ஞாயிறு, 16 மே, 2021

கோவிட் மரணங்களும், அது சார்ந்த நிதிச் சிந்தனைகளும் - எஸ்கா

இன்று மற்றொரு அதிர்ச்சி. மற்றுமொரு கோவிட் மரணம். நண்பனின் தம்பி.. 37 வயது இருக்கும். சென்ற வாரம் மூச்சுத் திணறல் இருக்கவே, ஆஸ்பத்திரியில் சேர்த்திருக்கிறார்கள். இன்று காலை 3 மணிக்கு இறந்திருக்கிறான். "தம்பி மூஞ்சிய சரியா பாக்கக்கூட முடியல, ஒரு மாலை போட முடியல, அரை மணி நேரம் கூட இருக்க முடியல, எடுத்துட்டுப் போய் எரிச்சிட்டாங்க" என்று நண்பன் போனில் குரல் கலக்கமாக ஒலித்தது.
கொரோனா எதிர்பார்க்கவே முடியாத எல்லோரையும் கொள்ளை கொண்டு போய்க் கொண்டிருக்கிறது. யாருமே பாதிப்புக்கு விதிவிலக்கில்லை. வேலை செய்யலாம் என்று எடுத்து வைத்த லேப்டாப்பை மூடி வைத்து விட்டு ரூமுக்குப் போய்விட்டேன். இரண்டு மணி நேரம் சாப்பிடத் தோன்றவில்லை. படுத்துப் புரண்டபடியே இருந்தேன். ஏதேதோ எண்ணங்கள். அதில் பணம் குறித்துத் தோன்றிய சிலவற்றை இங்கே சொல்லலாம் என எழுதுகிறேன்.



நீங்கள் ஆணோ பெண்ணோ.. சம்பாதிக்கும் மனிதராக இருந்தால், நீங்கள் இறந்து விட்டால் (டச் உட் - நடக்கக் கூடாது) என்னென்ன செய்ய வேண்டும் என்று ஒரு நோட்டில் குறிப்பெழுதி வையுங்கள். ஆன்லைனில் புழங்குபவர் என்றால் ஒரு எக்ஸெல் ஃபைலோ, கூகிள் ஸ்ப்ரெட்ஷீட்டோ உருவாக்கி அதை உங்கள் மனைவி (அ) கணவன் (அ) உங்களை நம்பி உள்ள ஒருவரிடம் கொடுத்து வையுங்கள் (அ) மெயிலில் ஷேர் செய்யுங்கள்.
உங்கள் கடன் எவ்வளவு? யார் யாரிடம் நீங்கள் வாங்கியிருக்கிறீர்கள்? வண்டி வாகன லோன் உண்டெனில் அதன் அக்கவுண்டுகள், டாகுமெண்டுகள் விபரம், ஹவுஸிங் லோன் இருந்தால் அதன் விபரம், அந்த லோன் உங்கள் மறைவின் மேல் இன்ஷூரன்ஸ் செய்யப்பட்டிருக்கிறதா? என்று தேடி அதன் விபரம். சின்னக் கடன்கள், பெரிய கடன்கள் என வேறேதாவது இருந்தால் அவற்றின் அசல், வட்டி விபரங்களை குறித்து வையுங்கள். கடன் தந்தவர்களின் பெயர், போன் நம்பர்கள் உட்பட.
வருமான வகையில் - யார் யார் உங்களுக்கு எவ்வளவு தரவேண்டும்? அதன் விபரங்கள் பெயர், தொகை, அட்ரஸ், மொபைல் நம்பர் உட்பட. உங்கள் பேங்க் அக்கவுண்டுகள் என்னென்ன? அதன் பாஸ்புக்குகள் எங்குள்ளன? ஆன்லைன் அக்கவுண்ட் எனில் அதன் யூஸர் நேம், பாஸ்வேர்ட் என்ன? சொத்துகள் இருந்தால் அவை எங்கே உள்ளன? அதில் வாடகை வருமானம் வந்தால், அதன் விபரங்களைக் குறித்து வையுங்கள்.
இன்வெஸ்ட்மெண்டுகள் இருந்தால் அவை என்னென்ன? பிக்ஸட் டெபாஸிட்கள், ஷேர்கள், மியூச்சுவல் பண்டுகள் விபரங்கள், அவற்றின் டாகுமெண்ட்கள், ஆன்லைன் இன்வெஸ்ட்மெண்டாக இருந்தால் அந்த ஆப்-களின் யூஸர் நேம், பாஸ்வர்டுகள் என ஒன்று விடாமல் - அவை எல்லாவற்றையும் சுலபமாகப் புரியும் வகையில் குறித்து உங்கள் துணையிடம் கொடுத்து வையுங்கள்.
சொத்து முதல், இன்வெஸ்ட்மெண்ட்கள் வரை எல்லாவற்றிலும் மறக்காமல் (உங்களுக்குப் பிறகு யாருக்குப் பணம் போக வேண்டுமோ அவர் பெயரில்) நாமினேஷன் போட்டு வையுங்கள். உயில் கூட எழுதி வைக்கலாம் என்கிறார்கள். தேவை இருந்தால், உங்களால் இயன்றால் அதையும் செய்து வைக்கலாம். தவறில்லை.
தயவுசெய்து இன்ஷூரன்ஸ் செய்து வையுங்கள். நீங்கள் இறந்தால் (மட்டும்) பணம் வரும் வகையில் டிசைன் செய்யப் பட்டுள்ள ஒரு டெர்ம் பாலிஸி எடுத்து வையுங்கள். எல்ஐசி உசிதம். 25 இலட்சமோ, ஒரு கோடியோ உங்கள் வருமான வரம்புக்கு வாய்ப்புள்ள வகையில் எடுங்கள். ப்ரீமியமும் குறைவாக இருக்கும். உங்கள் இறப்புக்குப் பிறகு உங்கள் குடும்பம் சுதாரித்து நிற்க மூன்று நான்கு ஆண்டுகள் ஆகும் வரை அவர்கள் தடுமாறாமல் இருக்கும் வகையில் எடுத்து வையுங்கள்.
குறிப்பு - இவற்றில் பெரும்பாலானவற்றை நான் செய்து வைத்திருக்கிறேன்.
தயவு செய்து வேக்ஸின் போடுங்கள். அஜாக்கிரதை வேண்டாம். சுகாதாரத் துறை சொல்லும் அனைத்து தற்காப்புகளையும் மேற்கொள்ளுங்கள். அக்கம் பக்கத்தில் கொரோனா மரணம் நிகழ்ந்தால் மனதைக்கல்லாக்கிக்கொண்டு, தூரத்தில் நின்று அந்தக் குடும்பத்தின் சோகத்தை உணருங்கள். மனதில் ஒரு பயத்தை உருவாக்கிக் கொள்ளுங்கள். பிரச்சினையின் வீரியம் புரியும். மேற்சொன்னவற்றைச் செய்து வைத்துக் கொள்வீர்கள்.

If you love people, plz share this post.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக