செவ்வாய், 17 ஆகஸ்ட், 2010

நீயா, நானா, சுதந்திர தினம், நித்தி, ஜக்கி, விகடன்


எஸ்கா
இந்த வாரம் ‘நீயா நானா’வைப் பாதியில் இருந்துதான் பார்க்க ஆரம்பித்தேன். பாதி கூட அல்ல, பத்தேகால் மணிக்குத்தான் ஆரம்பித்தேன். பதினோரு மணிக்கு முடிந்தது. குளோபலைசேஷன், லிபரலைசேஷன், பொதுவுடைமை குறித்த கருத்துக்களை அலசிய விவாதம். பாதியைப் பார்க்காமல் விட்டுவிட்டோமே என்று எண்ணவைத்த விவாதம் அது. பரவாயில்லை. கிட்டத்தட்ட அதே மாதிரி கருத்துக்கள் கொண்ட "பேராண்மை" பார்த்துக்கொண்டிருந்ததனால் தான் இதைப் பார்க்க முடியவில்லை என்று எனக்கு நானே ஆறுதல் சொல்லிக்கொண்டேன். மறு ஒளிபரப்பு எப்போது என்று தெரியவில்லை. யாராவது தெரிந்தால் பின்னூட்டம் போடுங்கள்.

சுதந்திர தின ஸ்பெஷல் என்பதால் "நீயா, நானா"வில் ஒரே வி.ஐ.பி.க்கள் கூட்டம். LIBA-வைச் சேர்ந்த அந்த்வான், நாகப்பன், புகழேந்தி, சோம.வள்ளியப்பன், ராமசாமி, ஞாநி (இன்னும் பல பேர்) ஆகிய பல வி.ஐ.பி.க்கள் கலந்து கொண்டார்கள். கடந்த 30 ஆண்டுகளில் லிபரலைசேஷன் வந்த பிறகு வந்த ப்ளஸ் மைனஸ்கள், 19 ஆண்டுகளில் வந்த குளோபலைசேஷனால் வந்த ப்ளஸ் மைனஸ்கள் போன்றவற்றைப் புள்ளி விபரங்களுடன் அலசினார்கள்.

தூத்துக்குடி துறைமுகத்தில் எலெக்ட்ரானிக்ஸ் வேஸ்ட்கள் கொட்டப்படுவது, மூன்றாம் உலக நாடுகளில் புகை கக்கும் நிறுவனங்களைத் தள்ளி விடும் உலக வங்கியின் திட்டம், நிறுவனங்கள் குவிந்தாலும் டீக்கடைகளில் தவிர்க்க முடியாத குழந்தைத் தொழிலாளர்கள், அந்நியச் செலாவணி உயர்ந்தாலும், உயராத சராசரி குடிமகனின் சராசரி வருமானம் என்று மகா சீரியஸாகப் போனது விவாதம். சைடில் வழக்கம் போல் ஐ.டி நிறுவனங்கள். மேல் இரண்டு குத்து.

ஆரம்பத்தில் நாகப்பன், புகழேந்தி, சோம.வள்ளியப்பன் வகையறாக்கள், பொருளாதாரம் வளர்ந்துள்ளது என்று குளோபலைசேஷனுக்கு ஆதரவாகப் பேசிக்கொண்டிருந்தாலும் "ஸ்பெகுலேட்டர்கள் கையில் கிடைத்த பொருளாதாரத்தால் சாமானியனுக்கு எந்தப் பிரயோஜனமும் இல்லை" என்று எதிர்த்து விழுந்த பலமான அடியினால் "இதைத் தவிர்க்க நம்மால் முடியாது. நாம் சாமர்த்தியமாக இருக்கப் பழகிக்கொள்ள வேண்டும், இந்தச் சூழ்நிலையில் எப்படி சர்வைவ் செய்வது என்று கற்றுக்கொள்ள வேண்டும்" என்று சமாளித்தபடி ஜகா வாங்கினார்கள்.

இடையில் ஓவியர் சங்கரலிங்கம் என்பவர் நீயா நானாவின் நிகழ்ச்சியின் இடையில் ஓவியம் வரைய வேண்டும் என்று ‘விகட’னின் "ஆசை" பகுதியில் ஆசைப்பட்டுக் கேட்டிருந்தபடி அவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் சரியான காமெடி அதுதான். தனக்கென்று ஒரு மாடலை உட்கார வைத்துக்கொண்டு அவர் பாட்டுக்குப் படம் வரைந்துக் கொண்டிருந்தார். அந்தப் பெண் லேசாக இளித்தபடி, நெளிந்தபடி உட்கார்ந்திருந்தது. லேசாக நகர்ந்து நகர்ந்து உட்கார்ந்து கொள்வதும், கைப்பையை சரி செய்து கொள்வதும் என்று நிகழ்ச்சியுடன் ஒட்டாத ஒரு நிலை. அது குறித்த கட்டுரையை வியாழக்கிழமை ‘விகட’னில் படித்தபோது என்னமோ நன்றாக இருந்தது. ஆனால் டி.வி. யில் பார்க்கும்போது சூழ்நிலைக்குப் பொருந்தாமல் தனியாகத் தள்ளி இருந்தது.

கோபிநாத் "நீயும் நானும்" என்ற பெயரில் ‘விகட’னில் ஒரு தொடர் எழுதுகிறார். தன்னம்பிக்கை, சுயமுன்னேற்றம் வகை. நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால் அதை அவரே எழுத வேண்டும் என்று அவசியமில்லை. எந்த வி.ஐ.பி.யாக இருந்தாலும், தொடர் ஒன்றை எழுத தமது கருத்தைச் சொன்னால் போதும். அதற்கு ‘விகடன்’ ஆசிரியர் குழுவினர் கூகுளடித்து டெவலப் செய்ய உதவி செய்வார்கள். அந்த இன்ஃப்ளூயன்ஸில் ‘விகடன்’ குழுவினர் "ஆசை" பகுதிக்காக நீயா, நானா குழுவினரிடம் அனுமதி வாங்கியிருக்கிறார்கள் (நான் கூட "ஆசை" பகுதிக்கு ஒரு ஆசையை எழுதி அனுப்பியிருக்கிறேன்.

கோபி எழுதிய "ப்ளீஸ், இந்தப் புத்தகத்தை வாங்காதீங்க" புத்தகம்தான் இந்த வருடம் புத்தகக் கண்காட்சியின் டாப் சேல்ஸ் புத்தகம் என்று கேள்விப்பட்டேன். இது எந்த அளவு உண்மை என்று தெரியவில்லை. இரண்டு பக்கங்கள் படித்துப் பார்த்தேன். என்னமோ வாங்கத் தோன்றவில்லை. அதன் பொருந்தாத எழுத்துரு படிக்கத் தூண்டவில்லை.

‘விகட’னில், கார்ப்பொரேட் சாமியார் என்றழைக்கப்படும் சாமிகளில் முதன்மையான சத்குரு ஜக்கி வாசுதேவ் கூட சிலபல தொடர்கள் எழுதினார். எல்லா தொடர்களுமே கவர்ந்திழுக்கும் வகையில் எழுதப்பட்டிருக்கும். அவர் சேலத்தில் ஒருமுறை நிகழ்ச்சி நடத்துவதற்கு வந்திருந்தார். என்னமோ எக்ஸிபிஷன் மாதிரி வரிசையாக ஸ்டால்கள் எல்லாம் போட்டுப் படு விமரிசையாக நடத்தப்பட்டது அது. நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் அரை மணி நேரத்திற்கு ஒரே வாண வேடிக்கையாக இருந்தது. அதற்கு மட்டும் சுமார் ஒரு இலட்சம் ரூபாய் செலவானதாகச் சொன்னார்கள்.

