புதன், 19 மே, 2021

கொரேனா சாவ கிராம்பு சாப்டுங்கோ

"என் பெயர் டாக்டர் வி.சம்பத்குமார், விமல் ஜோதி கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிகிறேன்" என்று துவங்கி ஒரு பெரும் அறிவாளி பேசும் ஒரு வீடியோ வாட்ஸ் அப்பில் சுற்றிக் கொண்டிருக்கிறது. முக்கியமாக வயதான பெரியவர்கள் உள்ள குரூப்புகளில். அவர்கள் தான் "எத்தைத் தின்றால் பித்தம் தெளியும்" என்று சுற்றிக் கொண்டிருக்கிறார்களே. போதாக்குறைக்கு லாக் டவுன் வேறு. வேறு வேலை இல்லை. எல்லா குரூப்புக்கும் ஃபார்வர்டு செய்வோம் என்று அனுப்பி வைக்கிறார்கள்.

அந்த வீடியோவில் திரு. சம்பத் சாரி, டாக்டர். சம்பத் முதலில் ஒரு ஆக்ஸி மீட்டர் பயன்படுத்தி தன் ஆக்ஸிஜன் லெவலை செக் செய்கிறார். பிறகு இரண்டு கிராம்பு எடுத்து மென்று விட்டு அதன் பிறகு மறுபடி ஆக்ஸி மீட்டரைப் பயன்படுத்தி தன் ஆக்ஸிஜன் லெவல் ஏறிவிட்டது என்று காண்பிக்கிறார். எனக்குப் புல்லரித்து விட்டது. மேலும் கிராம்பு தின்றால் அது கொரோனா வைரஸைக் கட்டாயம் கொன்று விடும் என்றும், ஒவ்வொரு முறை மாஸ்க் அணிவதற்கு முன்பு இரண்டு கிராம்பு தின்னும் படியும் பரிந்துரைக்கிறார். கொரோனா வராதாம்.
(ஒரு டாக்டருக்கு, என்ஜினியரிங் கல்லூரியில் என்ன வேலை? அவர் பிஹெச்டி டாக்டரா? அலோபதி டாக்டரா? அதெல்லாம் கேட்கக் கூடாது. எந்த வயதுக் காரர்கள் இரண்டு கிராம்பை திங்க வேண்டும்? 3 வயது குழந்தை? 75 வயதுப் பெரியவர்? இவர்கள் தின்னா பேதியாகுமே? என்றெல்லாம் கேட்கக் கூடாது)
இவ்வளவு பெரிய அறிவாளியை ஏன் இந்திய மருத்துவத்துறை இன்னும் கண்டுகொள்ளாமல் புறக்கணிக்கிறது என்று தெரியவில்லை? இவரை உடனடியாக அங்கீகாரம் செய்து தமிழக அரசு அவார்டு கொடுத்து, இவரது பரிந்துரையின் பேரில் அனைத்து அரசு ஆஸ்பத்திரிகளுக்கும் அஞ்சஞ்சு மூட்டை கிராம்பு சப்ளை செய்ய ஆவன செய்யவேண்டும்.
மேலும் ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் தயாரிக்க வேண்டி வேதாந்தா போன்ற நிறுவனங்களைக் கெஞ்ச வேண்டியதில்லை. கிராம்பு தின்றால் ஆக்ஸிஜன் ஏறி விடுகிறதே. எதற்கு ஆக்ஸிஜன் சிலிண்டரும், சிகிச்சையும்?. முடிந்தால் ரேசன் கடைகளில் அந்த 4000 ஓவா கொடுக்கும் போது கூடவே ஒரு 400 கிராம் கிராம்பு பாக்கெட் கொடுக்கச் சொல்லவும்.
டாக்டர். சம்பத்குமாருக்கும், அந்த வீடியோவை ஃபார்வர்டு செய்பவர்களுக்கும் ஒரு கோரிக்கை. உங்களுக்கு கொரோனா வரும்போது இதே போல இரண்டு கிராம்பு வேண்டாம். 200 கிராம்பு எடுத்து வாயில் போட்டு மெல்லவும். ஆஸ்பத்திரிக்குப் போக வேண்டாம் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். நன்றிகள்.
இப்படிக்கு
வேக்ஸின் போட ஸ்லாட் கிடைக்காமல் தடுமாறும் தமிழன்.

ஞாயிறு, 16 மே, 2021

கோவிட் மரணங்களும், அது சார்ந்த நிதிச் சிந்தனைகளும் - எஸ்கா

இன்று மற்றொரு அதிர்ச்சி. மற்றுமொரு கோவிட் மரணம். நண்பனின் தம்பி.. 37 வயது இருக்கும். சென்ற வாரம் மூச்சுத் திணறல் இருக்கவே, ஆஸ்பத்திரியில் சேர்த்திருக்கிறார்கள். இன்று காலை 3 மணிக்கு இறந்திருக்கிறான். "தம்பி மூஞ்சிய சரியா பாக்கக்கூட முடியல, ஒரு மாலை போட முடியல, அரை மணி நேரம் கூட இருக்க முடியல, எடுத்துட்டுப் போய் எரிச்சிட்டாங்க" என்று நண்பன் போனில் குரல் கலக்கமாக ஒலித்தது.
கொரோனா எதிர்பார்க்கவே முடியாத எல்லோரையும் கொள்ளை கொண்டு போய்க் கொண்டிருக்கிறது. யாருமே பாதிப்புக்கு விதிவிலக்கில்லை. வேலை செய்யலாம் என்று எடுத்து வைத்த லேப்டாப்பை மூடி வைத்து விட்டு ரூமுக்குப் போய்விட்டேன். இரண்டு மணி நேரம் சாப்பிடத் தோன்றவில்லை. படுத்துப் புரண்டபடியே இருந்தேன். ஏதேதோ எண்ணங்கள். அதில் பணம் குறித்துத் தோன்றிய சிலவற்றை இங்கே சொல்லலாம் என எழுதுகிறேன்.நீங்கள் ஆணோ பெண்ணோ.. சம்பாதிக்கும் மனிதராக இருந்தால், நீங்கள் இறந்து விட்டால் (டச் உட் - நடக்கக் கூடாது) என்னென்ன செய்ய வேண்டும் என்று ஒரு நோட்டில் குறிப்பெழுதி வையுங்கள். ஆன்லைனில் புழங்குபவர் என்றால் ஒரு எக்ஸெல் ஃபைலோ, கூகிள் ஸ்ப்ரெட்ஷீட்டோ உருவாக்கி அதை உங்கள் மனைவி (அ) கணவன் (அ) உங்களை நம்பி உள்ள ஒருவரிடம் கொடுத்து வையுங்கள் (அ) மெயிலில் ஷேர் செய்யுங்கள்.
உங்கள் கடன் எவ்வளவு? யார் யாரிடம் நீங்கள் வாங்கியிருக்கிறீர்கள்? வண்டி வாகன லோன் உண்டெனில் அதன் அக்கவுண்டுகள், டாகுமெண்டுகள் விபரம், ஹவுஸிங் லோன் இருந்தால் அதன் விபரம், அந்த லோன் உங்கள் மறைவின் மேல் இன்ஷூரன்ஸ் செய்யப்பட்டிருக்கிறதா? என்று தேடி அதன் விபரம். சின்னக் கடன்கள், பெரிய கடன்கள் என வேறேதாவது இருந்தால் அவற்றின் அசல், வட்டி விபரங்களை குறித்து வையுங்கள். கடன் தந்தவர்களின் பெயர், போன் நம்பர்கள் உட்பட.
