வெள்ளி, 24 ஜூலை, 2020

கேரிகேச்சர் - பெங்களூருடா

கோரமங்களா(லா?) ஃபோரம் மால்.
.

உள் நுழைந்து, நடந்து கடக்கும் பெருவெளிப்பாதையில் சேர், டேபிள் போட்டு அமர்ந்தபடி கூலாக கன்னடப் புத்தகம் ஒன்றைப் படித்துக் கொண்டிருந்தார் ஓர் அமுலு பேபி. நைஸ் லுக். அழகான தாடி. அவர் பக்கத்தில் கேமரா ட்ரைபாட் போல ஒரு கருவி நின்றிருக்க அதன் அந்தப்பக்கத்தை எட்டிப் பார்த்தால் அதில் ஒரு பெரிய பேட் மற்றும் வெள்ளை சார்ட் பேப்பர்கள் செருகி வைக்கப்பட்ட நிலையில்.
.
அவர் ஒரு கேரிகேச்சர் ஆர்ட்டிஸ்ட்.
.
வி.ஐ.பி க்களையும், அரசியல்வாதிகளையும், திரைப்பிரபலங்களையும் மட்டுமே கேரிகேச்சராகப் பார்த்து ரசிக்கும் நமக்கு, நம்ம மூஞ்சியையும் அப்படிப் பார்த்தால் எப்படி இருக்கும்? செமையாக இருக்காது? அந்த வாய்ப்பை நமக்கு வழங்குவதற்காகவே அமர்ந்திருக்கிறார் அவர் என்பது அவர் அருகில் இருந்த விளம்பரத் தட்டியைப் பார்த்ததும் தெரிந்தது. கட்டணம் தலைக்கு 500 ஓவாவாம். குரூப்பாக நின்றால் தலைக்கு 400 ஆம். கேரிகேச்சரில் ஒரு ஸ்பெஷாலிட்டி என்னவென்றால், அதில் தான் நம் முகத்திலேயே நம்ம மூக்கு பெருசா, காது பெருசா, கண்ணா என்பது தெரியும். அதை அட்டகாசமாகப் பெரிது படுத்தி வரைந்து காண்பிப்பார்கள். (இதையெல்லாம் முன்பே பார்த்தது தான் என்றாலும், இப்போது "பதிவு" செய்கிறேன்), தாரே ஸமீன் பர், நிகும்ப் வைக்கும் ஓவியப் போட்டி நினைவிருக்கிறதா? நன்றாக இருக்கும். (இருந்தால், டி.பி யாக வைத்துக் கொள்ளலாம், ஐ பிலீவ், திரு என்.
சொக்கன் அவர்களின் புரொஃபைல் படம் அப்படி வரையப்பட்டது என நினைக்கிறேன்).
.
எனக்கும் வரைந்து கொள்ள ஆசையாக இருந்தது. ஆனால் 500 ஓவா கொடுத்து மூஞ்சியை மட்டும் வரைஞ்சுகிட்டுப் போனா, தங்கமணி கொமட்லயே குத்துவார் என்பதால் அந்த ஐடியாவை மட்டும் கைவிட்டேன். ("உனக்கு மூஞ்சியில மூக்கு மட்டுமா பெருசு? மொட்டையடிச்சுப் பார்த்தா கண்ணு, உதடுன்னு மொத்த மண்டையே கிர்ணிப் பழம் மாதிரி பெருசாத்தான் இருக்கு" என்றும் உபரித் தகவலுடன்) முதலில் ஒரு குழந்தையை வரையும் படி, அதன் பெற்றோர் கேட்க, அவர் வரைய வரைய அவரைச் சுற்றிக் கூட்டம் சேர ஆரம்பித்தது. மூன்று, நான்கு முகங்களை அவர் வரைவதை நின்று கவனித்தேன். அடடா, என்னவொரு வேகம், சரளம்? பத்தே நிமிடங்கள் தான் அதிகபட்சம். ப்ராக்டீஸ், ப்ராக்டீஸ், ப்ராக்டீஸ், நிறைய செய்திருப்பார் போலிருக்கிறது. மாலில் செலவழிக்கும் நேரம் போக, மற்ற நேரங்களில் இது தொடர்பான இன்னும் சில துறைகளில் இருக்கிறார் என்பது தெரிந்தது. முடித்ததும், வாழ்த்தி கை கொடுத்து விட்டு வந்தேன்.
.
என்ஜினியர், ஐ.டி, டாக்டர், பேங்கு வேலை, வாத்தியார் வேலை என்று சில வேலைகளைப் பற்றி மட்டுமே இன்னமும் பயிற்றுவிக்கப் பட்டுக் கொண்டிருக்கும், நான் சந்திக்கும் சின்ன ஊர்ப் பள்ளி மாணவர்களுக்கு இப்படியும் சில கரியர் (career) கள் உண்டு எனக் காண்பிப்பதற்காக அவரைச் சில பல புகைப்படங்கள் எடுத்து வைத்திருக்கிறேன்.

.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக