செவ்வாய், 15 ஜூன், 2010

இராவணன்,

- எஸ்கா
மூன்று வருடங்கள், நூற்றியிருபது கோடி பட்ஜெட், ஏ.ஆர்.ரஹ்மான், ஐஸ், அபி, விக்ரம் என்றெல்லாம் பிரம்மாண்டம் காட்டி, ரகசியம் கட்டிக்காத்து, காடு மேடு, மலை, பள்ளத்தாக்குகள் சுற்றி எடுக்கப்பட்ட படம் இராவணன். வரும் பதினெட்டாம் தேதி ரிலீஸ். கேப்டன் ஆஃப் தி ஷிப் மிஸ்டர்.மணி ரத்னம். எப்படி இருக்கும் படம்?? மணி படமாயிற்றே.. சொல்லவா வேண்டும். தியேட்டர் முழுக்க அறிவுஜீவிகள் தான் நிரம்பியிருப்பார்கள். வீணாய்ப் போன விசிலடிச்சான் குஞ்சுகள் தொந்திரவில்லாமல் பார்க்க மற்றுமோர் தெளிவான படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கலாமா?

மலை உச்சியில் விக்ரம் காலடியில் இருந்து சிறு கல்லொன்று அருவித் தண்ணீரில் விழும் ஷாட்டும், பாறைகளில் எதிலும் கைவைக்காமல் சற்றே இடது பக்கம் சாய்ந்த படி சரிவாக விக்ரம் சரிந்தபடியே வழுக்கி, சறுக்கி மேலிருந்து கீழே விறுவிறுவென இறங்கும் காட்சியும் இராவணன் டிரெயிலரில் சிலிர்ப்பூட்டுகின்றன. “ஒரு பானைச்சோற்றுக்கு” பழமொழிதான் நினைவுக்கு வருகிறது. அங்கொன்றும் இங்கொன்றுமாக நெட்டில் காணக்கிடைக்கும் இராவணன் ஸ்டில்கள் ஆர்வத்தைக் கிளப்பி விடுகின்றன.

ஆனால் மரக்கட்டைகளால் அமைக்கப்பட்ட தொங்குபாலத்தில் ஒற்றைக்கையில் பிருத்விராஜ் தொங்கும் காட்சி தில் திரைப்படத்தின் இரயில்வே மேம்பாலத்தில் விக்ரம் தொங்கும் இன்டர்வெல் ஷாட்டை நினைவுறுத்துகிறது. அதுவும் இராவன் ஹிந்தி டிரெயிலரில் விக்ரமே தொங்குகிறார். நிஜமாகவே மிரட்டலாக இருக்கின்றன தேவ்-விக்ரம் வரும் ஹிந்தி டிரெயிலர் காட்சிகள். முறுக்கு மீசையும், துப்பாக்கிக் கையுமாக ஓடி வரும் விக்ரமைப் பார்க்கவே சுறுசுறுவென்று இருக்கிறது.

தன் படம் இங்கே வரவேற்பைப் பெறுமா இல்லையா என்றெல்லாம் எப்போதுமே கவலைப்படுவது இல்லை மணிரத்னம். படத்தை எடுப்பது மட்டுமே என் வேலை என்று எடுத்து முடித்து விடுவார். பேசுவதும் குறைவு. படம் தான் பேசவேண்டும். தயாரிப்பும் சொந்தத்தயாரிப்பே. புதுமை செய்கிறேன் பேர்வழி, கெட்டப் சேஞ்ச், தமிழ் சினிமாவில் இதுவரை வராத சப்ஜெக்ட் என்றெல்லாம் சொல்லும் ஹீரோக்களும், டைரக்டர்களும் கூட மொட்டை போடுவது தயாரிப்பாளரைத் தான்.

கமர்ஷியல் படங்களை சொந்தத் தயாரிப்பில் எடுப்பது, புதுமை முயற்சியை அடுத்தவன் காசில் ஆட்டையைப் போடுவது என்பதும் மணியிடம் கிடையாது. எவ்வளவு செலவானாலும் சரி. எல்லாமே சொந்தத் தயாரிப்பு தான். மெட்ராஸ் டாக்கீஸ் தான். (ஆலயம்-ஆக இருந்தது முதலில்). உண்மையைச் சொல்லப்போனால் இங்கே ஊத்திக் கொண்டாலும் உலகம் முழுக்க ஓடி போட்ட காசுக்கு மேலேயே எடுத்து விடும் அவரது படம். கூடவே உலகம் முழுக்க விருதுகளும் கியாரண்டி.

