சுஜாதா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சுஜாதா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 26 டிசம்பர், 2010

சுஜாதா எழுதிய // "ரிசப்ஷன் 2010" //

போன பதிவில் வெளியிட்டிருந்த சுஜாதா பற்றிய குறிப்பை படித்து விட்டு நண்பர்கள் நிறைய பேர் அந்த // "ரிசப்ஷன் 2010" // கதையின் லிங்க்கை அனுப்புங்கள் என்று மெயிலியுள்ளார்கள். சிலர் அந்தக் கதையை கட், காபி, பேஸ்ட் செய்து மெயில் அனுப்புமாறு மெயிலியிருந்தார்கள்.

அந்தக் கதைக்கு என்னிடம் லிங்க் கிடையாது. விகனுக்கு ஆன்லைனில் பணம் கட்டி சப்ஸ்க்ரிப்ஷன் எடுத்திருக்கிறேன். வேண்டுமானால் கட் காபி பேஸ்ட் செய்து மெயில் அனுப்புகிறேன் என்று சொல்லியிருந்தேன். சொன்னபடி சிலருக்கும் அனுப்பியாயிற்று. இன்னும் சிலர் நீ அதை மெயில் அனுப்பாதே, ஆபீஸில் ஜி.மெயில் ப்ளாக் செய்திருக்கிறார்கள். பார்க்க முடியாது, பேசாமல் உன் பதிவில் போட்டுவிடு என்று சொன்னதனால் அவர்கள் அனைவரின் அன்புக்கிணங்கி தானைத் தலைவர், எழுத்துலகத்தின் வாத்தியார் சுஜாதா அவர்கள் எழுதிய // "ரிசப்ஷன் 2010" // கதையை இங்கே வெளியிடுகிறேன்.

முதலில் கொஞ்சம் பயமாகவும் இருந்தது. இதை இங்கே வெளியிடலாமா? என்று. அப்புறம், இலட்சக் கணக்கான பேர் படிக்கும் விகடனே அதை வெளியிட்டு விட்ட பிறகு சிலநூறு பேர் படிக்கும் என் ப்ளாக்கில் வெளியிட்டால் என்ன? என்றே தோன்றியது.

ஸோ................................. இதோ

------------------------------------------------------

ரிசப்ஷன் 2010

சுஜாதா

ஆறரைக்கு ரிசப்ஷன் என்று ராமலிங்கத்தின் வி-மெயில் அறி வித்தது. ஏழரைக்கு ஏர்போர்ட்டில் ஒரு

ஐகான் இருந்ததால், ஆறு பதினாலு நாற்பத்தேழுக்கே புறப்பட்டுவிட்டேன். ஹாலந்தில் இருந்து ட்யுலிப் மலர்க்கொத்து காரில் காத்திருந்தது. ராமலிங்கத் துக்குப் பிடித்த பானமான 'மே 22’ ஒரு காஸ்க் கொள்ளை விலை கொடுத்து வாங்கி வைத்திருந்தேன். கல்யாணத்துக்குப் பொருந்தாத பரிசுப்பொருளோ என்று யோசித்தேன். வேறு என்ன கொடுப்பது?

எல்லாப் புத்தகங்களும் வலையில் உள்ளன. ராஜேஸ்வரியருகில் பார்க்கிங் இருப்பதாக ஜிபிஎஸ் சொன்னது. மாடி எண்ணை பைக் கணினி மனப்பாடம் செய்துகொண்டதற்கு அறிகுறியாக பீப்பியது. லிஃப்ட்டில் இறங்கி க-மண்டபத்தில் நுழையும்போது Aruna weds Ramalingam என்று பாலிமர் எழுத்துக்கள் பொருத்திக் கொண்டிருந்தார்கள். சீக்கிரம் வந்துவிட்டதால் மெள்ள நடந் தேன்.

மணமக்களின் மேடை காலியாக இருந்தது. ஆர்க்கெஸ்ட்ரா ஸின்தரானைச் சுருதி பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

ரிசப்ஷன் பெண்கள் நீல ரோஜா மலர்களையும், லோ காலரி கல்கண்டையும் தட்டில் அமைத்துக் கொண்டிருந்தார்கள். அதில் ஒருத்தி குஜராத்தி உடையில் சூப்பராக இருந்தாள். பழக்கதோஷத்தில் ''நீங்க ராமலிங்கத்துக்கு உறவா?'' என்று கேட்டேன்.



''இல்லைங்க... நாங்க கன்ட்ரோல்ல டைனமிக்ஸ் ஹாஸ்டர்ஸ்ங்க..!''

போச்சுடா, ரோபாட்!

இப்போதெல்லாம் மனிதர்க ளுக்கும் இயந்திரங்களுக்கும் வேறுபாடே இல்லை. கன்னக்குழி கூட அப்படியே செய்கிறார்கள். உரித்துப் பார்த்தால்தான், அந்தரங்க முடி அக்ரிலிக் என்று தெரியும். ஒருமாதிரி லூபாயில் வாசனை வரும்.

அந்தப் பெண் 'களுக்’ என்று சிரித்தாள். அதைப் பார்த்தால் கவியரசு கணிதாசன் சொன்னது போல, ''ஏமாந்த கவிஞர்கள் எழுநூறு கவிதை செய்வர்!''

ஏகதேசம் காலியாக இருந்த ஹாலில் போய் வீற்றேன்.

''ஹாய்ஸ்ஸ்ஸத்யா... என்ன இவ்வளவு சீக்கிரம்...?'' என்றபடி வந்தான் ராமலிங்கம். கருநீல சூட் அணிந்து, ஸ்ப்ரே தெளித்து வாரி யிருந்தான். கல்யாணத்துக்கென்று முடியை வைக்கோல் நிறத்துக்கு மாற்றியிருந்தான். மூக்கைத் திருத் தியிருந்தான்.

''எங்கே, வாழ்க்கைப் படகில் உன்னோடு துடுப்புப் போடப் போகிற அருணா..?''

''அருணாவுக்குத்தான் காத்துக் கிட்டிருக்கேன். கமான்... வாழ்க் கைப் படகு, துடுப்பு... என்னடா 'ரொமான்டிக்’காயிட்டிருக்கே..? நீயும் கல்யாணம் பண்ணிக்க ணுமா..? அம்மாகிட்டே சொல் லவா?''

''ச்சே! 'ராமலிங்கம் கல்யாணத்துக்கு ஒப்புக்கிட்டானா’னு அம்மா ஆச்சரியப்பட்டுப் போயிட்டா. முதல்ல எப்ப சந்திச்சே..?''

''போன வாரம் நம்ம வெங்கி கல்யாணத்துல... லவ் அட் ஃபர்ஸ்ட் மில்லி செகண்ட்! ஒரே ரசனை, ஒரே சாப்பாடு, ஒரே கணிபாஷை எல்லாம். பிடித்த கவிஞர்கள்கூட ஒரே ஒரே... நூறாண்டு காலம் ப்ராஸ்தெட்டிக் வாழ்க்கை வாழ உத்தேசம்..! எக்ஸ்க்யூஸ் மி, அலங்காரமெல்லாம் ஆயிடுச்சுனு நினைக்கிறேன். நீ நேர்ல வர முடிஞ்சதுக்குச் சந்தோஷம். எல்லோரும் வி-மெயில்லயே நழுவறாங்க. ஒரு நிமிஷம்... அழைச்சுட்டு வந்துர்றேன்...''

மெள்ள மெள்ளக் கூட்டம் சேர ஆரம்பிக்க, ராமலிங்கம் அதில் மறைந்தான். வாசலை நோக்கி விரைந்தான். நான் அருணாவைப் பார்க்க ஆவலாகக் காத்திருந்தேன். ராமலிங்கத்தின் மனதைக் கவர்வது அத்தனை எளிதல்ல. எல்லாவற்றிலும் வித்தியாசமானவன். கணிமேதை. மேடைக்குச் செல்லும் முன், ஒரு முறை தெரிந்தான்.

கடிகாரம் 'ஆறு நாற்பது முப் பது’ என்றது. 'காலம் பொன்னானது’ என்று போதனை வேறு.

''ஷட் அப்..!'' என்றேன்.

''ஏர்போர்ட்டில் ஏழரைக்கு இருந்தாகணும். ப்ளேன் லேட்டா வதில்லை. என் கடமை சொல்ல வேண்டியது...''

''வர வர உனக்குப் பிரசங்கம் அதிகமாகிவிட்டது. ஒரு நாள் உன் ஆக்ஸிலியரி மெமோரியை நோண்டிவிடப்போகிறேன்...''

''நஷ்டம் உனக்குத்தான்; நானூறு ஷா. இன்னும் தவணையே முடியவில்லை'' என்றது.

ராமலிங்கம் நண்பர்கள் சூழ வந்தான். அவன் பின்னால் மறைந்திருந்த அருணாவைப் பார்த்தேன். கண்ணுக்கு மை தீட்டி, கன்னத்தில் சிவப்பு ஒத்தி, ஒரு வாட்டசாட்ட தேவதை போல...

வெயிட் எ மினிட்!

''அருணா... சொன்னேன் பார்த்தியா, இது என் அருமை நண்பன் சத்யா...''

நெருங்கினேன்.

''ஹாய், ஐம் அருணாசலம்!''

அவன் கைகுலுக்கல் மென்மையாக இருந்தது.
------------------------------------------------------

எப்படி? திகீரென்று இல்லை?

(பத்து வருடம் முன்னால் வெளியான கதை இது. இன்டர்நெட் கிடையாது. ஐ.டி இன்டஸ்ட்ரி கிடையாது. பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய் ஊழல் கிடையாது. சாமியார் சரச சல்லாபங்கள் கிடையாது. ஓரினச்சேர்க்கையாளர் திருமணம் செய்து கொள்ளலாமா? வேண்டாமா? என்ற சர்ச்சைகள் கிடையாது. ஊர் ஓரளவுக்கு கொஞ்சம் அமைதியாகவும், ஒழுக்கமா(?)வும் இருந்த காலகட்டம் - அந்தக்கால கட்டத்தை வைத்து கதையை அணுகவும்)

------------------------------------------------------

படிச்சாச்சா.........?

அப்புறம்... இன்ட்லி லோகோ இருக்கா பக்கத்துல....?

தமிழ்மணம் லோகோ இருக்கா மேல....?

புடிச்சிருந்தா ஓட்டுப்போடுங்க...

புடிக்கலன்னாலும் ஓட்டுப்போடுங்க...
--------------------------------------

சனி, 25 டிசம்பர், 2010

கலவை சாதம் (26/12/2010) மற்றும் சுஜாதா


விகடன் பொக்கிஷம் பகுதியில் தலைவர் சுஜாதா பத்து வருடங்களுக்கு முன்பு எழுதியிருந்த "ரிசப்ஷன் 2010" என்ற கதையை படிக்க நேர்ந்தது. கே (GAY) மேரேஜ் பற்றிய ஒரு கதை. கிட்டத்தட்ட இன்றைய நிலைக்கு ஒட்டி வந்திருந்தது. ஒரு ஆணும் ஆணும் திருமணம் செய்து கொள்வதாகக் கதை. ஆனால் அது முழுமையாய் நடக்க இன்னும் இருபது வருடங்களேனும் ஆகும்.

