செவ்வாய், 31 ஆகஸ்ட், 2010

ஏன் விழுகிறது பங்குச்சந்தை?

(இக்கட்டுரை கடந்த வருடம் நவம்பர் 15-ம் தேதி நண்பர் செல்வமுரளியுடைய தமிழ்வணிகம் டாட் காமில் வெளியானது)

ஏன் விழுகிறது பங்குச்சந்தை? தெரிந்து கொள்ள ஆசைதான் எல்லோருக்கும். இதை விட எப்போது விழும் பங்குச்சந்தை என்று தெரிந்தால் ரொம்ப நன்றாயிருக்குமே? என்ன? சரிதானே..? ஐ... அது எப்படி? சாகிற நாள் தெரிந்து விட்டால் வாழ்கிற நாள் நரகமாகி விடாதா? மார்க்கெட் என்று விழும் என்று தெரிந்து விட்டால் எல்லோரும் உள்ளே புகுந்து பங்குகளை வாங்க அல்லவா செய்வார்கள்? அப்புறம் எப்படி விழும்? ஏற அல்லவா துவங்கும்? (தொப்பி... தொப்பி...) வாழ்க்கை ஒரு வட்டம் ஐயா.. இதில் ஜெயிக்கிறவன் தோற்பான், தோற்றவன் ஜெயிப்பான்... ஏற்றமும் இறக்கமும் நிறைந்ததல்லவா வாழ்க்கை? சந்தையும் அப்படித் தானே.

சரி... சரி... கொஞ்சம் சீரியஸாய்ப் பார்ப்போம். ஏன் விழுகிறது பங்குச்சந்தை? யோசியுங்கள்.. அது சரி... பங்குச் சந்தை விழுவதற்குக் காரணமா வேண்டும்? வேண்டாத மருமகள் கைபட்டால் குற்றம், கால்பட்டால் குற்றம் என்று எத்தனையோ காரணங்கள். ஒன்றா இரண்டா? லோக்கலில் இருந்து இன்டர்நேஷனல் வரை காரணங்கள் கிடைக்கும் அதற்கு. ஒபாமாவுக்கு உடம்பு சரியில்லை என்றாலும் விழும். மன்மோகன்சிங்குக்கு மார்பு வலி என்றாலும் விழும். அமெரிக்காவில் வங்கிகள் திவாலானாலும் விழும். மும்பையில் தீவிரவாத அட்டாக் நடந்தாலும் விழும். இராமலிங்க ராஜூ (மற்ற பங்குதாரர்களுக்கு) திருப்பதி லட்டு கொடுத்தாலும் விழும். நிறுவனங்களின் காலாண்டு முடிவுகள் சரியில்லையென்றாலும் விழும். ஆனால்.. ஏறுவதற்குத்தான் தெளிவான, பெரிய காரணங்கள் தேவை.


இரு வாரங்களுக்கு முன்பு ஒன் செகண்ட் ஒன் பைசா டாரிஃப்பை ஏன் அறிமுகப் படுத்தக் கூடாது என்று ட்ராய் (பங்குச் சந்தைக்கு செபி போல டெலிகம்யூனிகேஷனைக் கட்டுப்படுத்தும் அமைப்பு, இதைப்பற்றி பிறிதொரு சந்தர்ப்பத்தில் பார்க்கலாம்) கேட்டவுடன் டெலி கம்யூனிகேஷன் பங்குகள் மடமடவென்று சரிந்தன. (எல்லாப் புகழும் அண்ணன் டாடா டோக்கோமோவுக்கே). அத்துறையில் எல்லா பங்குகளுமே கிட்டத்தட்ட 10% வீழ்ச்சி. ஏனென்றால் பெரும்பாலான, அதாவது சுமார் 60% க்கும் மேற்பட்ட செல்போன் பயனாளர்கள், தமது முதல் செல்போன் அழைப்பை துண்டிப்பது சில வினாடிகளிலேயே. ஆனால் பணம் கட்டுவது என்னவோ முழு நிமிடத்திற்கு. இது விநாடிக்கு என்று மாற்றப் பட்டால்? செல்போன் சர்வீஸ் புரொவைடர்களின் தலையில் ஒரு பெரிய துண்டுதான். பேலன்ஸ் ஷீட் எனும் ஆண்டறிக்கையில் இலட்சங்களில் நஷ்டமாக எதிரொலிக்கும் அது.

அதே போல பாகிஸ்தானில் பெனாசிர் பூட்டோ மரணம் என்று தெரிந்தவுடனே அய்யய்யோ அலறி அடித்துக்கொண்டு கீழே விழுந்தது சந்தை. சுமார் 250 புள்ளிகள் அரோகரா. ஆனால் பத்தே நிமிடத்தில் "ஆமாம்..? நமக்கும் அவுங்களுக்கும் என்ன சம்பந்தம்?" என்று சுதாரித்து இழந்த புள்ளிகளையும் திரட்டிக்கொண்டு எழுந்தது அது. பங்குகள் வீழ்ந்த அந்த இடைப்பட்ட நேரத்தில் உள்ளே புகுந்து ஷேரோ, பியூச்சரோ, ஆப்ஷனோ வாங்கி வைத்தவர்களுக்கு பத்தே நிமிடத்தில் இலாபம். எப்படி என்கிறீர்களா? பாகிஸ்தானுக்கும் நமக்கும் தான் ஏழாம் பொருத்தம் ஆயிற்றே. அந்த நாட்டுத் தலைவர் இறந்தால் நமக்கென்ன நஷ்டம்? இதுதான் கான்செப்ட். ஆனால் இதை சந்தையை உன்னிப்பாக கவனிக்கும், சந்தையில் பழம் தின்று கொட்டை போட்ட மக்கள் மட்டும் தான் கணிக்க முடியும்.

பொதுவாக சந்தை வீழ்ச்சியின் போது தடாபுடாவென்று உள்ளே நுழையாமல், கொஞ்சம் அமைதியாக கைகட்டி வேடிக்கை பார்ப்பதே நல்லது. ஏனென்றால் அது பின்னால் வரக்கூடிய ஒரு பெரிய பிரளயத்தின் அறிகுறியாகக் கூட இருக்கலாம். ஒருமுறை சத்யம் கம்ப்யூட்டர்ஸின் பங்குகள் விழத்துவங்கியவுடன் எல்லோரும் போட்டி போட்டுக்கொண்டு வாங்கிக் குவிக்க ஆரம்பித்தார்கள். சத்யம் விழ விழ எனது நண்பர் ஒருவர் 120 ரூபாய் என்ற விலையில் 500 பங்குகள் வாங்கினார். நீயும் வாங்கு, இந்த விலைக்குக் கிடைக்காது என்று அட்வைஸ் வேறு. ஆமாம். சில தினங்களுக்கு முன் 350-400 என்ற விலையில் பார்த்த பங்கு 120 ரூபாய் என்றால் யாருக்குத்தான் ஆசை வராது?


ஆனால் துரதிர்ஷ்டம், சத்யம் அதே தினத்தில் 80 ரூபாய்க்கும் கீழே வந்தது. மீண்டும் போய் ஒரு 500 வாங்கினார் நண்பர். சோகம் தொடர்ந்தது. மறுநாள் 60 ரூபாய். அய்யய்யோ.. அதற்கடுத்த நாள் 40 ரூபாய் என்று உருண்டு கொண்டே போனது அது. அடுத்த சில தினங்கள் கழித்து வெறும் 6 ரூபாய் 30 பைசா என்ற விலையில் வந்து விழுந்து டயர்டாகி ரெஸ்ட் எடுத்தது அது. நண்பரை ஒரு மாதமாகப் பார்க்க முடியவில்லை. (இப்போது 110-120 என்ற விலையில் உள்ளது). எனக்குத் தெரிந்த பெரிய மனிதர் ஒருவர் பங்கு ஒன்று 10 ரூபாய் என்ற விலையில் கிட்டத்தட்ட ஒரு இலட்சம் பங்குகள் வாங்கியதாகப் பேசிக்கொண்டார்கள். அது மட்டும் உண்மையாயிருந்தால்..??? சொக்கா... சொக்கா... எனக்கில்ல.. எனக்கில்ல.. ஆயிரம் பொற்காசு தருமி போலப் புலம்ப வேண்டியது தான்.

ஆனால் கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். சந்தையில் ஏற்ற இறக்கங்கள் இருந்தால் தானே நல்லது. விற்பவர்களும் வாங்குபவர்களும் மாறி மாறி அல்லவா வந்தாக வேண்டும்? இல்லாவிட்டால் எப்படி நல்லபடியாக பரிவர்த்தனை நடக்கும்? லிக்விடிட்டி கிடைக்கவும் ஏற்ற இறக்கங்கள் இருந்தாக வேண்டுமே. ஏறிக்கொண்டே மட்டும் போனால் எப்படி? கொஞ்சம் தலையில் தட்டி, குட்டி வைத்தால்தானே சரி. இறங்கி, ஏறி, இறங்கி, ஏறி என்று இருந்தால்தான் வாங்கி, விற்று, வாங்கி, விற்று என்று எதையாவது செய்ய முடியும். இலாபமோ நஷ்டமோ பார்க்க முடியும்..


பொதுவாக பெரிய பங்குத் தரகு நிறுவனங்களில் ரிஸ்க் மேனேஜ்மென்ட் டிபார்ட்மெண்டுகள் உண்டு. பெரிய வாடிக்கையாளர்களின் பங்கு விலை நிலவரங்களை கவனித்துக்கொண்டிருப்பது அவர்களின் முக்கிய வேலை. ஏனென்றால் லாட் லாட்டாக வாங்கப்படும் பங்குகளுக்கும், பியூச்சர் கான்டிராக்டுகளுக்கும் அவர்கள் கஸ்டமர்களிடம் முழுத் தொகை வசூலிக்கத் தேவையில்லை. மார்ஜின் (பங்குகளின் மொத்த விலையில் சுமார் 20% முதல் 40% வரை) எனப்படும் குறிப்பிட்ட சதவீதம் வாங்கினால் போதும். ஆனால் சந்தை வீழ்ச்சியின் போது கொஞ்சமாகக் கட்டப்பட்ட மார்ஜின் தொகை முழுதாகத் துடைத்துக் கொண்டல்லவா போய் விடும்? பெரிய தலைவலியாயிற்றே. வாடிக்கையாளரையும் சமாளிக்க வேண்டும். மும்பை (அ) தேசிய பங்குச் சந்தைக்கும் பதில் சொல்லியாக வேண்டும். வரிசையாக போன் வந்தபடி இருந்தால் என்னதான் செய்வது.

ஹர்ஷத் மேத்தா, கேத்தன் பரேக் விவகாரங்கள், 2008 ஜனவரி 21 (சுமார் 1400 புள்ளிகள் வீழ்ச்சி), 2006 மே 22 (சுமார் 1100 புள்ளிகள் வீழ்ச்சி), சத்யம் ராமலிங்க ராஜூ விவகாரம், ரிலையன்ஸ் அண்ணன் தம்பிச் சண்டை, கார்கில், மும்பையில் தீவிரவாதத்தாக்குதல்கள் போன்ற சிறப்புத்(?) தினங்களி்ல் அவர்கள் போன் ரிஸீவரை கீழே எடுத்து வைத்து விட்டு, கதவைப் பூட்டிக்கொண்டுதான் வேலை பார்த்தார்கள். வாடிக்கையாளர் தொந்திரவுதான் காரணம். முழுத் தொகை கொடுக்காமல் மார்ஜின் தொகை மட்டும் கொடுத்து விட்டு வாங்கி வைத்த பங்குகளை விற்காதே விற்காதே என்றால் எப்படி முடியும்? ஒன்று முழுத்தொகையும் கட்டு, அல்லது விற்று விடு. இல்லாவிட்டால் தரகு நிறுவனம் தான் முழுத் தொகையையும் கட்டி பங்குகளை டெலிவரி எடுக்க வேண்டும். எடுத்து வைத்து? என்ன செய்வதாம்? பணியாரம் சுட்டு சாப்பிட வேண்டியதுதான். முழுவதும் வீழ்ந்த பின் எந்த வாடிக்கையாளர் பணம் கட்டுவார்? எஸ்கேப்.....

இதே போல கவனிக்க வேண்டிய இன்னொரு விஷயம். தங்கத்துக்கும் பங்குச்சந்தைக்கும் எதிர்மறைத் தொடர்பு உண்டு. எப்போதெல்லாம் பங்குச் சந்தை இறங்குகிறதோ அப்போது தங்கத்தி்ன் விலை ஏறும். ஏன்? சரியும் பங்குகளை விற்று வரும் பணத்தை எங்கே போடுவதாம்? எல்லா பெருந்தலைகளும் தங்கம் தான் வாங்கி வைப்பார்கள். பின் ஏறாமல் என்ன செய்யும்? கடந்த பத்து நாட்களுக்கு முன்பு வரிசையாக நான்கு தினங்கள் சந்தை சரிந்தது. தங்கம் ஏறியது. ஐந்தாம் நாள் செய்தித்தாள்களில் "தங்கம் வரலாறு காணாத(?) விலை ஏற்றம்?" என்று வழக்கம் போல தலையங்கம் எழுதினார்கள். டீக்கடைகளில் தொங்கிய வால் போஸ்டர்களை ஏழை மக்கள் வாய்பிளந்து பார்த்தபடி போனார்கள். (அதற்காக பங்குச் சந்தை ஏறும் போது தங்கம் விலை இறங்குமா என்று கேட்காதீர்கள். அது கஷ்டம். பண்டிகைக்காலம், இறக்குமதி குறைவு, ஏற்றுமதி அதிகம், தென் ஆப்பிரிக்காவில் சுரங்கம் மூடல், லண்டன் மெட்டல் எக்ஸ்சேஞ்சில் கையிருப்பு குறைவு என்று வேறு ஏதேனும் காரணம் காட்டி விலை ஏறும்)


நான் சொல்ல வருவது என்னவென்றால், வீழ்ச்சிகள் சகஜம். ஆனால் இந்த எல்லா வீழ்ச்சிகளையும் உங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளப் பாருங்கள். மார்க்கெட் கீழே விழுந்ததில் நாம் வைத்துள்ள பங்குக்கும் பங்கு உள்ளதா அல்லது எல்லாரும் விழுந்ததால் நம்மாளும் விழுந்தாரா என்று கவனியுங்கள். காரணம் இரண்டாவதாக இருக்கும் பட்சத்தில் நமக்கு ஜாக்பாட்தான். கொஞ்சம் ஆற விட்டு, உள்ளே புகுந்து இன்னும் கொஞ்சம் வாங்கி வைத்து ஆவரேஜ் செய்யுங்கள். விலை குறைவான நேரத்தில் வாங்கி வைத்தால் மார்க்கெட் ரெக்கவரியின் போது விற்றுக் கொள்ளலாம். ஆனால்.. கவனம். வாங்கும் முன் நம் பங்கின் அடிப்படை பலமாக உள்ளதா? மார்க்கெட் இன்னும் வீழுமா? வீழ்ந்தால் நம் பங்கின் நிலை என்ன? தாக்குப் பிடிக்குமா? அல்லது பில்டிங் ஸ்டிராங்கு, பேஸ் மட்டம் வீக்கு கதைதானா என்ற விஷயங்களையும் கொஞ்சம் கவனித்துக் கொள்ளுங்கள்.

இதில் எப்போதாவது ஆச்சர்ய அதிர்ச்சிகளும் கிட்டும். சில சமயங்களில் சந்தை எதிர்பாராமல் குபீர்பாய்ச்சலில் பாய்ந்து மேலேறி மேஜிக் காட்டுவதும் உண்டு. 2009 மே மாதம் 18ம் தேதி ஒரே நாளில் 2110 புள்ளிகள் ஏறி சந்தையையே ஸ்தம்பிக்க வைத்தது சென்செக்ஸ். மத்திய அரசாக ஐந்தாண்டுகளுக்கு நிலையான ஆட்சியைத் தரும் என்று நம்பப்பட்ட காங்கிரஸ் கூட்டணியின் தேர்தல் வெற்றி சந்தையில் பிரதிபலித்ததாகக் கூறப்பட்டது. சந்தையின் வரலாற்றிலேயே புள்ளிகள் ஏறியதற்காக சந்தை நிறுத்தப்பட்டதும் அன்றுதான். இதே போல் மறுபடியும் நடக்குமா? வாய்ப்புகள் ரொம்பக்கம்மிதான். பார்க்கலாம். ஆனால் அப்படி திடீரென மேலேறும் சமயத்தில் விலையேறிய குறிப்பிட்ட பங்குகள் உங்களிடம் இருக்க வேண்டுமே? அதுவல்லவா முக்கியம், அப்படியில்லாவிட்டால் மானாட மயிலாட உட்கார்ந்து டி.வி பார்த்துக்கொண்டிருக்க வேண்டிதுதான்.

மீண்டும் சந்திப்போம்.... இலாபம் வரும் என்ற நம்பிக்கையுடன்.....
------------------------------------------------
நண்பர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள்.
-------
பின்னூட்டத்தில் கருத்துக்கள் சொன்னால்தானே கட்டுரை எப்படி இருக்கிறதென்று எனக்குத் தெரியும்? பின்னூட்டம் போடுங்கள்..
-------
அப்டியே பட்டனை அமுக்கி ஒரு ஓட்டு போட்டுட்டு போங்க. கைக்காசு ஒண்ணும் செலவில்லை.
------------

ஞாயிறு, 29 ஆகஸ்ட், 2010

பங்குச்சந்தை ... ஏன் பயம்?

(இக்கட்டுரை கடந்த வருடம் நவம்பர் 2-ம் தேதி நண்பர் செல்வமுரளியுடைய தமிழ்வணிகம் டாட் காமில் வெளியானது)

-எஸ்கா


பங்குச் சந்தை எனப்படும் ஷேர் மார்க்கெட் பற்றிப் பேச்செடுத்தாலே ஒரு சாராருக்கு உற்சாகம் ஊற்றெடுக்கும். ஆனால் அதில் ஆர்வமுள்ளவர்கள் தவிர மற்ற பலரும் காட்டும் ஒரே எதிர்வினை "ஷேர் மார்க்கெட்டா? அது சூதாட்டம் மாதிரியில்ல".. உண்மையைச் சொன்னால்... அப்படி இல்லை...., (ஆனால் கிட்டத்தட்ட அப்படித்தான்). பங்குச் சந்தை பற்றி ஏன் இந்தக் குழப்பம்? பயம்? இது தேவையா? நியாயமாகச் சொன்னால் இந்தப் பயம் தேவையே இல்லை.

பங்குச் சந்தை எனப்படும் ஷேர் மார்க்கெட்டில் எத்தனை பேர் வர்த்தகம் புரிகிறார்கள்? சொல்ல முடியுமா? நூற்றுக்கணக்கில்?, ஆயிரக் கணக்கில்?, இலட்சக்கணக்கில்?, கோடிக்கணக்கில்? யெஸ். யூ ஆர் ரைட். கோடிக்கணக்கில் தான். இந்தியாவில் கிட்டத்தட்ட இரண்டரை கோடி பேர் ஷேர் மார்க்கெட்டில் வர்த்தகம் புரிகிறார்கள். இத்தனை பேர் வியாபாரம் செய்யும் இடத்தில் கொஞ்சம் கூச்சல் குழப்பம் இருக்கத்தான் செய்யும். ஆனால் பதற்றம் வேண்டாம். கூட்டத்தைக் கட்டுப்படுத்த போலீஸ் இருப்பது போல இங்கும் உண்டு. ரெகுலேட்டரி என்று பெயர். அவர்கள் முடிந்த வரை கூச்சல், குழப்பம், பிரச்சினைகள் வராமல் தடுக்கப் பார்ப்பார்கள்.

பொதுவாக ஷேர் மார்க்கெட்டில் மூன்று வகையான ஆசாமிகள் (நிறுவனங்கள் கூட) உண்டு. Investor, Trader, Speculator என்று. இதில் Investor என்பவர் முதலீட்டாளர், Trader என்பவர் வியாபாரி, வர்த்தகம் செய்பவர், Speculator என்பவர் ஊக (யூகம் - Guess) வணிகம் செய்பவர். பச்சையாகச் சொன்னால் சூதாடி. Traderகள், Investorகளின் எண்ணிக்கையை விட இப்படிப்பட்ட ஸ்பெகுலேட்டர்கள் கூட்டம் அதிகமாகிப்போனதால்தான் சந்தையில் இத்தனை கோடி ரூபாய் வர்த்தகம் நடக்கிறது, இத்தனை நிறுவனங்கள் இருக்கின்றன, இந்தியப் பொருளாதாரம் அசைத்துப்பார்க்கப் படுகிறது. சிறு அளவில் வர்த்தகம் செய்யும் நம்மைப் போன்றோருக்கும் லிக்விடிட்டி (வேண்டிய நேரத்தில், வேண்டிய அளவில், கிட்டத்தட்ட வேண்டிய விலையில்) கிடைக்கிறது.

ஸ்பெகுலேஷன் செய்யும் விருப்பம் உள்ளவர்களுக்காகவே ஃபியூச்சர்ஸ் (எதிர்காலம்) & ஆப்ஷன்ஸ் என்ற வர்த்தகங்களையும் பங்குச் சந்தைகள் அறிமுகப்படுத்தின. அதிலும் தினசரி ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்களுக்கு வர்த்தகம் நடைபெறுகிறது. அதனால் சிறு முதலீட்டாளர்கள் மட்டும் சற்று நிதானமாக, எச்சரிக்கையாக அடி எடுத்து வைக்க வேண்டும். கரணம் தப்பினால்..

நண்பர் ஒருவரிடம் இன்வெஸ்ட்மெண்ட் பற்றிப் பேசிக்கொண்டிருக்கும் போது அவரையும் ஷேர் மார்க்கெட்டில் முதலீடு செய்யச் சொன்னேன். அவருக்கும் இதில் விருப்பம் இருந்தது. ஆனால் ஷேர்களில் இன்வெஸ்ட் செய்வதால் மாதா மாதம் எவ்வளவு கிடைக்கும் என்றார்.. ஒரு விஷயத்தைப் புரிந்து கொள்ளுங்கள். ஷேர் மார்க்கெட் என்பது போஸ்ட் ஆபீஸ் சேவிங்ஸோ அல்லது மாதா மாதம் வட்டி வரும் பேங்க் முதலீடோ அல்ல.

மற்ற முதலீடுகளுக்கும் இதற்கும் உள்ள பெரிய வித்தியாசம் என்னவென்றால், ஷேர்கள் மூலம் நீங்கள் நேரடியாக கம்பெனிகளில் முதலீடு செய்கிறீர்கள். அந்தக் கம்பெனியின் வியாபாரத்தில் நடக்கும் லாப நஷ்டங்கள், ஏற்ற இறக்கங்கள் ஷேரில் எதிரொலிக்கும். நீங்களும் அந்தக் கம்பெனியின் ஒரு (சிறிய) முதலாளி என்பதால் அதன் பலன் உங்களுக்கும் தான்.

ஆனால் வங்கிகளிலோ போஸ்ட் ஆபீஸிலோ முதலீடு செய்யப் படும் பணத்திற்கான பொறுப்பை அவர்களே ஏற்றுக்கொள்கிறார்கள். அந்தப்பணத்தை பல்வேறு வகைகளில் முதலீடு செய்கிறார்கள். வரும் வருமானத்தில் உங்களுக்கு வட்டியாக ஒரு மிகச் சிறு (8% - 10%) தொகையைக் கொடுத்து விட்டு மீதி (எவ்வளவு வந்தாலும்) அவர்களுக்கு. ஆனால் ஷேரில் செய்யப்படும் முதலீடுகளுக்கு.. லாபமோ, நஷ்டமோ... அது உங்களுக்கே உங்களுக்கு. கொஞ்சம் ரிஸ்க் மாதிரி தெரிந்தாலும் லாபம் அதிகம் வர வாய்ப்புண்டு. 8% என்ன 10% என்ன 100% கூட இலாபமாகக் கிடைக்கலாம். அதாவது போட்ட பணம் டபுள். அவ்வளவு ஏன்? சில நிறுவனங்களின் ஷேர்கள் அதைவிட அதிகமான இலாபமெல்லாம் கொடுத்திருக்கின்றன - ஒரே வருடத்தில்.


ஆனால் இதே விஷயத்தில் மற்றொரு நண்பர் ஒரு படி மேலேயே போய்விட்டார். அவர் "நான் இன்று ஐயாயிரம் ரூபாய் ஷேரில் போடுகிறேன். அடுத்தமாதம் எனக்கு ஏழாயிரத்தைநூறு ரூபாய் ஆக வேண்டும். அப்படி ஏதாவது ஷேர் சொல்லுங்கள்" என்று அசர வைத்துவிட்டார். ஐயாயிரம் ரூபாய் முதலீட்டுக்கு ஒரு மாதத்தில் இரண்டாயிரத்தைநூறு ரூபாயா? அதாவது 50 சதவீதம் ஒரு மாதத்தில். அப்படியானால் 12 மாதத்தில் 600 சதவீதமா? கொள்ளையடிக்கத்தான் போக வேண்டும். அதிலும் கூட ரிஸ்க் உண்டு.

கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். 600% வருமானம் வங்கி வட்டி மூலம் வர வேண்டுமானால் எத்தனை வருடம் காத்திருக்க வேண்டும்? 60 வருடம். ஒரு மனிதனின் வாழ்நாள். ஒரு முழு வாழ்நாளில் வங்கி மூலம் வரும் வருமானத்தை விட அதிகமாக ஒரே வருடத்தில் வர வேண்டும் என்றால் எப்படி? இதைத்தான் பேராசை என்று சொல்வது.

ரொம்பவும் ஆசைப்படாதீர்கள். அப்படி ஆசைப்பட்டு அவசரமாய் பணப் பெட்டியோடு (அதாவது செக் புக்கோடு) உள்ளே வருபவர்களால் தான் ஷேர் மார்க்கெட் இப்படிக் கெட்டுப் போய்க் கிடக்கிறது. நியாயமாக பேங்க் வட்டியை விட சில விழுக்காடுகள், அல்லது இருமடங்கு இருக்குமா என்று பாருங்கள். இந்தியாவில் கடந்த 1985-2006 க்கு இடைப்பட்ட 20 வருடங்களி்ல் ஷேர்களில் செய்யப்பட்ட முதலீடு சுமார் 17.9% (வருடந்தோறும் - CAGR கணக்கீடு) வருமானத்தை அளித்துள்ளது. இது மற்ற உலக நாடுகளின் சந்தைகள் அளித்துள்ள இலாபத்தின் சராசரியை விட அதிகம்.

இதில் நூற்றுக்கணக்கான விழுக்காடுகள் இலாபம் தந்த பங்குகளும் உண்டு. நஷ்டப்பட்டு அதலபாதாளத்தில் விழுந்த பங்குகளும் உண்டு. கடையை மூடிய கம்பெனிகளும் உண்டு. இவை எல்லாவற்றின் சராசரி தான் இந்த 17.9% வருமானம். ஆக, நாம் கவனம் செலுத்த வேண்டியது சரியான பங்குகள் தேர்வில் தான். நல்ல, மிக நல்ல பங்குகளாகப் பார்த்து தேர்ந்தெடுங்கள். முதலீடு செய்யுங்கள். ஜாலியாக இருங்கள்.


மோனோபலி என்று ஒரு ஆங்கிலப் பதம் உண்டு. ஏகபோக உரிமை, தனியுரிமை என்று சொல்லலாம். அதாகப்பட்டது, தான் இருக்கும் துறையில் தான்தான் வல்லவன். சிங்கம் மாதிரி... மற்ற நிறுவனங்கள் எல்லாம் பொடி, அல்லது போட்டிக்கு நிறுவனமே இல்லை என்ற நிலை.. அம்மாதிரி நிறுவனங்களைக் கண்டுபிடித்து முதலீடு செய்யலாம்.. முதலீடு மட்டும் செய்யுங்கள், காத்திருங்கள்,.. ஒரு நியாயமான காலம் வரை. அப்படிக் காத்திருந்தால் நல்ல அறுவடைதான். காத்திருக்கும் கொக்குக்குத்தான் பெரு மீன்கள் கிடைக்கும்.

மோனோபலி நிறுவனங்களைக் கண்டுபிடிப்பது எப்படி? மிகவும் சிம்பிள். இன்டர்நெட் என்கிற ஒரு உன்னதமான ஒரு விஷயம் உங்களுக்கு உதவவே காத்திருக்கிறது. அது ஒரு அலாவுதீன் பூதம். சரியாகப் பயன்படுத்தினால் உங்களுக்கு ஜாக்பாட் தான். மோனோபலியில் உதாரணமாக மின்சாரத்தை எடுத்துக்கொள்வோம். இன்றைக்கு நீர் மின்சாரத்துக்கு மாற்றாக விளங்குவது காற்றாலை மின்சாரம். காற்றாலை மின்சாரத்திற்கான துறையில் ஒரே நிறுவனமாக, ஜாம்பவானாக இருப்பது சுஸ்லான் எனர்ஜி என்ற நிறுவனம். கண்ணுக்கெட்டிய தூரம் வரை வேறு யாரும் இல்லை.