உலகத்தரம், உலகத்தரம் என்று பலரும் கூவிக்கொண்டிருக்கும் வேளையில் உண்மையாகவே உலகத்தரமான படம் என்றால் இந்தியாவில் இன்றைக்கு டாப் த்ரீயில் மணியை மட்டுமே முதல் உதாரணமாகச் சொல்ல முடியும். மற்ற இரண்டு பேர்? யாராவது மாறிக்கொண்டே இருப்பார்கள். ஒரு உலகப் படம் கொடுத்து விட்டு காணாமல் போவார்கள். ஆனால் 18 வருடங்களாக ஸீட்டை ஸ்டிராங்காகப் போட்டு அமர்ந்திருக்கிறார் மணிரத்னம்.

உலகப்படங்களையே சுட்டு தமிழில் அப்படியே எடுத்து அதையும் உலகப்பட விழாவுக்கு அனுப்பும் காமெடியெல்லாம் இங்கே தான் நடக்கிறது. அதைப்பார்க்கையில் இந்திய புராண இதிகாசங்களை காலத்திற்கேற்ப மாற்றி, கோணங்களை மாற்றி படமெடுப்பது கண்டிப்பாய் மதிக்கத்தக்க முயற்சி. மணி இந்த இடத்தில் தான் வித்தியாசப் படுகிறார். அது மட்டுமின்றி பம்பாய், இருவர், குரு உள்ளிட்ட உண்மைச்சம்பவங்கள் கொண்ட படங்களுக்கு என்றைக்கும் தனி ரசிகர் கூட்டத்தை உருவாக்கி வைத்திருக்கிறார் அவர்.

அஸிஸ்டென்ட் டைரக்டர்களுக்கு ஃபைவ் ஸ்டார் ஹோட்டல்களில் ரூம் போட்டு சீன் பிடிப்பது (சொல்லப் போனால் அவர்களும் அதைச் செய்வதில்லை, பல்வேறு மொழி பிரபல எழுத்தாளர்கள் எழுதிய கதைகளில் இருந்து உருவி விடுவார்கள், ஆணைப் பெண்ணாக்கி, கிராமத்தை நகரமாக்கி என்று பட்டி பார்த்து டிங்கரிங் செய்யப் பட்டு வரும் ஸீன்கள் தான் அவை) என்ற வேலையைச்செய்வதில்லை.

ஒரு ஸ்பார்க் உருவானவுடனே அதை ஸீன் பை ஸீனாக டெவலப் செய்வது முதல் வசனம் எழுதி ஸ்கிரிப்டை முழுமையாக்கி முடிப்பது வரை எல்லாமே அவர்தான் என்பார்கள். மணிரத்னம் படத்தில் வசனமா என்று கிண்டலாகப் படிக்காதீர்கள், உண்மையிலேயே சுருங்கச் சொல்லி விளங்க வைப்பது தான் கஷ்டம். திருவள்ளுவனுக்குப் பிறகு அந்தக் கலை கைகூடியிருப்பது மணிரத்னத்துக்குத் தான்.

1987ல் மனிதன் படமும், நாயகன் படமும் ஒன்றாகத்தானே ரிலீஸ் ஆகின? இன்றும் நாம் எந்தப் படத்தை சிலாகிக்கிறோம்? தமிழ் சினிமாவின் மாஸ்டர் பீஸ் ஆக நிற்கும் படமாகியிருக்கிறதல்லவா அது? நான் ரஜினியைப் பற்றிப் பேச வரவில்லை அய்யா. அப்படி நினைத்தீர்களானால் மற்றொரு உதாரணம் தருகிறேன். இதே மணிரத்னம் இயக்கி ரஜினி நடிப்பில் 1991ல் வெளிவந்த தளபதி படத்தோடு சேர்த்து தானே கமலஹாசனின் குணா திரைப்படமும் ரிலீஸானது. அவற்றில் எந்தப் படத்தை இன்றும் பார்த்து ரசிக்கிறோம்??