வருமான வகையில் - யார் யார் உங்களுக்கு எவ்வளவு தரவேண்டும்? அதன் விபரங்கள் பெயர், தொகை, அட்ரஸ், மொபைல் நம்பர் உட்பட. உங்கள் பேங்க் அக்கவுண்டுகள் என்னென்ன? அதன் பாஸ்புக்குகள் எங்குள்ளன? ஆன்லைன் அக்கவுண்ட் எனில் அதன் யூஸர் நேம், பாஸ்வேர்ட் என்ன? சொத்துகள் இருந்தால் அவை எங்கே உள்ளன? அதில் வாடகை வருமானம் வந்தால், அதன் விபரங்களைக் குறித்து வையுங்கள்.
இன்வெஸ்ட்மெண்டுகள் இருந்தால் அவை என்னென்ன? பிக்ஸட் டெபாஸிட்கள், ஷேர்கள், மியூச்சுவல் பண்டுகள் விபரங்கள், அவற்றின் டாகுமெண்ட்கள், ஆன்லைன் இன்வெஸ்ட்மெண்டாக இருந்தால் அந்த ஆப்-களின் யூஸர் நேம், பாஸ்வர்டுகள் என ஒன்று விடாமல் - அவை எல்லாவற்றையும் சுலபமாகப் புரியும் வகையில் குறித்து உங்கள் துணையிடம் கொடுத்து வையுங்கள்.
சொத்து முதல், இன்வெஸ்ட்மெண்ட்கள் வரை எல்லாவற்றிலும் மறக்காமல் (உங்களுக்குப் பிறகு யாருக்குப் பணம் போக வேண்டுமோ அவர் பெயரில்) நாமினேஷன் போட்டு வையுங்கள். உயில் கூட எழுதி வைக்கலாம் என்கிறார்கள். தேவை இருந்தால், உங்களால் இயன்றால் அதையும் செய்து வைக்கலாம். தவறில்லை.
தயவுசெய்து இன்ஷூரன்ஸ் செய்து வையுங்கள். நீங்கள் இறந்தால் (மட்டும்) பணம் வரும் வகையில் டிசைன் செய்யப் பட்டுள்ள ஒரு டெர்ம் பாலிஸி எடுத்து வையுங்கள். எல்ஐசி உசிதம். 25 இலட்சமோ, ஒரு கோடியோ உங்கள் வருமான வரம்புக்கு வாய்ப்புள்ள வகையில் எடுங்கள். ப்ரீமியமும் குறைவாக இருக்கும். உங்கள் இறப்புக்குப் பிறகு உங்கள் குடும்பம் சுதாரித்து நிற்க மூன்று நான்கு ஆண்டுகள் ஆகும் வரை அவர்கள் தடுமாறாமல் இருக்கும் வகையில் எடுத்து வையுங்கள்.
குறிப்பு - இவற்றில் பெரும்பாலானவற்றை நான் செய்து வைத்திருக்கிறேன்.
தயவு செய்து வேக்ஸின் போடுங்கள். அஜாக்கிரதை வேண்டாம். சுகாதாரத் துறை சொல்லும் அனைத்து தற்காப்புகளையும் மேற்கொள்ளுங்கள். அக்கம் பக்கத்தில் கொரோனா மரணம் நிகழ்ந்தால் மனதைக்கல்லாக்கிக்கொண்டு, தூரத்தில் நின்று அந்தக் குடும்பத்தின் சோகத்தை உணருங்கள். மனதில் ஒரு பயத்தை உருவாக்கிக் கொள்ளுங்கள். பிரச்சினையின் வீரியம் புரியும். மேற்சொன்னவற்றைச் செய்து வைத்துக் கொள்வீர்கள்.

If you love people, plz share this post.

வியாழன், 13 மே, 2021

சரிலேரு நீக்கெவ்வரு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுலு

10 மே 2020 அன்று ஃபேஸ்புக்கில் எழுதியது.

நீண்ட நாட்கள் இன்டஸ்ட்ரியில் இல்லாத வயதான ஹீரோயின் (சாந்தி..... விஜயசாந்தி) நடிக்க வருகிறார். கம் பேக் மூவி. அப்போ அவருக்கு ஒரு கெத்தான வேஷம் வேணும். கெத்தா சீன் வைக்கணும். என்ன வைக்கலாம்? காலேஜ் ப்ரொபஸர் வேஷம். சூப்பர்ல. அவர் தப்பு செய்கிற ஒரு ரவுடி காலேஜ் ஸ்டூடண்ட்டை அடிக்கிறார். தட்டிக் கேட்கிறார். வெய்ட், வெய்ட். இது எங்கயோ பார்த்த மாதிரி இருக்கே. அடப் பாவிகளா "அம்மா, நானா ஓ தமிழ் அம்மாயி" (எம்.குமரன்) அம்மா இன்ட்ரோ சீனை அப்படியே வைப்பீங்களாய்யா?

ஹீரோ ராணுவத்தில் இருப்பார். உலகமகா புத்திசாலி. பலசாலி எல்லாம் அவர்தானாம். தீவிரவாதியை சரியாக நடு நெற்றியில் தான் சுடுவாராம். மற்றவர்கள் யார் கண்ணுக்குமே தெரியாத (ஷூவுல சேறு) க்ளூவை இவர் மட்டுமே சரியாகக் கண்டுபிடிப்பாராம். டேய்...
ஒன் மேன் ஆர்மியாக பாகிஸ்தான் தீவிரவாதிகளைப் பறந்து பறந்து அடித்து, "எக்ஸ்ட்ரா ஃபோர்ஸ் வேணுமா?" என்று கேட்கும் உயரதிகாரிகளிடம் "ஒத்து ஸார், ஒச்சே ஜன்மாஷ்டமி நாடு, நேனே ஒச்சி, வால்லனி சம்ப்பி, கால்ச்சி, பூடுத சேஸி" என்று சந்திரமுகி ஜோதிகா டயலாக்கோடு எல்லாரையும் சுட்டுக் கொன்று, அதுவும் சரியாக நடு நெற்றியில், வெற்றி வாகை சூடி வருகிறார். நமக்குக் கொட்டாவி வருகிறது.
இராணுவ வீரர்களைப் பார்க்க செலிப்ரிட்டி வருகிறார் என்று நடிகை தமன்னாவை, தமன்னாவாகவே அழைத்து வந்து "வீரர்களே, என்ஜாய்" என்று தொப்புள் தெரிய ஒரு குத்தாட்டம். எந்த ஊர் ராணுவத்துலய்யா இதெல்லாம் நடக்குது? என்று வாய்விட்டுக் கேட்க வைக்கிறார்கள். இந்தக் கருமத்தையும் எத்தனையோ படத்தில் பார்த்தாச்சு. இன்னும் எத்தனை நூற்றாண்டுகளுக்கு இப்படி நம்ப முடியாத காட்சிகளும், பாடல்களும் வைப்பார்களோ?
இதுக்கெல்லாம் மேலே ஹைலைட். அடிபட்ட ராணுவ வீரனைப் பற்றி தகவல் சொன்னால் அவர்கள் குடும்பம் வருத்தப்படும், "அவங்க வீட்ல கல்யாணம் வச்சிருக்காங்க, அதனால் நம் சார்பாக யாராவது அவர்கள் வீட்டுக்குப் போய் 15 நாள் தங்கி அந்தக் கல்யாணத்தைக்கூட இருந்து நடத்திக்கொடுத்து விட்டு வரணும்" என்று மீட்டிங் போட்டு அதே பேரில் உள்ள ஹீரோவை அனுப்புவாங்களாம். "டேய் நீங்க ராணுவமா? இல்ல ப்ரோகிதர் டீமா? இவர் இல்லைன்னா அவரை அனுப்ப?"
ஹீரோவிடம் "உனக்குத்தான் குடும்பம் இல்லைல, அவங்களை குடும்பமா நெனச்சிக்கோ" என்று எக்ஸ்ட்ரா பிட்டு வேறு. அதுக்கும் மேல "உனக்குப் பிடிச்ச யாரையாவது நீ கூட்டிட்டுப் போகலாம்"னு ஒரு சலுகை. எதுக்கு? படம் பூரா ஹீரோ கூடவே வந்து மொக்கை போட்டு நம்ம கழுத்தை அறுக்கணும்ல, அதுக்கு.
பயங்கரமான வில்லன். பிரகாஷ் ராஜ். ரிட்டையர் ஆன தன் பள்ளி வாத்தியாரைக் கூட்டி வந்து நீ நீதி-ன்னு சொல்லிக் கொடுத்த எல்லாமே தப்பா இருக்குன்னு சொல்லி, செஞ்சிக் காட்டுவாராம் ஏய், ஏய்ன்னு கத்திக்கொண்டு. கத்திகள், கபடாக்கள், வெட்டிருவேன், குத்திருவேன் என்று 77 ரவுடிகள், டாட்டா சுமோ, அட்டைன்னு தெளிவாத் தெரியும் ஒரு கோட்டை செட்டு. இது போக இவருக்கே 55-60 வயசுத்தோற்றம். வாத்தியார் ரிட்டையர் ஆனவர்னா ஒரு 60 வயசு. அப்போ இவருக்கு 10 வயசு இருக்கும் போது அவரு 15 வயசுல பாடம் எடுத்தாரா? முடியல பாஸ். ஒரு லாஜிக் வேணாமா?
இப்படி வரிசையாக எதிர்பார்க்கிற சீன்ஸே வந்தால் கடுப்பாகுமா? ஆகாதா? அதிலும் எத்தனையோ படங்களில் பார்த்த காட்சிகள். அல்லது மரண மொக்கைக் காட்சிகள்.
அடுத்து ஹீரோயின் இன்ட்ரோ. முன்னே பின்னே தெரியாத டி.டி.ஆரிடம் ஃபேமிலி கதையைச் சொல்லி இன்ட்ரோ ஆகிறார்கள். அப்போ டிரெயினில் போகும்போதெல்லாம் ஒவ்வொரு டி.டி.ஆரிடமும் இப்படி இன்ட்ரோ கொடுத்துக் கொண்டே போவார்களோ?
பொதுவாக ஹீரோயின் தான் அரைலூஸாக இருக்கும். இங்கே அவங்க அம்மா (அவ்வளவு இளமையான 40 வயது ரசிகா எனும் சங்கீதா, 25/28 வயசுப் பொண்களுக்கு அம்மாவாம், அதுக்கு ஒரு சப்பை காரணமாம்), அப்பா, ரெண்டு அக்காஸ், ரெண்டு மாப்ளைஸ், புதுசா வரப்போகும் சம்பந்தி என்று எல்லாருமே அரைலூஸூகள். டி.டி.ஆரிடம் பெண்கள் எல்லாம் வழிவது, 45 வயதுள்ள அவர் போய் ஹீரோயின் அப்பாவை எதிர்த்துப் பேசுவாராம். யம்மா... பிரம்மானந்தம் செய்த பழைய பட மொக்கைகள்.
இத்தனை கருமமும் ஆஸ்கர் அவார்டு வாங்கத் தகுதியுள்ள நடிப்பு நாயகன் சவசவ எக்ஸ்ப்ரஷன் கிங், சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுலு நடித்த "சரிலேரு நீக்கெவ்வரு" படத்தின் முதல் 20 நிமிடங்களில். யாரோ முறைக்கிற மாதிரி இருந்தது. திரும்பிப் பார்த்தால் என் தங்கமணி. இதோ க்ளோஸ் பண்ணிடுறேன் என்று லாக் அவுட் செய்து விட்டேன்.
படம் சூப்பர் ஹிட் வேறயாம். வெளங்கும்.

