வெள்ளி, 31 ஜூலை, 2020

ரேஷன் கார்டின் உபயோகம் தான் என்ன?

எங்க ரேஷன் கார்டு ஆல்ரெடி யூஸ்லெஸ்ஸா தான் இருக்கு. வெறும் சக்கரை மட்டும் தான் போட்றாங்க. மாசம் 5 கிலோ சக்கரையை வாங்கித் தின்னு சுகர் பேஷண்ட் ஆகவா? அதுலயும் எறும்பு ஏறுனது, மழையில நனைஞ்சது, சாக்கு நிறம் ஏறி டல் கலர் ஆனதுன்னு இன்னும் அந்தக் கால ஸ்டைல்லயே தான் போடுறாங்க.
மத்தபடி இரண்டு மாசத்துக்கு ஒருக்கா ஒரே ஒரு கிலோ துனா பருப்பு, ஒரே ஒரு லிட்டர் மெக்கானிக் ஷாப் குருடாயில் கலர்ல ஒரு பாமாயில். அதுகளும் ஸ்டாக்கும், அதிகாரியம்மாவுக்கு மனசும் இருந்தா மட்டுமே. மூணு மாசம் தொடர்ந்து எதுவுமே வாங்காமல் விட்டால் கார்டு காலாவதி ஆகி விடும் என்பதால் எதையாவது ஒன்றை அப்பப்போ சும்மானாச்சுக்கும் வாங்கி கார்டை உயிர்ப்பாக வைத்திருக்கேன். அவ்ளோ தான். சரி விடுங்க.
"ரேஷன் கார்டு எந்த ஒரு அடையாள அட்டையாகவும் ஏற்றுக்கொள்ளப் படாது"ன்னு அனைத்து பேங்க் குகளும் சொல்லியாச்சு. இன்ஷூரன்ஸ், போஸ்ட் ஆபீஸ்களிலும் ஏத்துக்க மாட்டேன்கிறாங்க. ஆதார் கார்டை இணைக்கிறேன், ஸ்மார்ட் கார்டு ஆக்குறேன்கிற பேர்ல என் தங்கமணி ஆதார் ஸ்கேன் ஆகாம அவங்க பேரையும் தூக்கியாச்சு. அப்பாரு போய்ச்சேர்ந்ததும் அவர் பேரையும் தூக்கியாச்சு. ஆகக்கூடி......... அக்கார்டிங் டு தி ரேசன் கார்டு, என் குடும்பத்தில் நான் மட்டும் தான் இருக்கேனாம்.
இப்போ புது அறிவிப்புகளின் படி, இதைத் தர மாட்டேன், அதைத்தர மாட்டேன் என்று அரசு சொன்ன பிறகு, எதுவுமே வாங்க முடியாத, எங்குமே செல்லாத ரேஷன் கார்டை வைத்திருப்பதால் எங்களுக்கு என்ன யூஸ் என்று அரசாங்கமே கொஞ்சம் தெளிவாகச் சொல்லலாமே....

மூன்றாண்டுகளுக்கு முன்பு (31.07.17) அன்று ஃபேஸ்புக்கில் எழுதியது.

வியாழன், 30 ஜூலை, 2020

ஷகுந்தலா தேவி - Worth Watching.



"சிலுக்கு பத்தின படமாம்டா" என்றெழுந்த குரல்களின் மூலம் தான் எனக்கு வித்யா பாலன் பரிச்சயம். அதற்கு முன் "வசூல் ராஜாவோட ஒரிஜினலாம்டா" என்பதற்காக "லகே ரஹோ முன்னாபாய்" இரண்டு முறை பார்த்தும் சஞ்சய் தத் முகமும், அர்ஷத் வார்சி முகமும் பதிந்த அளவுக்கு என் மனதில் வித்யா பாலன் முகம் பதியவில்லை. Another heroine in Hindi film என்று கடந்து போனான் இந்த ரசிகன். 


ஆனால் அதற்கடுத்து ஐந்தாண்டுகள் கழித்து "டர்ட்டி பிக்சர்" என்றொரு பயோ பிக் மூலம் ஹிந்தி சினிமா உலகையே ஒரு உலுக்கு உலுக்கி எடுத்திருந்தார் வித்யா பாலன். அதற்கு தேசிய விருது வாங்கியதன் மூலம் அகில இந்திய அளவில் அனைவர் கவனத்தையும் ஈர்த்த போது தமிழ்நாடு மட்டும் விதிவிலக்கா என்ன? அதுவும் தமிழகத்தின் ஃபேவரைட் கனவுக் கன்னியான சில்க் கின் கதையுடன். 


பின்னாட்களில் "டர்ட்டி பிக்சர்" படத்தின் சில்க் ரோலும் "வித்யா" என்கின்ற பெயரும், மணி ரத்னத்தின் "குரு" வில் அவர் செய்த ரோலும் எனச் சேர்ந்து அவரைத் தமிழ்ப் பெண்மணி என்ற பிம்பத்தையே என் மனதில் உருவாக்கி வைத்திருந்தன. அது உண்மை அல்ல என்று என் புத்திக்குத் தெரிந்தாலும், ரசிகனின் மனதுக்குத் தெரியவில்லையே. 


தான் நடிக்கும் படங்களையும், பாத்திரங்களையும் ஒரு கொண்டாட்டமாக மாற்றி, அந்தக் கதாபாத்திரங்களை உயிரோட்டமாகச் செதுக்கும் கலை, சில திரை நட்சத்திரங்களுக்கு மட்டுமே கை கூடும். வானம் போன்ற அகன்ற திரையில் விரல் விட்டு அந்த நட்சத்திரங்களை எண்ண முடியுமானால் அதில் வித்யா பாலன் என்ற நட்சத்திரமும் அழுத்தமாக முன் நிற்கும். கஹானி, பேஹம் ஜான் என ஒவ்வொன்றும் ஒரு வெரைட்டி விருந்து. 


"மிஷன் மங்கள்" படத்தை ரசித்தது மூன்று முறை. முதல் முறை வெறும் ரசிகனாக. மீண்டும் இரண்டு முறை ரிப்பீட் அடித்தது "தாரா ஷிண்டே" வாக வாழ்ந்திருந்த வித்யா பாலனுக்காக. மங்கள்யானின் உண்மையான ப்ராஜெக்ட் டைரக்டர் இப்படித்தான் உணர்வுப் பூர்வமாக இருந்திருப்பாரோ என்று மனதினுள் கேள்வி எழுப்பிய பாத்திரம் அது. நின்று போன ராக்கெட் ப்ராஜக்டில் இருந்து பாதி இயந்திரங்களை எடுத்துக் கொள்ளலாம் என்று யோசனை தந்து விட்டு முகத்திலேயே "ப்ளீஸ்ஸ்ஸ்ஸ்ஸ்" என்றொரு உணர்வைக் காட்டிய போது, இப்படிக்கூட ஒரு உணர்வைத் திரையில் கொண்டு வரமுடியுமா என்று வியந்து அந்தக் காட்சியை முன்பின் ஓட்டி ஓட்டி ரசித்திருக்கிறேன். 


அறிந்தோ அறியாமலோ அசத்தலான "ஹீரோயின் ஓரியன்டட்" படங்களை அழுத்தம் திருத்தமாகக் கொடுத்து வந்த அவரை டம்மியாக சிறிய ரோலில் காட்டிய பெருமையை இரண்டு என்.டி.ஆர் பயோ பிக்-குகளும் "நேர்கொண்ட பார்வை"யும் தட்டிச் சென்றன. 


இந்தியாவின் "மேத்ஸ் ஜீனியஸ்", "ஹ்யூமன் கம்ப்யூட்டர்" என்றழைக்கப்பட்ட ஷகுந்தலா தேவி - யின் பயோ பிக் என்று வெளியான டிரெய்லர், இது அக்மார்க் "வித்யா பாலன்" படம்டா என்பதை உணர்த்தியது மட்டுமின்றி என்னை 30 ஆம் தேதி இரவு 10 மணிக்கு 'ஸ்பெஷல் ஷோ என்று ப்ரைம் நோக்கி இழுத்துச் சென்றது. 


கொரோனா புண்ணியத்தில் நீண்ட நாட்கள், வாரங்கள், மாதங்கள், வருடங்கள் கழித்து முதல் நாள் முதல் காட்சி-யில் ஒரு திருப்தியான, அருமையான ஒரு திரைப்படம். சினிமா ரசிகர்கள் தவற விடக்கூடாத அட்டகாசமான ஃபேமிலி பயோ-பிக் டிராமா. நம்ம ராமானுஜத்திற்கு இது போல கொண்டாட்டமாக ஒரு படம் அமையவில்லையே என்றும் எண்ண வைத்த படம். டோன்ட் மிஸ் இட். 


எனக்குப் பிடிச்ச நம்பர் "ஜீரோ" என்று ஒரு காட்சியில் சொல்கிறார் ஷகுந்தலா. ஆரம்பமும், முடிவும் தெரியாத ஜீரோ ஒரு முடிவிலி. ஆனால் அதுவன்றி அணுவும் அசையாது. 


வித்யாவும் அப்படித்தான். ஒரு நல்ல சினிமா ரசிகனின் தவிர்க்கவியலா ஒரு முடிவிலி. 

ஞாயிறு, 26 ஜூலை, 2020

கொஜிரோ அலையாஸ் காட்ஸில்லா

பனிரண்டாம் வகுப்பு படிக்கையில் வரைந்தது (என்று நினைக்கிறேன்)
1997 - இன் இறுதியில் ரிலீஸாகி ஊர் முழுக்க "டைட்டானிக்" படம் கலெக்ஷனைக் கிளப்பியது என்றால் அடுத்த ஆறே மாதத்தில் சரியாக பள்ளி விடுமுறை நேரத்தில் 1998 - ல் தியேட்டர்களுக்கு வந்தது காட்ஸில்லா. அதுவும் நல்ல ஓட்டம். காட்ஸில்லாவும் ஓடி, அது துரத்தி மக்களும் ஓடி, தியேட்டர்களில் படமும் நன்றாகவே ஓடியது.

அதற்குச் சில ஆண்டுகள் முன்பு தான் "ஜூராஸிக் பார்க்" வெளியாகி ஊரையே கலக்கி, பிறகு அதன் தொடர்ச்சியாக 1997ல் "லாஸ்ட் வேர்ல்ட்" (இரண்டுமே ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்) படமும் வெளியாகி மக்களிடமும், மற்ற ஹாலிவுட் படத்தயாரிப்பாளர்களிடமும் ஒரு பயத்தைக் கிளப்பி வைத்திருந்தது. ஆகவே, அதுபோன்ற தரம் மற்றும் கதையின் மேலிருந்த எதிர்பார்ப்பிலும், அவற்றின் ஹேங் ஓவராலும் காட்ஸில்லாவுக்கான வரவேற்பு கொஞ்சம் குறைவுதான்.
ஆனாலும் அவை இரண்டும் அறிவியல் பூர்வமாகவும், நம்புவது போலவும் இருந்ததால் அவை "சயின்ஸ் ஃபிக்ஷன்" படங்களாகவும், காட்ஸில்லா முழுக்க முழுக்க "ஃபேன்டஸி - மான்ஸ்டர் - சேஸிங்" வகைப்படமாகவும் வரவேற்கப்பட்டு தமிழ் ரசிகர்கள் இதையும் ஸீட் நுனியில் அமர்ந்தே கண்டு களித்தார்கள். அதிலும் க்ளைமாக்ஸ் சேஸிங் அப்போதைய காலகட்டத்திற்கு "அன்ப்ளிவபிள்". படத்தில் கிட்டத்தட்ட இரண்டு க்ளைமாக்ஸ் படத்தில்.
காட்ஸில்லாக் குட்டிகள் குஞ்சு பொரிக்கப்பட்ட கட்டிடத்தின் மேல் குண்டு போடப்பட்டு அவை அழிந்து சோக வெற்றியுடன் வயலின் வாசிக்கப்பட்ட போது "படம் முடிஞ்சிடுச்சி மச்சி" என்று தியேட்டரை விட்டு எழுந்து போனார்கள் பலர். அதன் பிறகு அம்மா (அம்மாப்பா?) காட்ஸில்லா மீண்டு(ம்) வந்து ஹீரோ அண்ட் டீமை துரத்தோ துரத்தென்று துரத்தும் கார் சேஸிங் காட்சிகள் தான் மெயின் க்ளைமாக்ஸ்.
அதற்காகவே குட்டிகள் எரியும் சீனில் ஓவர்லேப்பாக "இன்னும் 20 நிமிடம் படம் இருக்கிறது" என்று ஸ்லைடு போட்டார்கள், சேலம் சங்கீத் தியேட்டரில். எழுந்து போன கூட்டம் மீண்டும் வந்த அமர்ந்தது. எனக்குத் தெரிந்து மிக நீண்ட காலம் ட்ரெய்லர் (அப்போதெல்லாம் சைட் ரீல் என்று சொல்லுவோம்) ஓட்டப்பட்டது இந்தப் படத்திற்குத்தான். சேலம் "சங்கீத்"தில் என் நினைவு தெரிந்த வரை கிட்டத்தட்ட ஒரு வருடம் ஓட்டினார்கள் என்று நினைக்கிறேன்.
காட்ஸில்லாவின் பிரம்மாண்டத்தை நாமே கற்பனை செய்து கொள்ள வேண்டி மிகைப்படுத்தப்பட்ட மூன்று விதமான டிரெய்லர்கள் காண்பிக்கப்பட்டன. ஆனால் எந்த டிரெய்லரிலும் காட்ஸில்லாவின் உருவம் முழுதாக இருக்காது. அப்போதெல்லாம் ஸ்மார்ட்போனும் கிடையாது, யூடியூப் பும் கிடையாது - நினைத்தவுடன் பார்க்க. டி.வியிலும் இவை வராது. டிரெய்லர் பார்க்க வேண்டும் என்றால் கூட தியேட்டரில் தான் பார்க்க முடியும்.
முதலாவது Godzilla rises ட்ரெய்லர் - இன்றைய பாஷையில் கிட்டத்தட்ட அது வெறும் டீஸர் தான் - கடலில் மீன்பிடிக்கும் தாத்தா வின் கண்முன்னே கடல்நீர் பிரவாகமாக, பிரம்மாண்டமாக எழ, அதில் இரண்டு கொம்புகள் தெரிய அதைக்கண்டு அவர் ஓட, அவர் பின்னாலேயே தண்ணீர் எழும்பித் துரத்த, அந்த மரப்பாலம் துண்டுகளாகத் தெறித்துக் கொண்டே வர, காட்ஸில்லா தண்ணீரில் இருந்து எழும் காட்சி. காட்ஸில்லாவைக் காண்பிக்காமல் தண்ணீர் தெறிக்க "From the creators of Independence Day" என்ற ஸ்லைடுடன் "Size does matter" என்ற வார்த்தைகளுடன் முடியும். அது தான் மிக நீண்ட காலம் தியேட்டரில் ஓட்டப்பட்ட டிரெய்லர்.
இரண்டாவது கொஞ்சம் பெரிய ட்ரெய்லர். அதனைப் படம் வருவதற்கு ஒன்றிரண்டு மாதங்கள் முன்பு காட்டத்துவங்கினார்கள். - இருண்ட கடலில் கப்பலைத் தாக்கிக் கிழிக்கும் காட்ஸில்லாவின் நகங்கள், கரை ஒதுங்கிய சேதமடைந்த கப்பல், கடலில் இருந்து எழும் காட்ஸில்லாவின் தலைப்பகுதி, நியூயார்க் நகரில் காட்ஸில்லாவின் நடை அதிர்வில் கார்கள் குலுங்குதல், கட்டிடங்களை உடைத்து நொறுக்கியபடி வெளிவரும் காட்ஸில்லாவின் தெளிவற்ற தோற்றம், தெருக்களில் ஓடிவரும் அதன் கால்கள், மற்றும் க்ளாஸிக் சீனான, லாங் ஷாட்டில் "வீடியோகிராபரின் மேல் சொத் தென்று வைக்கப்படும் காட்ஸில்லாவின் பாதம்" என்று துண்டு துண்டான காட்சிகளுடன் வந்தது அது. நீங்கள் யூடியூபில் தேடினால் கிடைக்கலாம்.
ஹாலிவுட்டில் ஜப்பானிய "கைஜூ" மிருகங்களின் வரிசையில் காட்ஸில்லா ஹீரோவாக இருந்தாலும், ஹாலிவுட்டைப் பொறுத்தவரை அது வில்லன் தான். அதனாலோ என்னவோ படம் படுத்து விட்டது. ஏகப்பட்ட நெகடிவ் ரிவ்யூக்கள். ஹாலிவுட்டில் கலெக்ஷன் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை. ஆனாலும், நம்மூர் தியேட்டர்களில் திருவிழா என்று தான் சொல்ல வேண்டும். பொதுவாக ஆங்கிலப்படங்கள் வாரத்திற்கு ஒன்று என்று திரையிடப்படும் சேலம் சங்கீத்தில் இது எனக்குத் தெரிந்து மூன்று வாரங்கள் ஓடியது. அதற்கு மேலும் இருக்கலாம். எனக்குச் சரியாக நினைவில்லை.
பள்ளி வகுப்புகளில் படம் குறித்து எங்களுக்குள் விவாதிப்போம். இதன் நீட்சியாக நண்பன் பாலா (தான் என்று நினைக்கிறேன்) வுக்கு அவன் திடகாத்திரமாக கர கர குரலோடு இருந்ததாலோ என்னவோ, "கஜிலோ" என்று பேச்சு வழக்கில் பெயர் வைத்தார்கள். அது அவனுக்குப் பிடிக்காது. திட்டுவான். கையில் கல் கிடைத்தால் எடுத்து அடிப்பான். பாவம். நான் லாம் பூச்சி மாதிரி இருந்ததால் அவன் பக்கமே போக மாட்டேன்.
அந்த நேரத்தில் தினத்தந்தியில் வந்த "காட்ஸில்லா" வின் கால் பக்க "கால்" விளம்பரத்தைக் கிழித்து வைத்துக்கொண்டு வரைந்த படம் இது. தினத்தந்தி விளம்பரத்தின் கலர் க்வாலிட்டி எப்படி இருக்கும் என்பது உங்கள் யூகத்திற்கே. அதுவும் 22 வருடங்களுக்கு முந்தைய அப்போதைய தினத்தந்தி. அதை வைத்துக் குத்து மதிப்பாக ஸ்கெட்ச் பென்கள் கொண்டு வரைந்தது. பின்பக்கமெல்லாம் இங்க் உறிஞ்சப்பட்டு, எனக்குத் திருப்தி இல்லாத படம் இது. இது போன்ற படங்களை வரைய இன்னும் பயிற்சி தேவை என்றே நினைக்கிறேன்.
விளம்பரத்தில் வந்த படம் கமெண்ட்டில்.

வெள்ளி, 24 ஜூலை, 2020

காசிருந்தா....

-------------- என்ற ஊரில் ஒரு பள்ளிக்கு இரண்டு நாட்கள் டீச்சர்ஸ் டிரெயினிங் எடுக்கப் போயிருந்தேன். முதல் நாள் டிரெயினிங் முடிந்தததும் ஃபீட்பேக் கரஸ்பாண்டன்ட் - டுக்குப் போயிருக்கிறது. மறுநாள் காலை என்னைப்பார்க்க வேண்டும் என்று வரச் சொன்னார். போனேன். "டிரெயினிங் ஃபீட்பேக் நல்லா இருந்தது அதான் பாராட்டலாம்னு கூப்பிட்டேன்" என்றவர் உபரியாக "உங்களை எங்கியோ பார்த்த மாதிரி இருக்கே?" என்றார் புருவத்தை உயர்த்தியபடியே.

