ஞாயிறு, 26 ஜூலை, 2020

கொஜிரோ அலையாஸ் காட்ஸில்லா

பனிரண்டாம் வகுப்பு படிக்கையில் வரைந்தது (என்று நினைக்கிறேன்)
1997 - இன் இறுதியில் ரிலீஸாகி ஊர் முழுக்க "டைட்டானிக்" படம் கலெக்ஷனைக் கிளப்பியது என்றால் அடுத்த ஆறே மாதத்தில் சரியாக பள்ளி விடுமுறை நேரத்தில் 1998 - ல் தியேட்டர்களுக்கு வந்தது காட்ஸில்லா. அதுவும் நல்ல ஓட்டம். காட்ஸில்லாவும் ஓடி, அது துரத்தி மக்களும் ஓடி, தியேட்டர்களில் படமும் நன்றாகவே ஓடியது.

அதற்குச் சில ஆண்டுகள் முன்பு தான் "ஜூராஸிக் பார்க்" வெளியாகி ஊரையே கலக்கி, பிறகு அதன் தொடர்ச்சியாக 1997ல் "லாஸ்ட் வேர்ல்ட்" (இரண்டுமே ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்) படமும் வெளியாகி மக்களிடமும், மற்ற ஹாலிவுட் படத்தயாரிப்பாளர்களிடமும் ஒரு பயத்தைக் கிளப்பி வைத்திருந்தது. ஆகவே, அதுபோன்ற தரம் மற்றும் கதையின் மேலிருந்த எதிர்பார்ப்பிலும், அவற்றின் ஹேங் ஓவராலும் காட்ஸில்லாவுக்கான வரவேற்பு கொஞ்சம் குறைவுதான்.
ஆனாலும் அவை இரண்டும் அறிவியல் பூர்வமாகவும், நம்புவது போலவும் இருந்ததால் அவை "சயின்ஸ் ஃபிக்ஷன்" படங்களாகவும், காட்ஸில்லா முழுக்க முழுக்க "ஃபேன்டஸி - மான்ஸ்டர் - சேஸிங்" வகைப்படமாகவும் வரவேற்கப்பட்டு தமிழ் ரசிகர்கள் இதையும் ஸீட் நுனியில் அமர்ந்தே கண்டு களித்தார்கள். அதிலும் க்ளைமாக்ஸ் சேஸிங் அப்போதைய காலகட்டத்திற்கு "அன்ப்ளிவபிள்". படத்தில் கிட்டத்தட்ட இரண்டு க்ளைமாக்ஸ் படத்தில்.
காட்ஸில்லாக் குட்டிகள் குஞ்சு பொரிக்கப்பட்ட கட்டிடத்தின் மேல் குண்டு போடப்பட்டு அவை அழிந்து சோக வெற்றியுடன் வயலின் வாசிக்கப்பட்ட போது "படம் முடிஞ்சிடுச்சி மச்சி" என்று தியேட்டரை விட்டு எழுந்து போனார்கள் பலர். அதன் பிறகு அம்மா (அம்மாப்பா?) காட்ஸில்லா மீண்டு(ம்) வந்து ஹீரோ அண்ட் டீமை துரத்தோ துரத்தென்று துரத்தும் கார் சேஸிங் காட்சிகள் தான் மெயின் க்ளைமாக்ஸ்.
அதற்காகவே குட்டிகள் எரியும் சீனில் ஓவர்லேப்பாக "இன்னும் 20 நிமிடம் படம் இருக்கிறது" என்று ஸ்லைடு போட்டார்கள், சேலம் சங்கீத் தியேட்டரில். எழுந்து போன கூட்டம் மீண்டும் வந்த அமர்ந்தது. எனக்குத் தெரிந்து மிக நீண்ட காலம் ட்ரெய்லர் (அப்போதெல்லாம் சைட் ரீல் என்று சொல்லுவோம்) ஓட்டப்பட்டது இந்தப் படத்திற்குத்தான். சேலம் "சங்கீத்"தில் என் நினைவு தெரிந்த வரை கிட்டத்தட்ட ஒரு வருடம் ஓட்டினார்கள் என்று நினைக்கிறேன்.
காட்ஸில்லாவின் பிரம்மாண்டத்தை நாமே கற்பனை செய்து கொள்ள வேண்டி மிகைப்படுத்தப்பட்ட மூன்று விதமான டிரெய்லர்கள் காண்பிக்கப்பட்டன. ஆனால் எந்த டிரெய்லரிலும் காட்ஸில்லாவின் உருவம் முழுதாக இருக்காது. அப்போதெல்லாம் ஸ்மார்ட்போனும் கிடையாது, யூடியூப் பும் கிடையாது - நினைத்தவுடன் பார்க்க. டி.வியிலும் இவை வராது. டிரெய்லர் பார்க்க வேண்டும் என்றால் கூட தியேட்டரில் தான் பார்க்க முடியும்.