அவரது ஆசிரமத்திற்குச் சென்று கருத்துக்களை விவாதித்து அவற்றைத் தேர்ந்த ஒரு கட்டுரையாக எழுதித்தந்தது எழுத்தாளர்கள் சுபா. அவர்களைப் பற்றிச் சொல்லவே வேண்டாம். "நேரேட்டிவ் ரைட்டிங்" வகையில் மிகச்சிறந்த எழுத்தாளர்கள் அவர்கள். அவர்களின் "மாடிப்படிக் குற்றங்கள்" தான் கே.வி.ஆனந்த், சூர்யா கூட்டணியில் ‘அயன்’ திரைப்படமாக உருமாறியிருக்கிறது. அந்த வகையில் அவரது கூட்டத்திற்குப்போய் ஏமாந்து போனேன் நான்.

ஜக்கியின் தொடரை வாசித்து வந்த பழக்கத்தில் ஒரு இரண்டு மணி நேரம் உட்கார்ந்து அவரை கவனித்துப்பார்த்தேன். ஆனால் ஒன்றும் கோர்வையாக இல்லை. யோகா பற்றிப் பேசினார், திடீர் என்று மரம் நடுவதைப்பற்றிச்சொல்கிறார். திடீர் என்று பரவசநிலை என்று சொல்லி நடனமாடத் துவங்கினார். பாதி ஆங்கிலம், பாதி தெலுகு, கொஞ்சம் தமிழ் என்று கலந்துகட்டி வேறு இருந்தது பேச்சு.

இன்னொரு மேட்டர். தமிழ்நாட்டில் எந்த ஒரு நிகழ்ச்சி நடந்தாலும் கலெக்க்ஷன் நோட்டு போடுவது வழக்கம். ‘களவாணி’ பார்த்தீர்களா? கிரிக்கெட் விழா நடத்த கலெக்க்ஷன் செய்வார்களே) பெரிய பெரிய வி.ஐ.பி.க்களிடம் கூட காசு புடுங்குவது (ஸாரி, நிதி திரட்டுவது) நடக்கிறது. ஜக்கி, மேல்மருவத்தூர் சாமியார், நித்தி, உள்ளிட்டோரிடம் கூட டொனேஷன் நோட்டுகள் நீட்டப்படுகின்றனவாம். சமீபத்தில் கொங்கு மண்டலத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சிக்காக நோட்டு நீட்டப்பட்ட போது நித்தி பைசா தர மறுத்து விட்டதாகவும் அதன் காரணமாகத்தான் "அந்த" ஸ்பெஷல் வீடியோ வெளிவர வைக்கப்பட்டு அவருக்கு இந்த நிலைமை என்றொரு நியூஸூம் கசிகிறது. உண்மையோ, பொய்யோ யாமறியேன் பராபரமே.

‘விகடன்’ பற்றிப் பேசும் போது.... குப்பையோ, சத்தையோ எதுவாக இருந்தாலும் சாமானியனுக்காக அதை ஒரு நல்ல பேக்கேஜாக மாற்றித் தரத்தெரிந்திருக்கிறது ‘விகட’னுக்கு. அவர்கள் பயன் படுத்தும் டெம்ப்ளேட் அப்படி. எரிகிற கொள்ளியில் எந்தக் கொள்ளி நல்ல கொள்ளி என்று பார்த்து நாம் வாங்குவதால் அதை வைத்து அவர்களுக்குக் காசு.


சென்ற வருடத் துவக்கத்தில் எட்டு ரூபாயாக விற்றுக்கொண்டிருந்த ‘விகடன்’ திடீரென பத்து ரூபாய் ஆக்கப்பட்டது. விகடன் டெலிவிஸ்டாஸ் தொடர்கள் நன்றாகப் போகத் துவங்கின. ‘சன்’ டிவி நடத்திய சன் குடும்பம் விருது விழாவில் கூட பல அவார்டுகள் வாங்கின விகடன் டெலிவிஸ்டாஸ் தயாரிக்கும் பல தொடர்கள். நிறைய அவார்டுகள் வாங்கியது அவர்கள் தயாரிக்கும் "திருமதி.செல்வம்’ தொடர்தான்.