மணிரத்னம் படமென்றாலே தைரியமாகப்போய் உட்காரலாம் என்பதற்கு மற்றுமொரு காரணமும் உண்டு. ஒரு பெரிய ஜாம்பவான்களின் கூட்டத்துடன் களம் இறங்குவது மணியின் வழக்கம்.. வைரமுத்து துவங்கி, ஏ.ஆர்.ரஹ்மான், சந்தோஷ் சிவன், சாபு சிரில் என்று தொழில் நுட்பத்தில் ஒரு பெரும் படையே அவருடன் வழி நடக்கும். ஒரு நல்ல ராஜாவுக்கு அழகு திறமை மிக்க படையணிதான். கதை, திரைக்கதை, வசனம், ஒளிப்பதிவு, பாடல், இசை, சண்டை, நடிப்பு, இயக்கம் என்று எல்லாவற்றையும் நானே செய்கிறேன் என்று காட்டுக்கூச்சல் போட்டு காணாமல் போனவர்கள் பலர்.

அதுபோல் ஒரு திரைப்படத்திற்கு இசை எவ்வளவு முக்கியம்? இசைக்கோவை செய்யும் முன்பு சத்தமில்லாமல் ஒரு படத்தை சப்பென்று பார்த்திருக்கிறீர்களா? அட்லீஸ்ட் கற்பனையாவது செய்து பாருங்கள். சொத்தையாக இருக்கும். எப்பேர்ப்பட்ட பேய்ப்படமாக இருந்தாலும் சப்பென்று இருக்கும். இளையராஜா இசையின் அதிகபட்ச சாத்தியத்தை பயன்படுத்திக்கொண்டதும் மணிதான். 1992ல் ஏ.ஆர்.ரஹ்மானை அறிமுகப்படுத்தி இளையராஜாவின் கொட்டத்தை அடக்கியதும் மணிதான். (1992ல் தான் உட்சபட்ச சாதனையாக 58 படங்களுக்கு இசையமைத்தார் இளையராஜா. அதுவே திரையிசையில் அவரது கடைசி சாதனையாக மாறிப்போனது. அந்த ஆண்டில் தான் ரஹ்மான் வந்தார். அதன் பின் "ராஜா"ங்கம், ரஹ்மேனியாவாகிப்போனது)

பாடல்கள் அனைத்தும் ஹிந்தியில் உருவாக்கப்பட்டு பின்பு தமிழ்ப்படுத்தப்பட்டன. நல்ல வேளை தமிழ்ப்"படுத்தாமல்" எழுதியிருக்கிறார் வைரமுத்து. என்னதான் இருந்தாலும் தமிழ் வீரா பாடலை விட ஹிந்தி பீரா அசத்தலாயிருக்கிறது. ஆடியோ வெளியீட்டு விழாவில் அனைத்துப் பாடல்களையும் ஸ்டேஜிலேயே நாடகம் போட்டுக் காண்பித்தார்கள். விக்ரம் உட்பட அனைத்து ஸ்டார்ஸையும் ஆட வைத்திருந்தார்கள்.

தான் நடிக்க சான்ஸ் கேட்டுப் போன இரண்டு இயக்குனர்கள் ஷங்கரும், மணிரத்னமும் தான் என்று தானே கூறியிருக்கிறார் விக்ரம். அந்நியன் மூலம் 2005-ல் கைகூடிய பாதி ஆசை முழுதாகக் கைகூட ஐந்தாண்டுகள் ஆகியிருக்கிறது அவருக்கு. பார்க்கலாம். என்ன செய்திருக்கிறார்கள் என்று. இன்னும் இரண்டே நாட்கள்...
-------

நண்பர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள். தமிழிஷில் ஓட்டும் போடுங்கள். மறக்காமல்.

-------
-------

2 கருத்துகள்:

  1. நன்றாக இருக்கிறது .. ஹீரோ பின்னால் செல்லாமல் இயக்குனர் பின்னால் அதுவும் தரமான இயக்குனர் பின்னால் செல்வது ஆரோக்கியமே .. நல்ல படங்களை வரவேட்ப்பவர நீங்கள்.. என்னுடன் இணைந்தது கொள்ளுங்கள் :)))))))

    பதிலளிநீக்கு
  2. கண்டிப்பாக சுதர்ஸன், வருகைக்கு நன்றி..

    பதிலளிநீக்கு