"உண்மைக்கு மிக நெருக்கமாய் கதை எழுதுவது என்பது கத்திமேல் நடப்பது போன்றது" என்று ஒருமுறை சுஜாதாவே சொல்லியிருந்தார். "அது உடனே உண்மை வாழக்கை வெளியில் நடந்து விடுவதற்கான சாத்தியக் கூறுகள் அதிகம்" என்று சொன்னார். ஒரு தேசியத் தலைவரின் படுகொலை பற்றிய சுஜாதாவின் கதை (பெயர் ஞாபகமில்லை) பிற்காலத்தில் ராஜீவ் காந்தி படுகொலை விஷயத்தில் நடந்தேறியது. அவரது விஞ்ஞானச் சிறுகதைகள் தொகுப்பில் உள்ள "திமலா" எனும் கதை, திருமலை திருப்பதிக்கு அனுமதி வாங்கி சுவாமி கும்பிடப்போகும் ஒரு ஹைடெக் தம்பதி பற்றிய கதை. அதுவும் இன்றைய காலகட்டத்திற்கு கிட்டத்தட்ட எழுபது சதம் நடந்தேறி விட்டது. திருமலாவுக்குச் செல்ல வேண்டும் என்றால் முன் அனுமதி தேவையாகி விட்டது.

கருப்பு, சிவப்பு, வெளுப்பு தொடர் வந்த போது குமுதத்திற்கும் சுஜாதாவிற்கும் எதிராக நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டங்களை பலரும் அறிவார்கள். அதன் பின்னர் அது பெயர் மாற்றப்பட்டு ரத்தம் ஒரே நிறம் என்று வெளியானதும் சமீபத்தில் உயிர்மையில் தனிப்பதிப்பு கண்டதும் வரலாறு. "ஜில்லு" கதை வந்தால் போச்சு. அது இந்தியாவிற்கும், பாகிஸ்தானிற்கும் நடைபெறும் அணு ஆயுதப் போர் பற்றிய கதை. (கிட்டத்தட்ட அவர் வர்ணித்துள்ள கதைக் காட்சிகள் டாம் க்ருஸ் நடிப்பில் இயக்குனர் ஸ்பீல்பெர்க்கின் War of the worlds மற்றும் வில் ஸ்மித்தின் I am legend திரைப்படத்திலும் காட்சிகளாக விரிகின்றன.

"ரிசப்ஷன் 2010" கதைக்கு ஆன்லைனில் அருமையான சில பின்னூட்டங்களும் வந்திருந்தன வாசகர்களிடம் இருந்து. சில சாம்பிள்கள் இதோ............... 1. தீர்க்கதரிசி. என்ன, 2020ல் இதில் உள்ள எல்லாமே நடந்து விடும்(.இயல்பாக) 2. அதுதானே பார்த்தேன் சுஜாதாவை தவிர வேரு யாரால் முடியும் மிக நன்ரு 3. தலைவர் தலைவர் தான்...'gay marriage; பத்தி 10 வருஷம் முன்னாடியே....ஹ்ம்ம் 4. சுஜாதா இதையும் முன்னேயே எழுதிவிட்டாரா.. அபாரம்!

எப்படி?? சுஜாதா சுஜாதா தான் இல்லையா?
------------------------------------------------------------
ஷங்கர் இயக்கத்தில் தயாராகப்போகும் "3 இடியட்ஸ்" தமிழ் ரீ-மேக்கில் சூர்யா நடிப்பது உறுதியாகி இருக்கிறதாம். இந்த கேரக்டருக்கு முதலில் பேசப்பட்டிருந்தவர் நமது டாகுடர் என்பது தமிழ் கூறும் நல்லுலகத்தில் டிவிடி, திருட்டு விசிடி பார்க்கும் அனைவர் வரை தெரிந்த ஒரு ரகசியம். முதலில் விஜய் நடிப்பதாக இருந்து, பிறகு சூர்யா நடித்த 'அயன்’, 'சிங்கம்’ படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட் என்ற சென்ட்டிமென்ட்டில் "3 இடியட்ஸு"ம் ஹிட்தான் என்று இப்போதே குஷியில் இருக்கிறதாம் சூர்யா தரப்பு. அது தவிரவும் தெலுங்கு பதிப்பிலும் மகேஷ் பாபுவுக்குப் பதில் சூர்யாவேதான் இடியட்டாம்.
------------------------------------------------------------

ஏதோ யோசித்துக் கொண்டிருக்கும் போது ஒரு செமை மேட்டர் சிக்கியது. ராவணன் படத்தைப் பாருங்களேன். ப்ருத்விராஜ், ஐஸ்வர்யா ராய், விக்ரம் காம்பினேஷன் தான் படத்தின் அடிநாதத்தை நகர்த்தும் கதாபாத்திர முடிச்சு. அவர்களது வயதைப்பாருங்களேன். முறையே 28 (ப்ருத்விராஜ்), 37 (ஐஸ்வர்யா ராய்), 46 (விக்ரம் ). கிட்டத்தட்ட இந்த வரிசையில் ஒவ்வொருவருக்கும் ஒன்பது வயது வித்தியாசம். விக்ரமுக்கு காலாகாலத்தில் திருமணம் ஆகியிருந்து சீக்கரமே பையன் பிறந்திருந்தால் அவனுக்கு ப்ருத்விராஜ் வயது ஆகியிருக்கும் இல்ல.......................?
------------------------------------------------------------

படிச்சாச்சா.........?

அப்புறம்... இன்ட்லி லோகோ இருக்கா பக்கத்துல....?

தமிழ்மணம் லோகோ இருக்கா மேல....?

புடிச்சிருந்தா ஓட்டுப்போடுங்க...

புடிக்கலன்னாலும் ஓட்டுப்போடுங்க...
--------------------------------------

ஞாயிறு, 14 நவம்பர், 2010

ஆனந்த விகடன் - "ஹிஹிக்கூ"

சுமார் மூன்று வருடங்கள் முன்பு ஆனந்த விகடன் (சுஜாதா சொன்ன எட்கூ போல) "ஹிஹிக்கூ" என்ற பெயரில் ஒரு போட்டியை நடத்தியது. தேர்வு செய்யப்பட்ட சுமார் பத்துப்பத்து "ஹிஹிக்கூ"க்களை வாராவாரம் வெளியிட்டது விகடன். பல வாரங்கள் தொடர்ந்து வெளியான "ஹிஹிக்கூ"க்களில் அடியேனுடையதும் ஒன்று.

(அப்போதைய) ஹாட் நியூஸ்களை வைத்து "ஹிஹிக்கூ" எழுதப்பட்டிருக்க வேண்டும் என்பது விதி. ஆகையால் இதைப்படிக்கும் போது மூன்று வருஷம் பின்னோக்கிப்போக ஜம்போ கொசுவத்தி சுத்திக்கொள்ளுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

விகடனில் வெளியான என்னுடைய "ஹிஹிக்கூ" இது

இரயில்வேயை நம்பர் ஒன்
ஆக்கிட்டாரு லாலு!
இதே போல ஹைவேயை
ஆக்குவாரா நம்ம பாலு!

மற்றவையெல்லாம் போட்டிக்காக எழுதி அனுப்பப்பட்டவை. (எத்தனை எழுதி அனுப்பினா ஒண்ணே ஒண்ணு பப்ளிஷ் ஆகுது பாருங்க).

-----------------------------------------

எடுப்பாவே இல்லையாம்
புது ஜேம்ஸ் பாண்டு
எப்படியோ போகட்டும்
உனக்கு ஏன் காண்டு?

-----------------------------------------

சர்ச்சைக்கு நடுவுல
வளருதுங்க "பெரியார்"
சர்ச்சையை வளர்க்குதுங்க
முல்லைப்பெரியார்

-----------------------------------------

விகடன்ல போடறாங்க
வாராவாரம் ஹிஹிக்கூ
சுஜாதா சொன்னது போல
இதுதானா எட்கூ?

-----------------------------------------

கோவலன் ஸ்லிப் ஆனது
சிலப்பதிகாரம்
நம்ம விஷாலு ஸ்லிப் ஆனது
சிவப்பதிகாரம்

-----------------------------------------

டெல்லியில் போடுறாங்க
கடைகளுக்குப் பூட்டு!
கோர்ட்டுக்குக் கேட்குதா
அவங்க வயித்துப் பாட்டு!

-----------------------------------------

இசையால நிறையுதுங்க
விகடன் புக்ஸூ....
போட ஆரம்பிச்சுட்டாங்க
சீஸன் சிப்ஸூ

-----------------------------------------

ஊரெல்லாம் கச்சேரி
டிசம்பர் மாசம்....
விகடன்லாம் வீசுது
மியூஸிக் வாசம்...

-----------------------------------------

அஞ்சு வருஷத்துக்கு ஒருமுறை
மாறுதுங்க ஆட்சி!
கேஸூலேர்ந்து தப்பிக்க
தாவுறாங்க பல கட்சி!

-----------------------------------------

ஆளில்லாத கேட்டு!
பாத்து வண்டியை ஓட்டு!
பாக்காம போனதுனால
பதினேழு பேரு அவுட்டு!

-----------------------------------------

தோனி தம்பிக்கு பிடிச்சது
படுகோன் பொண்ணு தீபிகா...
தோடா இங்கயும் பாரு...
ஸ்குவாஷ் ஏஞ்சல் தீபிகா...

-----------------------------------------

பள்ளிக்கூட கிணத்துல
+2 பொண்ணு பிணம்.
கொலைகாரப்பாவிக்கு
கல்லாய்ப்போச்சா மனம்?

-----------------------------------------

வரலாறு வெற்றியால
அஜீத்துக்கு ரிப்பீட்டு!
மத்தவங்க ஆகுறாங்க
அவரப்பாத்து அப்பீட்டு!

-----------------------------------------

பொங்கலுக்கு அடிப்பாங்க
சுவத்துக்கு சாந்து!
பொளந்து கட்றாருங்க
புது விஜயகாந்து!

-----------------------------------------

டென்னிஸூ ரேட்டிங்குல
சறுக்குதுங்க சான்யா!
ஸ்குவாஷ் போட்டி ரேட்டிங்ுகல
சாதிக்குமா சாய்னா!

-----------------------------------------

மெட்ராஸ்-ஐ பரவுதுன்னு
சொல்றாங்கப்பா நியூஸூ!
கலைஞர் போலக் கண்ணாடி
பண்ணுங்கப்பா யூஸூ!

-----------------------------------------
படிச்சாச்சா.........?

அப்புறம்... இன்ட்லி லோகோ இருக்கா பக்கத்துல....?

தமிழ்மணம் லோகோ இருக்கா மேல....?

புடிச்சிருந்தா ஓட்டுப்போடுங்க...

புடிக்கலன்னாலும் ஓட்டுப்போடுங்க...

நீங்க (ஓட்டு) போட்டா மட்டும் போதும்.... போட்டா மட்டும் போதும்....

எலைக்கு ஏழ்நூறு ரூவா செலவு பண்ணிருக்கோம்ல....
-----------------------------------------

சனி, 2 அக்டோபர், 2010

எந்திரன் - சில (பல) கேள்விகள் (ஐ... ஜாலி... ஜாலி... எந்திரன் பாத்தாச்சே.....)

வெறும் மூன்று ரூபாய் தரை டிக்கெட்டிலேயே சங்கீத்தில் வாரா வாரம் இங்கிலீஷ் படம் பார்த்து வளர்ந்தவன் நான். சுப்ரகீத்தில் ஆறு ரூபாய். அப்புறம் தரை டிக்கெட்டை பத்து ரூபாய் ஆக்கினார் கலைஞர். ஆக படம் பார்க்க பத்து ரூபாய் போதும். ஆனால் நான் அதிக பட்சம் செலவு செய்தது என்று பார்த்தால் "மேட்ரிக்ஸ் ரீலோடட்"-கு 17 ரூபாய் ஃபர்ஸ்ட் கிளாஸ், “கிளாடியேட்டர்” 20 ரூபாய், “மைட்டி ஜோ யங்”-குக்கு 22 ரூபாய் பால்கனி, பிறகு டிக்கெட் விலை ஏறிய பின் “கஸீனோ ராயல்”-கு 30 ரூபாய், “க்வான்டம் ஆஃப் சோலேஸ்” 35 ரூபாய், அப்புறம் சென்னையில் காசு கொடுத்து பார்த்த “போக்கிரி” 40 ரூபாய், ஆபீஸில் தவிர்க்க முடியாமல் டீமாகப்போன “சரோஜா” 85 ரூபாய்.

ஆசைப்பட்டு பார்த்த ஒரே படமான அவதார் 120 ரூபாய் (நூற்றியிருபது ரூபாய் - த்ரீ டி கண்ணாடி உட்பட சத்யம் தியேட்டரில் - அது விதிவிலக்கு). அது தவிர என் வாழ்க்கையிலேயே முதன் முறையாக ஒரு படத்துக்கு நூத்தி ஐந்து ரூபாய் கொடுத்து பார்த்திருக்கிறேன் என்றால் அது எந்திரனுக்குத்தான். அதே போல் முதல் நாளிலேயே பார்த்த ஒரே தமிழ் படமும் இது தான். மத்ததெல்லாம் நிதானமாக ஒரு மாதம் கழித்து பார்த்தாலே போதும். ஆனால் தமிழ்நாட்டின் இண்டு, இடுக்கு, மூலை, முடுக்கு மற்றும் பிட்டு படம் போடும் தியேட்டர்களில் எல்லாம் எந்திரன் மட்டுமே ஓடினால் டிக்கெட் ஈஸியாகக் கிடைக்காதா என்ன?

அதுவும் நைட் ஷோ இரண்டு டிக்கெட். எனக்கொன்று. எங்க நைனாவுக்கு ஒன்று. ப்ளஸ் ஒரு முறுக்கு பாக்கெட். இரண்டு பாப்கார்ன். மூன்று ஸ்பிரைட். இரண்டு ஸ்வீட் கார்ன். ஒரு வாட்டர் பாட்டில். (நைனாவை பக்கத்தில் வைத்துக்கொண்டே கத்தித் தீர்த்ததில் கட்டிப்போன தொண்டையை சரி செய்ய) ஒரு ஸ்ட்ரெப்சில்ஸ். ஆக மொத்தம் எந்திரனுக்காக இந்த மாத குடும்பச்செலவில் கை வைத்தது ரூபாய் முன்னூற்று முப்பத்து இரண்டு. அதுவும் சேலம் என்ற ஊரில் ஒரு சாதாரண ஒதுக்குப்புறமான தியேட்டரில், இதையே சத்யத்தில் பார்த்துத் தொலைத்திருந்தால் ஆயிரத்தைநூறு ரூபாய் மொய்யாகி இருக்கும். (நான் போயிருக்கவே மாட்டேன். அது வேற விஷயம்..)

அப்புறம் நேற்று எந்திரன் பார்த்து விட்டு இன்றைக்கு வேலைக்குப்போகாமல் எங்க நைனா கட்டடித்ததில் மார்ஜினல் லாஸ் தனி. அதையும் கூட்டிக் கொள்ளுங்கள். இனிமேல் அவரையெல்லாம் கூட்டிக்கொண்டு போகக்கூடாது என்று தோன்றினாலும் அந்த மனுஷனுக்கு ரஜினியும், ராமராஜனும் ரொம்பப்பிடிக்கும் என்பதால் மன்னித்து விட்டு விட்டேன். பாட்ஷாவும், கரகாட்டக்காரனும் அவரது ஃபேவரைட். டிவியில் அந்தப்படங்கள் போடும் அன்றைக்கு வேலைக்கு லீவு போட்டு விடுவார்.

சரி. சொந்தக் கதை எதுக்கு? போதும். எந்திரன் படம் பற்றிப்பேசுவோம். பயப்படாதீர்கள். நான் விமர்சனம் எழுதவில்லை. நெட்டில் நோண்டும் பலரும் படம் பார்த்திருப்பீர்கள் அல்லது உங்களுக்குக் கதை தெரிந்திருக்கும். அப்படியும் தெரியாதவர்கள் "எந்திரன்" என கூகுளிட்டோ, தமிழ்மணத்திலோ, இன்ட்லியிலோ கதையைப்படித்து விட்டு வாருங்கள். இரண்டே நாள்தான் ஆகியிருக்கிறது. ஆனால் கிட்டத்தட்ட அனைத்து பதிவர்களும் "எந்திரன்" பற்றி பதிவு போட்டுள்ளார்கள். நாமளும் எதையாவது போடுவோம் என்று தோன்றியது...

பதிவாகப்போடுவதற்குப் பதில் கேள்வியாகக்கேட்டால்? (போட்ட காசுக்கு நாலு கேள்வியாவது கேட்கணும் இல்லையா?) இந்தக்கேள்விகளை பலரும் கேட்கிறார்கள்.. கேட்காவிட்டாலும் பலர் மனதில் இந்தக் கேள்விகள் உட்கார்ந்திருக்கின்றன.. காப்பி என்று சொல்லாதீர்கள். ரெடி.. விடு ஜூட்.. கதையை படித்துத் தெரிந்து கொண்டு விட்டு இந்தக் கேள்விகளை படியுங்கள்..