"ஆமாம் மேடம், ஏழு வருஷம் முன்னாடி ----------------- கம்பெனி சார்பா, இதே ஸ்கூலுக்கு டீச்சர்ஸூக்கு டிஜிட்டல் கிளாஸ் ரூம் டிரெயினிங் எடுக்க வந்திருக்கேன்" என்றேன். உடனே பார்வையை மாற்றி "ஓ, அங்கயும் இங்கயும் இப்படியே உருண்டுகிட்டு இருப்பீங்க? கம்பெனீஸ்ல, இத விட்டா அது, அதை விட்டா இதுன்னு..... இல்ல" என்றார் நக்கலாக.
நான் உடனே " உங்களுக்கு என்ன மேடம், நீங்க வீட்ல சும்மாவே இருக்கீங்கன்னு உங்க அப்பாவும், ஹஸ்பெண்டும் சேர்ந்து நாலு கோடி போட்டு ஸ்கூல் ஆரம்பிச்சு கரஸ்பாண்டன்ட் ஆக்கி விட்டுட்டாங்க. நீங்களும் எல்லாத்துக்கும் ஆள் போட்டுட்டு டைம் பாஸ் மாதிரி தோணுறப்போ ஸ்கூலுக்கு வருவீங்க. எங்களையெல்லாம் நக்கலா கேள்வி கேட்டுகிட்டு இருப்பீங்க. ஆனா என்னை மாதிரி இலட்சக்கணக்கான பேருக்கு அப்படியா? எங்கப்பாருக சேத்து வைக்கலியே. இந்த மாசம் வேலை செஞ்சா தான் அடுத்த மாசம் புவ்வா-----------" என்றெல்லாம் சொல்லாமல்.....

"ஆமாம் மேடம்" என்று மட்டும் சொல்லிவிட்டு நகர்ந்தேன்.
.
இரண்டாண்டுகளுக்கு முன்பு (23.07.18) அன்று ஃபேஸ்புக்கில் எழுதியது.

நம்ம கடே........... ஹோட்டல்கள் - பெங்களூருடா

இங்கே பல (குறிப்பாக அசைவ) ஹோட்டல்களில் நம்மூரில் இல்லாத ஒரு வித்தியாசமான முறையைக் கையாள்கிறார்கள். கேஷியர் போல கிச்சன் வாசலில் ஒருவர் அமர்ந்திருக்கிறார். சர்வர் ஒவ்வொரு அயிட்டத்தை வெளியே எடுத்து வரும்போதும் தட்டோடு நின்று அவரிடம் இரு விநாடிகளில் என்னென்னவென்று கடகடவென சொல்லி விட்டுக் கடக்கிறார். உடனே தன்னிடமிருக்கும் பெரியதொரு லெட்ஜர் போன்ற நோட்புக் ஒன்றில் அந்த சர்வருக்கென ஒதுக்கப் பட்ட பிரிவில் குறித்து விடுகிறார் அந்த நபர்.
.
கஸ்டமர் சாப்பிட்டு முடித்ததும் பில் வாங்குவது சர்வரே தான். கேஷியர் இல்லை. (ஆனால் 90 ரூபாய் அ 180 ரூபாய்க்குத் தின்றால் மீதியை டிப்ஸாகத் தானே எடுத்துக் கொள்வது மட்டும் லேசாகக் கடுப்படிக்கிறது)
.
அன்றைய நாள் முடிந்ததும் சர்வர் தன் பெயரில் குறிப்பிடப் பட்டுள்ள மொத்த உணவுப் பண்டங்களுக்குக் கணக்கான, சரியான தொகையை ஹோட்டலில் ஒப்படைத்து விட வேண்டும்.
.
இதில் பல அனுகூலங்கள் (முதலாளிக்கு)
1. தனக்குத் தெரிந்தவர், உறவினர் என சர்வர் யாருக்கும் அன்பளிப்புக் கொடுத்து முதலாளியை ஏமாற்ற இயலாது.
2. கஸ்டமரைக் கண்டுக்காமல் டிப்ஸை மட்டுமே குறிக்கோளாகக் கொண்ட சர்வர்கள் உஷாராக கஸ்டமர்களைக் கண்காணிப்பர்.
3. அமேஸான் போல "இது நம்ம கடே" ஃபீல் (வேறு வழியின்றி) வந்து விடுகிறது சர்வருக்கு.
4. தெரிந்த நண்பர்களுக்கு எக்ஸ்ட்ரா உணவளித்து, கம்மி பில் போட்டு ஏமாற்ற முடியாது.
5. மற்றும் பல
.

கேரிகேச்சர் - பெங்களூருடா

கோரமங்களா(லா?) ஃபோரம் மால்.
.

உள் நுழைந்து, நடந்து கடக்கும் பெருவெளிப்பாதையில் சேர், டேபிள் போட்டு அமர்ந்தபடி கூலாக கன்னடப் புத்தகம் ஒன்றைப் படித்துக் கொண்டிருந்தார் ஓர் அமுலு பேபி. நைஸ் லுக். அழகான தாடி. அவர் பக்கத்தில் கேமரா ட்ரைபாட் போல ஒரு கருவி நின்றிருக்க அதன் அந்தப்பக்கத்தை எட்டிப் பார்த்தால் அதில் ஒரு பெரிய பேட் மற்றும் வெள்ளை சார்ட் பேப்பர்கள் செருகி வைக்கப்பட்ட நிலையில்.
.
அவர் ஒரு கேரிகேச்சர் ஆர்ட்டிஸ்ட்.
.
வி.ஐ.பி க்களையும், அரசியல்வாதிகளையும், திரைப்பிரபலங்களையும் மட்டுமே கேரிகேச்சராகப் பார்த்து ரசிக்கும் நமக்கு, நம்ம மூஞ்சியையும் அப்படிப் பார்த்தால் எப்படி இருக்கும்? செமையாக இருக்காது? அந்த வாய்ப்பை நமக்கு வழங்குவதற்காகவே அமர்ந்திருக்கிறார் அவர் என்பது அவர் அருகில் இருந்த விளம்பரத் தட்டியைப் பார்த்ததும் தெரிந்தது. கட்டணம் தலைக்கு 500 ஓவாவாம். குரூப்பாக நின்றால் தலைக்கு 400 ஆம். கேரிகேச்சரில் ஒரு ஸ்பெஷாலிட்டி என்னவென்றால், அதில் தான் நம் முகத்திலேயே நம்ம மூக்கு பெருசா, காது பெருசா, கண்ணா என்பது தெரியும். அதை அட்டகாசமாகப் பெரிது படுத்தி வரைந்து காண்பிப்பார்கள். (இதையெல்லாம் முன்பே பார்த்தது தான் என்றாலும், இப்போது "பதிவு" செய்கிறேன்), தாரே ஸமீன் பர், நிகும்ப் வைக்கும் ஓவியப் போட்டி நினைவிருக்கிறதா? நன்றாக இருக்கும். (இருந்தால், டி.பி யாக வைத்துக் கொள்ளலாம், ஐ பிலீவ், திரு என்.
சொக்கன் அவர்களின் புரொஃபைல் படம் அப்படி வரையப்பட்டது என நினைக்கிறேன்).
.
எனக்கும் வரைந்து கொள்ள ஆசையாக இருந்தது. ஆனால் 500 ஓவா கொடுத்து மூஞ்சியை மட்டும் வரைஞ்சுகிட்டுப் போனா, தங்கமணி கொமட்லயே குத்துவார் என்பதால் அந்த ஐடியாவை மட்டும் கைவிட்டேன். ("உனக்கு மூஞ்சியில மூக்கு மட்டுமா பெருசு? மொட்டையடிச்சுப் பார்த்தா கண்ணு, உதடுன்னு மொத்த மண்டையே கிர்ணிப் பழம் மாதிரி பெருசாத்தான் இருக்கு" என்றும் உபரித் தகவலுடன்) முதலில் ஒரு குழந்தையை வரையும் படி, அதன் பெற்றோர் கேட்க, அவர் வரைய வரைய அவரைச் சுற்றிக் கூட்டம் சேர ஆரம்பித்தது. மூன்று, நான்கு முகங்களை அவர் வரைவதை நின்று கவனித்தேன். அடடா, என்னவொரு வேகம், சரளம்? பத்தே நிமிடங்கள் தான் அதிகபட்சம். ப்ராக்டீஸ், ப்ராக்டீஸ், ப்ராக்டீஸ், நிறைய செய்திருப்பார் போலிருக்கிறது. மாலில் செலவழிக்கும் நேரம் போக, மற்ற நேரங்களில் இது தொடர்பான இன்னும் சில துறைகளில் இருக்கிறார் என்பது தெரிந்தது. முடித்ததும், வாழ்த்தி கை கொடுத்து விட்டு வந்தேன்.
.
என்ஜினியர், ஐ.டி, டாக்டர், பேங்கு வேலை, வாத்தியார் வேலை என்று சில வேலைகளைப் பற்றி மட்டுமே இன்னமும் பயிற்றுவிக்கப் பட்டுக் கொண்டிருக்கும், நான் சந்திக்கும் சின்ன ஊர்ப் பள்ளி மாணவர்களுக்கு இப்படியும் சில கரியர் (career) கள் உண்டு எனக் காண்பிப்பதற்காக அவரைச் சில பல புகைப்படங்கள் எடுத்து வைத்திருக்கிறேன்.

.

Tamil writers Junction

24 ஜூலை 2018 அன்று ஃபேஸ்புக்கில் எழுதியது.

Tamil writers Junction என்ற பெயரில் மிக நீண்ட காலமாக ஒரு குரூப்பை கட்டி இழுத்து வருகிறேன். நீங்கள் தினசரி, வாராந்தரி பத்திரிகைகளில் பார்க்கும் பல துணுக்கு, சிறுகதை எழுத்தாளர்கள் கிட்டத்தட்ட 50 பேர் அதில் உண்டு. அதே போல பின்னாளில் தோன்றிய வேறு சில குரூப்புகளும் இயங்கி வருகின்றன.
அதில் ஒரு குரூப்பில் உள்ள ஸ்டிரிக்டு விதிமுறைகளை முன்வைத்து நம்ம குரூப்பில் இன்னிக்கு ஒரு பஞ்சாயத்து. முற்றுப்புள்ளி வைக்க வேண்டி, நான் என் தரப்பில் டைப்பிய 25 பாயிண்டுகள் கீழே. சம்பந்தப் பட்டவர்கள், புரிந்தவர்கள் புரிந்து கொள்ளுங்கள். புரியாதோர் பைபாஸில் போகவும். இதற்குப் பிறகு நோ கொஸின்ஸ், நோ ஆன்ஸர்ஸ். கேள்வி கேட்டு கமெண்டுபவர்களுக்கு லைக் மட்டும் போடப்படும். நோ பதில். டயர்டா இருக்கு.
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
எல்லா எழுத்தாள நண்பர்களுக்கும் ஒரு சில வார்த்தைகள்.
1, வேறு எந்த குரூப்பிலும் நான் (எஸ்கா) இல்லை.
2, முடிந்த வரை இந்த குரூப்பில் (Tamil writers Junction) பாலிடிக்ஸ் (எனக்குத் தெரிந்து) இல்லை. சைலண்ட் கருப்பு ஆடுகள் உண்டா என்பதை இரண்டு குரூப்புகளிலும் உள்ளவர்கள் தான் கணிக்க வேண்டும்.
3, இந்த குரூப்பிற்கென்று ஸ்டிரிக்ட் ஆன விதிமுறைகள் இல்லை. மற்ற எழுத்தாளர்களிடம் தொடர்பில் இருக்க வேண்டும் என்ற ஒரே நோக்கம் மட்டுமே.
4, இந்த குரூப்புக்கு இரண்டே விதிகள் தான் - ஃபார்வர்டு செய்திகள் குறைக்கவும், அரசாங்கத்திற்கு எதிரான பதிவுகள் போடக்கூடாது.
5, பல பேர் விரும்பி வருகிறார்கள். சிலர் போகிறார்கள். ஏன் போகிறார்கள் என்று எனக்குத் தெரியாது. நான் கேட்பதும் இல்லை.
6, இந்த குரூப்பில் அட்மின் ஆக இருப்பதாலேயே என்னை வேறு குரூப்பில் யாரும் சேர்ப்பது இல்லை. புத்தகங்கள் வெளியிடும் போது என்னைப்பற்றி எழுதுவதில்லை. கூட்டங்களுக்கு அழைப்பது இல்லை. நான் எதிர்பார்ப்பதும் இல்லை.
7, ப_______ஸ் குரூப்பில் மட்டும் இருந்தேன். ஒருமுறை குரல் உயர்த்தி கேள்வி கேட்டதனால் சில நாட்களில் குரூப்பைக் கலைத்துவிட்டு, புதிய குரூப் உருவாக்கிக் கொண்டார்கள். அதிலும் நான் இல்லை.
8, அந்த குரூப்பில் இருப்பதால் சிலருக்கு சில பல பயன்கள் (புதிய தொடர்புகள், பரிசுகள், கூட்டங்கள்) கிடைப்பதால் சந்தோஷமாகவே உள்ளனர். ஆனால் அவர்கள் இங்கே தொடர எந்த கட்டுப்பாடும் இல்லை.
9, ஆரம்ப காலத்தில் இங்கே (Tamil writers Junction) ஆக்டிவ் ஆக இருந்து விட்டு, அங்கே சென்ற பிறகு இங்கே சைலண்ட் ஆகிவிட்ட நண்பர்களும் உண்டு. அவர்களும் இங்கே தொடர எந்தக் கட்டுப்பாடும் இல்லை.
10, ஒவ்வொருவருக்கும் ஒரு பார்வை உண்டு. வேறு ஊர், வேறு பணி, வேறு சூழ்நிலை, வேறு வித வளர்ப்பு என ஒவ்வொருவரும் ஒரு விதம். உதாரணமாக அதிரை புகாரி, கா_______________ர் போன்றோர் கொஞ்சம் பளிச்சென பேசி விடுவார்கள். கா________________ர் அவராக விலகி விட்டார். அதிரை புகாரி சாரை மட்டும் ஒரு முறை மன வருத்தத்துடன் நானாகவே நீக்கினேன். மீண்டும் சில காலம் கழித்து சேர்த்தாயிற்று.
11, அந்த குரூப்பில் இருந்து பல கண்டிஷன்கள் போடுவதாக எனக்கு எப்போதும் தகவல் வந்து கொண்டே இருக்கும். இங்கே எந்தக் கண்டிஷனும் இல்லை.
12, அங்கே வெளியான படைப்பு படங்களை இங்கே போடக்கூடாது என்று கண்டிஷன் என்றும் பலர் சொல்லி இருக்கிறார்கள். அப்படிப்பட்ட கண்டிஷன்கள் இங்கே இல்லை.
13, ஒரு பிரபல ஒருபக்கக்கதை எழுத்தாளர் கூட தனது சமீபத்திய புத்தகத்தில் "அனைத்து" எழுத்தாள நண்பர்களின் பெயரையும் வரி விடாமல் பதிப்பித்தவர், என் பெயரை விட்டிருந்தார். நான் எதிர்பார்க்கவும் இல்லை. அதை இங்கே சொல்லக்கூட கூச்சமாக இருக்கிறது. என் பெயரை அவரது புத்தகத்தில் எதிர்பார்க்க நான் யார்? அது அவர் விருப்பம். இங்கே குறிப்பிட்டதற்கு மன்னிக்கவும்.
14, பலவித கேரக்டர்கள் உள்ளவர்களை ஒன்றாக இணைத்து பயணிப்பதே கடினம். அதை முடிந்த வரையில் செய்து வருகிறேன்.
15, அப்படி இணைத்து போட்டிகள் நடத்தி, கூட்டங்கள் நடத்தி பரிசுகள் தரும் அந்த குரூப் அட்மின்களின் பணி மிகப் பெரிது. அதையும் பாராட்டியே ஆக வேண்டும். இந்த குரூப்பில் இருப்பவர்களுக்கு அந்தப் பயன்கள் இல்லை.
16, அந்த குரூப்பின் அட்மின்கள், இந்த குரூப்பில் இருக்கக்கூடாது, போட்டோ போடக்கூடாது, அப்படி, இப்படி என்றெல்லாம் சொல்வதாகத் தகவல் வரும். அது உண்மையாக இருப்பின், அது மட்டும் எனக்கு வருத்தம். நாம்பாட்டுக்கு போற என்னை ஏன் எதிரியா பாக்குறீங்க?
17, பல பாலிடிக்ஸ் செய்திகளைக் கேட்கும் போது இந்த குரூப்பைக் கலைத்து விடலாமா என்று தோன்றும். ஆனால் செய்ய மாட்டேன். மற்றவர்கள் சொன்னபடி இதுதான் முதலில் ஆரம்பிக்கப்பட்ட குரூப் (என்று நினைக்கிறேன்). இது கலைக்கப்படாது.
18, அந்த குரூப் பற்றித் தெரியாத சில எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள் கூட இந்த குரூப்பில் இருந்து விட்டு வெளியேறி இருக்கிறார்கள். தங்களது பர்சனல் காரணங்களால். நான் வழியனுப்பி வைத்து விடுவேன்.
19, ஏ-------------------------கோ சாரை முகநூலில் நானாகக் கேட்டு சேர்த்தபோது, வை-----------------------ம் எனக்கு போன் செய்து அவரை எப்படி நீங்க சேர்க்கலாம்? எப்படி நம்பர் கிடைச்சது? என்றெல்லாம் கேட்டார். அப்போதிருந்து தான் ஏதோ பாலிடிக்ஸ் நடப்பது போலத் தெரிந்தது. இங்கே அவரைச் சேர்த்தது --------------- அவர்களுக்கு எப்படித் தெரியும்? அப்போ பலரும் சொல்லும் ஸ்லீப்பர் செல் யாரோ இங்கு உள்ளது உண்மையாக இருக்கலாம் என்று தோன்றும்.
20, நாமெல்லாம் எந்த காலகட்டத்தில் உள்ளோம்? எங்க குரூப்புல இருந்தா வேற குரூப்புல இருக்கக்கூடாது என்பது காமெடியாக உள்ளது. அவனவன் 40 குரூப்பில் இருக்கிறான்.
21, எங்க குரூப்பில் வந்த படங்களை வேறு குரூப்பில் போடக்கூடாது என்பதும் காமெடி. 100 PDF குரூப்புகள் உள்ளன. அதில் முழு பத்திரிகைகளும் வருகின்றன.
22, ஏதோ நாலு கான்டாக்ட் கிடைக்குமே என்பதற்காக சிலர், இரண்டு மூன்று குரூப்புகளில் இருக்க நினைப்பது சகஜம். ஆனால் அதை அட்வான்டேஜ் ஆக எடுத்துக்கொள்ளக்கூடாது. கான்டாக்ட் தான் முக்கியம் என்றால் ஜேஸிஸ், லயன்ஸ், ரோட்டரிகளில் உங்கள் குரூப்பை விட பெரிய ஆட்கள் தொடர்பு அதிகம் கிடைக்கும்.
23, சிவகார்த்திகேயன் எந்த குரூப்பில் இருந்தார்? "நெருப்புடா" அருண்ராஜா காமராஜ் எந்த குரூப்பில் இருந்தார்? முகநூலில் எழுதியே பெரிய பத்திரிகைகளில் எழுதத் துவங்கிய எத்தனையோ பேர் எந்த வாட்ஸ் அப் குரூப்பில் இருக்கிறார்கள்? ஆசிரியர் பகவான் எப்படி இவ்வளவு பிரபலம் ஆனார்? இந்த குரூப்பில் இருந்ததாலா? அந்த குரூப்பில் இருந்தததாலா? இரண்டும் இல்லை.
24, ஒருவர் நாலு குரூப்பில் இருப்பதால் என்ன ஆகி விடப்போகிறது?
25, வாய்ப்பு வரும் என்று இருந்தால், வந்தே தீரும். உங்க குரூப்பை அடைச்சு தாழ்போட்டு வைத்தாலும் திறமைசாலிகளுக்கான வாய்ப்பு எங்கிருந்தேனும் வரும். அன்பே சிவம். அன்பே வெங்கடாசலபதி.
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
நன்றி வணக்கம். குட் நைட்.

வியாழன், 16 ஜூலை, 2020

சத்திய சோதனை

தட்டில் வெள்ளையாக ஏதோ கிடந்தது. உற்றுப்பார்த்தேன். மங்கலாக ஏதோ தெரிந்தது. ரவை உப்புமாவாக இருக்கக் கூடும். கண்ணை இருட்டிக் கொண்டு வந்தது. ஓரமாய் சிவப்பாய் கொஞ்சம். ஊறுகாய். அது ஓர் ஆறுதல்.

திடீரென ஒரு மசாலா வாசனை. ஆனால் அது பக்கத்தில் வந்தமர்ந்தவரின் தட்டில் இருந்து. வண்ணக்கலவையாய் நீள நீளமாய் ஏதோ நிரம்பியிருந்தது அங்கே. அது சீனர்களின் விருப்ப உணவாய் இருக்கக்கூடும் என என் ஏழாம் அறிவு என் வாசனைச் சுரப்பியிடம் பகர்ந்தது.

என் தட்டைப் பார்த்தேன். பின் அவர் தட்டைப் பார்த்தேன். மீண்டும் என் தட்டை. பிறகு அத்தட்டை. ஒரு முறை நன்றாய் மூச்சை இழுத்து வாசனை பிடித்தேன். அது ரோமன்களின் பெயர் தரித்த நூடுல்ஸாய் இருக்கக்கூடும் போலத்தெரிந்தது. ஏக்கமாய் நிமிர்ந்து அவர் முகத்தைப் பார்த்தேன்.

டாஸ்க்கின் போது குறுக்கே பேசிய தர்சனை முறைத்துப் பார்த்த வனிதா போல ஒரு பார்வை "என்ன?" என்ற ஒரு கேள்வியுடன். லோஸ்லியாவைப் பார்த்து வழியும் கவின் போல அவர் தட்டைப் பார்த்தேன். இப்போது அதே பார்வை சாக் ஷி ஸ்டைலுக்கு மாறியது. "சாயங்காலம் மிச்சமிருந்த ஆலு சப்பாத்தியை நான்தான் சாப்பிட்டேன், அப்போ வந்தியா" என்றொரு உபரிக்கேள்வி முளைத்தது இப்போது.

சடாரென நிமிர்ந்து உட்கார்ந்தது என் மனக்குரங்கு. அப்போ "நூடுல்ஸ் மட்டுமின்றி, ஆலு சப்பாத்தியும் சேந்து போச்சா?" என லோஸ்லியா மட்டுமின்றி அபியையும் சேர்த்து மிஸ் செய்த கவின் போல சைலண்டாக உப்மாவுடன் செட்டில் ஆனேன்.
.

செவ்வாய், 14 ஜூலை, 2020

நான் இன்சூரஸ் ஏஜெண்ட்டாக இருந்திருந்தால்

திரு. 
Sriram Narayanan அவர்களின் ஃபேஸ்புக் பதிவு.


நான் இன்சூரஸ் ஏஜெண்ட்டாக இருந்திருந்தால்
ஒரு வேளை நான் இன்று ஆயுள் காப்பீட்டு முகவராக இருந்திருந்தால் என்ன செய்திருப்பேன்,
1993ல ஆரம்பிச்சு 27 வருடங்களுக்கு மேலாக விற்பனைத்துறையில் இருக்கேன். இதில் நான் கத்துக்கிட்ட முக்கிய விசயம் - கஸ்டமருக்கு என்ன தேவை என்பதை கேட்டு / உணர்ந்து அவருக்குத் தேவையான பொருளை/ சர்வீஸை வழங்கினா பிசினஸ் தன்னால வரும். பல நேரங்களில் கஸ்டர்மின் தேவை என்னான்னே நாமதான் புரியவைக்க வேண்டியிருக்கும். இந்தியாவில் இன்சூரன்ஸும் அந்நிலையில்தான் இருக்கு. அப்படி இருக்கும் போது விற்பனையாளரின் பொறுப்பு இன்னுமே அதிகரிக்கிறது
நான் யூபிஎஸ் வித்த போது பல கஸ்டமர்கள் எனக்கு இத்தனை கேவிஏ யூபிஎஸ் வேணும், ஆன்லைன் யூபிஎஸ் தான் வேணும்னெல்லாம் சொல்லியிருக்காங்க.. ஒரு கம்ப்யூட்டரின் மின்சாரத்தேவைன்னு ஒண்ணு இருக்கும் அதே கம்ப்யூட்டர் பூட் ஆகறதுக்கு அதை விட அதிகம் பவர் தேவை, எலெக்ட்ரிகல் எஞ்சினியர் நூறு கம்ப்யூட்டர் * பீக் பவர் கணக்கு போட்டு இத்தனை பெரிய யூபிஎஸ் வேணும்னு சொல்லியிருப்பார் - நான் போயி கேப்பேன் 1,2,3 சொல்லி நூறு பேரும் ஒரே செகண்ட்லயா கம்ப்யூட்டர்களை ஆன் பண்ணப் போறீங்க? நீங்க சொன்ன கப்பாசிட்டில 60-70% போதும்னு சொல்லி சர்வருக்கு மட்டும் ஆன்லைன் யூபிஎஸ்ஸும் மத்த நூறு கம்ப்யூட்டருக்கு ஆஃப்லைன் யூபிஎஸ்ஸும் தந்து பட்ஜெட்டை கணிசமா குறைச்சிருக்கேன்.. அம்முறை காம்படீசன் கூட போட்டியிட்டு ஆர்டர் வாங்கணும், அதுக்கப்புறம் ஓவ்வொரு முறையும் என்னைத்தவிர வேறு யாரையும் யூபிஎஸ்ஸுக்கு கூப்பிட மாட்டாங்க..
அதே போல நான் இன்சூரஸ் ஏஜெண்ட்டா இருந்திருந்தால்
1. நீங்க வாங்கும் ஒவ்வொரு எல் ஐ சி பாலிசிக்கும் முதலாண்டு ப்ரீமியத்தில் ஏஜெண்ட்டுக்கு கமிசன் 35%. இதைத்தவிர டெவலப்மெண்ட் ஆஃபீசருக்கு 20% (டி ஓ சம்பளத்தின் 5 மடங்கு புது ப்ரீமியம் கொண்டு வரணும்) - ஏஜெண்ட்களுக்கும் குடும்பம் இருக்கு அவர்களும் வருமானம் ஈட்ட வேண்டும் ஆனா வெறும் ஆயுள் காப்பீடு மட்டும் வித்தா அதுவும் வெறும் 10-20 பாலிசி வித்தா எண்டொமெண்ட் விக்கறதைத் தவிர வேறு வழியில்லை.
2. டெர்ம் பாலிசியின் முக்கியத்துவத்தை ஒவ்வொரு கஸ்டரிடமும் எடுத்துச் சொல்வேன்
2. எண்டோமெண்ட்டை கஸ்டமர் கேக்கறாங்கன்னு ஜல்லியடிக்க மாட்டேன். எண்டொமெண்ட் மட்டும் வாங்கறது மக்களோட அறியாமை. அறியாமையை மட்டும் நம்பி பிசினஸ் பண்றது ரிஸ்க். மக்கள் கொஞ்சம் கொஞ்சமா அந்த அறியாமைலேருந்து வெளில வரத் தொடங்கியிருக்காங்க. பெரிய மாற்றம் வர நாளாகும் என்றாலும் நான் இன்னிக்கே என் பிசினஸ் மாடலை மாற்றிக் கொள்ளா விட்டால் மாற்றம் வரும் போது நான் Irrelevant ஆகி விடுவேன்
3. எண்டோமெண்ட்டை கஸ்டமர் கேட்டாலும் அதுல ஒண்ணு தர்றேன் அதுக்கு முன்ன டெர்ம் ஒண்ணு போடுங்கன்னு சொல்வேன்
4. மிஸ்டர் எக்ஸ் பாலிசி எடுத்தா, Eventuality வந்தான்னு கதை பேசாம, உங்க வருமானம் இவ்வளவு அதுக்கு ஏற்ப லைஃப் ஸ்டைல் வச்சிருக்கீங்க - கடன்களும் வாங்கியிருக்கீங்க - நாளைக்கு நீங்க விபத்திலோ கொரோனாவிலோ இறந்தால் உங்க மனைவி, பிள்ளைகளின் பொருளாதார பாதுக்காப்புக்கு என்ன வழி வச்சிருக்கீங்கன்னு நேரடியா கேப்பேன்
5. வெறும் ஆயுள் காப்பீடு மட்டும் வித்துட்டு என்னை முதலீட்டு ஆலோசகர்னு சொல்லிக்க மாட்டேன். கம்பெனி மீட்டிங்க்களில் வேணா அப்படி சொல்லி ஏஜெண்ட்கள் தம்மைத் தாமே ஏமாற்றிக்கொள்ளலாம் ஆனா உண்மை வேறு. நம்மூர்ல சேல்ஸ் மேன், இன்சூரன்ஸ் ஏஜெண்ட் போன்ற டைட்டில்கள் மேல் ஓர் ஒவ்வாமை இருக்கு. அதுக்காக தவறாக மார்க்கெட்டிங் எக்ஸிகியூட்டிவ், முதலீட்டு ஆலோகர்கள்னு சொல்லிக்கறாங்க
6. உண்மையாகவே முழு முதலீட்டு ஆலோசகர் ஆவேன். பரீட்சை எழுதி ஆயுள் காப்பீடு, ஹெல்த் இன்சூரன்ஸ், ஜெனரல் இன்சூரன்ஸ் விற்கும் தகுதியைப் பெறுவேன். AMFI சர்ட்டிஃபிகேசன் பண்ணி மியூச்சுவல் ஃபண்ட் விற்பேன். முடிஞ்சா CFP பாஸ் பண்ணி முழு ஆலோசகர் ஆக முயல்வேன்
7. கஸ்டமர் கூட ஒக்காந்து அவருக்கான முழு போர்ட்ஃபோலியோ தயாரிப்பேன். அந்தப் பிரமிட்டின் அடிப்படை டெர்ம் பாலிசி. மிச்சமிருக்கும் சேமிப்புக்கு சரியான அசெட் அல்லோகேசன் சொல்வேன். அந்த அசெட் அல்லோகேசனில் ஃபிக்ஸ்ட் இன்கம் போர்சனுக்கு வேணா தாராளமா எண்டோம்னெட் ப்ளான் எடுத்துக்கோங்கன்னு சொல்வேன். ஆனா அது டெர்ம் பாலிசி எடுத்தப்புறம் தான்
8. எல்லாமே ஆன்லைன்ல வரும் இக்காலத்தில் Value Added Service தந்தால் மட்டுமே தொழிலில் நிலைக்க முடியும். ப்ரீம்யம் கட்டறது, ரசீது வாங்கித் தர்றதெல்லாம் வேல்யூ அடிஷனில் வராது.
8. என் வருமானம் இப்படி வரும் என எதிர்பார்க்கலாம்
அ. ஆண்டுக்கு வெறும் 50 டெர்ம் பாலிசி - தோராயமா ஒவ்வொண்ணுக்கும் 20,000 ப்ரீமியம் - இதில் வருமானம் 3,50,000
ஆ. ஜீவன் சாந்தி பென்சன் பளான் - ஆண்டுக்கு 2 அல்லது 3 கஸ்டமர்கள், தொகை 50 லட்ச ரூபாய் - கமிசன் 1 லட்ச ரூபாய்
இ. வய வந்தன யோஜ்னா - கவர்மெண்ட் ஆஃபீஸ்கள் ஏறி இறங்கினா இம்மாதம் ரிட்டையர் ஆகும் ஆசாமிகளை பிடிக்கலாம். மாசம் 5 வயவந்தன யோஜ்னா - 15 லட்சத்துக்கு 1500 ரூபாய் கமிசம் - இதில் ஆண்டுக்கு 72,000
ஈ. ஹெல்த் இன்சூரன்ஸ் - இதில் ஆண்டுக்கு 1 லட்ச ரூபாய் வருமானம்
உ. ஜெனரல் இன்சூரன்ஸ் - வீடு, ஆபீஸ், கொடவுன், ஸ்ரீதேவி மூக்கு, ரம்பா தொடை இப்படி எதை வேணாலும் இன்சூர் பண்ணலாம். சினிமா படப்பிடிப்பைக்கூட இப்பல்லாம் இன்சூர் பண்றாங்க. இதில் ஆண்டுக்கு 1 லட்சம்
ஊ மியூச்சுவல் ஃபண்ட் - இதில் 1% கமிசன் கிடைக்கும். மாதம் பத்தாயிரம் எஸ் ஐ பி போடும் 100 கஸ்டமர் கிடைச்சப்புறம் இதில் ஆண்டுக்கு 120,000 ரூபாய் வரும்
ஆக மொத்தம் ஆண்டுக்கு 8,42,000 ரூபாய். இதில் வெறும் 75% அச்சீவ் பண்ணாலே 6 லட்சத்துக்கு மேல வரும்.
10. இதில் முக்கியமான விசயம் இவை எல்லாமே தொடர் வருமானம் தரக்கூடியவை. ஆயுள் காப்பீட்டில் அடுத்தடுத்த ஆண்டுகளில் ரெனிவல் ப்ரீமியத்தில் 7.5 - 5% வரும், மியூச்சுவல் ஃபண்ட்களில் தொடர்ந்து 1% வரும். இப்படி ஒவ்வொரு ஆண்டும் வருமானம் அதிகரிக்கும்.
இதெல்லாம் பேச நல்லாருக்கும், நடைமுறைக்கு ஒத்துவராதுன்னு சொல்வாங்க. இது வெறும் தியரி மட்டுமல்ல, ப்ராக்டிகலா நண்பர்
Vijayakumar Lic
Rupee Tree Investments என்ற நிறுனத்தை நிறுவி நடத்திக்கிட்டு இருக்கார்.
.