ஞாயிறு, 10 செப்டம்பர், 2017

ஜிகர்தண்டாவும் தீவிர இலக்கியமும்....

மூன்றாண்டுகளுக்கு முன்பு 08 செப்டம்பர் 2014 அன்று ஃபேஸ்புக்கில் எழுதியது.

ஜிகர்தண்டா பற்றிய ஒரு "நுண்ணிய" விமர்சனம் (அப்படித்தான் அதை எழுதியவர் சொல்லிக் கொள்கிறார்) படித்தேன். சத்தியமாக இரண்டு பாராவுக்கு மேல் படிக்க முடியவில்லை. (பாராகிராஃப் பிரிப்பதற்கும் சில வரையறைகள் இருக்கின்றன. அதுவும் இல்லை. கை போன போக்கில் எண்டர் தட்டி பெரிய பெரிய பாராகிராஃப்-களாக எழுதி இருக்கிறார்) எவ்வளவு அபத்தமாக, எவ்வளவு குழப்பமாக எழுத முடியுமோ அப்படி ஒரு கட்டுரை.

கார்த்திக் சுப்பராஜ் பாவம், அந்த மனுசன் படம் எடுத்தது ஒரு குத்தயமாய்யா என்றுதான் எனக்குத் தோன்றியது.

மூத்திர நாத்தத்துடன் கூடிய பஸ் ஸ்டாண்டு வெளிப்புறக் கடைகளில் கொத்து பரோட்டா சாப்பிட்டிருக்கிறீர்களா?

ஆவித் தண்ணீர் விழுந்து ஓரம் ஊறி நைந்து போன, தீய்ந்து போன பரோட்டாக்களை கிழித்துப் போட்டு, பெரும்பாலும் கெட்டுப் போன தக்காளி, ஒரு நல்ல முட்டை, ஒரு கெட்டுப் போன முட்டை, மேலே சேர்வை என்று கோழிக் கொழுப்பு மிதக்கும் குழம்பு என எதையெதையோ எடுத்து ஊத்தி, கொத்திக் குதறி, குழப்பி சத்தமெழுப்பி தட்டில் கொண்டு வந்து போடுவார்கள். அதில் புரோட்டா இருக்கிறது, தக்காளி இருக்கிறது என்று மட்டும் தான் உங்களுக்குத் தெரியும், பசி நேரத்தில் தட்டில் சுடச்சுட வந்து விழும் ஒரு வஸ்துவை நன்றாக இருக்கிறது என்று உங்கள் மனம் நம்பினால் அது மாயை. அப்படித்தான் இருக்கிறது இந்த மாதிரி ஒரு இலக்கியக் கட்டுரை.

அதிலும் இது ஸ்பெஷல் வகை. அதே கொத்து புரோட்டாவை வெந்தும் வேகாமல் தின்று விட்டு அதே பஸ் ஸ்டாண்டுக்குள் உள்ள பொதுக் கழிப்பறையில் கழிந்து விட்டு வந்தால் எப்படி இருக்குமோ அப்படி இருக்கிறது அந்த விமர்சனம். கருமம், படத்தை பாராட்றானா, கய்வி ஊத்துறானான்னே புரியலை.

பொதுவாகவே தீவிர இலக்கியங்கள் பக்கம் முடிந்தவரை நான் போவதில்லை. சேலத்தில் இருந்த வரை ஒரு இலக்கியப் புத்தகத்தை ரெகுலராக வாங்கிக் கொண்டிருந்தேன். அம்மா (எங்க அம்மா) அதைப் படித்து விட்டு லூஸாடா நீ என்று என்னைத் திட்டுவார். ஓசூர் வந்தபிறகு இலக்கியப் புத்தகங்கள் கிடைப்பதுமில்லை. ஒரு புத்தகத்துக்கு சந்தா கூட கட்டிப் பார்த்தேன். புத்தகம் வீட்டுக்கு வரவே இல்லை. தொடர்பு கொள்ளும் எண், எப்போதும் தொடர்பு எல்லைக்கு வெளியேவே இருக்கிறது. இருந்தாலும் அதை ஒரு அளவுகோலாக பலர் வைத்திருப்பதாலும், அதில் ஏதோ ஒரு விஷயம் (என்னன்னு தான் புரியலை) நடந்து கொண்டே இருப்பதனாலும், அவ்வப்போது தீவிர இலக்கியம் பக்கம் எட்டிப் பார்ப்பதுண்டு.