இதோ கேள்விகள்...

21-ம் நூற்றாண்டின் இம்மாம் பெரிய அச்சீவ்மெண்டைச் செய்யும் விஞ்ஞானிக்கு இருக்கும் உதவியாளர்கள் இவ்வளவு மொக்கையாக இருப்பார்களா?

டிரெயினில் முப்பது நாற்பது பேரை புரட்டியெடுக்கும் ஒருவரை போலீஸ் தேடவே தேடாதா?

நாடே பரபரக்கும் ஒரு பெரிய வழக்கில் ஒரு ரோபோவின் சாட்சியை நீதிமன்றம் ஏற்றுக்கொள்ளுமா?

இந்தியாவில் எந்தக் கேஸ் ஒரே நாளில் முடிகிறது?

ரோபோவை டிஸ்மேன்டில் பண்ணிடுங்க - என்று சிம்பிளாகச் சொன்னால் போதுமா? அதை உருவாக்கிய ஃபார்முலா வசீகரனின் மண்டையிலும் ஃபைலிலும் இருக்காதா? அதை என்ன செய்வதாம்?

அழிவு செய்யும் ரோபோவின் ஓனரான விஞ்ஞானியை அரெஸ்ட் செய்யாமல் அவரையே புராஜெக்டுக்கு தலைவராக்கும் மாங்கா போலீஸ் எந்த ஊரில் இருக்கிறது?

ரோபோவை உருவாக்கவே பத்து வருட ஆராய்ச்சி தேவைப்பட்டால், அதற்கு உணர்ச்சிகள் கொடுக்க சும்மா போர்டில் பாடம் நடத்தினால் போதுமா?

சர்வ வல்லமை உள்ள ஒரு ரோபோ தயாரானால் அந்த ஃபார்முலாவைக் கவர சர்வதேசத் தீவிரவாதிகளோ, காங்க்லோமெரேட் கம்பெனிகளோ முயற்சிக்க மாட்டார்களா?

நூற்றுக்கணக்கான போலீஸையும், ராணுவத்தையும், பொது மக்களையும் கொலை செய்யும் ரோபோவை தயாரித்த ஒரு விஞ்ஞானியை மனித உரிமை ஆர்வலர்கள் சும்மா விட்டு விடுவார்களா?
ரோபோவைத் துரத்தும் போலீஸ்காரர்கள் ஐஸ்வர்யா ராய் காருக்குள் இருக்கிறார் என்பதைப்பார்க்காமலே சுடுவார்களா?

ராணுவத்திற்கு கொடுக்க ரோபோவை உருவாக்கும் ஒரு விஞ்ஞானிக்கு அதற்கான கமாண்டு-களை யார் வேண்டுமானாலும் மாற்றலாம் என்ற சின்ன விஷயம் தெரியாதா?

பத்து வருடம் உழைத்து தயாரித்த ஒரு ரோபோவை "நியூரோ சிப்"பை டெமாலிஷ் செய்யாமல் சும்மா தூக்கி குப்பையில் போடுவாரா ஒரு விஞ்ஞானி?

ரஜினியே இரண்டு அல்லக்கை அரைகுறை விஞ்ஞானிகளை வைத்திருக்கும் போது அயல்நாட்டு தீவிரவாதிகளுக்கு ரோபோ சப்ளை செய்யும் அளவுக்கு பெரியாளான அவரது விஞ்ஞானி புரபஸர் ஆள் பலம் இல்லாமல் தனியாகச் சுற்றுவாரா?

ஒரு சாதாரண குடிமகனின் பத்து இலட்ச ரூபாய் டீலிங்கில் எல்லாம் தலையிடும் ரெளடிகள், அரசியல் வாதிகள் எல்லாம் இவ்ளோ பெரிய மேட்டர்களில் தலையிடவே மாட்டார்களா?

ரோபோ பற்றியே படம் எடுத்தாலும் கும்பல் கும்பலாகவே ஆட்கள் வரிசையாக நின்று ஆடும் டான்ஸ்களை எப்போது நிறுத்துவார்கள்?

சுஜாதா இருந்திருந்தால் படத்தைப்பார்த்து விட்டு என்ன சொல்லியிருப்பார்?

வில்லனாக ரகுவரன் இருந்திருந்தால் எப்படி இருந்திருக்கும்?

----------------------------------------------------------------------------------

சரி போகட்டும். கொஞ்சம் பொது அறிவு கேள்விகள் கேட்கலாமா?...

இது ரஜினி படமா? ஷங்கர் படமா?

இந்தப்படத்தில் அஜீத் அல்லது கமல் நடித்திருந்தால் என்ன ஆகியிருக்கும்?

கிளைமாக்ஸ் கதை விவாதத்தில் இராம.நாராயணன் கலந்து கொண்டாரா?

ஒரு சூப்பர் ஸ்டாரே சாதாரணமாக அறிமுகம் ஆவதைப்பார்த்தாவது சுமோ டாப்பைக்கிழித்து, ஏரோப்ளேனில் ஃபுட்போர்ட் அடித்து, ஆட்டோவைக்கையால் தூக்கியபடி அறிமுகமாகும் மற்ற ஹீரோக்கள் கொஞ்சமாவது திருந்துவார்களா?.

போட்ட காசுக்கு மேல் திரும்பி வந்தால் மீண்டும் இதே கூட்டணியில் படம் எடுப்பாரா கல்லா நிறைய நிதி வைத்திருக்கும் மாறன்?

எந்திரனில் எடுக்கும் காசை கலாநிதி மாறன் மருதநாயகம் தயாரிப்பில் விடுவாரா?

எந்திரனில் ரஜினியின் சம்பளம் எவ்வளவு இருக்கும்? சம்பளமாக இருக்குமா? பர்சன்டேஜாக இருக்குமா?

டிவியில் கலாநிதி மாறன் பேரை காண்பிக்கும் போதெல்லாம் பின்னணியில் கேட்கும் ஆய், ஊய், விசில் சத்தங்கள் தியேட்டரில் கேட்கவில்லையே ஏன்?

எதிர்பார்த்தபடி கலெக்ஷன் ஆகி இலாபம் வந்தால், சன் டி.வி ஷேர் விலை எவ்வளவு ஏறும்?

காமன் வெல்த் போட்டிக்கு வரும் வெளிநாட்டு வி.ஐ.பிக்களுக்கு எந்திரன் படத்தை போட்டுக்காண்பிப்பார்களா?

எந்திரன் படத்தைப்பார்த்து பாராட்டியதற்காக கலைஞர் ஐயா அவர்களுக்கு பாராட்டு விழா வைப்பார்களா? அப்படி வைத்தால் அது சன் டி.வியில் வருமா? கலைஞர் டி.வியில் வருமா?

எல்லா தியேட்டரிலும் எந்திரனே ஓடினால் மற்ற படங்களை பார்க்க விரும்புபவர்கள் எங்கே போவது?

ஷங்கர், "த்ரீ இடியட்ஸின்" பிரசவக் காட்சியை சுட்டு எந்திரனில் வைத்திருக்கிறாரே? தன் அடுத்த படமான த்ரீ இடியட்ஸ் தமிழ் ரீமேக்கில் அந்தக் காட்சியை என்ன செய்வார்?

அமரர் சுஜாதாவுக்கு ஒரு அஞ்சலி கார்டு போட்டிருக்கக் கூடாதா?

படம் பார்க்காதவர்களை படம் பார்த்தவர்கள் இன்னுமா (?) எந்திரன் பாக்கலை என்று துக்கம் விசாரிக்கிறார்களே, ஏன்?

ரஜினி அடுத்த படத்துக்கு என்ன செய்வார்? இந்த அளவுக்கு பில்டப் யார் கொடுப்பார்கள்?
ரஜினியின் அடுத்த படத்தைத் தயாரிக்கப்போவது க்ளவுட் நைன் மூவீஸ் தயாநிதி அழகிரியா? ரெட் ஜெயன்ட் மூவீஸ் உதயநிதி ஸ்டாலினா?
----------------------------------------------------------------------------------

ஓக்கே, படித்தாயிற்றா? கமர்ஷியல் படத்தில் லாஜிக் எல்லாம் பார்க்கக் கூடாது என்று அட்வைஸ் செய்ய வருவீர்களே? அல்லது என் மீது கோபப்பட்டாலும் படுவீர்களே? நோ டென்ஞன் பாஸ்.. எந்திரன் மேல் எனக்கொன்னும் கோவம் இல்லை. நானும் ரஜினி ரசிகன்தான். ஆனா சும்மா நாமளும் இருக்கோம்கிறதை காட்டிக்கணும் இல்லையா? அதுக்குத்தான்.. ஓக்கேவா? கூல்... (இன்னும் நிறைய கேள்விகள் இருக்கு. எல்லாத்தையும் கேட்டால் அடிக்க வருவீர்கள். பை பை..)

-----------------------------------
படித்தாயிற்றா? ஒரு உதவி பண்ணுங்கள்? என்ன உதவியா? உங்களை நான் என்ன கேட்கப்போகிறேன். இன்ட்லியில் ஒரே ஒரு ஓட்டு, அவ்ளோதான். நன்றி.
-----------------------------------

செவ்வாய், 22 ஜூன், 2010

சுஜாதாவும் மனுஷ்ய புத்திரனும்

- எஸ்கா

வழக்கம் போல் எல்லா சாதாரண புத்தக ரசிகனும் எதிர்பார்ப்புடன் படிக்கும் சுஜாதாவுக்கு நானும் ரசிகன். மெட்ராஸூக்குப் போனால் எம்.ஜி.ஆரையும், ரஜினியையும் பார்க்கலாம் என்பது மாதிரி புத்தகக் கண்காட்சிக்குப்போனால் சுஜாதாவைப் பார்க்கலாம் என்று பலரும் சொன்னார்கள். ரொம்ப நாளாக எனக்கு அவரிடம் தான் ஆட்டோகிராஃப் வாங்க வேண்டும் என்று ஆசை. அவருடைய படத்தையெல்லாம் பென்சில் ஸ்கெட்ச் ஆக வரைந்து வைத்திருந்தேன். அதன் மேல் ஆட்டோகிராஃப் வாங்கலாம் என்று. பாவி மனுஷன் போய்ச்சேர்ந்து விட்டார். செம ஹைட்டாய் இருப்பாராமே...


2008, 2009 என்று இரண்டு வருடங்கள் முயற்சி செய்தும் புத்தகக் கண்காட்சிக்குப் போக முடியவில்லை. இந்த வருடம் போய்ப்பார்த்தே தீருவது என்று முடிவு செய்து விட்டு, சொன்னால் நம்ப மாட்டீர்கள், ஒன்பது தடவை திரும்பத் திரும்பப் போனேன் கண்காட்சிக்கு. போய் என்னடா வாங்கினாய் என்றெல்லாம் கேட்காதீர்கள். எவ்வளவு அய்யா வாங்க முடியும்?


