சனி, 5 ஜூன், 2010

தொலைக்கப் படும் பால்யம்

பால்யம் என்றுமே சுவாரசியமானது, எவருக்குமே..... அன்புன்னா என்னன்னு அதை அனுபவிக்கும் போது தெரியாது என்று ஒரு திரைப்படத்தின் வசனம் சொல்லும். அதுபோல், இழக்க விரும்பாத ஆனால் இழந்தே தீர வேண்டிய அனுபவம் அது. காசிக்குப் போனால் பிடித்த ஒன்றை பிடிக்காமல் விட்டு வர வேண்டும் என்பது போல பிடித்தும் பிடிக்காமல் போகும் பிடித்த விஷயமும் அது.

மர அலமாரியில் வைத்த பாச்சா உருண்டை மெல்ல மெல்லக் கரைந்து போன போதும் எஞ்சியிருக்கும் அதன் வாசம் அலமாரி திறக்கையில் முகம் மோதுவது போல என்றென்றும் நம்மிடம் மிச்சம் நிற்கும் பால்யத்தின் எச்சம். குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பாவின் படைப்புகள், கி.ரா வின் பிஞ்சுகள் மற்றும் கதவு, தங்கர்பச்சானின் அழகி, வசந்த பாலனின் வெயில், சசியின் பூ உள்ளிட்ட படைப்புக்கள் நம் முன் நிறுத்திய சுவையான பால்யம் அத்தனை அழகானது. அம்புலி மாமாக்களுடன் வளர்ந்த அன்றைய இளம் தலைமுறை நினைத்துப்பார்க்க இன்றைக்கு காணக்கிடைக்காத விஷயங்கள் பல உண்டு.

பெட்ரோல் எங்கே கிடைக்கும் என்று கேட்டபோது எல்லா பெட்ரோல் பங்கிலும் கிடைக்கும் என்று சொன்ன சர்தார்ஜி ஜோக்கைப் போல அரிசி எங்கிருந்து கிடைக்கின்றது என்ற கேள்விக்கு இன்றைய இளைய தலைமுறை யின் பதில் "ரிலையன்ஸ் ஃப்ரெஷ் அங்கிள்".

கெலாக்ஸ் சாப்பிட்டபடியே சோஃபாவில் படுத்துக்கொண்டு வாரான் வாரான் பூச்சாண்டியும், டோரா புஜ்ஜியும், ஜோடி நம்பர் ஒன்னும் பார்க்கும் இன்றைய இளம் தலைமுறை பழைய சில தலைமுறைகள் அனுபவித்த பல அனுபவங்களை பெற முடிகிறதா அல்லது உண்மையிலேயே இழக்கின்றதா?

அம்புலி மாமா சொன்ன அதிசயக் கதைகள் கேட்டும், சிறுவர் மலர் தந்த கதைகள் படித்தும், ஞாயிறு மாலை தமிழ்த் திரைப்படமும், வெள்ளி இரவு ஒலியும் ஒளியுமும் மட்டுமே பார்த்து வந்த தலைமுறையும் இங்கே தான் இருக்கிறது.. அதுவும் வழக்கத்தில் இல்லாத போது, தெருக்குழந்தைகளோடு கூடி ,"பூ பறிக்க வருகிறோம்","பாண்டியாட்டம்","திருடன் போலீஸ்" "கல்லா மண்ணா" "தாயம்" ,"பல்லாங்குழி" என்று செயல் முறை விளையாட்டுக்களில் (அப்ளிகேஷன் ஓரியன்டட்....) மட்டுமே கவனம் செலுத்திய ஒரு தலைமுறையும் இன்னமும் மிச்சமிருக்கிறது.

முந்தைய தலைமுறைகள் ஒன்று கூடும் நேரங்களில் நினைத்துப் பார்க்கவும், எண்ணிப் பார்க்கவும், சொல்லிப் பார்க்கவும் ஆயிரம் விஷயங்கள் இருக்கின்றன. அதன் ஒற்றை உதாரணமாய் எம் நண்பர் குழாமின் சமீபத்திய நினைவூட்டல்கள் இவை.