படிப்பவனுக்குப் புரியாமல் எழுதுதல், ஏதேனும் ஒரு வட்டார வழக்கில் எழுதுதல், எழுத்து நடையில் ஊர் வழக்கு கெட்ட வார்த்தைகளை புகுத்துதல், குறியீடு என்ற பெயரில் எழுதியவருக்கு மட்டுமே புரியும் வகையில் குறியீடுகள் வைத்தல், எதிரணியில் உள்ள இலக்கிய எழுத்தாளரை தன் கதையில் அலிகொரி வைத்து திட்டித் தீர்த்தல், திரையிலும் நிஜத்திலும் சாதாரணமாக நடைபெறும் சம்பவங்களில் கூட தலித்திய கூறுகள், புலி கூறுகள், பெண்ணிய கூறுகள், டாஸ்மாக் கூறுகளை வேலை மெனக்கெட்டு கண்டுபிடித்தல், தன் எழுத்துக்கும் நிஜவாழ்விற்கும் சம்பந்தமே இல்லாமல் நடந்து கொள்வது, சொந்தக் காசில் மட்டுமே வௌியிட முடியும் என்ற வகையில் குழப்பமான எழுத்து நடையை மெயின்டெய்ன் செய்வது போன்றவை நான் ஆழ்ந்து அவதானித்த வகையில் தீவிர இலக்கியத்தின் கூறுகளாக அறிகிறேன். (கருமம், எனக்கும் அதே மாதிரி வருது, ஒரு கட்டுரை தான்யா படிச்சேன்) ஸாரி, நான் கவனித்த வகையில் இன்றைய தீவிர இலக்கியம் இதுபோன்ற விஷயங்களைத் தான் கொண்டிருக்கிறது.

நான் ஒரு (ஆங்கில) இலக்கிய மாணவன் என்ற முறையில் ஆறரை வருடங்கள் (மக்கடித்தேனும்) இலக்கியம் பற்றிக் கொஞ்சமேனும் படிப்பிக்க வைக்கப்பட்டேன் என்பதை மிகுந்த தன்னடக்கத்துடன் கூறிக் கொள்கிறேன். இலக்கியம் என்றால் என்ன, அது எத்தனை வகைப்படும், அவற்றின் உட்பிரிவுகள் என்ன, அவற்றின் தோற்றம், வளர்ச்சி ஆகியவை, நீங்கள் எதை எழுதினாலும் அதை இலக்கியத்தின் எந்தப் பிரிவுக்குள் கொண்டு வரலாம், நவீனத்துவம், பின் நவீனத்துவம், இஸங்கள் பற்றிக் கொஞ்சம் (சித்தாந்தங்கள் மட்டும் எனக்குக் கொஞ்சம் புரிவதில்லை) என்றெல்லாம் எங்கள் ஆசிரியர்கள் எங்களுக்குச் சொல்லித்தந்தார்கள் என்பதையும் இங்கே டிஸ்கி (அல்லது முஸ்கி) யாக மீண்டும் மிகுந்த தன்னடக்கத்துடன் சொல்லிக் கொள்கிறேன்.

தயவு செய்து புரியுற மாதிரி எழுதுங்கள். மேலும் புரியுற மாதிரி எழுதும் (வெகுஜன எழுத்தாளர்கள் என்று நீங்கள் தூற்றும்) எழுத்தாளர்களை கிண்டலடிப்பதையும் நிறுத்துங்கள். இப்படியே போச்சுன்னா, அப்பறும் நானும் இலக்கியவாதி ஆகி கமல் மாதிரி மய்யமா புரியாமயே எழுத ஆரம்பிச்சுடுவேன். ஜாக்கிரதை. பீ கேர்ஃபுல் (நான் என்னச் சொன்னேன்)