அதே போல பார் ட்ரானிக்ஸ் என்று ஒன்று. நீங்கள் வாங்கும் பேக்கிங் செய்யப்பட்ட பொருட்களில் கருப்பு வெள்ளை பார் கோடுகளைப் பார்த்திருக்கிறீர்கள் அல்லவா? ஷாப்பிங் மால்களில் அவற்றை பில் போடாமல் வெளியில் எடுத்துப் போனால் ஊய்.. ஊய்.. ஊய்.. என்று சைரன் அலறுமே, அதே கோட்தான். அவற்றை அச்சடித்துத் தரும் நிறுவனம் அது. இத் துறையிலேயே ஒன்றுதான். இது போன்று பல நிறுவனங்கள். அப்படிப்பட்ட நல்ல நிறுவனங்களாகப் பார்த்து முதலீடு (கவனிக்கவும், முதலீடு) செய்யுங்கள். பலன்? பழம்தான்.

ஷேர் மார்க்கெட்டைப் பார்த்து அச்சம் வேண்டாம். உங்கள் முதலீட்டுத் தொகை கையைக்கடிக்காத தொகையா என்று மட்டும் பார்த்துக் கொள்ளுங்கள். திருமணம், மருத்துவம், கல்வி முதலிய முக்கியச் செலவினங்களுக்காக வைத்திருக்கும் தொகைகளில் கை வைக்காதீர்கள். உபரித்தொகை மட்டுமே பங்குச் சந்தைக்கு என்று முடிவு செய்து இறங்குங்கள். ஜெயம் தான். மீண்டும் சந்திப்போம்.
------------------------------------------------
நண்பர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள்.
-------
பின்னூட்டத்தில் கருத்துக்கள் சொன்னால்தானே கட்டுரை எப்படி இருக்கிறதென்று எனக்குத் தெரியும்? பின்னூட்டம் போடுங்கள்..
-------
அப்டியே பட்டனை அமுக்கி ஒரு ஓட்டு போட்டுட்டு போங்க. கைக்காசு ஒண்ணும் செலவில்லை.
------------

வெள்ளி, 20 ஆகஸ்ட், 2010

நான் மகான் அல்ல – (ரத்த சரித்திரா) – திரை விமர்சனம்

நடிகர்கள்: கார்த்தி, காஜல் அகர்வால், ஜெயப்ரகாஷ், பரோட்டா சூரி
இசை: யுவன் சங்கர் ராஜா
இயக்கம்: சுசீந்திரன்
தயாரிப்பு: ஸ்டுடியோ கிரீன்
வெளியீடு: தயாநிதி அழகிரியின் கிளவுட் நைன் மூவிஸ்.


முதலிலேயே சொல்லி விடுகிறேன். "நான் மகான் அல்ல" தலைப்புக்கும் படத்துக்கும் என்ன சம்பந்தம் என்றால், மைசூர் பாகுக்கும் மைசூருக்கும் என்ன சம்பந்தமோ, அந்த சம்பந்தம் தான். இன்ட்லியிலும், தமிழ்மணத்திலும் கவர்ச்சியான ஏதாவது ஒரு தலைப்பைக் கொடுத்து, படிப்பவர்களை உள்ளே இழுத்து வேறெதையோ கொடுப்பது போல.

பையா வெற்றியைத் தொடர்ந்து கார்த்தியும், வெண்ணிலா கபடிக்குழு வெற்றியை அடுத்து சுசீந்திரனும் கைகோர்த்திருக்கும் படம். நக்கல் நையாண்டி ஆட்டம் பாட்டம் என ஜாலியாகப்போகிறது முதல் பாதி படம். இடைவேளை வரை ஆங்காங்கே ரசிக்கும்படியான சில டைமிங் காமெடிகள். இரண்டாவது பாதியில் (எதிர் பார்க்கப்பட்ட) பகீர், திகீர் திருப்பங்கள். இரண்டு டிராக்குகளில் பயணிக்கிறது கதை.

வேலையில்லாமல் சும்மா இருக்கும் கார்த்தி, பரோட்டா சூரி ரெகமண்டேஷனில் ஒரு வங்கியில் டூ வீலர் கடன் வசூல் செய்யும் வேலையில் டெம்ப்ரவரியாக சேர்கிறார். நண்பியின் திருமணத்தில் காஜல் அகர்வாலை பார்த்தவுடன் காதல். (ஏனென்றால் சென்னையிலேயே பிறந்து, வளர்ந்து, நான்கு வருடம் சென்னையிலேயே இன்ஜினியரிங்கும் படித்த ஹீரோ இதற்கு முன் அழகான பெண்களையே பார்த்ததில்லை பாருங்கள்) ஒரே மாதத்தில் காஜலின் தந்தையைப் பார்த்து பெண் கேட்கிறார். அவரோ ஆறு மாதத்துக்குள் நல்ல வேலையுடன் வா தருகிறேன் என்கிறார். இடையில் கால் டாக்ஸி டிரைவரான ஜெயப்ரகாஷ் ஒரு கொலை கேஸூக்கு சாட்சி சொல்லப்போகிறார். இது ஒரு டிராக்.

இரண்டாவது டிராக்கில், போதையில் தடுமாறும் மாணவர் கும்பல் (மெயின் வில்லன் யார்டா என்றால் நந்தா படத்தில் சின்ன சூர்யாவாக வருவாரே அந்தப்பையன் தான்) ஒன்று இரட்டைக் கொலை ஒன்றைச் செய்து விட்டு, போதையில் தொடர்ச்சியாக குற்றங்களைச்செய்கிறது. கொலையின் ஒரே (???) சாட்சியை அழிக்க முயன்று அதில் வெற்றியும் பெறுகிறார்கள் அவர்கள் (ஏனென்றால் ஓடிப்போன ஸ்கூல் பெண்ணை கால் டாக்ஸியில் ஏற்றும் போதும், வீட்டுக்கு கூட்டி வரும் போதும், கொலை செய்து ஊர் முழுவதும் துண்டு துண்டாக வீசும் போதும் யாருமே பார்த்திருக்க மாட்டார்கள் பாருங்கள்).

இந்த இரண்டு டிராக்குகளும் இணையும் இடத்தில்தான் கார்த்தி விஸ்வரூபம் எடுக்கிறார். அடுத்து??? செகண்ட் ஹாஃப். காதலுக்கான கெடு, ஆறு மாதத்தில் வரும் என்ஜினியர் வேலை எல்லாவற்றையும் மறந்து விட்டு, தந்தையைக் கொன்ற கும்பலை பழி தீர்க்கிறாரா இல்லையா என்பதை ஆயிரத்தில் ஒரு பருத்தி வீரனான பையா கார்த்தி என்பதை நீங்களே பார்த்துத் தெரிந்து கொள்ளுங்கள்.

ட்ரீட்மெண்ட் ஓரளவு நன்றாக இருந்தாலும் ஒரு சாதாரண சென்னைக் கதையை ரத்தம் ஊற்றி கொத்திக் கொத்து பரோட்டா போட்டிருக்கிறார் சுசீந்திரன். படம் முழுக்க தெறிக்கும் அதீத வன்முறை பெண் ரசிகைகளை நெளிய வைக்கிறது. கார்த்தி, நான்காவது படத்திலேயே இவ்வளவா? கேரியர் கிராஃபில் ஏறிக்கொண்டிருக்கும் போது கொஞ்சம் நார்மல் படங்களையும் செய்ய வேண்டும் கார்த்தி. பெண் ரசிகைகளை இழந்து விடக்கூடாது. பருத்தி வீரனும், பையாவும் கொடுத்த ரசிகைகளை ஆயிரத்தில் ஒருவனிலும், நான் மகான் அல்ல-விலும் இழந்து விடக்கூடாது.

நினைத்ததை நினைத்தவுடன் நினைத்தபடி செய்யும் விட்டேத்தியான ஒரு கதாபாத்திரம் கார்த்திக்கு. ஆனால் அடிக்கடி சிரிக்கும் பருத்தி வீரன் ஸ்பெஷல் அந்தக் கோணல் சிரிப்பை கொஞ்சம் மாற்றிக்கொண்டாலும் நல்லதே. இல்லாவிட்டால் சிவகுமாருக்கு "நடுங்கும் குரல் நடிகர்" என்று பட்டம் கொடுத்த பத்திரிகைகள் கார்த்திக்கு பொருத்தமான ஒரு நக்கல் பட்டத்தை வைத்து விடுவார்கள்.

யுவன் நன்றாகச்செய்திருக்கிறார். ஆனால் கார்த்தி, சென்னை பேக்ரவுண்ட், யுவன் மூன்றும் சேர்ந்த காம்பினேஷன் பையா பாடல்களையே திரும்ப நினைவு படுத்துகிறது. ஒளிப்பதிவில் வெண்ணிலா கபடிக்குழு படத்தில் உபயோகித்திருந்தபடி அதே பிரவுன் டின்டட் டோன்-ஐ உபயோகித்திருக்கிறார்கள். ஆனால் வெண்ணிலா கபடிக்குழு ளிப்பதிவாளர் லக்ஷ்மண் குமார். நான் மகான் அல்ல-வுக்கு ஆர்.மதி.

பாஸ்கர் சக்தியின் வசனம் எதுவும் மனதில் பதியவில்லை. மேலே ரத்தம் தெறிக்கும் போது அதைத்துடைக்கவா, வசனத்தைக் கவனிக்கவா? ராஜீவன் போட்டிருக்கும் சுனாமி குடியிருப்பு சினிமா செட் என்று பல இடங்களில் பல்லிளிக்கிறது.

படத்தின் பல காட்சிகள் பகீரென்று இருக்கின்றன. கார்த்தி வெறித்தனமாக முறைத்தபடி நிற்கும், ரத்தம் தெறிக்கும் போஸ்டர்களை பார்த்தே உஷாராகியிருக்க வேண்டும். பசங்கள் சொன்னார்கள் என்று என்னமோ வெண்ணிலா கபடிக்குழு எஃபெக்டை எதிர்பார்த்தபடி உள்ளே போய் உட்கார்ந்தால் போச்சு.

ஆனால் படம் முழுக்க தூவப்பட்டிருக்கும் ரசனையான சின்னச்சின்ன விஷயங்கள் கொஞ்சம் சுவாரசியத்தை உண்டாக்குகின்றன. பரோட்டா சூரி தன் பைக் லோன் கலெக்ஷன் ஏஜண்ட் பணியை சிறப்பாக செய்திருக்கிறார். இவர்தான் படத்தில் ஆங்காங்கே ஆறுதல். நல்ல உடல் மொழி இவருக்கு. நிறுத்தி நிதானமாக படங்கள் செய்தால் சந்தானத்திற்கும், கஞ்சா கருப்புவுக்கும் போட்டியாக வரலாம்.

கிளைமாக்ஸூம் கொஞ்சம் பகீர் ரகம் தான். ஆனால் சாதாரண சினிமா ரசிகன் எழுந்து நின்று கைதட்டுகிறான். ஒல்லி, ஓமக்குச்சி, சுள்ளான்கள் எல்லாம் பறந்து பறந்து போடும் சண்டைகளை பார்த்த நமக்கு கார்த்தியின் உடம்புக்கு அவர் போடும் சண்டைகள் கொஞ்சம் நம்பும் படியாகத்தான் இருக்கிறது. ஆனால் வரிசையாக இத்தனை கொலைகள் செய்து விட்டுப்போனால் போலீஸ் வராதா?

சிரஞ்சீவி மகனுடனான தெலுங்கு மஹாதீரா வெற்றிக்குப்பின் காஜல் அகர்வாலை தெலுங்கில் இருந்து கூட்டி வந்திருக்கிறார்கள். தயவு செய்து அவர் பேசாமல் அங்கேயே திரும்பப் போய்விடலாம். உப்புச் சப்பில்லாத ரோல்களை இங்கே செய்வதற்கு. ஆனால் முந்தைய படங்களில் பார்த்ததற்கு கொஞ்சம் முன்னேற்றம் தான்.

டாக்ஸி டிரைவர் ஜெயப்பிரகாஷ் நச்சென்று செய்திருக்கிறார். இன்னும் சில வருடங்களுக்கு அப்பா கேரக்டர்கள் புக்கிங் இவருக்கே. ஆனால் அவர் செத்துப்போனவுடன், என்னமோ சிவாஜி கணேசன் கேரக்டர் செத்துப்போன அளவுக்கு சோகப்பாட்டு எல்லாம் கொஞ்சம் ஓவர். கபடிக்குழுவில் இருந்த குண்டுப்பையன், ரெளடி கேரக்டர், நீயா நானா கோபியின் அப்பா ஆகியோர் தலைகாட்டுகிறார்கள்.

மாணவர்கள் என்று தான் அறிமுகமாகிறார்கள் வில்லன்கள். ஆனால் அவர்களை ஏதோ புரொஃபஷனல் கில்லர்ஸ் ரேஞ்சுக்கு பில்டப் கொடுத்து கதை நகர்வது ஒரு சலிப்பைத்தருகிறது. படிப்பை விட்டுவிட்டு, துரத்தித் துரத்தி கொலை செய்து கொண்டு திரிவார்களா அவர்கள் என்ற கேள்வி எழுகிறது நமக்குள்.

சில சந்தேகங்கள்: சென்னை முழுவதும் துண்டு துண்டாக கிடைக்கும் உடல்களைப்பற்றிய கேஸை விசாரித்துக்கொண்டிருக்கும் போலீஸ், சென்னையில் காணாமல் போனவர்கள் பற்றிய விபரங்களை விசாரிக்காதா? அல்லது ஜெயப்ரகாஷ் பிணங்களை அடையாளம் காட்டியதும் உடனே அவர் எந்த ஏரியாவில் சவாரி எடுத்தார் என்று கேட்டு விசாரணைக்குப்போக மாட்டார்களா?


பார்த்தவுடன் காதல் என்கிற ஊத்த விஷயத்தை இன்னும் எத்தனை நாளைக்குத்தான் சொல்லிக்கொண்டிருக்கப்போகிறார்களோ தெரியவில்லை. குழந்தையின் அழுகையை நிப்பாட்ட பாட்டுப்பாடுவாராம் ஹீரோ. அய்யா, இதெல்லாம் சின்னதம்பி, வைதேகி காத்திருந்தால் காலத்திலேயே பார்த்தாயிற்றே.

பெரிய ஆள், குப்பத்துத் தலைவன், கட்டப்பஞ்சாயத்து தலைவர் என்றெல்லாம் மகா பில்டப் கொடுக்கப்படும் தாதா சடாரென்று ஒரே நிமிடத்தில் மாணவர்களால் போடப்படுவது பலவீனமாக இருக்கிறது. ஆனால் கார்த்தியோ ஒற்றை ஆளாக நின்று எல்லாரையும் போட்டுத் தள்ளுகிறாராம். ரஜினியில் துவங்கி போன வாரம் களம் இறங்கிய அருள்நிதி வரை எல்லாருமே மாஸ் ஹீரோக்கள் தானா? ஒரே அடி, வெட்டு, குத்து தான். (காமெடி ஹீரோவாக களம் இறங்க உள்ள உதயநிதிக்கு வாழ்த்துக்கள்)

வேலையில்லாத ஹீரோ, அவனைப்பார்த்த அன்றே காதல் கொள்ளும் ஹீரோயின் என்று படம் எடுத்தால் எங்களையெல்லாம் எந்த ஹீரோயின்ப்பா காதலிப்பார்கள்? என்ற சந்தேகம் வருகிறதல்லவா?

ரஜினியின் டைட்டிலான "நான் மகான் அல்ல" வை எதற்கு வைத்தார்கள் என்றுதான் தெரியவில்லை. ஒரு வேளை "என் அப்பாவைக்கொன்றவர்களை பழிவாங்காவிட்டால் நான் மகன் அல்ல" என்று சொல்கிறாரோ என்னவோ?

டிஸ்கி: முதல் நாள் என்பதால் படத்திற்கு தியேட்டரில் டிக்கெட் கிடைக்குமா என்று சந்தேகம் இருந்தது. ஆனால் சேலத்தில் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் வீட்டுத் திருமணத்திற்காக முதல்வர் கலைஞர் வருகையால் எல்லா கூட்டமும் அங்கே போய்விட்டதால் எங்களுக்கு ஈஸியாக டிக்கெட் கிடைத்தது. கியூ கூட இல்லை.

கிளைமாக்ஸில் நடக்கும் சண்டையைப்பார்த்தால் நம் மீதும் ரெண்டு வெட்டுகள் விழுமோ என்று பயமாக இருக்கிறது. "ஏன் இந்தக்கொல வெறி" என்று வடிவேலு வாய்ஸில் பல குரல்களைக் கேட்க முடிந்தது.

மங்காத்தா டிரெயிலர் போடுவார்கள் என்று ரொம்ப ஆசையாக காத்திருந்தோம். ஆனால் ரொம்ப நாள்(8 வருடங்கள் கழித்து) நண்பர்களுடன் சினிமா போனதால் வழக்கம் போல் இன்டர்வெல்லில் எங்களுக்குள் டீயா, காபியா, ஐஸ்கிரீமா என்ற தகராறு கேன்டீன்காரர் பஞ்சாயத்து பேசும் அளவு போனதால் மங்காத்தா டிரெயிலர் போட்டார்களா என்றே தெரியவில்லை.
------------------------------------------------
நண்பர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள்.
-------
பின்னூட்டத்தில் கருத்துக்கள் சொன்னால்தானே கட்டுரை எப்படி இருக்கிறதென்று எனக்குத் தெரியும்? பின்னூட்டம் போடுங்கள்..
-------
அப்டியே பட்டனை அமுக்கி ஒரு ஓட்டு போட்டுட்டு போங்க. கைக்காசு ஒண்ணும் செலவில்லை.
------------

செவ்வாய், 17 ஆகஸ்ட், 2010

நீயா, நானா, சுதந்திர தினம், நித்தி, ஜக்கி, விகடன்


எஸ்கா
இந்த வாரம் ‘நீயா நானா’வைப் பாதியில் இருந்துதான் பார்க்க ஆரம்பித்தேன். பாதி கூட அல்ல, பத்தேகால் மணிக்குத்தான் ஆரம்பித்தேன். பதினோரு மணிக்கு முடிந்தது. குளோபலைசேஷன், லிபரலைசேஷன், பொதுவுடைமை குறித்த கருத்துக்களை அலசிய விவாதம். பாதியைப் பார்க்காமல் விட்டுவிட்டோமே என்று எண்ணவைத்த விவாதம் அது. பரவாயில்லை. கிட்டத்தட்ட அதே மாதிரி கருத்துக்கள் கொண்ட "பேராண்மை" பார்த்துக்கொண்டிருந்ததனால் தான் இதைப் பார்க்க முடியவில்லை என்று எனக்கு நானே ஆறுதல் சொல்லிக்கொண்டேன். மறு ஒளிபரப்பு எப்போது என்று தெரியவில்லை. யாராவது தெரிந்தால் பின்னூட்டம் போடுங்கள்.

சுதந்திர தின ஸ்பெஷல் என்பதால் "நீயா, நானா"வில் ஒரே வி.ஐ.பி.க்கள் கூட்டம். LIBA-வைச் சேர்ந்த அந்த்வான், நாகப்பன், புகழேந்தி, சோம.வள்ளியப்பன், ராமசாமி, ஞாநி (இன்னும் பல பேர்) ஆகிய பல வி.ஐ.பி.க்கள் கலந்து கொண்டார்கள். கடந்த 30 ஆண்டுகளில் லிபரலைசேஷன் வந்த பிறகு வந்த ப்ளஸ் மைனஸ்கள், 19 ஆண்டுகளில் வந்த குளோபலைசேஷனால் வந்த ப்ளஸ் மைனஸ்கள் போன்றவற்றைப் புள்ளி விபரங்களுடன் அலசினார்கள்.

தூத்துக்குடி துறைமுகத்தில் எலெக்ட்ரானிக்ஸ் வேஸ்ட்கள் கொட்டப்படுவது, மூன்றாம் உலக நாடுகளில் புகை கக்கும் நிறுவனங்களைத் தள்ளி விடும் உலக வங்கியின் திட்டம், நிறுவனங்கள் குவிந்தாலும் டீக்கடைகளில் தவிர்க்க முடியாத குழந்தைத் தொழிலாளர்கள், அந்நியச் செலாவணி உயர்ந்தாலும், உயராத சராசரி குடிமகனின் சராசரி வருமானம் என்று மகா சீரியஸாகப் போனது விவாதம். சைடில் வழக்கம் போல் ஐ.டி நிறுவனங்கள். மேல் இரண்டு குத்து.

ஆரம்பத்தில் நாகப்பன், புகழேந்தி, சோம.வள்ளியப்பன் வகையறாக்கள், பொருளாதாரம் வளர்ந்துள்ளது என்று குளோபலைசேஷனுக்கு ஆதரவாகப் பேசிக்கொண்டிருந்தாலும் "ஸ்பெகுலேட்டர்கள் கையில் கிடைத்த பொருளாதாரத்தால் சாமானியனுக்கு எந்தப் பிரயோஜனமும் இல்லை" என்று எதிர்த்து விழுந்த பலமான அடியினால் "இதைத் தவிர்க்க நம்மால் முடியாது. நாம் சாமர்த்தியமாக இருக்கப் பழகிக்கொள்ள வேண்டும், இந்தச் சூழ்நிலையில் எப்படி சர்வைவ் செய்வது என்று கற்றுக்கொள்ள வேண்டும்" என்று சமாளித்தபடி ஜகா வாங்கினார்கள்.

இடையில் ஓவியர் சங்கரலிங்கம் என்பவர் நீயா நானாவின் நிகழ்ச்சியின் இடையில் ஓவியம் வரைய வேண்டும் என்று ‘விகட’னின் "ஆசை" பகுதியில் ஆசைப்பட்டுக் கேட்டிருந்தபடி அவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் சரியான காமெடி அதுதான். தனக்கென்று ஒரு மாடலை உட்கார வைத்துக்கொண்டு அவர் பாட்டுக்குப் படம் வரைந்துக் கொண்டிருந்தார். அந்தப் பெண் லேசாக இளித்தபடி, நெளிந்தபடி உட்கார்ந்திருந்தது. லேசாக நகர்ந்து நகர்ந்து உட்கார்ந்து கொள்வதும், கைப்பையை சரி செய்து கொள்வதும் என்று நிகழ்ச்சியுடன் ஒட்டாத ஒரு நிலை. அது குறித்த கட்டுரையை வியாழக்கிழமை ‘விகட’னில் படித்தபோது என்னமோ நன்றாக இருந்தது. ஆனால் டி.வி. யில் பார்க்கும்போது சூழ்நிலைக்குப் பொருந்தாமல் தனியாகத் தள்ளி இருந்தது.

கோபிநாத் "நீயும் நானும்" என்ற பெயரில் ‘விகட’னில் ஒரு தொடர் எழுதுகிறார். தன்னம்பிக்கை, சுயமுன்னேற்றம் வகை. நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால் அதை அவரே எழுத வேண்டும் என்று அவசியமில்லை. எந்த வி.ஐ.பி.யாக இருந்தாலும், தொடர் ஒன்றை எழுத தமது கருத்தைச் சொன்னால் போதும். அதற்கு ‘விகடன்’ ஆசிரியர் குழுவினர் கூகுளடித்து டெவலப் செய்ய உதவி செய்வார்கள். அந்த இன்ஃப்ளூயன்ஸில் ‘விகடன்’ குழுவினர் "ஆசை" பகுதிக்காக நீயா, நானா குழுவினரிடம் அனுமதி வாங்கியிருக்கிறார்கள் (நான் கூட "ஆசை" பகுதிக்கு ஒரு ஆசையை எழுதி அனுப்பியிருக்கிறேன்.

கோபி எழுதிய "ப்ளீஸ், இந்தப் புத்தகத்தை வாங்காதீங்க" புத்தகம்தான் இந்த வருடம் புத்தகக் கண்காட்சியின் டாப் சேல்ஸ் புத்தகம் என்று கேள்விப்பட்டேன். இது எந்த அளவு உண்மை என்று தெரியவில்லை. இரண்டு பக்கங்கள் படித்துப் பார்த்தேன். என்னமோ வாங்கத் தோன்றவில்லை. அதன் பொருந்தாத எழுத்துரு படிக்கத் தூண்டவில்லை.

‘விகட’னில், கார்ப்பொரேட் சாமியார் என்றழைக்கப்படும் சாமிகளில் முதன்மையான சத்குரு ஜக்கி வாசுதேவ் கூட சிலபல தொடர்கள் எழுதினார். எல்லா தொடர்களுமே கவர்ந்திழுக்கும் வகையில் எழுதப்பட்டிருக்கும். அவர் சேலத்தில் ஒருமுறை நிகழ்ச்சி நடத்துவதற்கு வந்திருந்தார். என்னமோ எக்ஸிபிஷன் மாதிரி வரிசையாக ஸ்டால்கள் எல்லாம் போட்டுப் படு விமரிசையாக நடத்தப்பட்டது அது. நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் அரை மணி நேரத்திற்கு ஒரே வாண வேடிக்கையாக இருந்தது. அதற்கு மட்டும் சுமார் ஒரு இலட்சம் ரூபாய் செலவானதாகச் சொன்னார்கள்.

அவரது ஆசிரமத்திற்குச் சென்று கருத்துக்களை விவாதித்து அவற்றைத் தேர்ந்த ஒரு கட்டுரையாக எழுதித்தந்தது எழுத்தாளர்கள் சுபா. அவர்களைப் பற்றிச் சொல்லவே வேண்டாம். "நேரேட்டிவ் ரைட்டிங்" வகையில் மிகச்சிறந்த எழுத்தாளர்கள் அவர்கள். அவர்களின் "மாடிப்படிக் குற்றங்கள்" தான் கே.வி.ஆனந்த், சூர்யா கூட்டணியில் ‘அயன்’ திரைப்படமாக உருமாறியிருக்கிறது. அந்த வகையில் அவரது கூட்டத்திற்குப்போய் ஏமாந்து போனேன் நான்.

ஜக்கியின் தொடரை வாசித்து வந்த பழக்கத்தில் ஒரு இரண்டு மணி நேரம் உட்கார்ந்து அவரை கவனித்துப்பார்த்தேன். ஆனால் ஒன்றும் கோர்வையாக இல்லை. யோகா பற்றிப் பேசினார், திடீர் என்று மரம் நடுவதைப்பற்றிச்சொல்கிறார். திடீர் என்று பரவசநிலை என்று சொல்லி நடனமாடத் துவங்கினார். பாதி ஆங்கிலம், பாதி தெலுகு, கொஞ்சம் தமிழ் என்று கலந்துகட்டி வேறு இருந்தது பேச்சு.

இன்னொரு மேட்டர். தமிழ்நாட்டில் எந்த ஒரு நிகழ்ச்சி நடந்தாலும் கலெக்க்ஷன் நோட்டு போடுவது வழக்கம். ‘களவாணி’ பார்த்தீர்களா? கிரிக்கெட் விழா நடத்த கலெக்க்ஷன் செய்வார்களே) பெரிய பெரிய வி.ஐ.பி.க்களிடம் கூட காசு புடுங்குவது (ஸாரி, நிதி திரட்டுவது) நடக்கிறது. ஜக்கி, மேல்மருவத்தூர் சாமியார், நித்தி, உள்ளிட்டோரிடம் கூட டொனேஷன் நோட்டுகள் நீட்டப்படுகின்றனவாம். சமீபத்தில் கொங்கு மண்டலத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சிக்காக நோட்டு நீட்டப்பட்ட போது நித்தி பைசா தர மறுத்து விட்டதாகவும் அதன் காரணமாகத்தான் "அந்த" ஸ்பெஷல் வீடியோ வெளிவர வைக்கப்பட்டு அவருக்கு இந்த நிலைமை என்றொரு நியூஸூம் கசிகிறது. உண்மையோ, பொய்யோ யாமறியேன் பராபரமே.

‘விகடன்’ பற்றிப் பேசும் போது.... குப்பையோ, சத்தையோ எதுவாக இருந்தாலும் சாமானியனுக்காக அதை ஒரு நல்ல பேக்கேஜாக மாற்றித் தரத்தெரிந்திருக்கிறது ‘விகட’னுக்கு. அவர்கள் பயன் படுத்தும் டெம்ப்ளேட் அப்படி. எரிகிற கொள்ளியில் எந்தக் கொள்ளி நல்ல கொள்ளி என்று பார்த்து நாம் வாங்குவதால் அதை வைத்து அவர்களுக்குக் காசு.


சென்ற வருடத் துவக்கத்தில் எட்டு ரூபாயாக விற்றுக்கொண்டிருந்த ‘விகடன்’ திடீரென பத்து ரூபாய் ஆக்கப்பட்டது. விகடன் டெலிவிஸ்டாஸ் தொடர்கள் நன்றாகப் போகத் துவங்கின. ‘சன்’ டிவி நடத்திய சன் குடும்பம் விருது விழாவில் கூட பல அவார்டுகள் வாங்கின விகடன் டெலிவிஸ்டாஸ் தயாரிக்கும் பல தொடர்கள். நிறைய அவார்டுகள் வாங்கியது அவர்கள் தயாரிக்கும் "திருமதி.செல்வம்’ தொடர்தான்.


விகடன் டாக்கீஸ் தயாரிப்பில் "எஸ்.எம்.எஸ்" படம் ஆரம்பிக்கப்பட்டதும் பத்து ரூபாய் ‘விகடன்’ பதினைந்து ரூபாய் ஆனது. படம் தயாரிக்க காசு வேண்டாம்? (வாரா வாரம் தலைக்கு ஐந்து ரூபாய் வீதம் எட்டு இலட்சம் புத்தகங்கள்). படமும் நன்றாக ஓடியது. நல்ல கலெக்க்ஷன். ஆனால் அவர்களின் ‘வால்மீகி’ என்ற இரண்டாவது படம் ஊத்திக்கொண்டது. அத்தோடு படத்தயாரிப்பையே நிறுத்தி விட்டது விகடன்.


சரி போகட்டும், நீயா- நானாவுக்குத் திரும்பி வருவோம். கலந்துகொண்ட எல்லாருமே பெரிய ஆட்கள் என்பதால் விவாதம் மிகச் சரியான பாயிண்டுகளுடன் அலசப்பட்டது. குளோபலைசேஷனால் இரண்டொரு துறைகள் வேண்டுமானால் வளர்ந்திருக்கலாம். அதனால் ஒட்டுமொத்த இந்தியாவுக்கு எந்த வளர்ச்சியுமில்லை. இரண்டொரு துறைகள் வளர்ந்தால் அது வீக்கம்தான் என்ற கருத்து முன்வைக்கப்பட்டது.

நீண்டு கொண்டே போன விவாதத்தில் கோபிநாத்தால் கூட வழக்கம் போல அதிக கருத்துக்கள் சொல்ல முடியவில்லை. காரசாரமாகப் போன விவாதத்தில் முடிவு என்று ஒன்று கிடைப்பதாகவும் தெரியவில்லை. எல்லோரும் வி.ஐ.பி.க்கள் என்ற அதே காரணத்தினால் தான் முடிவில்லாத, முற்றுப்பெறாத ஒரு விவாதமாகவே முடிவடைந்தது இந்த வார "நீயா, நானா". சடாரென இடைவெளியுடன் திரைப்படம் நிறுத்தப்பட்டால் எப்படி இருக்கும்? அதுபோல் சட்டென்று முடிந்து போனது அது.

ஞாயிறு, 15 ஆகஸ்ட், 2010

பதில் - தேஜூ உஜ்ஜைன் கவிதைகள்

யூத்ஃபுல் விகடனில் 2009 அக்டோபர் மாதம் வெளியான கவிதைகள் இவை.

-----------------------
பதில்


தினக்கடன் நாளாந்த
அலுவல் முடித்து
மதிய உணவைக் காவு கொடுத்து
தேத்தண்ணீர் மட்டுமருந்தி

இலக்கதனைத் எட்ட முயன்று
பரையேற்றம் செய்து காட்டி
கோப்புகள் மாற்றி
மின்னஞ்சல் எறிந்து
மடிக்கணிணி மூடி
அலுவலகக் கணிணி அணைத்து

விற்பனையே முதன்மையென்று
குறிவைத்துக் குதறும்
மேலாளனைச் சபித்து
உளைவெடுக்கும் தலைகுனிந்து
பணிமனை வெளியேறி

வீடேக யத்தனிக்கும்
மழைநாளொன்றின்
அகால வேளையில்
பசியென்று கைநீட்டும்
சாலையோரக் கிழவிக்கு
என்னவென்று பதிலிறுக்க?

-----------------------

வாசனை




ஊதுபத்தி விற்பவன்
சென்று விட்ட பின்பும்
இன்னமும் மிச்சமிருக்கிறது
அவனின் ஏழ்மை வாசனை
-----------------------
உன்னழகு


நீ
அழகு பார்த்த
அந்தக் கணத்தில்..
உறைந்து போனது
என் வீட்டு
ஆளுயரக் கண்ணாடி.

இப்போது
வேறொன்றையும்
பிரதியெடுக்க
மறுக்கிறது அது.

கிட்ட நின்று
என் முகம் பார்க்க
யத்தனித்தால்
"ச்சீ! போடா"
என்கிறாய் நீ
கண்ணாடியுள்ளிருந்து..

-----------------------

என்னைக் கொஞ்சம்


கண்காட்சிக் கூட்டத்தில்
தொலைந்துபோய்
மீண்டும் கிடைத்த
குழந்தையாய் மாறிப்போகிறேன் நான்

எனைவிட்டு அங்குமிங்கும்
சுற்றியலைந்த உன் கண்கள்
என்மேல் வந்தமரும் போது

---------------------------------------------------------------------------

நண்பர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள். தமிழிஷில் அதாவது இட்லியில், ஸாரி, இன்ட்லியில்.... ஓட்டும் போடுங்கள். மறக்காமல்.

--------------------------------
பின்னூட்டத்தில் கருத்துக்கள் சொன்னால்தானே கவிதை எப்படி இருக்கிறதென்று எனக்குத் தெரியும்? பின்னூட்டம் போடுங்கள்..
--------------------------------

வெள்ளி, 13 ஆகஸ்ட், 2010

காதல் கவிதைகள் - தேஜூ உஜ்ஜைன்

யூத்ஃபுல் விகடனில் 2009 நவம்பர் மாதம் வெளியான கவிதைகள் இவை.

--------------------------


எல்லோருக்கும் புத்தாண்டு
ஜனவரி 1ல் வருகிறது
உனக்கு மட்டும் ஏன்
பிப்ரவரி 14ல்
என்று கேட்கிறார்கள்

சொல்லிவிடவா அவர்களிடம்?
உன்னுடனான என் காதல்
பூத்த தினம்தான்
என் புத்தாண்டு என்று?

--------------------------



கல்யாண வீட்டின்
வாசலிலேயே
தயங்கி அமர்ந்துவிட்ட
என்னை
உள்ளே அழைக்கும்
அம்மாவிடம்
எப்படிச்சொல்வது?

உன்னை
நினைவுபடுத்திவிட்ட
ரோஜாக்களை
விட்டுவிட்டு
எப்படி வர
என்று...

--------------------------


என்னை வெறுப்பேற்ற
குழந்தையின் கன்னத்தில்
முத்தங்கள்
கொடுத்தாய் நீ...

ஆனால்
உனக்குத் தெரியாமல்
தன்
கன்னங்களை என்னிடம்
கொடுத்துப்போனது
குழந்தை...

--------------------------


உன்னுடனான
என் முதல் சந்திப்பில்
நான் சேர்த்து வைத்திருக்கும்
சின்னஞ்சிறு
வால் நட்சத்திரங்களை
உனக்குப் பிரத்யேகமாயப்
பரிசளிப்பேன்
ஒவ்வொரு முறையும்
எனைப்பார்க்க வருகையில்
எடுத்து வந்து
என் கனவில் நீ
விட்டுச்சென்றவை அவை.

--------------------------


விளையாடும் போது
அவ்வப்போது
திரும்பி எனைப்பாரேன்
அந்த கணப்பொழுதில்
எனைச் சுற்றியோர்
ஒளிவட்டம் தோன்றுவதாய்ப்
பிரமையேற்படுகிறது எனக்கு

----------------------------------------------------

நண்பர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள். தமிழிஷில் அதாவது இட்லியில், ஸாரி, இன்ட்லியில்.... ஓட்டும் போடுங்கள். மறக்காமல்.

-------
பின்னூட்டத்தில் கருத்துக்கள் சொன்னால்தானே கவிதை எப்படி இருக்கிறதென்று எனக்குத் தெரியும்? பின்னூட்டம் போடுங்கள்..
-------

வியாழன், 12 ஆகஸ்ட், 2010

தேஜூ உஜ்ஜைன் - கவிதை

யூத்ஃபுல் விகடனில் சில மாதங்கள் முன்பு வெளியான கவிதைகள் இவை.

-----------------------
தேஜூ உஜ்ஜைன்
-----------------------


சிரிக்காதேயேன்
ப்ளீஸ்..!

நீ சிரிக்கையில் சிந்தி விடப்போகின்றன
உன் இதழ் முழுவதும் காத்திருக்கும்
எனக்கான முத்தங்கள்...

உன்னைச் சிரிப்பூட்டவும்
பயமாயிருக்கிறது எனக்கு

*


17 முறை
படையெடுத்துத் தோற்றாலும்
கடைசிப் போரில்
வென்றவன் தான் கஜினி

உன்
காதலைப் பொறுத்தவரை
நான்
கஜினி வம்சம்

*


அப்படிப் பார்க்காதேயேன்
ப்ளீஸ்...

உன்னை தரிசிப்பதை
விட்டுச் சாக
விருப்பமில்லை எனக்கு!

*


தாஜ்மகால்
மெல்ல மெல்ல
கறுத்து வருகிறதாமே...

வருத்தப்படுகிறார்கள்
சுற்றுச்சூழலியளாளர்கள்

நல்ல வேளை
உன்னைத் தாஜ்மகால்
பார்க்கவில்லை

பார்த்திருந்தால்
வெட்கப்பட்டு
உடனே கறுத்திருக்கும்!
--------------------------

நண்பர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள். தமிழிஷில் அதாவது இட்லியில், ஸாரி, இன்ட்லியில்.... ஓட்டும் போடுங்கள். மறக்காமல்.

-------
பின்னூட்டத்தில் கருத்துக்கள் சொன்னால்தானே கட்டுரை எப்படி இருக்கிறதென்று எனக்குத் தெரியும்? பின்னூட்டம் போடுங்கள்..
-------

புதன், 11 ஆகஸ்ட், 2010

அறிவுத்திருட்டும், துணுக்கு எழுத்தாளர்களும்

-எஸ்கா

(இக்கட்டுரை ஆகஸ்ட் 9ம் தேதியன்று உயிர்மையின் உயிரோசை டாட் காமில் வெளியானது.)
--------------------------------------------
‘அங்காடித்’தெரு படம் நான் இன்னும் பார்க்கவே இல்லை. பலரும் ஓவர் சோகம் என்று சொன்னதால் பார்க்காமல் விட்டு விட்டேன். ஆனால் சமீபத்தில் வீட்டில் வழக்கம் போல சேனல் சேனலாகத் தாவிக் கொண்டிருக்கும் போது வசந்த் டி.வி.யோ, கேப்டன் டி.வி.யோ எதோ ஒன்றில் அந்தப் படத்தில் இருந்து ஒரு சீனைப் பார்க்க நேர்ந்தது. அந்தக் காட்சியில் அந்த குண்டுப் பையனை விளாசிக்கொண்டிருப்பார் அவனது அப்பா. அவன் சொல்வான். "அப்பா சும்மாருப்பா, எப்பப்பாரு என்னைப் பக்கத்து வீட்டுப்பொண்ணோட கம்பேர் பண்ணிக்கிட்டே இருப்பியே. இப்பப்பாரு, அவ 470 மார்க், நான் 480 மார்க்". அப்பா. "அடப்பாவி. அவ டென்த், நீ ப்ளஸ் டூ-டா" என்பார்.

இதைப் பார்த்ததும் எனக்குப் பகீரென்றது. ஏண்டா என்கிறீர்களா? நான் எழுதி மூன்றாண்டுகளுக்கு முன்பு ஆனந்த விகடனில் வெளியான ஜோக் அது. (நம்பாதவர்கள் yeskha@gmail.com என்ற ஐ.டி.க்கு மெயில் அனுப்பி அந்தப் பக்கத்தின் ஸ்கேன் காப்பியை வாங்கிக்கொள்ளலாம்). ‘விகடன்’, ‘குமுதம்’, ஜூ.வி, ‘ஆனந்த ஜோக்ஸ்’ என்று சில பத்திரிகைகளில் இதுவரை என்னுடைய சுமார் 150 ஜோக்குகள் வெளியாகியிருக்கின்றன. நாம் எழுதிய ஜோக் ஒரே வாரத்தில் நமக்கே எஸ்.எம்.எஸ்ஸாகவும், நமக்கே ஈ.மெயிலிலும், அல்லது வேறொரு பத்திரிகையில் வேறொரு பெயரில் வெளிவந்தால் எப்படி இருக்கும் யோசித்துப் பாருங்கள். ஆரம்பத்தில் அதிர்ச்சியாக இருந்தது. அப்புறம் கோபம் வந்தது. அப்புறம் எரிச்சல் வந்தது. அப்புறம் மரத்துப்போய் விட்டது.

தற்போது வாசகர் கடிதத்தில் ஆரம்பித்து, ஜோக்குகள், கவிதைகள், ஏன் கட்டுரைகள் வரை பரவலாக அப்படியே சுடும் வேலை கனஜோராக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் பதிவர் ஜாக்கி சேகரின் ஆங்கிலப்பட விமர்சனம் ஒன்றைத் தன் பெயரி்ல் ‘பாக்யா’ பத்திரிகைக்கு அனுப்பி வெளியிட்டு விட்டார் சி.பி.செந்தில்குமார் என்ற ஜோக் எழுத்தாளர் கம் பதிவர் என்ற சர்ச்சை பதிவுலகில் வெடித்து ஓடிக்கொண்டிருக்கிறது.

அவ்வளவு ஏன்? ‘விகடன்’ குழுமத்தின் "யூத்ஃபுல் விகடன்" ஒரு பிரபல இணையதளம். அந்த இணையதளத்தில் "ஆபீஸில் பிஸியாக இருப்பது போல் காட்டிக் கொள்வது எப்படி?" என்ற பெயரில் என்னுடைய நகைச்சுவைப்படைப்பு ஒன்று வெளிவந்தது. சில வாரங்கள் கழித்து அதே, அப்படியே ‘கல்கி’ புத்தகத்தில் "ஜான்ஸி ராணி" என்ற பெயரில் வெளிவந்திருந்தது. ‘யூத்ஃபுல் விகட’னையே காப்பி பேஸ்ட் செய்து அனுப்ப அவனுக்கு / அவளுக்கு எவ்வளவு தைரியம் இருக்க வேண்டும்?

எழுதும் பழக்கம் இருப்பவர்கள் பல பத்திரிகைகளையும் படிப்பார்கள், அது சம்பந்தப்பட்டவர்களுக்குத் தெரியவரும் என்று கூட அந்த நாதாறிக்கு அறிவு இல்லை போலிருக்கிறது. அது சரி.. அந்தப் பிரபல பத்திரிகைகளுக்குப் பொறுப்பு இல்லையா? அவர்கள் எல்லாம் அதை எழுதி அனுப்புபவர்களிடம் குறைந்தபட்சம் "இந்தப் படைப்பு சொந்தக் கற்பனையே" என்ற உறுதி மொழியைக்கூட வாங்குவதில்லை போலிருக்கிறது. கொதித்துப்போய் போன் செய்தாலோ, கடிதம் எழுதினாலோ எந்த பதிலும் இல்லை. ‘கல்கி’க்கு மெயில் அனுப்பினால் சிம்பிளாக "sorry" என்று ஒரு பதில் வருகிறது "பொறுப்பாசிரியர் சார்பாக" என்று யாரோ பெயர் போட்டு. அந்த "ஜான்ஸி ராணி" யாரென்றே தெரியவில்லை. திருடுபவர்களின் தைரியம் எல்லை மீறித்தான் போய்க்கொண்டிருக்கிறது.

சொல்லப்போனால் இன்றைய வளர்ந்து வரும் டெக்னாலஜி யுகத்தில் எதுவுமே சீக்ரெட் இல்லை. எல்லாம் எல்லாருக்கும் சொந்தம் என்ற பொதுவுடைமைச் சித்தாந்தத்தை யார் புரிந்து கொண்டார்களோ, செயல்படுத்தினார்களோ தெரியாது. அதை நம்ம ஊர் ஆட்கள் நன்றாகவே செயல்படுத்துகிறார்கள். கலக்கப்போவது யாரு? அசத்தப்போவது யாரு? கலக்கல் மன்னர்கள் போன்றவர்கள் இந்த ஜோக் வகையறாக்களை அழகாக சுட்டுத் தள்ளுகிறார்கள். அவர்கள் சொல்லும் உதிரி ஜோக்குகள் எல்லாம் எங்களை மாதிரி ஜோக் எழுத்தாளர்கள் எழுதுவதே. அவ்வளவு ஏன்? இந்த ஈரோடு மகேஸு, மதுரை முத்து, சிவகார்த்திகேயன் வகையறாக்கள் கூட என் ஜோக்குகளில் இரண்டிரண்டை உருவியிருக்கிறார்கள்...

(தமிழிஷில் ஓட்டுப் போடுவீர்கள்தானே??)

என்னமோ போங்கய்யா, நாங்கள் எல்லாம் போஸ்ட் கார்டு (பத்துப் பைசா இருந்த போதில் இருந்து வாங்கிவருகிறேன்) வாங்கி வந்து உட்கார்ந்த இடத்தில் இருந்து இருக்கும் கொஞ்சூண்டு மூளையையும் கசக்கி யோசித்து ஒரு நாளைக்கு ஐந்து ஜோக்குகள் என்ற கணக்கில் ‘விகட’னுக்கும், ‘குமுத’த்துக்கும் எழுதிப்போட்டு (ஆக, வாரத்துக்கு முப்பத்தைந்து) பப்ளிஷ் ஆகாத ஜோக்குகளை நோட் பண்ணி வைத்து அவற்றை மூன்று வாரங்கள் கழித்து மற்ற பத்திரிகைகளுக்கு அனுப்பி அதில் ‘விகட’னில் ஒன்று, ‘குமுத’த்தில் ஒன்று, வேறெதாவதில் ஒன்று என பப்ளிஷ் ஆகி புக்கைக் கையில் வாங்கிப் பாக்கும்போது உஸ், அப்பாடா என்று இருக்கும்.

அதற்கு மணியார்டர் வரும் ஐம்பது ரூபாய்க்கு (விகடன் ஐந்து ரூபாயில் இருந்து பதினைந்து ரூபாய் ஆகியிருக்கிறது இந்த ஐந்து வருடங்களில். ஆனால் ஜோக்குகளுக்கான சன்மானம் இன்னமும் ஐம்பது ரூபாய்தான்) பல நாட்கள் கழித்து. பத்துப் பதினைந்து நாளாகும். ‘விகட’னில் இருந்து வருவதற்கு. அதுவும் ‘குமுத’த்தில் இருந்தென்றால் பணம் வர மூன்று மாதமாகும். அந்த மூன்று மாதத்தில் ‘குமுத’த்தில் வெளிவந்த வாசகர் கடிதம், ஜோக்ஸ் எல்லாவற்றுக்கும் சேர்த்து ஒரே செக்காக வந்து விடும். ஸோ, பயப்படத் தேவையில்லை. சில புத்தகங்கள் காம்ப்ளிமெண்டரி காப்பி கூட அனுப்பாது. நண்பர்கள் யாராவது ஃபோன் செய்து, ‘டேய், இந்த புக்குல இந்த பேஜுல வந்திருக்கு பாரு’ என்று சொல்ல வேண்டும் அல்லது கொஞ்ச நாள் கழித்து மணியார்டர் வந்தால் தான் தெரியும். அப்படி எல்லாம் சில்லறை சுகங்களை அனுபவிக்கும் எங்களுக்கு இந்த அறிவுத் திருட்டு என்ன மாதிரி உணர்ச்சியைக் கொடுக்கும் சொல்லுங்கள்??

யோவ், நீங்கள்லாம் இப்படி எங்க சரக்கை உருவிக்கொண்டிருந்தால் நாங்கள்லாம் எப்பய்யா பெரியாளு ஆகறது. நானாவது பரவாயில்லை. எனக்கு சீனியர்கள்?. தஞ்சை தாமு என்று ஒரு பெரியண்ணன் இருக்கிறார். முகம் கூடத் தெரியாது. தல ஜோக்காக எழுதித் தள்ளிக்கொண்டே இருப்பார். ‘விகடன்’, ‘குமுதம்’, ‘குங்குமம்’ என்று மூன்று புத்தகங்களில் மட்டுமே மாதம் சுமார் நாற்பது ஐம்பது ஜோக்குகளாவது வெளியாகும். அவர் பெயரைப் பார்த்தாலே எனக்கு ஒரு மாதிரி இருக்கும். என்னடா இந்த ஆள் எந்த புக்கை எடுத்தாலும் அதில் ஜோக் எழுதி வைத்திருக்கிறார் என்று. அவர் ஜோக்கெல்லாம் இப்படித் திருடுபோனால் எப்படி இருக்கும் அவருக்கு?

இதுபோல் ஒன்றல்ல ரெண்டல்ல. பல நூறுகள், ஏன் ஆயிரக்கணக்கான ஜோக்குகள் இவ்வாறு சுடப்பட்டு சினிமாக்களில் செருகப்பட்டவையே. உங்களுக்கெல்லாம் தெரிந்திருக்கும். ஜூ.வி-யின் "டயலாக்" பகுதி மிகப்பிரசித்தம். அப்பகுதியில் வெளியான ஜோக்குகளைத் தொகுத்து "டயலாக்" என்ற பெயரிலேயே இரு புத்தகங்களை வெளியிட்டிருக்கிறது விகடன் பிரசுரம். அதில் முதல் புத்தகத்தில் இருந்து நான்கைந்து ஜோக்குகள் ஸ்ரீகாந்த், மீரா ஜாஸ்மின் நடித்த ‘மெர்க்குரிப்பூக்கள்’ என்ற படத்தில் அப்படியே வார்த்தை மாறாமல் காப்பியடித்து உபயோகப்படுத்தப் பட்டிருக்கின்றன. (என்னென்ன என்று நான் சொல்ல மாட்டேன். "டயலாக்" புத்தகம் ஐம்பது ரூபாய். "மெர்க்குரிப்பூக்கள்" சி.டி வாங்கியோ டவுன்லோட் செய்தோ பார்த்துக்கொள்ளுங்கள்.)

அது சரி. இதெல்லாம் என்ன ஜோக்குத் திருட்டு, சப்ப மேட்டர்....பெரிய பெரிய எழுத்தாளர்களின் சிறுகதைகளில் இருந்தெல்லாம் திருட்டு வேலை நடக்கும். நாஞ்சில் நாடன் கூட ஒருமுறை இதைப்பற்றி நொந்து போய் புலம்பியிருந்தார். கனவுத் ‘தொழிற்சாலை’யில் வாய்ப்பு கிடைக்கப்போராடி சுற்றும் அஸிஸ்டென்ட் டைரக்டர்கள் என்ற ஒரு வர்க்கத்தில் பலரும் இந்த வேலையைச் செய்வதுண்டு. டைரக்டருடன் ரூம் போட்டு டிஸ்கஷன் வைக்கும்போது சீன் பிடிக்கும் வேலையில் கொத்து பொரோட்டா போடப்படுபவை பல்வேறு எழுத்தாளர்கள் எழுதிய கதைகளே. என்ன ஒன்று? ஆணைப் பெண்ணாகவும், மாமனாரை நாத்தனாராகவும், பாஸை எம்ப்ளாயீ ஆகவும் கொஞ்சம் கொஞ்சம் மாற்றி சீன் வைத்தால் ஒன்றும் தெரியாது.

உலக எழுத்தாளர்களும் இதற்கு விதிவிலக்கல்ல. ஆனால் இப்போது அந்த சிறுகதைகளின் இடத்தை உலக சினிமா டி.வி.டி.க்கள் நிரப்புகின்றன. டிஸ்கஷன் போகும்போதே இரண்டு மூட்டை டிவிடிக்களுடன் தான் ரூம் போடுகிறார்கள் இன்றைய படக்குழுவினர். ‘அயன்’ படத்தில் சூர்யாவும், கருணாஸும் பேசும் காட்சி ஓர் உதாரணம். (செல்வராகவன் வீட்டில் இரண்டு அறைகள் நிறைய உலக சினிமா டிவிடி வைத்திருக்கிறாராம்). அவார்டுகள் வாங்கிய உலகப்படமான ‘ஸோட்ஸி’ படத்தை அப்படியே சீன் பை சீனாக "யோகி" என்று படமெடுத்து அதே உலகப்பட விழாக்களுக்கு அனுப்பிய தைரியசாலிகள் இருக்கும் இடம் இது (இதையெல்லாம் அப்பட்டமாக உடனுக்குடன் வெளிக்கொண்டு வரும் பதிவர்கள் என்ற புதிய தலைமுறை எழுத்தாளர்களுக்கு நன்றி).

அப்படியிருக்கையில் ஜோக்குத் திருட்டெல்லாம் எம்மாத்திரம். போ, போ. போயிட்டே இரு. ஆஹா, ஜோக்குகள் திருட்டு பற்றி எழுத ஆரம்பித்து கட்டுரை எங்கேயோ போய்க்கொண்டிருக்கிறது. இன்னும் உதாரணங்கள் சொல்ல ஆரம்பித்தால் ரொம்பவும் நாறிப்போகும். வேண்டாம். இதைக் கொஞ்சம் பாஸிடிவ்வாக கொண்டு வந்து முடிக்கத்தான் ஆசை.

வாழ்க்கையை ரசம் குறையாமல் வைத்திருப்பது நகைச்சுவை மட்டுமே. எவ்வளவு கோபம், துக்கம், ஆத்திரம், டென்ஷன் இருந்தாலும் அவற்றைக் குறைத்து வாழ்வைப் பிரச்சினையில்லாமல் நடத்த உதவுவது நகைச்சுவைச் சுவையே. நகைச்சுவை நடிகர்களில் துவங்கி நகைச்சுவை எழுத்தாளர்கள் வரை நமக்கு அந்த உதவியைச் செய்பவர்கள் பலர். அவ்வாறு ஒரு சிறு பங்கைத்தரும் ஜோக் எழுத்தாளர்கள் பலர் உண்டு.

அவர்களுக்கெல்லாம் ஒரு சிறு வாழ்த்து அல்லது நன்றி. இந்தப் பெயர்களை நீங்கள் எங்காவது கண்டிப்பாக கவனித்திருப்பீர்கள். குறைந்தது இவர்களில் பத்துப் பதினைந்து பேர்களின் பெயர்களாவது தெரிந்திருந்தால் நீங்கள் ரெகுலராகப் பத்திரிகைகள் வாசிப்பவரே தான். பாருங்களேன்.

தஞ்சை தாமு, ஈரோடு ஜெயாப்ரியன், குட்டி மு.வெங்கடேசன், தூத்துக்குடி சகிதா முருகன், எஸ்.எஸ்.பூங்கதிர், தஞ்சை ராம்.ஆதிநாராயணன், பர்வதவர்த்தினி, ஜக்கி, முத்து, வேளச்சேரி வீ.விஷ்ணுகுமார், தஞ்சை வளர்மதி, சுந்தரப்பெருமாள் கோவில் தே.ராஜாசிங் ஜெயக்குமார், கோவை டி.ஜெய்சிங், புதூர் பாலா, லெ.நா.சிவக்குமார், அம்பை தேவா, கொளக்குடி சரவணன், குளச்சல் எஸ்.முகம்மது யூசுப், வழுதூர் வைகை ஆறுமுகம், கள்ளியம்புதூர் சிக்ஸ்முகம், புளியரை கணேசன், டி.சேகர், சொக்கம்பட்டி தேவதாசன், பாளை பசும்பொன், அதிரை புகாரி, அவ்வை.கே.சஞ்சீவிபாரதி, கோபிசெட்டிபாளையம் ஜி.கே.எஸ்.மூர்த்தி, ஈரோடு வீ.ரவீந்திரன்,

இடைப்பாடி ஜெ.மாணிக்கவாசகம், சாயம்.வெ.ஜெயராமன், சென்னிமலை சி.பி.செந்தில்குமார், தஞ்சை அனார்கலி, ரிச்சு, வந்தை ஜி.கே நிதி, ராஜபாளையம் பேச்சி, அரவக்குறிச்சிப்பட்டி எம்.அசோக்ராஜா, அவ்வையார்பாளையம் ஏ.எஸ்.யோகானந்தம், திருமயம் பெ.பாண்டியன், ஓரியூர் கே.சேகர், போளூர் சி.ரகுபதி, க.கலைவாணன், ராசா தேசிங்கு, ரிஷிவந்தியா, மன்னன், சிவம், லீலாஜி, சாத்தூர் மிக்கேல்ராஜ், சென்னை சாரதி டேச்சு, சேலம் அ.ரியாஸ், கொங்கணாபுரம் வே.செந்தில்குமார், குருவை சோலோ செல்வா, சேலம் எஸ்கா (நான்தாங்க) ஆகிய முகம் தெரியாத ஜோக் எழுத்தாளர்களுக்கு இந்தப் பதிவு சமர்ப்பணம்.

மேலே உள்ள பெயர்களை என் ஞாபகத்தில் உள்ள வரை மட்டும் எடுத்துக் குறித்திருக்கிறேன். மறந்திருந்து விட்டுப்போயிருந்தால் மன்னிக்கவும். உங்களுக்குத் தெரிந்தால் எடுத்துக் கொடுங்கள். அவர்களுக்கு ஒரு சிறு பாராட்டாக இருக்குமே.

------------------------------------------------
நண்பர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள். தமிழிஷில் அதாவது இட்லியில், ஸாரி, இன்ட்லியில்.... ஓட்டும் போடுங்கள். மறக்காமல்.
-------
பின்னூட்டத்தில் கருத்துக்கள் சொன்னால்தானே கட்டுரை எப்படி இருக்கிறதென்று எனக்குத் தெரியும்? பின்னூட்டம் போடுங்கள்..
-------

செவ்வாய், 10 ஆகஸ்ட், 2010

மது-மதி-உலகு - கவிதை

கட்டுரைகள் தவிர்த்து கவிதைகளும் கொஞ்சம் எழுதுவதுண்டு. கவிதைகள் எழுத "தேஜூ உஜ்ஜைன்" என்ற புனைபெயரை உபயோகிப்பது வழக்கம்... சில நாட்கள் முன்பு கவிதையொன்று யூத்ஃபுல் விகடனில் வெளியாகியுள்ளது. அந்தக் கவிதையை அங்கே படிக்க இதை க்ளிக்கவும்...

http://youthful.vikatan.com/youth/NYouth/thejuujjainpoem310710.asp
-----------------------------------------
அங்கே ஏன் போவானேன். இங்கேயே படிக்கலாம்,
-----------------------------------------
மது-மதி-உலகு

புதிதாய் பள்ளி செல்கிறாள்
என் செல்லம்
பெருமிதம் காட்டும் அக்கா.

என்ன கிளாஸ் எடுத்தாங்க,
என்ன சொல்லிக் கொடுத்தாங்க,
எத்தனை ஃபிரண்ட்ஸ் கிடைச்சாங்க..
கேள்வி அம்புகள் வீசும் பாவா.

மாமாவின் கடமையாய்
என்னிடமிருந்து கேள்வி விழுகையில்
"டீச்சர் பேரென்னடா" என்ற என்னிடம்
கெலாக்ஸ் சாப்பிட்டபடி
தலையும் காலும் ஆட்டியபடி
"இன்னும் வைக்கல"
என்று சொல்லிச் சிரிக்கிறாள் மதுக்குட்டி.

-----------------------------------------

-------
நண்பர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள். தமிழிஷில் அதாவது இட்லியில், ஸாரி, இன்ட்லியில்.... ஓட்டும் போடுங்கள். மறக்காமல்.

-------
பின்னூட்டத்தில் கருத்துக்கள் சொன்னால்தானே கட்டுரை எப்படி இருக்கிறதென்று எனக்குத் தெரியும்? பின்னூட்டம் போடுங்கள்..
-------

திங்கள், 9 ஆகஸ்ட், 2010

படைப்புத் திருட்டு, காப்பி

பதிவர், ஸாரி…. பிரபல பதிவர் ஜாக்கி சேகரின் பிரபல பதிவு ஒன்று பாக்யா வார இதழில் (வேறாருவர் பெயரில்) வெளியானது... அது குறித்து அவர் நொந்து போய் வெளியிட்டுள்ள பதிவு இது.

http://jackiesekar.blogspot.com/2010/08/blog-post.html

இது குறித்து பல பேருடைய எதிர்வினைகள், பின்னூட்டங்கள் என்று காரசாரமாக அங்கே போய்க்கொண்டிருக்கிறது விவாதம்.

அந்தப் பதிவிற்கு நான் இட்ட பின்னூட்டம் இது..
--------------------------------------------------------------
பல எழுத்தாளர்களுக்கும் இது நடந்து கொண்டேதான் இருக்கிறது. பதிவர்களுக்கும் நடக்கிறது இப்போது. "ஆபீஸில் பிஸியாக இருப்பது போல் காட்டிக் கொள்வது எப்படி?" என்ற பெயரில் என்னுடைய நகைச்சுவைப்படைப்பு ஒன்று யூத்ஃபுல் விகடனில் வெளிவந்தது. சில வாரங்கள் கழித்து அதே, அப்படியே கல்கி புத்தகத்தில் "ஜான்ஸி ராணி" என்ற பெயரில் வெளிவந்திருந்தது. யூத்ஃபுல் விகடனையே காப்பி பேஸ்ட் செய்து அனுப்ப அவனுக்கு / அவளுக்கு எவ்வளவு தைரியம் இருக்க வேண்டும்? எழுதும் பழக்கம் இருப்பவர்கள் பல பத்திரிகைகளையும் படிப்பார்கள், அது சம்பந்தப்பட்டவர்களுக்கு தெரியவரும் என்று கூட அந்த நாதாறிக்கு அறிவு இல்லை போலிருக்கிறது. அது சரி.. அந்தப்பிரபல பத்திரிகைகளுக்கு பொறுப்பு இல்லையா? அவர்கள் எல்லாம் அதை எழுதி அனுப்புபவர்களிடம் குறைந்தபட்சம் "இந்தப்படைப்பு சொந்தக்கற்பனையே" என்ற உறுதி மொழியைக்கூட வாங்குவதில்லை போலிருக்கிறது. கொதித்துப்போய் போன் செய்தாலோ, கடிதம் எழுதினாலோ எந்த பதிலும் இல்லை. கல்கிக்கு மெயில் அனுப்பினால் சிம்பிளாக "sorry" என்று ஒரு பதில் வருகிறது "பொறுப்பாசிரியர் சார்பாக" என்று யாரோ பெயர் போட்டு. அந்த "ஜான்ஸி ராணி" யாரென்றே தெரியவில்லை.
--------------------------------------------------------------
ஜாக்கியின் பதிவை காப்பியடித்த பெரிய மனிதர் சி.பி.செந்தில்குமார் ஆனந்த விகடன், குமுதம், ஆனந்த ஜோக்ஸ், கல்கி, குங்குமம் போன்ற பல பத்திரிகைகளில் துணுக்குகள் எழுதும் ஆள். புதிதாக பதிவுலகிற்கு வந்திருக்கிறார். வந்தவுடனே அலப்பறை. ஒருமுறை குமுதம் போட்டியில் இலட்ச ரூபாய் பரிசு வென்றவர். அது அவருக்கு திருமணமான புதிது. அப்போதே அவர் தனது ஜோக்குகள் பத்தாயிரத்திற்கும் மேல் வெளியானதாகச் சொல்லியிருந்தார். இப்போது எவ்வளவோ?
-------------------------------------------------------
அவரே வெளியிட்ட அதனுடைய தொடர் இடுகை இது.
http://jackiesekar.blogspot.com/2010/08/blog-post_04.html
-------------------------------------------------------
சரி என் கதைக்கு வருவோம்.. ‘விகடன்’ குழுமத்தின் "யூத்ஃபுல் விகடன்" இணையதளத்தில் "ஆபீஸில் பிஸியாக இருப்பது போல் காட்டிக் கொள்வது எப்படி?" என்ற பெயரில் என்னுடைய நகைச்சுவைப்படைப்பு ஒன்று வெளிவந்தது. சில வாரங்கள் கழித்து அதே, அப்படியே ‘கல்கி’ புத்தகத்தில் "ஜான்ஸி ராணி" என்ற பெயரில் வெளிவந்திருந்தது. அடுத்தவர் படைப்பை காப்பியடிப்பதே தப்பு. அதிலும் வார்த்தை மாறாமல் யூத்ஃபுல் விகடனில் இருந்தே காப்பி பேஸ்ட் செய்து வெளியிட அவனுக்கு / அவளுக்கு எவ்வளவு தைரியம் இருக்க வேண்டும்? அது சரி.. அந்தப்பிரபல பத்திரிகைகளுக்கு பொறுப்பு இல்லையா? முன்பெல்லாம் "இந்தப்படைப்பு தன்னுடைய சொந்தக்கற்பனையே, இதுவரை வேறு எந்த புத்தகத்திலும் வெளியானதில்லை" என்று உறுதி மொழி வாங்குவார்கள். இப்போது எழுதுபவர் எண்ணிக்கையும் அதிகம், பத்திரிகைகள் எண்ணிக்கையும் அதிகம் ரொம்ப சுதந்திரம் ஆகிவிட்டது.

இதைப்பற்றி டென்ஷனாகி கல்கிக்கு என்னால் அனுப்பப்பட்ட மெயில் இது.
--------------------------------------------------------------
அன்புடையீர்,

என் பெயர் எஸ்.கார்த்திகேயன். எஸ்கா என்ற புனைபெயரில் ஆனந்த விகடன், குமுதம் இதழ்களில் நகைச்சுவைத் துணுக்குகளும் ஆனந்த விகடன் குழுமத்தின் யூத்ஃபுல் விகடன் என்ற இணையதளத்தில் நகைச்சுவைக் கட்டுரைகளும் எழுதி வருகிறேன். கல்கியில் கூட ஒரு முறை எனது ஜோக் ஒன்று பிரசுரமாகியுள்ளது.

இந்த வார கல்கி பத்திரிகையப் படித்ததும் நான் அதிர்ச்சி அடைந்தேன். காரணம் இவ்வார கல்கியின் 60ம் பக்கத்தில் ஜான்ஸி ராணி என்பவர் எழுதியதாக வெளியாகியுள்ள "நீங்கள் ஆபீஸில் பிஸியாக இருப்பது போல் காட்டிக் கொள்பவரா?" என்ற கட்டுரை யூத்ஃபுல் விகடனில் சில வாரங்களுக்கு முன் வெளியான "ஆபீஸில் பிஸியாக இருப்பது போல் காட்டிக் கொள்வது எப்படி?" என்ற எனது கட்டுரையில் இருந்து முழுக்கத் திருடப் பட்டுள்ளது.

கல்கி விரும்பினால் நான் கல்கிக்கும் எனது படைப்புகளை அனுப்பி வைக்க விரும்புகிறேன். கண்டவர்கள் என் படைப்பை தன்னுடையதாக ஆக்கிக் கொள்வது என்ன நியாயம்? இதே நிலை என்னுடைய ஜோக்குகளுக்கும் நிகழ்ந்துள்ளது. இன்று தொலைக்காட்சிகளில் கலக்கப் போவது யாரு? என்ற நிகழ்ச்சிகளில் ஜோக்காளிகள் சொல்வதெல்லாம் எங்களைப் போன்ற ஜோக் எழுத்தாளர்கள் பத்திரிகைகளில் எழுதியதைத்தான்.

(இன்னொன்றையும் சொல்ல விரும்புகிறேன், காப்பி அடிப்பது என்பது வேறு, அப்படியே உருவுவது என்பது வேறு) உச்சகட்டக் கோபத்தில் நான் அந்த ஜான்ஸி ராணியைக் கேட்பதெல்லாம் "ஏன் இந்த தே.......த் தனம்?" என் பிள்ளையை அவன் பிள்ளை என்று சொல்வதற்குச் சமமான இழிசெயல் இது. இப்படி அயோக்கியத் தனம் செய்வது சரியா? அதிலும் வேறெங்காவது இருந்து திருடியிருந்தால் கூடத்தெரியாது. ஆனால் இக் கட்டுரை மற்றொரு பிரபல பத்திகையான ஆனந்த விகடன் குழுமப் பத்திரிகையில் இருந்து திருடப்பட்டுள்ளது.

என் கோபமெல்லாம் கல்கி இப்படிச்செய்து விட்டதே என்பது தான். பொதுவாக பத்திரிகைகளில் பக்கங்கள் நிரப்ப ஆசிரியர் குழுவில் உள்ளவர்களே எதையேனும் எழுதுவதோ, (தற்காலத்தில்) நெட்டில் இருந்து உருவிப்போடுவதோ வழக்கம். ஆனால் கல்கி ஒரு பாரம்பரியம் மிக்க பத்திரிகை என்பதால் அதன் ஆசிரியர் குழுவைச் சேர்ந்தவர்கள் இதைச் செய்ய மாட்டார்கள் என்று நம்புகிறேன். அந்த ஜான்ஸி ராணி என்பவர் கல்கியின் ஆசிரியர் குழுவினரில் ஒருவராக இருக்க மாட்டார்கள் என்றும் நம்புகிறேன்.

கல்கியிடம் என் வேண்டுகோள் என்னவென்றால் ஜான்ஸி ராணி என்ற பெயரில் எழுதியுள்ளவரிடம் இதனை விசாரிக்க வேண்டும். அடுத்த வாரப் புத்தகத்தில் அந்தக் கட்டுரையை எழுதியது ஜான்ஸி ராணி அல்ல "எஸ்கா" என்று ஒரு திருத்தம் வெளியிட வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன். என் வருத்தம் எல்லாம், மற்ற பத்திரிகைகள் செய்வது போல துணுக்குகள், கட்டுரைகள் எழுதுபவர்களிடம் "இது வேறு எங்கும் வெளியானது அல்ல, வேறு எவரையும் காப்பி அடித்து எழுதியது அல்ல" என்ற குறைந்த பட்சம் வாக்குறுதியைக் கூட கல்கி வாங்குவதில்லையா என்பது தான்.

நேற்று கல்கி புத்தகத்தைப் படித்ததில் இருந்து தங்கள் ஆசிரியர் குழுவைத் தொடர்பு கொள்ள முயற்சித்து வருகிறேன், ஆனால் முடியவில்லை. ஆகவே அதிக பட்ச மன வருத்தத்துடன் இந்த மெயிலை அனுப்புகிறேன். இந்த மெயில் கண்டவுடன் தயவு செய்து என்னை என்னுடைய செல் நம்பரில் அழையுங்கள். நான் தங்களி்டம் பேச விரும்புகிறேன்.
நன்றி,
எஸ்கா (எ) எஸ்.கார்த்திகேயன்
98 943 253 83
சென்னை
--------------------------------------------------------------
2009 செப்டம்பர் 20 ம் தேதி வெளியான "கல்கி" இதழ் அது.
--------------------------------------------------------------
அவர்களிடம் இருந்து என்ன பதில் வந்திருக்கும் என்று எதிர்பார்க்கிறீர்கள்? ரொம்பவும் எதிர்பார்க்காதீர்கள். காலத்திற்கேற்ப தன்னை மாற்றிக்கொள்ளாத கல்கி ஒரு சாம்பார் பத்திரிகை. அதில் என்னுடைய மூன்று ஜோக்குகளும் வெளியாகியுள்ளன. ஆனால் அதற்காக சப்போர்ட் பண்ண முடியாது. அதில் இப்படித்தான் பதில் வரும் என்று எதிர்பார்த்தேன். அதே போல் வந்தது... இதோ அவர்களிடம் இருந்து வந்த பதில்.
--------------------------------------------------------------
We have received the article as a forwarded mail which was published in kalki net page. Sorry for the inconvenience.

Regards/(மிஸ்டர் எக்ஸ்)/for editor
--------------------------------------------------------------
யார் அந்த மிஸ்டர் எக்ஸ் என்று கேட்கிறீர்களா? அது வேண்டாம், பாவம். அது யாரோ ஒரு உதவி ஆசிரியர். அவர் பெயரைப்போட்டு அவருக்கு எதுக்கு வேண்டாத வீண் பழி. போகட்டும்.

இதே போன்ற "காப்பி" குறித்த பதிவு ஒன்றை கட்டுரையாக உயிரோசைக்கு அனுப்பியிருக்கிறேன். ஆனால் அது பாஸிடிவ்-வாக முடிந்திருக்கிறது. நாளை மாலை வரை காத்திருந்து விட்டு வெளியாகவில்லையென்றால் என் ப்ளாக்கில் வெளியிடத்திட்டம். செவ்வாய்க்கிழமை காலை எதிர்பார்க்கலாம்.
--------------------------------------------------------------
விகடன் இப்போது எப்படி என்று தெரியவில்லை. ஆனால் குமதம் "பிரசுரமாகும் கதை, கட்டுரை மற்றும் படைப்புகள் அனைத்திற்கும் பதிப்பாளரே உரிமையாவார். பிரசுரிக்கத் தேர்ந்தெடுக்கப்படும் படைப்புகளுக்கு பி.ஆர்.பி சட்டப்படி ஆசிரியர் குழுவே பொறுப்பு" என்று நோட் போட்டிருக்கிறார்கள். இது போல் ஏதேனும் வெளியாகி யாராவது கேஸ் போட்டால் அவர்கள் தான் மாட்டுவார்கள் பாவம்.


-------

நண்பர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள். தமிழிஷில் அதாவது இட்லியில், ஸாரி, இன்ட்லியில்.... ஓட்டும் போடுங்கள். மறக்காமல்.

-------

பின்னூட்டத்தில் கருத்துக்கள் சொன்னால்தானே கட்டுரை எப்படி இருக்கிறதென்று எனக்குத் தெரியும்? பின்னூட்டம் போடுங்கள்..

-------

ஞாயிறு, 1 ஆகஸ்ட், 2010

நீயா நானா?, ஜெயமோகன் மற்றும் சாரு



இந்த வாரம் "நீயா நானா?" டாக்டர்கள் Vs பொதுமக்கள் என்ற தலைப்பில் நடைபெற்றது. வழக்கம் போல ஒரே டமால் டுமீல். அதுவும் இது கொஞ்சம் சென்ஸிடிவ்வான தலைப்பா? கிடைத்தது போதும் என்று ஒரே ரகளை. கூடவே, நிகழ்ச்சியில் கலந்து கொண்ட எழுத்தாளர் முத்துக்கிருஷ்ணனும், ஜெயமோகனும் நம்ம ரமணா ரேஞ்சுக்கு புள்ளி விவரங்களாக தட்டிவிட்டுக்கொண்டே இருந்தார்கள் பொதுமக்கள் தரப்பில் இருந்து. அதே போல் எதிர் சைடில் இருந்து டாக்டர்களும் எவ்வளவு முடியுமோ அவ்வளவு கெளன்டர் கொடுத்துக்கொண்டே இருந்தார்கள்.

சுறு சுறுவென்று போய்க்கொண்டிருந்தது விவாதம். வழக்கம் போல காய்ச்சு காய்ச்சு என்று காய்ச்சிவிட்டு கடைசியில் ஸாரி சொல்லி ஒரு பெரிய கும்பிடாகப்போட்டு விட்டார் கோபி.. காய்ச்சியது இந்த வாரம் டாக்டர்களை. ஆனால் கடைசியில் "நீங்க சாமி மாதிரி. உங்களை திட்டு திட்டு என்று திட்டுவோம், ஆனால் கடைசியில் உங்களிடம் தான் வந்து நிற்போம், நீங்கள் தான் எங்களை காப்பாற்ற வேண்டும்" என்று போட்டார் ஒரு போடு. டாக்டர்கள் தரப்பு சாய்ந்து விட்டது. போதாக்குறைக்கு அதில் ஒரு டாக்டரை செலக்ட் செய்து (சிங்கப்பூர் ஹார்டுவேர்ஸ் வழங்கும்) ஒரு டிவி பரிசு வழங்கியதும் சென்டிமென்டாக ஆஃப் ஆகிவிட்டது டாக்டர்ஸ் தரப்பு..

அது கிடக்கட்டும் எந்த தலைப்பாக இருந்தால் என்ன? வாராவாரம் ஏதாவது ஒரு தலைப்பை தட்டி, கொட்டி, பட்டி பார்த்து டிங்கரிங் செய்து கொண்டதான் இருக்கிறார்கள். ஆக அதை விடுங்கள். நாம் நம்ம சாரு மேட்டருக்கு வருவோம். இதில் சாரு எங்கேயிருந்து வந்தார் என்கிறீர்களா? அட என்னங்க? நீயா? நானா? என்றாலே சாரு ஞாபகத்துக்கு வர வேண்டுமில்லையா? அப்படி இல்லையென்றால் நீங்கள் எல்லாம் என்னத்துக்கு ப்ளாக் படிக்கிறீர்கள்?



ஒன்னு, ரெண்டு, மூணு (மூணு அடிக்கு மேல போனா திருப்பி அடிக்கிறா மாதிரியே எண்ற??) என்று கெளண்டிங் கணக்கில் ஒவ்வொரு நீயா? நானா? நிகழ்ச்சியாக சாரு கலந்து கொண்டிருந்தார் ஆசையாக (அவரே சொன்னது போல் "இந்த பாழாய்ப்போன டிவியில் மூஞ்சி தெரியவேண்டும் என்று ஒரு ஆசைதான்") ஆனால் நம்ம நித்துக்குட்டி சம்பந்தப்பட்ட ஒரு நிகழ்ச்சியில் கார்னர் ஆக்கப்பட்டு, பிற்பாடு டென்ஷனாகி, சூடாகி ப்ளாக்கில் எழுதிப்போட்டு அதற்கு பல பேரும் பதில், எதிர்வாதம், எதிர்வினை, பின்னூட்டம் என்று எழுதிக் குவித்து பதிவர்களிடையே விவாதம் நீயா நானாவை விட ரொம்பப் பெரிதாக போய்க்கொண்டிருக்கிறது.

ஆன்டனியைப்பற்றி சாரு எழுதி, எழுதி, எழுதி, இப்போது, சாரு Vs ஆன்டனி என்ற லெவலுக்குப்போய்விட்டது மேட்டர். இதிலே என்ன காமெடி என்றால் நீயா நானாவில் பேசுகின்ற இருதரப்பும் மோதும். ஆனால் இங்கே சாரு தரப்பு மட்டும் தான் குதியோ குதி என்று குதித்துக்கொண்டிருக்கிறது (இன்னமும்). அவர்கள் (விஜய் டிவி) தரப்பில் இருந்து யாருக்கும் பதில் சொன்னதாகத்தெரியவில்லை. சிம்பிளாக அடுத்த ஆள் யார் என்று பார்த்து விட்டு ஜெயமோகனைக் களத்தில் இறக்கி விட்டு விட்டார்கள். அவர்தான் இந்த வார கெஸ்ட்டு.... அடுத்து ஜெயமோகன் கோபித்துக்கொண்டால் எஸ்.ராமகிருஷ்ணனை இறக்குவார்களோ என்னவோ? அவர்களுக்கென்ன? வி.ஐ.பிக்களுக்கா பஞ்சம் இந்த நாட்டில்?

ஆனால் ஜெயமோகனை விட, சாருவையே கொண்டு வந்து விட்டிருந்தால் தன்னுடைய ஹார்ட் பிராப்ளம், சர்ஜரி, டிராஸ்ப்ளான்டேஷன் எல்லாவற்றையும் சேர்த்து காரமாக நிகழ்ச்சியைக் கொண்டு போயிருப்பார். என்ன செய்வது? அந்த நிகழ்ச்சியில் அவருக்கு பதில் ஜெயமோகன் வந்து விட்டார். போகட்டும். ஆனால் அவர் மட்டும் சும்மா இல்லை. தன்னுடைய யூனியன் பற்றியெல்லாம் அடித்து விட்டுக்கொண்டிருந்தார். கோபியும் ரொம்ப சின்ஸியராக "ஜெயமோகன்" சொல்லி விட்டார், "ஜெயமோகன்" சொல்லி விட்டார், என்று பாட்டுப்பாடிக்கொண்டே இருந்தார்.



இதில் ஹைலைட்டாக டாக்டர்களுக்கும், பொதுமக்களுக்குமான பொதுவான கருத்துக்களை, கன்க்ளூஷன் பேச்சுக்களை பேசும் போது கோபிநாத் ஜெயமோகனைக் கைகாட்டி, இந்தா "மிகச்சிறந்த" எழுத்தாளர்கள் இருக்காங்க என்று ஒரு பிட்டையும் சேர்த்துப்போட்டார். உடனே ஜெயமோகன் முகத்தில் சிரிப்பைப்பார்க்க வேண்டும். முகமெல்லாம் பூரித்துப்போய் விட்டது அவருக்கு. சாரு மட்டும் இதைப்பார்த்திருந்தால்? பார்த்திருந்தால் என்ன பார்த்திருந்தால்? இப்போது கூட யூடியூப்பில் தட்டிப்பார்த்தால் வந்து விடப்போகிறது.... பார்த்து விட்டு மீண்டும் உ.த.எ (உத்தமத் தமிழ் எழுத்தாளன்) என்று ஆரம்பத்து திட்டித் தீர்க்கத்தான் போகிறார்.. பதினைந்து வருடத்துக்கு முன்பே தினமலர் தீபாவளி மலரில் அவரை மையமாக வைத்து கதை எழுதிய ஆளாயிற்றே நம்ம ஆளு. என்னமோ போங்க, (நாங்க வழிப்போக்கர்கள் தான...)

இந்த நிகழ்ச்சியில் கோபி அவ்வப்போது தன் காதில் மாட்டியிருந்த மைக்ரோபோன் ரிஸீவரை சரிசெய்தபடியே இருந்தார். ஆன்டனியிடம் இருந்து எக்ஸ்ட்ரா பாயிண்ட்ஸ் வந்திருக்கும் என்று நனைக்கிறேன். அந்த மாதிரியான சமயங்களில் கேமரா லாவகமாக கோபிநாத்தின் இடது பக்கம், டாப் ஆங்கிள் ஷாட் என்று பயணிககிறது, ஸோ.... நோ ப்ராப்ளம். பார்வையாளர்கள் யாரும் கவனிக்க மாட்டார்கள்.

அப்புறம் இன்னோரு மேட்டர். இது நிகழ்ச்சித் தயாரிப்பாளர் மற்றும் புரொடக்ஷன் டீமுக்கும். நீயா நானா? நிகழ்ச்சியில் நிறைய கொசு பறக்கிறது அய்யா. க்ளோசப்பில் பார்த்தால் பளிச்சென்று தெரிகிறது. ஜெயமோகன் தலைக்கு மேலே சொய் சொய் என்று நிறைய பறந்து கொட்டிருந்தது. அப்புறம் அந்தப்பக்கம் இடது கார்னரில் அமர்ந்திருந்த ஒரு டாக்டரம்மா நிகழ்ச்சி முழுமைக்கும் கையை வீசியபடியே (ஈ / கொசு ஓட்டிக்கொண்டு) தான் அமர்ந்திருந்தார். அதையெல்லாம் கொஞ்சம் கவனிங்கப்பா.

உட்கார்ந்து பார்க்கும் நாங்கள், செட்டின் டிசைனை பார்த்து விட்டு என்னமோ செட்டை ஏஸி ஹாலில் போட்டிருப்பார்கள் என்று நினைத்துக் கொண்டு அமர்ந்திருக்கிறோம். ஆனால் சுத்திக் கொண்டிருக்கும் இத்தனை கொசுக்களை பார்த்தால் ஏதோ கோயம்பேடு காய்கறி மார்க்கெட் குப்பைத்தொட்டி அருகில் செட்டைப்போட்டிருப்பார்களோ என்று டவுட்டாகிறது. கொஞ்சம் கவனிங்க. என்ன?

ஒன் மோர் டெய்ல் பீஸ்..: எல்லாம் முடிந்து விஜய் டிவியின் பிராண்ட் விளம்பரப்பாடலை போட்டார்கள் "உங்கள் வாழ்வை அழகாக்கும், வண்ண மயமாக்கும், உங்கள் விஜய்" என்று. (கூடவே பதிவுகை காரசாரமாக்கும் என்று ஒரு லைன் சேர்த்துக்கொள்ளலாம். அந்தளவுக்கு இருக்கிறது மேட்டர்). பை தி வே, இந்தப்பாடலின் விரிவாக்கப்பட்ட வடிவம் தான் "செம்மொழியான தமிழ்மொழியாயாயாயாயாயாயாயம்ம்ம்ம்" என்பது இரண்டையும் நன்றாக கவனிப்பவர்களுக்குத் தெரியும், கூடவே கொஞ்சம் தூர்தர்ஷனின் "மிலே சுரு மேரா துமாரா"வின் எசன்ஸையும் சேர்த்திருக்கிறார்கள்.

-------

நண்பர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள். தமிழிஷில் ஓட்டும் போடுங்கள். மறக்காமல்.

-------

பின்னூட்டத்தில் கருத்துக்கள் சொன்னால்தானே கட்டுரை எப்படி இருக்கிறதென்று எனக்குத் தெரியும்? பின்னூட்டம் போடுங்கள்..

-------