முதலாவது Godzilla rises ட்ரெய்லர் - இன்றைய பாஷையில் கிட்டத்தட்ட அது வெறும் டீஸர் தான் - கடலில் மீன்பிடிக்கும் தாத்தா வின் கண்முன்னே கடல்நீர் பிரவாகமாக, பிரம்மாண்டமாக எழ, அதில் இரண்டு கொம்புகள் தெரிய அதைக்கண்டு அவர் ஓட, அவர் பின்னாலேயே தண்ணீர் எழும்பித் துரத்த, அந்த மரப்பாலம் துண்டுகளாகத் தெறித்துக் கொண்டே வர, காட்ஸில்லா தண்ணீரில் இருந்து எழும் காட்சி. காட்ஸில்லாவைக் காண்பிக்காமல் தண்ணீர் தெறிக்க "From the creators of Independence Day" என்ற ஸ்லைடுடன் "Size does matter" என்ற வார்த்தைகளுடன் முடியும். அது தான் மிக நீண்ட காலம் தியேட்டரில் ஓட்டப்பட்ட டிரெய்லர்.
இரண்டாவது கொஞ்சம் பெரிய ட்ரெய்லர். அதனைப் படம் வருவதற்கு ஒன்றிரண்டு மாதங்கள் முன்பு காட்டத்துவங்கினார்கள். - இருண்ட கடலில் கப்பலைத் தாக்கிக் கிழிக்கும் காட்ஸில்லாவின் நகங்கள், கரை ஒதுங்கிய சேதமடைந்த கப்பல், கடலில் இருந்து எழும் காட்ஸில்லாவின் தலைப்பகுதி, நியூயார்க் நகரில் காட்ஸில்லாவின் நடை அதிர்வில் கார்கள் குலுங்குதல், கட்டிடங்களை உடைத்து நொறுக்கியபடி வெளிவரும் காட்ஸில்லாவின் தெளிவற்ற தோற்றம், தெருக்களில் ஓடிவரும் அதன் கால்கள், மற்றும் க்ளாஸிக் சீனான, லாங் ஷாட்டில் "வீடியோகிராபரின் மேல் சொத் தென்று வைக்கப்படும் காட்ஸில்லாவின் பாதம்" என்று துண்டு துண்டான காட்சிகளுடன் வந்தது அது. நீங்கள் யூடியூபில் தேடினால் கிடைக்கலாம்.
ஹாலிவுட்டில் ஜப்பானிய "கைஜூ" மிருகங்களின் வரிசையில் காட்ஸில்லா ஹீரோவாக இருந்தாலும், ஹாலிவுட்டைப் பொறுத்தவரை அது வில்லன் தான். அதனாலோ என்னவோ படம் படுத்து விட்டது. ஏகப்பட்ட நெகடிவ் ரிவ்யூக்கள். ஹாலிவுட்டில் கலெக்ஷன் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை. ஆனாலும், நம்மூர் தியேட்டர்களில் திருவிழா என்று தான் சொல்ல வேண்டும். பொதுவாக ஆங்கிலப்படங்கள் வாரத்திற்கு ஒன்று என்று திரையிடப்படும் சேலம் சங்கீத்தில் இது எனக்குத் தெரிந்து மூன்று வாரங்கள் ஓடியது. அதற்கு மேலும் இருக்கலாம். எனக்குச் சரியாக நினைவில்லை.
பள்ளி வகுப்புகளில் படம் குறித்து எங்களுக்குள் விவாதிப்போம். இதன் நீட்சியாக நண்பன் பாலா (தான் என்று நினைக்கிறேன்) வுக்கு அவன் திடகாத்திரமாக கர கர குரலோடு இருந்ததாலோ என்னவோ, "கஜிலோ" என்று பேச்சு வழக்கில் பெயர் வைத்தார்கள். அது அவனுக்குப் பிடிக்காது. திட்டுவான். கையில் கல் கிடைத்தால் எடுத்து அடிப்பான். பாவம். நான் லாம் பூச்சி மாதிரி இருந்ததால் அவன் பக்கமே போக மாட்டேன்.
அந்த நேரத்தில் தினத்தந்தியில் வந்த "காட்ஸில்லா" வின் கால் பக்க "கால்" விளம்பரத்தைக் கிழித்து வைத்துக்கொண்டு வரைந்த படம் இது. தினத்தந்தி விளம்பரத்தின் கலர் க்வாலிட்டி எப்படி இருக்கும் என்பது உங்கள் யூகத்திற்கே. அதுவும் 22 வருடங்களுக்கு முந்தைய அப்போதைய தினத்தந்தி. அதை வைத்துக் குத்து மதிப்பாக ஸ்கெட்ச் பென்கள் கொண்டு வரைந்தது. பின்பக்கமெல்லாம் இங்க் உறிஞ்சப்பட்டு, எனக்குத் திருப்தி இல்லாத படம் இது. இது போன்ற படங்களை வரைய இன்னும் பயிற்சி தேவை என்றே நினைக்கிறேன்.
விளம்பரத்தில் வந்த படம் கமெண்ட்டில்.

1 கருத்து: