொண்டிருந்தன (தேங்க்ஸ் டு செல்வமுரளி). ப்ளாக் எழுதலாம் என்ற எண்ணமே வராமல் இருந்தது.


ஒருமுறை குர்காவுன் போய்விட்டுத் திரும்பிய பயணத்தில் விமானத்தில் ஞாநியைப்பார்த்த போது போய்ப் பேசிக்கொண்டிருந்தேன். (அதைத்தனிப்பதிவாகப் போடுகிறேன்) அவரிடம் "ப்ளாக் என்பது நாம் எழுதும் டைரிபோல. அதைப் பொதுவில் வைப்பதால் என்ன பலன்?" என்று வழக்கம் போல வாதம் செய்து கொண்டிருந்தேன். அவரோ "பதிவுலகம் என்பது ஊரில் உள்ள பொதுச் சுவர் போன்றது. நம் பதிவுகள் விதவிதமான சுவரொட்டிகள் ஒட்டுவதைப் போன்றன. விருப்பமுள்ளவர்கள் தேவையானதைப் படிக்கலாம்" என்று சொல்லிவிட்டு கண்டிப்பாக ப்ளாக் எழுதுங்கள் என்று அட்வைஸினார்.


ஊருக்குத் திரும்ப வந்ததும் ரூமுக்கு வந்து (ரூம் போட்டு இல்லை) ரொம்ப நேரம் யோசித்துக் கொண்டிருந்தேன். சரி. ஆனது ஆயிற்று. அவர் பேச்சையும் கேட்க வேண்டாம். என் பேச்சையும் கேட்க வேண்டாம். ரெண்டுக்கும் நடுவில் எதாவது செய்வோம் என்று இப்போதைக்கு யூத்ஃபுல் விகடன், உயிரோசை டாட் காம், தமிழ்வணிகம் டாட் காம் மூன்றிலும் வெளியானவற்றை மட்டும் பதிவேற்றுவோம். வரவேற்பைப் பார்த்துவிட்டு ப்ளாக் எழுதலாம் என்று முடிவு செய்தேன்.


அப்படியாகப் பதிவேற்றப் பட்டவைதான் நீங்கள் படித்த 24 பதிவுகள். இவற்றில் "ஸாரி சூர்யா, ஸாரி சிங்கம்" மற்றும் "இராவணன்" பதிவுகளைத் தவிர மற்ற அனைத்தும் மேற்கண்ட வெப்சைட்டுகளில் வெளியாகி மிகப் பரவலான வரவேற்பைப் பெற்றவை. ஆனால் அப்படிப் பதிவேற்றியும் ரொம்ப நாளாக ஒருத்தரும் வீட்டுப் பக்கம் எட்டிப்பார்க்கவில்லை.


ஒருமுறை யூத்ஃபுல் விகடனில் "நம் பதிவுகளை பலரையும் படிக்க வைப்பதெப்படி?" என்று ஒரு கட்டுரை வெளியானது. அதில் தமிழிஷ், தமிழ்மணம், திரட்டி போன்ற திரட்டிகளைப்பற்றியும், அவற்றில் எப்படி நம் பதிவுகளை இணைப்பது எப்படி என்றும் அழகாகச் சொல்லியிருந்தார்கள். அதன் படி சில பதிவுகளை தமிழிஷில் ஏற்றினேன். இவை தவிர சில பதிவுகள் யூத்ஃபுல் விகடனின் "குட் பிளாக்ஸில்" வெளிவந்தன. அதன் பிறகுதான் என் பதிவுக்கும் ஆட்கள் எட்டிப்பார்க்கத் துவங்கியதெல்லாம்.


ஆனால் என் பதிவுகளுக்கு எவனும் பின்னூட்டம் போட மாட்டேனென்கிறானே என்று ஒரு வருத்தம் இன்னமும் இருக்கிறது. டெக்னிக்கல் விஷயங்கள் தெரிந்த நண்பன் ஒருவனிடம் பேசிய போதுதான் அதற்குப் பல காரணங்கள் என்பது தெரிந்தது. முதலில் ப்ளாக்கில் கேட்ஜட்டுகள் இணைப்பதில் துவங்கி, படிப்பவர்கள் பின்னூட்டம் போட வசதிகளை ஈஸியாக ஏற்பாடு செய்து தருவது வரை மாற்றங்கள் செய்து தர வேண்டுமென்று புரிந்து கொண்டேன்.


செய்வோம். எல்லாவற்றையும் செய்வோம். என்ன அவசரம்? இப்போது தானே எழுத ஆரம்பித்திருக்கிறோம். சீக்கிரமே ரெகுலராக்கி எல்லாவற்றையும் செய்யலாம். என்ன? சரிதானே..
-------

நண்பர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள். தமிழிஷில் ஓட்டும் போடுங்கள். மறக்காமல்.

-------
-------

செவ்வாய், 15 ஜூன், 2010

இராவணன்,

- எஸ்கா
மூன்று வருடங்கள், நூற்றியிருபது கோடி பட்ஜெட், ஏ.ஆர்.ரஹ்மான், ஐஸ், அபி, விக்ரம் என்றெல்லாம் பிரம்மாண்டம் காட்டி, ரகசியம் கட்டிக்காத்து, காடு மேடு, மலை, பள்ளத்தாக்குகள் சுற்றி எடுக்கப்பட்ட படம் இராவணன். வரும் பதினெட்டாம் தேதி ரிலீஸ். கேப்டன் ஆஃப் தி ஷிப் மிஸ்டர்.மணி ரத்னம். எப்படி இருக்கும் படம்?? மணி படமாயிற்றே.. சொல்லவா வேண்டும். தியேட்டர் முழுக்க அறிவுஜீவிகள் தான் நிரம்பியிருப்பார்கள். வீணாய்ப் போன விசிலடிச்சான் குஞ்சுகள் தொந்திரவில்லாமல் பார்க்க மற்றுமோர் தெளிவான படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கலாமா?

மலை உச்சியில் விக்ரம் காலடியில் இருந்து சிறு கல்லொன்று அருவித் தண்ணீரில் விழும் ஷாட்டும், பாறைகளில் எதிலும் கைவைக்காமல் சற்றே இடது பக்கம் சாய்ந்த படி சரிவாக விக்ரம் சரிந்தபடியே வழுக்கி, சறுக்கி மேலிருந்து கீழே விறுவிறுவென இறங்கும் காட்சியும் இராவணன் டிரெயிலரில் சிலிர்ப்பூட்டுகின்றன. “ஒரு பானைச்சோற்றுக்கு” பழமொழிதான் நினைவுக்கு வருகிறது. அங்கொன்றும் இங்கொன்றுமாக நெட்டில் காணக்கிடைக்கும் இராவணன் ஸ்டில்கள் ஆர்வத்தைக் கிளப்பி விடுகின்றன.

ஆனால் மரக்கட்டைகளால் அமைக்கப்பட்ட தொங்குபாலத்தில் ஒற்றைக்கையில் பிருத்விராஜ் தொங்கும் காட்சி தில் திரைப்படத்தின் இரயில்வே மேம்பாலத்தில் விக்ரம் தொங்கும் இன்டர்வெல் ஷாட்டை நினைவுறுத்துகிறது. அதுவும் இராவன் ஹிந்தி டிரெயிலரில் விக்ரமே தொங்குகிறார். நிஜமாகவே மிரட்டலாக இருக்கின்றன தேவ்-விக்ரம் வரும் ஹிந்தி டிரெயிலர் காட்சிகள். முறுக்கு மீசையும், துப்பாக்கிக் கையுமாக ஓடி வரும் விக்ரமைப் பார்க்கவே சுறுசுறுவென்று இருக்கிறது.

தன் படம் இங்கே வரவேற்பைப் பெறுமா இல்லையா என்றெல்லாம் எப்போதுமே கவலைப்படுவது இல்லை மணிரத்னம். படத்தை எடுப்பது மட்டுமே என் வேலை என்று எடுத்து முடித்து விடுவார். பேசுவதும் குறைவு. படம் தான் பேசவேண்டும். தயாரிப்பும் சொந்தத்தயாரிப்பே. புதுமை செய்கிறேன் பேர்வழி, கெட்டப் சேஞ்ச், தமிழ் சினிமாவில் இதுவரை வராத சப்ஜெக்ட் என்றெல்லாம் சொல்லும் ஹீரோக்களும், டைரக்டர்களும் கூட மொட்டை போடுவது தயாரிப்பாளரைத் தான்.

கமர்ஷியல் படங்களை சொந்தத் தயாரிப்பில் எடுப்பது, புதுமை முயற்சியை அடுத்தவன் காசில் ஆட்டையைப் போடுவது என்பதும் மணியிடம் கிடையாது. எவ்வளவு செலவானாலும் சரி. எல்லாமே சொந்தத் தயாரிப்பு தான். மெட்ராஸ் டாக்கீஸ் தான். (ஆலயம்-ஆக இருந்தது முதலில்). உண்மையைச் சொல்லப்போனால் இங்கே ஊத்திக் கொண்டாலும் உலகம் முழுக்க ஓடி போட்ட காசுக்கு மேலேயே எடுத்து விடும் அவரது படம். கூடவே உலகம் முழுக்க விருதுகளும் கியாரண்டி.

உலகத்தரம், உலகத்தரம் என்று பலரும் கூவிக்கொண்டிருக்கும் வேளையில் உண்மையாகவே உலகத்தரமான படம் என்றால் இந்தியாவில் இன்றைக்கு டாப் த்ரீயில் மணியை மட்டுமே முதல் உதாரணமாகச் சொல்ல முடியும். மற்ற இரண்டு பேர்? யாராவது மாறிக்கொண்டே இருப்பார்கள். ஒரு உலகப் படம் கொடுத்து விட்டு காணாமல் போவார்கள். ஆனால் 18 வருடங்களாக ஸீட்டை ஸ்டிராங்காகப் போட்டு அமர்ந்திருக்கிறார் மணிரத்னம்.

உலகப்படங்களையே சுட்டு தமிழில் அப்படியே எடுத்து அதையும் உலகப்பட விழாவுக்கு அனுப்பும் காமெடியெல்லாம் இங்கே தான் நடக்கிறது. அதைப்பார்க்கையில் இந்திய புராண இதிகாசங்களை காலத்திற்கேற்ப மாற்றி, கோணங்களை மாற்றி படமெடுப்பது கண்டிப்பாய் மதிக்கத்தக்க முயற்சி. மணி இந்த இடத்தில் தான் வித்தியாசப் படுகிறார். அது மட்டுமின்றி பம்பாய், இருவர், குரு உள்ளிட்ட உண்மைச்சம்பவங்கள் கொண்ட படங்களுக்கு என்றைக்கும் தனி ரசிகர் கூட்டத்தை உருவாக்கி வைத்திருக்கிறார் அவர்.

அஸிஸ்டென்ட் டைரக்டர்களுக்கு ஃபைவ் ஸ்டார் ஹோட்டல்களில் ரூம் போட்டு சீன் பிடிப்பது (சொல்லப் போனால் அவர்களும் அதைச் செய்வதில்லை, பல்வேறு மொழி பிரபல எழுத்தாளர்கள் எழுதிய கதைகளில் இருந்து உருவி விடுவார்கள், ஆணைப் பெண்ணாக்கி, கிராமத்தை நகரமாக்கி என்று பட்டி பார்த்து டிங்கரிங் செய்யப் பட்டு வரும் ஸீன்கள் தான் அவை) என்ற வேலையைச்செய்வதில்லை.

ஒரு ஸ்பார்க் உருவானவுடனே அதை ஸீன் பை ஸீனாக டெவலப் செய்வது முதல் வசனம் எழுதி ஸ்கிரிப்டை முழுமையாக்கி முடிப்பது வரை எல்லாமே அவர்தான் என்பார்கள். மணிரத்னம் படத்தில் வசனமா என்று கிண்டலாகப் படிக்காதீர்கள், உண்மையிலேயே சுருங்கச் சொல்லி விளங்க வைப்பது தான் கஷ்டம். திருவள்ளுவனுக்குப் பிறகு அந்தக் கலை கைகூடியிருப்பது மணிரத்னத்துக்குத் தான்.

1987ல் மனிதன் படமும், நாயகன் படமும் ஒன்றாகத்தானே ரிலீஸ் ஆகின? இன்றும் நாம் எந்தப் படத்தை சிலாகிக்கிறோம்? தமிழ் சினிமாவின் மாஸ்டர் பீஸ் ஆக நிற்கும் படமாகியிருக்கிறதல்லவா அது? நான் ரஜினியைப் பற்றிப் பேச வரவில்லை அய்யா. அப்படி நினைத்தீர்களானால் மற்றொரு உதாரணம் தருகிறேன். இதே மணிரத்னம் இயக்கி ரஜினி நடிப்பில் 1991ல் வெளிவந்த தளபதி படத்தோடு சேர்த்து தானே கமலஹாசனின் குணா திரைப்படமும் ரிலீஸானது. அவற்றில் எந்தப் படத்தை இன்றும் பார்த்து ரசிக்கிறோம்??

மணிரத்னம் படமென்றாலே தைரியமாகப்போய் உட்காரலாம் என்பதற்கு மற்றுமொரு காரணமும் உண்டு. ஒரு பெரிய ஜாம்பவான்களின் கூட்டத்துடன் களம் இறங்குவது மணியின் வழக்கம்.. வைரமுத்து துவங்கி, ஏ.ஆர்.ரஹ்மான், சந்தோஷ் சிவன், சாபு சிரில் என்று தொழில் நுட்பத்தில் ஒரு பெரும் படையே அவருடன் வழி நடக்கும். ஒரு நல்ல ராஜாவுக்கு அழகு திறமை மிக்க படையணிதான். கதை, திரைக்கதை, வசனம், ஒளிப்பதிவு, பாடல், இசை, சண்டை, நடிப்பு, இயக்கம் என்று எல்லாவற்றையும் நானே செய்கிறேன் என்று காட்டுக்கூச்சல் போட்டு காணாமல் போனவர்கள் பலர்.

அதுபோல் ஒரு திரைப்படத்திற்கு இசை எவ்வளவு முக்கியம்? இசைக்கோவை செய்யும் முன்பு சத்தமில்லாமல் ஒரு படத்தை சப்பென்று பார்த்திருக்கிறீர்களா? அட்லீஸ்ட் கற்பனையாவது செய்து பாருங்கள். சொத்தையாக இருக்கும். எப்பேர்ப்பட்ட பேய்ப்படமாக இருந்தாலும் சப்பென்று இருக்கும். இளையராஜா இசையின் அதிகபட்ச சாத்தியத்தை பயன்படுத்திக்கொண்டதும் மணிதான். 1992ல் ஏ.ஆர்.ரஹ்மானை அறிமுகப்படுத்தி இளையராஜாவின் கொட்டத்தை அடக்கியதும் மணிதான். (1992ல் தான் உட்சபட்ச சாதனையாக 58 படங்களுக்கு இசையமைத்தார் இளையராஜா. அதுவே திரையிசையில் அவரது கடைசி சாதனையாக மாறிப்போனது. அந்த ஆண்டில் தான் ரஹ்மான் வந்தார். அதன் பின் "ராஜா"ங்கம், ரஹ்மேனியாவாகிப்போனது)

பாடல்கள் அனைத்தும் ஹிந்தியில் உருவாக்கப்பட்டு பின்பு தமிழ்ப்படுத்தப்பட்டன. நல்ல வேளை தமிழ்ப்"படுத்தாமல்" எழுதியிருக்கிறார் வைரமுத்து. என்னதான் இருந்தாலும் தமிழ் வீரா பாடலை விட ஹிந்தி பீரா அசத்தலாயிருக்கிறது. ஆடியோ வெளியீட்டு விழாவில் அனைத்துப் பாடல்களையும் ஸ்டேஜிலேயே நாடகம் போட்டுக் காண்பித்தார்கள். விக்ரம் உட்பட அனைத்து ஸ்டார்ஸையும் ஆட வைத்திருந்தார்கள்.

தான் நடிக்க சான்ஸ் கேட்டுப் போன இரண்டு இயக்குனர்கள் ஷங்கரும், மணிரத்னமும் தான் என்று தானே கூறியிருக்கிறார் விக்ரம். அந்நியன் மூலம் 2005-ல் கைகூடிய பாதி ஆசை முழுதாகக் கைகூட ஐந்தாண்டுகள் ஆகியிருக்கிறது அவருக்கு. பார்க்கலாம். என்ன செய்திருக்கிறார்கள் என்று. இன்னும் இரண்டே நாட்கள்...
-------

நண்பர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள். தமிழிஷில் ஓட்டும் போடுங்கள். மறக்காமல்.

-------
-------

சனி, 12 ஜூன், 2010

மியூச்சுவல் பண்டுகளும் ஃபண்ட் மேனேஜர்களும்.

- எஸ்கா

பணமின்றி அமையாது உலகு. எல்லாவற்றுக்கும் பணம் வேண்டும். ஆனால் பணம் என்ன மரத்திலா காய்க்கிறது?. இல்லையே. கஷ்டப்பட்டு உழைத்துத்தானே சம்பாதிக்க வேண்டும். சரி.. உழைத்து உழைத்து சம்பாதித்து பெட்டியில் போட்டு வைத்தால் என்னதான் ஆகும்? நாளாக நாளாக உளுத்துத்தான் போகும். அதை வங்கியில் போட்டு சேமித்து வைத்தால்? பத்திரமாக இருக்கும் தான். ஆனால் வட்டியே கிடைத்தாலும், அதிகரித்து வரும் பணவீக்கம் மற்றும் விலைவாசியில் அதன் மதிப்பு அரோகரா தான். அப்போது என்ன செய்யலாம்? எப்படி அதை வளர்க்கலாம்? அல்லது குறைந்த பட்சம் மதிப்பு குறையாமல் பாதுகாக்கலாம்? அதற்கு அந்தப் பணத்தை முதலீடு செய்வது தான் ஒரே வழி. அதை நாமே செய்யலாமா? செய்யலாமே.

நம்மிடம் காசு கொடுத்தால் எங்கெல்லாம் முதலீடு செய்வோம்? வங்கி? போஸ்ட் ஆபீஸ்? தங்கம்? நிலம்? பத்திரங்கள்? வண்டி வாகனம் (நியாமமாகப் பார்த்தால் இது முதலீடே அல்ல), இதையெல்லாம் மீறிய ஒன்றுதான் பங்குகள் (ஷேர் மார்க்கெட்). அதிலும் ரிஸ்க் அதிகம் ஆயிற்றே, என்ன செய்ய? ரிஸ்க் அதிகம் தான், ரிட்டனும் (திரும்பக் கிடைப்பது) அதிகமாயிற்றே. அப்போ அதிலே முதலீடு செய்யலாமா? செய்யலாம். நாமே செய்யலாம். தரகர்கள், தரகு நிறுவனங்கள் உதவியுடன்...

இல்லை.. எனக்கு ஷேர் மார்க்கெட் பற்றி கொஞ்சம் தான் தெரியும், முதலீடு செய்யவும் ஆசைதான். ஆனால் பயமாக இருக்கிறது, நேரமும் இல்லை. நான் என் தொழிலை, என் வேலையைத் தான் பார்க்க முடியும், ஷேர் மார்க்கெட்டைப் பார்த்துக் கொண்டு உட்கார்ந்திருந்தால் என் வேலை கெட்டுப் போய்விடும், எனக்கு உதவி செய்ய யாரேனும் இருக்கிறார்களா என்று கேட்கிறீர்களா? உஙகளைப் போன்றவர்களுக்குத் தான் மியூச்சுவல் பண்டுகள் இருக்கின்றன.

மியூச்சுவல் பண்டுகள் என்பவர்கள் நம்மைப்போல பலரிடம் பணத்தை கொஞ்சம் கொஞ்சமாகத் திரட்டி ஒன்றாகக் குமித்து நூறு கோடி, இரு நூறு கோடி என்று சேர்த்து பிரபலமான அல்லது வளரும் வாய்ப்புகள் கொண்ட பங்குகளில் முதலீடு செய்வார்கள். செய்து விட்டு சரியான நேரம் வரும் வரை காத்திருந்து விற்று காசாக்குவார்கள். (ஒரு நிறுவனத்தில் ஒரு குறிப்பிட்ட சதவீதத்தை முதலீடு செய்து விட்டு, தன் ஆள் ஒருவரை அந்தக் கம்பெனியில் உள்ளே நுழைத்து வேலைக்கு அனுப்பி வேவு பார்க்கும் ஃபண்டுகள் எல்லாம் உண்டு)

நம்மைப்போலவே மியூச்சுவல் பண்டுகளும் ஷேர் மார்க்கெட்டில் தான் முதலீடு செய்கின்றன. நாம் முதலீடு செய்தாலும் அவர்கள் செய்தாலும் வரும் பிரச்சினையும், பலனும் கிட்டத் தட்ட ஒன்றுதான். ரிஸ்க்கும் உண்டுதான். ஆனால் அவர்கள் அனுபவமிக்க ஆட்களை வைத்துச் செய்வதால் ரிஸ்க்கை குறைப்பார்கள் அல்லது குறைக்க முயற்சி செய்வார்கள். ஷேர் மார்க்கெட் மற்றும் நிறுவனங்கள் பற்றி செய்தித்தாள்கள், டி.வி, இன்டர்நெட் மூலம் நமக்கு வரும் செய்திகள் எல்லாம் முக்கியமான சோர்ஸ்கள் மூலம் அவர்களுக்கு முன்னமேயே தெரிந்து விடும். மேலும் தான் நிர்வகிக்கும் பண்டுகளை உறுமீன் வரும் வரை காத்திருக்கும் கொக்காக, கண்கொத்தி எடுக்கும் பாம்பாக கவனித்த படியே இருப்பது தான் அவர்களது வேலை. நமக்கு ஆயிரத்தெட்டு வேலை. அவர்களுக்கு இதுதானே வேலை?

நாமாக ஷேர் வாங்கினால் எவ்வளவு ரூபாய்க்கு வாங்க முடியும்? நம்மிடம் இருக்கும் காசுக்கு கொஞ்சமாகத்தான் வாங்க முடியும். அதிலும் எவ்வளவு பெரிய நிறுவன ஷேர்களை வாங்க முடியும்? ரொம்பக்கஷடம். மேலும், ஒரு வேளை நாம் வாங்கிய ஷேர்களின் விலைகள் விழுந்து விட்டால்? போச்சா? ஆனால் மியூச்சுவல் பண்டுகள்? அவர்கள் கோடிக்கணக்கில் முதலீடு செய்வதால் (அதில் நம் பணமும் இருக்கும்) அனைத்து பிரபல நிறுவனப் பங்குகளிலும் பரவலாக முதலிடுவார்கள். நாம் போட்ட சொற்ப பணத்தில் எல்லா பெரிய நிறுவனப் பங்குகளின் துளித்துளி பங்கு இருக்கும்.

மாமரத்தை அதோ பாரு மாமரம் என்று காண்பித்தால் எப்படி இருக்கும்? அல்லது மாம்பழத்தை பறித்துக் கையில் கொடுத்தால் எப்படி இருக்கும்? அதையும் தோலுரித்துக் கொடுத்தால்? அதையும் வெட்டி துண்டு போட்டுக் கொடுத்தால்? அதையும் ஜூஸாக்கி ஊற்றிக் கொடுத்தால்? அதையும் எடுத்துச் செல்ல வசதியாக பாட்டிலில் போட்டுக் கொடுத்தால்? இன்னும் கொஞ்சம் ருசிக்காக கொஞ்சம் ஜில்லென்று ஐஸ் போட்டுக் கொடுத்தால்?? அருமையாக இருக்கும் அல்லவா?

மாம்பழ ஜூஸைப் போல இன்றைக்கிருக்கும் சூழ்நிலையில் மியூச்சுவல் பண்டுகளில் முதலீடு செய்யும் விதம் மிகவும் சுலபமாகிக் கொண்டே வருகின்றது. ஒரேயடியாக ஐயாயிரம் ரூபாய் முதலீடு என்றிருந்ததை மாற்றி மாதா மாதம் வேண்டுமானாலும் முதலீடு செய்யலாம் என மாற்றி அதிலும் ஆயிரம் ரூபாய் கூட போட்டால் போதும் என்றாக்கி பிறகு ஐநூறு என இறங்கி இன்று ரிலையன்ஸ் புரோக்கிங் நிறுவனம் போன்றவர்கள் மாதம் நூறு ரூபாய்க்குக் கூட மியூச்சுவல் பண்டில் முதலீடு செய்யும் வழியைக் காண்பிக்கிறார்கள். மாதா மாதம் ஒரு குறிப்பிட்ட தொகையை மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்வதற்கு எஸ.ஐ.பி (சிஸ்டமேடிக் இன்வெஸ்ட்மெண்ட் பிளான்) என்று பெயர் வைத்திருக்கிறார்கள்.

இவ்வாறான மியூச்சுவல் ஃபண்டுகள் தனக்கான மேனேஜர்களை தேடிக்கண்டுபிடித்து நியமிக்கும். அவற்றிற்கான டிமாண்ட் அதிகம். அமெரிக்காவிலெல்லாம் ஃபண்ட் மேனேஜர்கள் முதலீட்டு ஆலோசகர் என்ற பெயரிலும் அழைக்கப் படுகிறார்கள். தனிமனிதனாக இருக்கும் ஒருவரது விருப்பப் பங்குகளின் லிஸ்டை போர்ட்ஃபோலியோ என்பார்கள். அதே போல ஒரு மியூச்சுவல் ஃபண்டுக்கும் போர்ட்ஃபோலியோ உண்டு.

அந்த போர்ட்ஃபோலியோவை நிர்வகிப்பவர் தான் ஃபண்ட் மேனேஜர். அவரது தலைமையில் ஒரு பெரிய நிபுணர் குழுவே இயங்கும். அக்குழுவில் அனலிஸ்டுகள் எனப்படும் முதலீட்டு ஆராய்ச்சி நிபுணர்கள் இருப்பார்கள். அவர்கள் பங்குகளையும், பங்குச் சந்தையையும், அதன் போக்கினையும் ஆராய்ச்சி செய்து அறிவித்துக்கொண்டே இருப்பார்கள்.

ஆனால் கடைசியாக ஒரு குறிப்பிட்ட மியூச்சுவல் பண்டின் முதலீட்டு முடிவுகளை எடுப்பவர் அந்த மியூச்சுவல் பண்டின் மேனேஜரே ஆவார். மியூச்சுவல் ஃபண்டுகள் மட்டுமின்றி பென்ஷன் பண்டுகள், டிரஸ்ட் (அறக்கட்டளை) பண்டுகள், ஹெட்ஜ் பண்டுகள் போன்றவையும் இதே லிஸ்டில் உண்டு. எல்லாவற்றுக்கும் மேனேஜர்கள் உண்டு.

இன்றைக்கு செய்தித்தாள்கள் மூலம் மியூச்சுவல் பண்ட் மேனேஜர்கள் எந்தெந்த பங்குகளில் முதலீடு செய்திருக்கிறார்கள், எவ்வளவு முதலீடு செய்திருக்கிறார்கள் என்பதையெல்லாம் பற்றி துல்லியமாகத் தெரிந்து கொள்ள முடியும். அதே மாதிரி நாமும் முதலீடு செய்யலாம் (ஆனால் அதே விகிதாசாரம், அதே நேரம், அதே பங்குகள், அதே காலகட்டம் போன்றவற்றை பின்தொடர்வது கடினம்). மேலும் மணிகன்ட்ரோல்.காம் உட்பட இன்றைக்கு பல்வேறு வெப்சைட்டுகள் ஃபண்ட் மேனேஜர்களின் விருப்பப் பங்குகள் குறித்த அறிவிப்புகளை வெளியிடுகின்றன.

பண்ட் மேனேஜர் என்ற பெயரில் ஷேர்களையும், ஃபண்டுகளையும் தானாகவே நிர்வகிக்கும் சாப்ட்வேர்கள் எல்லாம் கிடைக்கின்றன என்றால் அதன் வெற்றியை பார்த்துக்கொள்ளுங்களேன்.

பங்கு வர்த்தகத் துறையில் பல வருடங்கள் அனுபவமிக்கவர்கள் மட்டுமே இந்தத்துறையில் கோலோச்ச (ஆட்சி செய்ய) முடியும். அதாவது பழம் தின்று கொட்டை போட்டவர்கள் என்று சிம்பிளாகச் சொல்வோமே அப்படி. பொருளாதாரத்துறையில் உயர்ந்த பட்ச கல்வித்தகுதியும் அவர்களுக்கு அவசியம். அப்படிப்பட்ட பண்ட் மேனேஜரை வைத்தே சில குறிப்பிட்ட பண்டுகள் நல்ல பெயர் வாங்குவதும் உண்டு. ஒரு குறிப்பிட்ட பண்டின் தரத்தை, அதன் குவாலிட்டியை அலசும் போது அதன் மேனேஜரும், அவரது அனுபவம் மற்றும் திறமையும் மிக முக்கியமான காரணிகளாக இருக்கும்.

ஷேர் மார்க்கெட்டில் நேரடி முதலீட்டைத் தவிர்க்க விரும்பும் முதலீட்டாளர்கள் செல்லுவது மியூச்சுவல் ஃபண்டிடமே. சில ஆயிரம் ரூபாய் புரளும் சாதாரண கடையின் கல்லாவிலேயே ஒரு நம்பிக்கையான, திறமையான ஆள் உட்கார வேண்டும் என்று எதிர்பார்க்கும் போது... பல நூறு கோடிகளைத் தாண்டி நிற்கும் சொத்து மதிப்புள்ள பண்டுகளை நிர்வகிப்பவர்கள் சிறந்த அனுபவம் மிக்கவர்களாக இருக்க வேண்டும் என்பது நியாயமான எதிர்பார்ப்பு தானே. வெற்றிகரமான ஃபண்ட் மேனேஜர்களின் விலை அதிகம். போட்டியாளர்கள் அவரை அதிக சம்பளம் கொடுத்து கவர்ந்து செல்ல முயற்சித்த படியே இருப்பார்கள்.

பண்ட் மேனேஜர்களாக இல்லாவிடினும், உலகம் முழுவதிலுமுள்ள பங்கு முதலீட்டாளர்கள் மத்தியில் இன்று வாரன் பஃபெட்டும், ஜார்ஜ் சோரஸூம் மிக முக்கியமான பங்கு நிர்வாகிகளாக மதிக்கப்படுகிறார்கள். இந்தியாவின் வாரன் பஃபெட் என்று அழைக்கப் பட்ட ராகேஷ் ஜூன்ஜூன்வாலாவும் இந்த லிஸ்டில் உண்டு. இவர்கள் ஒரு குறிப்பிட்ட கம்பெனியின் பங்குகளை வாங்க ஆலோசிக்கிறார்கள் என்று செய்தி கசிந்தாலே அந்தப் பங்கின் விலை குதிக்க ஆரம்பித்து விடும். கொஞ்சம் நீங்களும் கவனித்துத் தான் பாருங்களேன்.

இன்றைய நிலையில் தன் கதவுகளை அகலத்திறந்து வைத்து, கேட் பாஸ் கூடப் போடாமல் உள்ளே வரும் கம்பெனிகளையெல்லாம் டீ, காபி கொடுத்து உபசரித்து வரவேற்றுக் கொண்டு இருக்கிறது இந்தியா. உலக மயமாக்கலும், தனியார் மயமாக்கலும் அதிகரித்து விட்ட…… முதலீட்டு வாய்ப்புகள் அதிகரித்து வரும் இந்நாட்களில் பணி வாய்ப்புகளும் இத்துறையில் அதிகம். என்ன ஒன்று? தேவையான தகுதியும் இருக்க வேண்டும். கொக்கு மாதிரி காத்திருக்கும் பொறுமையும் இருக்க வேண்டும். சந்தையில் நிலவும் காரணிகளைக் கண்டு கொண்டு எதிர்காலத்தை கணிக்கும் திறமையும் இருந்தால் மிகவும் நல்லது. இல்லாவிட்டால் ஒரு காலத்தில் யூடிஐ ஒரேயடியாக மூழ்கிப்போனதை வேடிக்கை பர்த்ததைப் போல் பார்த்துக் கொண்டே இருக்க வேண்டியது தான்.


-------

நண்பர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள். தமிழிஷில் ஓட்டும் போடுங்கள். மறக்காமல்.

-------
-------

செவ்வாய், 8 ஜூன், 2010

ஸாரி சூர்யா ஸாரி சிங்கம்

- எஸ்கா

சன் டிவி, சன் நியூஸ், சன் மியூசிக், ஆதித்யா, சுட்டி டிவி னு எந்த டி.வியும் திருப்ப முடியல.. ஒரு டி.வி விடாம .. சிங்கம்.. சிங்கம்.. னு DSP குரல்ல அதாங்க தேவிஸ்ரீபிரசாத் குரல்ல பாட்டு கேட்டுட்டேடேடே இருக்கு... முதல்ல கேட்கும் போது ஒரு மாதிரியா இருந்தாலும் அப்புறம் ஒரு மாதிரி நல்லாத்தான் இருக்கு. பசங்க எல்லாம் அதையே பாடிட்டு திரியுதுங்க..

நானே இந்திரன், நானே சந்திரன் பாட்டை கேட்கும் போதும், டிரெயிலர் பாக்கும்போதும் நமக்கே கொஞ்சம் கேரிங்கா தான் இருந்தது.. ஒரு பக்கம், ஃபார்வேர்ட் எஸ்.எம்.எஸ் பிரியர்களுக்கு விஜய்க்கு அப்புறம் மாட்னார்யா இன்னொரு ஆளுன்னு குஷியா கெளம்பிட்டாங்க.. படம் பத்தி எல்லா பக்கமும் விமர்சனம் பாக்கும் போது ஒரு வேளை படம் ஹிட்டோன்னு டவுட்டு வருது.. கர்ஜிக்கும், உறுமும், பாயும், எகிறும் சிங்கம்னுலாம் போஸ்டர்ல ஆரம்பிச்சு ப்ளாக்குகள் வரைக்கும் சூர்யாவை பெருசா போட்டு பயமுறுத்துறாங்க நம்மளை.. படம் ஹிட்டு, சூப்பர் ஹிட்டு, சூப்பர் டூப்பர் ஹிட்டுன்னு சொல்றாங்க.. கொஞ்ச நாள் வெயிட் பண்ணுவோம். எப்படியும் பட வசூல் எப்படின்னு தெரியத்தான் போகுது.. அயன் படம் தான் டாப் வசூல்னு சிங்கம் ஆடியோ ரிலீஸ்ல சொன்ன மாதிரி சொல்லிடப் போறாங்க... அப்புறம் என்ன??

ஆஹா ஓஹான்னு பசங்க சைட்ல இருந்தும், ஓக்கேன்னு பெரியவங்க சைட்ல இருந்தும், சரியான மசாலா குப்பைன்னு படிச்சவங்க பக்கமிருந்தும் வெரைட்டியான ரெஸ்பான்ஸ் அன்ட் ஃபீட்பேக். நமக்கு படம் பாக்குற வாய்ப்பு நேத்துதான் கிடைச்சுது. பரவாயில்லை. ஒரு மாதிரி சுறு சுறுன்னு தான் போகுது. கேள்வி கேக்க யோசிக்க விடாம கடகடன்னு ஓட்டி கெளம்புப்பான்னு தியேட்டர்ல இருந்து கெளப்பி விட்டுட்டாங்க. அவரும் பாவம்.. எத்தனை நாளைக்குதான் மனுசன் சிவாஜிக்கும், கமலுக்கும் வாரிசு மாதிரியே நடிச்சுகிட்டு இருக்க முடியும்? என்னதான் ஹிட் படங்கள் கொடுத்தாலும் கொஞ்சம் மாஸ் ஓப்பனிங் வேணும்னு நினைச்சிருப்பாரு போல இருக்கு நம்ம சரவணன்... அதான் இந்த ரத்தக் களரி. பிரகாஷ்ராஜ் வேற வகையா மாட்றாரு இவுங்களுக்கெல்லாம். (ஆனா பிரகாஷ்ராஜை பாக்கும் போது அய்யா படத்துல வந்த கெட்டப் மாதிரியே இருக்கு)

சிங்கம் மட்டுமில்லாம RGV யோட அதாவது ராம் கோபால் வர்மாவோட ரக்த சரித்திராவையும் சைட் பை சைடா நடிச்சு முடிச்சுக் கொடுத்திருக்கிறாராமே சூர்யா.. ஹிந்தி, தெலுங்கு, தமிழ்னு.. ஆனா அதுல மெயின் ரோல் இல்லன்னு ஒரு பேச்சு இருக்கு. விவேக் ஓபராய் தான் ஹீரோ, நம்மாளு அவருக்கு எதிரின்னு பேசிக்கிறாங்க.

சூர்யா... சிங்கம் ஒரு சைடா பாத்தா நல்லாதான் இருக்கு. இருந்தாலும் தயவுசெஞ்சு இதுலயே மூழ்கிடாதீங்க. கொஞ்சம் வெரைட்டியாப் பண்ணுங்க. எங்களுக்கு வாரணம் ஆயிரம் வெரைட்டி சூர்யாவும் வேணும். காக்க காக்க விறுவிறு சூர்யாவும் வேணும், அயன் சுறுசுறு, துறுதுறு சூர்யாவும் வேணும். மசாலா மசாலான்னு போயி மசாலா தடவுன கோழியாய்டாதீங்க. அப்புறம் உரி உரின்னு உரிச்சுடுவாங்க.. சிங்கம் உங்களுக்கு 25வது படம் வேற. அதனால வாழ்த்துக்கள்.

ஆனா படத்துல அனுஷ்காவை ஹீரோயினாப் போட்டு சூர்யாவுடைய இமேஜை கொஞ்சம் சரிச்சுட்டாங்க. நம்மாளு கொஞ்சம் ஷார்ட்டுதான். ஆனா படங்கள்ல அது தெரியாத மாதிரி கேமரா ஷாட்ஸ் வச்சு, அதுக்குத் தகுந்த மாதிரி வளைஞ்சு நெளிஞ்சு ஆடுற மாதிரி ஸ்டெப்ஸ்லாம் போட்டு சமாளிச்சுடுவாரு. ஆனா இதுல யாரு வீம்புக்கோ அனுஷ்காவை ஹீரோயினாப் போடப் போய் அது சூர்யாவுக்கு இடைஞ்சலா முடிஞ்சு போச்சு.. பளிச்சுன்னு தெரியுது ஹைட்டு வித்தியாசம். அதை மட்டும் கொஞ்சம் அவாய்டு பண்ணியிருக்கலாம்.

சூர்யா ரசிகர்கள் கோச்சுக்கலைன்னா எனக்கு வந்த ஒரு எஸ்.எம்.எஸ்ஸை சொல்றேன். "சூர்யா: சிங்கத்தை காட்ல பாத்திருக்கியா.. ஓங்கி அடிச்சா ஒன்றை டன் வெயிட்ரா.. அனுஷ்கா: ஹைஹீல்ஸ் போடாமலேயே உன்னவிட நான் ஹைட்ரா".. திரும்பவும் ஸாரி.. கோச்சுக்காதீங்கப்பா.. எனக்கும் சூர்யாவைப் பிடிக்கும்..

மத்தபடி எல்லாம் ஓக்கே. B, C சென்டர் ஆட்களும் வேணும்ல. ஆனா அடுத்த படத்துல உங்க வழக்கமான அடக்கமான நடிப்பால இதை காம்பன்ஸேட் பண்ணிடுங்க சூர்யா ப்ளீஸ். காது வலிக்குது.. கண் எரிச்சலா வேற இருக்கு.. இன்னும் ரெண்டு நாளாகும் போலிருக்கு சரியாக...

சனி, 5 ஜூன், 2010

டீமேட். ஏன்? எதற்கு?

ஷேர் மார்க்கெட்டில் அடிக்கடி டீ-மேட் ஷேர், டீ-மேட் அக்கவுண்ட் என்று சொல்லிக் கொண்டிருப்பார்கள். அப்படி என்றால் என்னவென்று பல பேருக்குப் புரிவதில்லை. கேட்கவும் கூச்சமாக இருக்கும். என்னய்யா? இலட்சங்களில் டிரேடிங் செய்கிறீர்? டீ-மேட் தெரியாதா என்று கேட்டு விட்டால் அசிங்கமாகப் போகுமே என்று பொத்தாம் பொதுவாக தலையாட்டி விட்டுப் போவார்கள். ஷேர் வாங்கினோமா, விற்றோமா? இலாபமோ நஷ்டமோ வந்ததா? புலம்பி விட்டு வீட்டுக்குப் போனோமா என்றே இருப்பார்கள் பலர். ஆனால் இது ரொம்ப சிம்பிள் விஷயம். புரிந்து கொள்வதும் சுலபம் தான். ஒரு சிம்பிள் உதாரணத்தோடு பார்த்தால் இன்னும் தெளிவாகப் புரியும்.மெட்டீரியல் என்றால் பொருள். டீ-மெட்டீரியல் என்றால் அந்தப் பொருளை இல்லாமல் ஆக்குவது. உங்களிடம் பணம் இருந்தால் எங்கே கொண்டு போய் வைப்பீர்கள். கொஞ்சமாக இருந்தால் பாக்கெட்டில் வைத்துக்கொள்ளலாம். ஆனால் ஒரு ஐம்பதாயிரம் ரூபாய் கையில் இருந்தால் பாக்கெட்டில் வைத்துக்கொண்டா திரிய முடியும். பேங்கில் போட்டு வைப்பீர்கள் அல்லவா? அதற்கு என்ன அத்தாட்சி? வங்கிக் கணக்குப் புத்தகம். அதையும் பாக்கெட்டில் வைத்துக் கொண்டு திரிய முடியாது. பணம் பரிவர்த்தனை செய்ய என்ன வழி? அதற்குத்தான் செக் புத்தகம் கொடுத்தார்கள். சரி. ஓக்கே! ஆனால் அவசரமாக அகால நேரத்தில் பணம் தேவைப்பட்டால்? என்ன வழி? அதற்கும் ரொம்ப நாள் யோசித்து டெபிட் கம் ஏடிஎம் கார்டு கொண்டு வந்தார்கள். அதாவது, பொருளாக / மெட்டீரியலாக, அதாவது நாணயங்களாக இருந்த பணத்தை டீ-மெட்டீரியலாக ஆக்கினார்கள். இப்போது உங்களிடம் இருப்பவை வெறும் எண்களே!

இன்னோரு விஷயம். ஏடிஎம் கார்டு மூலம் நம் காசை, நம் கைக்காசை மட்டும் தான் செலவு செய்ய முடியும். நூறு இருநூறு, அல்லது அதற்கு மேலே, சேர்த்து செலவு செய்ய வேண்டுமென்றால்? அப்போ கடன் அட்டை ஒன்று உருவாக்கினால் நன்றாக இருக்குமல்லவா? ....க்கினார்கள். இந்தா வைத்துக்கொள் என்று கொடுத்தார்கள். எவ்ளோ வேணா செலவு செய் என்றார்கள். முப்பது நாளோ ஐம்பது நாளோ கழித்து கட்டு. போதும். (கட்ட முடியவில்லையா? அப்படி வா வழிக்கு. அதுதான் வேணும் எனக்கு என்று வட்டிக்குட்டியை பெற்றுப்போடுகின்றது நாம் செய்த கடன்) இன்னும் ஒன்றே ஒன்று தான் பாக்கி. கைரேகையை வைத்தே ஏ.டி.எம் மில் பணம் எடுக்கவோ, பணம் செலவு செய்யவோ வசதி வந்தால் நன்றாக இருக்கும்.. ஃபோர்ஜரி (ஏமாற்றம்) நடக்க வாய்ப்புண்டு என்றால் ரெட்டினா ஸ்கேன் (கண் பாப்பா) வசதி கொண்டு வரப் பாருங்களேன். இன்னும் வேலை சுலபமாகிப் போகுமே..

சரி. அதை விடுங்கள். பண விஷயத்துக்கு வருவோம். அதாவது நான் சொல்ல வந்தது என்னவென்றால் நாம் உபயோகப் படுத்தும் ரூபாய் நோட்டுக்களே கிட்டத்தட்ட டீ-மெட்டீரியல் தான். ஆதி காலத்தில் பொருளுக்குப் பொருள், அதாவது உப்பு, புளி, பருப்பு, புளியாங்கொட்டை போன்றவை பணமாக செயல்பட்டு பரிமாற்றம் செய்யப் பட்டன. நீண்ட நாள் கழித்து ஷெர்ஷா சூரி காலத்தில் தான் நாணயங்கள் என்று ஒரு வடிவத்தை உருவாக்கி அவை அச்சிடப்பட்டு வெளியிடப் பட்டன. ஆரம்பத்தில் ஆச்சரியமாகவும், சந்தோஷமாகவும் நாணயங்களை உபயோகித்தவர்கள் நாளாக நாளாக இவ்வளவு எடையாக இருக்கிறதே இதைத் தூக்கித் திரிய முடியாது என்று புலம்ப ஆரம்பித்தார்கள். ஆக வேறு என்ன செய்யலாம்?

இங்கே தான் நமக்கு உதவினான் நம் பக்கத்து வீட்டு சைனாக்காரன். பேப்பர் / காகிதம் என்ற ஒன்றை உருவாக்கிக் காண்பித்தான் அவன். நம்மாட்களும் நாமும் ஏன் அதை உபயோகித்துப் பார்க்கக் கூடாது என்று முடிவு செய்தார்கள். பணம் காகிதத்தில் அச்சிடப்பட்டது. காகிதமா? காகிதத்தில் அச்சடித்தால் அது பணம் தான் என்று என்ன ருசு? மக்கள் பயந்தார்கள். மக்கள் பயத்தைப் போக்க அவற்றில் ஒரு ஒழுங்கு முறை ஏற்படுத்தப் பட்டது. மேலும் மேலும் ரூபாய் நோட்டுக்கள் மேம்படுத்தப் பட்டன. மக்களிடையே பிரபலப் படுத்தப் பட்டன.

அதை விடப் பெரிய பிரச்சினை... காகிதத்தில் அச்சடித்தால் யார் பொறுப்பேற்பது? நீங்களோ நானோ கோடி வீட்டு காமேஸ்வரனோ பொறுப்பேற்க முடியுமா? அதற்கு ஒரு ஆள் வேண்டாமா? யார்? கவர்னர் என்று முடிவானது. எந்த ஊரு கவர்னர்? உங்க ஊரா? எங்க ஊரா? பணத்தைக் கையாள்கிற பெரிய தலை யாரு? ரிஸர்வ் பேங்க் தானே. அப்போ அதோட கவர்னரை போடச் சொல்லு.. என்று முடிவாகியது. உங்கள் பாக்கெட்டில் இருந்து ஒரு நூறு ரூபாயை உருவிப் பாருங்கள். அதில் "இந்தக் காகிதத்தை வைத்திருப்பருக்கு நூறு ரூபாய் மதிப்புள்ள பொருளைத்தர நான் ஒப்புக்கொள்கிறேன்" என்று கவர்னர் கையெழுத்துப் போட்டிருப்பார். ஆக நாம் வைத்திருப்பது நூறு ரூபாய் இல்லை. நூறு ரூபாய் மதிப்புள்ள நோட்டு, வெறும் பேப்பர். இதுதான் டீ-மெட்டீரியல். சுருக்கமாக டீ-மேட்.

அதே கான்செப்ட் தான் இங்கு ஷேர் மார்க்கெட்டிலும். பொருளாக / மெட்டீரியலாக, அதாவது பேப்பர் பத்திரங்களாக பரிவர்த்தனை செய்யப் பட்டுக்கொண்டிருந்த ஷேர் டாக்குமெண்டுகளை டீ-மெட்டீரியலாக அதாவது பேப்பர் இல்லாமல் எலக்ட்ரானிக் முறையில் நம்பர் சிஸ்டத்துக்கு மாற்றினார்கள். NSE (தேசிய பங்குச் சந்தை) இதற்கு பெரும் பங்களித்தது. இம்முறையில் ஏற்பட்ட வெற்றி மற்றும் தெளிவுத்தன்மை (transperency) காரணமாக வேறு வழியின்றி BSE யும் பின் தொடர வேண்டியதாயிற்று. பங்கு பத்திரங்கள் மூலமாக நடைபெற்றுக் கொண்டிருந்த மோசடிகள் குறைக்கப் பட்டு டூப்ளிகேட் பிரச்சினைகளுக்கு முழுதாக ஒரு பெரிய முற்றுப்புள்ளி வைக்கப் பட்டது.

இப்போது ஷேர் மார்க்கெட்டில் நீங்கள் வாங்கும் கம்பெனியின் பேப்பர் பத்திரங்களை எங்கும் தூக்கிச் சுமக்க வேண்டாம். அவற்றை எலக்ட்ரானிக்கில் மாற்றி நம்பராக உங்களிடம் சொல்லி விடுவார்கள். அந்த நம்பரை நினைவு வைத்திருந்தால் போதும். இந்தியாவில் எங்கு போனாலும் அதைச்சொல்லி உங்கள் ஹோல்டிங் (கையிருப்பு)கை பார்த்துக்கொள்ளலாம். திருடு போகவோ, தொலைந்து போகவோ, எரிந்து போகவோ, எலி கடிக்கவோ வாய்ப்பில்லை. என்ன ஒன்று? அவற்றை விற்று பணமாக்க வேண்டுமென்றால் அது உங்கள் எண்தான் என்பதற்கான சான்று தர வேண்டும். (அது ஏற்கனவே உங்களிடம் கொடுக்கப் பட்டிருக்கும்) பின்னே? உங்கள் நம்பரைச்சொல்லி வேறு யாராவது விற்று விட்டால்? அதற்குத்தான் இந்த ஏற்பாடு.

டீ-மேட் கணக்கு துவங்குவது எப்படி?

ரொம்ப சிம்பிள். பதிவு பெற்ற ஏதேனும் ஒரு புரோக்கரிடம் செல்லுங்கள். இன்றைய தினம் எல்லா பெரிய நிறுவனங்களும் புரோக்கிங் நிறுவனங்கள் துவங்கி நடத்தி வருகின்றன. ரிலையன்ஸ், பிர்லா முதல் ஏபிசி பிரைவேட் லிமிடெட் வரை பல நூறு நிறுவனங்கள். எல்லா ஊரிலும் இன்று பல நிறுவனங்களின் கிளைகள் இருக்கின்றன. சந்தோஷமாகச் செய்து தருவார்கள். அதுதானே அவர்கள் வேலை. அவர்கள் கேட்கும் சில ஆவணங்கள் மட்டும் தர வேண்டியிருக்கும். பான் கார்டு கட்டாயம் தேவை. இருப்பிடத்தை நிரூபிக்க இருப்பிடச் சான்று. உங்கள் முகத்தை அவர்கள் நினைவு வைத்துக்கொள்ள இரு புகைப்படங்கள். பணப்பரிவர்த்தனை செய்ய வங்கிக் கணக்கு கண்டிப்பாக வேண்டுமே. அதன் சான்று. பணம் கொடுக்க செக் லீஃப். அவ்வளவுதான்.

கூடுதலாக மார்க்கெட் ரிஸ்க்(சந்தை அபாயம்)கை விளக்கும் பத்திரங்கள் புத்தகத்தில் பிரிண்ட் அடிக்கப் பட்டிருக்கும். (முடிந்தால் படித்துப் பார்த்து விட்டு) கையெழுத்துப் போட வேண்டும். சுமாராக இருபது, இருபத்தைந்து (புரோக்கரைப் பொறுத்து) கையெழுத்துக்கள் போட வேண்டியிருக்கும். மாட்டுக்கு ஒரு கையெழுத்தா? எத்தன..............? விட்டா மடுவுக்கு ஒண்ணு கேப்பீங்க போலருக்கு? என்று வடிவேல் புலம்புவது போல புலம்ப வேண்டியிருந்தாலும் வேறு வழயில்லை. கையெழுத்துப் போட முடியாது என்று சொல்லி வேறு புரோக்கரிடம் போனால் அவரும் ஒரு கட்டு டாக்குமெண்டுகளை நீட்டுவார். ஒன்றிரண்டு க்ளாஸ் (முக்கியமான வரிகள்) மாறியிருக்கும், அவ்வளவுதான்.

ஆக பங்குச் சந்தையில் பங்குகளை வாங்கி வைக்க டீ-மேட் கணக்கு தேவை என்று புரிந்து கொண்டீர்களா? டீ-மேட் அக்கவுண்ட் என்பது ஒரு பெட்டி போல, லாக்கர் போல. ஷேர்களை வாங்கி அவற்றில் டெபாஸிட் செய்து வைக்கலாம். விற்க வேண்டுமென்றால் எடுத்து விற்றுக்கொள்ளலாம். அந்த அக்கவுண்டை உங்களுக்கு வழங்கும் நிறுவனங்களை டெபாஸிட்டரி என்பார்கள். இந்தியாவில் NSDL, CDSL என்று இரு டெபாஸிட்டரிகள் உள்ளன. இவற்றிற்கு கிளைகள் கிடையாது. ஆகவே DP - Depository Participant எனத் தன்னிடம் பதிவு செய்துள்ள நிறுவனங்கள் (புரோக்கர்களும் உண்டு) மூலம் இந்த வசதியை வழங்குவார்கள். எப்படி உங்களுக்கு விருப்பப்பட்ட வங்கியில் சேமிப்புக் கணக்கு துவங்குகிறீர்களோ அது மாதிரி இவை இரண்டில் எவற்றில் வேண்டுமானாலும் கணக்கு துவங்கிக் கொள்ளலாம். பெரிய வித்தியாசம் ஒன்றும் இல்லை. நீங்கள் சந்தித்த புரோக்கரிடம் அந்த வசதி உள்ளதா என்று மட்டும் பார்த்துக்கொள்ளவும்.

ஆனால் டீ-மேட் அக்கவுண்டில் டிரேடிங் (பரிவர்த்தனை) செய்ய இயலாது. அப்படி என்றால்? குழம்பாதீர்கள். இதுவும் சிம்பிள் தான். அதே புரோக்கரிடம் ஒரு (பரிவர்த்தனை) டிரேடிங் அக்கவுண்டும் ஆரம்பிக்க வேண்டும். இந்த டிரேடிங் அக்கவுண்ட் மூலம் NSE, BSE என்ற இரண்டு சந்தைகளிலும் ஷேர் பரிவர்த்தனை செய்ய முடியும. டீ-மேட் அக்கவுண்டும் டிரேடிங் அக்கவுண்டும் அக்கா தங்கை (உடன்பிறவா சகோதரிகள்) போல. இரண்டும் இருந்தால் தான் ஷேர் பரிவர்த்தனை செய்ய முடியும். வாங்கும் போது டிரேடிங் அக்கவுண்ட் மூலம் வாங்கி டீ-மேட்டில் அக்கவுண்டில் வைத்துக் கொள்கிறீர்கள். விற்கையில் டீ-மேட்டில் அக்கவுண்டில் இருந்து எடுத்து டிரேடிங் அக்கவுண்ட் மூலம் விற்கிறீர்கள்.

-------

நண்பர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள். தமிழிஷில் ஓட்டும் போடுங்கள். மறக்காமல்.

-------
-------

கல்லா கட்டும் இடியட் பாக்ஸூகளும் இன்னுமோர் புது வரவும்

இடியட் பாக்ஸ் என்றால் என்னவென்று தெரியாதவர்களுக்காக முன்னுரையில் ஒரு சிறு முன் குறிப்பு. இடியட் பாக்ஸ் என்றால் வேறொன்றும் இல்லை, நமது தொல்லைக்காட்சிப் பெட்டிதான். பெட்டி முன்னால் உட்கார்ந்து எதையாவது கொறித்தபடி வெறித்துப் பார்த்துக்கொண்டிருக்கும் நம்மை விடாமல் முட்டாளடிக்கிறார்கள் அல்லவா? அதுதான் அந்தப் பெயர். தமிழ் இலக்கணப்படி சொன்னால் காரணப் பெயர் அது. சரி. சரி. விஷயத்திற்கு வருகிறேன். அதாகப் பட்டது மக்களே......


தமிழ் கூறும் நல்லுலகிற்கு இன்பமளிக்க.. இருக்கும் டி.விக்கள் போதாதென்று இன்னுமோர் டி.வி உதயம். இந்த முறை களத்தில் இறங்கி கலக்கவிருப்பது நம்ம கேப்டன். அட.. கேப்டன் தோனி இல்லீங்கோ. அவருக்கு எதுக்கு இந்த வேலை? இது நம்ம ஊரு கறுப்பு எம்.ஜி.ஆர் விஜயகாந்த். இந்த அதிரடித் திட்டத்தோடு வரும் ஏப்ரல் மாதம் 14ம் தேதி (தமிழ்ப்புத்தாண்டு?) அன்று களம் இறங்குவதாய் அறிவித்திருக்கிறார் அவர்.

இன்னோரு டி.வியா? இருக்கறதப் பாக்கவே நேரம் பத்தலை என சலித்துக் கொள்ளும் மக்களே... வருத்தப் படாதீர்கள். இதையெல்லாம் தவிர்க்க முடியாது. இதனால் யாருக்கு இலாபம் என்கிறீர்களா? சந்தேகமே இல்லை, அவர்களுக்குத் தான். நிகழ்ச்சிகளுக்கென ரெடிமேடாக ஒரு நல்ல ரெஸிபி வைத்திருக்கிறார்கள். திங்கள் முதல் வெள்ளி வரை சில பல சீரியல்கள். வாரம் இரண்டு புதுப்படங்கள். விடாமல் தினமும் புதுப்பாடல்கள், தினசரி இரண்டு முறை நியூஸ், கட்சி சார்பாக இருந்தால் நாலைந்து கட்சி நிகழ்ச்சிகள், பத்து மணிக்கு மேல் பலான டாக்டர்கள், விறுவிறு சுறுசுறுவென்று ஏதாவது ஹாட் டாபிக் விவாதங்கள், அவ்ளோதான் பேக்கேஜ் தயார். பைசா வசூல். நல்ல காசு.

எல்லாரும் இதே பேக்கேஜை வைத்துக்கொண்டு லோகோவையும், பெயரையும் மட்டும் மாற்றி மாற்றிப் போட்டு ஓட்டிக்கொண்டிருக்கிறார்கள். அழகாக கல்லா கட்டுகிறார்கள் அவர்கள். கம்பேனி ரகசியம் புரியாமல் ஆ-வென்று வாய் பிளந்து எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருக்கிறான் தமிழன்.

அது சரி, என்னதான் செய்வான் அவனும்? செய்வதற்கு வேலை இருக்கிறதோ இல்லையோ? ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி, உடுத்திக்கொள்ள இலவசமாய் வேட்டி, சேலை, மலிவு விலையில் மளிகை சாமான், தெரு முக்குகளிலேயே டாஸ்மாக், வருடத்திற்கொரு முறை தலைவர்கள் கையால் சீர், செனத்தியுடன் திருமணம், பெண் குழந்தை பிறந்தால் உதவித்தொகை, உடம்பு சரியில்லையா? இந்தா "உயிர் காக்கும் உயர் சிகிச்சைக்கு மருத்துவக் காப்பீடு", குழந்தைகளுக்கு பள்ளியில் சத்துணவு, எல்லாம் போக மீதி எதையும் யோசிக்காமல் பொழுதைப் போக்க வண்ணத் தொலைக்காட்சிப் பொட்டி என்று சகலமும் இலவசமாய் கிடைக்கிறது. வேறென்ன தான் செய்வது? உட்கார்ந்து காலாட்டிக்கொண்டே மானாட மயிலாட பார்க்க வேண்டியது தான்.

இதே யூத்ஃபுல் விகடனில் என்னுடைய "மிலே சுரு மேரா துமாரா" (தூர்தர்ஷன் பார்த்த அனுபவங்கள்) கட்டுரையை கொஞ்சம் நினைவுபடுத்திப்பாருங்க மக்களே. பொழுது போக்க தோப்பு, துரவுக்கும், நாலு கிலோ மீட்டர் தள்ளியிருந்த பார்க்குக்கும், பதினோரு மணி மலையாளப் படத்திற்கு தலையில் துண்டைப் போட்டு போன காலம் போய், வீட்டிலேயே பொழுது போக்க ஏதாவது (ஒரு டி.வி?) இல்லையா என்று அமெரிக்காவை பார்த்து ஏங்கிய காலம் ஒன்று இருந்தது. இப்போது அந்த ஏக்கமெல்லாம் காணாமல் போய் அடப்போங்கடா... எதைத்திருப்பினாலும் ஒரே மாதிரி இருக்கே என்று அலுத்துக்கொள்ள வைக்கும் அளவு டி.விக்களையும் அதில் ஒரே மாதிரி நிகழ்ச்சிகளையும் அளித்து அசர வைத்துக் கொண்டிருக்கிறார்கள் நம்மை.

என்ன ஒன்று.. அவர்களுக்குள் போட்டி கொஞ்சம் கடுமையாகத்தான் இருக்கும். எப்படியாவது் காசு சம்பாதித்து விட வேண்டும் என்று பார்க்கிறார்கள். மற்ற டி.விக்களை காப்பியடித்தாவது நிகழ்ச்சிகள் செய்து ரசிகனைத் தக்க வைக்கும் முயற்சிகள் செய்கிறார்கள். அவர்கள் புத்திசாலிகளே. உண்மையில் முட்டாளாவது ரசிகன் தான்.

ஏற்கனவே பல வருடங்களாய் பழம் தின்று கொட்டை போட்டு மரம் வளர்த்து வைத்திருக்கும் பிரபல டி.விக்கள், மொழி புரியாவிட்டாலும் ரசிக்க வைக்கும் ஸ்டார் மூவீஸ், எச்.பி.ஓ வகையறாக்கள், கிரிக்கெட்டை மட்டுமே போட்டுத் தள்ளி பணம் பார்க்கும் சோனி பிக்ஸ், நியோ கிரிக்கெட் போன்றவை, தமிழில் தனி சேனலே ஆரம்பித்து நடத்தும் ஸ்டார் (விஜய்), ஜீ (தமிழ்) நிறுவனங்கள், தன் ஆங்கில நிகழ்ச்சிகளை அப்படியே டப்பிங் செய்து காண்பிக்கும் டிஸ்கவரி தமிழ், புடவைக்கடை தள்ளுபடி முதல் புத்தக வெளியீடு வரை லோக்கல் ஸ்பெஷலாய் நிகழ்ச்சிகளை அடித்துத் துவைக்கும் லோக்கல் டி.விக்கள், எக்ஸ்ட்ரா காசு கொடுத்தால் நமக்கு மட்டும் புதுப்படம் போட்டு விடும் டி.டி.எச்-சுகள்... என்று பலமான போட்டி இருக்கிறது அவர்களுக்குள்.

இது போக, பாலியல் கல்வியையும், கேள்வி பதில்களையும் நடுநிசியில் ரகசியமாய் தந்து வந்த செக்ஸாலஜிஸ்டுகளுக்கும், ரோட்டுக்கடை ரேஞ்சிலான கசமுசா செக்ஸ் டாக்டர்களுக்கும் போட்டியாக வீட்டு வரவேற்பறையில் 24 மணி நேர நித்யானந்தா, கல்கி வகையறா வீடியோக்கள் வேறு. (அடிங்கடா... அடிங்க... ரத்த விளாறா அடிங்க)

இவற்றையெல்லாம் மீறி ஒரு புதிய சேனல் நம் மக்களின் கவனம் கலைத்து தன் பக்கம் இழுப்பதென்பது ரொம்பக் கஷ்டம். இப்போது ஆளாளுக்கு ப்ளாக் வைத்திருப்பது மாதிரி... நானும் டி.வி வைத்திருக்கிறேன் என்று சொல்லிக்கொள்ளலாம்.

ஆனால், எந்த ஒரு நிறுவனமும், அரசியல் கட்சியும் தன் சார்பாக டி.வி ஆரம்பிக்கும் போது ஆரம்பத்தில் ரசிக்கும் மக்கள் போகப்போக சலித்துப்போய் போடா என்று சொல்லத் துவங்கி விடுகிறார்கள். ரிமோட்டைக் கையோடு வைத்துக் கொண்டு டார்ஜான் ரேஞ்சுக்கு தாவு தாவென்று தாவுகிறார்கள், என்ன மரத்துக்குப் பதில் டி.வி சேனல், அவ்வளவு தான்.

நாமும் அதே மாதிரி செய்வோம். மற்றபடி நமக்கென்ன கஷ்டம் என்கிறீர்களா? ஒன்றைப் புரிந்து கொள்ளுங்கள். எது எப்படிப் போனாலும் கடைசியில் விடிவது சாமானியர்களின் தலையில் தானே. சேனல்களின் எண்ணிக்கை பெருகப் பெருக இப்போது நிகழ்ச்சிகளின் ரேட்டிங்கைக் கணித்துத் தரும் டி.ஆர்.பி வகையறாக்கள் எல்லாம் நாளாக நாளாக புளித்துப் போன மாவு கதையாகி விடும். ஆளாளுக்கு அடித்துக்கொண்டு அதைக் காலாவதியாக்கி விடுவார்கள். சாதாரண பாமரன் எந்த சேனலைப்பார்க்கிறான் என்று தெரியாமல் எல்லா சேனல்களிலும் விளம்பரம் தரும் பெரு நிறுவனங்கள் தன் பொருட்களின் விலையை மெள்ள மெள்ள உயர்த்தத் துவங்கும். விளம்பரச் செலவை எப்படி எடுப்பது? ஏற்கனவே (கொஞ்சம் நல்ல) அரிசியின் விலை மட்டுமே கிலோ 35ஐ தாண்டிப் போய்க் கொண்டிருக்கிறது.... மற்ற பொருட்கள்? இப்படி விளம்பரக்காசையெல்லாம் விலையில் சேர்த்தால்?? பிம்பிளிக்கி பிளேப்பி தான்...

இன்னோரு மேட்டர் தெரியுமா உங்களுக்கு? இந்த வருடம் ஐ.பி.எல் போட்டிகளில் புதிதாய் இரண்டு டீம்கள் உருவாக்கப் பட்டு அவை தலா 1700 கோடிக்கும் 1500 கோடிக்கும் விலை போயிருக்கின்றனவாம். இதனால் எனக்கென்ன என்கிறீர்களா? அந்தக் காசையெல்லாம் எங்கேயிருந்து எடுப்பார்கள் அய்யா? எல்லாம் டி.வி பார்த்துக் கொண்டிருக்கும், உங்கள் பாக்கெட்டிலும் என் பாக்கெட்டிலும் இருந்து தான்.

கைதட்டி, விசிலடித்து நீங்கள் வளர்த்து விட்ட சினிமா ஹீரோவும், தன் நாலைந்து வருட வெளிச்ச வாழ்க்கைக்குள் செட்டிலாகத் துடிக்கும் நடிகைகளும், எப்படியாவது மீடியாக்கள் மூலம் புகழடைந்து விடும் வி.ஐ.பிக்களும், இந்த லிஸ்டில் புதிதாய் சேர்ந்திருக்கும் விளையாட்டு வீரர்களும், பிரபல கம்பெனிகளுக்கு பிராண்ட் அம்பாஸிடர்களாகி கோடிகளில் வாங்கி செட்டிலாகிக்கொண்டு இருக்கிறார்கள். அவர்களுக்கு எதைத்தொட்டாலும் காசு தான்.. வந்து விட்டுப் போவதெல்லாம் சும்மா இல்லை. பில் போடுவார்கள். நடித்தால் ஒரு ரேட்டு, ரிப்பன் வெட்டினால் ஒரு ரேட்டு, சும்மா வந்து போனாலே ஒரு ரேட்டு. அந்தக் காசெல்லாம் பொருட்களின் விலையில் தானே சேரும்? ஒற்றை ரூபாய் மதிப்புள்ள சாயத் தண்ணீரை ஒன்பது ரூபாய் கொடுத்துக் குடித்துக்கொண்டிருக்கிறோமே....போதாது இந்த ஒற்றை உதாரணம்?


கோக்கும், ரெட் புல்லும் குடித்துக்கொண்டே பாப் கார்ன் கொறித்தபடி 250 ரூபாய் டிக்கெட்டில் சினிமாவும், 5000 ரூபாய் டிக்கெட்டில் கிரிக்கெட்டும் பார்க்கும் மேட்டுக்குடி வர்க்கம் இதைப்பற்றிக் கவலைப்படப் போவதில்லை. எங்கு எது நடந்தாலும் அடிவாங்கி பொட்டியைத் தூக்கிக் கொண்டு திரியப் போவது சாதாரணன்தான்.

இவற்றால் ஏதோ ஒரு விதத்தில் மட்டும் மக்களுக்கு ஒரு சிறிய நன்மை இருப்பது போலத்தான் தெரிகிறது. என்ன அது? தனக்குத் தேவையான நிகழ்ச்சிகளை மட்டும் தேர்ந்தெடுத்துப் பார்க்க ரசிகனைத் தேடி வீடு தேடி வந்து வாய்ப்புகளைத் தருகின்றன இவை. ஆனால் முடியுமா? போதை மருந்து என்றான பிறகு அதிலிருந்து வெளியேறுவது சாமானியமா என்ன? கொஞ்சம் கஷ்டம் தான்.

ஆனால், இதெல்லாம் போகட்டும். கொஞ்சம் டி.வியை அணைத்து விட்டு வெளியே வந்து சுற்றிலும் கவனியுங்கள். படிக்கிற பிள்ளைகள் படித்துக் கொண்டு தான் இருக்கிறார்கள். பரீட்சை ரிசல்ட்டன்று ஸ்டேட் ஃபர்ஸ்டு நியூஸ் பேப்பரும், கையில் விசா பேப்பரோடு வருபவர்களால் அமெரிக்கன் எம்பஸி வாசலும், டி.என்.பி.எஸ்.சி எழுதக் குவியும் மாணவர்களால் கன்னிமாரா, பிரிட்டிஷ் கவுன்சில் லைப்ரரிகளும் இன்னும் நிரம்பிக் கொண்டுதான் இருக்கின்றன. ராணுவம் சேரும், அமெரிக்கா பறக்கும், பேடண்ட் வாங்குமளவு பொருள் கண்டுபிடித்து அவார்டு வாங்கும் புதிய தலைமுறை எதையேனும் மீண்டும் மீண்டும் சாதித்துக்கொண்டுதான் இருக்கிறது.

என்ன செய்யலாம்? இடியட் பாக்ஸை வைத்துக் கொண்டு? யோசியுங்கள். எல்லாம் நம் கையில் தான் இருக்கிறது.

-----------------------------------
படித்தாயிற்றா? ஒரு உதவி பண்ணுங்கள்? என்ன உதவியா? உங்களை நான் என்ன கேட்கப்போகிறேன். இன்ட்லியில் ஒரே ஒரு ஓட்டு, அவ்ளோதான். நன்றி.
-----------------------------------

தொலைக்கப் படும் பால்யம்

பால்யம் என்றுமே சுவாரசியமானது, எவருக்குமே..... அன்புன்னா என்னன்னு அதை அனுபவிக்கும் போது தெரியாது என்று ஒரு திரைப்படத்தின் வசனம் சொல்லும். அதுபோல், இழக்க விரும்பாத ஆனால் இழந்தே தீர வேண்டிய அனுபவம் அது. காசிக்குப் போனால் பிடித்த ஒன்றை பிடிக்காமல் விட்டு வர வேண்டும் என்பது போல பிடித்தும் பிடிக்காமல் போகும் பிடித்த விஷயமும் அது.

மர அலமாரியில் வைத்த பாச்சா உருண்டை மெல்ல மெல்லக் கரைந்து போன போதும் எஞ்சியிருக்கும் அதன் வாசம் அலமாரி திறக்கையில் முகம் மோதுவது போல என்றென்றும் நம்மிடம் மிச்சம் நிற்கும் பால்யத்தின் எச்சம். குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பாவின் படைப்புகள், கி.ரா வின் பிஞ்சுகள் மற்றும் கதவு, தங்கர்பச்சானின் அழகி, வசந்த பாலனின் வெயில், சசியின் பூ உள்ளிட்ட படைப்புக்கள் நம் முன் நிறுத்திய சுவையான பால்யம் அத்தனை அழகானது. அம்புலி மாமாக்களுடன் வளர்ந்த அன்றைய இளம் தலைமுறை நினைத்துப்பார்க்க இன்றைக்கு காணக்கிடைக்காத விஷயங்கள் பல உண்டு.

பெட்ரோல் எங்கே கிடைக்கும் என்று கேட்டபோது எல்லா பெட்ரோல் பங்கிலும் கிடைக்கும் என்று சொன்ன சர்தார்ஜி ஜோக்கைப் போல அரிசி எங்கிருந்து கிடைக்கின்றது என்ற கேள்விக்கு இன்றைய இளைய தலைமுறை யின் பதில் "ரிலையன்ஸ் ஃப்ரெஷ் அங்கிள்".

கெலாக்ஸ் சாப்பிட்டபடியே சோஃபாவில் படுத்துக்கொண்டு வாரான் வாரான் பூச்சாண்டியும், டோரா புஜ்ஜியும், ஜோடி நம்பர் ஒன்னும் பார்க்கும் இன்றைய இளம் தலைமுறை பழைய சில தலைமுறைகள் அனுபவித்த பல அனுபவங்களை பெற முடிகிறதா அல்லது உண்மையிலேயே இழக்கின்றதா?

அம்புலி மாமா சொன்ன அதிசயக் கதைகள் கேட்டும், சிறுவர் மலர் தந்த கதைகள் படித்தும், ஞாயிறு மாலை தமிழ்த் திரைப்படமும், வெள்ளி இரவு ஒலியும் ஒளியுமும் மட்டுமே பார்த்து வந்த தலைமுறையும் இங்கே தான் இருக்கிறது.. அதுவும் வழக்கத்தில் இல்லாத போது, தெருக்குழந்தைகளோடு கூடி ,"பூ பறிக்க வருகிறோம்","பாண்டியாட்டம்","திருடன் போலீஸ்" "கல்லா மண்ணா" "தாயம்" ,"பல்லாங்குழி" என்று செயல் முறை விளையாட்டுக்களில் (அப்ளிகேஷன் ஓரியன்டட்....) மட்டுமே கவனம் செலுத்திய ஒரு தலைமுறையும் இன்னமும் மிச்சமிருக்கிறது.

முந்தைய தலைமுறைகள் ஒன்று கூடும் நேரங்களில் நினைத்துப் பார்க்கவும், எண்ணிப் பார்க்கவும், சொல்லிப் பார்க்கவும் ஆயிரம் விஷயங்கள் இருக்கின்றன. அதன் ஒற்றை உதாரணமாய் எம் நண்பர் குழாமின் சமீபத்திய நினைவூட்டல்கள் இவை.

பிஞ்சு மாங்காயும் அக்காவுக்கு செம்பருத்திப் பூவும் பறிக்க பின்புறத் தோட்டத்து மதில் சுவரில் ஏறிக் குதித்து சுவரில் இருந்த ஆணி பின் தொடையில் கிழித்து நாலு இன்ச்சுக்கு காயமானது. எதிர் கேங்குடன் சண்டை போட்டு அவர்கள் துரத்தத் துரத்த தெருவெங்கும் ஓடி கீழே விழுந்து முழங்காலில் ரத்த் சொட்டச் சொட்ட காயம் வாங்கியது.

ஆற்று மணலில் ஆளுயர சப்பரமும், கோவிலும் கட்டி அதில் களிமண்ணில் லிங்கம் செய்து இருட்டும் வரை விளையாடி தலையெல்லாம் மண்ணாகி வாரக்கணக்கில் அரிக்கும் தலையோடே திரிந்தது. விளையாட்டுச் சண்டையில் பக்கத்து தெருப் பையனின் மண்டையை உடைத்து அவனை மிரட்டி கீழே விழுந்ததாய்ச் சொல்லச் சொல்லி காயம் ஆறும் வரை அவர்கள் வீட்டுப்பக்கம் போகாமல் இருந்தது.

கால்சட்டைப் பை நிறைய பாதாம் கொட்டைகளை நிரப்பி விளையாடி மரம் ஏறி புளியாங்காய் பறித்து நாய் துரத்த ஓடி தவறி அதன் மேலேயே விழுந்து அது தங்களைப் பார்த்து அலறி ஓடியது. ஸ்குரூ டிரைவரை ப்ளக் ஹோலில் விட்டு ஸ்விட்சைப் போட்டு கரண்ட் ஷாக் வாங்கி ஒரு வாரம் ஸ்கூலில் பெருமையாய்ச் சொல்லித்திரிந்தது. தங்கச்சியை சைக்கிள் வீல் சுற்றச்சொல்லி கையை வீலுக்குள்ளே விட்டு ரத்த காயம் வாங்கியது.

பட்டுப் போன மாமரத்தின் பருத்த வேர் தண்டுகளைப் பார்த்து பேயென்று பயந்து நாலு நாள் ஜூரத்தில் படுத்தது. காலரா ஊசி போட வந்த இன்ஸ்பெக்டருக்குப் பயந்து பரணில் ஏறி பாட்டியின் பழைய துணி மரப்பெட்டியில் ஒளிந்தது. ஸ்கூல் கிரவுண்டில் புகுந்த பாம்பை உயிருடன் பிடிப்பதாய் சவால் விட்டு நாலு மணி நேரம் அதனுடன் போராடி போக்குக் காட்டி உயிருடன் பிடித்து ஜூவாலஜி சாரிடம் கொடுத்து பாராட்டு வாங்கியது.

இருபத்தைந்து பைசா கமிஷனுக்காக எதிர் வீட்டு அண்ணனின் காதலுக்குத் தூது போய் பக்கத்து தெரு அக்காவுடன் ஃபிரண்டானது. அப்பாவிடம் பத்து பைசாவும், அம்மாவிடம் அஞ்சு பைசாவும் தங்கச்சிக்குத் தெரியாமல் வாங்கி கோவில் சந்தில் அவளுக்குத் தெரியாமல் பால் ஐஸ் வாங்கித்தின்றது. நீச்சல் தெரியாதென்றாலும் நண்பனின் வற்புறுத்தலுக்கிணங்கி நீரோட்டத்தில் இறங்கி ஆற்றோட்டத்தில் இழுக்கப்பட்டு மற்றொரு நண்பனால் காப்பாற்றப்பட்டது என்று விரிந்தன இழந்த பால்யத்தை மீட்டெடுக்கும் முயற்சியில் எழுந்த பால்யத்தின் நினைவுகள்.

கம்ப்யூட்டர், லேப்டாப், ஐ பாட், ஜி.பி.ஆர்.எஸ் கனெக்ஷனுடன் கூடிய மொபைல்கள், வீடியோ கேம்ஸ் என பெருமை பேசியபடி அனுபவிக்க எல்லா கருவிகளும் இன்றைய இளம் தலைமுறைக்கு இப்போது உண்டு. ஆனால் அவை தம் காலத்தில் இல்லாததினால் இவர்களுக்கு முந்தைய தலைமுறை தான் அவற்றைக் கண்டு பிடித்தது என்பதையும் நினைவில் கொள்க.

பால்யத்தை, பால்யத்தின் இயல்புகளை மீட்டெடுக்கும் முயற்சிகளில் இறங்கும் எழுத்தாளர்கள், குழந்தைகள் நாடகக் கலைஞர் வேலு சரவணன் ஒன்றிருவர் போலவும் நம்பிக்கை ஊற்றுகளும் ஊறிக்கொண்டுதானுள்ளன.

இன்றைய குழந்தைகளை உணவைத் தாண்டி யோசிக்க வைக்கும் விளம்பரங்கள், உணவே தேவையில்லை என நினைக்க வைக்கின்றன. ஜங்க் ஃபுட் கலாசாரத்தை திணிக்கப் பார்க்கும் அவை "இன்டர்நெட் தலைமுறையோட மூளைக்கு வேலை குடுக்கணும்" என்றும் கூவுகின்றன. தங்கள் நுகர்வுப் பொருட்களை நுகரும் குழந்தைகள் எல்லாமே எதிர்காலத்தில் ஐன்ஸ்டீன்களாகவும், நெப்போலியன்களாகவும், இந்தியாவின் பெயர் காப்பாற்றும் ஐகான்களாவும் ஆகி விடுவார்கள் என்ற மாயைக்குள் இழுத்து விடுகின்றன. சிந்திக்கும் திறனும் கற்பனை சக்தியும் வளர (புத்தக) வாசிப்பு தான் மிக முக்கியம் என்ற விஷயம் வலுக்கட்டாயமாக அவர்களிடம் இருந்து மறைக்கப் படுகிறது.

வீடியோ கேம்ஸ், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், சம்மர் கேம்ப் என விரியும் இன்றைய குழந்தைகளின் உலகத்தில், என்னுடைய குழந்தைக்குக் கம்ப்யூட்டர் தெரியும் என உவகை கொள்ளும் அம்மாக்களின் எண்ணிக்கை பெருகி வருகிறது. என்ன தெரியும்? மவுஸை கிளிக்கி வீடியோ கேம்ஸ் ஆன் செய்யத் தெரியும். வேறென்ன புரோக்கிராமா எழுதப் போகிறான் அவன்? இதில் என்ன தனி அறிவு? நம் தலைமுறை மிக்ஸி ஆன் செய்யவும், கிரைண்டரில் மாவரைக்கவும், டி.வியில் சேனல் மாற்றவும் கற்றுக் கொண்டதைப் போல் இதுவும் ஒரு இயல்பான நிகழ்வே. கருவியைப் பொறுத்து நிகழ்வு மாறுகிறது. அவ்வளவே.

நகரமும், அது வளர்த்தெடுக்கும் குழந்தைகளின் பால்யமும் இப்படிப் போகையில் இவ்வாறு நினைக்கத் தோன்றுகிறது – ஒருவேளை இன்றைய கிராமங்களில் மட்டுமே மிஞ்சியிருக்கிறதோ இவ்வாறான மிகைகள் அற்ற இயல்பான பால்யம் என்று. உண்மையான இந்தியா கிராமங்களில் தான் இருக்கிறது என்றார் தாத்தா காந்தி. ஆனால் அப்போது எழுபத்தைந்து சதமாய் இருந்த கிராமங்கள் இன்றைய நிலையில் குறுகி வருவதும் கண்கூடு. கிராமம் நகரமாவதும், நகரம் மாநகரமாவதும், மாநகரம் பெரு நகரமாவதும், பெரு நகரங்கள் மெட்ரோபாலிடன் ஆவதுமாய் இருக்கின்றன.

மீதமிருக்கும் கிராமங்களும் கிரிக்கெட்டையும், பெப்ஸி, கோக்குகளையும், லேஸ் பாக்கெட்டுகளையும் உள்ளே நுழைய விட்டுவிட்டு தங்கள் இயல்புகளைத் தொலைத்துக் கொண்டிருக்கின்றன. மொபைல் போன்களும், செட்டாப் பாக்ஸூகளும், டிஜிட்டல் கருவிகளும் ஆக்கிரமித்திருக்கும் கிராமம் தன்னகத்திருக்கும் குழந்தைகளின் உலகத்தை ஹோம் ஒர்க்குகளில் இருந்து காப்பாற்றுவதே பெரும் பாடு என ஆகிவிட்டிருக்கிறது.

சுட்டி டீவியும், போகோ, ஜெடிக்ஸூகளும் காண்பிக்கும் மாயைகள் எல்லாம் உண்மை, மொபைலும் வீடியோ கேமும் தான் உலகம், மாதம் இருபத்தேழு நாட்களும் வேலைக்குச் செல்பவர்கள் தான் பெற்றோர், ஸ்கல் கேப்பும், நீ கேப்பும் சைக்கிளின் ஸ்பேர் பார்ட்ஸ்களில் ஒன்று, என நம்பி அக அனுபவம் சார்ந்த வாழ்க்கையைத் தொலைத்து ஐந்து வயதில் மனநல மருத்துவரிடம் கவுன்சிலிங்குக்கு அனுப்பப் படும் இன்றைய இளம் தலைமுறை தன் பால்யத்தை தொலைத்து விட்டு எங்கே தான் போகப் போகிறது?

-----------------------------------
படித்தாயிற்றா? ஒரு உதவி பண்ணுங்கள்? என்ன உதவியா? உங்களை நான் என்ன கேட்கப்போகிறேன். இன்ட்லியில் ஒரே ஒரு ஓட்டு, அவ்ளோதான். நன்றி.
-----------------------------------