வாங்குகிற சம்பளத்துக்கு கண்காட்சியில் புத்தகம் வாங்கினால் கட்டுபடி ஆகாது என்று கண்காட்சிக்கு எதிர் சாரியில் செகண்ட் ஹாண்ட் புத்தக் கடைகள் வரிசையில் போய் புத்தகங்கள் வாங்கியாயிற்று. உள்ளே வாங்கினது மட்டும் என்னவாம்? வாங்கியது எல்லாம் சீப் எடிஷன் புத்தகங்கள். அதிலும் தமிழன் புத்தகாலயம் (என்று ஞாபகம்) ஐந்து ரூபாய், பத்து ரூபாய் புத்தகங்களாக நிறைய டாபிக்குகளில் போட்டிருந்தார்கள். கிட்டத்தட்ட முப்பது நாற்பது புத்தகங்கள் வாங்கினேன்.


உயிர்மை ஸ்டால் பக்கம் போகையில் எல்லாம் ஓரமாக நின்று பார்த்துக் கொண்டே இருந்தேன். அங்கே தான் சுஜாதா உட்காருவார் என்றார்கள். இப்போது மனுஷ்யபுத்திரன் இருந்தார். கொஞ்ச நேரம் நின்று அவரையே பார்த்துக் கொண்டு இருப்பேன். வாசகர்களுக்கு ஆட்டோகிராஃப் போட்டுக் கொண்டு இருப்பார். சாருவும் தான். ஆனால் அந்த மனுஷனிடம் போய்ப் பேச எனக்குப் பயம். எதாவது திட்டி வைத்து விடுவாரோ என்று. தேவையில்லாமல் எதற்கு அந்த ஆளிடம் திட்டு வாங்க வேண்டும்? எங்க அப்பா திட்டினாலே எனக்குக் கோவம் வரும்.


சொன்னால் நம்ப மாட்டீர்கள். நான் ஆட்டோகிராஃப் வாங்கிய ஒரே ஆள் மனுஷ்ய புத்திரன்தான். சென்னையில் இருந்த மூன்று வருட காலத்தில் மயில்சாமியில் ஆரம்பித்து காந்திமதி, தமன்னா வரை பார்த்திருக்கிறேன், யாரிடமும் போய்ப் பேசவோ, ஆட்டோகிராஃப் வாங்கவோ தோன்றவில்லை.


உயிர்மையில் போய் ஹைக்கூ, ஒரு எளிய அறிமுகம் (சுஜாதா) புத்தகம் ஒன்று வாங்கினேன். அதைக் கொண்டு போய் எதுவும் பேசாமல் நீட்டியபோதே ஆட்டோகிராஃப் போட தன் பச்சைப் பேனாவைத்திறந்தார். ஆட்டோகிராஃப் போடத் துவங்கினார். தமிழ்வணிகம் டாட் காம் என்ற எங்கள் வலைமனையில் பொருளாதாரம், ஷேர் மார்க்கெட் பற்றிய கட்டுரைகள் எழுதுகிறேன் என்று அறிமுகப்படுத்திக் கொண்டேன்.


உடனே நிமிர்ந்து பார்த்து "அப்படியா? உங்கள் எல்லா கட்டுரைகளையும் எடுத்து வாருங்களேன். புத்தகமாக வெளியிடலாம்" என்றார். இதை நான் எதிர்பார்க்கவில்லை. எனக்கு பகீரென்றது. அய்யய்யோ அந்த அளவெல்லாம் கட்டுரைகள் எழுதியதில்லை அய்யா, ஒரு நான்கைந்து தான் இருக்கும். மற்றபடி பொதுவான கட்டுரைகள் இருபதுக்கும் மேல் எழுதியிருக்கிறேன் என்றேன்.


சரி நிறைய எழுதுங்கள். புதிய பதிப்பகத்தின் பேரில் சில புத்தகங்கள் வெளியிடும் எண்ணம் இருக்கிறது. இப்போதைக்கு உயிரோசை டாட் காமில் எழுதுங்கள். தளம் மிகப் பிரபலாமானதாயிருக்கிறது. உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் படிக்கிறார்கள். எழுதுங்கள். எப்போது வேண்டுமானாலும் கூப்பிடுங்கள் என்று விட்டு புத்தகத்தில் அலைபேசி எண்ணை எழுதித்தந்தார்.


(அந்தப் புத்தகத்தை பழைய கம்பேனியில் ஒரு மேனேஜரிடம் இரவல் கொடுத்து விட்டு இன்னும் வாங்க முடியவில்லை. அந்தப் பெரிய மனுஷன் மொபைல் நம்பரையும் மாற்றிவிட்டான், ஈ.மெயில் ஐடிக்கு போகும் மெயில்களும் பவுன்ஸ் ஆகின்றன.)


எனக்கு என்னவோ அவரைக் கூப்பிடவே பயமாக இருக்கிறது. நான் அந்த அளவுக்கு பெரிய ஆள் இல்லை என்று தான் தோன்றுகிறது. (சி.பி.ஐ அளவுக்கெல்லாம் நான் ஒர்த்து இல்லை சார்). ஆயிற்று ஆறு மாதம். தங்க முட்டையிடும் வாத்தை அந்த முட்டாள் அறுத்துத் தான் பார்த்தான், நான் பயந்து போய் விட்டு விட்டு ஓடி வந்து விட்டேனோ என்று இப்போது தோன்றுகிறது.


பார்க்கலாம். எங்கே போய்விடப்போகிறது. உலகம் ரொம்பச் சின்னது தானே. இப்போது உயிரோசை டாட் காமிலேயே என்னுடைய சில கட்டுரைகள் வெளியிடப்பட்டு விட்டன. நல்ல வரவேற்பு. கொஞ்ச நாள் போகட்டுமே.. பார்த்துக்கொள்வோம்.
-------

நண்பர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள். தமிழிஷில் ஓட்டும் போடுங்கள். மறக்காமல்.

-------
-------