திங்கள், 3 மே, 2021

பத்மஸ்ரீ விவேக்

பத்மஸ்ரீ விவேக் - மறைவின் போது அவருக்கு ஒரு ட்ரிப்யூட் வீடியோ போடலாம் என்று எங்க டீம் முடிவெடுத்தோம். அதற்காக நான் எழுதிய ஸ்க்ரிப்ட் இது.

அந்த வீடியோ லிங்க் இது
------------------------------------------------------------------------------
நகைச்சுவை நடிகர் திரு விவேக் அவர்களுடைய மறைவு திரைப்படத்துறைக்கு மட்டுமில்லீங்க நம்மளைப் போல சாதாரண மக்களுக்கும் ஒரு மிகப்பெரிய இழப்புதான் ஏன்னா நம்ம தினசரி வாழ்க்கையில நமக்கு இருக்குற ஆயிரம் பிரச்சனைகளையும் தாண்டி மனதுக்கு சந்தோஷம் தரக்கூடியவை சினிமாவுல வருகிற காமெடி காட்சிகள்தான் நமக்கு எவ்வளவு சோகங்கள் இருந்தாலும் நாம அதை மறந்து கொஞ்ச நேரம் சந்தோஷமாய் இருக்கக் காரணமே காமெடி நடிகர்கள் தான். அப்படி நம்ம தமிழ் சினிமால கிட்டத்தட்ட மூன்றாவது தலைமுறையாக நடிச்சிகிட்டு இருந்தவர் தான் நம்ம "சனங்களின் கலைஞன்" விவேக் அவர்கள்.வெறும் நகைச்சுவை நடிகர் என்பதையும் தாண்டி எத்தனையோ படங்களில் சிறப்பாக நடிச்சிருக்காரு அவர். பல விருதுகளையும் வாங்கியிருக்கிறார். இந்த வீடியோவில் நடிகர் விவேக் வாங்கிய விருதுகள் பற்றிதான் பாக்கப் போறோம்
நம்ம எல்லாரும் அவரை செல்லமா சின்னக் கலைவாணர் னு கூப்பிடுவோம் இல்லையா? அதற்குப் பொருத்தமா 2006-ம் ஆண்டு தமிழக அரசு திரைப்படத்துறைக்கு விவேக் அளித்த பங்களிப்பைப் பாராட்டி "கலைவாணர்" அவார்டையே வழங்கி அவரை கெளரவிச்சிருக்காங்க தெரியுமா?
அதுமட்டுமில்லாம சிறந்த நகைச்சுவை நடிகராக தமிழக அரசின் விருதை 5 முறை வாங்கியிருக்கார் அவர்.
முதன் முறையா 1999 ஆம் ஆண்டுல வெளிவந்த "உன்னருகே நானிருந்தால்" படத்துக்காக தமிழக அரசுடைய சிறந்த நகைச்சுவை நடிக்கருக்கான விருது அவருக்குக் கிடைச்சது. தொடர்ந்து, 2002 ல ரன் படத்துக்காகவும், அதுக்கு அடுத்த வருஷமே அதாவது 2003 ல வெளியான பார்த்திபன் கனவு படத்திற்காகவும் தொடர்ந்து அவார்டு வாங்கினார்.
பிறகு 2005 ல வந்த அந்நியன் படத்துக்காகவும், 2007 ல் நம்ம சூப்பர் ஸ்டார் ரஜினியோட சேந்து அவரு பட்டையைக் கிளப்பின "சிவாஜி" படத்துக்காகவும் அவருக்கு தமிழக அரசின் சிறந்த நகைச்சுவை நடிகருக்கான விருது வழங்கப்பட்டு கவுரவிக்கப்பட்டது.
தமிழக விருதுகள் மட்டும் இல்லாமல் தேசிய தமிழ் திரைப்பட விருதுகளில் கூட அவர் சிறந்த காமெடியன் விருதை நான்கு முறை வாங்கியிருக்கிறார். ரன், சாமி, குருவி, வெடி படங்களுக்காக அவருக்கு இந்த விருதுகள் கிடைத்தன.
சினிமாவுக்கு வழங்கப்படக்கூடிய பெரிய விருதுகள்ல ஒன்னான ஃபிலிம்பேர் விருதைக்கூட அவர் விட்டு வைக்கலங்க. அதையும் ஒரு முறை இரண்டு முறை இல்ல 4 முறை வாங்கியிருக்காரு விவேக்.. அதில மூணு வருடங்கள் வரிசையா அவரே வாங்கினார். ரன் படத்திற்க்காக 2002 லயும் அடுத்த வருடமே 2003 ல சாமி படத்துக்காகவும், 2004 ல் வந்த பேரழகன் படத்திற்காகவும் வாங்கினார். ஒரு சின்ன கேப் விட்டு, 2007ம் ஆண்டு சிவாஜி படத்துக்காக நான்காவது முறையா சிறந்த நகைச்சுவை நடிகர் விருதை பிலிம்பேர் கிட்ட இருந்து வாங்கினார் விவேக்
நகைச்சுவை நடிகராக மட்டுமில்லாம “படிக்காதவன்” படத்துக்காக சிறந்த துணை நடிகருக்கான பிலிம்பேர் விருதும் அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.
அது போக "குரு என் ஆளு" படத்துக்காக சிறந்த நகைச்சுவை நடிகருக்கான எடிசன் விருது, வேறு சில படங்களுக்காக ஏசியா நெட் திரைப்பட விருது, ஐடிஎஃப் ஏ விருதுகள் அப்படின்னு பல விருதுகளை வாங்கிக் குவிச்சிருக்காருங்க.
இவை எல்லாத்துக்கும் மேல 2009ஆம் ஆண்டு இந்திய அரசு விருதுகளில்ல மிகப் பெரிய விருதான பத்மஸ்ரீ அவார்டையும் வாங்கியிருக்கார். அதனால தான் அவருடைய படங்கள்ல பத்மஸ்ரீ விவேக் அப்படின்னு டைட்டில் கார்டுல போட்டிருப்பாங்க.
அப்பேர்ப்பட்ட ஒரு கலைஞனுடைய இழப்பு உண்மையிலேயே ஈடு கட்ட முடியாத ஒரு சோகம் தான். ஆனா அவர் நம்மை விட்டுப் போகலை. அவருடைய சினிமாக்கள் மூலமும், அவர் நட்டு வச்சிட்டுப் போன ஆயிரக்கணக்கான மரங்கள் மூலமாவும் நம்ம கூட வாழ்ந்து கிட்டே தான் இருப்பாரு.
மறுபடியும் இன்னோரு வீடியோவுல மீண்டும் சந்திக்கலாம். நன்றி.