விகடன் டாக்கீஸ் தயாரிப்பில் "எஸ்.எம்.எஸ்" படம் ஆரம்பிக்கப்பட்டதும் பத்து ரூபாய் ‘விகடன்’ பதினைந்து ரூபாய் ஆனது. படம் தயாரிக்க காசு வேண்டாம்? (வாரா வாரம் தலைக்கு ஐந்து ரூபாய் வீதம் எட்டு இலட்சம் புத்தகங்கள்). படமும் நன்றாக ஓடியது. நல்ல கலெக்க்ஷன். ஆனால் அவர்களின் ‘வால்மீகி’ என்ற இரண்டாவது படம் ஊத்திக்கொண்டது. அத்தோடு படத்தயாரிப்பையே நிறுத்தி விட்டது விகடன்.


சரி போகட்டும், நீயா- நானாவுக்குத் திரும்பி வருவோம். கலந்துகொண்ட எல்லாருமே பெரிய ஆட்கள் என்பதால் விவாதம் மிகச் சரியான பாயிண்டுகளுடன் அலசப்பட்டது. குளோபலைசேஷனால் இரண்டொரு துறைகள் வேண்டுமானால் வளர்ந்திருக்கலாம். அதனால் ஒட்டுமொத்த இந்தியாவுக்கு எந்த வளர்ச்சியுமில்லை. இரண்டொரு துறைகள் வளர்ந்தால் அது வீக்கம்தான் என்ற கருத்து முன்வைக்கப்பட்டது.

நீண்டு கொண்டே போன விவாதத்தில் கோபிநாத்தால் கூட வழக்கம் போல அதிக கருத்துக்கள் சொல்ல முடியவில்லை. காரசாரமாகப் போன விவாதத்தில் முடிவு என்று ஒன்று கிடைப்பதாகவும் தெரியவில்லை. எல்லோரும் வி.ஐ.பி.க்கள் என்ற அதே காரணத்தினால் தான் முடிவில்லாத, முற்றுப்பெறாத ஒரு விவாதமாகவே முடிவடைந்தது இந்த வார "நீயா, நானா". சடாரென இடைவெளியுடன் திரைப்படம் நிறுத்தப்பட்டால் எப்படி இருக்கும்? அதுபோல் சட்டென்று முடிந்து போனது அது.

7 கருத்துகள்:

  1. ஏன் சார் கையில் வெண்ணையை வைத்துகொண்டு ......நீயா நானா வின் மறு ஒளிபரப்பை பார்க்கணும் .நிறைய தமிழ் movie வெப்சைட் களில் தமிழ் சேனல்களின் நிகழ்சிகளை பார்க்கலாம் .(www.rajtamil.com)

    பதிலளிநீக்கு
  2. Very nice

    If you like,You can watch that show through online using following he link.
    http://tamil.techsatish.net/file/neeya-naana-101/

    பதிலளிநீக்கு
  3. //malli சொன்னது…
    ஏன் சார் கையில் வெண்ணையை வைத்துகொண்டு ......நீயா நானா வின் மறு ஒளிபரப்பை பார்க்கணும் .நிறைய தமிழ் movie வெப்சைட் களில் தமிழ் சேனல்களின் நிகழ்சிகளை பார்க்கலாம் .(www.rajtamil.com) //

    நன்றி மல்லி... இதைத்தான் நான் தேடிக்கிட்டு இருந்தேன்.

    பதிலளிநீக்கு
  4. //Jayadeva சொன்னது…
    http://tamil.techsatish.net/file/neeya-naana-101/
    //

    நன்றி Jayadeva

    பதிலளிநீக்கு
  5. //YuvaShanmugarajan சொன்னது…
    Very nice

    If you like,You can watch that show through online using following he link.
    http://tamil.techsatish.net/file/neeya-naana-101/
    //

    மிக்க நன்றி..

    பதிலளிநீக்கு
  6. ஜக்கியின் பொது உரை அப்படித்தான் இருக்கும். ஆனால் பயிற்சி வகுப்புகள் சிறப்பாக இருக்கும். குறிப்பாக கேள்வி பதில் எப்போதும் நன்றாக இருக்கும்.

    கூடவே புத்தகங்களும்...

    பதிலளிநீக்கு