பிஞ்சு மாங்காயும் அக்காவுக்கு செம்பருத்திப் பூவும் பறிக்க பின்புறத் தோட்டத்து மதில் சுவரில் ஏறிக் குதித்து சுவரில் இருந்த ஆணி பின் தொடையில் கிழித்து நாலு இன்ச்சுக்கு காயமானது. எதிர் கேங்குடன் சண்டை போட்டு அவர்கள் துரத்தத் துரத்த தெருவெங்கும் ஓடி கீழே விழுந்து முழங்காலில் ரத்த் சொட்டச் சொட்ட காயம் வாங்கியது.

ஆற்று மணலில் ஆளுயர சப்பரமும், கோவிலும் கட்டி அதில் களிமண்ணில் லிங்கம் செய்து இருட்டும் வரை விளையாடி தலையெல்லாம் மண்ணாகி வாரக்கணக்கில் அரிக்கும் தலையோடே திரிந்தது. விளையாட்டுச் சண்டையில் பக்கத்து தெருப் பையனின் மண்டையை உடைத்து அவனை மிரட்டி கீழே விழுந்ததாய்ச் சொல்லச் சொல்லி காயம் ஆறும் வரை அவர்கள் வீட்டுப்பக்கம் போகாமல் இருந்தது.

கால்சட்டைப் பை நிறைய பாதாம் கொட்டைகளை நிரப்பி விளையாடி மரம் ஏறி புளியாங்காய் பறித்து நாய் துரத்த ஓடி தவறி அதன் மேலேயே விழுந்து அது தங்களைப் பார்த்து அலறி ஓடியது. ஸ்குரூ டிரைவரை ப்ளக் ஹோலில் விட்டு ஸ்விட்சைப் போட்டு கரண்ட் ஷாக் வாங்கி ஒரு வாரம் ஸ்கூலில் பெருமையாய்ச் சொல்லித்திரிந்தது. தங்கச்சியை சைக்கிள் வீல் சுற்றச்சொல்லி கையை வீலுக்குள்ளே விட்டு ரத்த காயம் வாங்கியது.

பட்டுப் போன மாமரத்தின் பருத்த வேர் தண்டுகளைப் பார்த்து பேயென்று பயந்து நாலு நாள் ஜூரத்தில் படுத்தது. காலரா ஊசி போட வந்த இன்ஸ்பெக்டருக்குப் பயந்து பரணில் ஏறி பாட்டியின் பழைய துணி மரப்பெட்டியில் ஒளிந்தது. ஸ்கூல் கிரவுண்டில் புகுந்த பாம்பை உயிருடன் பிடிப்பதாய் சவால் விட்டு நாலு மணி நேரம் அதனுடன் போராடி போக்குக் காட்டி உயிருடன் பிடித்து ஜூவாலஜி சாரிடம் கொடுத்து பாராட்டு வாங்கியது.

இருபத்தைந்து பைசா கமிஷனுக்காக எதிர் வீட்டு அண்ணனின் காதலுக்குத் தூது போய் பக்கத்து தெரு அக்காவுடன் ஃபிரண்டானது. அப்பாவிடம் பத்து பைசாவும், அம்மாவிடம் அஞ்சு பைசாவும் தங்கச்சிக்குத் தெரியாமல் வாங்கி கோவில் சந்தில் அவளுக்குத் தெரியாமல் பால் ஐஸ் வாங்கித்தின்றது. நீச்சல் தெரியாதென்றாலும் நண்பனின் வற்புறுத்தலுக்கிணங்கி நீரோட்டத்தில் இறங்கி ஆற்றோட்டத்தில் இழுக்கப்பட்டு மற்றொரு நண்பனால் காப்பாற்றப்பட்டது என்று விரிந்தன இழந்த பால்யத்தை மீட்டெடுக்கும் முயற்சியில் எழுந்த பால்யத்தின் நினைவுகள்.

கம்ப்யூட்டர், லேப்டாப், ஐ பாட், ஜி.பி.ஆர்.எஸ் கனெக்ஷனுடன் கூடிய மொபைல்கள், வீடியோ கேம்ஸ் என பெருமை பேசியபடி அனுபவிக்க எல்லா கருவிகளும் இன்றைய இளம் தலைமுறைக்கு இப்போது உண்டு. ஆனால் அவை தம் காலத்தில் இல்லாததினால் இவர்களுக்கு முந்தைய தலைமுறை தான் அவற்றைக் கண்டு பிடித்தது என்பதையும் நினைவில் கொள்க.

பால்யத்தை, பால்யத்தின் இயல்புகளை மீட்டெடுக்கும் முயற்சிகளில் இறங்கும் எழுத்தாளர்கள், குழந்தைகள் நாடகக் கலைஞர் வேலு சரவணன் ஒன்றிருவர் போலவும் நம்பிக்கை ஊற்றுகளும் ஊறிக்கொண்டுதானுள்ளன.

இன்றைய குழந்தைகளை உணவைத் தாண்டி யோசிக்க வைக்கும் விளம்பரங்கள், உணவே தேவையில்லை என நினைக்க வைக்கின்றன. ஜங்க் ஃபுட் கலாசாரத்தை திணிக்கப் பார்க்கும் அவை "இன்டர்நெட் தலைமுறையோட மூளைக்கு வேலை குடுக்கணும்" என்றும் கூவுகின்றன. தங்கள் நுகர்வுப் பொருட்களை நுகரும் குழந்தைகள் எல்லாமே எதிர்காலத்தில் ஐன்ஸ்டீன்களாகவும், நெப்போலியன்களாகவும், இந்தியாவின் பெயர் காப்பாற்றும் ஐகான்களாவும் ஆகி விடுவார்கள் என்ற மாயைக்குள் இழுத்து விடுகின்றன. சிந்திக்கும் திறனும் கற்பனை சக்தியும் வளர (புத்தக) வாசிப்பு தான் மிக முக்கியம் என்ற விஷயம் வலுக்கட்டாயமாக அவர்களிடம் இருந்து மறைக்கப் படுகிறது.

வீடியோ கேம்ஸ், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், சம்மர் கேம்ப் என விரியும் இன்றைய குழந்தைகளின் உலகத்தில், என்னுடைய குழந்தைக்குக் கம்ப்யூட்டர் தெரியும் என உவகை கொள்ளும் அம்மாக்களின் எண்ணிக்கை பெருகி வருகிறது. என்ன தெரியும்? மவுஸை கிளிக்கி வீடியோ கேம்ஸ் ஆன் செய்யத் தெரியும். வேறென்ன புரோக்கிராமா எழுதப் போகிறான் அவன்? இதில் என்ன தனி அறிவு? நம் தலைமுறை மிக்ஸி ஆன் செய்யவும், கிரைண்டரில் மாவரைக்கவும், டி.வியில் சேனல் மாற்றவும் கற்றுக் கொண்டதைப் போல் இதுவும் ஒரு இயல்பான நிகழ்வே. கருவியைப் பொறுத்து நிகழ்வு மாறுகிறது. அவ்வளவே.

நகரமும், அது வளர்த்தெடுக்கும் குழந்தைகளின் பால்யமும் இப்படிப் போகையில் இவ்வாறு நினைக்கத் தோன்றுகிறது – ஒருவேளை இன்றைய கிராமங்களில் மட்டுமே மிஞ்சியிருக்கிறதோ இவ்வாறான மிகைகள் அற்ற இயல்பான பால்யம் என்று. உண்மையான இந்தியா கிராமங்களில் தான் இருக்கிறது என்றார் தாத்தா காந்தி. ஆனால் அப்போது எழுபத்தைந்து சதமாய் இருந்த கிராமங்கள் இன்றைய நிலையில் குறுகி வருவதும் கண்கூடு. கிராமம் நகரமாவதும், நகரம் மாநகரமாவதும், மாநகரம் பெரு நகரமாவதும், பெரு நகரங்கள் மெட்ரோபாலிடன் ஆவதுமாய் இருக்கின்றன.

மீதமிருக்கும் கிராமங்களும் கிரிக்கெட்டையும், பெப்ஸி, கோக்குகளையும், லேஸ் பாக்கெட்டுகளையும் உள்ளே நுழைய விட்டுவிட்டு தங்கள் இயல்புகளைத் தொலைத்துக் கொண்டிருக்கின்றன. மொபைல் போன்களும், செட்டாப் பாக்ஸூகளும், டிஜிட்டல் கருவிகளும் ஆக்கிரமித்திருக்கும் கிராமம் தன்னகத்திருக்கும் குழந்தைகளின் உலகத்தை ஹோம் ஒர்க்குகளில் இருந்து காப்பாற்றுவதே பெரும் பாடு என ஆகிவிட்டிருக்கிறது.

சுட்டி டீவியும், போகோ, ஜெடிக்ஸூகளும் காண்பிக்கும் மாயைகள் எல்லாம் உண்மை, மொபைலும் வீடியோ கேமும் தான் உலகம், மாதம் இருபத்தேழு நாட்களும் வேலைக்குச் செல்பவர்கள் தான் பெற்றோர், ஸ்கல் கேப்பும், நீ கேப்பும் சைக்கிளின் ஸ்பேர் பார்ட்ஸ்களில் ஒன்று, என நம்பி அக அனுபவம் சார்ந்த வாழ்க்கையைத் தொலைத்து ஐந்து வயதில் மனநல மருத்துவரிடம் கவுன்சிலிங்குக்கு அனுப்பப் படும் இன்றைய இளம் தலைமுறை தன் பால்யத்தை தொலைத்து விட்டு எங்கே தான் போகப் போகிறது?

-----------------------------------
படித்தாயிற்றா? ஒரு உதவி பண்ணுங்கள்? என்ன உதவியா? உங்களை நான் என்ன கேட்கப்போகிறேன். இன்ட்லியில் ஒரே ஒரு ஓட்டு, அவ்ளோதான். நன்றி.
-----------------------------------

5 கருத்துகள்:

  1. இக்கட்டுரை உயிரோசை.காமில் வெளியானது

    பதிலளிநீக்கு
  2. pazhayana kazidhalum pudiyan pugudhalum iyarkkaiye. Pulamba vendhaam, pudhiya thalaimuraiyum vaazhum - adhan pokil

    பதிலளிநீக்கு
  3. பரவாயில்லை.. எஸ்கா தோற்றத்திலும் வயதிலும் மிக இளமையாக இருக்கிறாரே.. இவருக்கு எங்கே தெரியப்போகிறது முந்தைய தலைமுறையின் இளைமைக்கால விளையாட்டுக்கள் என்று நினைத்தேன். ஆனால் அற்புதம்.. மிக அபாரமாய் non-digital விஷயங்களை-விளையாட்டுக்களை விவரித்திருக்கிறீர்கள். உண்மையிலேயே கோலி விளையாட்டிலும் பச்சக்குதிரை விளையாட்டிலும் இன்ன பிற பெரியவர்கள் விளையாட முடியாத- சிறுவர்களுக்கே உரித்தான விளையாட்டுகளிலும் கிடைத்த இன்பம் இன்றைய சிறுவர்களுக்கு குறிப்பாக நகரத்தில் உள்ள சிறுவர்களுக்கு கிடைத்திருக்குமா என்றால் நிச்சயமாக இல்லை.
    கிராமங்கள் கூட இன்றளவில் டிஜிடல் மோகத்தில் தான் மூழ்கிக் கிடக்கின்றன.

    பதிலளிநீக்கு
  4. உணர்வுகளை திரட்டி உயிரோட்டமாக எழுதப்பட்ட கட்டுரை. தனது பால்ய கால நினைவுகளை அசைபோட இளைய தலைமுறைகளுக்கு வாய்புகள் அற்ற சூழலை மிக அழகாக கட்டுரையில் சித்தரிக்கப்பட்டிருக்கிறது.

    பதிலளிநீக்கு