வியாழன், 3 ஆகஸ்ட், 2017

நீங்க யாரு?

மூன்று  ஆண்டுகளுக்கு முன்பு (3 ஆகஸ்டு 2014) முகநூலில் எழுதியது.

முகநூல் நண்பர் ஒருவரின் மகன் மிக அழகாக வரைந்து கொண்டிருந்த ஒரு மயில் படத்தின் போட்டோவை பார்த்ததும் எழுதத் தோன்றியது.

நாம் எல்லாருமே தத்தம் வாழ்வில், சிறு வயதில் இருந்த நம்முள் ஏதோ ஒரு விஷயத்தை, திறமையை, வளர வளர வேலை, கமிட்மெண்ட்ஸ். கல்யாணம், குடும்பம், என்ற சுழற்சியில் இழந்து விடுகிறோம். அது நம் கேரியரையே மாற்றியிருக்கக் கூடிய ஒரு பெரும் திறமையாகக் கூட இருக்கலாம்.

அப்படி நான் மறந்தது என்னுடைய ஓவியத் திறமை. பள்ளி நேரங்களில் பல முறை, அதாவது மாதம் ஒரு முறையேனும், ஒவியம் (அ) ஏதேனும் கிராஃப்ட் போட்டிகளில் பரிசு வாங்க ஸ்கூல் அசெம்பிளி ஏறி விடுவேன். அப்போதைய நிலையில் பார்த்ததை பார்த்தபடி வரைய என்னால் முடியும். விகடனில் வந்து கொண்டிருந்த ஸ்யாமுடைய படங்களயும், மதனுடைய கார்ட்டூன் ஸ்ட்ரோக்குகளையும், ரவி வர்மா போன்ற ஓவியர்கள் வரைந்த படங்களை அளவீடுகள் வைத்து (பிரதி / ட்ரேஸ் எடுக்காமல்) அப்படியே வரைந்து பழகுவேன். எங்கள் பள்ளியில் (கோகுலநாத இந்து மகாஜன பள்ளி, சேலம்) கோகுலாஷ்டமி பண்டிகைக்காக ஒரு குழலூதும் கிருஷ்ணர் படத்தை (ஒரிஜினல் ஒன்றை அப்படியே பார்த்து) வரைந்து கொடுத்தேன். அதை அவர்கள் அன்று பூஜையில் வைத்தார்கள். இன்றைக்கும் அந்தப் படத்தை பத்திரமாக வைத்திருப்பதாகக் கேள்விப் பட்டேன்.

தனிப்பட்ட சுயமான ஸ்ட்ரோக்குகளை நான் பழகத் துவங்கிய நேரத்தில் கல்லூரிப் படிப்பு, பணப் பற்றாக்குறையால் பார்ட் டைம் வேலை என என் வாழ்க்கை தடம் மாறியது. 1999 ல் இருந்து கணக்கெடுத்தால் 15 வருடங்களாக நான் படம் வரையவில்லை. ஒன்றிரண்டு சந்தர்ப்பங்களைத் தவிர. ஆதித்ய பிர்லாவில் வேலை செய்யும் போது, 2008 என்று நினைக்கிறேன். அதன் எம்.டி-யை பென்சில் ஸ்ட்ரோக்காக சிறிய அளவில் வரைந்து பிரேம் செய்து கொடுத்தேன். அவர் இன்றைக்கும் அதை தன் பர்சனல் அறையில் வைத்திருப்பதாகக் கேள்வி.

இன்றும் என்னுள் லேசான ஒரு ஓவியப் பார்வை இருப்பதை உணர்கிறேன். ஒரு பொருளையோ ஆளையோ கவனிக்கும் போது நான் மற்றவர்களை விட ஒரு 5 சதவீதமேனும் அதிக உன்னிப்பாக கவனிக்கிறேன் என்று நினைக்கிறேன். அதாவது, ஒரு ஆளை பார்த்தால் அவரை மற்றவர்களிடம் இருந்து வித்தியாசப் படுத்தும் feature உள்ளதா? ஒரு திரைப்பட டைட்டிலை பார்க்கும் போது அதன் ஃபான்ட் என்ன என்பது, ஒரு ஆங்கிலப் பட போஸ்டரை அப்படியே வரைந்தால் அதை ஸ்கெட்ச் பேனாக்களா, கிரேயானா, கலர் பென்சில்களா, எதன் மூலம் வரைந்தால் அந்த எஃபெக்ட் அப்படியே வரும்? மார்க்கெட்டில் பார்க்கும் ஒரு மாம்பழத்தை அப்படியே வரைந்தால் அதிலுள்ள மஞ்சள், பச்சை, ஆரஞ்சை எந்த மிக்ஸ்சர் வைத்து வரைய வேண்டியிருக்கும்? என்பது போன்ற எண்ணங்கள் மனதில் ஓடுகின்றன.

சைனாவில் வடிவேல் சொல்வது போல எல்லாத்தையும் ப்ளான் பண்ணி பண்ணுவாங்களாம். உதாரணமாக பத்துப் பனிரண்டு வருடங்களுக்குப் பிறகு வரப்போகும் ஒலிம்பிக் போட்டிகளுக்காக இன்றிலிருந்தே மூன்று நான்கு வயதுக் குழந்தைகளை மோல்ட் செய்ய ஆரம்பித்து விடுவார்களாம். குருகுலக் கல்வி போல, தேவையான ஏட்டுப் படிப்பை கொஞ்சூண்டு மட்டும் கொடுத்து விட்டு, ஏதேனும் ஒரு திறமையை மட்டும் திரும்பத் திரும்ப, திரும்பத் திரும்ப, திரும்பத் திரும்ப, திரும்பத் திரும்ப, ப்ராக்டீஸ் கொடுத்துக் கொண்டே இருப்பார்களாம். இது சம்பந்தப் பட்ட சில டார்ச்சர் புகைப்படங்களை கூகிளடித்தால் நீங்கள் தேடி எடுக்கலாம்.

கொஞ்சம் யோசித்தால், அது போல என் துறை ஓவியமாக (மற்றும் அது சம்பந்தப்பட்ட கிராபிக்ஸ், அனிமேஷன்) தேர்ந்தெடுக்கப்பட்டிருந்திருந்தால்? பதினைந்து வருடங்கள் விடாமல் வரைந்து பழகியிருந்தால், ஒரு நாளைக்கு 2 படங்கள் என்று வைத்தால் கூட பத்தாயிரம் படங்கள் வரைந்து, எவ்வளவு பர்ஃபெக்ஷன் வந்திருக்கும்?

நினைத்தாலே ஆயாசமாக இருக்கிறது...

நீங்கள் தொடர மறந்த, தொடர முடியாத உங்கள் திறமை எது?