வியாழன், 30 ஜூலை, 2020

ஷகுந்தலா தேவி - Worth Watching.



"சிலுக்கு பத்தின படமாம்டா" என்றெழுந்த குரல்களின் மூலம் தான் எனக்கு வித்யா பாலன் பரிச்சயம். அதற்கு முன் "வசூல் ராஜாவோட ஒரிஜினலாம்டா" என்பதற்காக "லகே ரஹோ முன்னாபாய்" இரண்டு முறை பார்த்தும் சஞ்சய் தத் முகமும், அர்ஷத் வார்சி முகமும் பதிந்த அளவுக்கு என் மனதில் வித்யா பாலன் முகம் பதியவில்லை. Another heroine in Hindi film என்று கடந்து போனான் இந்த ரசிகன். 


ஆனால் அதற்கடுத்து ஐந்தாண்டுகள் கழித்து "டர்ட்டி பிக்சர்" என்றொரு பயோ பிக் மூலம் ஹிந்தி சினிமா உலகையே ஒரு உலுக்கு உலுக்கி எடுத்திருந்தார் வித்யா பாலன். அதற்கு தேசிய விருது வாங்கியதன் மூலம் அகில இந்திய அளவில் அனைவர் கவனத்தையும் ஈர்த்த போது தமிழ்நாடு மட்டும் விதிவிலக்கா என்ன? அதுவும் தமிழகத்தின் ஃபேவரைட் கனவுக் கன்னியான சில்க் கின் கதையுடன். 


பின்னாட்களில் "டர்ட்டி பிக்சர்" படத்தின் சில்க் ரோலும் "வித்யா" என்கின்ற பெயரும், மணி ரத்னத்தின் "குரு" வில் அவர் செய்த ரோலும் எனச் சேர்ந்து அவரைத் தமிழ்ப் பெண்மணி என்ற பிம்பத்தையே என் மனதில் உருவாக்கி வைத்திருந்தன. அது உண்மை அல்ல என்று என் புத்திக்குத் தெரிந்தாலும், ரசிகனின் மனதுக்குத் தெரியவில்லையே. 


தான் நடிக்கும் படங்களையும், பாத்திரங்களையும் ஒரு கொண்டாட்டமாக மாற்றி, அந்தக் கதாபாத்திரங்களை உயிரோட்டமாகச் செதுக்கும் கலை, சில திரை நட்சத்திரங்களுக்கு மட்டுமே கை கூடும். வானம் போன்ற அகன்ற திரையில் விரல் விட்டு அந்த நட்சத்திரங்களை எண்ண முடியுமானால் அதில் வித்யா பாலன் என்ற நட்சத்திரமும் அழுத்தமாக முன் நிற்கும். கஹானி, பேஹம் ஜான் என ஒவ்வொன்றும் ஒரு வெரைட்டி விருந்து. 


"மிஷன் மங்கள்" படத்தை ரசித்தது மூன்று முறை. முதல் முறை வெறும் ரசிகனாக. மீண்டும் இரண்டு முறை ரிப்பீட் அடித்தது "தாரா ஷிண்டே" வாக வாழ்ந்திருந்த வித்யா பாலனுக்காக. மங்கள்யானின் உண்மையான ப்ராஜெக்ட் டைரக்டர் இப்படித்தான் உணர்வுப் பூர்வமாக இருந்திருப்பாரோ என்று மனதினுள் கேள்வி எழுப்பிய பாத்திரம் அது. நின்று போன ராக்கெட் ப்ராஜக்டில் இருந்து பாதி இயந்திரங்களை எடுத்துக் கொள்ளலாம் என்று யோசனை தந்து விட்டு முகத்திலேயே "ப்ளீஸ்ஸ்ஸ்ஸ்ஸ்" என்றொரு உணர்வைக் காட்டிய போது, இப்படிக்கூட ஒரு உணர்வைத் திரையில் கொண்டு வரமுடியுமா என்று வியந்து அந்தக் காட்சியை முன்பின் ஓட்டி ஓட்டி ரசித்திருக்கிறேன். 


அறிந்தோ அறியாமலோ அசத்தலான "ஹீரோயின் ஓரியன்டட்" படங்களை அழுத்தம் திருத்தமாகக் கொடுத்து வந்த அவரை டம்மியாக சிறிய ரோலில் காட்டிய பெருமையை இரண்டு என்.டி.ஆர் பயோ பிக்-குகளும் "நேர்கொண்ட பார்வை"யும் தட்டிச் சென்றன. 


இந்தியாவின் "மேத்ஸ் ஜீனியஸ்", "ஹ்யூமன் கம்ப்யூட்டர்" என்றழைக்கப்பட்ட ஷகுந்தலா தேவி - யின் பயோ பிக் என்று வெளியான டிரெய்லர், இது அக்மார்க் "வித்யா பாலன்" படம்டா என்பதை உணர்த்தியது மட்டுமின்றி என்னை 30 ஆம் தேதி இரவு 10 மணிக்கு 'ஸ்பெஷல் ஷோ என்று ப்ரைம் நோக்கி இழுத்துச் சென்றது. 


கொரோனா புண்ணியத்தில் நீண்ட நாட்கள், வாரங்கள், மாதங்கள், வருடங்கள் கழித்து முதல் நாள் முதல் காட்சி-யில் ஒரு திருப்தியான, அருமையான ஒரு திரைப்படம். சினிமா ரசிகர்கள் தவற விடக்கூடாத அட்டகாசமான ஃபேமிலி பயோ-பிக் டிராமா. நம்ம ராமானுஜத்திற்கு இது போல கொண்டாட்டமாக ஒரு படம் அமையவில்லையே என்றும் எண்ண வைத்த படம். டோன்ட் மிஸ் இட். 


எனக்குப் பிடிச்ச நம்பர் "ஜீரோ" என்று ஒரு காட்சியில் சொல்கிறார் ஷகுந்தலா. ஆரம்பமும், முடிவும் தெரியாத ஜீரோ ஒரு முடிவிலி. ஆனால் அதுவன்றி அணுவும் அசையாது. 


வித்யாவும் அப்படித்தான். ஒரு நல்ல சினிமா ரசிகனின் தவிர்க்கவியலா ஒரு முடிவிலி. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக